உரை
– 3
அமீர் சொன்னார், “அல்லும் பகலும் அல்லாஹ்வின் பணியில் அர்ப்பணம் ஆகவே
என் அகம் துடிக்கிறது. ஆனால், அரசுப் பணிகளில் எனக்குள்ள பொறுப்புக்களின் காரணத்தால்
எனக்கு அவகாசமே வாய்ப்பதில்லை.”
ரூமி பதில் அளித்தார்: அந்தப் பணிகளும் இறைவனுக்காக ஆற்றப்படும் அறப்
பணிகளே. ஏனெனில் அவையே முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் நிம்மதிக்கான காரணங்கள் ஆகின்றன.
நீங்கள் உங்களையும், உங்கள் நேரம் மற்றும் உடைமைகளையும் அர்ப்பணம் ஆக்குவதால் முஸ்லிம்களின்
உள்ளங்கள் நிம்மதி பெறுகின்றன; அவர்களில் சிலராவது நிம்மதி மற்றும் பாதுகாப்புடன் இறை
தியானத்தில் மூழ்க முடிகிறது. எனவே, இதுவும் ஒரு நல்ல காரியம்தான். அத்தகைய நற்பணியின்
பக்கம் இறைவன் உம்மைச் சாய்த்துள்ளான். அதில் நீங்கள் காட்டும் ஆழ்ந்த ஈடுபாடே இறையருளுக்கான
அடையாளம் ஆகும். எனினும், அதன் மீதான உங்கள் ஈடுபாடு குறைந்தால் அப்போது அது இறையருள்
மறுக்கப்படுவதன் அடையாளம் ஆகும். ஏனெனில், தகுதி உள்ளவர்களை மட்டுமே ஆன்மிக நற்பயன்களை
அளிக்கின்ற சரியான கண்ணோட்டங்களுக்கு இறைவன் ஆற்றுப்படுத்துவான்.
உதாரணமாக, ‘ஹமாம்’ என்னும் பொதுக் குளியலறையை எடுத்துக் கொள்வோம்.
அதன் நீரின் வெம்மை எங்கிருந்து வருகிறது? காய்ந்த வைக்கோல், விறகு, வரட்டி மற்றும்
அவை போல்வன எரிக்கப்படுவதில் இருந்து வருகிறது. அதே போன்று, வெளிப் பார்வைக்கு அசிங்கமாகத்
தெரிகின்றவற்றை இறைவன் பயன்படுத்தினாலும் அகமியத்தில் அவை தூய்மைக்கான காரணங்கள் ஆகின்றன.
அந்தக் குளியலறையைப் போல், பணிச்சுமையால் எரிக்கப்படும் ஆண் அல்லது பெண் தூய்மை அடைந்து
மனிதர்களுக்குப் பயன் நல்குவோர் ஆகின்றனர்.
(இக்கட்டத்தில், மவ்லானாவைப் பார்க்க நண்பர்கள் சிலர் வந்தனர். மவ்லானா
அனுமதி கேட்க வேண்டி அவர்களிடம் பேசினார்:) இப்போது உங்களை நான் கவனிக்கா விட்டாலும்,
அல்லது வரவேற்கவில்லை என்றாலும், அல்லது நலம் விசாரிக்கவில்லை என்றாலும்கூட அதுவும்
உங்களுக்கான கண்ணியமே ஆகும். மரியாதை என்பது சூழ்நிலையைப் பொருத்து அமைவது. தொழுகையில்
ஒருவர் ஈடுபட்டிருக்கும்போது தனது தந்தைக்கு அல்லது சகோதரருக்கு சலாம் கூறுவதற்காகவோ
வரவேற்பதற்காகவோ தொழுகையை நிறுத்தக் கூடாது. தொழுகையில் ஈடுபட்டிருக்கையில் நண்பர்களை
அல்லது உறவினர்களை கவனிக்காமல் இருப்பதே அவர்களுக்குச் செய்யப்படும் மிகச் சிறந்த கண்ணியமும்
கவனிப்பும் ஆகும். ஏனெனில், அந்த அன்பர்களின் பொருட்டு அவர் இறை வழிபாட்டில் ஆழ்ந்திருக்கும்
நிலையை முறித்துவிடவில்லை. அதனால், அந்நிலை அந்த அன்பர்கள் மீது இறைவனின் முனிவு ஏற்படுவதை
விட்டும் அவர்களைக் காத்துவிட்டது. எனவே, உண்மையான மரியாதை என்பது ஒரு சமூகப் பண்பாடு
அன்று. அது, பிறரின் ஆன்மிக கண்ணியத்தைப் பாதுகாப்பதே ஆகும்.
”இறைவனை நெருங்க, தொழுகையை விடச் சிறந்த வழி வேறு
உள்ளதா?” என்று ஒருவர் வினவினார்.
ரூமி பதிலுரைத்தார்: இல்லை. தொழுகைதான் சிறந்த வழி. எனினும், தொழுகை
என்பது அதன் வெளித் தோற்றத்தில் மட்டும் இல்லை. இந்த வெளித் தோற்றம், தொழுகையின் உடல்
ஆகும். ஏனெனில், அதற்கு தொடக்கமும் முடிவும் உள்ளன. எது ஒன்றுக்குத் தொடக்கமும் முடிவும்
இருக்குமோ அது உடல் ஆகும். அவ்வகையில், தொழுகையின் தொடக்கம் தக்பீர் (அதாவது, “அல்லாஹு
அக்பர்” என்னும் வாசகம்.); அதன் முடிவு சலாம் உரைத்தல் ஆகும். நா மொழியும் இச்சொற்களுக்கும்
தொடக்கமும் முடிவும் உள்ளன. எனவே, அவையும் வடிவமுள்ள உடல்களே. உயிரோ தளைகள் அற்றது,
அளவற்றது, தொடக்கமும் முடிவும் அற்றது.
தொழுகை என்பது இறைத் தூதர்களால் உருவாக்கப்பட்டது. தொழுகையை நமக்குத்
தந்த நபி சொல்கிறார்கள்: “அல்லாஹ்விடம் எனக்கொரு நேரமுண்டு. வேதம் அருளப்பட்ட எந்தவொரு
இறைத்தூதரும் அல்லது இறை நெருக்கம் பெற்ற எந்தவொரு வானவரும் அந்நிலையை அடைய முடியாது.”
எனவே நாம் புரிந்து கொள்கிறோம், தொழுகையின் உயிர் என்பது அதன் வெளித்
தோற்றம் மட்டுமே அன்று. ஆனால், வெளித் தோற்றங்கள் எதற்கும் இடமில்லாத ஒரு மூழ்குதல்
அதில் உள்ளது. தூய ஆன்மாவான (மஃனாயெ மஹள்) ஜிப்ரயீல் (அலை) அவர்கள்கூட அங்கே காணப்படுவதில்லை.
ஒருமுறை, எனது தந்தை பஹாவுத்தீன் அவர்களை இறை தியானத்தில் முழுமையாக
மூழ்கியிருந்த ’இஸ்திக்ராக்’ என்னும் சமாதி நிலையில் அவரின் சீடர்கள் கண்டனர். அப்போது
தொழுகைக்கான நேரம் வந்தது. சீடர்கள் எனது தந்தையை நோக்கி, “தொழுகை நேரம் வந்துவிட்டது”
என்று சொல்லினர். அவர்களின் அழைப்பை எனது தந்தை கவனிக்காமல் அப்படியே இருந்தார். எனவே
அவர்கள் எழுந்து சென்று தொழுகைக்கு அணிவகுத்து நின்றுவிட்டனர். எனினும், இரண்டு சீடர்கள்
மட்டும் எனது தந்தையின் அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவ்விருவரும் தொழுகைக்கு எழுந்து
செல்லவில்லை.
தொழுகையில் நின்ற சீடர்களில் ஒருவரின் பெயர் ஃக்வாஜகி. அவரின் (அகக்)
கண்களில் மெய்ம்மையின் ரகசியம் திறந்துகொண்டது. ’கஷ்ஃப்’ என்னும் திரை விலக்கத்தில்
அவர் இப்படிக் கண்டார்: இமாமுக்கு (தலைவருக்கு)ப் பின்னால் தொழுகையில் நிற்போர் அனைவரும்
மக்கா நகரில் உள்ள கஃபா என்னும் ஆதி இறை இல்லத்திற்குத் தமது முதுகைக் காட்டியபடி நின்றனர்;
ஆனால், எனது தந்தையுடன் அமர்ந்திருந்த அவ்விரு சீடர்கள் கஃபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தனர்!
