Saturday, September 17, 2022

காலமும் தாளமும்

 


            மனித மனம் பறவைகளைப் பெரிதும் இசையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கிறது. விதிவிலக்குகள் சில உண்டு. கிளி என்றால் பேச்சு. மயில் என்றால் நடனம். ஆனால், புள்ளினங்கள் யாவும் இசையுடன்தான் இயைகின்றன. உலகம் முழுவதும் இதுதான் மரபு.

            பாரதி எழுதிய குயில் பாட்டும் அப்படியே. குயில் ஆன்மாவின் குறியீடு என்பது அப்பாட்டிற்கான வியாக்கியானம். அந்தக் குயிலை வைத்து இசை என்னும் கலையை ஆழமாக அளந்து பேசுகிறார் பாரதி. குயில் தன் காதல் நிலையை உரைக்கும் பாடலில் இசை பற்றியே அதிகம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு பகுதி:

                        தாளம் தாளம் தாளம்;

                        தாளத்திற்கோர் தடை உண்டாயின்

                        கூளம் கூளம் கூளம்

            இந்த வரிகளை முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் இப்படி ஆங்கில ஆக்கம் செய்து அளித்துள்ளார்:

                        Time, Time, Time, Time;

                        If Time at all be not kept

                        Is it not dirt ill-left?

            பாரதியார் ஷெல்லியின் கவிதைகளில் மூழ்கித் திளைத்தவர் என்பதறிவோம். அவர் ஷேக்ஸ்பியரைப் படித்திருக்கிறாரா? தி.ந.ரா அவர்கள் தமது மொழிபெயர்ப்பில் மேற்கண்ட பகுதிக்குப் பின்வரும் அடிக்குறிப்பு வரைகிறார்:

                        “Ha, ha, keep time: how sour sweet music is

                         When time is broke and no proportion kept”

-        King Richard II. 1,1,42

            காலப் பிரமாணம் என்பது இசைக்கு அடிப்படை. ராகம் என்பது காலத்தின் மூச்சு; தாளம் என்பது காலத்தின் இதயத் துடிப்பு. ராகம் என்பது காலப் பறவையின் வானச் சிறகடிப்பு; தாளம் என்பது காலப் புரவியின் நிலமளக்கும் காலடியோட்டம்.



            பழந் தமிழிசை என்னும் கர்நாடக இசையில் துருவ, மட்டிய, ரூபக, ஜம்பை, திரிபுடை, அட, ஏக என்னும் ஏழு தாளங்களும் கால அளவை வைத்தே வகுக்கப்பட்டுள்ளன.

            தாளம் பற்றிப் பேசும்போது பாரதியின் இன்னோர் அற்புத வரியை நினைவுகூராமல் இருக்க முடியாது. சக்தி குறித்த வசனக் கவிதையில் அவர் சொல்கிறார்: “சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்.”

            பிரபஞ்சமெங்கும் நீக்கமறப் பரவி இயங்குவதும் இயக்குவதுமான சக்தியைப் பற்றிப் பேசுகிறார் பாரதி. பிரபஞ்ச இயக்கத்தை நடனம் என்று உருவகிக்கிறது சைவ மெய்யியல். தாளம் இல்லாமல் நடனம் இல்லை. எதன் தாளம்? சக்தியின் தாளம். (சக்தி – Energy). சக்தி இல்லாத இடமே இல்லை என்பதாலும், அது தாளமிடுகிறது என்பதாலும் ‘சர்வம் தாள மயம்’ ஆகிறது. அந்தத் தாளத்தின் வெளிப்பாடு எது? ஒளி!

            ”சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்” என்னும் வரியில் உள்ள ’ஒரு’ என்னும் ஒரு சிறு சொல் உறுத்திக் கொண்டே இருந்தது. சக்திக் கூத்தில் ஒளியே தாளம் என்று சொல்லியிருக்கலாமே? அது ஏன் ஒளி ஒரு தாளம் என்று சொன்னார்? இந்தக் கேள்வி வெகு காலம் என் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்தது. ஒரு தாளம் என்பது one beat என்பதைக் குறிக்கிறது என்று கொண்டால், ஒளி ஒரு தாளம் என்பதன் பொருள் என்ன? தாளத்தை beat (அடி / தட்டு / கொட்டு) என்று அளப்பது போல் ஒளிக்கு அளவு உண்டா? உண்டு என்கிறது இயற்பியல் விஞ்ஞானம்.



            ஒரு தாளம் என்பது தாளத்தின் ஓர் அலகு. எனில், ஒளியின் ஓர் அலகு எது? ஐன்ஸ்டீன் அதனை ’குவாண்டா’ (quanta) என்று அழைத்தார். பின்னர் அது ஃபோட்டான் (photon) என்றும் பெயர் பெற்றது. ஒளி அலை வடிவில் பாய்கிறது. எடையிலிகள் ஆன ஃபோட்டான்கள் வெளியில் அதி வேகத்தில் பயணிக்கின்றன என்று முன்பு சொல்லி வந்தனர். உண்மையில் ஃபோட்டான்கள் தாம் இருக்கும் இடத்திலேயே அதிர்ந்து மேலும் கீழுமாய் அசைகின்றனவே அன்றி அவை நகர்வதில்லை என்றும், தொடர்ந்து நிற்கும் ஃபோட்டான்கள் ஒவ்வொன்றும் தாம் இருக்குமிடத்திலேயே மேலும் கீழுமாய் அசைந்து அலை ஒன்று நகர்ந்து செல்வது போன்ற தோற்றத்தைக் காட்டுகின்றன என்றும் குவாண்டம் இயற்பியல் கண்டறிந்தது.

அதாவது , வெளியெங்கும் சக்தியின் சலனம் மட்டுமே நகர்கிறது, துகளன்று. இதுவே சக்திக் கூத்து என்றும் சிவ தாண்டவம் என்றும் சுட்டப்படுகிறது. இது ஒரு கணம்கூட, கன்ணிமை நொடியின் கோடியில் ஒரு பங்கு நேரம் கூட ஓய்வதில்லை. ஆம், சக்தியின் அலைகள் ஓய்வதில்லை.

ஓய்வு நிலையை தூக்கம் என்னும் சொல் குறிக்கும். இறைவனுக்கு சோர்வும் ஓய்வும் கிடையாது. “அவனை சிறுதுயிலோ பெருந்துயிலோ பீடிக்காது” (குர்ஆன் 2:255) ஏனெனில், இறைவன் எல்லையற்ற சக்தி உடையோன். “சக்தி அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” (குர்ஆன் 2:165) ஆதலால், இறையாற்றல் எப்போதும் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. “ஓவ்வொரு கணமும் அவன் புதிய மாட்சியில் இருக்கிறான்” (குர்ஆன் 55:29)

இறை சக்தியே இயங்குகிறது; அது பருப்பொருள் மீது வெளிப்படுவதால் அப்பொருளே இயங்குவது போல் தெரிகிறது. அணுத் துகள் அசையவில்லை. அதை சக்தி அசைக்கிறது. ”அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது”.

