Friday, November 11, 2022

நிஜாரின் புதல்வர்கள்

 (இஸ்லாமுக்கு முந்தைய அறபு நாட்டு மரபுக்கதை)

தன் மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்த நிஜார்1 தன் புதல்வர்களான முளர், இயாள், ரபீஆ மற்றும் அம்மார் ஆகியோரை அழைத்தார்.

            ”மகன்களே! இந்த செவப்புத் தோல் கூடாரம் முளருக்கு; இந்தக் கறுப்புக் குதிரையும் கறுப்புக் கம்பளிக் கூடாரமும் ரபீஆவுக்கு; இந்த (நடு வயது) சாம்பல் தல வேலைக்காரி இயாளுக்கு; இந்த வரவேற்பறை அம்மாருக்கு. அவன் இங்கெ உக்காந்துக்கிடட்டும். இப்புடிச் சொத்துப் பிரிச்சதுல ஒங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனன்னா நஜ்ரான்ல2 இருக்குற தலமப் பூசாரி ஜுர்ஹும் நாகரப் போய்ப் பாத்து ஆலோசன கேளுங்க.” என்று சொன்னார்.

            நிஜார் இறந்த பின்னர் நான்கு சகோதரர்களுக்கும் சொத்துத் தகராறு மூண்டு விட்டது. எனவே அவர்கள் ஜுர்ஹும் நாகரைப் பார்க்கப் போனார்கள். செல்லும் வழியில் ஓரிடத்தில் அவர்கள் சிறிது மேயப்பட்ட புல் பரப்பு ஒன்றைப் பார்த்தனர்.

            ”இங்கெ மேஞ்ச ஒட்டகத்துக்கு ஒத்தக் கண்ணு,” என்றான் முளர்.

            ”அது ஒரு நொண்டி ஒட்டகம்,” என்றான் ரபீஆ.

            ”அது ஒரு குட்ட வால் ஒட்டகம்,” என்றான் இயாள்.

            ”நிச்சயமா அது ஒரு வழி தவறின ஒட்டகந்தான்,” என்றான் அம்மார்.


            
அவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு ஒருத்தன் வந்தான். அவர்கள் ஏதேனும் ஒட்டகத்தைப் பார்த்தார்களா என்று விசாரித்தான்.

            ”அது ஒத்தக் கண்ணுங்களா?” என்று முளார் கேட்டான்.

            ”ஆமாம்” என்றான் அவன்.

            ”அது நொண்டியா?” என்று ரபீஆ கேட்டான்.

            ”ஆமாங்க,” என்றான் அவன்.

            ”அது குட்ட வாலிங்களா?” என்று இயாள் கேட்டான்.

            ”அதேதான் அதேதான்…” என்றான் அவன் உற்சாகமாக.

            ”அது வழி தொலைஞ்சு அலையுதோ?” என்று அம்மார் கேட்டான்.

            ”ஆமாங்க, அது என்னோட ஒட்டகந்தான். தயவு செஞ்சு அதுகிட்ட என்னைய கூட்டிக்கிட்டுப் போங்க ஐயா” என்று அவன் கெஞ்சினான்.

            ”ஆண்டவன் மேல சத்தியமா, அத நாங்க பாக்கவே இல்லே,” என்று அவர்கள் சொன்னார்கள்.

            ”அடப் பாவிகளா, இப்பத்தான் என் ஒட்டகத்தப் பத்திப் புட்டுப் புட்டு வச்சீங்க. இப்ப பாக்கவே இல்லேன்னு பொய் சொல்றீங்களே?” என்று கோபப்பட்ட அவன் அவர்களைப் பிடித்துக்கொண்டான். நஜ்ரானை அடையுமவரை அவன் அவர்களை விட்டு விலகவில்லை.

            ஊரை அடைந்து அவர்கள் அமர்ந்ததும், அவன் உரக்கக் கத்தி ஊரைக் கூட்டிவிட்டான்: “இந்த ஆளுக என் ஒட்டகத்த திருடிக்கிட்டாங்க. அதோட அடையாளத்த எங்கிட்ட விவரிச்சுட்டு அதப் பாக்கவே இல்லேன்னு பொய் சொல்றானுங்க.”

