ஒரு கதை
எந்த அளவு இருக்கவேண்டும்? காவியம் என்று எழுதப்பட்டதெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில்
இருந்தன. சிறுகதை என்று ஒன்று வந்தபின் சில பக்கங்களில் இருந்து நாற்பது ஐம்பது பக்கங்கள்
வரை கதைகள் சொல்லப்பட்டன. குழந்தைகளுக்கான கதைகள் இன்னும் சுருக்கமாக இருந்தன. ஈசாப்பின்
நீதிக்கதைகள் ஒவ்வொன்றும் அரை பக்கம் அல்லது ஒரு பக்கம் அளவில்தான் இருந்தது. அந்த
அளவில் உள்ளதைக் குறுங்கதை என்று அழைக்கலாம்.
சுருக்கம்
என்பது சுவாரஸ்யத்தின் அடையாளம் ஆன நவீன உலகில் இன்னும் சிறிய கதைகளைச் சொல்லிப் பார்க்க
ஆர்வம் உண்டானபோது ஒற்றை வரியில் கதை சொல்லமுடியுமா? என்று முயன்று பார்த்திருக்கிறார்கள்.
இது பற்றித் தமிழில் முதலில் அறிமுகம் செய்தவர் சுஜாதா. மேற்கில் எழுதப்பட்ட மிகச்
சுருக்கமான அறிவியல் புனைகதைகளில் தனக்குப் பிடித்தவை என்று பின்வரும் இரண்டு கதைகளை
அவர் சொல்லியிருந்தார்:
விண்வெளியின்
எல்லை வரை சென்றபோது அங்கே எழுதப்பட்டிருந்தது, “பிரபஞ்சம் இங்கே முடிவடைகிறது” என்று,
தலைகீழாக!
அந்த
அறையில் உலகின் கடைசி மனிதன் அமர்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.
இவ்வகையில்
எழுதப்படும் கதைகளை மைக்ரோ ஃபிக்ஷன் (நுண் புனைவு?), ஃப்ளாஷ் ஃபிக்ஷன் (மின்னல் புனைவு),
போஸ்ட்கார்ட் ஸ்டோரி (அஞ்சலட்டைக் கதை) முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.
கவிதைகளில்
ஆகச் சிறிய வடிவமான ’ஹைகூ’வைத் தமிழில் வாமனக் கவிதை, துளிப்பா என்றெல்லாம் அழைப்பது
போல் இவ்வகைக் கதையை வாமனக் கதை என்றும் துளிக்கதை என்றும் அழைக்கலாம்.
ஒருபக்கம்
முதல் ஒருவரி வரை சுருக்கமாக எழுதப்படுபவை இந்த வகையில் சேரும் என்று வைத்திருக்கிறார்கள்.
ஆயிரம் சொற்கள் மிகாமல், ஐநூறு சொற்கள் மிகாமல், இருநூறு சொற்கள் மிகாமல், நூறு சொற்கள்
மிகாமல் என்று இப்படியே தேர்வில் விடை எழுதச் சொல்வது போல் குறுகிய எல்லைகள் கொடுத்து
எழுதிப் பார்க்கிறார்கள். ஆறு சொற்களில் ஒரு கதை என்றெல்லாம்கூட சோதனை செய்து பார்க்கிறார்கள்.
இந்த
மாதிரி எழுதுவதற்கு மிகவும் இலகுவான களமாக அறிவியல் புனைவு திகழ்கிறது. க்ரைம் என்னும்
களத்திலும் ஓரளவு இலகுவாக எழுத முடியும். காதல் கதையை இத்தனைச் சுருக்கமாக எழுத முனைந்தால்
அது கவிதை ஆகிவிடும், கதையாக இருக்காது. கவிதை போல் தொனிக்கக்கூடாது என்பது முக்கியம்.
மேஜிக்கல்
ரியலிசம் என்ற எழுத்துமுறை கைவந்தால் துளிக்கதை எழுதுவது மிக எளிது. ஒரு உதாரணம்:
“பாட்டிலின்
விளிம்பிலிருந்து சொட்டிய துளியில் மூழ்கித் தத்தளித்தான்.”
