எதிர்வரும் பதினெட்டாம் தேதி எங்கள் ஊருக்கு சித்து ஸ்ரீராம் என்னும் ’பாணர்’ வருகிறார்.
நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள்
ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சாலையில் எனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின்
பின்பக்கத்தில் அந்த விளம்பரம் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். நுழைவுச் சீட்டுகள் வாங்குவதற்கான
இடம் குறிப்பிட்டிருந்தது.
ஆக, பெரும் பரிசில் கிடைக்கும் என்று எதிர்பார்த்துத்தான் பாணர்
வருகிறார்.
சங்க காலத்தில் பாணர்கள் அரண்மனைக்கு வந்து பாடுவார்கள். அரசர்கள்
பரிசில் (சன்மானம்) வழங்குவார்கள்.
இது மக்களாட்சிக் காலம் அல்லவா? எனவே, மக்கள்தான் பரிசில் வழங்கியாக
வேண்டும். அதற்கு நுழைவுக் கட்டணம் என்று பெயர்.
சங்க காலத்தில் பாணர்கள் ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கு உரியவர்கள்
அல்லர். ஊர்ச் சுற்றிகளான அவர்களுக்குத்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன்
பாடிய மனநிலை இயல்பாகவே இருந்திருக்க முடியும்.
பாணர், பொருநர், பாடினி, கூத்தர், விறலியர் இவர்களைக் காட்டிலும் புலவர்களின் நிலை மேலானதாகவே இருந்திருக்கிறது. அறிவுக்குக் கிடைத்த தனி மரியாதை எனலாம். அப்படியிருந்தும், புலவர்களும் அலைந்து திரிபவர்களாகவே இருந்திருக்கின்றனர். “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்று ஔவை வீராப்புப் பேச வேண்டி இருந்தது.
ஆனால் நம் காலத்து நவீனப் பாணர்கள் எல்லோரும் பட்டினத்துவாசிகள்.
சித்து ஸ்ரீராம் ஒரு திரைப்படப் பாடகர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அவர் முறைப்படி செவ்வியல் இசையைக் கற்றவர். கர்நாடக சங்கீதத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக்
கொண்டு சேர்த்துப் பேணிப் பாதுகாப்பதில் பிராமண சமூகம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
கர்நாடக சங்கீதக் கலைஞர்களில் பெரும்பான்மை பிராமணர்களே. சங்கச் சொல்லாடலின்படி அவர்கள்
எல்லோரும் பாணர்களே!
ஆனால், சங்க காலத்தில் பாணர்கள் என்போர் நால் வகுப்பாருள் கீழ்
வகுப்பார் அல்லவா? அந்தணர் என்னும் பிராமணர் மேல் வகுப்பார் அல்லவா?
சித்து ஸ்ரீராம் ஒரு பிராமணர்; அதே சமயம் அவர் ஒரு பாணரும் ஆவார்.
எனில், நால் வகுப்பில் அவர் எதில் அமைவார்? இதெல்லாம் அர்த்தமிழந்த வெற்றுச் சொற்களாகத்
தெரிகின்றன.
என்றாலும், இதுபோல் எத்தனை எத்தனை அர்த்தமிழந்த சொற்கள் இந்த
தேசத்தை, இந்த தேசத்து மக்களைப் பாடாய்ப் படுத்துகின்றன என்பதை எண்ணிப் பார்த்து ஓய்கிறேன்.
”பொன்வண்டு கை ஏந்துது வண்ணம் கேட்டுத்தான்
அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா…
ரயிலு வண்டி கூட நடக்குது பேச்சுத் துணைக்குத்தான்
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா…
உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா
கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு.”
என்று இந்தக் காலத்துக் கபிலன்
எழுதி கார்த்திக் ராஜா பண் அமைத்து சித்து ஸ்ரீராம் பாடிய வரிகள் காதோரம் மெல்ல கசிகிறது.
No comments:
Post a Comment