Saturday, November 24, 2018

ஆப்பிளுடன் உயர்தல் - 2





















இனி, சாரு நிவேதிதா இறைவனிடம் கோரிக்கை வைத்தாரே, அந்த “வாட்டர் பெட்” போன்ற மெத்தைக்கு வருவோம். அதன் உளவியலை இனி விவரிக்கலாம். மெத்தை ஏன் மென்மையாக இருக்கவேண்டும் என்று மனம் கேட்கிறது? அது மிதப்பது போல் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கிறது?

உடல் என்பது பருப்பொருள்தான். அதாவது இப்பூமியின் பாகம். ஆனால் அவ்வுடலுக்குள் அடைபட்டிருக்கும் ஆன்மா அல்லது உயிர் என்பது இவ்வுலகினது அல்ல. மேலுலகுக்குரியது. உடல் இவ்வுலகினால் ஆனது. ஆதமின் உடலே இப்பூமியிலிருந்து மண்ணெடுத்துதான் செய்யப்பட்டது. அவரது உடலிலிருந்தே ஜோடியான ஹவ்வாவின் (ஏவாளின்) உடல் செய்யப்பட்டது. அவ்வுடல்களுடன் அவர்கள் சொர்க்கத்தில் இருந்தார்கள். விலக்கப்பட்ட கனியை ஏவாள் தானும் புசித்துப் பின் ஆதமையும் புசிக்க வைத்தாள். அதனால் அவர்களிருவரும் இப்பூமிக்கு இறக்கப்பட்டார்கள்.

இங்கே நான் இஸ்லாமிய நோக்கிலிருந்தே தொடர விரும்புகிறேன். பைபிளின் பார்வையிலிருந்து இஸ்லாமியப் பார்வை இங்கே வேறுபடுகிறது. அதாவது, பைபிளின்படி கனியைப் புசிக்கும் முன் ஆதாம் ஏவாள் இருவருக்கும் உடலிச்சை (காமம்) இருக்கவில்லை. (உயிருக்குயிரான காதல் அல்லது காமமற்ற நேசம் மட்டும் இருந்தது எனலாம். எனவேதான் ஏசுவுடன் அத்தகு நேசத்தை எய்த துறவறம் கிறித்துவத்தில் பேணப்படுகிறது). கனியைப் புசித்ததும் காமம் உண்டாயிற்று. அதற்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று அவர்கள் பூமிக்கு இறக்கப்பட்டார்கள். காமம் முதற்பாவத்தின் விளைவாயிற்று. (பாவத்தின் சம்பளம் மரணம். காமம் என்னும் பாவத்தின் சம்பளம் பிள்ளைகள்! உயிரை எடுக்கவே வருகிறார்கள் போலும்!).

ஆனால், இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஏவாளை முதன்முதலில் கண்டபோதே ஆதமுக்கு அவர் மீது இச்சை உண்டாகித் தீண்ட முனைந்தார். சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட மட்டுமில்லை, திருமணமே நடந்துவிட்டது! அந்த உணர்வு வெறும் காதல் மட்டுமல்ல, அதேபோல் வெறும் காமம் மட்டுமல்ல. அது காதலும் காமமுமாய் இருந்தது. (’இஸ்லாத்தில் துறவறம் இல்லை’ என்றும் ‘திருமணம் எனது வழிமுறை’ என்றும் நபிகள் நாயகம் சொன்னார்கள்). அப்போது சாத்தான் அங்கே இல்லவே இல்லை. எனவே, திருமண பந்தத்திற்குள் காமம் என்பது பாவம் அல்ல என்றாயிற்று. (இஸ்லாமியக் கோட்பாட்டின்படி சொர்க்கத்தில் செக்ஸ் உண்டு. அது சொர்க்கத்தின் இன்பம். அதன் ஒரு sample-ஆகத்தான் இப்பூமியிலும் புணர்வின்பம் தரப்பட்டிருக்கிறது) அப்படியானால், விலக்கப்பட்ட கனியின் ரோல் என்ன? சாத்தானின் ஆட்டமும் இங்கேதான் வருகிறது. அவனது தூண்டலால்தான் முதலில் ஏவாளும் பின்னர் ஆதமும் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்கள். அது ஆதமிலும் ஏவாளிலும் கழிவாக மாறிற்று என்று இஸ்லாம் கூறுகிறது. ஆதமும் ஏவாளும் பூமிக்கு இறக்கப்பட்டு இங்கே மல-ஜலம் கழித்தார்கள். (மல-ஜலத்தை அடக்கி வைத்தபடி தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது. நிம்மதியாக ஈடுபடவும் முடியாது. சாத்தானின் குறுக்கீடு மனிதர்களில் மல-ஜலத்தைக் கொண்டு வந்தது. கழிப்பறைக்குள் செல்லும்போது சாத்தான்களின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வதற்கு நபிகள் நாயகம் கற்றுத் தந்த பிரார்த்தனை ஒன்றுண்டு. அதனை ஓதிவிட்டே முஸ்லிம்கள் கழிப்பறைக்குச் சென்று வருவர்).


















 ஆதம்-ஏவாள் கதை இத்துடன் நிற்கட்டும். இப்போது அற்புதமான விஞ்ஞானி ஒருவரைப் பார்ப்போம். ஐசக் நியூட்டன் என்னும் அந்த அறிவியல் மேதை ஒருநாள் ஆப்பிள் மரத்த்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஓர் ஆப்பிள் கனி மரத்தின் கிளையைவிட்டு அவர் மீது விழுந்தது. அதை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அவர் தியானத்தில் ஆழ்ந்தார். (தியானமாவது? தவமாவது? என்று கேட்க வேண்டாம். விஞ்ஞானிகளுக்கு ஆழ்ந்த சிந்தனையே தியானமும் தவமும். தன்னையே மறந்து சிந்தனைக்குள் மூழ்கித்தான் அறிவியலிலும் மெய்ப்பொருள் காண்கிறார்கள்.) அப்போது அவர் ஆப்பிள் எப்படி வீழ்ந்தது? என்று சிந்தித்தார். அதற்கான விடையாகப் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். மேலும், நிலா ஏன் கீழே விழவில்லை என்றும் சிந்தித்தார். அதன் மூலம் வேறொரு பெரிய கண்டுபிடிப்பையும் செய்தார். இங்கே அதனை விளக்க இடமில்லை. நமக்கு இப்போது ஆப்பிள்தான் முக்கியம்.

