Saturday, November 5, 2022

மௌனப்பால்

 


            ”தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!” என்னும் கட்டுரையில் நாஞ்சில் நாடன் சொல்கிறார்: “உ.வே.சாமிநாதையர் திருவண்ணாமலை இரமண மகரிஷியிடம் கூறியதைப் போல தமிழனுபவமே நமக்கும் இறையனுபவம்!”



            தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் மௌனத் தாத்தா ரமணரை நேரில் சந்தித்த நிகழ்வை இப்போதுதான் அறிகிறேன். அதைக் கற்பனையில் விரித்துப் பார்த்தேன். ஞானியை ஓர் அறிஞர் சந்திக்கும் நிகழ்வு ஒன்றும் புதிதல்ல. எழுத்தாளர்கள் பலருக்கும் ஞான ஆளுமைகளின் ஈர்ப்பும் தொடர்பும் உண்டு. ரமண மகரிஷியை சந்தித்து உள்ளார்ந்த தாக்கம் பெற்ற மேனாட்டு அறிஞர்கள்தாம் எத்தனை பேர் – பால் பிரண்டன், சாமர்ஸெட் மாம், ஓஸ்போர்ன், மெர்சிடிஸ் டி அகோஸ்டா. ஞானியைச் சந்திக்க மறுத்துப் பின்வாங்கியோரும் உண்டு – நவீன உளவியல் சிகரங்களில் ஒருவரான கார்ல் குஸ்தாவ் யுங் இந்தியா வந்தபோது பலரும் அவரிடம் விசாரித்த விஷயம், அவர் ரமண மகரிஷியைச் சந்தித்தாரா என்பதுதான். ஆனால் அவர் ரமணரைச் சந்திக்காமலேயே திரும்பிவிட்டார். அந்த ஞானியின் சந்திப்பு தன் மீது என்ன தாக்கத்தைச் செலுத்தும் என்பதை அவர் அஞ்சியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

            உ.வே.சாவும் அப்படி அஞ்சியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். மொழி கடந்த மௌன நிலை நோக்கி உ.வே.சா-வை ரமண மகரிஷி தள்ளியிருக்க முடியும். ஆனால் ஒருவரின் இசைவு இன்றி, வல்லடியாக அப்படி ரமணர் செய்ய மாட்டார். மொழியே காணாமல் போய்விடும் மௌன நிலையை, மொழியிலேயே தோய்ந்து ஆழ்ந்து கிடக்கும் ஒருவர் எப்படி மகிழ்ச்சியாக எதிர்கொள்வார்? எனவே உ.வே.சா அதனை மறுத்துவிட்டார் என்பதில் வியப்பேதும் இல்லை.

            ”தமிழனுபவமே நமக்கு இறையனுபவம்” என்று உ.வே.சா சொன்னதைச் சற்றே ஓர்ந்தேன்.

            மௌனம் – ஓசை (ஒலி / நாதம்) – மொழி என்னும் வரிசை வந்து நின்றது.

            இம்மூன்றுக்கும் ஓர் உவமையும் உடனே தோன்றியது: பால் – வெண்மை – பாலால் செய்யப்படும் பல்வேறு பானங்கள்.



            பால் என்னும் பொருளின் பண்பு வெண்மை. பால் ரோஸ் மில்க் ஆகும்போது ரோஸ் நிறம் கொள்கிறது; பாதாம் பால் ஆகும் போது இள மஞ்சள் நிறமாகிறது; தேநீர் அல்லது காபி ஆகும்போது அரக்கு நிறமாகிறது. இந்த நிறங்கள் எதுவுமே பாலின் சுய நிறம் அல்ல.

            பாலைப் பாலாகவே அருந்துவோர் உண்டு. சிலருக்கு அது காபியாகி வந்தால்தான் பிடிக்கும். சிலருக்கு தேநீராகி வர வேண்டும். சிலருக்கு ரோஸ் மில்க்தான் விருப்பம்.

            காபியனுபவமே பாலனுபவம் என்று சொல்வது போல்தான் ”தமிழனுபவமே நமக்கு இறையனுபவம்” என்று உ.வே.சா அவர்கள் சொல்லியிருப்பதும்.

            ஆனால், ”பசு ஐந்தும் பாலாய்ச் சொரியும்” அனுபவம் தனிதான். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

No comments:

Post a Comment