Monday, June 20, 2022

துளிகளின் உரையாடல்


            அறிவியல் உலகில் ஐன்ஸ்டீனும், கலை உலகில் தாகூரும் மாபெரும் மேதைகள். 1930-இல் ஜெர்மனியில் உள்ள காபுத் என்னும் மலைக்குன்றின் மேல் இருக்கும் மரவீடு ஒன்றில் ஐன்ஸ்டீனை தாகூர் சந்தித்து உரையாடினார்.

            இரண்டு கடல்கள் சந்தித்துக் கொண்டது போன்ற நிகழ்வு அது.

            ஐன்ஸ்டீனின் மருமான் திமித்ரி மரியனாஃப் மற்றும் தாகூரின் செயலாளர் அமியா சக்ரவர்த்தி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். இரண்டு மேதைகளின் உரையாடல்களை அவர்கள் குறிப்பெடுத்து அறிக்கை தயாரித்தனர். அது 10,ஆகஸ்டு 1930 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானது.

            ”அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது மிக சுவாரஸ்யமானது – தாகூர், ஒரு சிந்தனையாளனின் தலை கொண்ட கவிஞர், மற்றும் ஐன்ஸ்டீன், ஒரு கவிஞனின் தலை கொண்ட சிந்தனையாளர்,” என்று அந்த அறிக்கை மிக அழகாகக் குறிப்பிடுகிறது.  இருவரின் உரையாடல், “இரண்டு கிரகங்கள் பேசிக் கொள்வதைப் போல் இருந்தது” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

            மெய்ப்பொருள் காண்பது பற்றி அவரவரின் துறை சார்ந்த உன்னத அறிவுடன் இருவரும் நிகழ்த்திய உரையாடல் இன்று அறிவுலக வரலாற்று ஆவணம் என்று போற்றப்படுகிறது. அதை இங்கே தருகிறேன்.

l

            


    தாகூர்: நீங்கள் தொன்மையான இரண்டு பொருண்மைகளைக் கணிதத்தால் வேட்டையாடுவதில் முனைந்துள்ளீர்கள் – காலம் மற்றும் இடம். நானோ, மனிதனின் முடிவற்ற உலகம் மற்றும் சத்தியத்தின் பிரபஞ்சம் ஆகியவை பற்றி இந்த நாட்டில் உரையாற்றி வருகிறேன்.

            ஐன்ஸ்டீன்: இறைவன் இந்த உலகத்தை விட்டும் பிரிந்த நிலையில் இருக்கிறான் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா?

            தா: பிரிந்ததாக இல்லை. மனிதனின் முடிவற்ற ஆளுமை பிரபஞ்சத்தை கிரகிக்கிறது. மனித ஆளுமையால் உள்வாங்கப்படாத எது ஒன்றும் இருக்க முடியாது. பிரபஞ்சத்தின் உண்மை என்பது மனித உண்மையே என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

            ஒரு விஞ்ஞானத் தகவலைக் கொண்டு இதை நான் விளக்குகிறேன். பருப்பொருள் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் ஆகியவற்றால் உருவாகியுள்ளது. அவற்றுக்கு இடையே வெளிகள் உள்ளன. ஆனால் பருப்பொருள் திடமானதகாகத் தெரிகிறது. அதேபோல் மானுடம் தனிநபர்களால் ஆனதாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு இடையில் மனித உறவுகளின் இணைப்புகள் இருக்கின்றன. அது மனித உலகிற்கு ஓர் உயிர்ப்புள்ள ஒற்றுமையைத் தருகிறது. இதே விதத்தில் பிரபஞ்சம் முழுவதுமே நம்முடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனித பிரபஞ்சம் ஆகும். இந்தச் சிந்தனையை நான் கலை இலக்கியம் மற்றும் மனிதனின் சமய உணர்வு ஆகியவற்றில் தொடர்ந்து ஓர்ந்திருக்கிறேன்.


            
ஐ: பிரபஞ்சத்தின் இயல்பு குறித்து இரவேறு கோட்பாடுகள் உள்ளன: 1) உலகம் என்பது மானுடத்தைச் சார்ந்த ஒன்று; 2) உலகம் என்பது மனிதத்தை விட்டும் தனித்ததான ஒரு எதார்த்தம்.