இறை சக்தியே படைக்கிறது, காக்கிறது, அழிக்கிறது. இம்மூன்று காரியங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன. எனவே, பொருள்கள் நிலையாக இருப்பன போல் தோன்றுகிறது.  அணுத்துகள்கள் உடைபடும் போது உடைந்த துகள்கள் சிறியவையாக இல்லாமல் தம் மூலப் பொருளின் அளவையே கொண்டுள்ளன என்றும் சக்தி அவற்றை அப்படி ஆக்கிவிடுகிறது என்றும் நவீன இயற்பியல் கண்டறிந்தத விந்தைச் செய்தியைச் சொல்லும் இயற்பியலாளர் ஃபிரிட்ஜாஃப் காப்ரா, “இதனால், உப அணுத் துகள்கள் ஒரே சமயத்தில் அழிக்க முடிந்தவையாகவும் அழிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன” என்று சொல்கிறார் (”Tao of Physics” / 4.’The New Physics’, p.89)



நாம் வாழும் பிரபஞ்ச வெளி முப்பரிமாணம் கொண்டது. இத்துடன் காலம் என்பது நான்காம் பரிமாணம் என்று சொன்னார் ஐன்ஸ்டீன். இடமும் காலமும் தனித்தனியாக இல்லை, அவை இரண்டும் பிரிக்க முடியாத ஒன்று என்று சொல்லி, இட-காலம் (‘space-time’) என்னுமொரு கோட்பாட்டை 1908-இல் முன்வைத்தார் இயற்பியலாளர் ஹெர்மன் மின்கோவ்ஸ்கி. “இனிமேல், தனியே இடமும், தனியே காலமும் வெற்று நிழல்களாய்க் கரைந்து போகும். அவ்விரண்டும் சங்கமித்த ஒன்றே தனித்த உண்மையாய் நிற்கும்” என்று அவர் சொன்னார் (”Tao of Physics” / 12.’Space-time’, p.185)

நவீன இயற்பியலின் தொடர் ஆய்வுகள் இடம் மற்றும் காலம் குறித்துப் புதுப் பார்வைகளைத் திறந்தன. பிரபஞ்ச வெளி வளைந்திருக்கிறது (Space is curved) என்றார் ஐன்ஸ்டீன். ’காலம் எல்லா இடங்களிலும் ஒரே கதியில் ஓடவில்லை’ என்றார்கள். மேலும், “பிரபஞ்சத்தின் வெவ்வேறு இடங்களில் இடம் வேறு வேறு கோணங்களில் வளைந்திருக்கிறது, காலம் வேறு வேறு கதிகளில் ஓடுகிறது” என்றும் சொன்னார்கள் (”Tao of Physics” / 12.’Space-time’, p.197)



அதாவது, சக்திக் கூத்தில் பல்வேறு தாள கதிகள் இருக்கின்றன. சப்த தாளங்களும் ஒரே நடனத்தில் ஏக காலத்தில் நிகழ்வது போல்!

சக்தியின் இயக்கமே ஒளி. அது பிரபஞ்சமெங்கும் நிறைதிருக்கிறது. “அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான்” (குர்ஆன் 24:35) எனினும், கட்புலன் ஆகும் இந்த அளக்க முடிந்த ஒளி அல்ல அது. அவன் இந்த ஒளிக்கு ஒளியாக இருக்கிறான்.

ஒளியின் கதியே காலம். ”நானே காலமாக இருக்கிறேன்” என்பது இறைவாக்கு (புகாரி:4549 & முஸ்லிம்: 2246.) எனினும், அளக்க முடிந்த இந்தக் காலம் அல்ல அது. அவன் இந்தக் காலத்திற்குக் காலமாக இருக்கிறான்.

சக்தியே ஒளியாகவும் காலமாகவும் இருக்கிறது எனில், வெளியாக (இடமாக) இருப்பது எது? சக்தியேதான்!

நவீன இயற்பியல் இன்னொன்றையும் கண்டது: “சக்தியே வெளியாக இருக்கிறது. பருப்பொருட்கள் யாவும் வெளியின் குறிப்பிடம் சார் உறைவே; சக்தியின் தோன்றி மறையும் திரட்சியே” (Particles are merely local condensations of the field; concentrations of energy which come and go.”) (”Tao of Physics” / 12.’Space-time’, p.197)

எனவே, ”நானே காலமாக இருக்கிறேன்” என்னும் வாக்கிலேயே ‘நானே இடமாக இருக்கிறேன்’ என்பதும் பொதிந்திருக்கிறது. பேருண்மை மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றின் தளத்தில் காலத்தைச் சொன்னாலே இடத்தையும் சொன்னதாகிறது.

இறைமையே இடத்தையும் காலத்தையும் வெளிப்படுத்துகிறது. அது, இடம் கருதின் பொருளாய்க் காட்டும், காலம் கருதின் வினையாய்க் காட்டும்.

Monday, September 12, 2022

தீரா உள்ளூற்று

 


         மிகவும் அரிதாகவே நல்லதொரு இசைப் பாடல் கிடைக்கிறது. வரிகள் நன்றாக இருந்தால் இசை தேராது, இசை சிறப்பு என்றால் வரிகள் தேயும், இசையும் வரிகளும் தரம் காட்டினால் காட்சி சகிக்காது. மூன்றும் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்து திருப்தி தருவது அரிதினும் அரிது. அவ்வகையில், 2018-ஆம் ஆண்டு வெளியான 96 என்னும் திரைப்படத்தில் உள்ள ;லைஃப் ஆஃப் ராம்’ என்னும் இசைப் பாடலே அதன் பின் இந்நாள் வரை நான் ’அண்மையில் கேட்ட’ அருமையான பாடலாகத் தொடர்கிறது.

            இது ஆன்மிகச் சாயல்கள் கொண்ட ஒரு பாடல். ஆன்மிகத்தில் பரிச்சயம் உள்ள அனைவருக்கும் இதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏதுமில்லை. இது வாழ்க்கையைச் சொல்லும் பாடல் என்றால் அனைவருக்கும் புரியும். வாழ்வைப் பிரிந்து ஆன்மிகம் ஏது?

            எத்தனை உள்ளங்கள் இந்தப் பாடலை எப்படியெல்லாம் கொண்டாடின என்பதை இப்பாடலுக்கான பின்னூட்டங்களை வாசித்தால் அறியலாம். “Introvert anthem” என்று ஒருவர் போற்றியிருந்தார். ஹாரிஸ் ஹரி என்றொருவர் வியந்து எழுதியதை இங்கே சுட்ட விரும்புகிறேன்: “ஒரு பாடல், தனிமையில் இருக்கும் ஒருவனை சட்டென எழுப்பி, ‘இது உன் வாழ்க்கை இல்லை, எழுந்து செல் உன் வாழ்க்கையை நோக்கி’ என அழைத்துச் செல்கிறது என்றால், எவ்வளவு பெரிய படைப்பு அந்தப் பாடல் என்பது, இதனைக் காணும் என்னைப் போன்ற தனிமை விரும்பிகளுக்குப் புரியும்.”



            இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று விசாரித்தேன். அவன் கவியுலகின் பேரரசோ சிற்றரசோ அல்லன். ஆனால், கவிச்சித்தன் என்று அழைக்கலாம் என்னும்படி இப்பாடலை எழுதியிருக்கிறார் கார்த்திக் நேத்தா.



இசை அமைத்தவர் கோவிந்த் வசந்தா என்று அறிந்தேன். ஆச்சரியம். இவரை நான் எட்டாண்டுகளுக்கு முன்பே அறிவேன். கோவிந்த் மேனன் என்று அப்போது பெயர். கப்பா டி.வி என்னும் யூடியூப் சேனலில், தாய்க்குடம் பிரிட்ஜ் என்னும் குழுவில் இவரது வைலின் வாசிப்பில் வெளியான கோர்வைகளைக் கேட்டு ரசித்து நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். அப்போதே இசை இவருக்கொரு தியானம் என்பதை உணர்ந்தேன். இப்போது இப்பாடலில் அவரின் இசைக் கற்பனையில் அந்த தியான ருசி வெளிப்பட்டுள்ளது.

             இப்பாடல் தமிழிலும் தெலுங்கிலும் தனித்தனியாக உருவாக்கப் பட்டுள்ளது. இரண்டுக்கும் இருவேறு மெட்டுக்கள், இருவேறு காட்சிப்பாடுகள், இருவேறு பாடல் வரிகள். (சுந்தரத் தெலுங்கினில் இசைக்கும் பாடல் மெட்டிற்கு எழுதப்பட்ட தமிழ் பிரதி ஒன்றும் இருக்கிறது. அதையும் சேர்த்தே பேச வேண்டும்.)

            காட்சியைப் பற்றி இங்கே விரிவாகப் பேசப் போவதில்லை. இயற்கையின் அழகுகளை வெவ்வேறு இடங்களில் – ஐந்திணை நிலங்களில் – அவன் பயணித்துக் காணும் காட்சிகளில் எல்லாம் – “காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்னும் பாரதியின் வரிகளும், மக்கள் திரளில் தன்னைக் கலந்தபோதும் தனிமையாக அவன் செல்வதில் – “மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் … … … மானுட சமுத்திரம் நான் என்று கூவு” என்னும் பாரதிதாசன் வரிகளும் நினைவுக்கு வருகின்றன. (நான் ஒருமுறை இயற்கை அழகு கொழிக்கும் இடம் ஒன்றில் அவ்வாறு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் “LIFE OF RAMeez” என்று எழுதி நண்பர்களுக்கு அனுப்பினேன். சித்த சேட்டை!)

            இனி, இப்பாடலின் வரிகளில், ஞானிகள் மற்றும் பெருங்கவிகள் சொன்ன கருத்துக்களுடன் ஒப்பிடக் கூடிய இடங்களைத் தொட்டுக் காட்ட விழைகிறேன்.

            ”வாழா என் வாழ்வை வாழவே

             தாழாமல் மேலே போகிறேன்

             தீரா உள்ளூற்றைத் தீண்டவே

             இன்றே இங்கே மீள்கிறேன்

             இங்கே இன்றே ஆழ்கிறேன்”

            ”வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

            தெளிவில் பூப்பேன்”

 

            உன்னுள் ஆழ்ந்து செல்வதே இங்கு விட்டு விடுதலை ஆகி மேலே செல்வதாகும். “தீரா உள்ளூற்றைத் தீண்டவே…” என்னும் வரியில் மவ்லானா ரூமியின் சாயல். அடுத்த வரியே சூஃபித்துவத்தில் இருந்து ஜென்னுக்குத் தாவுகிறது. நிகழ் கணத்தில் விழிப்புடன் இருத்தல் என்பது ஜென்னில் வலியுறுத்தப்படும் அடிப்படைகளுள் ஒன்று. உண்மையில் மனித மனம் நிகழ்காலத்தைத் தவற விட்டுவிட்டு நேற்றிலும் நாளையிலும் அலைகிறது. எனவே நிகழ்காலத்துக்கு அதைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது மீள்வதுதான். பின்னர், ஆழ்வது தியானம்.

            இப்பாடல் நெடுகிலும் மீண்டும் மீண்டும் ஆழ்தல், ஆழம் ஆகிய சொற்கள் இடம் பெறுகின்றன. தன்னுள் ஆழும் தியான நிலையை இப்பாடல் பேசுகிறது. அங்கே வெளியே இருக்கும் வெளிச்சமோ இருளோ இல்லை; இருளும் ஒளியும் ஒன்றான ஒரு நிலை இருக்கிறது; அங்கே, வெளியே இருக்கும் கால நேரம் இல்லை, அதற்கே உரிய ஒரு காலம் அல்லது காலமின்மை இருக்கிறது. இதைச் சொல்லும் வரிகள்:

            ”ஆழ் என்பது மெய்ஞான போதம்

             போல் என்பது பகட்டு வாதமே

             நாள் என்பதும் பொய்யான காலம்

             இப்போதில் எல்லாமும்

             கேள் என்குதே தெளிந்த ஞானமே

             கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே”

            இசையமைப்பில் பாடும்போது இந்த வரிகள் வேறொரு கட்டமைப்புக் கொண்டுள்ளன. முதல் மூன்று வரிகளின் பின்னும் “இப்போதில் எல்லாமும்” என்பது மீள்வரியாக (refrain) வருகிறது. அதுவும், “இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்” என்று உள்-மீள் சொல் (inter–refrain) கொண்டிருக்கிறது. இதை, ((இப்போதில் X 3) எல்லாமும்) X 3) என்று கணிதச் சூத்திரம் போல் எழுதலாம். இந்தக் கட்டமைப்பு இசையின் தாளக் கட்டுக்கு மெருகூட்டுகிறது.

            ”யாரோ போல் நான் என்னைப் பார்க்கிறேன்

             ஏதும் இல்லாமலே இயல்பாய்

             சுடர் போல் தெளிவாய்”

            ”காணாதொரு வெளிச்சத்தில்

             எனை நானே, அட! முழுதாய்ப் பார்ப்பேன்”

            சாட்சி பாவம்! (saakshi bhaavam). தன்னை விலகி நின்று கவனித்தல். கோட்பாடுகளின் வழியாக அல்ல. சுயத்தின் சுடர் என்னும் அகப் பார்வை கொண்டு பார்த்தல்.

