1:245-247
நான் எங்கு வீழினும் விழு
“என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நான் மிக அருகில்
இருக்கிறேன், அழைப்பவர்களின் அழைப்பிற்கு விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும்.”
(2:186)
இந்த வசனம் நம் உரையாடல்களுடன் இணைகிறது. நாம் கேட்கும் வினாக்களுடன்.
வருகின்ற விடைகளுடன். ஒரு பாலைக் காற்று சந்தேகத்தைக் கொண்டு வரும். இன்னொன்று நம்பிக்கையும்
உறுதியும் நல்கும். எப்போதுமே அழைப்பும் பதிலும் உண்டு.
ஒரு நாத்திகன் கேட்கிறான், கடவுள் எங்கே? இடத்தை எனக்குக் காட்டு.
அபத்தமான கோரிக்கை. இறைவனின் பிரசன்னத்தைப் படைப்பினம் தொடுவதற்கு
ஓர் இடம் இல்லை. குறிப்பிடம் என்பது இறைவனின் பண்பல்ல.
ஃபக்ருத்தீன் ராஸியைக் காண விரும்பும் அனைவரையும் அனுமதிக்கும் கொள்ளளவு
ஜும்மாப் பள்ளிவாசலுக்கு இல்லை என்று ஸைன் ஸாவியா கூறுகிறார். மக்கள் மெழுகுவத்தி ஏந்திக்கொண்டு
வருவதை அவர் விவரிக்கிறார். தங்கப் பட்டயமும் வெள்ளித் தொப்பியும் அணிந்த உதவியாளர்
ஒருவர் ஒவ்வோர் இரவும் பிரசங்க மேடையருகில் அமர்ந்திருக்க வேண்டும் என்று மன்னர் ஆணை
இட்டிருக்கிறார். தொழுகை விரிப்பை மக்கா நோக்கி விரிக்கும் எவரும் ஆசீர்வதிக்கப்படுவார்.
பிறகு, மக்களை நேர்வழியில் இட்டுச் செல்லும் அபூ ஹனீஃபா இருக்கிறார்,
குர்ஆனையும் கவிதைகளையும் பழஞ்செய்திகளையும் வாசித்துக் கொண்டு. ஆதம் நபி இறைவனிடமிருந்து
வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதை (2:37) மேற்கோள் காட்டியதற்காகப் பிரபலமான காஜி அபூ
சயீது இருக்கிறார். முஹம்மதிடமும் அலீயிடமும் யூதர்கள் வந்து தௌராத்தை (யூத வேதத்தை)
வாசிக்குமாறு சொன்னார்கள் என்று சுல்தான் அவ்லியா கூறுகிறார்.
இதையெல்லாம் நான் கேட்டு, அவர்களின் தகுதிக்கு நான் மிகவும் கீழே இருக்கிறேன்
என்று உணர்கிறேன். இனி ஒருபோதும் மக்களுக்கு முன் நின்று பேச மாட்டேன். எங்கு வீழினும்
நான் வீழ்வேன், எழுந்து நடப்பேன், எந்த அவமானம் பற்றியும் வெட்கம் இல்லை. உழுநிலத்தில்
இப்படியும் அப்படியும் அசையுமொரு மண்ணாங்கட்டி நான்.
வேத வரிகள் தோன்றுகின்றன.
(தவிர்க்கவியலாத) மாபெரு நிகழ்ச்சி ஏற்பட்டால்…(56:1). ”மேலும் மலைகள் தூள்
தூளாக்கப்படும் போது…(56:5). அவை தூசிகளாகப் பறந்துவிடும்…(56:6). நீங்கள் மூன்று குழுவினர்
ஆகிவிடுவீர்கள்…(56:7). வலதுசாரிகள் – வலதுசாரிகள் யார்?...(56:8). இடதுசாரிகள் – இடதுசாரிகள்
யார்? (56:9). மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே (56:10). அவர்களே நெருக்கமானவர்கள்
(56:11).
இந்த வரிகளின் அர்த்தம் எனக்குப் புலப்படவில்லை. பிறகு என் குழப்பத்திற்கு
விடை வருகிறது, இந்நிலையில் இறைவனை தியானம்
செய்.
1:253-254
பிற நண்மைகளின் சகவாசம்
நான் மிக அதிகமாக உண்கிறேன். எனவே, தொழவோ போதிக்கவோ தோன்றவில்லை.
நான் இறைவனிடம் சொன்னேன், வலிமையுடன் இருக்கவும் உன்னுடன் இருப்பதன்
இன்பங்களை இழந்துவிடாமல் இருக்கவுமே நான் உண்கிறேன். ஆனால், இன்னமும் எனக்குச் சரியான
அளவு தெரியவில்லை. உற்சாகமாகவே இருக்கவும் இந்த அலங்கோல நிலையில் விழாமல் இருக்கவும்
நான் எவ்வளவு உண்ண வேண்டும்?
சில நேரங்களில் என்னை ஒரு துக்கம் பீடித்து, வெட்கக்கேடான சுய சிந்தனையில்
மூழ்கடிக்கிறது.
உன் இலக்கு சரியானதாக இருந்தால் நீ இறுதி வரை பாதையில் செல்ல வேண்டும்,
சிரமத்தைப் பொருட்படுத்தக் கூடாது என்றொரு ஆன்மிகக் கவிதையின் வரிகள் சொல்கின்றன. மாறாக,
இலக்கு உண்மை இல்லை எனில் நீ உன் காலத்தை வீணடிக்கிறாய், உன் முயற்சி என்னவாக இருந்தபோதும்.
அது, நீ பித்தளையைத் தங்கமாக்க முயற்சிப்பது போன்றது. எவருமே தோல்விதான் அடைவார்.
நல்ல பணிகள் இதர நல்லதுகளின் சகவாசத்தில்தான் வெற்றி பெறும். புகையின்
ஊடாக நீ நடந்து சென்றால் கரித்துகள் தூசாக உன் மேல் படியத்தான் செய்யும். பூவனத்தின்
ஊடாக நீ நடந்து சென்றால் நறுமணம் உன்னைச் சூழ்வதை உணர்வாய்.
இவ்வுலகம் ஒரு திறந்த வானம். மேலும், குப்பைத் தொட்டியும்கூட. சிலருக்கு
வாழ்வையும் சிலருக்குச் சாவையும் தருகிறது. விளைவுகள் இந்த உலகத்தால் கட்டுப்படுத்தப்
படுவதில்லை.
இவ்வுலகில் உன் விரலை அழுத்தி எடுத்து உன் மூக்கின் அருகில் வை. ஒன்று
நீ மலரை முகர்வாய் அல்லது மலத்தை. இவ்விஷயங்களில் தீர்மாணிப்பது இயலும்.
காதல் இயலும் எனில் உண்மையான உள்ளங்கள் விழித்திருக்கும். பிறருக்கு
அழகின் தேவை இல்லை, அதன் நம்பிக்கை இல்லை. உன் கையில் தங்கம் உள்ளதெனில், அதைக் களிமண்ணாக
மாற்றும் வழிகளை ஏன் கற்பனை செய்கிறாய்?
1:261-262
கள்வர்களுக்கு அதைத் தூக்கி எறி
இறையச்சம் என்பது பிற நடுக்கங்களினும் வேறுபட்டது. இறையச்சத்தை அடைவதற்கு
முன் எவை எவை அபாயமானவை என்பது பற்றிய ஆரோக்கியமான அச்சம் உனக்குத் தேவை. பலர் அந்நிலையை
அடைவதே இல்லை. நீ ஒரு மெல்லிய பலமற்ற கிளையைப் போல் இருக்கலாம். நீ பலகீனமாகத் தோன்றினாலும்
ஈரமுள்ள உட்பகுதி ஆணிவேருடன் இணைந்துள்ளது. ”அதனைப் பிடி; அஞ்சாதே” (20:21). மூசா நபி
நடுங்கினார்கள், ஆனால் அவர்களின் மையம் உறுதியாக இருந்தது.
