( இஸ்லாமுக்கு முற்பட்ட அறபு நாட்டு மரபுக் கதை.)
முன்பொரு காலத்தில் அல்-நுஃமான்
இப்னுல் முந்திர்1 ஒருநாள் அல்-யஹ்மூம் (கறுப்பி) என்னும் தனது புரவியில்
ஆரோகணித்து வேட்டைக்குச் சென்றார். நாட்டுப்புறத்தில் குதிரை அவரை மனம் போன போக்கில்
இட்டுச் சென்றது. அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சீக்கிரமே அவர் தனது பரிவாரங்களை
விட்டுப் பிரிந்துவிட்டார். திடீரென்று பலத்த மழை பெய்யத் தொடங்கிற்று. எனவே அவர் ஒரு
வீட்டில் அடைக்கலம் தேடினார். அவ்வீட்டில் தாயி குலத்தைச் சேர்ந்த ஹந்தலா என்பவரும்
அவரின் மனைவியும் இருந்தனர்.
”இங்கெ நான் ராத்தங்க முடியுமா?” என்று நுஃமான் கேட்டார்.
ஹந்தலா ஒப்புக்கொண்டார். நுஃமான் குதிரையில் இருந்து கீழே இறங்க
உதவினார். நுஃமான் யாரென்று ஹந்தலாவுக்குத் தெரியாது.
ஹந்தலாவிடம் ஒரே ஒரு ஆடு மட்டுமே அப்போது இருந்தது.
”இவரு ரொம்பப் பெரிய மனுசனாத் தெரியிறாரு. பெரிய பதவியில இருக்குற
முக்கியமான ஆளா இருக்கணும். இப்ப நாம என்னா செய்றது?” என்று அவர் தன் மனைவியிடம் கேட்டார்.
”நான் சேத்து வச்ச மாவு கொஞ்சம் இருக்கு. அத வச்சு நான் ரொட்டி
சுடுறேன். நீங்க போயி ஆட்ட அறுங்க,” என்றாள் அவரின் மனைவி.
அப்பெண் ரொட்டி சுட்டாள். ஹந்தலாம் முதலில் ஆட்டில் பால் கறந்து
கொண்டார். அப்புறம் அதனை பலியிட்டார். பின்னர் மதீரா-க் கஞ்சி2 காய்ச்சினார். நுஃமான் உண்பதற்கு இறைச்சியும்
பருகுவதற்குப் பாலும் தந்தார். அப்புறம் மீத இரவில் நுஃமானுடன் பேசுவதற்கு அமர்ந்துவிட்டார்.
காலையில் நுஃமான் தனது அங்கிகளை அணிந்துகொண்டு குதிரையில் ஏறியமர்ந்தபோது
ஹந்தலாவிடம் சொன்னார்:
”ஓ தாயிக் குலத் தோன்றலே! என்னிடம் சன்மானம் பெற்றுக்கொள், நான்தான்
அரசன் நுஃமான்!”
”ஆண்டவன் நாடுறப்ப வந்து வாங்கிக்கிறேன்,” என்றார் ஹந்தலா.
அல்-நுஃமான் தனது பரிவாரத்தைக் கண்டுபிடித்துச் சேர்ந்துவிட்டார்.
அவர்கள் அல்-ஹிராவுக்குத் திரும்பிப் போயினர். சில காலம் தாயி அங்கேயே இருந்தார். பின்னர்
ஒரு பேரிடர் ஏற்பட்டது. கடினமாக உழைத்தும் கொடிய வறுமை பீடித்தது. கெட்ட நாட்கள் வந்துற்றதே
என்று வருந்தினார்.
”நீங்க போயி ராசவப் பாக்கலாம்ல? அவரு ஒங்களுக்கு தாராளமாத் தருவாரே?”
என்று அவரின் மனைவி சொன்னாள்.
அவர் அல்-ஹிராவுக்கு வந்தபோது நுஃமானின் அழிவுநாளாக3
இருந்தது. தனது குதிரையாட்களுடன் நுஃமான் முழு ஆயுதங்களுடன் நின்றிருந்தார். ஹந்தலாவைக்
பார்த்ததும் அவர் அடையாளம் கண்டு கொண்டார். அவருக்குப் பெரிதும் சஞ்சலம் உண்டாகிவிட்டது.
”எனக்கு அடைக்கலம் கொடுத்த தாயிதானே நீ?” என்று அவர் கேட்டார்.
”ஆமாம்” என்றார் ஹந்தலா.