            ”நானே இல்லாத ஆழத்தில்

             நான் வாழ்கிறேன்;

             கண்ணாடியாய்ப் பிறந்தே

             காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்”

            இறைமையின் சுயம் மட்டுமே உண்மையில் இருக்கின்றது. இருப்பது ஒரே ஒரு ’நான்’ மட்டுமே. அது பலகோடி ’நான்’களாகக் காட்சி தருகின்றது. படைப்பைக் கண்ணாடி ஆக்கிப் பிரதிபலிக்கின்றது. இன்னனம் ஞானியர் உரைப்பர். ”வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்…” என்று தொடங்கும் பாரதியின் பாடலை இங்கே நினைவு கூர்கிறேன்.

            ”இரு காலின் இடையிலே

             உரசும் பூனையாய்

             வாழ்க்கை போதும் அடடா”

            வாழ்க்கை இயல்பானது, எளிமையானது, சிக்கலற்றது என்பதைச் சொல்லும் இவ்வரிகளில் ஒரு ஜென் ஹைகூ இருக்கிறது. இதை ஒரு ஜப்பானிய ஜென் கவி எழுதியிருந்தால் “கால்களின் இடையில் / உரசும் பூனை / வாழ்க்கை” என்று எழுதியிருப்பான்.

            ”நானே நானாய் இருப்பேன்

             நாளில் பூராய் வசிப்பேன்

             போலே வாழ்ந்தே

 சலிக்கும் வாழ்வை

 மறக்கிறேன்

 வாகாய் வாகாய் வாழ்கிறேன்

 பாகாய் பாகாய் ஆகிறேன்”

பாவனைகள் பண்ணாமல், நடிக்காமல் வாழும் வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்க்கிறது? லௌகீக வாழ்வின் கெட்டிக்காரத்தனம் என்னும் பேரில் யார் யார் போன்றோ பாவித்து போலி செய்து வாழும் முறையைப் பலரும் ஏற்றிருக்கின்றனர். Personality -  ஆளுமை – என்பதன் மூலச் சொல்லான persona என்பதற்கு முகமூடி என்று பொருள். அரிதாரம் இன்றி வாழ்க்கைக்கு உண்மை ஆக வாழ்வோர் மிகச் சிலரே. வாழ்க்கையின் நீர்மைக்குத் தக வாகாய் வாழ உள்ளம் கல்லாய் இல்லாமல் பாகாய் உருகியிருக்க வேண்டும்.

“நான் என்பது யாரோ பெருந்திரளினிலே? – ஏடே!

 நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே!

 தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே – கூவி

 வாவென்றொரு வாழ்க்கை

 சிறு குரலாய் அருளாய்ப் பேச”

இழக்க வேண்டிய நான் என்பதொன்று உண்டு. வெளியே இருந்து கொடுக்கப்பட்டிருக்கும் போலியான அடையாளங்களைத் தான் என்று காணும் நான் அது. அதைத் துறக்கும் கணத்தில் ஓர் அக எழுச்சி நிகழ்கிறது.

“(அ)தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே

 பாதை இல்லாமலே அழகாய்

 நிகழே அதுவாய்”

பறத்தல் மட்டுமல்ல, பறவையே ஒரு நிகழ்வுதான். அதன் உள்ளுணர்வே அதன் பாதை. ”வரவும் போகவும் / இந்த நீர்ப்பறவைகள் / சுவடுகள் வைப்பதில்லை / பாதையிற் செல்வதில்லை” என்கிறார் ஜென் ஞானி டோஜன்.

”திமிலேறி காளை மேல் தூங்கும் காகமாய்

 பூமி மீது இருப்பேன்

 புவி போகும் போக்கில்

 கை கோர்த்து நானும் நடப்பேன்”

சித்தன் போக்கு சிவன் போக்கு அல்லவா? அதாவது, இறை நாட்டமே ஞானியின் நாட்டம். இறைவன் நிகழ்த்துவதை எல்லாம் பொருந்திக் கொளல், இயைந்து செலல். ”பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர் முறை வழிப் படூஉம்” என்கிறார் கணியன் பூங்குன்றன். அதாவது, ஓடி வரும் பெரிய நதியின் விசையின் படி தெப்பம் போகும். ”நின் படகை வெறுமை ஆக்கி உலகெனும் நதி கட” என்கிறார் சுவாங்சூ.

”ஆறறிவென்றே அலட்டாமல்

 அலட்டாமல் எளிதாய் நானும்

 ஓர் உயிர் என்றே இருப்பேனே.

 குழம்பாமல்

 யார் உடைத்தாலும்

 சிரிக்கின்ற பொம்மை போலே

 நான் என் இயல்பில் இருப்பேன்”

உன் படகை வெறுமை ஆக்குவதற்கான வழி இது. நீ மனிதன் என்னும் உணர்வு, ஏனைய உயிர்களை விட மேலானவன் என்னும் எண்ணம் கர்வமாக, ஆணவமாக மாறிவிடக் கூடும். அறிவை வைத்து உன் மேன்மையை அளக்காதே. உலகில் வாழும் பலகோடி உயிர்களில் நீயும் ஓர் உயிர் என்று மட்டும் உணர்ந்து இரு. அப்போது ஆணவம் இல்லாமல் எளிமையாய் இருப்பாய். அப்போது, வெளியிலிருந்து உன் மீது தாக்கும் எதுவும் உன் இயல்பை பாதிக்காத நிலையில், உன் இயல்பில் இருப்பாய்.

“ஓடும் நதியின் மேலே

 உட்காரும் தட்டான் போலே

 லேசாக அமர்ந்தே பறப்பேனே”

அத்தனை லாலவகம். எதையும் பற்ற வேண்டும் என்றோ, கைப்பற்ற வேண்டும் என்றோ நோக்கம் இல்லை. “ஒரு புல்லின் இதழையும் அசைக்காமல் காட்டினுள் நுழைகிறான்; ஒரு சிறு அலை கூட எழுப்பாமல் நீருக்குள் நுழைகிறான்” என்று சொல்கிறது பாடியோன் பெயர் அறியப்படாத சீனத்துக் கவிதை ஒன்று.

”பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

 இப்போது கண்ணாக;

 பேருண்மையில் கலந்து போகிறேன்

 இப்போது ஒன்றாக;

 பேரன்பிலே தள்ளாடி பூத்தேன்

 இப்போது நன்றாக;

 பேராற்றலில் கரைந்து போகிறேன்

 பூத பேத வாத மோகம் மறைகிறதே”

உண்மையின் ஓர் ஒளிச்சுடர் காண்பதற்கும் எவ்வளவு தொலைவு போக வேண்டியிருக்கிறது! பேரெல்லையில் உட்கார்ந்து பார்ப்பது என்றால் என்ன? பேரெல்லை எது? இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையா? சித்தம் அந்த எல்லை வரை போய்த்தானே சத்தியத்தை தரிசிக்க முடியும்? பேரெல்லை, பேருண்மை, பேரன்பு, பேராற்றல் என்று இவ்வரிகள் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் தன்னுள் கொண்ட ஏக நிலையைப் பேசுகிறது. அந்நிலை உணர்ந்தார்க்கு அதன் பின் ஐம்பூதங்களும் அவை கலந்த மயக்கத்தால் ஆகியிருக்கும் பற்பல பொருட்களும் வேறு வேறு என்று பார்க்கும் பேதப் பார்வை மறைந்து விடுகிறது. “ஒன்றாகக் காண்பதுவே காட்சி” என்கிறார் ஔவையார். “எல்லா பூதங்களிலும் சமமாக இருப்பவன் பரமேஸ்வரன்; அழிபவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சியுடையான்” (13:27) என்கிறது பகவத் கீதை.

