Monday, December 10, 2012

நண்பகல் கொசுக்கள்



தேர்வு பற்றிய பயத்தை எக்ஸாம் ஃபீவர் என்று சொல்வது போலவே இந்த ‘டெங்கு ஃபீவர்’ என்பதையும் பார்க்கலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்குக் கொசு என்றாலே எல்லோரும் அலறி நடுங்குகிறார்கள். ’பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. இப்போது அந்த அந்தஸ்த்து கொசுவுக்கும் கிடைத்திருக்கிறதை பாரதத் திருநாட்டில் பார்க்க முடிகிறது. பாம்புக்கொரு காலம் வந்தால் கொசுவுக்கொரு காலம் வரும்!

கொசு இல்லாத காலம் என்று ஒன்று இருந்திருக்காதா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கொசுவுக்கும் மனிதனுக்குமான பகை ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே ஆரம்பமாகியிருக்கும் போல. என் சிறு வயதில் எனக்குப் புராணக் கதைகளைத் தத்ரூபமாகச் சொல்லிய கல்யாணி மாமியிடம் கேட்டால் “த்ரேதா யுகத்தில் இவாள்லாம் ராக்‌ஷஸ்களா இருந்தா” என்று சொல்வார் என நினைத்துக் கொண்டேன்.

புகை போட்டுத் துரத்துவதிலிருந்து என்னெனவோ தந்திரோபாயங்களை மனிதன் கையாண்டு வந்திருக்கிறான், கொசுக்களை ஒழித்துக் கட்ட. என் பாட்டனார் உடல் முழுக்க ஓடோமாஸைப் பிதுக்கித் தடவிக்கொண்டு முகத்தையும் கூட இழுத்து மூடிப் படுத்துத் தூங்குவார். பாட்டிக்கு எப்பவும் கொசுவலை. வத்திச்சுருளின் புகை இருமலைக் கிளப்ப சகித்துக்கொண்டு என் பால்ய வயதில் சில வருடங்கள் கழிந்தன. அப்புறம் வந்தது அட்டை. அதற்கான எலக்ட்ரிக் டப்பியை என் தம்பி சோப்பு டப்பாவின் நடுவில் ஒரு சின்ன தகடு வைத்து உள்ளே மின்சாரக் கரணங்கள் ஃபிட் செய்து அவனே தயாரிப்பான். இவ்வளவு சிரமமெல்லாம் எதற்கு என்று யாரோ ஒரு கிராமத்து அசல் மூளை முட்டை விளக்கை மிதமாக எரிய விட்டு அதன் சிம்னி மீது ஒரு பழைய ப்ளேடை வைத்தால் தீர்ந்தது என்று கண்டறிந்தார். பிறகு வந்தது திரவக் கூடு – liquidator. எல்லாவற்றுக்கும் கொசுக்கள் பழகிக்கொண்டு, ‘கொசுக்கள் என்றோர் இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு’ – அதாவது இம்யூனிட்டி ஸ்பெஷலிஸ்ட்ஸ் – நாங்கள் அழியவும் மாட்டோம் ஒழியவும் மாட்டோம் என்று அடுத்தடுத்து வீரியம் பெருகிய தலைமுறைகளாக வந்துகொண்டே இருக்கின்றன. டென்னிஸ் மட்டைகள் மாதிரியான மின்சார மட்டைகள் வந்து வீட்டில் உள்ளோர் எல்லாம் சானியா மிர்சா, சாயினா நெஹ்வால், லியாண்டர் பியஸ் போல ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வியூகங்களைப் பார்த்துக் கொசுக்கள் கொடுக்குக் கொட்டிச் சிரிக்கின்றன போல் தோன்றுகிறது.