”இன்னிக்குன்னு வந்தியேப்பா, வேற நாள்ல வந்திருக்கக் கூடாதா
நீ?” என்றார் நுஃமான்.
”கண்ணியமிக்க அரசரே! இன்னிக்கு என்ன நாள்னு எனக்கென்னா தெரியும்?”
என்றார் ஹந்தலா.
”இன்னிக்கு மொதல்ல கண்ணுல படுற ஆளு எம் மகென் கபூஸாவே இருந்தாலுஞ்
சரிதான் அவனெ பலி கொடுக்குறதத் தவிர வேற வழியில்லெ. அதுனால, ஒனக்கு என்னா சன்மானம்
வேணும்னு சொல்லு. அப்புறம் ஒனக்கு மரண தண்டனையும் விதியாயிருச்சு.”
”கண்ணியமான அரசே! நானே செத்துட்டப்புறம் ஒலகத்துச் சன்மானங்கள
வச்சு நான் என்ன பண்ண முடியும்?”
”வேற வழியே கிடையாது,” என்றார் நுஃமான்.
”அப்படீன்னா என் தண்டனைய கொஞ்சம் ஒத்திப் போடுங்க ராசா. நான்
போயி என் குடும்பத்தப் பாத்துட்டு அவுங்க காரியங்கள எல்லாம் சரி பண்ணி வச்சிட்டு, அவுங்க
பொழப்புக்கு ஏற்பாடு பண்ணீட்டு திரும்பி வர்றேன்,” என்றார் ஹந்தலா.
”அப்ப எனக்கு ஒரு பிணை வச்சிட்டுப் போ, நீ திரும்பி வருவன்னு
நான் நம்பணும்ல?” என்றார் நுஃமான்.
அப்போது நுஃமானின் அருகில் நின்றிருந்த அவரின் கூட்டாளி ஷரீக்
இப்னு அம்ரு என்பாரை நோக்கினார் ஹந்தலா. தனக்குப் பிணை நிற்கும்படி அவரிடம் கோரினார்.
ஆனால் ஷரீக் அதை மறுத்துவிட்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு குரல், “நான் அவருக்குப்
பிணை இருக்கேன், மன்னரே!” என்று. சொன்னவர் கல்ப் குலத்தைச் சேர்ந்த குராதிப்னு அஜ்தா.
அவரின் பிணையை ஏற்றுக்கொண்ட நுஃமான், தாயிக்கு ஐநூறு பெண் ஒட்டகங்கள்
வழங்கப்பட ஆணையிட்டதுடன் அவர் அடுத்த ஆணல் சரியாக அதே நாளில் வந்து சேர வேண்டுமென்றும்
சொன்னார். ஹந்தலா அதனை ஏற்றுக்கொண்டு தனது குடும்பத்தினரைப் பார்க்க ஊர் திரும்பினார்.
ஓராண்டு நிறைவடைய இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருந்தது. குராதிடம்
நுஃமான் சொன்னார், “நாளைக்கு நிச்சயமா ஒனக்கு சாவுதான்.”
காலை விடிந்ததும் நுஃமான் தனது குதிரைப்படை மற்றும் காலாட்படையுடன்
ஆயுந்தங்கள் ஏந்திய நிலையில் புறப்பட்டார். அல்-கரிய்யான் என்று அழைக்கப்படும் இரட்டை
கோபுரங்களுக்கு நடுவில் வந்து நின்றார். அங்கேதான் அழிவு நாளில் முதன் முதலில் எதிர்ப்பட்டோர்
பலியிடப்படுவர். இரட்டை கோபுரங்களுக்கு நடுவில் நுஃமான் நின்றார். தன்னுடன் குராதையும்
அவர் அழைத்து வந்திருந்தார். அவரின் அமைச்சர்கள் சுதாரித்துக் கொண்டு சொன்னார்கள்:
“அரசே! இன்னிக்கு நாள் இன்னும் முடியல. அதுக்கு முன்னாடி அவரக் கொல செய்ய ஒங்களுக்கு
உரிம இல்லெ.” நுஃமான் அதை ஏற்றுக்கொண்டார். என்றாலும், தனக்கு அடைக்கலம் தந்தவர் தப்பிக்க
வேண்டும் என்றும் பிணை ஏற்றவர் அவருக்குப் பகரமாக சாகவேண்டும் என்றும் அவர் மனம் யோசித்தது.
சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. குராது பலி பீடத்தின் மீது
விரிக்கப்பட்டிருந்த தோலின் மீது நிறுத்தப்பட்டார். அவருக்கு அருகில் தலைவெட்டி நின்றுகொண்டிருந்தான்.