பாடலின் இரண்டாம் சரணத்தை இங்கே முழுதாய்த் தருகிறேன். அதன் விளக்கங்களுக்கு மேற்சொன்ன செய்திகளே போதும் என்று கருதுகிறேன்:

“நான் எனக்குள்ளே

 அசைந்தேனே ஊஞ்சல் போலே

 யார் எனை அசைத்தே ரசித்தாரோ?

 பேரலைமேலே

 விளையாடும் காகம் போலே

 யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்?

 சீறும் புலியைப் பார்த்தே

 சிரிக்கின்ற சிசுவைப் போலே

 கோபங்கள் மறந்தே சிரிப்பேனே.

 பதறாமல்

 பூவிழும் குளத்தின் மேலே

 உருவாகும் வளையல்போலே

 நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே

 கதறாமல்

 வாகாய் வாகாய் வாழ்கிறேன்

 பாகாய் பாகாய் ஆகிறேன்

 தோதாய் தோதாய்ப் போகிறேன்

 தூதாய் தூதாய் ஆகிறேன்

 போதாய் போதாய்ப் பூக்கிறேன்

 காதாய் காதாய்க் கேட்கிறேன்

 தாலாட்டும் காலம்

 தலையாட்டும் ஞானம்

 தாய் போல் பாடுதே

 ஆரோ ஆரோ ராரிரோ…”

இந்த வரிகளின் முதல் வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள். எல்லாம் நெடில் ஓசை கொண்டு ஆரம்பிக்கும் சொற்கள். நான், யார், பேரலை, சீறும், கோபங்கள், பூவிழும் – இப்படி எல்லாமே நெடில் ஓசை கொண்டு தொடங்குவன. இது இப்பாடலின் மெட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அப்படியும் வரிகளின் கவித்துவமும் கருத்தும் அற்புதமாக வந்திருக்கின்றன. சிற்சில இடங்களில் உளறல் போன்றும் தொனிக்கின்றன. உன்னதக் கவிதை உளறல் நிகர்க்கும்; ஞானியர் பித்தரைப் போல்வர்.



”ஏதாரெதுரைனா எதுவெலுதுண்டோ அடிகானா…” என்று தொடங்கும் தெலுங்குப் பிரதிக்கான பாடலை ஸ்ரீவெண்ணல சீதாராம சாஸ்த்ரி எழுதியுள்ளார். அதன் ஆங்கிலப் பெயர்ப்பின் வழி அதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்:

என் முன் விரியும் எந்த ஒரு பாதைக்கும்

இலக்கு என்னவென்று கேட்டதில்லை நான்.

வாழ்க்கை எனை இட்டுச் செல்லும்

வழியிலே போகின்றேன்.

தேடல் எதுவும் எனக்கில்லை என்றபோதும்

கோடி பொருட்கள் எனைச் சூழ்ந்து நின்றபோதும்

ஆடாத அசையாத கற்சிலை ஒன்று

மெல்ல கனவில் கரைவது போல் ஆகின்றேன்.

யாரேனும் நான் யாரென்று கேட்டால்

மாறவில்லை, முன்பிருந்த ஆளேதான் நான் என்பேன்

மரணம்வரை ஒரு கேள்வியாய் நானிருப்பேன்

மாற்றம் செய்யாதே என்னில்

என்று காலத்திடம் கேட்கிறேன்.

தனிமையில் கிடக்கிறேன் நான் என்று

என்னைத் துரத்தி வந்து

எவரும் கூற வேண்டாம்;

இன்னும் பல ஆயுளுக்கு

என்னவளின் நினைவுகளை

என்னுள் வைத்திருக்கின்றேன்

என்பதை யார் அறிவார்?

யாரின் துணையால் ஓடுகிறது

இந்நாட்களில் என் மூச்சு?

ஆறுதல் என் உள்ளத்துக்கு

அளிப்பது இங்கே யார் பேச்சு?

புது நாள் புலர்ந்து ஒளிரும்போது

புதிய நானும் பிறக்கின்றேன் மீண்டும்,

காலம் என்னைப்

புதிதாகப் பெற்றதைப் போல்.

என் கதையை முடிவின்றி

சொல்லியபடி இருக்கின்றேன்

முடிவேதும் இல்லாத கதைதான் நான்.

 

காற்றில் ஏகுமொரு பருந்தினைப் போல்

என்றன் கால்கள் எங்கும் நிற்பதில்லை.

 

முகவரியும் பதிலும் இல்லாத கடிதமொன்று

மௌனத்தில் கதறுவதை

ஏன் என்று வியக்கின்றேன்

உலகம் எனைச் சுற்றிப்

பின்னியதோர் தனிமையை

எனதென்று அழைக்கின்றேன்.

நான் சொல்வது புரிகிறதா?

நானும் என் நிழலும் ஆன

இருவருமே போதுமாவோம்

வேறொருவர் துணை வேண்டேன்.

முன்பு தாயின் மடியில் அப்போது

பின்பு தூரத்து நம்பிக்கைகள் இப்போது

என்று,

நிலா என்னை ஈர்க்கிறது.

தொலைவில் இருக்கிறது என்றாலும்

நிலவின் ஒளி என்னைச் சூழ்ந்து

தாலாட்டித் தூங்க வைக்கும்

தாய்மையை உணர்கிறேன்

ஆரோ ஆரோ ராரிரோ…”

கார்த்திக் நேத்தா தமிழுக்கு எழுதிய பாடல் வரிகளின் உயரத்தை தெலுங்குப் பிரதியின் வரிகள் தொடவில்லை என்று எனக்குப் படுகிறது.

“வானம் எனக்கொரு போதி மரம்” என்று வைரமுத்து எழுதியபோது தமிழ்த் திரைப்பாடல் துறை வேறு உடை மாற்றிக் கொண்டது என்று சொல்வார்கள். அது போல் இப்பாடலும் எண்ணத் தகும்.

 

 

Saturday, September 3, 2022

காலம் கனிந்து வரும்

 

("ஆமிர் கலீமி” - ஆகஸ்டு 2022 மாத இதழில் வெளியான கட்டுரை.)



               காலம் என்பது மனித அறிவின் எல்லைகளைக் கடந்த ஒரு பெரும்பொருள். காலத்தின் முன் மனித அறிவு திகைத்தும் வியந்தும் உறைந்து நின்றுவிடுகிறது.

