Sunday, September 15, 2013

நாடோடி நினைவுகள் (part 1)

(மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் குறிப்பேடு. 1930-ல் இங்கிலாந்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போது இவற்றை எழுதினார். அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்று.)

1
கலை
கலை என்பது ஒரு புனிதப் பொய்.

2
கண்டறிதல்
மகத்தான மனம் ஒன்றுடன் தொடர்பு கொள்ளும்போது நம் சுயம் தன்னையே கண்டறிகின்றது. கதேயின் கற்பனையின் விசாலத்தை நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பு வரை என் ஆழமின்மையை நான் கண்டறியவில்லை.

3
மனித அறிவு
மனித அறிவு என்பது இயற்கையின் சுய விமரிசன எத்தனிப்பு.

4
ஈகையின் பொருளியல்
தாராள மனப்பான்மை உள்ளவன் உண்மையில் உதவி புரிவது இரக்கமற்ற கஞ்சனுக்கே அன்றி வறியவனுக்கு அல்ல. ஏனெனில், ஏழைகளுக்குக் கொடுக்கப் படுவதெல்லாம் உண்மையில் ஏழைகளுக்கு எதுவும் கொடுக்காதவர்களுக்கே தரப்படுகின்றது. அதன் வழி, கொடுக்காதவர்கள் அவர்களின் இரக்கமற்ற கஞ்சத்தனத்தில் நிலைக்கிறார்கள்; இரக்கமுள்ளவன் அதற்கான தொகையைச் செலுத்துகின்றான். இதுவே ஈகையின் பொருளியல் ஆகும்.

5
கடவுளின் இருப்பு
என் நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள், “கடவுள் இருக்கிறான் என்று நீ நம்புகிறாயா?” இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முன் இதில் உள்ள சொற்களை நான் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு விடை வேண்டுமெனில் என் நண்பர்கள் முதலில் ’நம்பிக்கை’ ‘கடவுள்’ ‘இருத்தல்’ ஆகிய சொற்களை, குறிப்பாகக் கடைசி இரண்டு சொற்களை அவர்கள் எந்த அர்த்தத்தில் பாவிக்கிறார்கள் என்பதை எனக்கு விளக்க வேண்டும். இந்தச் சொற்கள் எனக்குப் புரியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். என் நண்பர்களை நான் சோதித்துப் பார்த்ததில் அவர்களும் விளங்கவில்லை என்பதையே கண்டேன்.

6
ஓர் உரையாடல்
இதயம்: “கடவுள் இருக்கிறான் என்பது நிச்சயமாக உண்மை”
தலை: “ஆனால், என் செல்லப் பையா, ’இருத்தல்’ என்பது என்னுடைய கலைச்சொற்களில் ஒன்று. அதை நீ பயன்படுத்தக் கூடாது”
இதயம்: ”அது மிகவும் நல்லதுதான், என் அரிஸ்டாட்டிலே!”

7
அகந்தையின் திருப்தி
அகந்தையின் திருப்தியில் நமக்கொரு பொருளாதார ஆதாயம் இருக்கிறது. என்னை நீங்கள் ‘மருத்துவமனை உதவியாளர்’ என்பதற்குப் பதிலாக ‘உப-துணை மருத்துவர்’ என்று அழையுங்கள். பிறகு பாருங்கள், நீங்கள் என் சம்பளத்தை உயர்த்தவில்லை என்றாலும் நான் திருப்தியாக இருப்பேன்.

8
குரூர உளவியல்
கொஞ்சம் குரூர உளவியலுக்காக என்னை மன்னியுங்கள். நீ உன் தொழிலில் தோற்றுப் போகிறாய். பிறகு, வீட்டை விட்டு வெளியேறி வேறு தொழில்களில் உன் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய நினைக்கிறாய். இது ஏன்? உன்னுடைய லட்சியம் உன் தோல்வியில் இருந்து புத்துணர்ச்சி அடைந்திருக்கிறது என்பதாலா? அல்லது உன் தோல்வியைப் பார்த்தவர்களை விட்டும் உன் முகத்தை நீ மறைத்துக் கொள்ள  விரும்புகிறாய் என்பதாலா? இதை உன் உள்ளத்தில் ஆராய்ந்து பார்.