”டெங்குவுக்கு இன்று நாலு பேர் பலி” என்பது போல் அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து ஒருவித பயமூட்டம் எங்கும் பரவியிருந்தது. நீரைத் தேங்க விடாதீர்கள், சாக்கடையைத் திறந்து போடாதீர்கள் என்றெல்லாம் படத்துடன் விளக்கம் சொல்லும் போஸ்டர்களைச் சுகாதாரத் துறை ஆங்காங்கே ஒட்டியிருந்தது. நல்ல காரியம். ஆனால் அதில் கொசுவின் படத்தைப் போடாமல் முதலமைச்சரின் படத்தைப் போட்டிருக்கிறார்கள். இது ஏன் என்று அடியேனின் சிற்றறிவுக்கு விளங்கவே இல்லை.
அரசின் பொறுப்பான பணி அத்துடன் நின்றுவிடவும் இல்லை. கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் அவ்வப்போது ரோந்து வந்து மருந்துப் புகையைப் பாய்ச்சிச் செல்கின்றன. அர்னால்டு ஷ்வாஸ்னெக்கர் வைத்திருக்கும் துப்பாக்கி போல் ஒரு வஸ்துவை டீவியெஸ் ஐம்பதின் பக்கவாட்டில் கட்டிக்கொண்டு தனிமனிதனாக ஊழியர் ஒருவர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்தோர் மீது புகையைச் சுட்டுத்தள்ளிய வண்ணம் போய்க்கொண்டிருந்தார். தோசை மாவு வாங்கிக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்த நான் என் டூவீலரைக் கிளப்புவதற்குள் மாட்டிக்கொண்டு வேதனைப் பட்டேன். எனக்குப் புகைனாலே பயங்கர அலர்ஜி.

தெருவின் முனையில் புகைவண்டியின் சப்தம் கேட்டாலே போதும், சகதர்மினி ஹோஷ் ஆகிக் கதவு ஜன்னலை எல்லாம் மூடிவிடுவாள். ஏதோ இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படையில் டாங்கி திருச்சி காஜாநகர் ஏரியாவுக்குள் வந்துவிட்டது போல் தோன்றும் எனக்கு. ஜன்னலகளை மூடாமல் விட்டுட்டோம் எனில் அன்று இரவு தூக்கம் அவுட். புகை போடுகிறார்கள் என்பதை உய்த்துணர்ந்துகொள்ளும் கொசுப்பட்டாளம் அந்த வண்டி வந்த உடனே அலறிப்புடைத்துக் கொண்டு வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இப்படிக் கர்ம சிரத்தையாகத் தெருவில் இருக்கும் கொசுக்களை எல்லாம் ஏன் வீட்டுக்குள் குடியேற்ற வேண்டுமா? அவற்றை அப்படியே விட்டுவிட்டால் கோடி புண்ணியம் ஐயா!

ஒருநாள் நாங்கள் நாலைந்து பேர் பேசிக்கொண்டு நிற்கையில் கேப் வெடித்தது போல் டப் என்று சத்தம் கேட்க என்னடா என்று திரும்பிப் பார்த்தபோது நண்பர் ஒருவர் தன் கையைக் காட்டினார். அதில் ஒரு கொசு உருத்தெரியாமல் நசுக்கப்பட்டு ரத்தக் களறியாக இருந்தது. லேசான பதற்றத்துடன் அவர் “கொசு சார் கொசு, மொஸ்கிடோ, மொஸ்கிடோ சார்” என்று மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொன்னார். கொசு பயம் இப்படியெல்லாம் ஆக்கி வைத்திருக்கிறதே என்று எனக்கே கொஞ்சம் கிலியாகத்தான் இருந்தது.

செமஸ்டர் தாள்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து நாட்களில் இரண்டாவது நாளன்று இப்படித்தான் பேராசிரியர் ஒருவரைக் கொசு ஒன்று துளை போடவும் அவர் அலறிக்கொண்டு “பகல்ல கொசு கடிச்சாத்தான் டெங்கு வருமாம் சார், சொல்றாங்க. ஐயோ, நான் செத்துப் போயிருவேனா சார்?” என்று புலம்பத் தொடங்கிவிட்டார். மனதில் இன்ஸ்யூரன்ஸ் கணக்கை எல்லாம் கணித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார் என்பது போல் இருந்தது அரைமணி நேரத்துக்கு அவரின் முக பாவனை.

