1
மழை பெய்து கொண்டிருந்தது. நல்ல மழை.
தெருவில் சிறுவன் ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான். அவனைச் சுட்டிக்
காட்டி, ‘அந்தப் பையன் ஏன் இப்படி ஓடுகிறான்?’ என்று கேட்டார் சூஃபி.
’நனைந்துவிடக் கூடாது என்று ஓடுகிறான்’
‘நனைந்து விடக்கூடாது என்றுதான் ஓடுகிறான். ஆனால் நனைந்து கொண்டேதான்
ஓடுகிறான்’ என்று சொல்லிவிட்டு லேசாகப் புன்னகைத்தார் சூஃபி.
2
”சூஃபிகள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் உழைக்காத சோம்பேறிகளாக
இருந்திருக்கிறார்கள் அல்லவா? ’இஸ்லாத்தில் துறவு இல்லை’ என்று நபி (ஸல்) கூறியிருக்க
இவர்கள் நாடோடித் துறவிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள் அல்லவா?”
இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு சூஃபி இதற்கு என்ன
பதில் சொல்லப்போகிறார் என்று காத்திருந்தார் ஒருவர்.
"நபி என்று தன்னை அறிவித்துக் கொள்வதற்கு முந்தைய காலகட்டத்தில்
நபியவர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் நபிப்பணியைத் தொடங்கிய பின் என்ன
செய்தார்கள்?
ஃகதீஜா நாயகியின் வழியாகக் கிடைத்திருந்த வளமான செல்வங்களை
மார்க்கப் பணிக்கு அர்ப்பணித்தார்கள். விரைவில் வறுமை நிலையை அடைந்தார்கள். இந்த வறுமையே
தனது பெருமை என்று சொன்னார்கள். நபியின் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் அடுப்புப்
பற்ற வைக்கப்பட்ட நிலை இருந்ததில்லை என்பது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லும் செய்தி.
’வியர்வை உலரும் முன் கூலியைக் கொடுத்துவிடுக’ – உழைப்பை கண்ணியப்
படுத்தும் நபிமொழி.
‘உழைப்பாளியின் கையை முத்தமிட விரும்புகிறேன்’ – உழைப்பின் உயர்வை
உணர்த்தும் நபிமொழி.
நபியும் நபித்தோழர்களும் முகாமிட்டிருந்த ஒருசமயம் ஒவ்வொருவருக்கும்
ஒரு வேலையை நியமித்துத் தந்த நபி (ஸல்) அவர்கள் விறகு சுமந்து வரும் பணியைத் தானே செய்ய
முனைந்தார்கள்.
ஆனால் இதுவெல்லாம் உழைப்பின் அருமையை உணர்த்துவதற்கு அவர்கள்
சொல்லிலும் செயலிலும் காட்டிய குறிப்புக்கள்.
விறகு வெட்டுவதும் விற்பதும் நபியின் ’தொழில்’ ஆகிவிடவில்லை.
எந்த உடல் உழைப்பும் நபி (ஸல்) அவர்களின் தொழில் அல்ல.
நபியின் நிலை எப்படி இருந்தது? ஜகாத் (ஏழை வரி) அவர்களுக்கு
ஆகுமானது அல்ல, அவர்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும்! ஏனெனில் அவர்களின் ஏழ்மை வித்தியாசமானது.
அதேபோல், சதகா என்னும் தர்மப்பொருளும் அவர்களுக்கு ஆகுமானது அல்ல. அன்னாரின் புனிதக்
குடும்பத்தினருக்கும் இதே விதிதான். இது நபியின் வாரிசுகளுக்கு அல்லாஹ் உவந்தளித்த
உன்னத நிலை.
நபிக்கு அன்பளிப்புக்களே ஆகுமானதாக இருந்தன. மனிதர்களின் வழியாக
அவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புக்கள் எல்லாம் எதார்த்தத்தில் அல்லாஹ் அளித்த அன்பளிப்புக்கள்தான்
அல்லவா? ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் ஹபீப்
(நேசர், காதலர்). காதலன் காதலிக்கு அன்பளிப்புத்தான் தருவான், ஜகாத்தும் சதகாவும் அல்ல!
நபி (ஸல்) அவர்களுடைய ஆளுமையின் இந்தப் பரிமானத்தைச் சில சூஃபிகள்
தங்களின் வாழ்வில் வெளிப்படுத்தினார்கள். அவர்களைத்தான் ’ஃபகீர்’ என்றும் ’தர்வேஷ்’
என்றும் அழைக்கிறோம்.
பொதுவாகவே சூஃபித்துவம் என்பது மனத்தளவிலாவது இவ்வுலக வாழ்வின்
தளைகளை விட்டும் நீங்கியதாகத்தான் இருக்கிறது. அல்லாமா இக்பால் சொல்கிறார்:
“பறவைகளின் உலகைச் சேர்ந்த தர்வேஷ் நான்
ஏனெனில், ராஜாளி கூடு கட்டுவதில்லை”
(பரிந்தோன் கீ துன்யா கா தர்வேஷ் ஹூன் மெய்(ன்)
கெ ஷாஹீன்
பனாத்தா நஹீன் ஆஷியானா)
நீங்கள் சொல்லும் சூஃபிகளின் வாழ்வில் இந்த நிலை புறத்திலும்
சிறப்பாக வெளிப்பட்டிருந்தது” என்றார் சூஃபி.
No comments:
Post a Comment