Monday, February 24, 2020

சக்திக் கடல்


(ஜூன் 2007 ‘இஸ்மி’ இதழில் வெளியான கட்டுரை)


இயற்கை ஒரு மகா புத்தகம். பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் ஆழமான அர்த்தம் தொனிக்கும் சொற்கள்.

      எல்லாப் பொருட்களும் ஒட்டுமொத்தமாகப் பிரபஞ்சம். அதே சமயம் ஒவ்வொரு பொருளும் தனியாக ஓர் உலகம். இப்படி ஒரு விந்தையான அதிசயம் உள்ளது, இயற்கை என்னும் நூலில்.

      ’வானங்கள் மற்றும் பூமியில்
      உள்ளவை எல்லாம்
      இறைவனைத்
      துதிக்கின்றன’
      (57:1)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

      தாது, தாவரம், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மனிதன், வானவர்கள் என்றுள்ள எல்லாப் பொருட்களும் இறைவனைத் துதிக்கின்றன.

      இறைவனைத் துதித்தல் என்னும் செயல் நிகழ அறிவும் உயிரும் வேண்டும். அறிவும் உயிரும் இறைவனின் பண்புகள். எனவே, அனைத்துப் பொருட்களும் அவனின் அறிவையும் உயிரையும் கொண்டே அவனைத் துதிக்கின்றன.

      மனிதனின் தர்க்க மனம் (logical mind) பொருட்களை உயிருள்ளவை (animate) என்றும் உயிரற்றவை (inanimate) என்றும் பிரிக்கிறது. ஆனால், உயிரில்லாத பொருள் என்று எதுவும் இல்லை. எல்லாப் பொருளிலும் உயிர் உள்ளது. அது இறைவனின் ஜீவன்.

      ’அவன் நித்ய ஜீவன்.
      அவன் அன்றி
      உள்ளது வேறில்லை’
      (2:255)

என்று திருமறை நவிலும்.

      பிரபஞ்ச இயக்கமே அவனைத் துதிப்பதாக அமைகிறது. இயக்கத்திற்கு சக்தி வேண்டும். சக்தி என்பது இறைப்பண்பு. அதுவே அனைத்தையும் இயக்குகிறது.

      ’நிச்சயமாக
      சக்தி முழுவதும்
      அவனுடையதே’
      (2:165)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

      எல்லாப் பொருட்களும் அவனுடைய அறிவையும் உயிரையும் சக்தியையும் கொண்டே அவனைத் துதிக்கின்றன. அதாவது,

      ’அனைத்தும்
      அவனைக் கொண்டே
      அவனைத்
      துதிக்கின்றன’

      பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் தனித்தன்மை வாய்ந்தது. படைப்பின் வகைகளை எண்ணிப்பார்த்துக் கணக்கிட முடியாது. அத்தனை வகைகளும் பல்வேறு விதங்களில் இயங்கி அவனைத் துதிக்கின்றன.

      ’ஒவ்வொன்றும்
      தன்
      இயற்கை அமைப்பிலேயே
      இயங்குகிறது’
      (17:84)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

      நெருப்பு அவன் துதியில் எரிகிறது.
      நீர் அவன் துதியில் நனைகிறது.
      காற்று அவன் துதியில் அசைகிறது.
      பறவைகள் அவன் துதியில் பறக்கின்றன.

      சோலைக்குள் சென்று பார்க்கிறோம். விதவிதமான மரங்கள், செடிகள். விதவிதமான இலைகள், பூக்கள்.

      ’பூமியில் முளைக்கும்
      ஒவ்வொரு
      புல்லின் இதழும்
      அவனுக்கு இணையில்லை
      என்று சொல்கிறது’

என்று பாடுகிறார் இமாம் சாஅதி.