            தா: நம் பிரபஞ்சம் நித்தியனான மனிதனுடன் ஒத்திசையும்போது அதை நாம் சத்தியம் என்பதாக அறிகிறோம், அழகு என்பதாக உணர்கிறோம்.

            ஐ: இது முற்றிலும் மனித நோக்கிலான பிரபஞ்சக் கோட்பாடாகும்.

            தா: வேறு விதக் கோட்பாடு இருக்க முடியாது. இவ்வுலகம் ஒரு மனித உலகம் – அதைப் பற்றிய விஞ்ஞானப் பார்வையும் விஞ்ஞானி என்னும் ஒரு மனிதனின் பார்வையே. அதற்கு சத்தியத்தை நல்குகின்ற அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அளவை ஒன்று இருக்கிறது. அது, நமது அனுபவங்களின் வழி தன் அனுபவங்களைக் காணும் நித்திய மனிதன் என்னும் அளவுகோல்.

            ஐ: இது மனிதன் என்னும் சுயத்தின் மெய்யுணர்வாகும்.

            தா: ஆம். ஒற்றை நித்திய வஸ்து. அதை நாம் நமது உணர்ச்சிகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றில் உணர்ந்தறிய வேண்டும். நமது தனிப்பட்ட எல்லைகளால் தனக்கொரு எல்லைகள் உண்டாகிவிடாத அதி மனிதனை நாம் உணர்ந்தறிந்தோம். அறிவியல் என்பது தனிநபர்களுக்கு உட்படாத ஒன்றைக் குறித்ததே கருதுகின்றது. அது தனிநபர் சார்பற்ற உண்மைகளின் மனித உலகமாக இருக்கிறது. சமயம் இந்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நமது ஆழ்ந்த தேவைகளுடன் இணைக்கிறது; சத்தியம் பற்றிய நமது தனிநபர் உணர்வு பிரபஞ்ச அளவில் முக்கியத்துவம் அடைகின்றது. சமயம் சத்தியத்திற்கு மதிப்பீடுகளை இடுகின்றது. சத்தியத்துடனான நமது ஒத்திசைவைக் கொண்டே அது நல்லது என்று நாம் அறிந்திருக்கிறோம்.

            ஐ: அப்படியானால், சத்தியம் அல்லது அழகு என்பது மனிதனை விட்டுப் பிரிந்தது இல்லை அல்லவா?

            தா: இல்லை.

            ஐ: இனி மனிதர்களே இல்லை என்றாகிவிட்டால், அப்புறம் ’பெல்வதீரின் அப்பல்லோ’ (என்னும் தொல் கிரேக்க சலவைச் சிற்பம்) அழகாய் இருக்காது அல்லவா?

            தா: இல்லை.

            ஐ: அழகைப் பொறுத்தவரை இந்தக் கோட்பாட்டை நான் ஒப்புகிறேன், ஆனால் உண்மையின் விசயத்தில் இதை நான் ஏற்கவில்லை.

            தா: ஏன் இல்லை, சத்தியமும் மனிதனின் வழியாகவே உணரப்படுகிறது.

            ஐ: என் கோட்பாடு உண்மை என்று என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் அது என் மதம் ஆகும்.

            தா: அழகு என்பது பிரபஞ்ச சுயத்தில் இருக்கும் பூரண ஒத்திசைவில் உள்ளது. சத்தியம் என்பது பிரபஞ்ச மனத்தின் பூரண அறிவில் உள்ளது. தனி நபர்கள் ஆகிய நாம் அதனை நமது சொந்த தவறுகளாலும் பிழைகளாலும், நமது அனுபவச் சேகரங்களாலும், நமது ஒளியூட்டப்பட்ட உணர்வாலும் அணுகுகிறோம். அப்படி அல்ல எனில், வேறு எப்படி நாம் சத்தியத்தை அறிவோம்?