            ”நாங்க அதப் பாக்கவே இல்ல. இதுதான் உண்மை” என்று சகோதரர்கள் சொல்லினர்.

            அவர்கள் ’நஜ்ரானின் நாகம்’ ஆன ஜுர்ஹும் நாகரிடம் கொண்டு செல்லப்பட்டனர். அவர் ஒரு ஞானி என்று கருதப்பட்டவர். அறபிகளின் நீதிபதியாக இருந்தவர். எனவே அவரிடம் வழக்கு உரைக்கப்பட்டது.



            ”நீங்க அதப் பாக்கவே இல்லேன்னா அத எப்படி சரியா வருணிச்சீங்க?” என்று அவர் கேட்டார்.

            ”ஐயா, அது மந்த வெளியில ஒரு பக்கமா மேஞ்சு வச்சிருந்தத நான் கவனிச்சேன். அதுனால அதுக்கு ஒத்தக் கண்ணு குருடுன்னு முடிவு செஞ்சேன்,” என்றான் முளர்.

            ”ஐயா, தரையில அதோட மூனு காலுத் தடயம் மட்டும் அழுத்தமா இருந்துச்சுங்க. ஒரு காலோட தடயம் லேசாத்தான் இருந்துச்சு. அத வச்சு அந்த ஒட்டகத்துக்கு ஒரு காலு நொண்டின்னு நான் தெரிஞ்சிக்குட்டேன்,” என்று சொன்னான் ரபீஆ.

            ”ஐயா, அந்த ஒட்டகம் பெரிசா ஒத்தக் குவியலா சாணி போட்டிருந்துச்சுங்க. அதுக்கு நீளமான வாலு இருந்துச்சுன்னா சாணி செதறீருக்கும். அதுனால அதுக்கு வாலு குட்டன்னு தெரிஞ்சுக்கிட்டேங்க,” என்றான் இயாள்.

            ”மந்த வெளியில அது நல்லா பச்சப் பசேல்னு புல்லு வளந்து கெடக்குற எடத்துல நின்னு நெதானமா மேயலீங்க. அரகொறயா மேஞ்சுப்புட்டு வேற எடத்துக்குப் போயிருச்சுங்க. காஞ்சப் புல்லக்கூட மேஞ்சுக்கிட்டுப் போயிருந்துச்சு. அந்த இடத்துக்கு தெனமும் வர்ற கால்நடையா இருந்துச்சுன்னா அப்படி அவசரமா மேயாதுங்க. அதுனால அது வழி தப்பி வந்த ஒட்டகம்னு தெரிஞ்சுக்கிட்டேங்க,” என்று விளக்கி முடித்தான் அம்மார்.

            நஜ்ரான் நாகம் இதையெல்லாம் மனதுக்குள் யோசித்துவிட்டு ஒட்டகக்காரனிடம் திரும்பினார்: “டேய், இவுங்க ஒன் ஒட்டகத்தப் பாக்கவே இல்ல. நீ போய் ஒழுங்காத் தேடு.”

            ”நீங்கள்லாம் யாரு?” என்றூ அவர் அந்த நான்கு பேரையும் கேட்டார். அவர்கள் விவரம் சொன்னதும் அவர்களைத் தன் வீட்டுக்கு விருந்தாளிகளாக வரவேற்றார்.

            ”நீங்களே பெரிய அறிவாளிகளா இருக்கீங்க. ஒங்களுக்கு எங்கிட்ட என்ன தேவ இருக்க முடியும்?” என்று அவர் கேட்டார்.

            அப்புறம் அவர்களுக்கு அவர் விருந்து உபசரித்தார். அவர்களுக்காக ஒரு செம்மறியை அறுத்துச் சமைத்தார். திராட்சை மது கொண்டு வந்து வைத்தார். பிறகு கூடாரத்தின் மறு பகுதிக்குச் சென்று அவர்கள் பேசுவது தன் காதில் விழும்படி மறைந்து அமர்ந்துகொண்டார்.

