நான் பெரிதும் மதிக்கும் அந்த
முதிய அறிஞரை என் மாணவனுக்கு அறிமுகப்படுத்துகிறேன். “அப்படியே பழமா இருக்காறே!” என்று
வியந்து சொல்கிறான் அவன்.
முதுமையைக் கிழம் என்று சொல்லாமல் பழம் என்று சுட்டுகின்ற தமிழ்ப்
பண்பாட்டில் உள்ள ஞானத்தை எண்ணி எண்ணி வியந்து போகிறேன்.
பழம் என்பதற்கு இன்னொரு சொல் கனி. மென்மையும் இனிமையும் சேர்ந்த நிலையே
கனிவு.
எல்லாப் பழமும் கனி அல்ல. மிளகாய்ப் பழம் கனி அன்று.
அதுபோல், வயது செல்லச் செல்ல உடலால் மட்டுமே முதுமை அடைந்து உள்ளம்
பக்குவப்படாமல் இருப்போர் பழமே அன்றி கனி அல்லர். அகத்தில் கனிவை அடைந்தோரே கனி என்று
கொண்டாடத் தக்கோர்.
அகத்தின் கனிவு முதுமையில்தான்
உண்டாக வேண்டும் என்பதில்லை. இளம் வயதிலேயே சிலருக்கு அகக்கனிவு வாய்த்துவிடுவது உண்டு.
பெரியவர் போல் பேசும் சிறியோரை, ‘பிஞ்சில் பழுத்தோர்’ என்று குறிப்பிடும்
சொல்லாடல் உண்டு. பக்குவமின்றி அன்னனம் பேசும் சிறியோரை ‘பிஞ்சில் வெம்பியோர்’ என்று
சொல்வதே பொருத்தம். பக்குவமுடன் அன்னனம் பேசும் சிறியோரையே ’பிஞ்சில் பழுத்தோர்’ என்று
சொல்லத் தகும்.
நல்ல கலைகள் பிஞ்சுகளைப் பழமாக்கும்; தீய கலைகள் பிஞ்சுகளை வெம்பிடச்
செய்யும்.
ஆங்கிலக் கவிஞர்களுள் ஜான் கீட்ஸ் ஒரு ஞானக் கனி. ஆங்கில இலக்கிய உலகின்
சிகரமாகிய ஷேக்ஸ்பியரைத் தனது ஆசான் என்று கொண்டவன். ஷேக்ஸ்பியரைப் போல், கீட்ஸும்
பிறப்பிலேயே ஓர் ஆத்மஞானி (a born mystic) என்கிறார் மார்டின் லிங்ஸ்.
இருபத்தாறு என்னும் இளம் வயதில் இறந்துவிட்ட அந்த அற்புதக் கவிஞன்,
தனது மானசீக குருவான ஷேக்ஸ்பியரின் பல்லாயிரம் கவிதை வரிகளில் இருந்து தேர்ந்து அடிக்கடி
மேற்கோள் காட்டிய வரிகள் இவை:
”இவ்விடம் வருவதை உவத்தல் போன்றே
இங்கிருந்து செல்வதையும் மனிதர் கருதுக.
கனிவே எல்லாம்.”
(Men must endure / their going hence, even as their coming
hither; / Ripeness is all).
”காய் கனியாக மாறியவுடன் தானே காம்பிலிருந்து தன்னை
விடுவித்துக் கொண்டு மரத்தைப் பிரிந்து விடுகிறது. அதுபோல், அகம் கனிந்து விடின் தானே
இவ்வுலகப் பற்றிலிருந்து விடுதலை ஏற்பட்டு விடுகிறது” என்கிறார் ஓஷோ.
கனிந்த உள்ளம் இவ்வுலகை விட்டு விடுவதற்கு ஆயத்தம் ஆகிவிடுகிறது. மேற்சொன்ன
ஷேக்ஸ்பியர் வரிகள் “கிங் லியர்” என்னும் நாடகத்தில் உள்ளவை. இதற்கு இணையான இன்னொரு
வரி “ஹேம்லட்” என்னும் நாடகத்தில் இருப்பதை மார்டின் லிங்ஸ் சுட்டிக் காட்டுகிறார்:
“the readiness is all” – ‘ஆயத்தமே எல்லாம்.”
கனிவு (ripeness) மற்றும் ஆயத்தம் (readiness) ஆகிய இரண்டையும் ஒரே
பொருளில் ஷேக்ஸ்பியர் சுட்டியிருப்பது அவரது அறிவின் ஆழத்தைக் காட்டுகிறது.
”இறக்கும் முன்பே இறந்து விடுக” (மூத்தூ கப்ல அன் தமூத்தூ) என்னும்
சூஃபி வாசகத்தை இக்கோணத்தில் நோக்கினால், ’உள்ளத்தில் கனிவு கொள்’ என்று அர்த்தப் படுகிறது.
’என் வழி தனி வழி’ என்று சொல்வோன் ஆன்மிகவாதி அல்லன்; ’என் வழி கனி
வழி’ என்று அமைவதே ஆன்மிகம் என்க.
No comments:
Post a Comment