நூல்கள் பல வாசிப்பதால் வருவது அறிவா? அப்படித்தான் நாம் வியக்கிறோம். பல நூற்களை மேற்கோள் காட்டி ஒருவர் பேசும்போதும் எழுதும்போதும் ‘என்னே இவரது அறிவு!” என்று நம் மனம் மருள்கிறது. உண்மையில் அதுதான் அறிவா?
”படித்தவன்
பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்” என்று சபிக்கிறான் பாரதியின் குடுகுடுப்பைக்காரன்.
பாவங்கள் செய்யக் கூடாது என்றுதானே பாடம் படித்திருப்பான்? பின் படித்தவன் ஏன் பாவம்
செய்கிறான்? அறிவிருந்தால் பாவம் செய்ய மாட்டான். படித்த அறிவு அவனது அறிவு அல்ல.
“மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்கிறார் வள்ளுவர். மனம் தூய்மையாக இருப்பதே அறிவுக்கு முதல்
நியதி. அஃதிலார், வேதங்களைத் தலைகீழ்ப் பாடமாய் செப்பிய போதும் அறவோர் அல்லர். அறவோராய்
வேடம் தரிக்கலாம். அறவோராய் வாழ்தல் இயலாது.
அறவோர்க்கு
இன்னொரு பெயர் அந்தணர். அவர்கள் யார்? எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என்று
அவர்களை அடையாளம் காட்டுகிறார் வள்ளுவர். அன்பும் அது ஈனும் குழவி ஆகிய அறமும் அகத்தில்
ஊறி வர வேண்டும். அந்த ஊற்று இல்லாக் கற்பாறைகள் எவ்வளவு படித்திருந்தாலும் மனிதப்
பிறவியாகத் தகுதி பெறுதல் இல்லை. “அரம்போல் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு
இல்லா தவர்” என்கிறார் வள்ளுவர்.
வேதங்களும்
அது சார்ந்த ஞான நூற்களும் அறவோரின் அகத்தில் அருளப்பட்டவையும் உதித்தவையும்தானே? பிறகு
ஏன் அவற்றைப் படித்தவர் அறவோர் ஆவதில்லை? என்றொரு கேள்வி எழலாம். ஏனெனில், அவை அந்த
அறவோரின் அகத்தில் உதித்து வந்தவை. அதாவது, அவர்களுக்கு உள்ளிருந்து வெளிப்பட்டவை.
ஆனால் அதைப் படிப்போரிலோ வெளியே இருந்து (நூலில் இருந்து) உள்ளே மதிற்குள் போடப்படுபவை.
எனவே அது தகவலே அன்றி அறிவு அல்ல.
”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தற்குக்
கற்றனைத் தூறும் அறிவு” (#396)
என்னும் குறள் இந்த உண்மையை நமக்கு
உணர்த்துகிறது. கேணி தோண்டினால் அவ்விடத்தில் இருந்தே நீர் ஊறி வரும். மாறாக, தோண்டியபின்
வெளியே இருந்து நீரூற்றி வைக்க வேண்டும் என்றால் அது கிணறு அல்ல, தொட்டி. உள்ளத்தை
அறிவு ஊறும் கிணறாக்குவதே நல்ல கல்வி முறை. தொட்டி ஆக்குவது தீய கல்வி முறை.
நூற்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று, உங்கள் மனதைக் கேணி ஆக்குவன.
மற்றது, உங்கள் மனதைத் தொட்டி ஆக்குவன.
அப்படியானால் கற்றல் என்ன செய்கிறது? அறிவின் ஊற்றுப் பொங்கி எழுவதற்குத்
தடையாக இருக்கும் அறியாமையைப் பெயர்க்கிறது. அத்திருப்பணி செய்வோரே குரு. ”பிணங்கிய
கோச பாச மா மாயைப் பின்னலைப் பேர்த்து எறிந்திடுவோன்” என்று தனது குருவைப் போற்றுகிறார்
குணங்குடி மஸ்தான்.
கற்பாறைகளைப் பேர்த்தும் நீரூற்று எழவில்லையே? சிலர் அப்படியல்லவா
இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுகிறது. அடி வரையில் பாறைதான் என்ற நில அமைப்பு! என்ன
செய்வது? ”நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்” என்கிறார் வள்ளுவர்.
நிலத்தில் எல்லா இடத்திலும் நீர் பீறிடாது. அதற்கென்று சில இடங்கள்
உள்ளன. அவ்விடம் கண்டறிந்து கிணறு தோண்ட வேண்டும். அவ்விடத்தை அறிவது எவ்வாறு?
அதற்கு முன்னோர் கண்ட உத்தி ஒன்றுண்டு. பசு எவ்விடத்தில் படுக்கிறதோ
அவ்விடம் நீர் பொங்கியெழும் தன்மை கொண்டது. அங்கே கிணறு தோண்டுவர்.
பசு என்பது சைவ சித்தாந்தத்தில் உயிரைக் குறிக்கும். மனம் என்றும்
பார்க்கலாம். அது குதித்துத் துள்ளிச் சாடாமல் அமைதியாக வேண்டும். அதாவது, ஆணவம் இல்லாமல்
ஆக வேண்டும். (”மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச்
சொறியுமே” என்கிறார் திருமூலர் (திருமந்திரம்: 2843)). அந்த உள்ளத்தில்தான் அறிவின்
கிணறு உருவாக முடியும். அத்தகைய அறிஞர்களையே “ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்” என்கிறது
தமிழ்.
”பணிவு இல்லார்க்கு அறிவு அருளப்படுவதில்லை” என்று சொன்னார்கள் ஹழ்றத்
அலீ.
No comments:
Post a Comment