            ”இத விட ருசியான ஆட்டுக்கறிய நான் சாப்பிட்டதே இல்ல. இந்த ஆடு நாய்ப்பால் குடிச்சுத்தான் வளர்ந்திருக்கணும்,” என்று ரபீஆ சொன்னான்.

            ”இந்த திராட்சக் கொடி ஒரு கல்லறைக்கு மேலத்தான் வளர்ந்திருக்கணும். இதவிடச் சுவையான மதுவ நான் குடிச்சதே இல்ல,” என்றான் முளர்.

            ”இன்னிக்கு நாள் வரய்க்கும் இந்த மாதிரி ஒரு நல்ல மனுஷன நான் பாத்ததே இல்ல. எப்படி உபசரிக்கிறார் பாருங்க. இந்த ஆளு தன் அப்பன்னு சொல்லிக்கிற ஆளுக்குப் பொறந்தவன் இல்ல!” என்றான் இயாள்.

            ”இப்ப நாம பேசிக்கிற வார்த்தைகள விட நமக்கு ரொம்பப் பிரயோஜனமான பேச்ச நான் இதுவரய்க்கும் கேட்டதே இல்ல,” என்று சொல்லிச் சிரித்தான் அம்மார்.

            அவர்கள் பேசியதை எல்லாம் ஜுர்ஹும் நாகர் கேட்டார். “சரியான சைத்தானுங்களா இருக்காணுங்க,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

            உடனே அவர் எழுந்து போய் தனது சேவகனை அழைத்து அந்த மது எங்கிருந்து வந்தது என்று கேட்டார்.

            ”நம்ம பெரிய ஐயாவோட கல்லறத் தலமாட்டுல நான் ஒரு திராட்சக் கொடி நட்டு வச்சேங்க எசமான். அதுல வெளஞ்ச திராட்சய வச்சு இந்த மதுவ தயார்சிச்சேனுங்க, அதுனாலதான் இம்புட்டு ருசியாவும் நாக்குல தேளு கொட்டுனாப்ல சுர்ருன்னும் இருக்குதுங்க” என்று அவன் பவ்யமாகச் சொன்னான்.

            அடுத்து அவர் இடையனை அழைத்து விசாரித்தார்: “இன்னிக்கு அறுத்த ஆட்டப் பத்தி எனக்குச் சொல்லு.”



            ”எசமான், அதோட அம்மா அதப் பெத்துப் போட்டுட்டு செத்துப் போயிருச்சுங்க. குட்டிக்கு எப்படிப் பாலு ஊட்டுறதுன்னு நான் ரோசனெப் பண்ணிக்கிட்டு இருந்தப்ப, காவ நாயி அப்போன்னுப் பாத்து அதுவும் குட்டிப் போட்டிருந்துச்சு. ஆண்டவனோட கருணையப் பாருங்க, அந்த நாயி இந்தச் செம்மறிக் குட்டியத் தன்னோட குட்டியா ஏத்துக்குச்சு. அதுதாங்க இதுக்குப் பாலூட்டுச்சு. இதுவும் நாய்ப்பாலையே தாய்ப்பாலாக் குடிச்சு வளர்ந்துச்சு,” என்று விளக்கினான் முது இடையன்.

            அப்புறம் அவர் தன் அம்மாவிடம் போய் தனது அப்பா யார் என்று கேட்டார். தான் முன்பு ஒரு மன்னனுக்கு மனைவியாக இருந்ததாகவும், அவன் ஒரு பெருஞ் சொத்துக்காரன் என்றும், ஆனால் அவனொரு நபும்ஸகன் என்றும், பிள்ளை பிறக்காவிட்டால் எல்லாச் சொத்தும் அனாமத்தாகப் போய்விடுமே என்று தான் அஞ்சி தப்புச் செய்துவிட்டதாகவும் அவள் கண்ணீர் மல்கக் கூறி விம்மினாள்.