குழந்தைகளுக்கான
கதைகளில் ஃபேண்ட்டஸி நிறைய இருக்கும் என்பதால் அந்த முறையிலும் இவ்வகைக் கதைகளைச் சொல்லிப்
பார்க்கலாம். கதைகள் எழுதுவது எப்படி என்று எங்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர்.யூனுஸ்
ஒருமுறை சொன்னார், “பழமொழிகளை அப்படியே கதையாக மாற்றினால்கூட அற்புதமாக வரும். ஆடிக்
காற்றில் அம்மியும் பறக்கும்’ என்னும் பழமொழியை அப்படியே எதார்த்தமாக எடுத்துக் கொண்டு
‘பறக்கும் அம்மி’ என்று ஒரு கதை எழுதினால் குழந்தைகள் மிக வியப்பாகக் கேட்பார்கள்.”
பிள்ளைகள்
விளையாட்டாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு-வரிக் கதைகளில்கூட சுவாரஸ்யத்திற்கான ஆரம்பப் புள்ளி
இருப்பதைக் காணலாம். உதாரணமாக, “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அத்தோட கதை சரியாம்” என்று சொல்லிச்
சிரிப்பார்கள். இது ஒரு பயங்கரமான முடிவு! ஏன் அத்துடன் சரியாம் என்னும் கேள்வியை எழுப்பக்கூடியது.
ஆனால் அதை பற்றிச் சிறுவர்களுக்கு என்ன கவலை?
இதே கதையைச்
சற்று மாற்றிச் சொன்னான் என் மகன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அது உடம்பெல்லாம் ஒரே சொரியாம்.”
இதிலும் ஒரு திகில் இருக்கிறது. ஏன் அப்படி என்னும் கேள்வியை எழுப்புகிறது. இதே கதையை
நான் வேறு வடிவத்திற்கு மாற்றி அமைத்துப் பார்த்தேன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம். இன்னொரு
ஊர்ல இன்னொரு நரியாம். இப்படியே, ஒவ்வொரு ஊர்லயும் ஒரு நரி மட்டும் இருந்ததாம்!” கதை
அவ்வளவுதான் என்றாலும் ஒரு மர்ம சூழலை உருவாக்கிக் கேள்விகளை எழுப்பிவிடுகிறது. ஏன்
அப்படி என்னுக் கேள்விக்குக் கதையில் விடைகள் இல்லை. அது நம் கற்பனை முன்னகர்வதற்கான
பாதையை விரிக்கின்றது.
ஹெமிங்க்வே
ஒரு முறை ஆறே சொற்களில் கதை ஒன்று எழுதி அதுவே தன் சிறந்த படைப்பு என்று சொன்னார் என்பதாக
இலக்கிய உலகில் ஒரு கிசுகிசு உண்டு. அந்தக் கதை: "For sale: baby shoes, never worn."
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் பலராலும்
தங்களின் ஆதர்ச எழுத்தாளர் என்று கொண்டாடப்பட்ட ஆர்தர்.சி.க்ளார்க் எழுதிய மிகச் சிறிய
அறிவியல் புனைகதை இது: “God said,
'Cancel Program GENESIS.' The universe ceased to exist."
குய்தமாலா தேசத்தின் எழுத்தாளரான அகஸ்தோ மாண்டெர்ராசோ
1959-ல் எழுதிய “எல் டைனொசாரியோ” என்னும் தலைப்பில் அமைந்த கதைதான் உலகின் மிகச்சிறிய
கதை என்று கருதுகின்றவர்களும் உண்டு. “குவாந்தோ தெஸ்பர்ட்டோ, எல் டைனொசாரியோ டொதாவியா
எஸ்தபா அல்லி” என்னும் அந்தத் துளிக்கதையின் பொருள்: “அவன் கண்விழித்தபோது, அந்த டைனொசர்
இன்னமும் அங்கே இருந்தது.”
