Wednesday, September 25, 2013

நாடோடி நினைவுகள் - part 3


37
கதைகள்
அன்றாட வாழ்வியல் கதைகளின் வடிவில் வாழ்வின் ஆழமான உண்மைகளை உணர்த்துவதற்கு அசாதாரணமான மேதைமை வேண்டும். ஷேக்ஸ்பியர், மௌலானா ரூமி மற்றும் ஏசுநாதர் ஆகியோரே இத்தகைய அரிதான மேதைமையின் உதாரணங்கள் ஆகலாம்.
38
யூதர்களின் நாகரிகப் பங்களிப்பு
உலகளாவிய நாகரிகத்தை உருவாக்குவதில் யூதர்களின் பங்களிப்பை ஒதுக்கிவிடத் தக்க அளவென்று கருத முடியாது. நேர்மை என்னும் சிந்தனையின் அடியாகத் தொகுக்கப்பட்ட வணிகக் கோட்பாடுகளை முதன்முதலில் வடிவமைத்தவர்கள் யூதர்கள் என்றே சொல்லலாம்.

39
மாஜினி
மாஜினியின் உண்மையான களம் இலக்கியம்தான், அரசியல் அல்ல. அவரது அரசியல் ஈடுபாட்டினால் உலகம் இழந்ததை ஒப்பிடும்போது இத்தாலி அடைந்த லாபம் பெரிதல்ல.

40
அறிவியலின் மீப்பொருளியல் சார்பு
நவீன அறிவியல் மீப்பொருளியலைப் பகடி செய்தல் தகாது. ஏனெனில் லெப்னிஸ் (LIEBNITZ) என்னுமொரு மீப்பொருளியல் அறிஞர்தான் ஜடப்பொருள் மீது இயங்குவதற்கான முதல் சிந்தனையை அறிவியலுக்குத் தந்தவர். பருப்பொருள் என்பது அடிப்படையில் ஒரு தடைப்பட்ட விசைதான் என்று அவர் கூறினார். மீப்பொருளியலில் இருந்து இந்தக் கருத்தினை வரித்துக் கொண்டு அறிவியல் இந்த விசையின் இயக்கம் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. அதனை அறிவியல் தானாகவே கண்டறிந்திருக்காது என்பது திண்ணம்.
41
நவீன அறிவியலும் மக்களாட்சியும்
கருத்துக்கள் ஒன்றோடொன்று வினை ஆற்றுகின்றன, எதிர்வினை ஆற்றுகின்றன. அரசியலில் வளர்ந்து வரும் தனிநபர்வாத உணர்ச்சி சமகால அறிவியல் சிந்தனையில் தனது தாக்கத்தைச் செலுத்தாமல் இல்லை. ’பிரபஞ்சம் என்பது வாழும் அணுக்களின் மக்களாட்சி’ என்று நவீன சிந்தனை கருதுகின்றது.
42
கருத்துக்கள் அவற்றின் வரலாற்றுப் பின்புலத்துடன் கொண்டுள்ள உறவு
சிந்தனையின் முன்னேற்றம் என்பதை மனித செயல்பாடுகளின் பிற கூறுகளை விட்டும் பிரித்துவிட முடியாது. பல்வேறு மக்கள் என்ன சிந்தித்தார்கள் என்பதைத் தத்துவங்களின் வரலாறுகள் நமக்கு அறிவிக்கின்றன, ஆனால் மனிதச் சிந்தனையின் போக்கினை முடிவு செய்த சமூக மற்றும் அரசியல் காரணிகளைப் பற்றிய எந்தக் குறிப்பையும் அவை தரவில்லை. தத்துவத்தின் முழுமையான வரலாற்றினை எழுதுவது என்பது நிச்சயமாக மிகவும் கடினமான பணிதான். லூதர் செய்த சீர்திருத்தத்தின் செழுமையான உள்ளடக்கத்தை இறையியல் அறிஞராக மட்டுமே இருப்பவர் தனது வாசகர்களுக்குச் சொல்லிவிட முடியாது. மனிதனின் பொதுவான அறிவுச் செயல்பாடுகளின் ஓட்டத்திலிருந்து மகத்தான சிந்தனைகளை நாம் பிரித்துப் பார்க்கவே தலைப்படுகிறோம்.

