Saturday, November 23, 2013

...என்றார் சூஃபி - part 2

3

‘நம் சமூகத்தில் இன்றைய இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகம் காணப்படுகிறது. இது மகிழ்ச்சியான விஷயமல்லவா?’ என்று கேட்டார் ஒருவர்.

”அன்பரே! கலவரத்தைப் புரட்சி என்று காணும் தவறான பார்வை பற்றி எச்சரிக்கையாக இருங்கள். இன்றைய காலகட்டத்தில் பக்கிகளின் கூட்டம் தம்மை ராஜாளிகளாக பாவனை செய்கின்றது. தவளைகளின் சப்தம் ஒருபோதும் சிங்க நாதம் ஆகிவிடாது.

ஹழ்றத் அலீயின் வாழ்வில் இருந்து ஒரு நிகழ்ச்சியைக் கவனியுங்கள். போர்க்களத்தில் அவர்கள் உக்கிரமாகச் சண்டையிட்டிருந்த நேரம். அன்னாரின் வாள் வீச்சின் வலிமையில் எதிரியின் வாள் அப்பால் போய் விழ, அவனும் மல்லாந்து சாய்ந்தான். அவன் மீது ஹழ்றத் அலீ அவர்கள் அமர்ந்து அவனின் தலையைத் துண்டிப்பதற்குத் தன் வாளை ஓங்கினார்கள். அப்போது அந்த மனிதன் செய்வதறியாத மருட்சியில் அன்னாரின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டான். ஓங்கிய வாள் அப்படியே நின்றுவிட்டது. முகத்தில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி ஹழ்றத் அலீ அவர்கள் நிதானமாக எழுந்து நின்றார்கள். இஃது அவனுக்குப் பெரிதும் ஆச்சரியமாகிவிட்டது. அவர்களின் செயலுக்கான காரணத்தை அவன் கேட்டான். “நீ என் முகத்தில் உமிழ்ந்த நேரத்தில் சட்டென்று என் உள்ளத்தில் கோபம் எழுந்தது. அப்போது நான் உன்னை வெட்டியிருந்தால் அல்லாஹ்வுக்காகப் போரிட்டவன் ஆகமாட்டேன். என் சுயநலத்தில் உன்னை வெட்டிய கொலைகாரன் ஆகியிருப்பேன். எனவேதான் நான் நிறுத்திவிட்டேன்” என்றார்கள். ஹழ்றத் அலீயின் இந்த மனப்பக்குவம் அவனின் மனதைப் புரட்டிவிட்டது. அங்கேயே அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். 

இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு மௌலானா ரூமி சொல்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் சிங்கம் சுயநலத்தில் இயங்குவதில்லை
அதன் அசைவுகள் எல்லாம் அவனின் நாட்டப்படியே!
அலீயின் ஞானம் பகைமையின் எச்சிலை
நம்பிக்கையின் தேனாக மாற்றிவிட்டது!’

ஞானம் இல்லாதோரின் அரசியல் என்பது குருடனின் கையில் கொடுக்கப்பட்ட வாளாகும். எந்த லட்சியத்திற்காகப் போரிடுவதாக அவன் சொல்கிறானோ அந்த லட்சியத்தையே அது துண்டு துண்டாக வெட்டிவிடும்.

ஹழ்றத் அலீயின் வாளினை உங்கள் கை ஏந்த வேண்டும் எனில் அன்னாரின் ஞானப் பார்வை உங்கள் கண்களில் உண்டாக வேண்டியது முன் நிபந்தனை ஆகும்” என்றார் சூஃபி.

4
“கலை ஒரு புனிதமான பொய்” என்று அல்லாமா இக்பால் சொல்வதை முன்வைத்தார் ஒருவர்.
“அதன் புனிதம் உன்னை சத்தியத்திடம் இட்டுச் செல்லும்” என்றார் சூஃபி.

5
”கண்மூடித்தனமாகக் கலைகளை எதிர்க்கும்போது சமயம் வெறும் அரசியல் ஆகிவிடுகிறது” என்றார் சூஃபி.

6

“எந்த மனிதனும் சாதாரணமானவன் அல்ல. ஏனெனில் இறைவன் சாதாரணமான ஒன்றைப் படைப்பதில்லை” (‘No man is ordinary for God cannot create something ordinary’, Prof.Dr.A.S.Mohamed Rafee M.A.,Ph.D., “Alpha Meditation”, p.61) என்று நாகூர் ரூமி சொல்வதைச் சுட்டினேன்.

“இறைவன் மகத்தானவன். ஏனெனில் அவன் சாதாரணத் தன்மையைப் படைத்திருக்கிறான்” (God is great for he has created ordinariness) என்றார் சூஃபி

7

“சிறியவர்களிடம் அன்பு காட்டாதவரும் பெரியவர்களிடம் மரியாதை காட்டாதவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்ல” என்பது நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி.

“அன்பே சிறியவர்களுக்கான மரியாதை; மரியாதையே பெரியவர்களுக்கான அன்பு என்றும் இதனை விளங்கலாம்.


மேலும், சிறியவர்களில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதும் பெரியவர்களில் இருக்கும் சிறியவர்களிடம் அன்பு காட்டுவதும் இதில் அடக்கம்” என்றார் சூஃபி.

2 comments:

  1. “கலை ஒரு புனிதமான பொய்” என்று அல்லாமா இக்பால் சொல்வதை முன்வைத்தார் ஒருவர்.
    “அதன் புனிதம் உன்னை சத்தியத்திடம் இட்டுச் செல்லும்” என்றார் சூஃபி.

    ”கண்மூடித்தனமாகக் கலைகளை எதிர்க்கும்போது சமயம் வெறும் அரசியல் ஆகிவிடுகிறது” என்றார் சூஃபி. /////// வாவ்!!!! அருமை அருமை....!!!

    ReplyDelete
  2. சிறியவர்களில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதும் பெரியவர்களில் இருக்கும் சிறியவர்களிடம் அன்பு காட்டுவதும் இதில் அடக்கம்...
    ////////??????

    இது புரிய வில்லையே ரமீஸ் அவர்களே!


    ReplyDelete