Saturday, November 12, 2022

பனூ ச’அதின் புரோகிதி

 (இஸ்லாத்திற்கு முற்பட்ட அறபு நாட்டு மரபுக்கதை)


தனக்குப் பத்து ஆண் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து தன்னைச் சுற்றிலும்  ஆளாகி நிற்பதைக் காணும் பேறு பெற்றால் இறைவனுக்காக கஃ’பாவில் அவர்களில் ஒரு மகனை பலியிடுவதாக அப்துப் முத்தலிபு1 பிரதிக்ஞை செய்தார்.

            தனது மகன்கள் அனைவரும் பத்து வயதைக் கடந்த பிறகு அவர்களிடம் சொன்னார்: ”அருமை மக்களே! நான் ஒரு நேர்ச்ச செஞ்சுக்கிட்டது ஒங்க எல்லாருக்குந் தெரியும். நீங்க என்ன சொல்றீங்க?”

            ”ஒங்க இஷ்டம்ப்பா. நாங்க எல்லாரும் ஒங்க கையில,” என்று அவர்கள் பதில் சொல்லினர்.            ”சரி. ஒவ்வொருத்தரும் ஒங்க அம்ப எடுத்து அதுல ஒங்க பேர எழுதிக் குடுங்க,” என்றார் அப்துல் முத்தலிபு.

            அவர்களும் சொன்னபடி எழுதிக் கொடுத்தனர். பின்னர் அப்துல் முத்தலிபு அம்பெறிந்து குறி சொல்லும் அகவனை வரவழைத்தார். அவனிடம் அம்புகளைக் கொடுத்து, “பாத்து மெதுவா போடுப்பா,” என்று சொன்னார். அவரின் மனம் கலங்கியிருந்தது.

            அப்துல்லாஹ் அவருக்கு மிகவும் பிரியமான மகன். அகவன் அம்புகளை வீசினான். அப்துல்லாஹ்வின் பெயரெழுதிய கணையே வந்தது. அப்துல் முத்தலிபு தன் நேர்ச்சையை நிறைவேற்ற சித்தமானார். நன்கு கூர் தீட்டப்பட்ட கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அப்துல்லாஹ்வையும் அழைத்து வந்து கஃ’பாவுக்கு அருகில் இருந்த, குறைஷியர் வழிபட்ட தெய்வங்களான இசஃப் மற்றும் நயீலா2 ஆகிய இரண்டு சிலைகளின் நடுவில் மைந்தனைச் சாய்த்தார். அவர் அப்துல்லாஹ்வை அறுக்க முனையும்போது இன்னொரு மகனான அபூ தாலிபு3 சட்டென்று குறுக்கே பாய்ந்து தன் தந்தையின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

            அப்துல்லாஹ்வின் தாய்மாமன்களான அபூ மஃக்ஸூம்கள் இதனைக் கேள்விப்பட்டபோது அவர்கள் அனைவரும் கடுங்கோபத்துடன் அப்துல் முத்தலிபிடம் வந்தனர்.

            ”மச்சான், எங்க மருமவன அறுக்குறதுக்கு நாங்க விடவே மாட்டோம். இம்புட்டுப் பயலுவ இருக்காணுங்கள்ல, அவனுங்கள்ல யார வேணாலும் போய் அறுத்துப் போடுங்க. எங்க மருமவன் மேல கத்தியோட நெழலு விழுந்தாலும் நடக்குறதே வேற…”

            ”நான் நேர்ந்துக்கிட்டேன். அதுபடி அப்துல்லாஹ்வோட பேருதான் வந்திருக்கு. அவன பலி கொடுத்துத்தான் ஆவணும்,” என்று அப்துல் முத்தலிபும் கத்தினார்.

            ”நடக்காது மச்சான். நாங்க உசிரோட இருக்குற வரய்க்கும் இது நடக்கவே நடக்காது! அவனக் காப்பாத்த எங்க சொத்து சொகம் உசிரு எல்லாத்தையும் எழக்கத் தயாரா இருக்கோம்.”

