அடியேன் தமிழ்ப் பேராசிரியன்.
அப்பணியிற் பதினேழாண்டுகள் அனுபவம். இப்போதும் தமிழில் சொற்கள் கற்று வருகிறேன்.
இதனைச் சொல்ல நாணம் இல்லையா? இல்லை, இல்லை, திண்ணமாக இல்லை.
ஆசிரியன், பேராசிரியன், கவிஞன், எழுத்தாளன், பேச்சாளன், அறிஞன், மூதறிஞன்,
முனைவன் எனப்படும் பட்டங்களும் தகுதிகளும் எல்லாம் உயரத் தாண்டும் போட்டியில் முடிக்கப்பட்ட
சாதனை நிலைகளை ஒப்பன. மண்ணிலிருந்து சில அடிகள் மேலே எவ்வி குதித்துளோம். அவ்வளவே.
”தமிழ்
எங்கள் உயர்வுக்கு வான்” என்றார் பாரதிதாசன். ஆம், தமிழ் என்பது வான். வானையே தாண்டிக்
குதித்தவர் எவருமில்லை.
அணிமையில்
“தேனிப்பு” என்னுஞ் சொல்லினைக் கற்றேன். தேன் என்னும் சொல்லில் இருந்து கிளைத்த சொல்
அது. அதுவே வடமொழியிற் தியானம் ஆயிற்று என்பது காண விழிகள் வியப்பில் விரிந்தன. அச்சொல்லினை
நான் கற்க அமைந்த ஆசான் கரு.ஆறுமுகத் தமிழன்.
சென்ற
வாரம் அவரெழுதிய கட்டுரையொன்றில் பரம், அம்பலம் ஆகிய சொற்களின் பொருளைக் கற்றேன். பரம்,
பரன், பரை, பரத்தை, பரத்தம், பரதம் என கிளை விரிக்கும் போக்குகள் சொல்லி வியப்பளித்தவர்
அச்சொல்லாய்வில் தனக்கு ஆசானாக இன்னொரு அறிஞரைச் சுட்டியிருந்தார், ப.அருளி என்று.
அவர்களைச் சுட்டி நான் என் மாணாக்கர்க்குக் கற்பிப்பேன். தமிழறிதலின் கொடிவழி காலம்
உள்ளவரை மேலும் நீள்வதாகுக.
சொல்லின்
உட்கிடக்கும் சூக்குமப் பொருளுரைத்து அறிவை விரிவு செய்துதரும் ஆசான்களுள் இன்னொருவர்
ஜெயகாந்தன். காலம் என்பதற்கும் நேரம் என்பதற்கும் உள்ள தத்துவப் பொருள் வேறுபாடு விளக்கிப்
பின் அவர் நவின்றார்: “’சில நேரங்களில் சில மனிதர்கள்’தான். ’சில காலங்களில் சில மனிதர்கள்’
அல்ல.”
சொல்
கற்கும் கல்வியில் எனக்கு இன்னொரு ஆசான் நாஞ்சில் நாடன் அவர்கள். (அவரும் அவ்வப்போது
ப.அருளியைச் சுட்டுகிறார்). ”சொல்லாழி” என்னும் கட்டுரையில் அவர் சொல்கிறார்: “வில்லாளிக்கு
அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம்
இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன்.”
”கல்லெல்லாம்
மாணிக்கக் கல்லாகுமா?” என்று பாடினார் கண்ணதாசன். “சொல்லெல்லாம் மாணிக்கச் சொல்லாகுமா?”
என்றும் சொல்லலாம். சொல்லெல்லாம் மாணிக்க வாசகரின் சொல்லாகுமா? என்பது கவிதைக்கு. சொல்லெல்லாம்
வ.சுப.மாணிக்கனாரின் சொல்லாகுமா? என்பது உரை நடைக்கு. புதிய சொற்களை உருவாக்கும் அறிவு
அவரிடம் இருந்தது. அவரிடம்தான், “செம்பாகம்” என்னும் சொல்லினைப் புழங்கக் கற்றேன்.
பண்டு,
அழகு சால் சொற்களைத் தேடித் தேர்ந்து கற்று வந்ததுண்டு. அப்படித்தன், அப்துல் ரகுமானிடம்
“முறுவல்” கற்றேன். இன்று, ”மண் மாசு நீங்கிய வான்படு சொற்கள்” (பாரதி) கற்பதற்கு முனைகிறேன்.
அழகிய
சொற்கள் மாதவி போலும் கலை நயம் மிக்கன. ஞானச் சொற்கள் கண்ணகி போலும் கற்பு சார்ந்தன.
எனது நல்லூழ், காலச் செல்வம் பெரிதும் கரைந்தொழியும் முன்பே மாதவி அன்ன சொற்களின் மயல்
தீர்ந்து கண்ணகி அன்ன சொற்களிடம் மீண்டு விட்டேன்.
