21
முஸ்லிம்
ஒற்றுமை
இஸ்லாம் மற்றும் தேசப்பற்று குறித்து நான் மேலே சொன்னவற்றில்
இருந்து பெறப்படுவதாவது: ஒரு சமூகமாக நமது ஒற்றுமை நமது மார்க்கக் கொள்கையில் நாம்
கொண்டுள்ள உறுதியில் அமைந்துள்ளது. இந்த உறுதி குலையும் கணத்தில் நாம் ஒன்றுமில்லாமல்
ஆகிறோம். யூதர்கள் அடைந்த விதி நம் மீதும் விழக்கூடும். அந்த உறுதியை மேம்படுத்த நாம்
என்ன செய்வது? ஒரு சமூகத்தில் அதன் மார்க்கத்தின் முதன்மைப் பாதுகாப்பிடம் யார்? பெண்தான்.
முஸ்லிம் பெண்ணுக்கு ஆழமான மார்க்கக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஏனெனில் சமூகத்தை உருவாக்குபவள்
அவளே. பொதுவான கல்வி முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் கல்வி என்பது ஒரு சமூகத்தின்
தேவையால் நிர்ணயிக்கப் படுவது. நமது தேவைகளைப் பொருத்த வரை முஸ்லிம் பெண்ணுக்கு மார்க்கக்
கல்வி மட்டுமே போதுமானது. அவளுடைய பெண்மையைக் குறைக்கவும் அவளின் முஸ்லிம் தன்மையைக்
குறைக்கவும் செய்கின்ற அனைத்துப் பாடங்களையும் அவளின் கல்வியிலிருந்து மிகவும் எச்சரிக்கையாகக்
களைய வேண்டும். ஆனால் நமது கல்வியாளர்கள் இன்னமும் இருட்டில் உழப்பிக் கொண்டிருக்கிறார்கள்;
நமது பெண்களுக்குத் தோதுவான கல்வித் திட்டத்தை அவர்களால் இன்னமும் முன்வைக்க முடியவில்லை.
தூய கருத்துருவமான மார்க்கம் என்பதன் அடிப்படையில் தேசீயத்தை உருவாக்கும் இஸ்லாமியத்திற்கும்
நாடு என்னும் பருப்பொருளின் அடிப்படையில் தேசீயத்தை உருவாக்கும் மேற்கியத்திற்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை உணர முடியாமல் மேற்கத்திய கலாச்சாரத்தின் கவர்ச்சியால் அவர்கள்
மிகவும் தடுமாறிக் கிடக்கிறார்கள்.
22
ஜெர்மானிய
தேசம்
இயற்கையின் பொருளியலில் ஒவ்வொரு தேசத்திற்கும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட
பணி உள்ளது. ஜெர்மன் தேசத்தின் பணி மனித அறிவை ஒருங்கிணைப்பதாகும். சமீபத்தில் அவர்கள்
வணிக நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். அது அவர்களுக்கு ஒரு ராஜ்யத்தை அளிக்கலாம்.
ஆனால் அனைத்தையும் உறிஞ்சிக் கொள்ளும் வியாபாரத்தின் பிடியில் உன்னதமான லட்சியங்களின்
இழப்பை அவர்கள் அனுபவித்தாக வேண்டியிருக்கும்.
23
நவீன
ஹிந்து
மக்களிடம் புதிய லட்சியங்கள் தோன்றி வளர்வதைப் பார்க்க மிகவும்
சுவாரஸ்யமாக இருக்கின்றது. ஓ! அது கிளர்த்தும் ஆர்வமும் மக்களின் அனைத்து சக்திகளையும்
ஒற்றை மையத்தில் குவிய ஈர்க்கும் அதன் விசையும்! நவீன ஹிந்து அத்தகைய ஓர் அதி-நிகழ்வுதான்!