”சிலர் மக்களிடம் சொன்னார்கள், ’உங்களுக்கு எதிராக பெரும்படை ஒன்று
கூடியுள்ளது. நீங்கள் பயப்பட வேண்டும்’. ஆனால் அது அவர்களின் இறைநம்பிக்கையை மேலும்
அதிகமாக்கியது. அவர்கள் சொன்னார்கள், ’அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே சிறந்த
பாதுகாவலன்’” (3:173).
அதிகம் எச்சரிக்கையாக இருக்கும் வணிகர்கள் வெற்றியடைவதே இல்லை. நட்டம்
குறித்த அவர்களது அச்சமே காரணம். துணிந்த வணிகர்கள் பத்து முறை ஒடிந்து வீழ்ந்தாலும்
இறுதியில் எழுந்துவிடுகிறார்கள். எதை இழப்பதை நீ அஞ்சுகிறாயோ, உன் வண்டியைப் பின் தொடர்ந்து
வரும் கள்வர்களுக்கு அதைத் தூக்கி எறி. குறிப்பாக, அது உன் நம்பிக்கை எனில்.
நீ எதை ஆழமாக நேசித்தாலும் அதற்கு நேரம் கொடு. அதை விட்டும் விலக்கப்பட்டால்
கூடிய சீக்கிரம் அதனிடம் மீண்டு வா. சில நேரங்களில் நீ நேசிப்பதற்கும் உன் நம்பிக்கைக்கும்
உன் பிள்ளைகளைப் போஷிப்பதற்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றலாம். உன் நேசத்துடன் மிகவும்
ஒத்திசைந்த ஒன்றுடன் இரு. மற்றவை தானாகவே மறைந்து போகும்.
அச்சம் இரண்டு வகை. ஒன்று, நம் முயற்சிக்கு அது மதிப்புள்ளதுதானா?
என்னும் கவலை. ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இடையில் சிக்கிக் கொண்ட மக்கள் எப்போதுமே
வேதனையிலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். அச்சத்தின் இரண்டாம் வடிவம் நீ நேசிப்பதை
அடைய உன்னால் இயலுமா என்பது. அது கரைந்து போகட்டும். நீ போற்றும் திசையில் நகர்ந்து
கொண்டிரு. அறவே உன்னால் இயலாது என்று உணர்த்தப்பட்டால் ஒழிய, அதனை நோக்கிச் சென்று
கொண்டிரு.
1:263
இங்கே அமர்கிறோம்
உடன்படாத பலரிடம் ஒருவன் வேலை செய்கிறான். இன்னொருவன் ஒருவரிடம் மட்டும்.
அவர்களின் வாழ்க்கைகளை ஒப்பிட்டுப் பார். (காண்க: குர்ஆன்: 39:29).
நான் இதை இப்படிச் சொல்லலாம். கப்பல் துறையிலேயே அழுந்திக் கிடக்கும்
வகையில் உன் கப்பலில் நீ அதிகச் சுமைகளை ஏற்றுகிறாய். அது எங்குமே போகாது.
உனக்கு நிறைய வேலைத் திட்டங்கள் இருக்கின்றன. நீ அமர்ந்து ஓய்வெடுத்தாக
வேண்டும். இலக்கே இல்லாத சரக்குக் கப்பலின் கணக்கு வழக்கை நீ மிகக் கவனமாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறாய். உன் வேலையின் சிரமம் அபத்தமானது.
நீ சொல்கிறாய், நான் இதையெல்லாம்
எனது அழகான பிள்ளைகளுக்காகவும் அவர்களின் குழந்தைகளுக்காகவும் இந்தக் கடைவீதி மற்றும்
ஊரின் பண்பாட்டுக்காகவும் நாகரிகத்துக்காகவும் செய்கிறேன். மகத்தான லட்சியங்கள்!
அதெல்லாம், இயற்கைக் காட்சியைக் காணவிடாமல் மறைக்கும் திரைச் சீலையில் பின்னப் பட்டிருக்கும்
படங்களைப் போன்றவை. அந்த உருவங்களை நீக்கிவிடு. ஏனெனில், அவை ஒருநாள் நிச்சயமாக நீக்கப்படும்.
உனது பெருமைமிகு பதவிக்கும் உனது பரம்பரைக்கும் அப்பால் பார்.