43
பலதார மணம்
பலதார அமைப்பு என்பது ஒருபோதும் உலகளாவிய அமைப்பாக இருப்பதற்கு ஆனதல்ல. குறிப்பிட்ட ஒருசில பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான தீர்வாகவே அஃது அனுமதிக்கப் பட்டுள்ளது. அப்பிரச்சனைகள் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமே உரியவை என்பதல்ல. இஸ்லாமைப் பொருத்தவரை அனுமதிக்கப் பட்டவற்றுள் மிகவும் மோசமானது விவாகரத்து. விவாகரத்து என்பது சமூகத்தில் பரவாமல் தடுப்பதற்காகவே பலதாரமணம் என்பது சகித்துக் கொள்ளப்பட்டது. விவாகரத்து மற்றும் பலதாரமணம் ஆகிய இரு சமூகத் தீமைகளில், அவற்றின் தீய விளைவுகளைக் கருதுமிடத்து, பலதாரமணத்தின் தீமைகளே குறைவானவை என்பது தெளிவு. விவாகரத்தைத் தவிர்ப்பது மட்டுமே இந்த அமைப்பு அனுமதிக்கப் படுவதற்கான காரணம் என்பதல்ல. வகைகளை நாடும் ஆண் மனத்தின்  திளைப்புக்காக, அந்தத் திளைப்பிலிருந்து எழும் பொறுப்புக்களை அவன் தட்டிக் கழித்துப் புறம்போக்காகத் திரிந்துவிடாமல் இருப்பதற்கான சட்ட திட்டங்களுடன், அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு சலுகையே இது. இங்கிலாந்தில் ஒரு தனிநபர் சில நேரங்களில் அத்தகைய திளைப்புக்களில் ஈடுபடுகிறான். ஆனால் அவனுடைய பாலியல் சுதந்திரத்தில் இருந்து உண்டாகும் பொறுப்புக்களிலிருந்து அவன் தப்பித்து ஓடிவிட அந்நாட்டின் சட்டம் அவனை அனுமதிக்கின்றது. அவன் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கான கல்விக்கு அவன் பொறுப்பாளி அல்ல. அத்தகைய குழந்தைகள் தம் தந்தையையும் உரிமை கொள்ள முடிவதில்லை. இதன் விளைவுகள், சில விஷயங்களில், மிகவும் கொடுமையாக உள்ளன. ஃபிரான்ஸ் நாடோ விபச்சாரத்தை ஒரு சமூக அமைப்பாக ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. அதனைப் பேணுகின்ற அசிங்கமான கடமையை அந்நாட்டின் அரசு ஏற்றிருக்கிறது. இவற்றை விட, ஒருதார அமைப்பின் மீதான தலையான விமரிசனம் என்னவெனில் சில ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் விகிதம் மிக அதிகமாக இருப்பதாகும். அந்நாடுகளில் பெருகிவரும் பெண்களுக்குப் பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணிகளால் கணவன்மார்கள் கிடைப்பது சிக்கலாகியிருக்கிறது. அவர்களால் தாய்மையை அடைய முடிவதில்லை. இதன் விளைவாக, குழந்தை வளர்ப்பன்றி வேறு ஈடுபாடுகளை அவர்கள் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்குப் பதிலாகக் கருத்துக்களைத் தரிக்குமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். (They are compelled to “conceive” ideas instead of children). சமீபத்தில் அவர்கள் ‘பெண்களுக்கு வாக்குரிமை’ என்னும் ஊக்கமளிக்கும் கருத்தினைத் தரித்திருக்கிறார்கள். இது உண்மையில் மேம்போக்கான பெண்ணின் முயற்சிதான், அல்லது அவளுக்கு அரசியல் வட்டத்தில் ஆர்வங்களைத் தூண்டுவதற்காக அவளின் சார்பாகச் செய்யப்படும் முயற்சிதான். பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்குத் தனது பெண்களை ஒரு சமூகம் அனுமதிக்கவில்லை எனில் அவள் ஈடுபடுவதற்கு வேறு ஏதேனும் விஷயங்களைத் தரவேண்டியுள்ளது. ஐரோப்பாவில் இயங்கிவரும் ’பெண்கள் வாக்குரிமைக்கான இயக்கம்’ என்பது அதன் அடியாழத்தில் கணவர்கள் வேண்டும் என்பதற்கான குரலே அன்றி வாக்குக்களுக்கான குரல் அன்று. என்னைப் பொருத்தவரை அது வேலையற்றவர்களின் கலகமே அன்றி வேறில்லை.