ஒரு-வரிக்
கதைகள் என்னும் பெயரில் எழுதப்படும் பல கதைகள் உண்மையில் சிறுகதைகான ஆரம்பம் போலவே
தெரிகின்றன. ஒரு தீப்பொறி போல். அவ்வளவுதான். வாசகன் அதை ஊதி வளர்த்தெடுத்துக் கொள்ளட்டும்
என்று விட்டுவிடுகிறார்கள். இப்படி எழுதலாம் என்னும் பட்சத்தில் குப்பைகள் அதிகமாகக்
குவியத்தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. ஹைகூ என்ற மகத்தான கவிதை வடிவத்திற்கு நேர்ந்த
கதி அதுதான். ஹைகூ எழுதுவது மிகவும் கடினம் என்பது உண்மையாக இருக்க இங்கே என்னடா என்றால்
ஹைகூ எழுதுவது மிகவும் எளிது என்னும் பார்வையிலிருந்தே புற்றீசல்கள் போல் ஹைகூக்கள்
புறப்பட்டன. துளிக்கதைகளுக்கும் இது பொருந்தும். சுவாரஸ்யமான சில துளிக்கதைகள்:
குட்-பை சொல்கிறேன், இரத்தம் வழியும் கைகளால்
(ஃப்ரான்க் மில்லர்)
கல்லறை வாசகம்: மட மானிடர்கள், பூமியிலிருந்து தப்பிக்கவே
இல்லை.
(வென்ரார் விஞ்ச்)
குழந்தையின் குருதி-வகை? மனிதம், பெரும்பாலும்.
(ஆர்சன் ஸ்காட் கார்ட்)
”கிர்பி இதற்கு முன் விரல்கள் சாப்பிட்டதில்லை”
(கெவின் ஸ்மித்)
மழை பெய்தது, பெய்தது… நிற்கவே இல்லை
(ஹொவர்ட் வால்ட்ராப்)
மனிதகுலத்தைக் காப்பாற்ற அவன் மீண்டும் இறந்தான்
(பென் போவா)
கால எந்திரம் எதிர்காலத்திற்குச் சென்றது. யாருமே இல்லை.
(ஹாரி ஹாரிசன்)
வானம் விழுந்தது. விவரம் பதினோரு மணிக்கு.
(ரொபர்ட் ஜோர்தான்)
ஹைட்ரஜன் குண்டுகள் வீசப்பட்டன. நாங்கள் அனைவரும் இறந்தோம்.
(ஹொவர்ட் வால்ட்ராப்)
அவன் மிகவும் குழப்பத்துடன் படித்தான், தன் இறப்புச்
செய்தியை.
(ஸ்டீவன் மெரட்ஸ்கி)
அடடே
இது நல்லாயிருக்கே என்று தோன்ற கற்பனையை முடுக்கிவிட்டதில் சில துளிக்கதைகள் தோன்றின.
மேஜிக்கல் ரியலிசம், சைஃபை போன்ற வகைகளின் சாயல் உள்ள துளிகளாக அவை தெரிகின்றன. ஒவ்வொன்றுக்கும்
தலைப்பும் கொடுத்துவிட்டேன் (இங்கே ஹைகூ கவிதைக்குத் தலைப்புக் கொடுப்பது போல.)
நடை
அந்த
எட்டு வயதுச் சிறுவன்
வேகமாக
நடந்து போய்க்கொண்டிருந்தான்,
கடலின்
ஆழத்தில்.
மிர்ரர்
கண்ணாடியின்
முன் வந்து நின்ற ஜாக் சிரித்தான். பிம்பம் சிரிக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
தேகம்
அறைக்குள்
வந்து கதவை மூடித் தாளிட்டவள் புழுக்கம் தாங்காமல் ஆடைகளைக் களைந்தாள். ஃபேன் காற்று
வெண்ணிறமாய் மின்னிய எலும்புகளைத் தழுவியது.
அவள்
முகத்தைச்
சேலையால் மூடி மறைத்தபடி சாலையில் விரைந்தவளைச் சுட்டிக் காட்டிக் கிசுகிசுத்தார்கள்
எல்லோரும் “மனித இனத்தைச் சேர்ந்தவள்!”
