கடலைத்
தேடி அலையுமொரு
அப்பாவி
மீனைப்போல
என் இனிய
பயணியே!
எங்கே போகிறாய் நீ?
எங்கெங்கு
நீ சென்றபோதும்
என் நெஞ்சமே உனது இல்லம்
அந்தக்
கடல் மட்டுமே
உன் தாகம்
தீர்க்க முடியும்
*
தற்பெருமையில்
திளைத்தவர்களாய்
ஒவ்வொரு
மாயத்தோற்றத்தின் பின்னும்
துறத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்
எத்தனை
விசித்திரம் இது!
வெறுமையான
நம்மில்தான்
எத்தனை
மகத்தான கனவுகள்!
*
தற்புகழ்ச்சியை
நிறுத்திக்கொண்டு
உன் இதயத்தின்
கண்களை
மற்ற
உலகங்களை நோக்கி
நீ திறக்கும்போது
நீ செய்பவை
எல்லாம்
புகழுக்குரியதாய்
இருக்கும்
*
புத்திசாலித்தனமான
கேள்விகளாலோ
உன் பதவியையும்
செல்வத்தையும்
துறந்து
விடுவதாலோ
சத்தியத்தின் ரகசியம் திறக்கப்பட மாட்டாது
வெறும்
வார்த்தைகளால்
உன் இதயத்தை உயர்த்தமுடியாது நீ
இதயம்
செலுத்த வேண்டிய கட்டணம்
ஆழ்ந்த
வேதனை மட்டுமே!
*
காதலின்
எரியும்
துயரைத் தாங்கிக்கொள்ள
எத்தனை வலிமை வேண்டும் ஒருவர்க்கு
இணைதலை நோக்கி ஓடுவதல்ல தீர்வு
வலிமை
தேவைப்படுவதெல்லாம்
பிரிவின்
நிலையில் மட்டுமே
*
ஒருவராலும்
தீர்க்க இயலவில்லை
என் குழப்பத்தை
ஒருவரும்
சொல்ல முடியவில்லை
நான் எங்கிருந்து வருகிறேன் என்று
இதோ
நாற்சந்தியில்
நின்றபடி
ரத்தம்
கசிகின்றது என் இதயம்
எவ்வழியில்
வீடென்று திகைத்தபடி
*
வாழ்நாளெல்லாம்
கேள்விகளால்
குடையப்பட்டு
ஒரு பித்தனைப்போல்
கதவைத் தட்டியிருந்தேன் நான்
திறந்தது அது!
தட்டியிருந்திருக்கிறேன்
உள்ளுக்குள்
இருந்தே!
*
வதைபட்டோருக்கு
விடுதலை கொண்டுவந்தாய்
துயரமுற்றோர்க்கு
மகிழ்ச்சியின் கோப்பையைத் தந்தாய்
ஆனால்
அவர்களோ மறந்துபோயினர்
வெகுகாலமாகவே
சொல்,
இன்னொரு முறை
நீ உன்
கோப்பையைத் தரப்போவதில்லை எனில்
அவர்களுக்கு
நீ சொல்ல நினைத்ததுதான் என்ன?
*
காதலில் தம்மை இழந்தோரிடம்
தாமதமாகவே
வருகின்றாய் நீ
எனினும் உன் முழுமையான வல்லமையுடன்!
மான்
ஒன்றின் நளினத்துடனோ
சிங்கமொன்றின்
கம்பீரத்துடனோ
எப்படி
வரினும் உன்
வாளின்றி
வருவதில்லை நீ
*
சிலநேரங்களில்
என் கோரிக்கைகளுக்குச்
செவி கொடுப்பதே இல்லை நீ
உன் பாதத்தை
முத்தமிடவும்கூட
அனுமதிப்பதில்லை நீ
என்னை
மூழ்கடி அல்லது எரித்துவிடு
என்ன
கவலை எனக்கு?
நீயே
என் உயிரின் தலைவன் எனும்போது
*
என் அணைப்பிலிருந்து
நழுவி
நீ சென்றுவிட்ட
நாள் முதலாய்
ஒருவரும்
கண்டதில்லை என்னை
கண்ணீருடன் அல்லாமல்
என் இதயத்திலும்
ஆத்மாவிலும்
எப்போதும்
இருக்கிறாய் நீ
நீயும்கூட
என்னை
மறக்கவேயில்லை அல்லவா?
*
மெழுகுவத்திகள்
ஏற்றி வைத்தேன்
பூந்தோட்டத்தில் இன்றிரவு
பானங்களாலும்
இனிப்புக்களாலும்
நிரப்பி வைத்தேன் மேசையை
இசைக்கலைஞர்களும்
இதோ வந்துவிட்டார்கள் இங்கே
எப்படி
ஏங்குகிறது என் உள்ளம்
நீ இருக்கவேண்டும்
என்று!
