Sunday, September 29, 2013

ரூமியின் வைரங்கள் - part 4


நிற்சலனம் ஆகட்டும்
உன் நீர்
நிலாவும் விண்மீன்களும்
பிரதிபலிக்கக் காண்பாய்
உன்னில்


உலகிற்கு அப்பால்
உள்ள ரகசியங்கள்
யாதென்று அறிய
இவ்வுலகில் பிறந்திருக்கும் ஒரு
விருந்தினன் மட்டுமே நான்


விடையைத் தேடு
உன் வினாவின்
உள்ளே



புலனுலகம் தருவது மட்டும்
போதும் உனக்கென்றால்
நீயொரு தொழிலாளி

மறைவுலகம் வேண்டுகிறாய் எனில்
உன் ஆசையில் நீ
உண்மையாய் இல்லை

இவ்விரண்டு ஆசைகளும்
அபத்தமானவை நண்பா!

உண்மையில் உன் சுயம் வேண்டுவதெல்லாம்
காதலின் பித்தேற்றும் இன்பமே

என்பதை
மறந்துவிட்ட உன் பாவம்

மன்னிக்கப்படும் போ


கப்பலேறிப் புறப்பட்டுவிடு

எவருக்கும் நிச்சயமாய்த் தெரியாது
மூழ்கிவிடுமா அல்லது
துறைமுகம் சேருமா என்று

ஜாக்கிரதையான மனிதர்கள் சொல்வார்கள்:
‘நிச்சயமாய்த் தெரியாதவரை
எதுவும் செய்யப்போவதில்லை நான்’

வணிகர்கள் அறிவார்கள் இன்னும் நன்றாய்
எதுவும் நீ செய்யவில்லை எனில் நஷ்டம்தான்

கடலின் சவாலினை ஏற்காத
வணிகர்களில் ஒருவனாய் இருக்காதே நீ


இப்படியும் இருக்கக்கூடும்
இனியவனே!
கிளைகளில் தேடிக் கொண்டிருக்கிறாய்
வேர்களில் மட்டுமே
வெளிப்படும் ஒன்றை


காதலின் வெள்ளம் ஒன்று
உன்னை நோக்கிப் பாய்கிறது
ஒவ்வொரு கணமும் நெருங்கியபடி

நிம்மதி பெறு

அதுவே நம் முடிவு
தெரியுமா?

மகிழ்ச்சியில் மரணம்
மதம் கொண்ட இணைவு


மரித்திருந்தேன்
பின்பு உயிர்த்தெழுந்தேன்

அழுகை
பிறகு சிரிப்பு

காதலின் சக்தி என்னுள் வந்தது
அரிமா அன்ன வீரம் தந்தது

பின்பு
மென்மை ஆனேன்
மாலை வானின்
விண்மீன் போல


இந்தக் காதல்தான்
இணைத்துள்ளது ஒன்றாய்
அனைத்தையும்

அதுவேதான்
அனைத்தும் கூட!



சுவர் மீது விழுந்தது
சூரிய ஒளி
சுவர் அடைந்தது
இரவல் பிரகாசம்

அப்பாவியே!
மண்ணாங்கட்டியிடம் ஏன்
மனதைப் பறிகொடுக்கிறாய்?

நித்தியமாய் ஒளிவீசும்

மூலத்தைத் தேடு



கற்பனையில் எட்டாது
கற்பனைக்கு ஒருபோதும்
என்ன தருகிறாய்
எனக்கு நீ என்பது  


சிறுபிள்ளை போல்
சிணுங்குவதை நிறுத்து

பரவசத்தில் இயங்கும்
பிரபஞ்சம் நீ!


துயரமே எனது
ஆனந்தப் பொழுது

போதை கொண்ட என் மனதின்
சிதலங்களில் இருந்து
முழுமையாய் ஒரு நகரம்
எழுந்து வரும் போது

பூமியைப் போல் நான்
மௌனமாய் அசைவற்று இருக்கும்போது
என் கர்ஜனையின் முழக்கம் கேட்கிறது

பிரபஞ்ச வெளி எங்கும்


ஒளியை விட்டுப்
பிரியும் நிழலை
யாரேனும் பார்த்ததுண்டா?


நின் தந்திரம் விற்றுப்
பேரின்பம் வாங்கு


ஒவ்வொரு கணத்திலும் உள்ளது
இறைவனிடம் இருந்து
சேதிகள் நூறு

’இறைவா!’ என்னும்
ஒவ்வொரு கேவலுக்கும்
பதில் சொல்கிறான்
நூறு முறை:
‘இதோ இருக்கின்றேன்’


ஒரு பயணியாய் ஆவாயோ
காதலின் பாதையில் நீ?
முதல் நிபந்தனை கேள்:
புழுதி போல் சாம்பல் போல்
பணிவு கொள்ள வேண்டும் நீ


வைகறை வெளிச்சமிடும்போது
மெழுகுவத்தியை அணைத்துவிடு
இதோ உன் கண்களில்
வைகறை இப்போது!


இன்னமும் அறியாயோ நீ?
உன்னொளிதான்
உலகை
வெளிச்சமாக்குகிறது 

3 comments: