2:154-155 பக்தாதும் உன் உடலும்
தாயிடமிருந்து வருகிறது சிசு. அதற்கு இவ்வுலகையோ அல்லது மறுவுலகையோ
பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் அல்லது அவள் மெல்ல வளரும்போது இங்கே என்ன நடக்கிறது என்பதைக்
கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. நீ மறைவுலகம் பற்றிப் பேசுகிறாய். ஆனால், குழந்தைக்கு
அதைப் பற்றிய புரிதலே வருவதில்லை. இதுவே கருத்துக்கள் அப்பட்டமாகக் கைவிடப்படும் நிலை.
இறைத்தூதர்களுக்கு வேறு வகையான அகப்பார்வை உள்ளது [காண்க: குர்ஆன்:
32:23]. பருவுலகை விட்டு மறுவுலகிற்கும் மீண்டும் பருவுலகிற்கும் முஹம்மத் (ஸல்) பயணிக்கிறார்கள்.
அவர் தனது சுயத்தின் வடிவத்தைப் பார்க்கும் அதே வேளை அனைத்துச் சுயங்களின் சாராம்சத்தையும்
எலும்புக்கூட்டையும் ஆன்மாவையும் பார்க்கிறார். இஃதொரு பிளவு நிலை போல் தோன்றலாம்.
அப்படித்தான், அப்படி அல்லவும்தான்.
நாம் பார்க்கும் வழிகளைத் தடுத்துப் பிரிக்கின்ற திரைகளின் மேல் நீ
நடந்து செல். அவற்றின் வழியாக ஊடுறுவிச்
செல்வது மிகவும் தொலைவாகும். மேலிருந்து நீ இறைவனையும் பிரபஞ்சத்தையும் ஒன்றாகக் காண்பாய்.
ஒரு மனிதனில் ஒரு கணமேனும் இணைதல் நிகழ்ந்திருக்கும் எனில் பிறகு இடைவெளி என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
யாரோ உன்னிடம் சொல்கிறார்கள், “நீ பக்தாதுக்குப்
போக வேண்டும்” என்று. ஆனால், பக்தாதும் உன் உடலும் ஏற்கனவே ஒன்றாகத்தான் இருக்கின்றன.
நீ அந்நகரில் வாழ்கிறாய்.
2:156அ
திடமும் நொய்மையும்
கடினமாக இறுகிய களிமண்ணையும், பாறைகளைப் போன்ற அதன் கட்டிகளையும் காணும்போது
அதிலிருந்து இறைவன் வளரச் செய்கின்ற அற்புதமான உயிர் வகைகளை எண்ணி வியக்கிறேன்; புல்
பூண்டுகள் பயிர் பச்சைகள் மட்டுமல்ல, நமது வாழ்க்கையும்தான், அறிவுடைய நட்பு அன்பு,
பிரக்ஞை மற்றும் ஆன்மா ஆகியவையும், நிலத்தடியில் நீரின் முறைமையும் கூட. இந்தப் பாலைவன
நிலத்தின் கடினமான அமைப்பின் ஊடாக எத்தனையோ நுண்ணிய வெளிப்பாடுகளும் பேரார்வங்களும்
பாய்ந்து கொண்டிருக்கின்றன. உலோகம் போன்று தடிமனான இதழ்கள் மென்மையான பஞ்சின் இழைகளைச்
சுற்றி மூடுவதை எண்ணிப் பார்.
திடமானவற்றையும் நொய்மை ஆனவற்றையும் இறைஞானம் கொண்டு வருகின்றது, அவை
ஒன்றாக இணைந்து இயங்கும்படியாக. எடையில் குறைபாடு தோன்றின் தக்கையை அது கல்லாக மாற்றுகிறது.
பருவகாலத்தின் ஈரப்பதம் இறுகி மூடிய விதையைத் திறக்கிறது. பின்னர், அவ்விதையில் இருந்து
வெளிப்பட்டு வளரும் செடி பருவ மழையின் நீரை உறிஞ்சித் தக்கவைத்துக் கொள்கிறது.
2:156ஆ ஓரிரவு நோட்டம்
என் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியிருந்த காலத்தில் நான் மிகவும் மனமொடிந்து
நொந்து கிடந்தேன்.
துருக்கியின் குவாரிஸம்ஷா பல பகுதிகளை அவற்றின் இல்லங்கள், குழந்தைகள்,
செல்வர்கள், வணிகர்கள், ஏன் ஞானிகளையும்கூட விட்டு வைக்காமல் எல்லோரையும் சேர்த்துக்
கைப்பற்றினான். ஆனால் அவனின் அதிகார ஆட்டத்திற்கு எந்தவொரு பயனும் இருந்ததாகத் தெரியவில்லை.
தெளிவான முடிவின்மை, காலம் கடத்தல் மற்றும் தவறவிட்ட வாய்ப்புகள் ஆகியவற்றுடன் கூடிய
வெற்றிகள் என்றைக்குமே பேரழிவைத்தான் உண்டு பண்ணும்.
வானவர்கள் தம்முள் திட்டமிடுவதை சாத்தான் ஒட்டுக் கேட்கலாம். ஆனால்,
அந்த முன் கூட்டியே அறிதலானது அவனுக்கு எவ்விதத்திலும் சாதகம் ஆகாது. ஏனெனில் நோக்கங்கள்
மாறுபடுகின்றன.