44
ஜெர்மன் தேசத்தின் ஆன்மிக லட்சியம்
ஜெர்மன் தேசத்தின் ஆன்மிக லட்சியங்களை வெளிப்படுத்துவது கதே எழுதிய ‘ஃபவ்ஸ்ட்’ (FAUST)தானே அன்றி கலீலியின் மீனவர்கள் எழுதிய நூற்கள் அல்ல. ஜெர்மானியர்கள் இதனை நன்றாகவே தெரிந்திருக்கிறார்கள்.
45
தனது எதிரியை நேசிப்பது பற்றி
ரஸவாதத்தினும் மேலானது அன்பு. பின்னது செம்பினைப் பொன்னாக்கும் என்பர். முன்னதோ அனைத்துக் கீழான இச்சைகளையும் ’தான்’-ஆகவே மாற்றி விடுகிறது. ஏசுவும் புத்தரும் அன்பு குறித்த தமது பார்வையில் மிகவும் சரியாக இருந்தார்கள் என்றாலும் அற லட்சியங்களின் மீதான் தமது ஆழ்ந்த ஆர்வத்தினால் வாழ்க்கையின் எதார்த்தங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தன் எதிரிகளை மனிதன் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அதிகம்தான். அசாதாரணமான சில தனிநபர்கள் இந்தக் கோட்பாட்டினைத் தமது வாழ்வில் மெய்ப்பித்திருக்கலாம். ஆனால் ஒரு தேசிய அறமாக இந்தக் கோட்பாடு படுதோல்வி அடைகின்றது. ஜப்பானியர்கள் தமது மதத்தின் அறக் கோட்பாடுகளின்படி நடந்திருந்தால் ருஷ்ய-ஜப்பானிய யுத்தத்தின் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
46
கருத்துக்கள்
தனிநபர்களும் தேசங்களும் மரிக்கும். ஆனால் அவற்றின் பிள்ளைகள், அதாவது கருத்துக்கள், ஒருபோதும் மரிப்பதில்லை.
47
வெள்ளையனின் சுமை
யூதர்கள் தங்களை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தினர் என்று கருதுவதால் அவரகளைத் தான் மிகவும் வெறுப்பதாகவும் அவர்களின் இந்தக் கருத்து பிற சமூகங்களின் மீதான எதிர்ப்பையே உணர்த்துகின்றது,  நியாயப் படுத்துகின்றது என்றும் வெள்ளையர் ஒருவர் என்னிடம் ஒருமுறை சொன்னார். ‘வெள்ளையனின் சுமை’ (White man’s burden) என்னும் சொலவடை யூதர்களின் அதே நம்பிக்கையைத்தான் வேறு வடிவத்தில் சொல்கிறது என்பதை அந்த வெள்ளையர் வசதியாக மறந்துவிட்டார்.
48
கதேயின் ஃபவ்ஸ்ட்
கதே ஒரு சாதாரண மரபுக்கதையை எடுத்து அதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த அனுபவத்தால் நிரப்பி விட்டார் – இல்லை, மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தால் நிரப்பி விட்டார். ஒரு சாதாரண மரபை மனிதனின் உன்னத லட்சியத்தின் முறையான வெளிப்பாடாக மாற்றியிருக்கும் இக்காரியம் தெய்வீகக் கலைப்பணி என்பதற்குக் குறைந்ததல்ல. வடிவமற்ற ஜடத்தின் குழப்பத்தில் இருந்து அழகானதொரு பிரபஞ்சத்தை உருவாக்கி விடுவது போன்றதே அது.