இன்னொருவர் தன் ஐயம் ஒன்றை நான்தான் அகப்பட்டேன் என்று என்னிடம் கேட்டார். அதாவது, ஜுராஸ்ஸிக் பார்க் படத்தில் டயானாவின் மரபணு, மன்னிக்கவும், டைனோசரின் ஜீன் கோந்தில் பாடமான ஒரு கொசுவின் உடலுக்குள் இருக்கும். ஏதோ ஒரு லித்திக் காலத்தில் டைனோசர்கள் இப்பூமியில் வாழ்ந்திருந்த ஞான்று அவற்றில் ஒன்றைக் கடித்துக் குருதி குடித்த கொசு ஒன்று மரத்தில் ஆசுவாசமாக அமர அம்மரப் பட்டையினின்றும் வழிந்த கோந்தில் சிக்கிவிடும். அந்தப் பிசின் காய்ந்து இறுகிக்கொள்ள அம்மரமும் பின்னாளில் சாய்ந்து புதைந்து ஃபாஸ்ஸில் ஆகிப் பல்லாயிரம் வருடங்கள் கழித்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் திரைக்கதையில் வரும் ஒரு விஞ்ஞானித் தாத்தாவின் கைக்குக் கிடைக்கிறது. அந்தக் கொசுவின் உடலுக்குள் காய்ந்திருக்கும் டைனோசரின் ரத்தத்தை ஒரு சிறிஞ் மூலம் உறிஞ் செய்து இளக்கி அதிலிருந்து டைனோசரின் மரபணுவை எடுத்து உயிருள்ள ஒரு முட்டையின் கருவில் செலுத்தி க்ளோனிங் எனப்படுவதும் நாமெல்லாம் ஏதோ அறிவியல் தில்லாலங்கடி வேலை என்று கருதுவதுமான லீலை புரிந்து ஒரு டைனோசர் குட்டியை (இல்லையே, அது முட்டைக்குள் இருந்துல்ல வருது, அப்ப குஞ்சுதானே அது? – கு.குசலா) மீண்டும் இவ்வுலகிற்குக் கொண்டுவருகிறார்கள். இதன் அடிப்படையில் என் நண்பர் கேட்ட ஐயமாவது, “ஐயா, இந்த ஜுராஸ்ஸிக் பார்க் படத்தில் சொன்னது போல், இப்போது நம்மைக் கடிக்கும் கொசுவானது ஏற்கனவே ஒரு பன்னி கின்னியைக் கடித்து அதன் மரபணுவுடன் வந்திருந்தால், அந்த மரபணு நம் உடலுக்குள் புகுந்துகொண்டு நம்மைப் பன்னிக்குட்டியின் கர்ப்பவதி அக்கிவிடாதே?” இந்த ஐயத்தில் உள்ள சிருஷ்டிகரக் கற்பனை என்னை வெகுவாகக் கவர்ந்தபோதும் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “செ செ அப்படியெல்லாம் ஆகாது சார், அந்தக் கொசு யானையைக் கடிச்சுட்டு வந்துச்சின்னா அப்பறம் நம்ம கதி என்னாவது? அப்படி நடக்கச் சாத்தியமே இல்லை” என்று தேற்றினேன்.