9
நம்பிக்கையின் சக்தி
நம்பிக்கை என்பது மகத்தான சக்தி. என்னுடைய உத்தேசம் இன்னொரு உள்ளத்தால் நம்பப்படுவதை நான் காணும்போது அதன் உண்மை பற்றிய எனது உறுதி இன்னும் அதிகமாகின்றது.

10
இஸ்லாமின் இறைவன்
கிறித்துவம் கடவுளை ’அன்பு’ என்று காட்டுகின்றது; இஸ்லாம் ’வல்லமை’ என்று. இந்த இரு கோட்பாடுகளுக்கு இடையில் நாம் எப்படி முடிவு செய்வது? நான் நினைக்கிறேன், மனித இனம் மற்றும் பிரபஞ்சம் முழுவதின் வரலாறுதான் இவ்விரு கோட்பாடுகளில் மிக உண்மையானது எது என்பதைச் சொல்ல வேண்டும். வரலாற்றில் நான் காண்பது என்னவெனில் இறைவன் தன்னை அன்பைக் காட்டிலும் வல்லமையாகவே அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறான். கடவுளின் அன்பை நான் மறுக்கவில்ல. ஆனால், நமது வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில், இறைவன் வல்லமையாகவே சிறப்பாக விளக்கப்படுகின்றான்.

11
ஹெகலின் தத்துவ முறை
ஹெகலின் தத்துவ முறை உரைநடையில் ஒரு காவியக் கவிதை.

12
15 மே 1910
15 மே 1910: நேற்று அதிகாலை நான்கு மணி அளவில், நமது மண்டலத்திற்கு வருகை தந்திருக்கும் அந்த மகத்தான ஹேலி வால்நட்சத்திரத்தைப் பார்த்தேன். முடிவற்ற வெளியில் அற்புதமாக நீந்தும் இந்த விண்மீன் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது வானில் தோன்றுகின்றது. அதனை மீண்டும் நான் என்னுடைய பேரப்பிள்ளைகளின் கண்களின் வழியாகத்தான் பார்க்க முடியும். என்னுடைய மனநிலை அசாதாரணமாக இருந்தது. விண்டுரைக்க இயலாத விசாலமான ஏதோ ஒன்று எனது மண்ணுடலின் குறுகிய எல்லைகளுக்குள் அடைபட்டிருப்பதாக நான் உணர்ந்தேன். அதே சமயம், மீண்டும் நான் இந்த நாடோடியை (வால் நட்சத்திரத்தை)ப் பார்க்கப் போவதில்லை என்ற வேதனையான எண்ணம் எனக்கு என் சிறுமையை உணர்த்தியது. ஒரு கணம் என்னுள் எனது லட்சியங்கள் எல்லாம் மடிந்துவிட்டன.

13
ஆட்சியின் வகைகள்
”ஆட்சியின் வகைகள் பற்றி அறிவிலிகள் சண்டையிடட்டும்” என்கிறார் அலெக்ஸாண்டர் போப். இந்த அரசியல் தத்துவத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னைப் பொருத்த வரை, ஆட்சி என்பது, அதன் எந்த வடிவத்தில் இருந்தாலும், மக்களின் நடத்தையை நிர்ணயிக்கும் முக்கியமான சக்திகளில் ஒன்று. அரசியல் அதிகார இழப்பு என்பது ஒரு தேசத்தின் பண்பாட்டை நாசமாக்கிவிடும். அரசியல் வீழ்ச்சியை அடைந்ததில் இருந்து இந்திய முஸ்லிம்கள் மிக மோசமான பண்பாட்டுச் சீரழிவை அடைந்திருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் சமூகங்களிலும் இந்திய முஸ்லிம்களே பண்பாட்டு அடிப்படையில் மிகவும் தாழ்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்த தேசத்தில் அவர்கள் முன்பு பெற்றிருந்த மேலான நிலையை நான் மறுக்கவில்லை. சொல்லப் போனால், தேசங்களின் நிலையை முடிவாகத் தீர்மானிக்கும் காரணிகளைப் பொருத்தவரை நான் இறைவிதியை நம்புபவன். ஓர் அரசியல் சக்தியாக நம் தேவை இனி இங்கு இல்லை. ஆனால், இறைவனின் ஏகத்துவத்திற்கு ஒற்றை சாட்சியாக நாமே இருக்கிறோம் என்னும் அடிப்படையில் இந்த உலகிற்கு நாம் அவசியமாகிறோம். எனவே, தேசங்களிடையே நமது மதிப்பு உறுதியாகிறது.