மீட்டிங்
தலைவர்
எதிர்பார்த்தபடியே கூட்டத்திற்கு அறுபது பேர்தான் வந்திருந்தார்கள், ஐந்து மனிதர்களையும்
சேர்த்து.
வகுப்பு
போர்டில்
எழுதுவதற்கு டீச்சர் திரும்பியவுடன் கடைசி பென்ச்சில் இருந்த சிறுவர்கள் அவசரமாக மாற்றிக்
கொண்டார்கள், தலைகளை.
இவ்வளவு
சுருக்கமாக இருப்பதில் ஒரு சிக்கல் என்ன என்றால், கதை ’படித்த’ உணர்வே ஏற்படுவதில்லை
என்பதுதான். குறைந்தது ஐந்து நிமிடங்களாவது படிப்பது போல் இருக்க வேண்டாமா? இவை இருக்கும்
அளவுக்கு “நொடிக் கதைகள்” என்று ஒரு பெயரும் சூட்டிவிடலாம் போலிருக்கிறது. அதாவது ஒரு
நிமிட நேரத்திற்குள் படித்து முடிக்கக்கூடிய கதைகள் இவை. மைக்ரோ கதைகள் என்னும் வகையில்
சற்றே பெரிய கதைகளும் உண்டு. “உள்ளங்கைக் கதைகள்” என்று அவற்றை அழைக்கிறார்கள். உள்ளங்கை
ஸைசில் உள்ள அந்தக் கதைகள் நம் உள்ளத்தின் உணர்வுகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்திக்
காட்ட வல்லவை. இதற்கு ஒரு சாம்பிள், மானுவல் கொன்ஸாலஸ் என்பவரின் “Miniature Wife
and other stories” என்னும் நூலிலிருந்து ”FIVE THINGS” என்னும் துளிக்கதை:
ஐந்து விஷயங்கள்
அவள்
பிரிந்து செல்லும் முன், அவள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களை அவளிடம்
சொல்லிவிட விரும்புகிறேன். ஆனால் நாங்கள் காலையிலிருந்தே பேசிக்கொள்ளவில்லை.
கேட்கப்படாமலே
நான் காஃபி போட்டுக் கொடுத்தேன். அவளும் அப்படியே அதை எடுத்துக் கொண்டாள்.
ஐந்து
விஷயங்கள் என்கிறேன். ஆனால் அதிகமாகவும் இருக்கலாம்.
நிச்சயம்
அதிக விஷயங்கள் உள்ளன. ஆனால் ஐந்து என்பது ஒரு நல்ல எண் என்று நினைக்கிறேன், சரிதானே?
போதுமானது ஆனால் அதிகமானது அல்ல. அவள் அதிகமாகச் சுமந்து செல்ல வேண்டாம். ஐந்துக்கு
மேல் அவள் கேட்கவும் மாட்டாள்.
அவள்
மீது ஒரு மௌனம் கவிந்துள்ளது. நான் ஐந்து விஷயங்கள் என்கிறேன், ஆனால் உண்மையில் ஒரே
ஒரு விஷயம்தான் இருக்கிறது, அவளிடம் சொல்வதற்கான ஒரே ஒரு விஷயம், ‘போகாதே’.
ஃ ஃ ஃ
வாசகர்களுக்கான
ஒரு பயிற்சியும் வைத்திருக்கிறார்கள். மேலே உள்ள துளிக்கதை ஏதோ ஒரு நாவலின் இடையே வரும்
பீஸ் மாதிரி தொனிக்கிறது அல்லவா? ஆனாலும் இது தன்னளவில் முழுமையான ஒரு துளிக்கதைதான்
என்றும் சொல்ல முடிகிறது. இப்படியாக, நாம் வாசிக்கும் நாவல்களில் இருந்து துளிக்கதை
எனத்தக்க பகுதிகளைக் கட் செய்து சேகரித்து வைத்து நூலாக வெளியிடலாம் என்கிறார்கள்.