49
மில்டன்
மில்டனின் தூய்மைவாத இறையியல் நமது காலகட்டத்தின் கற்பனையைக் கவர்வதாக இருக்காது. மிகச் சிலரே அவரைப் படிக்கிறார்கள். ’மில்டனின் புகழ் அதிகமாகிக் கொண்டே போகும், ஏனெனில் ஒருவரும் அவரைப் படிப்பதில்லை’ என்று வால்டேர் கூறுவது உண்மைதான். எனினும், மில்டனிடம் ஒரு விஷயம் உள்ளது. எந்தக் கவிஞனும் தனது பணியில் அவரை விடவும் சிரத்தை உள்ளவனாக இல்லை. அவரின் பாணி, பொய்த் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடமாக இருந்தாலும், காலத்தின் முடமான கைகளால் என்றும் தீண்டப் படாததாகவே இருக்கும்.

50
ஆஸ்கார் ஒயில்டின் ஆன்மா
ஆஸ்கார் ஒயில்டின் ஆன்மா ஆங்கிலத்தினும் அதிகம் பாரசீகமாகவே உள்ளது.
51
கொள்ளை தேசங்கள்
ஊதாரித்தனம் என்பது இயற்கையின் சொந்தக் குழந்தை. ஒரு சில தனிநபர்களின் கைகளில் பெரிய செல்வக் குவியல்கள் தேங்குவதை அவள் ஒருபோதும் விரும்புவதில்லை. குடும்பத் தலைவன் ஒருவன் செல்வத்தைக் குவிப்பதில் வெற்றி காணும்போது மூன்றாம் தலைமுறையில் அல்லது இரண்டாம் தலைமுறையிலேயே ஊதாரி ஒருவன் தோன்றி அந்தச் செல்வங்களை எல்லாம் வாரி இரைத்து விடுகிறான். இயற்கையின் இந்தக் கருவி இல்லை எனில் செலவத்தின் சுழற்சி தடைப்பட்டுவிடும். தனிநபர்களின் விஷயத்தில் எது உண்மையோ அதுவே தேசங்களின் விஷயத்திலும். பணத்தின் தொடர் சுழற்சியைச் சார்ந்திருக்கும் உலகத் தொழிற்போக்கின் சக்கரத்தை நிறுத்தும் வண்ணம் ஏதேனுமொரு தேசம் தொழிலமைப்பைக் கொண்டோ அல்லது வேறு வகையிலோ செல்வங்களைத் தேக்கி வைக்கும்போது கொள்ளை தேசங்கள் அந்நிலையில் தோன்றி முடக்கப்பட்ட செல்வத்தை விடுதலை செய்கின்றன. வாரன் ஹாஸ்டிங்ஸ், கிளைவ் மற்றும் மஹ்மூத் போன்றவர்கள் உலகத் தொழிலமைப்பின் முன்னேற்றத்திற்கு இயற்கையின் ’பிரக்ஞையற்ற கருவிகளான’ அத்தகைய தேசங்களின் பிரதிநிதிகள் ஆவர். வாரன் ஹாஸ்டிங்க்ஸின் கொள்ளை ஐரோப்பிய செலாவணியின் பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றில்தான் தனது உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது.
52
மனிதனின் நினைவாற்றல்
சக மனிதர்களிடம் தான் அடையும் தீமைகளைத் தவிர வேறு விஷயங்களின் மீது மனிதனின் நினைவாற்றல் பொதுவாகவே மோசமாகத்தான் உள்ளது.