புவியின் ஈர்ப்பு பருப்பொருளான, அப்பூமியின் சாரத்தால் விளைந்த ஆப்பிளை ஈர்த்து கீழே விழவைத்தது. நியூட்டன் உண்மையாகவே ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருக்கவில்லை என்றொரு தரப்புவுண்டு. ஆனால் ஆப்பிளின் வீழ்ச்சி பற்றி அவர் சொல்லியிருக்கிறார். இக்கூற்றுக்குப் பின்னால் அவருடைய கிறித்துவ ஆன்மிகப் பார்வை இருப்பதாக மறைஞானத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், நியூட்டன் தனது கணித அறிவைக்கொண்டு பைபிளைத் துருவி ஆராய்ந்தவர். பைபிளின் பல வசனங்களையும் புதிரவிழ்த்து உட்பொருள் காண முயன்றவர். அவர் ஓர் ஆன்மிகவாதியும்கூட. ஆப்பிள் பூமியில் விழுந்தது என்பது ஆதம் – ஏவாளின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. பொதுவாக, fall of Adam என்றுதான் சொல்வார்கள். நியூட்டனின் வாசகம் அதை “fall of Eve” என்றாக்குகிறது. எனில், அந்த ஆப்பிள் ஏவாள்தான்! ஏவாளின் செல்லப்பெயர் ஆப்பிள்! அதாவது, ஆப்பிள் என்பது ஏவாளுக்கான, பெண்ணுக்கான குறியீடு.




















Detail from Birth of Venus by Alessandro Botticelli.
 
ஆப்பிளை நிற்கவைத்து (பழத்தைதான் சொல்கிறேன்) பூமத்திய ரேகை போல பாதியாக வெட்டினால் அதனுள் விதைகளின் அமைப்பு ஐமுனை நட்சத்திரம் (five-pointed star) போலக் காணும். ஐமுனை நட்சத்திரம் என்பது விடிவெள்ளியான வீனஸ் கிரகத்தைக் குறிக்கும். ரோமானியத் தொன்மவியலில் வீனஸ் என்பது காதல், காமம், அழகு மற்றும் வளமை ஆகியவற்றின் குறியீடு. கிரேக்கத் தொன்மவியலில் காதலை (அல்லது காமத்தை)யும் இச்சையையும் குறிக்கும் தொமம் “Eros”. இச்சொல்லின் anagram (அதாவது, எழுத்து முறை மாறியமையும் சொல்) Rose (ரோஜாப்பூ). சிவப்பு ரோஜா உலகெங்கும் காதலின் குறியீடு என்றாகிவிட்டது. ரோஜாப்பூ தொன்மவியலின்படி யோனியின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. (தமிழில் ‘பூப்படைதல்’ என்னும் சொல்லாடல் உள்ளதை ஓர்க). இப்படியாக ஒன்றைத் தொட்டு ஒன்று பின்னிப் பிணைந்ததொரு குறியீட்டியல் இதனைச் சுற்றி உருவாகியுள்ளது (இச்செய்திகளை டான் ப்ரௌன் எழுதிய ”டாவின்சி கோட்” நாவலில் முதன் முதலில் அறிந்தேன்).



ஆதமின் வீழ்ச்சிக்கு ஏவாளே காரணம் என்பது பைபிள் குர்ஆன் இரண்டின்படியும் தேற்றமாகிறது. பெண்ணால் மண்ணுக்கு வந்தவன் பெண்ணைக் கொண்டே மீண்டும் விண்ணுக்கு உயர முனைகிறான். இழந்த சொர்க்கத்தை மீண்டும் அடைந்துவிட வேண்டும் என்னும் தவிப்பு ஆண் பெண் இருவரிலும் இருக்கிறது. காமத்தில் சொர்க்க இன்பத்தின் சாயை இருக்கிறது. எனவே, கலவியென்பது விண்ணுயர்தலின் பாவனையாகிறது. 















Le-Ravissement-De-Psyche-The-Rapture-Of-Psyche (detail)
 
விண்ணுக்கு உயர வேண்டும் எனில் அதற்கு அடையாளமாக மனிதன் அன்றாடம் காண்பது பறவைகளைத்தான். வானவர்களுக்குச் சிறகுகள் இருப்பதை வேதங்கள் மனிதனுக்குச் சொல்கின்றன. பறவைகளிடம் காதலிருக்கிறது. அவை ஆகாயத்தில் ஜோடியாகப் பறந்தபடிக் கொஞ்சி விளையாடுகின்றன. இரு பறவைகள் ஒரே பறவையின் இணைச்சிறகுகள் போல் வளைந்து அலையாடியபடிக் காற்றில் விளையாடிச் செல்வதை மனிதன் காண்கிறான். ”விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே!” (பாரதியார்) என்னும் குரல் அவனின் அகத்தில் ஒலித்தபடி இருக்கிறது. விலங்குகளிடம் சிறகுகள் இல்லை; ஆனால் காமம் உண்டு. அவற்றின் காமம் மண்ணில் பிணைந்து கிடக்கிறது. வானவர்களிடம் (தேவர்களிடம்) ஒளியும் சிறகுகளும் இருக்கின்றன; ஆனால் காமம் இல்லை. பறவைகளிடம் காமும் சிறகுகளும் இருக்கின்றன. எனவே, ஒருவகையில் பறவைகள் விலங்குகளின் இனத்தில் கட்டுப்பட்டவை அல்ல. அறிவின் விழிப்புள்ள எந்த மனிதனும் தனது காமம் விலங்குகளின் நிலைக்கு இழிந்து மண்ணில் தளைப்படுவதை விரும்பமாட்டான். மண்ணின் தளையறுத்து எவ்விச் சிறகடித்து விண்ணில் மேலெழுந்து மீண்டும் சொர்க்கத்தை அடைய அவன் ஏங்குகிறான். அவன் வானவர்களின் சிறகுகளையும் ஒளிமையயும் தேர்கிறான். (வானவர்களைப் போல் ஆகிவிட வேண்டும் என்னும் ஆசை சொர்க்கத்திலேயே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தது. விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வைக்க அவர்களுக்கு ஆசையூட்டும் சாத்தான் அக்கனி அவர்களுக்கு அந்தப் பயனை நல்கும் என்று அதையே சொல்கிறான். மேலும் நீங்கள் நிரந்தரமாக சொர்க்கத்தில் தங்கிவிடுவீர்கள் என்றும் சொல்கிறான். இது குர்ஆனில் உள்ள செய்தி. அதன்படி நோக்க, விலக்கப்பட்ட கனியைப் புசிக்காமல் இருந்திருந்தாலே ஆதமும் ஏவாளும் சொர்க்கத்தில் நிரந்தரமாக இருந்திருப்பார்கள் என்றாகிறது. எனவே, விலக்கப்பட்ட கனிதான் அவர்களின் காமத்தைத் தற்காலிகம் ஆகிவிட்டது! கலவியாடல் நீடித்திருக்க வேண்டும் என்று மனிதன் ஏங்குவதன் பின்னணி இதுவே.)