சீதையைக்
”கற்பின் கனலி” என்பான் கம்பன். கற்பின் கனல் கொழுனனைச் சமைக்க வல்லது. தீயன் எவனும்
தீண்ட முனைந்தால் எரித்துச் சாம்பலாக்கும் தீ அது. இந்நாட்களில், கற்புடைச் சொற்களின்
கனலினைத் தேர்கிறேன். அது அடியேன் அறிவினைச் சுடர் விடச் செய்யுமால். {நடை மூலம்:
”செங்கதிர்த் தேவனின் ஒளியினைத் தேர்கிறோம் – அவன் / எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக”
என்று காயத்ரி மந்திரத்தைத் தமிழாக்கியுள்ளார் பாரதி (“பாஞ்சாலி சபதம்”).}
”இனிய
உளவாக இன்னாத கூறல் / கனி இருப்பக் காய் கவர்ந்தற்று” என்கிறார் வள்ளுவர். வேம்பு கனிந்தால்
கைப்பு நீங்கும். ஆனால், கனிந்தும் மிளகாய் காரம் போகுமோ? காஞ்சிரம்தான் கைப்பறுமோ?
எனவே, ஒரு சொல் எதனால் எப்படிக் கனிந்தது எனக் கண்டு பின்னர் கொளல் வேண்டும்.
அன்பினால்
கனிந்த சொற்கள் உண்டு. காதலால் கனிந்த சொற்கள் உண்டு. அருளால் கனிந்த சொற்கள் உண்டு.
அறிவினால் கனிந்த சொற்கள் உண்டு. அறத்தால் கனிந்த சொற்கள் உண்டு.
ஓர் அழகிய
முரண்: சொற்களில் காய்கள்தாம் புழுத்து அழுகும்; கனிகள் கெடுவதில்லை!
சொற்களைக்
கையாளும் நெறியை நான் சிலரிடம் கற்றேன். அவர்களுள் ஒருவர் ’சேக்கிழார் அடிப்பொடி’ தி.ந.ராமச்சந்திரன்
அவர்கள். ஆங்கிலத்திலும் ஆழங்காற்பட்ட புலமையர். சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும்
பாரதியின் பெரும் பாடல்களையும் ஆங்கிலத்திற் பெயர்த்த அறிஞர். அவருக்கொரு கொள்கை உண்டு:
செவ்வியல் பனுவல்களை இன்னொரு மொழிக்குப் பெயர்க்கும்போது பெறுமொழியின் செவ்வியல் நடைக்கே
பெயர்த்தல் வேண்டும். இதனை அவர் தனது ஆசானாகிய திருலோக சீதாராமிடம் கற்றதாகச் சொல்வார்.
உதாரணமாக,
“Age cannot wither her, nor custom stale
Her infinite variety” என்று “அந்தொனியும் கிளியோபாத்ராவும்” என்னும் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய அடிகளைத் திருலோக சீதாராம் இப்படித் தமிழாக்கினார்: “காலம் அவளெழில் காய்வதில்லை / கன்னி இளநலம் கைப்பதில்லை.”
Her infinite variety” என்று “அந்தொனியும் கிளியோபாத்ராவும்” என்னும் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய அடிகளைத் திருலோக சீதாராம் இப்படித் தமிழாக்கினார்: “காலம் அவளெழில் காய்வதில்லை / கன்னி இளநலம் கைப்பதில்லை.”
செவ்வியற்
பனுவலைச் செவ்வியல் நடையிற்றான் மொழி பெயர்த்தல் வேண்டும் என்னும் இக்கொள்கை, அதன்
நியாயங்கள் துலங்கி வந்தனவால், நாட்பட நாட்பட என் நெஞ்சில் வேர் பிடித்துவிட்டது.
நிற்க,
திருக்குர்ஆன் என்பது அறபி மொழியில் அமைந்த ஒரு செவ்வியற் பனுவல். அறபி வழக்குகள் பலவுள்ளும்
தூயது தேர்ந்து நபிகள் கோமான் நாவிற் கிளர்ந்தெழ அவர்தம் அகத்தில் இறைவன் அருளியது.
அஃது இறைமொழி. செந்தமிழ்ச் சொற்கள் பெய்தும் செறிந்த நடை நெய்தும் மொழி பெயர்த்தலே
இறைமொழிக்கு நாமாற்றும் கடனும் நன்றியும் ஆகும். இஞ்ஞான்றும் அத்தகு மொழிபெயர்ப்பு
ஒன்று வந்திலது.
அடியேன்
அவ்வப்போது யானெழுதும் கட்டுரைகளினூடே குர்ஆனின் வசனப் பகுதிகளோ வசனங்களோ தோற்றும்
இடங்களில் எல்லாம் தேவைப்படின் தூய தமிழ்ச் சொற்கள் சிவணிய மொழி பெயர்ப்புக்களை வழங்கியுள்ளேன்.