ஆக, நாம் இங்கே அமர்கிறோம், விவரங்களில் புதைந்து, ஏதோவொரு ஆட்டத்தில்
வெற்றி பெறுவதைப் பற்றிய கவலையுடன், நாம் இறந்துபோவோம் என்ற பயத்துடன். இவை எல்லாம்
முக்கியமற்ற மலினமான மாய வித்தைகள். திமிங்கலம் ஒன்றுக்கு உணவளிப்பதற்காக கப்பல் நிறைய
உணவை ஏற்றிக்கொண்டு சுலைமான் நபி புறப்பட்ட கதை உனக்கு நினைவிருக்கிறதா? நமது திட்டமிடல்கள்
எல்லாம், அவற்றைப் பற்றிய நமது விவாதங்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பதை நமக்குக்
காட்டவே அவர் அப்படிச் செய்தார்.
1:264-265
புகழின் தலம்
இறைவன் ஓர் உதாரணம் சொல்கிறான். ”மணம் மிக்க ஒரு நன்மரம்”
(14:24). தோலைப் பொசுக்கும் விஷ வார்த்தைள் உள்ளன. அந்த உதாரண மரத்தைப் போல் நிழலும்
கனியும் நல்கி இதயத்தை மகிழச் செய்யும் நல்ல சொற்களும் உள்ளன.
என் சீடர்களே, அறிஞர்களே, நீங்களனைவரும் ஒரே பணியைத்தான் செய்கிறீர்கள்
என்றாலும் யார் மேல் யார் கீழ் என்று முடிவுகட்ட முனைகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும்
தானே சிறப்பானவர் என்று எண்ணுகிறீர்கள். அந்த கர்வத்தில் நீங்கள் ஒருவரை ஒருவர் பெரிதும்
எரிச்சல் பண்ணுகிறீர்கள். போதுமான அளவு இருக்காது என்று நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறீர்.
அதனால், தெரு நாய்களைப் போல் உமது பங்குக்காகச் சண்டை போடுகிறீர்கள்.
இந்தப் பொறாமையின் அரிப்பல்ல, ஒத்திசைவே மெய்வழி. நீயும் இதரக் கழுதைகளும்
கோலடி வாங்கும் இந்த நெருக்கடியான கொட்டில் அல்ல. மாறாக, தொழுகை அளவற்றதாக மாறுகின்றதும்,
காணிக்கை செலுத்துவதன் இன்பத்தை நீ உணர்கின்றதுமான ரகசியத்தினுள், புகழின் தலத்திற்கு
நகர்ந்துவிடு.
இறைவன் ஞானத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு அதை ஏன் பறித்துவிடுகிறான்
என்று யாரோ கேட்கிறார். நான் சொல்கிறேன், பிள்ளைகளிடம் நாம் நடந்துகொள்வது போலத்தான்
அதுவும். அவர்கள் கிரகிக்க முடியாததை அவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் எடுத்துக்கொள்கிறோம்
அல்லவா? பெருகிப் பாய்ந்து அகற்றினும் பயன்களைக் கொண்டு வரும் ஆற்று வெள்ளத்தையும்
சூறைக் காற்றையும் போன்றது அது. அவை வடியும்போது நாம் சிதலங்களுடன் எஞ்சுகிறோம்.
1:267
நாம் பொய்யுரைக்கிறோம் போலும்
’தம் நெறியைப் பற்பல பிரிவுகளாக்கி குழுக்களாகி விட்டார்களே, அவர்களுடன்
உமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர்களது விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது – அவர்கள்
செய்து கொண்டிருந்தது பற்றி அவனே அவர்களுக்கு அறிவிப்பான்’ (6:159).
உன் ஆசை, சில காலம் உனது ஈடுபாட்டைப் பிடித்திருக்கும் எதுவும், ஒரு
காற்றைப் போன்றது, சிறிது தூரம் உன்னைத் தூக்கிச் சென்று கீழே போட்டுவிடும் பறக்கும்
குதிரையைப் போன்றது. அஃது நிகழும்போது அதன் மீது உனக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை.
அல்லது அது எங்கே உன்னை இறக்கிவிடும் என்றும் உனக்குத் தெரிவதில்லை.