(அந்தந்தக் கதைக்குரிய ஆசிரியரின் பெயரைச் சுட்டிவிட வேண்டும். நம் பெயரில் சுட்டுவிடக்
கூடாது. ஆனால், தொகுப்பாசிரியர் என்று நம் பெயரைப் போட்டுக் கொள்ளலாம்.)
ஒரு பக்க அளவில் கதை
எழுதுகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று
முயன்றபோது, அடியேனின் மனத்தில் நடுச்சாமத்தில் பின்வரும் கதை உதித்தது:
தர்பார்
இரவெல்லாம்
ராணியுடன் ஊடல். பிறகு வைகறைப் பொழுதில் ஒரு கூடல். எனவே, அக்பரால் அன்று அரசவையில்
சுரத்தாக அமர்ந்திருக்க முடியவில்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. சமாளித்துக் கொண்டிருந்தார்.
ஒருமுறை சொக்கித் தலையை உதறி விழித்துப் பார்த்தபோது கம்பம் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தார்.
அருகே தேநீர்க் கடையிலிருந்த ரேடியோவில் “ராசாவே உன்னை விட மாட்டேன்…” என்று குயில்
குரலில் ஒரு பெண் பாடிக் கொண்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பக்கமாக
வந்த கண்டக்டர் ஒருவர் இவரின் ராஜ உடைகளைப் பார்த்துவிட்டு, “அடடே இப்பவும் ராஜா நாடகம்லாம்
போடுறீங்களா? எந்த ஊரு? மதுரையா?” என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டார்.
இதற்குள் அக்பருக்குக் கை காலெல்லாம் லேசாக நடுக்கம் கண்டுவிட்டது. தூக்கத்தின் பிரம்மையாகத்தான்
இருக்க வேண்டும் என்று நினைத்தவராகக் கண்களை இடுக்கி முகத்தை உதறி உதறி மீண்டும் மீண்டும்
திறந்து பார்த்தார். உத்தி பலன் தரவில்லை. அதே பஸ் ஸ்டாண்டில்தான் அமர்ந்திருந்தார்.
இதைக் கவனித்த ஒருவன் “சர்தான், இது கோட்டி புடிச்ச கேஸ்ப்பா” என்று டீக்கடைக்காரரிடம்
சொன்னான். பேருந்துகள் அவருக்குள் அநியாயத்துக்குப் பீதியைக் கிளப்பின. சுற்றி இருக்கும்
உயிரினங்கள் பார்ப்பதற்குத் தன்னைப்போல் மனிதர்களாகத் தெரிந்தாலும் உடைகளெல்லாம் வேறு
மாதிரியும் பாஷை அந்நியமாகவும் இருப்பது கண்டு ஏதோ துஷ்ட ஜின்களின் உலகம் என்ற முடிவுக்கு
வந்திருந்தார். உள்ளூற மரணபயம் திரளத் தொடங்கியிருந்தது. டவுசரிலிருந்து புகையிலைப்
பாக்கெட்டை எடுத்தபடி ஒருத்தர் அக்பரின் அருகில் வந்து அமர்ந்தார். “ஃபாரின் செண்ட்டா,
இப்படித் தூக்குதுங்களே?” என்றார். அவருடைய கண்களில் இருந்த ஒருவித கனிவு சற்று ஆசுவாசம்
தரவே அவரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிற்று. நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக்
கொண்டு, வரளும் நாவை அசைத்து, அழுகை வரும் தருணத்தில் சிறு குழந்தையின் கீழுதடு நெளிவது
போன்ற பாவனையை மறைக்க முடியாதவராய், சன்னமான குரலில் அக்பர் அவரிடம் கேட்டார், “முரா
தர்பார் குஜாஸ்த்?” (என் அரசவை எங்கே இருக்கிறது?). ஃபார்சி அந்த ஆளுக்கு ஏதோ சூனிய
மந்திரம் போல் தோன்றவே எழுந்து கொண்டு எதிரே நின்ற பஸ்ஸைக் காட்டினார், “இந்த பஸ் தேனீ
வரய்க்கும் போவுது. ஏறிக்கங்க. அங்கிருந்து மாறிக்கலாம்.”