ஏனெனில், அப்போது எனது தந்தை நான் எனது ஆகிய உணர்வுகளைக் கடந்த ’ஃபனா’
என்னும் நிலையில் இருந்தார். அவரின் சுயம் அங்கில்லை. இறைவனின் பேரொளி அதனைத் தன்னில்
மூழ்கடித்துவிட்டது. “சா முன் சா – மரணிக்கும் முன்பே மரணித்துவிடு” (மூத்தூ கப்ல அன்
தமூத்தூ – நபிமொழி).
இறைவனின் ஒளியை விட்டும் எவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு தொழுகை மாடத்தை
முன்னோக்கி நிற்பாரோ அவர் திண்ணமாக இறை இல்லத்துக்கு முதுகைக் காட்டி நிற்பவரே ஆவார்.
ஏனெனில் அந்தப் பேரொளியே கஃபாவை முன்னோக்கும் திசையின் உயிர்.
கஃபாவை முன்னோக்கித் தமது முகத்தை நிறுத்துபவர் அதன் கண்ணியத்தைப்
பேணுகிறார். ஏனெனில், அதுவே பிரபஞ்சத்தின் நோக்கு திசையாக இருக்கிறது. ஆனால், அவரின்
சுயமே (ஜாத்) ஒரு கஃபா ஆகிவிடுவது மிக மேலானதாகும். அப்போது அதுவே அவரின் அந்தரங்க
நோக்கு திசை ஆகிவிடுகிறது.
”இறை நம்பிக்கையீர்! உமக்கு உயிரளிப்பதிடம் அல்லாஹ்-தூதர் உம்மை அழைக்கையில்,
விரைந்து அவர்கட்கு பதிலளிப்பீர்.” (8:24).
இத்திருவசனம் அருளப்பட்ட தருணத்தை கவனிக்கவும். நபி (ஸல்) தனது தோழர்
ஒருவரை அழைத்தார். அவர் சற்றுத் தாமதமாக வந்தார். “நான் கூப்பிட்டபோதே ஏன் வரவில்லை?”
என்று நபி (ஸல்) கேட்டார்கள். “நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று அத்தோழர் உரைத்தார்.
“நன்று, நான் அல்லாஹ்வுக்காகவே உம்மை அழைக்கவில்லையா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள்.
“நான் நிர்ப்பந்திக்கப் பட்டவனாக இருந்தேன்” என்று அத்தோழர் சொன்னார்.
ஒவ்வொரு கணமும் உன்னை நீ நிர்ப்பந்திக்கப்பட்டவனாக உணர்வது நல்லது.
தோல்வியில் எப்படி உன்னை நிர்ப்பந்திக்கப்பட்டவனாக உணர்கிறாயோ அப்படியே வெற்றியிலும்
உணர்வாயாக. ஏனெனில், உமத் ஆற்றலுக்கு மேல் மாபெரும் ஆற்றல் ஒன்று உள்ளது. ஒவ்வொரு காரியத்திலும்
உனது நாட்டமானது இறைவனின் நாட்டத்திற்குக் கட்டுப்பட்டது. சில நேரம் சுயேச்சையனவன்,
சில நேரம் நிர்ப்பந்திக்கப்பட்டவன் என்று நீ இரண்டு பாதிகளாக இல்லை. நீ எப்போதுமே நிர்ப்பந்திக்கப்
பட்டவன்தான். இதை நீ சில நேரம் உணர்கிறாய், சில நேரம் மறந்து விடுகிறாய். அதை நீ நினைவு
கூறும்போதெல்லாம் அக்கணத்தின் இதயம் உனக்குக் காட்சியாகிறது; உன் முன்னே வழி திறக்கிறது.
நமது நிலை ஒருபுறம் இருக்கட்டும், வானங்களும் பூமியும் அவன் முன் நிர்ப்பந்திக்கப்பட்டவையே,
அவனது ஆணைக்குக் கட்டுப்பட்டவையே.