            அப்போது அங்கே குறைஷிக் குலத் தலைவர் வந்து அப்துல் முத்தலிபுடன் ஆலோசித்தார்:

            ”இப்பிடிக் கொடுமையான நேர்ச்ச பண்ணி வச்சிருக்கியேய்யா. ஒம் புள்ளைய அறுத்துப்புட்டு அப்புறம் நீ என்னன்னு நிம்மதியா வாழ முடியும்? பொறுமையா இரு. ச’அது கொலத்துக்கு ஒரு புரோகிதி இருக்காள்ல, அவளப் போயி பாப்போம். அவ என்னா சொல்றாளோ அப்படிச் செய்யி.”

            ”சரி, இதுக்கு நான் ஒத்துக்குறேன்,” என்றார் அப்துல் முத்தலிபு.

            எனவே அவர் பனூ மஃக்ஸூம்களுடன் அந்தப் புரோகிதியைப் பார்ப்பதற்காக திமிஷ்க் (டமஸ்கஸ்) பட்டினத்துக்குப் போனார். தன் மகனைப் பலி கொடுப்பதற்கான தனது நேர்ச்சையை அவர் சொன்னவுடன் அந்தப் புரோகிதி சன்னதத்துடன் கத்தினாள்: ”போங்க இங்கெ இருந்து இப்ப…” எனவே எல்லோரும் உடனே அங்கிருந்து நீங்கி விட்டனர்.            மறு நாள் காலை திரும்பி வந்தனர். “ஒங்க கொலத்துல பலியாகுற ஒரு தலய்க்கு எம்புட்டுப் பணம்?” என்று அவள் கேட்டாள்.

            ”பத்து ஒட்டகம்,” என்றார்கள்.

            ”ஊருக்குப் போங்க. நேர்ச்ச பண்ணுன பையன முன்னாடி கொண்டு நிறுத்துங்க. அப்புறம் பத்து ஒட்டகத்த கொண்டு வாங்க. அப்புறம் அவன் பேர்லயும் அந்தப் பத்து ஒட்டகங்க பேர்லயும் அம்பு போட்டுப் பாருங்க. ஒட்டகத்தோட அம்பு வந்துச்சின்னா அதுகள பலி குடுங்க; ஒங்க பையனோட அம்பு வந்துச்சின்னா இன்னும் பத்து ஒட்டகங்கள சேத்து மறுக்காவும் அம்பு போட்டுப் பாருங்க. ஒட்டகத்தோட அம்பு வர்ற வரய்க்கும் பத்து பத்து ஒட்டகம் சேத்து மறுக்கா மறுக்கா அம்பு போட்டுப் பாக்கணும். எம்புட்டு ஒட்டகங்களுக்கு அம்பு வருதோ அதுதான் ஆண்டவன் பையனுக்குப் பகரமாக் கேக்குற தலப்பணம்.”

            அவள் சொன்னபடி குழு மக்காவுக்குத் திரும்பிற்று. அப்துல் முத்தலிபிடம் அவர்கள் சொல்லினர்:

            ”இபுறாஹீம்ட்ட இதுக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்குப் பாத்துக்க. அவரும் தன் மவன, அதான் இஸ்மாயில, பலி கொடுக்கப் பாத்தாரு. நீங்க இஸ்மாயிலோட வம்சத்துக்கு இப்பத் தலைவரா இருக்கீங்க. அதுனால ஒங்க மவனுக்குப் பகரமா எம்புட்டுப் பணம்னாலும் குடுத்துருங்க.”

            அடுத்த நாள் அதிகாலையில் அப்துல் முத்தலிபு தன் செல்ல மகன் அப்துல்லாஹ்வையும் பத்து ஒட்டகங்களையும் கொண்டு வந்து நிறுத்தினார். அப்புறம் அகவனை அழைத்துச் சொன்னார்: “யோவ் அகவா! நிதானமாப் போட்டுப் பாரு. அவசரப்படாத, என்ன?”            அகவன் அம்புகளை வீசினான். அதிலிருந்து சாஸ்த்திரப்படி ஓர் அம்பினை எடுத்தான். பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினான். அதில் அப்துல்ல்லாஹ் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரியக் கண்டான். “ஐயா, சின்ன எசமான் பேருதாங்க வந்திருக்கு…” என்று கலங்கிச் சொன்னான்.