            காலத்துடன் மோதும் மனிதன் தோல்வியே அடைகிறான். ஏனெனில், காலத்துடன் மோதுவது இறைவனுடன் மோதுவதாகும். ”நானே காலமாக இருக்கிறேன் (அனத் தஹ்ரு)” என்பது இறைவாக்கு (ஹதீஸ் குத்ஸி: புகாரி:4549 & முஸ்லிம்: 2246.)

            ”காலத்தின் மீது சத்தியமாக!

             மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்,

             இறை நம்பிக்கை கொண்டு

             நற்செயல்களாற்றி

             ஒருவருக்கொருவர் உண்மையுறுத்தி

             தம்முள் பொறுமை உய்த்தோர் தவிர.”

            (103:1-3)

            நாம் காலத்தை உணரும் அடையாளங்களாக இரவும் பகலும் இருக்கின்றன. அவை இறைவனால் தொடர்ந்து படைக்கப்படுபவை. “நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலுள் நுழைக்கிறான், பகலை இரவுக்குள் நுழைக்கிறான்” (22:61). மேலும், அவன் சொல்கிறான்:  கட்டளை என் கையில் இருக்கிறது; இரவையும் பலகையும் சுழலச் செய்கிறேன்.” (புகாரி:4549 & முஸ்லிம்: 2246.)

            காலம் என்பது ஒரு படைப்பு என்னும் நோக்கில், காலம் சுயமாக நன்மையோ தீமையோ செய்யாது, லாபமோ நட்டமோ தராது. நாஃபி’ஃ (நற்பயன் அளிப்போன்) என்பதும் ழார்ரு (இடரளிப்போன்) என்பதும் இறைவனின் திருநாமங்கள். அவ்விரு பண்புகளும் அவனுக்கே உரியன. அவனல்லாத எதற்கும் சுயமாக அப்பண்புகள் கிடையாது. எனவே, படைப்புகள் தாமாகவே நன்மை தீமை செய்யா. காலம் என்பது தானே லாபமோ நட்டமோ தராது.

            காலம் என்பது இறைவனின் கருவி என்னும் நிலையில் அதைக் கொண்டு அவன் ஏற்றமும் இறக்கமும் செய்கிறான், லாபமும் நட்டமும் தருகிறான், நன்மையும் தீமையும் படைக்கிறான்.



            ”காலத்தின் மீது சத்தியமாக!” என்று சொன்னதில் இறைவன் தன் முத்திரையை இட்டுள்ளான்.

            காலத்தின் மீது சத்தியமிட்டுச் சுட்டிக் காட்டப்பட்ட நான்கு உயர் பண்புகளும் இறைவனின் கருணையால் மட்டுமே ஏற்பட முடியும்.

            ஒருவர் தானாகவே இறை நம்பிக்கை கொள்ள முடியாது. இறைவன்தான் அதனை அவருக்கு அருள வேண்டும்.

            ஒருவர் தானாகவே நற்செயல்கள் புரிய முடியாது. இறைவன்தான் செய்ய வைக்க வேண்டும்.

            எவரும் எவரையும் தானாகவே உண்மையின் பக்கம் உய்க்க முடியாது. இறைவன்தான் அதனை ஆற்றுப்படுத்த வேண்டும்.

            யாரும் சுயமாகவே பொறுமையாக இருக்க முடியாது. “பொறுமையாளன்” (அஸ்-ஸபூர்) ஆன இறைவன்தான் ஒருவரில் தன் பொறுமையை வெளியாக்க வேண்டும்.



            ”அது அதுக்குன்னு காலம் இருக்கு. காலம் வரும்போது தானாக நடக்கும்” என்று பாமர மக்கள் பேசுவது உண்டு. இறைவனே காலமாக இருக்கிறான். அவன் நாடும்போதுதான் எதுவும் நடக்கும் என்பது அதன் உட்பொருள்.

            நேரம் என்பதும் பருவம் என்பதும் காலக் குறிப்புகள். அவற்றைக் காலமாகவே நாம் பாவித்துப் பேசுகிறோம். “காலம் கடந்துவிட்டது” என்கிறோம். “காலம் வந்துவிட்டது” என்கிறோம். உண்மையில், காலம் கடப்பதும் இல்லை, வருவதும் இல்லை. அது எப்போதும் இருந்தபடியே இருக்கிறது. நேரங்களும் பருவங்களும்தான் வருகின்றன, போகின்றன.

            ”அவள் பருவமாகிவிட்டாள்” என்றால் தன் வழியே உயிர்கள் வெளியாகும் பக்குவத்தை அவளின் உடல் அடைந்துவிட்டது என்று அர்த்தம். “அவள் காலமாகிவிட்டாள்” என்றால் அவளின் உயிரே உடலை விட்டு வெளியேறிவிட்டது என்று பொருள். அவள் மரணித்துவிட்டாள் என்று அர்த்தம்.

            ஒருவர் இறந்து போனால் “காலமாகிவிட்டார்” என்று சொல்கிறோம். இதுவரை நேரத்தில் இருந்தார்; இப்போது காலத்தில் ஆகிவிட்டார் என்று அர்த்தம். அதாவது, இறைவனிடம் மீண்டுவிட்டார் என்பதையே அப்படிச் சொல்கிறார்கள். ஏனெனில், இறைவனே காலமாக இருக்கிறான்.

            “Time heals” – காலம் காயங்களை ஆற்றும் என்கிறார்கள். இறைவனே காயங்களை ஆற்றுவான் என்பதே அதன் பொருள்.

            ”காலம் பதில் சொல்லும்” என்று கூறுகிறார்கள். மனித மனம் விடை காண முடியாத வினாக்களுக்கெல்லாம் இறைவனே விடை சொல்வான் என்பதே இதன் அர்த்தம்.



            ”காலம் கனியும்; காரியம் நடக்கும்” என்று சொல்கிறார்கள். கனிவு என்பது தமிழில் ஒரு ஞானச் சொல். அதில் பல அர்த்தங்கள் அடங்கியுள்ளன.

            கனிவு என்பது மென்மை. காய் கல் போல் இருக்கிறது. கனியும்போது மென்மை ஆகிவிடுகிறது. இறைவன் மென்மையானவன் (அல்-ஹலீம்).

            கனிவு என்பது அன்பு, அருள். இறைவன் அன்பாளன் (அல்-வதூது). அருளாளன் (அர்-ரஹ்மான், அர்-ரஹீம்).

            கனிவு என்பது இரக்கம், கருணை. அதனால்தான் ”இரக்கம் காட்டுங்கள்” என்பதற்கு “கனிவு காட்டுங்கள்” என்றும் சொல்கிறோம். இறைவன் இரக்கம் மிக்கவன். அதனால் அடியார்களின் பிழைகளை மன்னிக்கிறான். “நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுப்பவனாகவும் இருக்கிறான்  (இன்னல்லாஹ கஃபூருன் ஹலீமுன் – 2:235)

            கனிவு என்பது அழகு. இறைவன் அழகன். “அல்லாஹ் அழகானவன், அவன் அழகை நேசிக்கிறான்” (இன்னல்லாஹ ஜமீலுன்ய் யுஹிப்புல் ஜமால் – அல்-முஃஜமுல் அவ்சத் – 6906.)