எனக்கு அவனுடைய நடத்தை அரசியலை விடவும் உளவியல் ரீதியிலான விஷயமே. எனக்குத் தோன்றுகிறது,
அவனுக்கு மிகவும் புதிய அனுபவமான அரசியல் விடுதலை என்னும் லட்சியம் அவனது முழு ஆன்மாவையும்
பற்றிக்கொண்டு அவனின் ஆற்றல்கள் அனைத்தையும் அதன் திசையில் திருப்பிவிட்டு அவற்றின்
முழு வேகத்தையும் இந்தப் புதிய பணியில் ஈடுபட வைத்துள்ளது. இந்த அனுபவத்தைக் கடந்து
சென்ற பிறகு அவன் தனது நஷ்டத்தை உணர்வான். அவன் முற்றிலும் புதிய மக்களாக மாற்றப் பட்டிருப்பான்.
’புதிய’ என்பதன் அர்த்தமாவது சஞ்சலமுற்ற மனங்களுக்கு வற்றாத ஆறுதலாகத் திகழ்ந்த அவனது
முன்னோர்களின் நுண்ணிய கற்பனைகள் உருவாக்கிய அற விழுமியங்களின் ஆதிக்கம் இனியும் தன்
மீது இல்லை என்பதை அவன் உணர்வான். தேசங்கள் லட்சியங்களின் தாய்கள்; ஆனால் லட்சியங்கள்
காலப்போக்கில் சூலடைந்து புதிய தேசங்களைப் பெற்றெடுக்கின்றன.
24
’சரி’யும்
வலிமையும்
தத்துவம் என்பது ’சரி’யின் தர்க்கம்; வரலாறு என்பது வலிமையின்
தர்க்கம். இந்தப் பிந்திய தர்க்கத்தின் ஆயுதங்கள் அதன் சகோதர தர்க்கத்தை விடவும் வலிமையானவை
என்று தெரிகின்றது.
25
அஃப்கானிஸ்தானின்
எதிர்காலம்
இடையரசுகள் (buffer states) ஒருபோதும் மாபெரும் அரசியல் சக்தியாகத்
தம்மை உருவாக்கிக் கொள்ள இயலாது என்பதே வரலாற்றின் தீர்ப்பு. சிரியாவின் நிலை அப்படித்தான்
இருந்தது – ரோம மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்களுக்கு இடைப்பட்ட தேசமாக இருந்தது. அஃப்கானிஸ்தானின்
எதிர்காலம் எப்படியிருக்கும் என்று அனுமானிப்பது கடினமாக உள்ளது.
26
வாழ்க்கை
என்பது கவிதை விமர்சனம்
’கவிதை என்பது வாழ்க்கை விமர்சனம்’ என்கிறார் மாத்யூ அர்னால்ட்.
‘வாழ்க்கை என்பது கவிதை விமர்சனம்’ என்பதும் அதே அளவு உண்மைதான்.
27
ஐரோப்பிய
கிறித்துவம்
மனித சிந்தனையின் புலத்தில் முஹம்மத், புத்தர் மற்றும் காண்ட்
ஆகியோரே சிறந்த புரட்சியாளர்கள் எனலாம். செயலின் புலத்தில் நெப்போலியனுக்கு ஈடில்லை.
உலகப் புரட்சியாளர்களில் நான் கிறித்துவைக் குறிப்பிடவில்லை. ஏனெனில், அவர் தொடங்கி
வைத்த இயக்கம் விரைவாகவே கிறித்துவத்திற்கு முன்னிருந்த தொன்ம வழிபாட்டால் உறிஞ்சப்பட்டு
விட்டது. ஐரோப்பிய கிறித்துவம் என்பது செமிட்டிக் இறையியல் வடிவில் மோசமாக மொழிபெயர்க்கப்
பட்டுள்ள பழைய தொன்ம வழிபாடே அன்றி வேறில்லை என்றே எனக்குப் படுகிறது.
28
கிறிஸ்துவும்
ஸ்பினோஸாவும்
யூத இனம் இரண்டே மாமனிதர்களைத்தான் உருவாக்கியுள்ளது – கிறிஸ்து
மற்றும் ஸ்பினோஸா. முன்னவர் மகனில் வந்த கடவுள் (எனப்பட்டார்); பின்னவர் பிரபஞ்சத்தில்.