அவனது அக ஏக்கங்களுக்குத் தீர்வு நல்கும் பொருட்களைப் பருவுலகிலேயே உருவாக்க அவனது கூர்மதி முனைகிறது. அது படுக்கை உருவாக்கத்திலும் சயன அறை சார்ந்த இதரப் பொருட்களிலும் பிரதிபலிக்கிறது. உடலுறவில் ஆன்மா அந்த மேலுலகுக்குப் பறந்துவிடத் துடிக்கிறது, உடலுடனேயே! அந்த உணர்வை அது அடைய வேண்டும் எனில் உடலின் எடை, சுமை இல்லாத பாவனையை அது பெற்றாக வேண்டும். அதற்குத் துணையும் தூண்டுதலும் தரும் புறக்காரணிகளை மனிதன் உண்டாக்கிக் கொண்டே வருகிறான். (சுற்றுலாத் தலங்களான மலைகளில், உயரமான மரங்களின் உச்சியில் குடில்கள் கட்டிவைத்திருக்கின்றன. அதில் தம்பதிகளாகத் தங்கிக் களிக்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள உளவியலும் இதுவே. அக்குடில்கள் பெரிய அளவிலான கூடுகள்தான்! காதற் பறவைகளாக மாறிவிட்ட பாவனையை அவை எளிதில் சித்திக்க வைக்கின்றன. மண்ணை உதறி விண்ணில் எழுந்துவிட்ட விடுதலையுணர்வை நல்குகின்றன.)

படுக்கையை மட்டும் கவனியுங்கள். தரையிற் படுத்தல் என்பது மண்ணுடன் நம்மைத் தளைப்படுத்துவதன் குறியீடாகிறது. கட்டில் அவனைச் சற்றே மேலுயர்த்துகிறது. இரண்டடி உயர விடுதலை! மெத்தை சற்றே எடையிழத்தலை பாவிக்க வைக்கிறது. அகத்தில் அதன் பொருள் சிறகு விரித்தல் என்றாகிறது. 

















பருமையின் முந்நிலைகளை கவனிக்கவும். மண் என்பது திடம் (solid). அதனினும் சற்றே சூக்குமமானது திரவம் (liquid). அதில் கிடைப்பது மிதத்தல் நிலை. மிதக்கும் பொருள் எடையிழக்கும். வாட்டர்பெட் (நீர்ப்படுக்கை) அத்தகு அனுபவத்தைத் தருகிறது. திரவத்தினும் சூக்குமமானது வளி (காற்று). அதில் கிடைப்பது பறத்தல் நிலை. மிதத்தலினும் மேலும் எடையை இழக்கும் நிலை. (”Angels could fly because they are light!” என்று இருபொருட்பட அழகாகச் சொல்கிறார் கேரி ஃபெல்லர்ஸ்) ஸ்விங்ஸ் (ஊஞ்சல்கள்) பறத்தலின் பாவனையைத் தருகின்றன. (“கட்டிலினும் கூடிக் களிகூர்ந்து கொண்டிருப்போம் / தொட்டிலினும் ஆடிச் சுகிப்போம் மனோண்மணியே!” – குணங்குடி மஸ்தான் சாகிப்(ரஹ்)) இன்னும் வரும், பறப்பது போல், புவியீர்ப்பு விசையே இல்லாத ஜீரோ கிராவிட்டி சூழலில் உறவாடல் நிகழ்த்தவியலுமா என்னும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்துவருகிறார்கள். இரண்டு பருப்பொருட்களுக்கு இடையில் ஜீரோ கிராவிட்டி சாத்தியமே இல்லை என்றும், நுண்ணளவு ஈர்ப்புவிசை (மைக்ரோ கிராவிட்டி) இருக்கும் என்றும், வளி தாண்டிய வெளியில் (ஸ்பேஸ்) கலவினால் என்னென்ன சாதக பாதகங்கள் ஏற்படும் என்றும் சீரியஸ்லி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். “We choose to bone on the moon, not because we are easy, but because we are hard” – Chuck Sonnenburg, SF Debris).

இதெல்லாம் எல்லோரிடமும் பிரக்ஞையாக இருக்கிறதா? என்றால் இல்லை. ஆனால், கூட்டு நினைவிலியில் இந்த ஆழுணர்வுகள் நிச்சயம் உள்ளன. இல்லை எனில், சொல்லி வைத்தாற்போல் ஒரே காலத்தில் உலகெங்கிலும் ஒரே விதமான விருப்பங்கள் எப்படி வெளிப்படுகின்றன? எப்படி ட்ரெண்டிங் ஆகின்றன?  

 உடலுடன் மேலுயர்தல் என்பதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. அது ஏசுநாதரின் உயிர்த்தெழுதலுடன், விண்ணுக்கு உயர்தலுடன் உங்களை இனம் காணச் செய்கிறது! ஏசுநாதர் உடலுடனேதான் விண்ணுக்கு உயர்த்தப்பட்டார். அவர் மட்டுமல்ல, நபி இத்ரீஸ் (எனோக், ஹெர்மிஸ் ட்ரைமெஜிஸ்டஸ்) அவர்களும் உடலுடன் உயர்த்தப்பட்டதோடு, சொர்க்கத்திற்குள்ளும் நுழைந்து அங்கேயே தங்கிவிடார்கள் என்று சமயப் பதிவுகள் கூறுகின்றன (நூல்: ஹயாத்துல் குலூப்). தாம்பத்ய உறவாடலை விண்ணுயர்தலுக்கான பாவனை என்று கண்டால் அது உயிர்த்தெழுதலும் ஆகிறது. ஃப்ரெஞ்சில் கலவியின் உச்ச இன்பத்தைக் குறிக்க “La petite mort(e)” (லா பெட்டீட் மோர்(ட்)) என்றொரு சொலவடையுண்டு. “சிறிய மரணம்” என்பது அதன் அர்த்தம். கலவியின் உச்சத்தில் எண்ணங்களற்ற பிரக்ஞை நிலை உண்டாவதை அது அப்படி சுட்டுகிறது. அதை ஆணவம் (ego) அழிந்துபோவதாகவும் காண்கிறார்கள். மனிதனில் ஆணவம் அழிகையில்தான் அவனது ஆன்மா உண்மையில் உயிர்த்தெழுகிறது. எனவே கலவியென்பது ஒரே சமயத்தில் சிறிய மரணமாகவும் சிறிய உயிர்த்தெழுதலாகவும் இருக்கிறது எனலாம். ஆணும் பெண்ணும் ”சிலுவை”யின் கைகள் என்று அர்த்தப்படுத்துவதுண்டு.
  
 அகத்தின் ஏக்கங்களுக்கான தீர்வுகளைப் புறப்பொருட்களில் அடைந்துவிட முனையும் தீவிரமே நாகரீகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான விசையாக இருக்கிறது. எனினும், அகத்தில் எழுச்சி கொள்ளாமல் புற வசதிகள் பயனைத் தராது. ஏமாற்றமும் சலிப்புமே மிஞ்சும். எனவேதான் கிழக்கின் ஆன்மிகம் அகவெழுச்சியில் தனது சிந்தனையைக் குவித்தது. மேற்கும் கிழக்கும் ஒன்றிலொன்று ஊடுறுவிக் கலக்கும் காலம் இது. இந்த ஊடுறுவல் (intersection) விரைவில் ஒரே வட்டமாகிவிடும். அப்போது அகத்திலும் புறத்திலும் ஒருசேர எழுவோம். அகத்தால் உயர்வோம்! ஆப்பிளுடன் உயர்வோம்!!