      சூஃபி ஞானி ஜுனைத் இயற்கை சூழ்ந்த பாதையில் ஒருமுறை நடந்து போய்க்கொண்டிருந்தார். சிறிய நதி ஒன்று சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் கரையில் பல வண்ணக் கூழாங்கற்கள் கிடந்தன. நீரோட்டத்தில் மெருகேறி அவை சுழித்து உருண்டு வழவழப்பாக இருந்தன. நதிக்கரைக் கூழாங்கற்களை நீங்கள் அவதானித்துப் பார்த்ததுண்டா? மனிதன் பட்டை தீட்டும் வைரங்களில் இல்லாத ஓர் அபூர்வ அழகு அவற்றில் உண்டு. ஒரு பச்சை நிறக் கூழாங்கல் ஜுனைதின் கண்களைக் கவர்ந்தது. அதை அவர் தன்னுட எடுத்துச் செல்ல நினைத்தார். கையில் வைத்து இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்து ரசித்தார். அது எங்கே இருந்ததோ அங்கேயே வைத்துவிட்டார். பிறகு தன் சீடர்களிடம் அவர் சொன்னார், “பிரபஞ்ச அமைப்பு நேர்த்தியானது. எது எது எங்கே இருக்க வேண்டுமோ அது அது அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பை நான் தேவையில்லாமல் மாற்றக் கூடாது!”

      ஒருமுறை நபிகள் நாயகம் சில பொடிக்கற்களைத் தன் உள்ளங்கையில் அள்ளித் தம் தோழர்களிடம் காட்டினார்கள். அவை இறைவனைத் துதிப்பதைத் தோழர்கள் கண்டனர். அந்தக் கற்களைத் தோழர்களின் கைகளுக்கு மாற்றினார். அப்போதும் துதித்துக் கொண்டே இருந்தன.

      இந்த அதிசய நிகழ்வை ஊன்றிக் கவனியுங்கள். தாது, தாவரம், விலங்கு, மனிதன் என்னும் உயிர் நிலையில் கீழானது தாது வர்க்கம். அதற்கென்று உள்ள இயற்கையான இயக்கத்தை, அவர்கள் தொட்ட போதும் அவை நிறுத்தவில்லை. இயற்கைப் பொருட்களோடு எத்தகைய முழுமையான ஒத்திசைவு அவர்களுக்கு இருந்தது என்பதை இந்த நபிமொழி – ஹதீஸ் நமக்குக் காட்டுகிறது.

      விஞ்ஞானத்தின் நிலை வேறு மாதிரியாக உள்ளது. பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களையும் பகுத்துக் கொண்டே போனால் கடைசியில் உள்ள பொருள் அணு. அணுவையும் கூறு போட்டு அதற்கு உள்ளே உள்ள பொருட்களையும் கண்டுபிடித்துவிட்டார்கள். அணு சுழன்று கொண்டே இருக்கிறது. அணுவில் சுழலும் துணுக்குகள் எலக்ட்ரான் (electrons) எனப்படும்.

      இந்த எலக்ட்ரான்கள் விஷமப் பேர்வழிகள். அவற்றின் அடிப்படைத் தன்மையே விஞ்ஞானிகளின் மண்டையைக் குழப்புகிறது. ஒரு பொருள், ஒன்று ஜடமாக (matter) இருக்கும், அல்லது அலையாக (wave) என்று அறிவியல் கூறுகிறது. ஆனால் இந்த எலக்ட்ரான் இரண்டுமாக இருக்கிறது. அது ஒரு மாபெரும் ஆத்ம ஞானிபோல் காணப்படுகிறது!

      அணு ஆராய்ச்சிக் கூடங்களில் எலக்ட்ரான்களின் செயல்பாட்டைப் பதிவு செய்த விஞ்ஞானிகள் திகைத்துப் போனார்கள். அவர்கள் கவனிக்காதபோது தன்னியல்பில் இயங்கிக் கொண்டிருந்த எலக்ட்ரான்கள், அவர்கள் கவனிக்கும்போது சட்டென்று வேறுவிதமாக இயங்கத் தொடங்கின. அவை மனிதர்களைப் போலவே நடந்து கொண்டன!

      விஞ்ஞானிகளிடம் இயற்கையுடன் ஒத்திசைவு இல்லை. அவர்கள் இயற்கையைக் கூறுபோடும் பார்வையோடு பார்க்கிறார்கள். அணுக்கள்கூட மனிதப் பார்வைக்கு சஞ்சலப் படுகின்றன.

      ஆனால், இயற்கையின் இயக்கத்தில் இறைவனின் புகழைக் காணும் ஞானிகள் இயற்கையோடு ஒத்திசைந்து, அந்த இயக்கங்களை இடையூறு செய்யாமல் வாழ்கின்றனர். இயற்கை என்னும் தெய்வீகப் பாடலில் தான் ஒரு ஸ்வரம் என்பதை உணர்ந்து அதில் லயமாகிவிடுகின்றனர்.

