4
திருமண விழாவில் புதிய இளம் இணையரை மலர்த்திரை அலங்காரங்களுடன் வாகனத்தில்
ஏற்றி அழைத்துச் சென்றிருந்தனர்.
”Marriages are made in heaven” (”திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”)
என்று அக்காட்சியைப் பார்த்தபடி சொன்னார் ஒருவர்.
அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றோம். பூங்காவில் அமர்ந்து உரையாடத்
தொடங்கினோம்.
”Marriage is a raw material. You make heaven or hell out of it”
(’திருமணம் ஒரு கச்சாப் பொருள். நீங்கள் அதைக் கொண்டு சொர்க்கத்தை அல்லது நரகத்தை உருவாக்குகின்றீர்கள்’)
என்றார் சூஃபி.
5
கடல் போல் பரந்து கிடந்த ஏரிக்கரையில், புல்வெளியில் அமர்ந்திருந்தோம்.
மகிழுலா வந்த மக்கள் திரள் அங்கும் இங்கும் ஆரவாரத்துடன் அலைந்து கொண்டிருந்தது. அந்தகர்
ஒருவர் கோலால் தட்டித் தட்டி நடந்து கொண்டிருந்தவர் சிறு குழி ஒன்றில் கால் இடரி விழுந்தார்.
சிலர் ஓடிச் சென்று அவரைத் தூக்கியமர்த்தி உதவினர்.
”அடடா, பார்வை இல்லாததால் அவருக்குக் குழி இருந்தது தெரியவில்லை. அதனால்
அப்படி விழுந்து விட்டார்” என்றார் நண்பர்.
மக்கள் நொறுக்குத் தீனிகள் வாங்கவும் அவற்றைக் கொரித்துக்கொண்டே அரசியலும்
கேளிக்கையும் இன்ன பிறவும் பற்றிப் பேசிக்கொண்டே திரியவும் ஆங்காங்கே நின்று படமெடுக்கவுமாகப்
பரபரத்து இயங்குவதைச் சுட்டிக் காட்டினார் சூஃபி. ’இங்கேயும் அவர்கள் உலகத்தையே காண
வந்திருக்கிறார்கள்’ என்றார்.
பிறகு நாங்கள் அவ்விடம் விட்டு அகன்றோம். அறைக்குள் எல்லோரும் அமர்ந்து
தேநீர் பருகினோம்.
”மனிதன் விழுந்ததால் பார்வையை இழந்து விட்டான். அதனால் அவனுக்கு உலகம்
மட்டுமே தெரிகிறது” என்றார் சூஃபி.
No comments:
Post a Comment