Friday, November 23, 2018

ஆப்பிளுடன் உயர்தல் - 1



                       
                















”மெத்தை அருளல் வேண்டும்” என்னும் கட்டுரையில் பெப்ஸ் மெத்தை வாங்குவதற்காகத் தனக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று சாரு நிவேதிதா எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அதனைச் சுற்றியே சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. 

சாருவின் இந்த வரிகளைக் கவனியுங்கள்: “என்னுடைய இப்போதைய பிரார்த்தனையை மட்டும் சொல்லி விடுகிறேன். நீ கேட்பியா மாட்டியா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. இப்போது எனக்கு அர்ஜெண்ட்டாக ஒரு மெத்தை தேவை. ப்பூ. இவ்வளவுதானா என்று கேட்காதீரும். இதில் என் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்கிறது”.

’என்னது, ஒருவனுடைய வாழ்க்கை வரலாறு மெத்தையில் அடங்கியிருக்கிறதா?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? இயற்கை அமைப்பில், ஒரு நாளில் பாதி பகல், பாதி இரவு. நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படிப் பார்த்தாலே அது மூன்றில் ஒரு பங்கு. அறுபது வயதாகும் ஓர் ஆள் இருபது ஆண்டுகள் தூக்கத்திலேயே கழித்திருக்கிறான் என்று பொருள். அதாவது, இருபது ஆண்டுகள் கட்டிலில் அல்லது மெத்தையில். வேறு எந்த அறைக்கலனும் இவ்வளவு உறவாடியிருக்க முடியாது. இருபது ஆண்டுகள் நீங்கள் சோஃபாவில் அல்லது நாற்காலியில் அமரப் போவதில்லை. இத்தனைக்கும் நிற்பதை விடவும் படுப்பதை விடவும் நாம் அமர்ந்திருப்பதுதான் அதிகம். எனினும் தொடர்ந்து எட்டு மணிநேரம் ஒரே இடத்தில் யாராவது அமர்ந்திருக்கிறீர்களா? (ஐயா புத்தரே! இதில் தலையிடாதீர்கள். லௌகீகவாதிகள் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையின் மேட்டரும் அப்ப்டித்தான் டெவலப் ஆகப் போகிறது. நீங்கள் யசோதாவை அம்போ என்று விட்டுவிட்டுப் போகாமல் இருந்திருந்தால் உங்களுக்கும் சொல்லலாம். நீங்கள்தான் துறவி ஆகிவிட்டீரே? இருபத்துநான்கு மணிநேரமும் நீர் அமர்ந்திருக்கலாம்.  கண்களை மூடி தியானத்தைத் தொடரும் ஐயா).

அதுமட்டுமல்ல, அடியேனுக்குக் கட்டில் மெத்தையுடன் மேலும் சிறப்பான தொடர்புகள் உண்டு. இந்தக் கட்டுரையைக் கூட கட்டிலில் அமர்ந்தபடி ஒரு தலையணை மீது மடிக்கணினியை வைத்துக் கொண்டுதான் டைப்புகிறேன். புத்தகம் படிப்பதாக இருந்தாலும் கட்டிலில் அமர்ந்தபடி ஒரு தலையணையை சுவரில் சாய்த்து அதன்மீது சாய்ந்தமர்ந்து படிப்பதுதான் சொகுசாக இருக்கிறது, ஈடுபாட்டுடன் வாசிக்கவும் முடிகிறது. இப்படி பகலிலும்கூட, வீட்டிலிருந்தால், நான் பெரும்பாலும் ஜீவிப்பது கட்டிலில்தான். தியானம் செய்வதும் கட்டிலில் அமர்ந்தேதான்! ஆக, ஒரு நாளில் மூன்றில் இரண்டு பங்கு என் வாழ்வு நிகழ்வது மெத்தையில்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. (இது எல்லோருக்கும் பொருந்தி வரும் என்று நான் சொல்லவில்லை. என் டிசைன் அப்படி. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். எனக்கு மெத்தை போல அவருக்கு கார். அல்லும் பகலும் ஆண்டு முழுவதும் அவருக்குக் கார் காலம்தான்! கார் எனில் மகிழுந்து).

 இப்போது சொல்லுங்கள், மெத்தையில் ஒருவனின் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்க இயலாதா? பல காலம் வெறுந் தரையில் படுத்துறங்கி, பின்னர் கொஞ்சம் வாழ்வில் முன்னகர்ந்து கோரைப் பாய் வாய்த்து அதில் பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, பின்னர் சற்றே வசதி அடைந்து இலவம் பஞ்சு மெத்தைக்கு மாறிய ஒருவனின் வாழ்க்கை வரலாற்றை தரை - பாய் – மெத்தை என்னும் கோட்டில் வரைந்து காட்டலாம் அல்லவா? (சிலரது வாழ்க்கையை குடிசை – ஓட்டு வீடு – மச்சு வீடு – தனிப்பெரும் வீடு – வீடுபேறு என்று வரையலாம் போல. அல்லது, சைக்கிள் – மொப்பெட் – ஸ்கூட்டர் – பைக் – மகிழுந்து – ஆம்புலன்ஸ் என்று.)

’மெத்தை அருளல் வேண்டும்’ என்னும் கட்டுரையை வலைப்பூ, முகநூல் மற்றும் வாட்ஸப் ஆகியவற்றில் பதிவேற்றியிருந்தேன். தனது ஆன்மிகக் குழுவில் அதைப் படித்துவிட்டு நாகூர் ரூமி உடனே பின்னூட்டம் போட்டிருந்தார், “அவர் மெத்தை கேட்பதற்கான காரணம்தான் கவனிக்கப்பட வேண்டியது” என்று. அதைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்வதாகத் தெரிவித்திருந்தேன்.

சாரு மென்மையான மெத்தை வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியது தூங்குவதற்காக மட்டுமன்று. (மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல என்று சினிமா கதாநாயகர்கள் புலம்பிப் பாடுவதைப் பார்த்திருக்கிறோம். போ, போய் தூக்க மாத்திரையை வாங்கு! என்றுதான் அவனது வாழ்க்கை, பொருளாதார வெற்றியே இலக்கணம் என்று வகுத்துக்கொண்ட வாழ்க்கை, அவனைத் துரத்துகிறது). ஆக, தூக்கத்திற்காக அல்ல. அதுதான் கட்டாந்தரையானாலும் குறட்டை விடும் பிணம் போல் தூங்கலாமே? என்ன குறை? அவர் மெத்தை கேட்பது நிம்மதியான தாம்பத்யத்திற்காக. அதுதான் சிந்திக்க வேண்டிய புள்ளி. உளவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்தால் அதிலிருந்து நிறையவே அறியக் கிடைக்கிறது.
