            ’கனிவு’ என்னும் சொல் நற்பண்புகள் அனைத்தையும் திரட்டிக் குறிப்பிடும் சொல்லாக இருக்கிறது. இறைவன் பரிபூரண நல்லோனாக (ஃகைரே மஹழ்) இருக்கிறான்.

            ”காலம் கனிந்து வரும்” என்று சொன்னால் “இறைவன் அருள் செய்வான்” என்றே அர்த்தப்படும்.

            காலம் கனிந்து வரும், அது நம்மையும் கனிய வைக்கும்.

Friday, September 2, 2022

இளநலம் கைப்பதில்லை

 


       எள்ளில் இருந்துதான் எண்ணெய் உண்டாகும். அதுபோல், இலக்கியத்தைப் பார்த்துத்தான் இலக்கணம் இயற்றப்படுகிறது. ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல்’ என்கிறது நன்னூல்.

            இலக்கணம் இருந்தால்தானே புலவர்கள் செய்யுள் புனைவார்கள்? இலக்கணத்துக்கு முன்பே இலக்கியம் எப்படி? என்று கேட்கலாம்.

            ஆம், எந்த மொழி ஆனாலும் அதன் ஆதி இலக்கியம் நாட்டுப்புறப் பாட்டுத்தான் என்று மானுடவியலும் மொழியியலும் ஒருங்கே உரைக்கின்றன.

            பாமரனைப் பின் தொடர்ந்தே பண்டிதன் பிறக்கிறான். பண்டிதப் பனுவல்களுக்கு, பாமரரின் நாட்டுப்புறம்தான் நதிமூலம்.

            இதற்கோர் இலக்கியச் செய்தி இயம்புகிறேன்.



பாரதியின் ஞானச் சீடர் என்று போற்றப்படும் திருலோக சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன் பற்றி முதுமுனைவர் டி.என்.இராமச்சந்திரன் அவர்கள் விளக்கும்போது ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். ஒருமுறை திருலோக சீதாராம், பேராசிரியர் எம்.எஸ்.நாடார், வழக்கறிஞர் ஜெயராமன், தஞ்சை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சிவராஜ் ஆகியோர் அவரின் வீட்டில் கூடியிருந்தனர். திருலோகத்திடம் ஒவ்வொருவரும் ஆங்கில இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைச் சொல்லச் சொல்ல அவற்றை அவர் அக்கணமே அற்புதமாகத் தமிழில் பெயர்த்துச் சொல்கிறார்.  

பேராசிரியர் எம்.எஸ்.நாடார் அவர்கள் ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி அண்டு கிளியோபட்ரா நாடகத்தில் இருந்து மேற்கோள் வைத்தார்: “Age cannot wither her / Nor customs stale her infinite variety”. உடனே திருலோகம் மொழிபெயர்த்துக் கூறினார்: “காலம் அவள் எழில் காய்வதில்லை / கன்னி இளநலம் கைப்பதில்லை”. “நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இன்ஃபினிட் வெரைட்டி வரவில்லையே?” என்று டி.என்.ஆரும் நாடாரும் மறுப்புச் சொன்னார்கள். ”அது வராது. ஆனால் தமிழ் இப்படித்தான் இருக்கும்” என்றார் திருலோகம். தொடர்ந்து, “எனக்குச் சொல்லத் தெரியாதா? ’ஆயிரம் சுவை அவை அலுப்பதில்லை’” என்றார். “இது நல்லாயிருக்கே” என்றார் டி.என்.ஆர். “உங்களுக்குத் தமிழ் தெரியாது” என்றார் திருலோகம். “அப்ப உங்கள் கணக்குல யாருக்குத் தமிழ் தெரியும்?” என்று டி.என்.ஆர் விடாப்பிடியாகக் கேட்கவும், “ரெண்டு பேர் இருக்கறாங்க, பக்கத்துலதான் இருக்கறாங்க. பள்ளி அக்ரஹாரத்துல கந்தசாமிப் பிள்ளை இருக்கறார். திருவையாத்துல பண்டித வித்வான் கோபாலையர் இருக்கார்,” என்று திருலோகம் சொன்னார்.



நண்பர்கள் கந்தசாமிப் பிள்ளையிடம் போனார்கள். விசயத்தைச் சொன்னார்கள். மொழிபெயர்ப்பை அவர் கேட்டார். “ஆயிரம் சுவை… “ என்ற மொழிபெயர்ப்பைச் சொன்னதும். “அடாடாடா, அற்புதம்” என்றார். “ஆனால் அவர் இப்படிப் பாடவில்லை. ‘கன்னி இளநலம் கைப்பதில்லை’ என்றுதான் பாடினார்” என்று டி.என்.ஆர் சொல்லவும், ‘கவிஞரே! அப்படியே கிட்ட வாங்க,” என்று டி.என்.ஆரை அழைத்து கட்டிக் கொண்டார். சரி, கோபாலையர் கைவிட மாட்டார் என்று நண்பர்கள் திருவையாற்றுக்குப் போனார்கள். அவரிடமும், ‘ஆயிரம் சுவை…” என்னும் பெயர்ப்பை முதலில் சொல்லிக் காட்டியவுடன், “என்னமா பண்ணீருக்கார்!” என்று வியந்தார். ‘ஆனால் அவர் அப்படிப் பாடவில்லை. அவர் பாடுனது: ‘கன்னி இள நலம் கைப்பதில்லை’” என்று டி.என்.ஆர் சொன்னவுடன், தி.வே.கோபாலையர் தன் இரு கரங்களையும் தலை மேல் உயர்த்தி, “எங்கியோ போய்ட்டாரே! கவிஞரே, இரு கரம் கூப்பி வணங்குகிறேன்” என்றார்.

            ”கன்னி இளநலம் கைப்பதில்லை” என்று திருலோகம் செய்திருக்கும் இந்த அழகிய மொழிபெயர்ப்புக்குத் தமிழில் இலக்கிய நதிமூலம் இருக்கிறது. அது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம். அதன் ஒன்பதாம் பகுதியான “கனாத்திறம் உரைத்த காதை”யில் தீய கனவு கண்டு வருந்திய கண்ணகிக்கு தேவந்தி ஆறுதல் சொல்கிறாள்: “கைத்தாயும் இல்லை கணவற்கு” (55) அதாவது, “நீ உன் கணவனுக்குக் கசந்துவிடவில்லை” என்கிறாள். கைப்பு என்றால் கசப்பு என்று பொருள்.