            ஐ: மானுடத்துக்கு அப்பால் ஆன தனித்த ஒன்றாகப் பார்க்கப்படும் சத்தியமே மெய்யாகும் என்பதை நான் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது. ஆனால் அதை நான் உறுதியாக நம்புகிறேன். உதாரணமாக, ஜியோமிதியில் பைத்தாகோரஸின் தேற்றம் ஒரு தோராயமான உண்மையைச் சொல்கிறது என்றும் அது மனிதனின் இருப்பைச் சார்ந்தது அல்ல என்றும் நான் நம்புகிறேன். எப்படியோ, மனிதனுக்கு அப்பாலான ஒரு எதார்த்தம் இருக்கும் எனில் அந்த எதார்த்தத்தைப் போன்றே சத்தியம் ஒன்றும் இருக்க முடியும். அதே ஏரணப்படி, முன்னதன் இன்மை பின்னதன் இன்மையையும் கோருகிறது.

            தா: பிரபஞ்ச சுயத்துடன் ஒருமித்துள்ள சத்தியம் என்பது மனிதத் தன்மைக்குப் படுவதாகத்தான் இருக்க வேண்டும். இல்லை எனில், தனி நபர்களாகிய நாம் உண்மை என்று உணரும் எதனையும் உண்மை என்றே உரைக்க முடியாது – குறைந்தபட்சம், மனிதனின் சிந்தனைப் புலம் கொண்டு தர்க்க முறையில் அறிவியல் ரீதியாக மட்டுமே எட்ட முடிகின்ற உண்மையும் கூட. இந்தியத் தத்துவத்தின்படி, தூய உன்னத சத்தியமான பிரம்மன் இருக்கிறான். பிரிந்து நிற்கும் தனி மனித மனத்தினால் அல்லது வார்த்தைகளைக் கொண்டு விளக்குவதால் அதனை அறிய முடியாது. தனி மனம் என்பது முடிவிலியில் முற்றிலும் மூழ்கிவிடும்போதே அது அறியப்படுகிறது. ஆனால், அத்தகைய உண்மை அறிவியலுக்கு உரியதாக முடியாது. நாம் ஆலோசிக்கும் சத்தியத்தின் இயல்பு யாதெனில், தோற்றம் ஆகும். அதாவது, மனித மனத்திற்கு உண்மை என்று தோன்றுவதாகும். அதனால், அது மனித உண்மை ஆகும். அதனை மாயை (illusion / தோற்றப் பிழை) என்று அழைக்கிறோம்.

            ஐ: அப்படி எனில், இந்தியக் கோட்பாடாக இருக்கக்கூடிய உங்கள் கோட்பாட்டின்படி, அது ஒரு தனி மனிதனின் மாயை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மாயை.

            தா: தனி உயிரும் ஒருமைக்கு, மானுடத்துக்கு உரியதுதான். எனவே, அனைத்து மனித மனமும் சத்தியத்தை உணர்ந்தறிகிறது; இந்திய மனமும் ஐரோப்பிய மனமும் பொதுவான உணர்ந்தறிதலில் சந்திக்கின்றன.

            ஐ: ஜெர்மன் மொழியில் உயிரினம் என்னும் சொல் அனைத்து மனிதர்களையும் குறிக்கிறது. மேலும், குரங்குகளும் தவளைகளும்கூட அதில் அடங்கும்.

            தா: அறிவியலில் நாம் தனி மனித மனத்தின் தனிப்பட்ட எல்லைகளை எல்லாம் களைந்து கொண்டே போய் பிரபஞ்ச மனிதனின் மனத்தில் இருக்கும் சத்திய தரிசனத்தை அடைகிறோம்.

            ஐ: சத்தியம் என்பது நமது உணர்வை விட்டும் தனித்த பிரிந்த ஒன்றா? என்பதில்தான் சிக்கல் ஆரம்பம் ஆகிறது.

            தா: நாம் உண்மை என்று குறிப்பிடுவது எதார்த்தத்தின் பொருண்மை / அகநிலை (subjective) மற்றும் புறநிலை (objective) ஆகியவற்றின் அறிவார்ந்த ஒத்திசைவில் இருக்கிறது. அவ்விரண்டும் அதி மனிதனுக்கு உரியவை ஆகும்.

            ஐ: நம்முடைய அன்றாட வாழ்வில், நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மனிதனை விட்டும் தனிப்பட்டதான எதார்த்தத்தை நாம் சார்த்தும் நிர்ப்பந்தம் இருக்கிறது. நமது புலன அனுபவங்களை அறிவார்ந்த முறையில் ஒன்றிணைக்க அப்படி நாம் செய்கிறோம். உதாரணமாக, இந்த வீட்டில் யாருமே இல்லை என்றாலும் அந்த மேஜை அது இருக்கும் இடத்தில் இருக்கவே செய்கிறது.