            அப்துல் முத்தலிபு மேலும் பத்து ஒட்டகங்களை சேர்த்து இருபது ஆக்கினார். மீண்டும் பகழி எறிந்து பார்த்தபோது அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. ஒட்டகங்கள் முப்பது ஆனது. அப்புறம் நாற்பது, ஐம்பது, அறுபது… ஒவ்வொரு முறையும் அப்துல்லாஹ்வின் பெயரே தேர்வானது. அப்படியாக நூறு ஒட்டகங்கள் ஆகிவிட்டது. அப்போது அம்பு எறிந்து பார்த்தபோது ஒட்டகங்களின் அம்பு வந்து சேர்ந்தது.


            
”அல்லாஹு அக்பர்!” (இறைவன் பெரியோன்) என்று அப்துல் முத்தலிபு முழங்கினார். குறைஷிக் குலத்தாரும் முழங்கினர். “ஒங்க ஆண்டவன் திருப்தி ஆயிட்டான். ஒங்க புள்ளையும் தப்பிச்சிட்டான்,” என்று அவரிடம் அவர்கள் கூறினர்.

            ”இல்ல, இல்ல,” என்று மறுத்தார் அப்துல் முத்தலிபு. “இத மூனு தடவ செஞ்சுப் பாக்கணும். அப்பத்தான் உறுதிப்படுத்த முடியும். அவசரப் படாதீங்க.”

            எனவே இரண்டாம் முறையும் அப்படிச் சோதிக்கப் பட்டபோது. ஒட்டக அம்பே வந்தது. மூன்றாம் முறையும் சோதித்துப் பார்த்தபோது வந்த அம்பு ஒட்டகத்தையே பலி கொடுக்கச் சொன்னது. எனவே அப்துல் முத்தலிபுக்கு இப்போது இறைவனின் ஏற்பு உறுதிப்பட்டது. தன் மகனை இறைவன் இரட்சித்துவிட்டான் என்று தெரிந்துகொண்டார்.

            அப்துல் முத்தலிபு தன்னிடம் இருந்த சிறந்த இனத்தைச் சேர்ந்த நூறு ஒட்டகங்களை அங்கே பலியிட்டார். பிறகு, அவற்றின் இறைச்சியை விரும்புவோர் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அங்கிருந்து நீங்கி, இறைவன் தன் மகனைத் தனக்கு உயிருடன் வழங்கிவிட்டான் என்ற உவகையுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

_______________________

1.       அப்துல் முத்தலிப் அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தைவழிப் பாட்டனார். நபிகள் நாயகத்தின் தந்தையான அப்துல்லாஹ் அவர்கள் மரித்த பின்னர் நபியை மிகப் பாசத்துடன் சில ஆண்டுகள் வளர்த்தவர் இவரே. அப்துல்லாஹ் அவர்கள் நபி (ஸல்) தாயின் கருவில் இருக்கும்போதே இறப்பெய்தினார்.

2.       இஃது, கஃ’பாவுக்கு அருகில் அஸ்-சஃபா மற்றும் மர்வா ஆகிய குன்றுகளுக்கு இடையில் பலிகள் நடத்தப்படும் இடத்திலாகும்.

3.       அபூ தாலிபு அவர்கள் அப்துல்லாஹ்வின் உடன் பிறந்த சகோதரர் (அதாவது, இருவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். ஏனையோர் மாற்றாந்தாய் மக்கள்.) நபி (ஸல்) அவர்களின் சின்னத்தாவான இவரே அப்துல் முத்தலிபின் மறைவுக்குப் பின்னர் நபிகள் நாயகத்தை வளர்க்கும் பொறுப்பினை ஏற்று அவர்களைப் பாதுகாத்தார். நபி (ஸல்) அவர்களின் பிரியமான மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களை மணந்தவரும், இஸ்லாமிய அரசின் நான்காம் ஆளுநருமான (கலீஃபா – ஆட்சிக்காலம் 35 ஹி / 656 பொ.ஆ – 40 ஹி / 66 பொ.ஆ) அலீ (ரலி) அவர்கள் அபூ தாலிபின் மகனாவார்.

d

            இக்கதை, மஹ்மூது ஷுக்ரியுல் அலூசி எழுதிய ‘புலூகுல் அரப் ஃபீ மஃரிஃபத்து அஹ்வாலுல் ‘அறப்’ (அறபியரின் வாழ்வியலை அறிதலில் இலக்கை எட்டுதல்) என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஃது, கிஸாஸுல் அறப் (அறபியரின் கதைகள்) என்னும் நூலின் ஒன்றாம் பாகத்தில் உள்ளது.


No comments:

Post a Comment