ஆபிரகாம் மாஸ்லோ என்றொரு ருஷ்ய உளவியலாளர் (உளவாளி அல்ல. உளவியலாளர், சைக்காலஜிஸ்ட். உஃப்ஃப்.. ருஷ்ய என்று அடைமொழி கொடுத்தாலே இப்படியொரு பிரச்சனையா?) மனிதனின் தேவைகளை ஒரு முக்கோணமாகச் சித்தரித்தார். Hierarchy of needs என்று அதற்குப் பெயர். அதன் கீழடுக்கில் உடல் சார்ந்த தேவைகள் என்று குறித்தார். உண்மைதானே. இப்பருவுலகில் நல்ல வண்ணம் வாழ உடல்தானே ஆதாரம். இல்லறம், துறவறம் இரண்டுமே உடல் நலம் இன்றி அமையாது. உடலின் தேவை என்னும்போது அதில் பாலியல் தேவை என்பதும் ஒன்று. அது உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானதும்கூட. (’எல்லா உயிர்க்கும் இன்பம்’ என்று அதனைச் சொல்கிறார் தொல்காப்பியர். “அனைத்தையும் ஜோடியாகப் படைத்த இறைவனுக்கே மகத்துவம்” (36:36) என்கிறது குர்ஆன்).

”எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்று சிஜாவி நகேசன் போல பாடிக்கொண்டிருந்தால் வாழ்வே தலைகீழாகிவிடும். அதை சிவாஜி கணேசன் என்று நேராகத் திருப்ப வேண்டுமானால் நிம்மதி இருக்கும் இடம் எது என்பதை அறிந்திருக்க வேண்டும். ”நீங்கள் அவளிலிருந்து நிம்மதி அடையும் பொருட்டு உங்களிலிருந்தே உங்களுக்கு ஜோடிகளைப் படைத்ததும் உங்களிடையே அன்பையும் அருளையும் ஆக்கியிருப்பதும் இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்றாகும்” (30:21) என்கிறது குர்ஆன். இவ்வசனத்தில் ’லிதஸ்குனூ’ என்னும் சொல் இடம்பெறுகிறது. ’சுகூன்’ என்றால் நிம்மதி என்று பொருள். அவ்வடிப்படையில் ’லிதஸ்குனூ’ என்பதை நிம்மதி அடைவதற்காக என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சுகூன் என்றால் நிறுத்தம் அல்லது தங்குதல் என்றும் பொருளுண்டு. மஸ்கன் என்றால் தங்குமிடம். அவ்வடிப்படையில் ’லிதஸ்குனூ’ என்பது ’தங்கும் பொருட்டு’ என்று அர்த்தம் பெறும். ’லிதஸ்குனூ இலைஹா’ என்பதை ’(அவளுடன்) சேர்ந்து வாழ்தல்’ என்பதாக அப்துல் ஹமீது பாக்கவி மொழிபெயர்த்திருக்கிறார். முஹம்மது ஜான் அவர்கள், “நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்கு…” என்று மொழி பெயர்த்திருக்கிறார். ‘அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக” என்கிறது ஐஎஃப்டி மொழியாக்கம். நிம்மதி மற்றும் தங்குதல் ஆகிய இரண்டு அர்த்தங்களையும் “தஸ்குனூ” என்னும் சொல் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இறைவன் ஒரு விஷயத்தை எவ்வளவு நுட்பமாகச் சொல்கிறான் என்பதற்கு இச்சொல்லொரு சான்று. இரண்டு அர்த்தங்களையும் இணைத்தால் “அவளிடம் தங்கி நிம்மதி பெறுவதற்கு” என்று புரிந்துகொள்ளலாம். இது தாம்பத்யத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். சேர்ந்து வாழ்தல் என்று அப்துல் ஹமீது பாக்கவி சொன்னதிலும் அந்த அர்த்தப்பாடு மறைந்திருக்கிறது. எவ்வாறெனில், இல்லம் என்பது இல்லாளையும் குறிக்கும். தாம்பத்ய உறவை “வீடு கூடுதல்” என்று சொல்வதுண்டு. இச்சொலவடையில் வீடு என்பது மனைவியைக் குறிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அதை வீடு என்றே நேர்ப்பட விளங்கிக்கொண்டு “வாடகை வீட்டில் கூடுவது கூடுமா?” என்று யாரும் மார்க்க ஃபத்வா கேட்டதாக வரலாறில்லை.























தாம்பத்யம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் நிம்மதி நல்குகிறது என்பதை இங்கே கண்டோம். இதில், இன்பம் அல்லது சுகம் என்று பொருட்படும் சொற்களை இறைவன் பயன்படுத்தவில்லை. மாறாக நிம்மதி என்னும் சொல்லினைப் பயன்படுத்துகிறான். அதிலும் நுட்பமான அறிவுள்ளது. இன்பத்திலிருந்து நிம்மதி விளைய வேண்டும் எனில் துய்க்கப்படும் இன்பம் நேர்மையானதாக இருக்க வேண்டும். தகா வழியில் துய்க்கப்படுகையில் அப்போதைக்கு அதில் இன்பம் இருக்கலாம். ஆனால் நிம்மதிக்குப் பதிலாக சஞ்சலமும் குழப்பமுமே உண்டாகும். நேர்மையான ஆகுமான முறையில் துய்க்கப்படும் இன்பத்திலிருந்து நிம்மதியை உருவாக்குவது எது? அதைத்தான், தம்பதிகளுக்கு இடையில் “அன்பையும் அருளையும்” (மவதத்தன்வ்வ ரஹ்மா) ஆக்கியிருப்பதாக இறைவன் சுட்டுகிறான். வெறும் காமத்தால் இன்பம் நிம்மதியாக முடியாது. அதனால்தான் திருவள்ளுவர் மிகவும் தீர்க்கமாகவே சொல்கிறார்: “மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படுவார்”. சிலர் என்று அவர் சொல்லியிருப்பதைக் கவனிக்கவும்.

ஒரு கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நிறைவேறக்கூடிய தேவை என்பது தாம்பத்யம்தான். (உணவு, உடை ஆகிய இதர தேவைகள் பிறராலும் நிறைவேறல் தகும்). அதற்கான களமாக, இடமாக, கருவியாக இருப்பது நாம் எதில் உறங்குகிறோம் என்பதுதான். பாய், ஜமுக்காளம், கட்டில், கட்டில்+மெத்தை என்பன. (உணவுக்குக் கருவி அடுப்பு என்பதுபோல்). கருவிகள் எந்த அளவு வசதிகளை வழங்குகிறதோ அந்த அளவே வாழ்வியலில் இலகுவும் நிம்மதியும் என்பதை யாரும் மறுக்கவியலாது. குடிசைக்குள்ளும் இன்று கேஸ் ஸ்டவ் இருக்கிறது. நடுத்தர வர்க்க வீடுகளில் சிம்னி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகளுடன் மாடுலர் கிச்சன் வந்துவிட்டது (மாடுப்பொண்ணுக்கு மாடுலர் கிச்சன் வைத்துத் தரவேண்டியது நியாயம்தான்!) டிவி எனில் கல்லிப்பெட்டி மாதிரியான மாடல்களை இன்று யார் விரும்புகிறார்? டிஜிட்டல் தொழில்நுட்ப ஒல்லிப்பெட்டிகள் வேண்டும் என்றே விரும்புகிறோம். அதில் படம், ஹெஜ்டி என்றும் ப்ளூரே என்றும் துல்லியம் காட்டவேண்டுமென்று விரும்புகிறோம். இப்படி, ஒவ்வொரு புலனுக்குரிய வசதிகளும் மேலும் மேலும் மெருகடைந்து வருகின்றன. தாம்பத்யமோ எனில், ஐம்புலனும் இடம்பெறும் ஒரு விஷயமாகிறது. (கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள – திருக்குறள்). அதற்கிடமான கட்டிலும் மெத்தையும் நியாண்ட்ரதல் மனிதன் காலத்திலேயே நின்றுகொண்டிருக்குமா?