ஸ்பினோஸா தனது இனத்தில் உதித்த மாபெரும் ஆசானின் நிறைவு மட்டுமே.
29
அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். (இருபதாம்
நூற்றாண்டில் வாழும்) நான் எனது சமுக்கத்தின் முன்னோர்களை விடவும் அவரை நன்றாக புரிந்திருக்கிறேன்
என்பதால் மட்டுமல்ல; என் சமூகத்தின் சிந்தனை மீது அவருடைய தாக்கம் ஆழமானது என்பதாலும்தான்.
எனினும், பிளாட்டோவின் கருத்தியல் தத்துவத்தினை அவர் விமரிசிப்பதில் வெளிப்படும் நன்றியின்மையின்
வாடை அவருக்கு எனது முழு பாராட்டுதலை அளிக்கவிடாமல் என்னைத் தடுக்கின்றது. தனது ஆசிரியரின்
பார்வைகள் மீதான அவருடைய விமரிசனத்தில் உள்ள உண்மையை நான் மறுக்கவில்லை; ஆனால் அவற்றைக்
கையாளுவதில் அவர் கொண்டுள்ள அணுகுமுறையை நான் குறை சொல்கிறேன்.
30
நீஷேவின்
பித்தம்
மனிதனின் இயற்கையில் விசித்திரமான நிலையின்மைகள் உள்ளன. விலைமாது
ஒருத்தியை நான் திருமணம் செய்து கொண்டால் அத்தகைய அசிங்கமான மணவுறவுகளை நான் மறுக்கவில்லை
என்பதையே அது காட்டும். ஆனால என்னுடைய நடத்தையை நீங்கள் ஒரு கதையின் கருப்பொருள் ஆக்கினால்
அதை நான் தவறாக எடுத்துக் கொள்கிறேன் – நடைமுறையில் நான் அனுமதிப்பதை எழுத்தில் நான்
மறுக்கிறேன். நீஷேயின் தத்துவம், குறைந்த பட்சம் ஒழுக்கவியலின் புலத்தில், ஐரோப்பாவின்
நடத்தையை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தும் முயற்சிதான். எனினும், அரசுரிமையின் இந்த
மாபெரும் தூதர் ஐரோப்பா முழுவதிலும் கண்டனம் செய்யப்படுகிறார். அவரது பித்தத்தின் அர்த்தத்தை
புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.
31
ஔரங்கசீப்
ஔரங்கசீபின் அரசியல் மேதைமை மிகவும் தெளிவானதும் முழுமையானதும்
ஆகும். அவருடைய வாழ்வின் ஒரே நோக்கம் அனைத்துச் சமூகங்களையும் ஒற்றை ராஜ்ஜியக் கோட்பாட்டின்
கீழ் கொண்டுவருவதே என்று படுகிறது. ஆனால் இந்த சாம்ராஜ்ய ஒற்றுமையை அடையும் விஷயத்தில்
அவர் தவறுதலாகத் தன்னுடைய வீழ்த்தமுடியாத துணிச்சலின் குரலுக்குச் செவி சாய்த்துவிட்டார்.
ஆனால் அதன் பின்னணியிலோ போதுமான அரசியல் அனுபவம் இருக்கவில்லை. தன் கனவு சாம்ராஜ்யத்தின்
பரிணாமத்தில் காலத்தின் நியதியை மறுதலித்தவராக அவர் ஒரு முடிவற்ற போரினைத் தொடங்கிவிட்டார்.
இந்தியாவில் சிதறிக்கிடந்த பல்வேறு அரசியல் சக்திகளைத் தனது வாழ்நாளிலேயே தன்னால் ஒன்றுபடுத்திவிட
முடியும் என்று அவர் நம்பினார். ஆசியாவை அலெக்ஸாண்டர் ஹெல்லனிய மயமாக்கத் தவறியதைப்
போலவே அவர் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கத் தவறிவிட்டார் (மத அர்த்தத்தில் அல்ல). ஆனால்
ஆங்கிலேயனோ பழைய தேசங்களின் அரசியல் அனுபவங்கள் நிறைந்தவனாக வந்தான். அவனுடைய பொறுமையும்
ஆமை போன்ற தாங்குதலும் ஔரங்கசீபின் அவசர மேதைமை எங்கே தோற்றதோ அங்கே வெற்றி பெற்றுவிட்டன.