14
கவிதையும் தர்க்க உண்மையும்
கவிதையில் தர்க்க உண்மையைத் தேடுவது வீண் வேலை. கற்பனையின் இலக்கு அழகே அன்றி உண்மை அல்ல. ஒரு கவிஞனின் மகத்துவத்தை, அவனது கவிதை வரிகள் அறிவியல் உண்மையைச் சொல்வதாக நீங்களாகவே கருதிக் கொண்டு, அவனுடைய எழுத்துக்களில் இருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டி நிறுவ முயலாதீர்கள்.

15
சுய அமரத்துவம்
சுய அமரத்துவம் என்பது ஒரு நிலை (state) அல்ல; அது ஒரு நிகழ்முறை (process). உடல் வேறு ஆன்மா வேறு என்னும் பிரிவு நிறைய கெடுதியை உண்டாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். இந்தத் தவறான பிரிவின் அடிப்படையில் சில மதங்களின் முறைகள் அமைந்துள்ளன. மனிதன் என்பவன் அடிப்படையில் ஓர் சக்தி, ஓர் ஆற்றல். அல்லது வேறுபட்ட பல அமைப்புக்களை ஏற்றுக்கொள்கின்ற பல ஆற்றல்களின் தொகுப்பு. அந்த ஆற்றல்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பே சுயம் (Personality) என்பது. அது ஓர் அனிச்சை நிகழ்வா அல்லவா என்பது பற்றி எனக்கு இங்கே கவலை இல்லை. இயற்கையின் உண்மைகளில் அதுவும் ஓர் உண்மை என்பதை நான் ஏற்றுக்கொண்டு, நமக்கு மிகவும் பிரியமான இந்த அமைப்பு அது இப்போது இருப்பது போலவே எப்போதும் தொடர இயலுமா என்பதை அறிய முயல்கிறேன். இப்போது ஆரோக்யமான உயிருள்ள சுயமொன்றில் இயங்குவது போன்று அதே திசையில் அந்த ஆற்றல்கள் எப்போதும் இயங்குவது சாத்தியமா? சாத்தியம் என்றே நினைக்கிறேன். மனித சுயத்தினை ஒரு வட்டம் என்று குறிப்பிடுவோம். அந்த வட்டம் அதன் கட்டமைப்பை உருவாக்கியுள்ள ஆற்றல்களின் சீர்குலைவால் முற்றாக அழிந்துவிடும். இந்நிலையில் அந்த வட்டம் அப்படியே தொடருமாறு நாம் பேணுவது எப்படி? அந்த வட்டத்தைக் கட்டமைத்திருக்கும் ஆற்றல்கள் தொடர்ந்து அவற்றின் திசையில் இயங்கும்படியாக மேலும் அதற்குச் சக்தி ஏற்றுவதால்தான் அது சாத்தியம். சுயத்தை அழிந்திடச் செய்யும் போக்குடைய செயல்கள் அனைத்திலிருந்தும் நீங்கள் தவிர்ந்திருக்க வேண்டும். உதாரணமாக, இழிவு, தன்னிறைவு, குருட்டு அடிபணிவு. மேலும், ஒழுக்கம் என்பதன் பேரால் தவறாக உயர்த்தப்பட்டிருக்கும் இவை அன்ன குணங்கள். இன்னொரு பக்கம், உயர்ந்த லட்சியம், தாராளம், கொடைமை, நமது மரபில் நியாயமான பெருமிதம் மற்றும் வல்லமை போன்றவையே நமது சுயத்தினை உறுதி செய்வன.