இறைவன் ஒரு மகத்தான பேரரசன். அவனின் பேரோளி, சூரியன் மற்றூம் நிலா
ஆகியவற்றின் ஒளியைப் போன்றதன்று. அவற்றின் ஒளியின் முன் பொருட்கள் யாவும் அவ்வவற்றுக்கு
உரிய இடங்களில் நிலைத்து இருக்கின்றன. ஆனால், இறைவனின் பேரொளி திரை விலக்கினால் வானங்களும்
பூமியும் இருக்காது, சூரியனும் சந்திரனும் இருக்காது. அவன் அன்றி வேறு எதுவும் இல்லை.
”அவன் முகம் தவிர அனைத்தும் அழிபவே” (குல்லு ஷைஇன் ஹாலிக்குன் இல்லா
வஜ்ஹஹு – 28:88)
ஓர் அரசன் ஒரு சூஃபியிடம் கோரினான், “ஐயா! அல்லாஹ்வின் சந்நிதியில்
உமக்கு அகத் திறப்பும் அணுக்கமும் அருளப்படும்போது அடியேனை நினைவில் வையுங்கள்.” அவனிடம்
அந்த சூஃபி சொன்னார், “இறைவனின் பிரசன்னத்தில் நான் ஆகும்போது, அந்த ஞான சூரியனின்
பேரொளி என் மீது பிரகாசிக்கும்போது, என் நினைப்பே எனக்கு இருக்காதே, இதில் உன்னை எங்கிருந்து
நினைக்க?”
இருந்த போதும், அத்தகைய ’முஸ்தக்ரக்’ ஆன (முற்றிலும் மூழ்கிய) சூஃபி
ஞானியைக் கண்டால் உங்கள் கோரிக்கையை விண்ணப்பிக்கவும். இறைவனிடம் அவர் உங்களின் பெயரை
நினைவு கூர்ந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
முன்பொரு அரசன் இருந்தான். அவனுக்கு மிகவும் நெருக்கமான நம்பகமான பணியாளன்
ஒருவன் இருந்தான். தன் வீட்டிலிருந்து அரண்மனைக்கு அந்தப் பணியாளன் புறப்படும் போதெல்லாம்
மக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு தமது கோரிக்கைகள் எழுதப்பட்ட மனுக்களை அவனிடம் தந்து
அவற்றை வேந்தனிடம் ஒப்படைக்கும்படி வேண்டுவர். அவற்றை அவன் தனது பையிலும் சட்டைக்குள்ளும்
செருகி வைத்துக் கொள்வான். அரசனின் முன்னிலையில் வந்து நின்றவுடன், அரசனின் மாட்சி
மற்றும் அழகைக் கண்டு தாள மாட்டாமல் அவன் மயங்கி விழுந்துவிடுவான். அப்போது அந்த அரசன்
இறங்கி வந்து காதலுடன் அவனைக் கண்டு, அவனது பையிலும் சட்டையிலும் இருக்கின்ற மனுக்களை
எல்லாம் எடுப்பான்: ”என் அழகில் முற்றிலும் மூழ்கிவிட்ட எனது பிரியமான பணியாளன் என்ன
கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்போம்.”
இப்படியாகத் தான் கண்டடைந்த மனுக்கள் அனைத்தையும் அந்த அரசன் படித்துப்
பார்த்து அவற்றின் கோரிக்கைகளை ஒன்று விடாமல், கேட்கப்பட்டதற்கும் மேலாகவே நிறைவேற்றுவான்.
அவற்றில் எதையும் அவன் நிராகரிக்க மாட்டான். ஆனால், தமது தன்னுணர்வை இழக்காமல் தக்க
வைத்திருக்கும் பிற ஊழியர்கள் எத்தனைதான் நேர்த்தியாகத் தமக்கு வேண்டியவர்களின் கோரிக்கைகளை
அரசனிடம் முன் வைத்தாலும், நூற்றில் ஒன்றுதான் அவனால் ஏற்கப்படும், நிறைவேறும்.
(to be continued...)
No comments:
Post a Comment