            பேரறிஞர்களும் புலவர்களும் வியந்துரைக்கும் இந்தச் சொல்லும்கூட பட்டறிவு மிக்க பாமரத் தமிழரின் புழக்கப் பேச்சில் அன்றாடம் நிகழ்கின்ற ஒன்றுதான். “அதுக்கப்புறம் ஒறவு கசந்து போச்சு” என்னும் அலுப்புக் குரல் அவ்வப்போது கேட்பதில்லையா? அதையும் பெண்ணொருத்தி மிக இலக்கிய நயத்துடன் நாட்டுப்புறப் பாடலாக்கினாள்: “கச்சிருக்கும்போது கரும்பானேன் – கைக்குழந்தை / வச்சிருக்கும்போது வேம்பானேன்” (பாட பேதம்: கச்சிறுக்கும்போது.)

            பண்டு முதல் மக்கள் பேசி வரும் அன்றாட உரையாடல்களில்கூட இலக்கிய நயம் சுடர் விடுகின்றன. கவிஞனின் உள்ளம் அவற்றை ஓர்ந்து அவதானித்து ஒப்பற்ற கவிதைகளைத் தீட்டிவிட முடியும். பாரதியின் பின்வரும் வரிகள் ஓர் உதாரணம்:

            ”பாலும் கசந்ததடீ – சகியே

             படுக்கை நொந்ததடீ!

             கோலக் கிளி மொழியும் – செவியில்

             குத்தல் எடுத்ததடீ!”

            வாழ்வில் ஊறும் உரைநடைப் பேச்சுத்தான் கவிதை மொழியாகப் பரிணமிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

Saturday, August 6, 2022

என்றார் தர்வேஷ் - 9

 


பூங்காவில் இளைஞர்கள் இருவர் அமர்ந்திருந்தனர். திரையணிந்த பெண் ஒருத்தி ஒரு சிறுவன் உடன்வர அவ்வழியாகச் சாலையில் கடந்து போனாள். அவளைப் பார்த்ததும் அந்த இருவருள் ஒருவன் மிகவும் படபடப்பானான். அவன் பேச்சு தடைப்பட்டது. கைகளைப் பிசைந்தபடி இப்படியும் அப்படியும் அசைந்தான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தான். அவள் கடந்து போன பிறகு சில கணங்களில் மீண்டும் இயல்பாகிவிட்டான். அவனுடன் அமர்ந்திருந்த மற்றோர் இளைஞனிடம் எந்தச் சலனமும் இல்லை. அவன் இவனிடம் “என்ன? என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். அவன் குருடனாக இருந்தான்.

            தர்வேஷ் இதைக் கவனித்துவிட்டார். தன்னுடன் மாலை நடைக்கு வந்திருந்த சாதகர்களிடம் இதைச் சுட்டிக் காட்டினார். ”அவள் ஓர் இளம் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். மேலும், அவள் மிகவும் அழகியாக இருக்க வேண்டும். இவன் அவளைக் காதலிக்கிறான்,” என்று சொன்னார்.

            ”எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று தர்வேஷிடம் ஓர் இளைஞன் கேட்டான்.

            ”இல்லை என்றால் அவனிடம் ஏன் இத்தனைப் படபடப்பு உண்டாகிறது? அவளின் முகத்தை அவன் ஏற்கனவே பார்த்திருக்கிறான். அது அவள்தான் என்பதை அவளுடன் செல்லும் சிறுவனை வைத்து அவன் ஊகித்துவிட்டான். அந்தச் சிறுவன் அவளின் தம்பியாக இருக்க வேண்டும். அவள் இப்போது திரையிட்டுத் தன் முகத்தை மறைத்திருக்கிறாள் என்றாலும் அவனுக்கு அவளின் முகம் நினைவில் வந்துவிட்டது. இப்போது அவளின் முகத்தை அவனின் அகப்பார்வை தரிசித்தது. அதனால்தான் அவனுக்கு அவ்வளவு பதற்றம் உண்டானது. அவளின் முகத்திரையே அவனுக்கு அவளின் அடையாளம் ஆகிவிட்டது! இதை ஓர் உதாரணமாக வைத்து அகப்பார்வை கொண்ட ஞானிகளின் நிலையை நாம் விளங்கிக் கொள்ளலாம்.”

            ”அப்படியா? இதை வைத்தா?” என்று இன்னொருவன் கேட்டான்.

            ”ஆம். பலரும் அவளைப் பார்க்கவே செய்தார்கள். ஆனால், அவர்கள் அவளைப் பார்க்கவே இல்லை என்பதும் உண்மைதான். யாரோ ஒரு பெண் போகிறாள் என்று மட்டும் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் பார்வை அவளை மறைக்கும் திரையின் மீதுதான் பட்டது, அவளின் மீது அல்ல. அதுபோல், படைப்புக்கள் என்னும் திரையைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவை இறைவனால் படைக்கப்பட்டது என்னும் கருத்தும் நம்பிக்கையும் மட்டுமே அவர்களிடம் உண்டு. உணர்வெழுச்சி (கைஃபிய்யத்) உண்டாக அது மட்டும் போதுமானதாக இல்லை. அந்த இளைஞனின் வெளிப்பார்வையும் அவர்களின் பார்வை பட்ட அதே திரையில்தான் விழுந்தது. ஆனால், அவனின் அகப்பார்வையில் அவளின் முகம் நினைவுக்கு வந்துவிட்டது. அவன் ஒருவகையில் அவளையே தரிசித்துவிட்டான். அதனால்தான் அவனுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்பு உண்டானது. அவன் அவளை ஏற்கனவே பார்த்திருக்கிறான் என்பதால்தான் அது சாத்தியமானது. அதுபோல், இறைஞானிகளின் வெளிப்பார்வை படைப்புக்கள் மீது விழுந்தாலும் அவர்களின் அகப்பார்வை இறைவனையே காண்கிறது. ஏற்கனவே இறைவனை தரிசித்திருப்பதால்தான் அவர்களுக்கு இப்போது நினைவில் அவனின் தரிசனம் உண்டாகிறது. அதனால் உண்ர்வெழுச்சியும் அடைகின்றனர். ஏனையோருக்கு வானமும் பூமியும் இரவும் பகலும் திரைகள் என்றால் இறைஞானியருக்கு அவை அனைத்தும் இறைவனின் அடையாளங்கள்” என்று விளக்கினார் தர்வேஷ்.

            ”சரி, பிறராவது அவளின் திரையைப் பார்த்தார்கள். ஆனால், அந்தக் குருட்டு இளைஞன் அதையும்கூட பார்க்கவில்லையே?” என்று ஒருவன் கேட்டான். தர்வேஷ் புன்னகைத்துத் தலையாட்டினார். அவர்கள் சில கணங்கள் மௌனமாக நடையைத் தொடர்ந்தார்கள்.

            ”குருடனுக்குத் திரைகள் இல்லை; முக தரிசனமும் இல்லை” என்றார் தர்வேஷ்.