இத்துடன் பேசப்பட வேண்டிய இன்னொரு விஷயம், தனியறை மற்றும் குடித்தனம் பற்றியது. தமக்கேயான அவகாசங்களைத் தேடும் இளம் தம்பதிகள் இன்று தனிக்குடித்தனம் தேடுகிறார்கள். எனவே, கூட்டுக்குடும்ப அமைப்பு மெல்ல மெல்ல இந்தியாவில் காணாமலாகி வருகிறது. இது பற்றி வருத்தப்படுபவர்களுண்டு. குறிப்பாக முதியோர்கள். ஏனெனில், இதன் ஒரு தீய விளைவாகத்தான் முதியோர் இல்லஙள் முளைக்கின்றன என்பதையும் யோசிக்க வேண்டும். அருகருகே வீடுகளிருக்குமாறு அமைந்த நிலையில் தனிக்குடித்தனங்களாக இருந்தால் இந்தத் தொல்லை இராது என்று எண்ணுகிறேன். நபிகள் நாயகத்தின் வாழ்வியற் பதிவுகளைப் படிக்கும்போது அப்படியான வீட்டமைப்புக்கள் இருந்ததைப் பார்க்க முடிகிறது. ஹழ்றத் அலீக்குத் தனது மகள் ஃபாத்திமாவைத் திருமணம் செய்து வைத்துத் தனிக்குடித்தனமும் அமர்த்திவிட்டார்கள். ஆனால் நடந்து சென்று காணும் தொலைவில்தான் அவ்வீடு இருந்தது. இன்னொரு ஹதீஸ். நபிகள் நாயகத்திடம் இளைஞர் ஒருவர் வந்து தான் திருமணம் செய்து கொண்ட சேதியைச் சொன்னார். “கன்னிப் பெண்ணா? விதவையா?” என்று கேட்டார்கள். “விதவை” என்றார். ஆனால் அவரோ வாலிபராக இருந்தார். “கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கலாமே? அவளுடன் நீ விளையாடவும் உன்னுடன் அவள் விளையாடவும் தோதாக இருந்திருக்குமே?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள். இளமையின் உரிமை என்று காதல் விளையாட்டுக்களை இறைத்தூதர் பார்க்கிறார்கள் எனப்தும் கருணையின் வெளிப்பாடு அல்லவா? அன்னனம், இளம் ஜோடியர் விளையாடுதற்குத் தனிக்குடித்தனமே சாலச் சிறந்தது.

தனிக்குடித்தனத்தில் கிடைக்கும் விளையாட்டு அவகாசங்கள், வாய்ப்புக்கள் கூட்டுக் குடும்பத்தில் இருக்காது. அதிலே, குடும்பத்தை வளர்த்தெடுப்பதற்காகத் தமது தனிச்சுகங்களை தியாகம் செய்வதற்கான கோரிக்கை இருக்கிறது. அதற்கான ஒரு காலக்கட்டம் இந்தியாவில் பரவலாக இருந்தது. அப்போது இயல்பாகவே இளம் தம்பதியரின் மனநிலை அந்தத் தியாகத்தை முன்னிறுத்தித் தமது இளமை விளையாட்டுக்களைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டது (பாரதிதாசனின் “குடும்ப விளக்கு” நினைவு வருகிறது. நாட்டுக்கு முதலில் சேவை செய்துவிட்டுப் பிறகு நாம் இன்பம் காண்போம் என்று முதலிரவு அறையில் அவன் அவளிடம் அறிவுரை பகர்கிறான்!). அப்படி தார்மீகவுணர்வுடன் தியாகத்திற்குத் தயாராகதோரில், நிர்ப்பந்த சூழலாகக் கூட்டுக் குடும்பத்தில் தமது திருமண வாழ்வைக் கழித்தோரில் அந்த ஆற்றாமை என்னென்ன வடிவங்கள் எடுத்து வெளிப்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. பொறாமை, கழிவிரக்கம், நுட்பமான பழிவாங்கல்கள், சொத்துரிமைச் சண்டைகள் என்று பல விகாசங்கள். இன்றைக்கு இந்தியச் சமூக அமைப்பின் நிலை வேறு. புறவசதிகளின் பெருக்கம் நமது அக அமைப்பையும் மாற்றியிருக்கிறது. (அகத்தின் அடிப்படைகளை அல்ல; நுகர்பொருள் சார்ந்த மேலமைப்பை மட்டும். அடிப்படையே மாறும் எனில் மனிதன் மனிதனாயிருக்க மாட்டான்).
















இளம் தம்பதிகளுக்கான தனிக்குடித்தனம். அவர்களுக்கான தனியறை. அதில் வைக்கப்பட வேண்டியது வசதியான கட்டில் என்பதே நாகரிகத்தின் வளர்ச்சி நமக்கு வரையறுத்திருக்கும் நியதி. அதில் தம்பதியர் காணும் இன்பமும் நிம்மதியும் அவர்களின் வாழ்வைச் செம்மை செய்யும் என்று நம்புகிறோம். பெண்ணுக்குத் தரும் சீர்வரிசையிலேயே இன்றைய தினத்தின் சிறந்த வசதியான அமைப்பில் கட்டிலும் மெத்தையும் நல்க முனைகிறோம். நம் பொருளாதாரத்திற்கு எட்டிய வகையில் கொடுக்கிறோம். புதுமணத் தம்பதியரின் வாழ்க்கை நன்றாக இருக்கிறதா? என்னும் கேள்வியின் அடித்தளம் தாம்பத்யமாக இருக்கிறது.
இந்தப் புற வசதிகளெல்லாம் இருந்தால்தான், அதாவது அந்தப்புறம் வசதியாக இருந்தால்தான் நிம்மதி கிடைக்குமா? ஏழையாக வாழ்பவர்கள் இல்லற இன்பமும் நிம்மதியும் அடைய முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்றுதான் திருக்குறளும் சொல்கிறது. அன்பும் அறனும் இருந்தால், திருக்குர்ஆன் சொல்வது போல் அன்பும் அருளும் இருந்தால், ஓலைக்குடிசையில் பிய்ந்த பாயிலும் தாம்பத்யம் சிறப்புறும் என்பது என்னவோ உண்மைதான். “ஒன்றின் கூறாடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்பது சரிதான். எனினும், பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை மறுத்துவிட முடியாது. நாம் உடல்களாலும்தான் வாழ்கிறோம். அது பருவுலகின் பாற்பட்டது. எனவே, அகத்தில் அன்புடன் புற வசதிகளும் இணையும் போது அதிலொரு முழுமை இருக்கிறது. வசதிகளிருந்தும் அன்பிலார் வாழ்வு பெருங்கொடுமை. வசதிகள் அற்றும் அன்புடையார் வாழ்வு சிறிதினிமை. வசதிகளும் அன்பும் ஒருசேர வாய்த்த வாழ்வு நனி இனிது.