            தா: ஆம், அது தனிநபர் மனத்திற்கு வெளியே இருக்கிறது. ஆனால், பிரபஞ்ச மனத்திற்கு உள்ளேதான் இருக்கிறது. நான் கிரகிக்கும் மேஜை என்பது நான் வைத்திருக்கும் உணர்வுக்கு ஏற்பத்தான் கிரகிக்கப்படுகிறது.

            ஐ: வீட்டில் யாருமே இல்லை என்றாலும் மேஜை அதுவாகவேதான் இருக்கும் – ஆனால் உங்கள் கண்ணோட்டத்தில் இது பிழைபடுகிறது – ஏனெனில், அங்கே மேஜை நம்மை சாராமல் தனித்திருக்கிறது என்பதன் பொருள் என்ன என்பதை நாம் விளக்க முடியாது. மனிதகுலத்துக்கு அப்பால் ஆன சத்தியத்தின் இருப்பு என்ற நமது இயல்பான கண்ணோட்டத்தை விளக்கவோ நிரூபிக்கவோ முடியாது. ஆனால் இது எவரிடமும் தொக்காத ஒரு நம்பிக்கை ஆகும் – ஆதிவாசிகள் கூட. சத்தியத்துக்கு நாம் ஒரு அதிமனிதப் புறநிலையைக் கற்பனிக்கிறோம்; அது என்ன என்பதை நம்மால் சொல்ல முடியாவிட்டாலும், நமது இருத்தல், நமது அனுபவம் மற்றும் நமது மனம் ஆகியவற்றுக்கு அப்பாலான தனித்த இந்த சத்திய எதார்த்தத்தை நாம் அப்படி உருவகிக்காமல் இருக்க முடியாது. 

            தா: மேஜை என்னும் பருப்பொருள் ஒரு தோற்றமே; மனிதன் மனம் இல்லை என்றால் அது மேஜை என்று கிரகிக்கின்ற ஒன்றும் இருக்காது என்பதை அறிவியல் நிரூபித்திருக்கிறது. அதே சமயம், பருப்பொருள் எதார்த்தம் (physical reality, மாம்ச எதார்த்தம்) என்பது மின்னாற்றலின் சுழல்களால் ஆன ஒரு பெருந்திரளே ஆகும் என்ற தகவலும் மனித மனத்திற்கு உரியதே என்பதையும் நாம் ஏற்க வேண்டும்.

            மெய்யறிதலில் பிரபஞ்ச மனத்திற்கும் தனி நபரில் அதுவே கட்டுப்பட்டுள்ள மனநிலைக்கும் இடையில் ஒரு நிரந்தர பிணக்கு இருக்கிறது. நமது அறிவியல், தத்துவம், அறவியல் ஆகியவற்றில் இதனைச் சமாதானம் பண்ணும் செயற்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன. இப்படியோ அப்படியோ, மனிதத்துக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத சத்தியம் ஏதேனும் இருக்கும் எனில் நமக்கு அது முற்றிலும் ‘இன்மை’யே (non-existing) ஆகும்.

            இடத்தில் (in space; வெளியில்) அல்லாது காலத்தில் மாத்திரமே நிகழும் தொடர்ச்சி கொண்ட மனம் ஒன்றைக் கற்பனை செய்வது கடினமன்று. உதாரணமாக, இசைக் குறிப்புகளின் வரிசை. அத்தகைய ஒரு மனத்திற்கு அப்படிப்பட்ட சத்தியக் கோட்பாடு என்பது இசையின் எதார்த்தத்தை ஒத்ததாகும். அதில் பைத்தோகாரஸின் ஜியோமிதிக்கு எந்த அர்த்தமும் கிடையாது. இது தாளின் எதார்த்தம்; இலக்கியத்தின் எதார்த்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அந்தக் காகிதத்தைத் தின்னும் பூச்சியின் மனத்திற்கு இலக்கியம் என்பது ஓர் இன்மை, இல்-பொருள். ஆனால், மனித மனத்திற்கு இலக்கியம் என்பது  அந்தக் காகிதத்தை விடவும் மேலானது, உண்மையான மதிப்புடையது. அதேபோல், மனித மனத்திற்கு புலன் வழியிலோ பகுத்தறிவு ரீதியாகவோ தொடர்புறாத ஓர் உண்மை இருக்கும் எனில், நாம் மனிதர்களாக இருக்கும் வரை அது இன்மையாகவே இருக்கும்.