            நாகர் அந்த இளைஞர்களிடம் திரும்பி வந்தார். அவர்கள் பேசியதன் விவரங்களை எல்லாம் சொன்னார். தம் தந்தையார் தமக்குச் சொன்ன அறிவுரையை அவர்கள் அவரிடம் சொல்லினர்.

            நாகர் அவர்களுக்கு இப்படி ஆலோசனை வழங்கினார்: “செவப்பு நெறமா இருக்குறது எல்லாம் முளருக்குச் சேரும்.”

எனவே, தீனார்கள அனைத்தையும் செந்நிற ஒட்டகங்களையும் முளர் எடுத்துக் கொண்டான். அன்று முதல் அவன் ”செவ்வேள் முளர்” என்று அழைக்கப்பட்டான்.

            ”கறுங் குதிரையும் கறுப்புக் கொட்டாரமும் யாருக்குத் தரப்பட்டுச்சோ, அவனுக்குக் கறுப்பா இருக்குறதெல்லாம் சொத்து.”

            எனவே, எல்லாக் கறுங் குதிரைகளும் ரபீஆவுக்குச் சேர்ந்தது. அன்றிலிருந்து அவன் ”புரவியன் ரபீஆ” என்று அழைக்கப்பட்டான்.

             ”சாம்பத் தல வேலக்காரி மாதிரி எதெல்லாம் இருக்குதோ அதெல்லாம் இயாளுக்கு.”

            எனவே, வெண் கம்பளியும் சாம்பல் கம்பளியும் கொண்ட செம்மறியாட்டு மந்தைகளை எல்லாம் இயாள் அடைந்துகொண்டான். அன்றிலிருந்து அவன் “சாம்பலன் இயாள்” என்று பெயர் பெற்றான்.

            அனைத்து திர்ஹம்களும் மீதமிருக்கும் அனைத்துப் பொருட்களும் அம்மாருக்குரிய பாகம் என்று நாகர் தீர்ப்புரைத்தார். அன்றிலிருந்து அவனுக்கு “மிச்சப்பயல் அம்மார்” என்று பட்டப்பெயர் உண்டாகிவிட்டது.

________________

1.       நிஜார் இப்னு ரபீஆ தெற்கு அறபியரின் மூதாதையாகக் கருதப்படுகிறார். பண்டைய தென் அறேபியா தற்போது யமன் என்று அழைக்கப்படுகிறது.

 

2.       நஜ்ரான் என்பது யமனில் இருக்கும் முக்கியமான தொல் நகரங்களில் ஒன்று. ”நஜ்ரானின் நாகம்” என்பது ஞானத்தில் மேனிலை அடைந்திருப்பதன் அடையாளமாக பூசாரி ஒருவருக்கு வழங்கப்படும் பட்டம். ஏனெனில் பண்டைய அறபிகளிடம் பாம்பு என்பது ஞானத்திற்குக் குறியீடு.

 

d



”கிதாபுத் தீஜான் ஃபீ முலூக் ஹிம்யார்” (ஹிம்யார் மன்னர்கள் குறித்த மகுடங்களின் நூல்) என்பது வழி வழியாக வஹ்பிப்னு முனப்பிஹ் அவர்களிடம் இருந்து அவரின் பேரன் அபீ இத்ரீஸ் கேட்டு, அவரிடமிருந்து அஸதிப்னு மூசா அவர்கள் கேட்டு, அவரிடம் இருந்து அபூ முஹம்மதிப்னு ஹிஷாம் அவர்கள் கேட்டுப் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அஃது, ஹிஜ்ரி 1347-இல் யமன் நாட்டின் சனா நகரில் உள்ள யமனி ஆராய்ச்சி மையத்தால் பதிப்பிக்கப்பட்டது.

(இந்நூலில் இருந்து ஆங்கிலத்தில் சில கதைகள் பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு கதையையே இங்கே நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். - ரமீஸ் பிலாலி.) 


No comments:

Post a Comment