      ’எலக்ட்ரான்’ என்பது சக்தியின் அலை (wave of energy) என்று நவீன இயற்பியல் (modern science) கூறுகிறது. பிரபஞ்சமே சக்தி மயம். அதனை விஞ்ஞானி வில்ஹெம் ரீச் (Wilhelm Reich) ’சக்தியின் மாக்கடல்’ (Ocean of Energy) என்று கூறினார். நிலையானதாகத் (static) தோன்றும் இப்பிரபஞ்சம் உண்மையில் ஒரு ததும்பும் கடலாகவே இருக்கிறது. அதில் புதிய புதிய அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

      பிரபஞ்சத்தில் இறைவனின் அறிவும் சக்தியும் ஜீவனும் இல்லாத ஒரு புள்ளிகூட கிடையாது. ’இயற்கையைப் பாருங்கள். இதைவிடவும் அற்புதமான ஒரு உலகத்தை உங்களால் கற்பனைகூட செய்ய முடியாது’ என்று கூறுகிறார் ஓஷோ.


      ரின்சாய் என்னும் ஜென் ஞானியைப் பற்றி ஒரு சம்பவம் உண்டு. அவர் ஞானம் அடையும் முன்பு ஒரு சீடனாகத் தன் குருவின் மடத்தில் தங்கிப் பயிற்சிகள் செய்து வந்தார். தியானத்தில் பல வருடங்கள் சென்ற பின்பும்கூட அவருக்கு ஞானநிலை வாய்க்கவில்லை. அதை எண்ணி எண்ணி அவர் மனம் சஞ்சலப்படுவதை அவரின் குரு அறிந்தார். இன்னும் அறியவில்லையே என்ற எண்ணமே சலனத்தை உருவாக்கும். சலனத்தில் தியானம் போய்விடும். எதிர்பார்ப்புதான் ஞானத்திற்குப் பெரிய தடை! கால்களை மடக்கி தியானத்தில் அமர்ந்திருந்த ரின்சாயை அவரது குரு பிரம்பால் ஓங்கி அடித்தார். “உடனே எழுந்து சந்தைக்குப் போ. இங்கே என்ன வேலை உனக்கு?” என்று கூச்சலிட்டார். ரின்சாய் உடனே எழுந்து சந்தையை நோக்கி நடந்தார். ஆனால் அவருடைய மனம் தியானப் பதத்திலேயே இருந்தது. அதன் சுருதி மாறாமல் அவர் மெல்ல நடந்து போனார். தாமரை இலையின் மீது தண்ணீர் உருளுவது போல் அவர் நடந்துகொண்டிருந்தபோது ஓர் இறைச்சிக் கடையைக் கடக்க நேர்ந்தது. “நல்ல கறியாகக் கொடுப்பா” என்று யாரோ கேட்டார்கள். “இங்கே இருப்பது எல்லாமே நல்லதுதான்” என்று கசாப்புக்காரன் சொன்ன பதில் காதில் விழுந்தது. அந்தக் கணத்தில் அவர் சட்டென்று ஞானம் அடைந்தார். ‘பிரபஞ்சத்தில் எந்தவொரு படைப்பும் வீணானது அல்ல. எல்லாவற்றிலும் அந்த ஏகம் – தெய்வீகம் வெளிப்படுகிறது’ என்னும் தெளிவு (clarity, யகீன்) அவருக்குள் மலர்ந்தது.

      இறைத்துதி எங்கும் நிரம்பியுள்ளது. நம் உட்செவி திறந்தால் அதை நாம் கேட்கலாம்.

      ”ஆயிரம் மைல்களுக்கு
அப்பால்
மேகங்களைப் பார்க்கிறேன்;
பைன் மரக்காட்டில்
பழைய இசையைக்
கேட்கிறேன்”

என்று பாடினார் இக்கியு.

      அவர் கூறும் பழைய இசை எது? அதுவே இந்தப் பிரபஞ்சத்தின் இசை. அனைத்தின் இறைத்துதி. வெட்டப்படாத மூங்கிற் புதரின் பேரின்ப இசை அது.

2 comments:

  1. எதைச் சொல்ல விழைகிறீகளோ அத்னிலும் அதிகமதிகம் உணர வைக்கும் கட்டுரை.

    ReplyDelete