மனிதனுக்கு மிகவும் பிரியமான உடைமையாக இருப்பதால் சுயத்தன்மையே உன்னதமான நன்மை என்று கூறவேண்டும். நம்முடைய செயல்களை மதிப்பிடுவதற்கு அதனையே அளவுகோலாகக் கொள்ளவேண்டும். நம் சுயத்தன்மையை துலங்கச் செய்வதெல்லாம் நன்மை; நம் சுயத்தன்மையை நசியச் செய்வதெல்லாம் தீமை. சுயத்தை உறுதியாக்கும் திட்டமிடப்பட்ட வாழ்க்கை முறைக்கு நம்மை நாமே தோதாக்கிக் கொள்வதன் மூலம் நாம் மரணத்துடன் போராடுகின்றோம். மரணம் – சுயமென்று நாம் அழைக்கின்ற ஆற்றல்களின் கட்டமைப்பைச் சீர்குலைக்கின்ற அதிர்ச்சியாகும். எனவே சுய அமரத்துவம் என்பது நம் கைகளில்தான் உள்ளது. ஒரு நபரின் அமரத்துவத்தைப் பாதுகாக்கப் பெரிய முயற்சி தேவைப்படுகிறது. நான் இங்கே உதிர்த்திருக்கும் சிந்தனை மிகவும் தூர விளைவுகளைப் பொதிந்துள்ளது. இந்தச் சிந்தனையின் கோணத்தில் இருந்து இஸ்லாம், பௌத்தம் மற்றும் கிறித்துவத்தின் மதிப்புக்களை ஆலொசிக்க எனக்கு அவகாசம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, இதன் விவரங்களை அலசுவதற்கு நேரமில்லாத படிக்கு நான் வேறு வேலைகளில் மும்மரமாக இருக்கிறேன்.

16
வரலாறு
வரலாறு என்பது ஒருவகை பயன்பாட்டு நீதிமுறைதான். நீதிமுறை என்பது பிற விஞ்ஞானங்களைப் போல் சோதிக்கவல்ல விஞ்ஞானமாக இருக்க வேண்டுமெனில் மனித அனுபவத்தின் வெளிப்பாடுகளே அதன் அடிப்படையாக அமைதல் வேண்டும். ஒழுக்கத்தில் தாங்கள் மரபார்ந்த பழமைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சமூக நன்னடத்தையோ வரலாற்றின் போதனைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. மேற்சொன்ன கருத்து பொதுப் பிரகடனம் ஆகுமானால் அத்தகையோரின் நன்னடத்தைகள்கூட கேள்விக்குறியாகும், அதிர்ச்சி அடையும்.

17
மீ-இயற்பியல்
மீ-இயற்பியல் (Metaphysics) பற்றி நான் கொஞ்சம் சலிப்படைந்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். மக்களுடன் நான் விவாதிக்கும் போதெல்லாம் அவர்களின் விவாதங்கள் எவ்வித விமரிசனமும் இல்லாத முன்னனுமானங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எனவே அந்த முன்னனுமானங்களின் மதிப்பைச் சோதிக்கத் தூண்டப்படுகிறேன். செய்முறை அதன் எல்லா வடிவங்களிலும் மீண்டும் என்னைக் கருத்தியலின் பக்கமே தள்ளுகிறது. மீ-இயற்பியலை முற்றாக ஒழித்துக்கட்டிவிட முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.