53
முஸ்லிம் நாடுகளில் பொழுதுபோக்குகள்
முஸ்லிம் நாடுகளில் பொழுதுபோக்குகள் இல்லை – தியேட்டர்கள் இல்லை, இசைக்கூடங்கள் இல்லை, கச்சேரிகள் இல்லை, அன்ன பிறவும் இல்லை. பொழுதுபோக்கிற்கான ஆசை திருப்தி செய்யப்பட்ட விரைவில் தீராத ஆசையாக மாறிவிடுகிறது. மறுக்க முடியாத இந்த உண்மையை ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன. முஸ்லிம் நாடுகளில் பொழுதுபோக்குகள் இல்லை என்பது வறுமையையோ விரதத்தையோ களிப்பிற்கான உணர்வு இன்மையையோ காட்டுகிறது என்பதல்ல. இந்த நாடுகளின் மக்கள் தமது இல்லங்களின் அமைதியான சூழலில் நிறைவான பொழுதுபோக்கும் உவகையும் அடைகிறார்கள் என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. முஸ்லிம் இல்லங்களை மறுதலிப்பதில் ஐரோப்பிய விமரிசகன் இத்தனை அவசரம் காட்டக்கூடாது. வெளிப்புறப் பொழுதுபோக்குகள் வேண்டாமை என்பது வீட்டினுள் நிறைவாக இருப்பதன் அடையாளம்தான் என்று உறுதிகூற முடியாது; அதேபோல், வெளிப்புறப் பொழுதுபோக்குகளை விரும்புதல் என்பது வீட்டில் நிறைவில்லை என்பதன் அடையாளம்தான் என்றும் உறுதிகூற முடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
54
சிறுபான்மையினரின் சக்தி
உலகின் தலைவிதி முதன்மையாகச் சிறுபான்மையினரால்தான் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இக்கூற்றின் உண்மைக்கு ஐரோப்பிய வரலாறே போதுமான சான்று. மனிதகுல வரலாற்றில் சிறுபான்மையினர் ஒரு மகத்தான சக்தியாக இருந்தமைக்கு உளவியல் காரணம் இருக்க வேண்டும் என்று எனக்குப் படுகின்றது. பண்புதான் தேசங்களின் விதியை நிர்ணயிக்கும் மறைவான சக்தி. பெரும்பான்மையில் செறிவான பண்பு சாத்தியம் இல்லை. அது ஒரு விசை; எந்த அளவு அதனைப் பரவலாகின்றதோ அந்த அளவு ஆற்றலை இழந்துவிடும்.
55
சந்தேகவாதமும் மதமும்
சில மனிதர்களின் மனம் ஐயவாதம் கொண்டதாகவும் அதே சமயம் மதத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஃபிரெஞ்சுக் கிழக்கத்தியவாதியான ரெனான் தன்னுடைய சந்தேகவாதங்களை மீறித் தன் மனத்தின் மதத் தன்மையையே பெரிதும் வெளிப்படுத்துகிறார். மனிதர்களின் சிந்தனைப் பழக்கத்தை அடிப்படையாக வைத்து அவர்களைப் பற்றிய கருத்தினை உருவாக்குவது பற்றி நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
56
அறபுக் கவிதை
”என் மாமனின் மகன் அந்தோ செங்குத்தான பாறை ஒன்றின் விளிம்பில் நடந்து போய்க் கொண்டிருந்தான். நான் சென்று, பின்னால் இருந்து, அடுத்தொரு விடியல் அவன் வாழ்வில் இல்லாமல் போகுமாறு அவனைப் பள்ளத்தாக்கில் தள்ளி விடட்டுமா? அவனுடைய நடத்தையை வைத்துப் பார்க்கும்போது நான் அப்படிச் செய்வது நியாயம்தான். ஆனால், அது கேவலமும் கோழைத்தனமும் ஆகும்.”
ஹமஸாவின் அறபுக் கவிஞன் இப்படிப் பாடுகிறான். அறபுக் கவிதையின் அழகிய மாதிரியாக இவ்வரிகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். இத்தனை நேரடியாக, நேர்மையாக, உணர்வில் வீரம் செறிந்ததாக வேறொரு கவிதை இல்லை. அறபியன் சத்தியத்துடன் மிகச் செறிவாக இணைந்திருக்கிறான்; நிறத்தின் செழுமை அவனை ஈர்ப்பதில்லை. முதன்னபி என்னும் கவிஞரை வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காகக் கூறலாம். ஆனால், அவர் மொழியால் மட்டுமே அறபுக் கவிஞர், உணர்வால் அவர் முழுக்க முழுக்க பாரசீகர்தான்.