            ஐ: அப்படி எனில், நான் உங்களை விட சமயத்தன்மை மிக்கவன்!

            தா: என் தனிமனித சுயத்தில் அதி மனிதனையும் பிரபஞ்சத்தன்மை கொண்ட மனித உயிரையும் ஒன்றிணைப்பதே எனது சமயம்.

l

            இந்த நிகழ்வு இரண்டு கடல்கள் சந்தித்துக் கொண்டதைப் போன்றது என்று ஆரம்பத்தில் சொன்னேன். உண்மையில், இது கடல் பற்றி இரண்டு துளிகளின் உரையாடல் என்று சொல்லலாம்.

            அறிவியல் ஆன்மிகம் ஆகிய இரண்டு மெய்யறிதலுக்கும் மனிதனே அளவுகோலாக இருக்கிறான் என்பதை இந்த உரையாடல் காட்டுகின்றது.

            மனிதன் ஒரு பிரபஞ்சமாக இருக்கிறான் என்றும் பிரபஞ்சமே ஒரு மனிதனாக இருக்கிறது என்றும் இந்த உரையாடல் உணர்த்துகிறது.

            இதில் பேசப்பட்ட செய்திகள் புதியவை அல்ல. மிகவும் தொன்மையான சிந்தனைகளே.

            அதி-மனிதன் என்று தாகூர் குறிப்பிடுவதையே சூஃபிகள் “அல்-இன்சானுல் காமில்” (பூரண மனிதன் / முழு மனிதன்) என்று குறிப்பிடுகின்றனர். ”பிரபஞ்ச மனம்” என்று அவர் சொல்வதை சூஃபிகள் “நஃப்சுன் காமிலா” (பூரண மனம் / முழு மனம்) என்று சொல்கின்றனர்.

            அறிவியலும் ஆன்மிகமும் இங்கே ஒன்றை ஒன்று ஆசையுடன் சந்தித்து உரையாடிக் கொள்கின்றன. ஒன்றை ஒன்று உண்மைப் படுத்துகின்றன. இந்தப் புரிதல் மேதைகளுக்கே ஏற்படும்.

            அறிவியலில் உள்ள கலையையும், கலையில் உள்ள அறிவியலையும் கண்டறியும் போக்கு அண்மையில் பெருகி வந்துள்ளது. அறிவியலும் கலையும் ஒன்றாகும் புள்ளியில் சத்தியத்தின் கதவு திறக்கிறது.  

Sunday, November 14, 2021

ராஜாளி ஆகு!

 [மீலாதுந் நபி (ஸல்) நிமித்தம் எழுதப்பட்ட கட்டுரை. அக்டோபர் மாதத்து “ஆமிர் கலீமி” மாத இதழில் வெளியானது.]



                                    கொசுச் சிறகை

                                    உதிர்த்துவிடு,

                                    விசும்பில் எழும்

                                    ராஜாளி ஆகு!

            இப்படி ஒரு கவிதைத் துளி சிந்தையில் எழுந்தது. எனக்காக என்னுள் எழுந்த அறிவுரைதான்.

            சூஃபி மரபின் பரிபாஷை அறிந்தோருக்கு இந்த வரிகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. எனினும், இந்த வரிகளில் இருந்து விரியும் அர்த்தங்களை இங்கே எழுத விரும்புகிறேன்.

            இந்தக் கவிதையின் முதல் வரியில் இருப்பது ’ஜுஹ்து’ என்னும் பற்றின்மை. கொசுவின் சிறகை உதிர்ப்பது என்பது உலகப் பற்றை விட்டுவிடுவது. கொசுவின் சிறகு என்பது இங்கே உலகைக் குறிக்கிறது.