 (to be continued...)

Thursday, November 22, 2018

மெத்தை அருளல் வேண்டும்



                சூஃபித்துவத்தில் ‘முனாஜாத்’ என்றொரு பயிற்சி உண்டு. இறைவனுடன் உரையாடுதல் என்பது இதன் பொருள். எப்போதும் இறைவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே அந்தப் பயிற்சி.

      இறைவனுடன் நாம் ஏன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்? ஏனெனில், இறைவன் மட்டுமே நம்மோடு எப்போதும் எங்கேயும் இருக்கிறான். நமது தேவைகள் அனைத்தையும் அவனே நிறைவேற்றுகிறான். “செருப்பின் வார் அறுந்து போனாலும் இறைவனிடமே கேளுங்கள்; உப்பு தேவை என்றாலும் இறைவனிடமே கேளுங்கள்” என்று நபிகள் நாயகம் சொன்னது அதனால்தான்.

      இறைவனுடன் பேசுவது என்பது எல்லாச் சமயங்களிலும் உள்ளதுதான். பக்திப் பாடல்கள் என்று நாம் காணும் பனுவல்களில் எல்லாம் இறைவனை முன்னிறுத்தி உரையாடியிருக்கிறார்கள் என்பதையே காண்கிறோம். அது அவரவர் சமயத்தின் வடிவத்திற்கேற்ப வெளிப்பட்டுள்ளது.

      ’பால் தேன் பருப்பு இவையெல்லாம் உனக்கு நான் தருகிறேன். எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்கிறார் ஔவையார். அதிலே ஒரு தோழமையின் உரிமை தொனிக்கிறது.

      ’ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைக் கரவேல்!’ என்று ஆண்டாள் கேட்பதில் காதலின் நறுமணம் கமழ்கிறது.

      ’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடீ சிவசக்தி! எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்’ என்று பாரதி கோபமும் அழுகையும் ஒருசேரக் கேட்கிறான்.

      வள்ளலாரும் கடவுளுடன் பேசுகிறார். ஆனால், அது எஜமானிடம் அடிமை உரையாடுகின்ற பாணியில் இருக்கிறது. தனது உரையாடல்களை அவர் ‘விண்ணப்பம்’ என்று அழைக்கிறார். ம்ஹும், எனக்கு சுத்தப்பட்டு வராது. சூஃபித்துவம்  இறைவனைக் காதலியாக பாவிக்கிறது. காதலியிடம் விண்ணப்பமெல்லாம் விடுத்துக் கொண்டிருக்க முடியாது.


       













அமெரிக்காவின் நீல் டொனால்ட் வால்ஷ் எழுதிய புகழ் பெற்ற நூல் (நான்கு தொகுதிகள்) “Conversations with God” (கடவுளுடன் உரையாடல்கள்). அதன் முதற் தொகுதியின் முதற்பதிப்பு 1995-ல் வெளிவந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. வால்ஷ் உலகெங்கும் அறியப்பட்டார். ஆனால், வாழ்க்கையில் சோதனைகளால் புடம் போடப்பட்ட பின்னரே இதெல்லாம் நடந்தது.

ஒரு வானொலி அமைப்பாளராகவும் செய்தித்தாள் ஆசிரியராகவும் அவர் சராசரியான தன்னிறைவான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். தீ விபத்தொன்றில் அவரது உடைமைகள் எல்லாம் எரிந்து போயின, நடுத்தெருவுக்கு வந்தார், திருமண வாழ்க்கை முறிந்தது, கார் விபத்தில் கழுத்து ஒடிந்தது (சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ). ஓரிகான் மாநிலத்தின் ஆஷ்லாந்தின் ஊர்ப்புறத்தே ஒரு கூடாரம் அடித்துக்கொண்டு, குப்பைப் பொறுக்கி மறுசுழற்சி செய்து பணம் ஈட்டிப் பிழைத்தார். பாரதி பாடியதைப் போல், நல்லோதோர் வீணையாக இருந்து நலங்கெட்டுப் புழுதியில் வீசப்பட்டதாக உணர்ந்தார்.

ஒருநாள், கடவுளின் மீது காண்டாகித் தன் மனவுணர்வுகளை எல்லாம் ஒரு கடிதமாக எழுதினார். மனதில் பொங்கிக்கொண்டு வந்த ஏகப்பட்ட கேள்விகளை அதில் அவர் கோபமாகக் கேட்டிருந்தார். எழுதி முடித்த பிறகு அவரது தோளுக்கு அருகில் ஒரு குரல் கேட்டது, “என்னப்பா, நிஜமாகவே இந்தக் கேள்விக்கெல்லாம் உனக்கு பதில் வேண்டுமா? இல்லை, சும்மா பொறிஞ்சுத் தள்ளுறியா?”. யாரது என்று அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாருமே இல்லை. அதன் பின் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் மனதிலேயே விடைகள் பொங்கிக்கொண்டு வந்தன. தெளிவான உணர்வுமயமான அகப்பார்வைகள். அவற்றையும் எழுத்தில் பதிந்து வைக்கத் தொடங்கினார். அவையே நூலாக உருவாகி வெளிவந்து பல லட்சம் வாசகர்களை ஈர்த்தது.
      
 நீல் டொனால்ட் வால்ஷின் நூற்கள் இந்திய அத்வைத வேதாந்தத்தின் ஞானப் பார்வையை முன் வைக்கின்றன. சூஃபித்துவத்தின் ஏகத்துவ உள்ளமை என்னும் கோட்பாட்டிற்கு மிக நெருங்கி வருகின்றன. அந்தப் பார்வையிலிருந்தே படைப்புக்கள் அனைத்தின் மீதும் பாரபட்சம் அற்ற பேரன்பைத் தூண்டுகின்றன.

      ”எதிர்பார்ப்பு ஏதுமின்றியும், குறிப்பான பலன்களைத் தேடாமலும் உன் வாழ்க்கையை வாழ வேண்டும். அதுவே விடுதலை. அதுவே தெய்வீகத்தில் வாழ்தல்” என்று அவரது நூலில் ஓரிடத்தில் வருகிறது. ’கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் உரைப்பதேதான் இது.