57
வியப்பு
வியப்பே அனைத்து அறிவியல்களின் தாய் என்கிறார் பிளாட்டோ. மிர்ஸா அப்துல் காதிர் பேதில் (என்னும் பாரசீகக் கவிஞர்) வியப்புணர்வை வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கிறார். அவர் சொல்கிறார்:
“வியப்பெனும் உணர்வின் கண்ணாடி மாளிகையில் உள்ளதெல்லாம் எளிதில் உடைந்துவிடக் கூடியவையே / கண்களை இமைக்காதே! இல்லை எனில் இந்தக் காட்சி முடிந்து போய்விடும்” (நஸாகத்ஹாஸ்த் தர் ஆகோஷெ மீனா ஃகானாயெ ஹைரத் / மழா பர்ஹம் மஸன் தா நஷக்னீ ரங்கெ தமாஷா ரா)
இயற்கையைக் கேள்விக்கு உட்படுத்துவது நோக்கி நம்மை அழைத்துச் செல்வதால்தான் பிளாட்டோவுக்கு வியப்பு என்பது அர்த்தமுள்ளதாகிறது. ஆனால், மிர்ஸா பேதிலுக்கோ வியப்பு என்பது, அதன் அறிவு விளைவுகள் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், தன்னளவில் அர்த்தமுள்ளது. இந்தச் சிந்தனையை பேதிலை விடவும் இத்தனை அழகாக வேறு எவரும் வெளிப்படுத்த முடியாது.
58
இந்திய முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலகட்டம்

இதுவரையான மதச் சிந்தனைகளின் பரிணாமத்தைப் பார்க்கும்போது ஒரு சமூகத்தின் உருவாக்கத்தில் மூன்று முக்கியமான நிலைகள் உள்ளன:
1)   சமய மரபுகளின் மீதான சந்தேகக் கண்ணோட்டம்; வறட்டு நம்பிக்கைக்கு எதிரான கிளர்ச்சி.
2)   ஆனால் மதம் என்பது பெரு மதிப்புள்ள ஒரு சமூக ஆற்றல் என்பது உணரப்பட்டவுடன் இரண்டாம் நிலை தொடங்குகிறது – மதத்தைப் பகுத்தறிவுடன் இணைப்பதற்கான முயற்சி.
3)   இம்முயற்சி சமூகத்தின் இருப்பிற்கே ஆபத்தாகக் கூடிய விளைவுகளை உண்டாக்க வல்ல கருத்து மோதல்களுக்கு வித்திடுவதைத் தவிர்க்க முடியாது.
கருத்து வேறுபாடு நேர்மையாக இல்லாதபோது (துரதிர்ஷ்டமாக, அது பொதுவாகவே நேர்மை அற்றதாகத்தான் உள்ளது) பிரிவினைகளுக்கு இட்டுச் செல்கிறது. இந்தியாவின் முஸ்லிம்கள் இப்போது மூன்றாம் நிலையில் இருக்கிறார்கள், அல்லது இரண்டாம் நிலையிலும் மூன்றாம் நிலையிலுமாக இடைப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். நம் சமூகத்தின வாழ்வில் இக்கட்டம் மிகவும் நெருக்கடியானதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால், சமூகத்தின் இணக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு தன்மையிலான சக்திகள் இயங்கி வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. எனினும், அவற்றின் தாக்கம் தற்காலிகமானதாகப் போய்விடுமோ என்பதே எனது கவலை.
59
வரலாற்றுப் பொருள் விளக்கம்
வரலாறு என்பது மனித நோக்கங்களின் பொருள்-விளக்கம் (Interpretation) மட்டுமே. நாமோ நமது சமகாலத்தவர்களின், இன்னும் சொல்வதெனில் நமது நெருங்கிய நண்பர்களின், தினசரி வாழ்வில் நம்முடன் உள்ளவர்களின் நோக்கங்களைக் கூட தவறாக விளங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கின்றோம் என்பதால் நமக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வது என்பது எந்த அளவு கடினமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, வரலாற்றுப் பதிவுகளை நாம் மிகவும் எச்சரிக்கையுடன்தான் ஏற்க வேண்டும்.
60
சமத்துவம்

ஒரு சிந்தனையின் செயலாற்றல் என்பது அது வெளிப்படுகின்ற ஆளுமையின் ஆற்றலைச் சார்ந்தது. முஹம்மத், புத்தர் மற்றும் ஏசுநாதர் ஆகியோர் சமத்துவச் சிந்தனைகள் வெளிப்பட்ட மாபெரும் ஆளுமைகள். எனினும், சமத்துவத்தின் திசையில் இன்றளவும் உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே சக்தி இஸ்லாம் மட்டுமே.

No comments:

Post a Comment