*
ஒருமுறை
இறந்து போனேன்
ஒருவரும் கண்ணீர் வடிக்கவில்லை
இன்னொரு
முறை வாழ்வேன் எனில்
எப்படி இருக்கவேண்டும் என்றறிவேன்
உன் அறியாமைப்
பேச்சால் என்னைத் தூண்டுகிறாய்
அதுவோ
வெற்றொலியாய்க் கேட்கிறது எனக்கு
*
எட்டுத்
திசைகளிலிருந்தும்
வருகிறது
கடவுளின் ஒளி
என்று சொல்லப்படுகிறது
’எங்கிருந்து?’
என்கிறது கூட்டம்
இடமும் வலமும் திரும்பியபடி
அதோ அவர்கள்
ஒரு கணமாவது
இப்படியும்
அப்படியும்
பார்க்காமல்
இருந்தால்தானே!
*
உன்னுள்ளும்
அதற்கப்பாலும்
மறைந்துள்ளதொரு
குகை,
சிந்தைக்கெட்டாத விந்தைகள்!
ஒவ்வொருவருக்கும்
உள்ளது
ஒரு வேலையும் ஒரு காதலனும்
எனினும்,
அந்த மறைவான காதலன்
அவனே
மிகவும் இனிமையானவன்!
*
இதயமே!
இப்பாதையில்
சொற்கள் வெறுமையானவை மட்டுமே
இணைதலின்
வாசலில்
உன்னை முழுமையாய் அர்ப்பணித்துவிடு
அவனின்
பறவைகள் திரிகின்ற வானத்தை
ஒருபோதும்
எட்டிவிட முடியாது நீ
உன் சிறகுகளை
உதிர்த்தால் அன்றி
*
உன் நினைவாகவே
மாறிவிட்ட உயிர்
ஒருபோதும்
பொய்யாவதில்லை
ஒருபோதும் மங்குவதில்லை
பிறையாகி
நிற்கும் அந்த நிலா
அதன்
தேய்வு என்பது
நிறைவடைதலின்
ஆரம்பம்தானே!
*
என்னருமை
ஆத்மாவே!
அற்பர்களை விட்டு நீங்கிவிடு
தூய உள்ளம்
கொண்டோருடன்
நெருக்கமாக இரு
இனம் இனத்தை ஈர்க்கும்
காகம்
உன்னை அழைத்துச் செல்லும்
இருகாட்டிற்கு
கிளி
உன்னை இட்டுச் செல்லும்
கனிகள்
இருக்குமிடம்
*
’என்ன
செய்வது?’ என்று கேட்டேன்
இற என்றான்
‘நீர்
நெய் ஆகிவிட்டது’ என்றேன்
இற என்றான்
’உன்
ஒளியைச் சுற்றிவருமொரு
விட்டில்
ஆவேன்’ என்றேன்
இற என்றான்!
*
திடீரென்று
வந்து
திருடிச்
சென்றாய்
என்னிடமிருந்து மூன்று:
இதயத்தின்
அமைதி
முகத்தின்
பொலிவு
விழிகளின் உறக்கம்
அடடா!
எந்த மனமும்
கற்பனை
செய்ய முடியாத அந்தக்
கையைப்
போற்றுகிறேன்!
*
பிரபஞ்ச
வெளிகளிலிருந்து
வந்திருக்கின்றாய் நீ
எனினும்,
இந்த மண்ணுருவத்தால்
வசியம்
செய்யப்பட்டு
பூமியின் பிரஜையாய்க் கருதுகிறாய் உன்னை
உன் சுயம்
எது என்பதை
ஏன் மறந்துவிட்டாய்
நீ?