       













இந்தச் சிந்தனைகளை எல்லாம் தூண்டிவிட்டது இரண்டு நாட்களுக்கு முன் இணையத்தில் நான் படித்ததொரு பதிவு. சாரு நிவேதிதா எழுதிய ‘Peps’ என்னும் குறுங்கட்டுரை. அதில் அவர் பெருமாளிடம் பேசுகிறார். ‘நல்லதோர் வீணை செய்தே...’ என்று பாரதி புலம்புகிறானே, அந்த வரிகளுக்கான விரிவுரை என்று இந்தப் பதிவைச் சொல்லலாம். ஒரு பக்தன் எவ்வளவு அன்யோன்யமாக இறைவனிடம் பேசுவான் என்பதற்கொரு உதாரணமாகவும் இதனைக் கூறலாம். எழுத்துநடை, அதாவது பேச்சு நடை, மிக சுவையாக, அக்கார அடிசில் போல் வந்திருக்கிறது. திருவிளையாடலில் தருமி புலம்புவதும் நினைவு வந்தது. எதிரே நிற்பது யாரென்றே தெரியாமல் தருமி புலம்புவான். ஆனால், தெரிந்தே புலம்புவதுதான் உண்மையான பக்தனின் நிலை போலும். புதுமைப்பித்தனின் சிறுகதையைப் படிப்பது போலவும் இருந்தது.

      ”யோவ் மிஸ்டர் பெருமாள்” என்னும் விளியுடன் தொடங்குகிறது அந்த உரையாடல். அடுத்து, நிறைவேறாமல் நிலுவையில் இருக்கும் பழைய பிரார்த்தனைகள் இரண்டை நினைவூட்டுகிறார். தென்னமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பது முதல் பிரார்த்தனை. இரண்டாம் பிரார்த்தனையை நீங்களே படியுங்கள்:

      ”காலையில் எழுந்தால் மொபைலில் I miss you da என்று மெஸேஜ் பார்க்கும்படியாக, ருக்மிணி தாயார் ஜாடையில் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வேண்டும் என்று மொபைல் ஃபோன் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து பிரார்த்தனை வைத்துக் கொண்டிருக்கிறேன். ம்ஹும், இன்று வரை கவனிப்பு இல்லை.”

      அடுத்து வருவது தமிழ் இலக்கிய, மற்றும் திரைப்படச் சூழலை நையாண்டி செய்யும் உரையாடல். தமிழ் எழுத்தாளர்கள் மூவரைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். மூன்றாவது ஆளின் பெயரைச் சுட்டவில்லை. நாமாகக் கண்டு பிடிக்க க்ளூ இருக்கிறது. (படிக்கும்போதே யாரென்று தெரிந்துவிடுகிறதுதான்). “ஜெயமோகன் மகாபாரதம் எழுதி பாரத ரத்னா விருது கிட்டத்தில் போய் விட்டார். எஸ்ரா அவரே ஒரு மஹாபாரதமாகி விட்டார். இப்படி இந்த இரண்டு பயபுள்ளைகளையும் புஷ்டியாகக் கவனித்த நீர் உம்மையே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும் அடியேனை ஒன்றுமே கவனிக்காமல்...” என்று தொடரும் அப்பத்தி ரஜினி, கமல், இளையராஜா ஆகியோரை றாவிக்கொண்டு செல்கிறது. அடுத்து அந்த பெயர் சுட்டப்படா எளுத்தாளர் பற்றி இப்படிச் சொல்கிறார்:

       ”சரி, இதை விடும். ஒரு ஆள் – உம் மீது நம்பிக்கை இல்லாதவர் – கொஞ்சம் இடது என்று வைத்துக்கொள்ளுமேன் – அவர் பாட்டுக்கு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அந்த மாதிரி தமிழ்நாட்டில் கொறஞ்சது அம்பதாயிரம் பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உமக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும். நீர் என்ன செய்தீர்? பொத்திக் கொண்டு இருக்க வேண்டியதுதானே? அவரை நீர் உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் வைத்தீர். நியூயார்க் டைம்ஸில் எழுதுகிறான் ஐயா அவரைப் பற்றி! என்ன, யாரா? நீர் என்ன தினந்தினமா இப்படிச் செய்கிறீர்? அதான் உம் பெயரிலேயே எழுதுகிறாரே ஒர்த்தர், அவர்தான். ம்? எதாவது லாஜிக் இருக்கா?”

      இதைப் படித்தபோது எனக்கு அல்லாமா இக்பாலின் ”ஷிக்வா வ ஜவாபே ஷிக்வா” என்னும் முறையீடும் மறுமொழியும் நினைவுக்கு வந்தது. மரபுக் கவிதையில் புதுமையான திருப்பமாக அது உருது மொழியில் வந்தபோதே சமூகத்தில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிற்று. சாருவின் இந்த ‘முறையீடு’ பின் நவீனத்துவ எழுத்துப் பாணியில் அமைந்திருக்கிறது. இதன் பின்னணியை அறியாவிட்டால் உங்களுக்கு இதுவும் அதிர்ச்சியாகவே இருக்கும்.

      அடுத்து, ஜனனம் – மரணம் – காமம் இவை பற்றி, ஜார்ஜ் பத்தாய் என்னும் ஃப்ரென்ச் இலக்கியத் தத்துவவாதியின் கோட்பாட்டைச் சுட்டியபடி, உரையாடல் நகர்ந்து செல்கிறது. ஆலயங்களில் முன்னெப்போதுமில்லாத கூட்டம் இப்போது இருப்பதான சமூக மாற்றத்தை விசாரிக்கும் சிந்தனைகளுடன் நகர்கிறது. கடைசியாக, காமத்தைப் பற்றிக் கடவுளிடம் பேசுகிறார். காமத்தையும் அவன்தானே படைத்தான்? அப்படியானால், அதைப்பற்றி மனம் திறந்து பேசவும் அவன்தானே சரியான ஆள்?

      கொஞ்ச காலமாக, சம்போகத்துக்குப் பின் உடல் நோவு பின்னி எடுக்கிறது என்றும், என்னதான் தன் வீட்டு மெத்தை இலவம் பஞ்சு அடைத்ததாக இருந்தாலும் முரட்டுத் தனமாக இருப்பதாகவும் சலித்துக்கொண்டு ஒரு கோரிக்கையை வைக்கிறார்: “சமீபத்தில்தான் ஒரு நண்பரின் இல்லத்தில் அந்த மெத்தையைப் பார்த்தேன். பெயர் Peps. விலை நாற்பது ஆயிரம்தான் (அதாவது சலுகை விலையில்!) மெத்தை என்றால் அது மெத்தை. ஏதோ வாட்டர் பெட்டில் படுப்பது போல் இருந்தது. உடனே நாற்பது ஆயிரம் கிடைக்கச் செய்யும்படி விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”

     இதையே வள்ளலார் போன்ற ஒருவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பாடியிருந்தால் “மெத்த சலித்தேன், மெத்தை அருளல் வேண்டும் ஐயனே!” என்று பாடியிருப்பார் எனத் தோன்றியது. சாருவின் இந்தப் பிரார்த்தனை பற்றி மேலும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவற்றைப் பிறகு சொல்கிறேன்.