அற்பக் கொசு! அப்படித்தானே நமக்கெல்லாம் நினைப்பு? நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு தோஸ்த் இருந்தான். ரொம்பவும் கச்சலாக இருப்பான். அவனருகில் இருந்தால் நாணல் குழல் போன்ற நானே கொஞ்சம் பூசினாற்போல் தெரிவேன்! அவனை எல்லோரும் கொசு என்ற சிறப்புப் பெயரால்தான் அழைத்தார்கள். ஆனால் அந்த அற்பக் கொசு (என் தோஸ்த் அல்ல, பூச்சியைச் சொல்கிறேன்) இப்போது என்ன போடு போடுகிறது பார்த்தீர்களா?

’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று நம் மூத்தோர்கள் சொல்லி வைத்தார்களே, யாரை வல்லவன் என்று சொன்னார்கள்? இறைவனைத்தான் என்று புரிகிறது இப்போது. மனிதனின் பார்வையில் அற்பமாக உள்ள வஸ்துக்களை வைத்து அவன் பெரிய பெரிய காரியங்களை நிகழ்த்தி விடுகிறான். நம்ரூது மன்னனின் கதையைப் பார்த்தால் கொசு என்பது இறைவனின் கையில் எத்தனைப் பெரிய ஆயுதம் ஆகிறது என்பது புரியும்
.
நம்ரூது என்பவன் ஒரு மாமன்னன். எங்கிட்டோ மெசப்பொட்டோமியா பக்கம் ஒரு ராஜ்யத்தை ஆட்சி செய்த குலக்கொளுந்தாக இருக்க வேண்டும். வெடப்பாக இருக்கும் வயசில் ஒரு எண்ணம் வந்தது அவனுக்கு, தன்னையே தன் மக்கள் இறைவன் என்று வணங்கவேண்டும் என்பதாக. நாடெங்கும் தன் சிலைகளை நிறுவினான். அவனது ஆணையின் பேரில் நாடெங்கும் அவனுக்கு பூசைகள் நடந்தன. அவன் நகர்வலம் வரும்போது மக்கள் அவன் காலில் விழுந்து வணங்கினார்கள். இப்படியாகக் காலம் ஓடிக்கொண்டிருந்த போது ஒரு நாள் அரசவைக்குள் கொசு ஒன்று நுழைந்தது. இறைவனின் சித்தம் அதை அங்கே கொண்டு வந்தது அப்படி. அரசவைக்குள் நாயோ கழுதையோ ஓடி வந்திருந்தால் கண்ணுக்குத் தெரிந்திருக்கும். துரத்தி அடித்திருப்பார்கள். ஆனால் கொசு வந்தது எவருடைய கண்களுக்கும் புலப்படவில்லை. நேராக அது பறந்து வந்து பெருமிதத்தில் திளைத்துக் கொண்டிருந்த நம்ரூதின் மூக்குத் துளைக்குள் புகுந்து மூளையில் ஒரு மூலையில் போய் டேரா போட்டுவிட்டது. ஃப்பூம் ஃபூம் என்று சிந்திப்பார்த்தும் அது வெளிவே வரவில்லை. மூக்கிற்குள் கிச்சு கிச்சு மூட்டிப் பத்துப் பதினைந்து தும்மல் போட்டும் அது வெளிப்படவில்லை. சிறிது நேரத்தில் அது அவன் மூளையில் துளை போடத் தொடங்கியது. ரணவேதனையில் மன்னன் துடியாய்த் துடித்தான். மருத்துவர்கள் வந்து அவன் மூக்கிற்குள் ஏதேதோ மூலிகைச் சாறுகளை ஊற்றிப் பார்த்தார்கள். ஒன்றும் வேலைக்காகவில்லை. இறைவனின் ஆக்ஞை வரும்போதெல்லாம் அந்தக் கொசு அவன் மூளையைக் குதறிக்கொண்டிருந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு அவன் உருண்டு கதறினான். சுவரில் முட்டிப் பார்த்தான், தரையில் தட்டிப் பார்த்தான். ம்ஹும், ஃபாயிதா நஹீன். ஒருநாள் அப்படி வலித்துக் கொண்டிருந்தபோது தன் செருப்பைக் கழற்றி மண்டையில் நாலைந்து அடி அடித்தான். வலி நின்றது! அவன் மனதில் பரவசம் பொங்கிற்று. கண்டுபிடித்துவிட்டான். மண்டைக்குள் வலி வந்தால் செருப்பால் நான்கு அல்லது ஐந்து தடவை பலமாக அடிக்க வேண்டும்! எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! அரசவையில் மன்னனின் இருபுறமும் சாமரம் வீச கச்சணிந்த இடையழகிகள் இருவர் இருப்பார்களே. அவர்களுடன் மூன்றாவதாக ஒரு இடையழகியை நிறுத்திவைத்தான், கையில் செருப்புடன்! அவனுக்கு மண்டையில் குடையும் போதெல்லாம் மணிமகுடத்தைக் கழற்றிவிட்டுத் தலையைச் சாய்த்துக் காட்டுவான். அவள் அவன் மண்டையில் செருப்பால் நான்கைந்து அடிகள் கொடுப்பாள். மன்னன் மீதான பயத்தில் முதலில் லேசாக நீவுவது போல் செய்துபார்த்தாள். வலி குறையாது. மடேர் மடேர் என்று போட்டால்தான் நிற்கும். அந்த மன்னனை விட்டுத் தள்ளுங்கள். அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதுதான் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மன்னனின் தலையில் செருப்பால் மொத்துவதற்கு முள்ளங்கிப் பத்தாட்டம் மாதச் சம்பளமும் வாங்குவதெனில், இப்படியான பணி உலகில் வேறு யாருக்கு வாய்க்கும்?

இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவன் நம்ரூது மன்னன் என்பதும், அவர்களுடன் வாதாடித் தோற்று அவர்களை நெருப்பில் எரிய ஆணையிட்டான் என்றும் அதன் பின் நடந்த சம்பவங்களையும் திருக்குர்ஆன் சொல்கிறது.

மேலும், கொசுவைப் பற்றிக் குறிப்பிடும் திருக்குர்ஆன் வசனம்:
”நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்பட மாட்டான்” (2:26)

இவ்வசனத்தின் மூலத்தில் கொசுவைக் குறிக்க “பஊளத்” என்னும் பெண்பால் விகுதி கொண்ட சொல் பயன்படுத்த்ப்பட்டுள்ளது. ’அதனினும் மேற்பட்டது’ என்ற சொற்றொடரிலும் ”ஃபவ்க்கஹா” என்னும் சொல்லால் பெண்பாலான கொசுவையே சுட்டப்பட்டுள்ளது. இதில் ஓர் உயிரியல் நுட்பம் தெரிவிக்கப்படுவதாக அறிஞர்கள் விளக்குகிறார்கள்.

அதாவது, நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான், ஆண் கொசுக்கள் அல்ல என்பது உயிரியலாளர்கள் உற்று நோக்கி ஆராய்ந்து உரைக்கும் உண்மை. அது டெங்கு கொசுவாக இருந்தாலும் சரி சொங்கிக் கொசுவாக இருந்தாலும் சரி. ஒரு சில கொசு வகைகள் ஒல்லி பெல்லிகளாக இருக்கும். வேறு சில வகைகள் சுமோ வீரர்களாக இருக்கும். எல்லாமே பெண் கொசுக்கள்தான். என் வீட்டினுள் புகும் கொசுக்கள் என்னை மட்டுமே துவம்சம் செய்யத் துடிப்படும் சகதர்மினியை ஒன்றுமே செய்யாமல் போய்விடுவதும் இதனால்தானோ என்னவோ?



1 comment:

  1. ஒரு விஷயத்தை விட்டுட்டீங்களே... பெண்கொசுவாகவே இருந்தாலும் உங்களையும் என்னையும் போன்றவர்களை மட்டும் கடித்துவிட்டு மற்ற பலரையும் விட்டுவிடுகிறதே!

    ReplyDelete