வானியல் அறிஞர் ஒருவர் இரவில் விண்மீன்களை நான்கு மணி நேரம் அவதானிப்பதன்
அறிவு இப்போது ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய கோட்பாடு ஒன்றை முன்மொழியக்
கூடும்.
2:157
எவ்வளவு உயிரோடு இருக்க விரும்புகிறாய்?
’நீ ஏன் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறாய்? நான் ஏன் இப்படிக் கருப்பாக
இருக்கிறேன்?’ என்று சூரியனைப் பார்த்து வானலி கேட்குமா? ”இஃது வல்லமையில் மிகைத்தோனும்
அனைத்தையும் அறிந்தோனுமாகிய இறைவனின் நிர்ணயம் ஆகும்” (6:96). நான் பிரார்த்தனியில்
இறைவனிடம் இவ்வுலகின் வாழ்க்கை எப்படி உண்மையானதாகவும் நம்பகமாகவும் இருக்கிறது என்று
உரையாடிக் கொண்டிருந்தேன்.
உன் அறிதலில் நீ உறுதியாக இருக்கும் இடத்தில் வாழ்வின் சுடர் எழுகிறது.
உன் உடலில் பாகங்கள் எல்லாம் இறைப் புகழ்ச்சியில் களிக்கின்றன. நீ எவ்வளவு உயிரோடு
இருக்க விரும்புகிறாய்?
2:159
அற்புதக் குறிப்புக்கள்
ஷரஃப் சக்ஸி சொல்கிறார், முதியோர்கள் சந்தித்து ஒன்றாக அமரும்போது
பேசாமலேயே அவ்வப்போது உரையாடுகின்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாகப் புரிந்துகொள்கிறார்கள்.
உதாரணமாக, வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை ஒருபோதும் பெண்கள் விரும்புவதில்லை என்பதையும்
இது போன்ற பல விசயங்களையும் அவர்கள் உள்ளுணர்வால் அறிகின்றார்கள்.
குருடனுக்கு மீண்டும் பார்வை தரப்பட்டது, வீரியத்தை இழந்த ஒன்றுக்கு
அது மீண்டும் திரும்பியது என்பது போன்ற பல அற்புதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூசுஃப்
நபி தனது முகத்தைத் திறந்து காட்டியபோது, அவரது முகத்தின் ஒளி, நூர், ஓர் அந்தகரின்
கண்களுக்குள் நுழைந்தது. அவர் மீண்டும் பார்க்கத் தொடங்கினார். முஹம்மத் (ஸல்) அவர்களிடம்
ஒருமுறை குருடர் ஒருவர் வந்து தனக்கு சொஸ்தம் அளிக்குமாறு கேட்டார். அவர் கேட்டது கிடைத்தது.
யூசுஃப் நபி பிரார்த்தித்தார், ஜுலைகா மீண்டும் இளமையானார், ஒளிரும்
கண்களுடன். முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒரு நபர் வந்து தான் பல ஆண்டுகளுக்கு முன்பு
காதல் வயப்பட்டிருந்ததாகவும் இப்போது தானும் தன் மனைவியும் முதுமை அடைந்துவிட்டதாகவும்
சொன்னார். நபி (ஸல்) பிரார்த்தித்தார்கள். அவரும் அவரின் மனைவியும் மீண்டும் காதலின்
துடிப்புள்ள இளமையைப் பெற்றார்கள்.
மேய்ப்பர்கள் சிலர் லூத் நபியின் ஆட்டு மந்தையை புல் பூண்டு இல்லாத
ஒரு பாறைப் பிரதேசத்திற்குத் தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். லூத் நபி பிரார்த்தித்தார்கள்.
கற்கள் மென்மையாகவும் ஈரமுள்ளதாகவும் பசுமையாகவும் மாறிவிட்டன. மந்தைக்காக புதிய புற்கள்
வெளிவந்தன. லூத் நபி கற்களை எடுத்து அந்த மேய்ப்பர்களின் மீது வீசியெறிந்தார்கள். அவர்கள்
அனைவரும் குருடாகிவிட்டனர்.
2:164
இரண்டு கனவுகள்
ஒரு துருக்கனின் அண்மைக் கனவு: வெள்ளுடை அணிந்த ஆயிரம் பேர் வெள்ளிக்கிழமைத்
தொழுகையில் பஹாவுத்தீனின் பின்னால் நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி
வட்டமாக நிற்க விரும்புகிறார்கள். ஆனால், மற்றவர்கள் அவர்களைத் தடுத்துச் சொல்கிறார்கள்,
இப்போது நிற்கும்படியே நில்லுங்கள், இவ்வகையில் தொழுவதால் நீங்கள் மறுமை நாளில் நியாயமும்
கருணையும் பெறலாம்.
அவர் இன்னொரு கனவும் கண்டிருக்கிறார்: நான் ஒரு கூட்டத்துடன் பெரிய
கட்டடமொன்றில் இருக்கிறேன். நான் இருந்த கட்டடத்தின் அமைப்புப் பற்றி எனக்கு ஒன்றும்
தெரியாது. என் கையிலிருந்து கயிறு ஒன்று அதனுள் முடிவற்ற தொலைவுக்கு நீண்டு செல்கிறது.
அதன் ஒரு முனையே இங்கே என் கையில் இருப்பது. அந்தக் கயிற்றை நான் திரித்தபடி மிக வேகமாக
முன்னே போய்க் கொண்டிருக்கிறேன்.
(to be continued...)
No comments:
Post a Comment