*
செழிப்பும்
பதவியும்
சூஃபிக்குப் பெருஞ் சுமைகளே
தூய வறுமையின்
வித்தையில்
காதலனின்
பெருமையைக்
காண்கிறார்
அவர்
*
ஒருபோதுன்
பாதம் மிதித்து
மறுபோது
காற்றில் தூசிபோல் குதிப்பது
நடனம் அல்ல
அதுவோ
ஈருலகிற்கும்
அப்பால் குதிப்பது
உன் வேதனையின்
ரத்தத்தில் ஆடுவது
உன் வாழ்க்கையை
அர்ப்பணிப்பது
*
உன் காதலனைத்
தேடுவதில் இருந்தும்
உன்னைத்
திசைமாற்றுவது
உன் ஆசைகளே
இணைதலை
நாடுகிறாய் எனில்
ஏக்கத்தின்
தோட்டத்திற்குள் நுழை
*
பாதை
முடிவதில்லை என்றபோதும்
ஓர் அடி எடுத்து வை
நடந்துகொண்டேயிரு
கலங்கியபடி பார்க்காதே தொலைவில்
இந்தப்
பாதையில்
இதயமே உனது வழிகாட்டி ஆகட்டும்
உன் தேகமோ
தயங்குகிறது
பயத்தால்
நிரம்பியுள்ளது
*
காதலின்
மீது காதலாகியிருக்கிறோம்
ஏனெனில்,
காதலே நமது மீட்சி
ஆத்மாவே
நமது வழிகாட்டி
காதலே
நமது பானம்
மூலத்தைக்
காண முடியாதவன்மீது
கைசேதமே
கவிந்துள்ளது
அவனின்
பாதை தடைப்பட்டுள்ளது
அவனின்
அறியாமையைக் கொண்டே
*
மண்ணில்
காலடி வைத்தாய்
மகிழ்ச்சியில்
சூல் கொண்ட பூமி
மலர்த்திவிட்டது கோடிப் பூக்களை
குதூகலம் எட்டியது வானத்தை
வியப்புடன்
பார்த்தது
விண்மீன்களை
நிலா
*
கற்பனையைக்
கிளர்த்தும் ஈருலகங்களும்
நாம் வந்து போகும் தங்குமிடங்களே
ஆத்மாவைப்
பற்றி நாம் கேள்விப்பட்டதெல்லாம்
பல பல
குழந்தைக் கதைகளே!
*
“நான்
என்ன செய்ய வேண்டும்?” என்றேன்
ஆஹா!
அதுவன்றோ கேள்வி! என்றான்
பகடியாடும்
அவனின் வார்த்தைகள் கேட்டு
“இதுதான் நீ சொல்ல முடிந்ததா?” என்றேன்
என் பேச்சுக்களை
எல்லாம் ஒதுக்கித் தள்ளினான்:
மார்க்கத்தின் மாணவனே!
ஒவ்வொரு கட்டத்திலும் கேட்டுக்கொண்டேயிரு
‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று
*
அஞ்சாதே!
எப்போதும் உள்ளது மது
காதலுக்காக நீ தாகித்திருந்தால்
அஞ்சாதே!
எப்போதும் உள்ளது நீர்
உன் உதடுகள் காய்ந்து வெடித்திருந்தால்
அஞ்சாதே!
நீ பாழாகிப் போவதற்கு
உன்னுள் புதைந்துள்ளது பொக்கிஷம்
உன் கண்களைத்
திற,
இவ்வுலகமொரு
கனவு மட்டுமே!
*
நிலாவின்
ஒளியைத் திருடிச்
சோலைக்குள்
கொண்டு வந்தோம்
பூக்களின் தூக்கத்தைக் கலைக்க
விழித்தெழு!
வெகுகாலம் பனிக்குள்
சிக்கிக் கிடந்துவிட்டது நம் கப்பல்
திறந்த
கடலில் பாய்ந்து செல்லும்
காலம்
வந்தது காண்
*
சூரியன்
உன்னைச் சுட்டெரித்துவிடும்
காதலரின் நிழலடியில் தங்கியிரு
அவர்களின்
சகவாசத்தில் படிப்படியாய் மாறுவாய்
நீயும்
ஒருநாள், சூரியனைப் போல் சுடர்பவனாய்!
*
இரவின்
இருளில்
நிலாக் கூடாரம் இட்டு வைத்தாய்
உறங்கும்
ஞானத்தின் முகத்தின் மீது
தண்ணீர் தெளித்தாய்
ஒவ்வொருவருக்கும்
ஆறுதல் சொன்னாய்
எனினும்,
ஏக்கத்தின்
வாளால் வெட்டி வீழ்த்தினாய்
உறக்கத்தின்
தலையை
*
சூரா தக்வீர் சம்மந்தமாக சில விளக்கங்கள் தேவை, தங்களிடம் கேட்கலாமா?
ReplyDelete//// வாழ்நாளெல்லாம்
ReplyDeleteகேள்விகளால் குடையப்பட்டு
ஒரு பித்தனைப்போல்
கதவைத் தட்டியிருந்தேன் நான்
திறந்தது அது!
தட்டியிருந்திருக்கிறேன்
உள்ளுக்குள் இருந்தே!//// சட்டென்று மனமுடிச்சு ஒன்று அவிழ்கிற தருணம் இந்த வரிகளை படிக்கையில்...