18
கொள்கை வெறி
அனைத்து நாடுகளும் கொள்கை வெறிக்காக (’அஸபிய்யத் – Fanaticism) நம்மைக் குறை சொல்கின்றன. நானோ மேலும் சென்று சொல்கிறேன் – கொள்கை வெறியில்தான் நாம் நியாயப்படுத்தப் படுகின்றோம். உயிரியலின் மொழியில் சொல்வதென்றால் கொள்கை வெறி என்பது ஒரு குழுவுக்காகத் தனிமனிதன் பணிசெய்தல் என்னும் கோட்பாடே அன்றி வேறில்லை. இப்பார்வையில், வாழ்வின் அனைத்து வடிவங்களுமே கொள்கை-வெறி என்பதுதான். கூட்டு வாழ்வுக்காக அக்கறை கொள்ளும்போது அது அப்படித்தான் அமையும். ஓர் ஆங்கிலேயனின் மதத்தை விமரிசனம் செய்யுங்கள், அவன் அசைய மாட்டான். ஆனால் அவனுடைய நாட்டை, அவனுடைய பண்பாட்டை, அல்லது ஏதேனுமொரு துறையில் அவனுடைய நாடு நடந்து கொள்ளும் முறையை விமரிசனம் செய்து பாருங்கள். அவனுடைய அந்தரங்கக் கொள்கை வெறி வெளிப்படுவதைக் காணலாம். இதற்குக் காரணம் யாதெனில், அவனுடைய தேசப்பற்று அவனது மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதுதான். அதற்கொரு புவியியல் அடித்தளம் உள்ளது – அவனது நாடு. எனவே நீங்கள் அவனது நாட்டினை விமர்சித்தால் அவனின் கொள்கை வெறி இயல்பாகவே வெளிப்படுகிறது. ஆனால் நமது நிலையோ அடிப்படையிலேயே வேறானது. நம்மைப் பொருத்தவரை நாட்டுப்பற்று என்பது வெறும் கருத்துருவம்தான், அதற்கு பருப்பொருள் அடித்தளம் இல்லை. நமக்கது இவ்வுலகைப் பற்றிய ஒருவிதப் பார்வையின் மீது அனைவரும் கொண்டுள்ள சிந்தனை உடன்பாடு மட்டுமே. எனவே, நமது மதம் விமர்சிக்கப்படும் போது நம்மில் எழும் கொள்கை வெறி என்பது ஓர் ஆங்கிலேயனின் பண்பாடு விமர்சிக்கப்படும் போது அவனில் எழும் கொள்கை வெறியைப் போன்றே நியாயமானதுதான். இரண்டும் வெவ்வேறு பொருள்களுடன் தொடர்புடையதாக இருப்பினும் இரண்டிலும் உணர்வு ஒன்றுதான். கொள்கை வெறி என்பது மதத்திற்கான தேசப்பற்று; தேசப்பற்று என்பது நாட்டிற்கான கொள்கை வெறி.

19
தேசப்பற்று
இஸ்லாம் சிலை-வழிபாட்டிற்கு எதிராகத் தோன்றியது. தேசப்பற்று என்பது சிலை வணக்கத்தின் ஒரு நுட்பமான வடிவமல்லாமல் வேறு என்ன? பருப்பொருளை தெய்வமாக்குதல் அல்லாமல் வேறு என்ன? தேசப்பற்று என்பது பருப்பொருளை தெய்வமாக்குதல் என்று நான் சொல்வதற்கு உலக நாடுகளின் தேசப்பாடல்கள் எல்லாம் சாட்சி கூறும். சிலை வணக்கத்தை எந்த வடிவத்திலும் இஸ்லாம் சகித்துக் கொள்ளாது. சிலை வணக்கத்தை அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பது நமது நிரந்தர நோக்கம் ஆகும். இஸ்லாமால் எது அழிக்கப்பட வேண்டுமோ அதுவே அரசியல் சமூகம் என்னும் கோட்பாட்டின் பேரில் அதன் அடிப்படையாக நிறுவப்பட முடியாது. நபிகள் நாயகம் தனது பிறந்த மண்ணிலன்றி வேறு மண்ணில்தான் சிறந்து வாழ்ந்து மறைந்தார்கள் என்னும் உண்மை இந்தக் கருத்தின் பக்கம் காட்டப்பட்ட ஆன்மிகக் குறிப்பாக இருக்கலாம்.
20
நீதி

நீதி என்பது விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷம். இரக்கம் என்னும் கள்வனிடமிருந்து அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.


(to be continued)

No comments:

Post a Comment