(அழகியல் நோக்கில் அன்று என்பதறிக; மூலக் கருத்திற்கு ஒல்லும் வகையான் நெருங்கியிருத்தலே
நோக்கமாகவும், மூலத்தின் செறிவு பெயர்ப்பிலும் பயிலுதல் வேண்டியும் முன் செய்யப்பட்ட
மொழி பெயர்ப்புக்களை ஆழ்ந்து நோக்கிய பின்னரே அடியேன் அப்பணி முனைந்தனன்.) ஓர் உதாரணம்
காட்டி இக்கட்டுரை முடிப்பாம்.
சந்திரன்
என்பதும் சூரியன் என்பதும் வடசொற் கிளவிகள். நிலா என்னும் தமிழ்ப்பதம் பாமரர் நாவிலும்
பயிலுமோர் நற்சொல். மதி என்பதும் உண்டு. சூரியனைச் சுட்ட கதிரவன், பகலவன் என்பன உள.
எனினும் அவ்விரு சுடர்களைச் செவ்வியற் பனுவல்கள் திங்கள் ஞாயிறு என்னும் ஆயிரு சொற்களால்
குறிக்கின்றன. ”திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்றும் “ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்” என்றும் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரக் காப்பிய அடிகள் தமிழர்
அறிந்ததே.
வானின்
இருசுடர்களும் குறிப்பிடப்படும் பல திருவசனங்கள் குர்ஆனில் உள்ளன. இரண்டும் இணைத்துக்
குறிப்பிடப்படும் ஓரிடம் காண்போம்.
”அஷ்ஷம்ஸு வல் கமரு பி ஹுஸ்பான்”
(55:5).
இவ்வசனத்தின்
தமிழ் மொழிபெயர்ப்புக்கள் நான்கினைக் காண்போம்:
”சூரியனும்
சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன” (டாக்டர் முஹம்மது
ஜான் தமிழாக்கம்).
“சூரியனும்
சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன)” (அ.கா.அப்துல்
ஹமீது பாக்கவி தமிழாக்கம்).
“சூரியனும்,
சந்திரனும் ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டிருக்கின்றன” (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
தமிழாக்கம்).
“சூரியனும்
சந்திரனும் கணக்கின்படி (செல்கின்றன)” (மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்).
மேற்காணும்
மொழிபெயர்ப்புக்களில் விளக்கம் கருதி பெயர்ப்பாளர்கள் அடைப்புக் குறிகளுக்குள் இட்டிருக்கும்
சொற்களை நீக்கிக் காணலாம். [டாக்டர் முஹம்மது ஜான் தனது பெயர்ப்பில் ‘இருக்கின்றன’
என்னும் சொல்லினையும் ஐஎஃப்டி தனது பெயர்ப்பில் ’கட்டுப்பட்டிருக்கின்றன’ என்னும் சொல்லினையும்
அடைப்புக் குறிக்குள் இடவில்லை என்றபோதும் அஃது மூல அறபி வசனத்தில் தனிச்சொல்லாக இல்லை.
எனவே பிற இரு பெயர்ப்புக்களில் ”செல்கின்றன” என்னும் சொல் அடைப்புக் குறிக்குள் இடப்பட்டிருப்பது
போன்றே அவற்றைக் கருத வேண்டும். எனவே அதனையும் நீக்கிப் படிக்கவும்.]
அன்னனம்
வாசிக்கையில், “சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே / ஒழுங்கின்படி / கணக்கின்படி”
என மூன்று சொற்றொடர்கள் கிடைக்கின்றன. ஒழுங்கு என்னும் சொல்லினை ஐஎஃப்டி பெயர்ப்பு
மட்டுமே வழங்கியுள்ளது. பிற மூன்று பெயர்ப்புக்களும் ஹுஸ்பான் என்பதைக் கணக்கென்றே
பெயர்த்துள்ளன. கணக்கு என்னுஞ் சொல்லினுள் ஒழுங்கென்னும் பொருளும் அடக்கம். அதனைத்
தேர்வோம். கணக்கின்படியே என்பதிலுள்ள தேற்றேகாரம் அவ்வசனக் கருத்தினை வலியுறுத்தி அமைவதால்
அஃது விழ எழுதுதல் சிறக்கவில்லை. எனவே கணக்கின்படியே என்பதே சாலப் பொருந்தும் பெயர்ப்பாகிறது.
இனி,
சூரியன் சந்திரன் ஆகிய வடசொற்களை நீக்கித் தூய தமிழ் சொற்கள் இட அத்திருவசனம் இப்படிப்
பிறங்கும்:
“ஞாயிறும்
திங்களும் கணக்கின் படியே” (55:5).
மோனைத்
தொடையின் மெருகேற்றிப் பெயர்க்க இன்னனம் இலங்கும்:
“கதிரும்
மதியும் கணக்கின் படியே” (55:5).
No comments:
Post a Comment