கைப்பற்றுதல் என்பது ஒற்றுமை என்றுதான் பொருள்பட வேண்டும் என்பதில்லை. மேலும், அவருடைய
மகா முன்னோரான அக்பர் நினைத்ததைப் போல் இந்தியாவில் இஸ்லாமின் வலிமை இந்த மண்ணில் வாழும்
மக்களின் நல்லாதரவிலோ ஆளும் இனத்தின் வலிமையிலோ அமைந்ததல்ல என்பதை முன் சென்ற முஹம்மதிய
அரச மரபுகள் ஔரங்கசீபுக்குக் கற்பித்திருந்தன. எனினும், தனது கூர்மையான அரசியல் அவதானங்கள்
அனைத்தையும் கொண்டு தனது முன்னோர்களின் தவறுகளை அவரால் களைய முடியவில்லை. சிவாஜி ஔரங்கசீபின்
ஆட்சியின் விளைவு அல்ல. அந்த மகாராஷ்டியின் இருப்பு அக்பர் உருவாக்கிய சமூக மற்றும்
அரசியல் கோட்பாடுகளால் விளைந்தது. ஔரங்கசீபின் அரசியல் பார்வை உண்மையானது என்றபோதும்
மிகவும் தாமதமானது. எனினும் அந்தப் பார்வையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும்போது
ஔரங்கசீபையே இந்தியாவில் முஸ்லிம் தேசியத்தின் நிறுவனர் என்று கூற வேண்டும். நான் கூறுவதன்
உண்மையை எதிர்காலத் தலைமுறை ஒருநாள் நிச்சயம் உணரும் என்ற நிச்சயம் எனக்குள்ளது. இந்தியாவின்
ஆங்கிலேய ஆளுநர்களில் கர்ஸன் பிரபுதான் இந்தியாவில் இங்கிலாந்தின் அதிகாரம் பற்றிய
உண்மையை முதன் முதலில் உணர்ந்தவர். ஹிந்து தேசியம் தவறுதலாக அவருடைய கோட்பாட்டிற்குச்
சாற்றப்படுகின்றது. ஆனால், அதனுடைய இருப்பு ரிப்பன் பிரபுவின் கோட்பாடுகளைச் சார்ந்தது
என்பதைக் காலம் விளங்க வைக்கும் என்று நம்புகிறேன். ஆகவே, தமது அரசியல் நோக்கம் மற்றும்
பார்வையில் முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் உடன்படுகின்றனர் என்பது தெளிவு. ஔரங்கசீபின்
அரசியல் லட்சியத்தையே ஆங்கிலேய மக்கள் பின்பற்றியிருக்கிறார்கள், அவரின் அரசியல் பார்வையையே
அவர்கள் வரித்துக் கொண்டுள்ளார்கள் என்னும்போது அவரை ஆங்கிலேயன வரலாற்றாளன் வசைகூறுவதில்
நான் எந்த அர்த்தமும் இருப்பதாகக் காணவில்லை. ஔரங்கசீபின் அரசியல் நடைமுறை மிகவும்
கடினமானதுதான்; ஆனால் அவரின் இந்த நடைமுறையின் நியாய மதிப்பு அவர் வாழ்ந்து இயங்கிய
காலத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்பட வேண்டும்.
32
பாரசீகத்தின்
வெற்றி
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு எது என்று நீங்கள்
என்னைக் கேட்டால் சற்றும் தயங்காமல் சொல்வேன்: “பாரசீகத்தின் வெற்றி”. நெஹவந்த் யுத்தம்
அரபியர்களுக்கு ஓர் அழகான தேசத்தை மட்டும் வழங்கவில்லை, தொன்மையான நாகரிகத்தை வழங்கிற்று.
அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், செமித்தியம் மற்றும் ஆரியம் கொண்டு புதிய நாகரிகத்தை
உருவாக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைத் தந்தது. நமது முஸ்லிம் நாகரிகம் எனபது செமித்திய
மற்றும் ஆரிய சிந்தனைகளின் கலப்பு விளைச்சலாகும். அது தனது ஆரியத் தாயின் மென்மை மற்றும்
தூய்மையையும் செமித்தியத் தந்தையின் மேன்மையையும் அடைந்துள்ள ஒரு குழந்தையாகும். பாரசீகம்
கைப்பற்றப் படாது போயிருந்தால் இஸ்லாமின் நாகரிகம் ஒருபக்கமானதாக இருந்திருக்கும்.
கிரேக்கத்தைக் கைப்பற்றியது ரோமானியர்களுக்கு எதனைத் தந்ததோ பாரசீகத்தின் வெற்றி நமக்கு
அதனைத் தந்தது.
33
காலிப்
நான் பார்க்க முடிந்த வரை, பாரசீகக் கவிஞரான மிர்ஸா காலிப் மட்டுமே
இந்திய முஸ்லிம்களாகிய நாம் பொதுவான முஸ்லிம் இலக்கியத்திற்குத் தந்திருக்கும் நிரந்தரக்
கொடையாவார். தமது கறபனையும் நுண்ணறிவும் தம்மை இன மற்றும் தேசியத்தின் குறுகிய எல்லைகளுக்கு
அப்பால் உயர்த்தி வைக்கின்ற கவிஞர்களில் அவரும் ஒருவர். அவரின் அங்கீகாரம் இனிதான்
வரவிருக்கிறது.
34
தேசங்களின்
பராமரிப்பு
ஆர்வமற்ற அந்நிய ஆட்சி என்பது அசாத்தியம். இருப்பினும் தேசங்களின்
பராமரிப்பு என்பது அவசியம். சிலசமயங்களில் ஒரு தேசத்தின் அன்றாட உணவே இந்தப் பராமரிப்புக்குச்
செலுத்தப்படும் கட்டணம் ஆகிவிடுகிறது. தமது சொந்த அலுவல்களைத் தாமே கவனித்துக் கொள்ளும்
நிலையை அடையும் வரை மெக்சிக்கியர்கள் எஸ்பானியர்களின் கைகளில் மிகவும் கடினமான பயிற்சிகளைப்
பெற வேண்டியிருந்தது.
35
கவிதையின்
பிரபல்யம்
ஒரு கவிதையின் பிரபல்யம் என்பது அதில் எந்த அளவுக்கு தர்க்க
உண்மை வெளிப்படுகிறது என்பதைப் பொருத்ததல்ல. கோல்ட்ஸ்மித்தின் “Deserted Village” மிகவும்
பிரபலமான கவிதைதான்; எனினும் அந்தக் கவிதை முழுவதும் அறிவியற் பிழைகளும் மோசமான பொருளாதாரக்
கருத்தும் நிறைந்துள்ளன.
36
ஹெகல்,
கதே, காலிப், பேதில் மற்றும் வொர்ட்ஸ்வொர்த்
ஹெகல், கதே, மிர்ஸா காலிப், மிர்ஸா அப்துல் காதிர் பேதில் மற்றும்
வொர்ட்ஸ்வொர்த் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
முதலிருவரும் பொருட்களின் அகத்திற்கு என்னை இட்டுச் சென்றனர். மேற்கத்தியக் கவிதையியலைச்
செறித்துக்கொண்ட பின்னரும் ஆன்மாவிலும் வெளிப்பாட்டிலும் கிழக்கத்தியனாகவே இருப்பது
எப்படி என்பதை மூன்றாமவரும் நான்காமவரும் சொல்லித் தந்தனர். ஐந்தாமவர், நாத்திகனாகிப்
போவதை விட்டும் என்னை எனது மாணவப் பருவத்தில் காப்பாற்றியவர்.
(to be continued)
very nice.........
ReplyDelete