Thursday, August 15, 2019

ஔவை விற்ற கொய்யாப்பழம்



      

மல்லிகா மளிகைக் கடையில் உ.பருப்பு, து.பருப்பு மற்றும் பட்சணப் பானாதிகள் வாங்கி டிக்கியில் அடைத்து ஸ்கூட்டரைக் கிளப்பி வளைக்கையில் சாலையின் எதிர்ப்புறம் பார்வை சென்றது. புலிநகக் கொன்றை மரத்தின் கீழ் சாக்கு விரித்துச் சில வகைக் காய்களும் கனிகளும் கூறு கட்டி வைத்து விற்கும் கிழவி அன்று ஏதோ புதிதாகக் கொண்டு வந்திருந்தார். முதலில் நெல்லிக்காய் என்றே நினைத்தேன். ஆனால் நெல்லிக்காய் ஒரு ரேகைக் கனி. அதன் பளபளப்பு இதில் இல்லை. அளவு மட்டுமே அதனது. சட்டென்று பிடிபட்டது. நாட்டுக் கொய்யா!
      தாதையர் வைத்து வளர்த்த மரமொன்று முன்பிருந்தது. வாலில்லா வானரங்கள் போலும் நானும் எம்பியும் அதன் கிளைகளில் அமர்ந்து ஆசை தீரப் பறித்துச் சுவைத்த பால்ய காண்டம் என் காதையில் உண்டு. விளைச்சல் ஓய்ந்த பின்பும் அடிமரத்தைக் கரையான் அரித்துத் தின்றிருந்த நிலையிலும் எழுபதடி ஓங்கி நின்றிருந்தது. கொல்லைப்புறம் வீட்டு மனையாகத் திருத்தப்பட்ட போது போய் சேர்ந்தது. அதன் கனி சிட்டின் தலையளவு சிறியது. உட்சதை ரோஸ் நிறம். ’தமிழில் வருணிக்க வார்த்தை இல்லை’ என்று கவிஞர்கள் சொல்வார்களே, அப்படியான ஒரு இன்சுவை. அதைக் கண்ணில் பார்த்தே இப்போது பல்லாண்டுகள் ஆகிவிட்டது.
      ”நாட்டுக் கொய்யாதான் சாமி. அரை கிலோ அம்பது ருவா” என்றார் அந்த ஔவைப் பாட்டி. விலை மிகவும் அதிகம் என்றுதான் பட்டது. முப்பது எனில் ஒப்பலாம். இது ரோஸ் நிற உட்சதை கொண்டதுமன்று. வெண்சதை கொண்ட கொய்யா. இருக்கட்டும். இந்த கோலிக்காய் அளவுக் கொய்யாவைப் பார்க்கக் கிடைத்ததே பெரும் பேறு என்று உணர்ந்ததால் மேலதிகப் பணத்தை ஔவைக்கே ‘அறம் செய்ய’ விரும்பி பேரம் பேசாமல் வாங்கிக்கொண்டு வண்டியைக் கிளப்பினேன்.
      ”ரண்டே மரந்தான் சாமி இருக்கு. அதுவும் விழுந்துருச்சுன்னா அவ்வளவுதான்” என்று வேதனையுடன் சொன்ன ஔவைப் பாட்டியைத் திரும்பவும் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இரண்டு காரணங்களால் நான் திரும்பிப் பார்க்கவில்லை. ஒன்று, முதியள் ஒரிஜினல் ஔவை அல்லள். (என் நண்பன் ஒருவனுக்கு நிஜ ஔவையைப் பார்க்கும் பாக்கியம் ஒருபோது கிட்டிற்று. ஆட்டோகிராஃப் வாங்குவதற்குக் கைவசம் தாளோ ஏடோ இல்லாததால் பரபரப்பாகி உள்ளங்கையை நீட்டினானாம். ஔவை எழுத்தாணியால் கீறிவிட்டார் என்று என்னிடம் புண்ணைக் காட்டினான்)
      இரண்டு, வாகனம் ஓட்டிக் கொண்டிருந்ததால் திரும்பிப் பார்க்க இயலவில்லை. “நிமிர்ந்த ஓட்டமும் நேர்கொண்ட பார்வையும் / சாலையில் பல்விதப் பள்ளமும் இருப்பதால் /  செம்மை மாந்தர் திரும்புவதில்லையாம்” என்று ஹெல்மட் கவி சாரதியார் பாடியிருக்கிறார்.

No comments:

Post a Comment