மார்க்கம், நம்பிக்கை மற்றும் உனது சரணாகதி, இவையே நீ நிலத்தில்தான்
வாழ்கிறாய் என்பதற்கான அத்தாட்சிகள். அதன் பின் நீ எவ்விதப் பெருஞ்சுழல்கள் மற்றும்
கப்பலைத் தூக்கி அறையும் பேரலைகள் ஆகியவற்றின் அபாயத்தில் இல்லை.
’நான் நம்புகிறேன்…’ என்னும் வாசகத்தை ஓதும் எவரும் பின்வரும் விதங்கள்
இரண்டிலுமோ அல்லது ஏதேனும் ஒன்றிலோ பொய் உரைப்பவர் ஆகலாம்: அவனது சார்தல் உண்மையில்
அவன் சுகம் அனுபவிக்கும் விதத்திலாக இருக்கலாம் அல்லது வேதனைப் படுவதன் கசப்பினாலாக
இருக்கலாம்.
பின்வரும் கவிதை வரிகளை நினைவில் வை, எச்சரிக்கை கொள்:
”நின் கண்களே எனது மார்க்கம்,
இக் கருங்கூந்தல் எனது நம்பிக்கை”.
அருள்மிகும் பிரசன்னமான அல்லாஹ்வை அழை. (காண்க 17:110). எது நடந்தாலும்,
உனது அந்த உருகிய அழைப்பின் உள்ளே உன் வாழ்க்கை கம்பீரம் ஆகிறது. வானளாவும் நெடிய ஸ்தூபிகளுடன்
நகரங்களைக் கட்டியெழுப்பும் கலைத்திறன் அங்கிருந்தே அருட்கொடையாக வருகிறது. மலைகள்
உயர்ந்தோங்குவதும். மேலும், ”வானத்தை நாம் நம் ஆற்றலினால் படைத்துள்ளோம்” (51:47) என்பதும்.
1:127 நாம் ஏன் அழுவதில்லை?
யாரோ கேட்டார், எத்தியோப்பியாவின் மன்னர் அப்பாஸும் கலீஃபா உமரும்
குர்ஆனிலிருந்து ஒரேயொரு வசனம் ஓதப்படுவதைக் கேட்டாலும் அதன் அற்புதத்தில் அழுதார்கள்.
நாமோ முழு முழு அத்தியாயங்களை ஓதுகிறோம், முழு நூலையுமே ஓதுகிறோம், ஆனால் கொஞ்சமும்
அசைவதில்லையே? நாம் ஏன் அழுவதில்லை? முஹம்மத் (ஸல்) அவர்களின் வீறுகொண்ட பிரசன்னம்
அருகில் வந்த போது அந்த அகவற் பெண்ணின் ஆலயச் சுவரில் இருந்த கல்-புடைப்பான விலங்குருவங்கள்
கூட அழுதன. இறைவனை பிரிந்திருப்பதின் கட்புலனாகாத ஏதொவொரு அலங்கோலம், நாம் உணராததொரு
ஏக்கம் நம்மிடம் இருக்கிறது போலும். வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகள் நம்மைக் காய வைத்துவிட்டன
போலும். அதனால்தான், இறைக் காதலின் நெருப்பு நம்மிடம் வரும்போது, ஈரக் கிளைகள் தமது
நீரைப் பொங்க விடுவது போல் நாம் அழுவதில்லை. மாறாக நாம் சாம்பல் ஆகிவிடுகிறோம். உலக
லட்சியம் என்று சொல்லப்படும் பேராசைதான் நம் சுரணையைக் கெடுத்துவிட்டதா?
குடும்பங்கள் சிதைந்து சிங்கம் புலி ஆகியவற்றால் தின்னப் பட்டாலும்
காதலர்கள் காதலின் பாதையில் சென்றுகொண்டே இருக்கிறார்கள். எல்லாமே எடுபட்டுப் போய்விடுகின்றன.
அப்போதும் இறைவனின் பிரசன்னம் அவர்களைக் காத்து வளம் பெறச் செய்கிறது.
(to be continued...)
No comments:
Post a Comment