குராதின் மனைவி இன்னொரு பக்கம் நின்று புலம்பி அழுதுகொண்டிருந்தாள். அவர்கள் அப்படி
இருக்கும்போது தூரத்தில் ஓர் ஆள் வருவதை அனைவரும் பார்த்தனர்.
உடனே மக்கள் அரசனிடம் சொன்னார்கள், “ராஜா! அந்த ஆளு இங்கெ வந்து
சேர்றதுக்கு முந்தி இவர நீங்க கொல்லக்கூடாது. அவரு யாருன்னு நாம பாக்கணும்.”
எனவே, அந்நபர் வந்து சேரும்வரை நுஃமான் தனத் தீர்ப்பைத் தாமதித்தார்.
அவர் வேறு யாருமல்ல, ஹந்தலாவேதான்!
தாயிக் குலத் தோன்றல் வந்துவிட்டானே என்று நுஃமானுக்கு மனத்தாங்கல்
ஆகிவிட்டது. “மொத தடவ சாவுட்டேர்ந்து தப்பிச்சுப் போனியே, இப்ப எது ஒன்னெ திரும்பி
வர வச்சுது?” என்று அவரிடம் கேட்டார்.
”கொடுத்த வாக்குறுதிக்கு விசுவாசம்,” என்றார் ஹந்தலா.
”ஓ, இம்புட்டு விசுவாசமா ஒன்னெ இருக்க வக்யிறது எது?”
”எம் மதம்,” என்று ஹந்தலா சொன்னார்.
”ஒம் மதம் எது?” என்று அரசர் கேட்டார்.
”நஸாரா மதம்,”4 என்றார் ஹந்தலா.
”அதப் பத்தி எனக்குச் சொல்லு,” என்று நுஃமான் கட்டளையிட்டார்.
ஹந்தலா அவருக்குத் தன் மதத்தைப் பற்றிச் சொன்னார். அதன் பின்
நுஃமானும் அவரின் அல்-ஹிரா நாட்டு மக்களும் நஸாரா மதத்தில் இணைந்தனர். அந்த நாளிலிருந்து
மனிதர்களை பலி கொடுக்கும் சடங்கு கைவிடப்பட்டது. அல்-கரிய்யான் இடித்துத் தள்ளப்படவும்
அவர் ஆணையிட்டார். தாயியை அவர் மன்னித்துவிட்டு மிகவும் வியப்புடன் சொன்னார்:
”ஆண்டவன் மேல ஆணெ, ஒங்க ரெண்டு பேத்துல யாரோட விசுவாசம் பெரிசுன்னு
எனக்குத் தெரியல. சாவுலேர்ந்து தப்பிச்சுப் போயிட்டுத் திரும்பி வந்தவனா? இல்லெ, பிணெக்காக
சாவுக்கு நின்னவனா? ஆண்டவன் மேல சத்தியம், நம்ம மூணு பேர்ல நான் மட்டும் விசுவாசத்துல
சளைச்சன்னு எப்பவும் இருக்க மாட்டேன்.”
____________________________
1.
அல்-நுஃமான் என்பார் இஸ்லாமிற்கு முந்தைய காலத்தில் வட அரேபியத் துணைக்கண்டத்தில் உள்ள அல்-ஹிரா என்னும்
பகுதியின் அரபு மன்னர். அவர் இஸ்லாம் அறிமுகம் ஆவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் கி.பி
616-இல் இறந்தார்.
2.
மதீரா என்பது கொதிக்கும் பாலில் இறைச்சியை
இட்டு அது சமைந்து பாலும் கெட்டியாகும் வரை சமைக்கப்படும் கஞ்சி ஆகும்.
3.
அந்-நுஃமான் அப்போது பழங்குடி மன்னராக இருந்தார்.
அவருக்கு இரண்டு விதமான் நாட்கள் இருந்தன. ஒன்று சுக நாள். மற்றது அழிவு நாள். அழிவு
நாளில் அவர் தன் பார்வையில் படும் முதல் மனிதனைக் கொன்று விடுவார்.
4.
நஸாரா
– ஈசா (அலை) என்னும் இயேசு நாதரை இறைமகன் என்று சொல்லும் கிறித்துவச் சமயத்தை அறபி
மொழியில் “நஸாரா” என்று குறிப்பிடுவர். கிறித்துவர்களைக் குறிக்க இச்சொல் குர்ஆனில்
பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. (காண்க 2:113; 5:14; 5:18; 5:82; 9:30.) (தமிழ் மொ-ர்
குறிப்பு.)
No comments:
Post a Comment