            உண்மையில், இந்த உலகம் இறைவனின் பார்வையில் கொசுவின் சிறகுக்குக் கூட மதிப்பில் சமமாக இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளார்கள்:

           


            ”அல்லாஹ்வின் பார்வையில் இவ்வுலகம் கொசுவின் சிறகுக்குச் சமமாக இருந்திருக்கும் எனில் நிராகரிப்பாளனுக்கு ஒரு துளியும் அவன் எப்போதுமே புகட்டியிருக்க மாட்டான்.” (அறிவிப்பாளர்: சஹ்லிப்னு சஃது (ரலி); நூல்: சுனன் இப்னு மாஜா: 37: கிதாபுஜ்ஜுஹ்து: 3: பாபு மஸலித் துன்யா: ஹதீஸ் எண்:11 (#4110); மேலும்: ஜாமிஉத் திர்மிதி.)

            உலகப் பற்றில் உழலும் மனிதன் ஒரு கொசுவைப் போன்றே இருக்கிறான். அது சாக்கடையில் பிறந்து வளர்ந்து வசிக்கிறது. யாரிடம் செல்கிறதோ அவரின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதுபோல் அவன் கீழ்மையான ஆட்களுடன் தோழமை கொள்கிறான். தான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக அடுத்தவரை உறிஞ்சிப் பிழைக்கிறான்.

            கொசு ஒருபோதும் வானத்தின் உயரங்களை எட்டுவதில்லை. அதைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் அதற்குச் சிந்தை இல்லை. இரண்டு சிறகுகள் இருந்தாலும், அவற்றை வைத்து அது பறந்தாலும், அது வெறும் பூச்சியே அன்றி அது ஒரு பறவை ஆகாது. வெளிப்படையில் ஆன்மிகக் கோலத்துடன் தோன்றினாலும் உள்ளத்தில் உலக இச்சைகள் நிரம்பியிருப்பவன் உண்மையில் ஆன்மிகவாதி ஆகிவிட மாட்டான்.

            எனவே, ’கொசுச் சிறகை உதிர்த்துவிடு’ என்பது உலகப்பற்றை நீக்கிவிடு என்று அர்த்தம் ஆகிறது.

            ”விசும்பில் எழும் ராஜாளி ஆகு”



            ராஜாளி என்பது சூஃபியைக் குறிக்கிறது. இறைக்காதலை இதயத்தில் தாங்கி இறைவனை நோக்கிச் செல்லும் சாதகனைக் குறிக்கிறது. “ஃப-ஃபிர்ரூ இலல்லாஹ்” (51:50) – “அல்லாஹ்விடம் தப்பி ஓடு” என்பதற்குச் செயல் புரிபவனைக் குறிக்கிறது. அவன் ஈருலகையும் விட்டுத் தப்பி இறைவனிடம் ஓடுபவன். அவனே ஆன்மிகத்தில் ராஜாளி (ஷாஹீன்) என்று பாராட்டப் படுகிறான்.

            ராஜாளி என்னும் இந்தக் குறியீடு மவ்லானா ரூமியிடமிருந்து வருகிறது:

            ”மயிலிடமும் குயிலிடமும்

             நேரத்தை வீணாக்காதே;

             ஒன்று வெறும் வண்ணம்,

             மற்றது வெறும் ஓசை;

             வேட்டைக்குப் புறப்படும்

              ராஜாளியாய் இரு!”

            இந்தக் குறியீடு ஷாஹீனிய்யத் – ராஜாளியம் என்று சொல்லத்தக்க அளவில் மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் சிந்தனையால் வளர்க்கப்பட்டது. ஒவ்வொரு முஸ்லிமும் ஈருலகுக்கு அப்பால் பறக்கும் ராஜாளியாக – “தாஇரே லாஹூத்தீ”யாக, அதாவது, தெய்வீக உலகின் பறவையாக – இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். “தூ ஷாஹீன் ஹே” – “நீயொரு ராஜாளி” என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.

            ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலின் 139-ஆம் கவிதையில் சொல்கிறார்:


        ”இளைஞரின் இதயங்களில்

 ராஜாளியின் உயிர் விழிப்படையும்போது

 தம் இலக்கு அவற்றுக்கு

 வானங்களில் தென்படுகின்றது!”

                                


                                 ”உன் இருப்பிடம் உலக மன்னர்களின்

                                    அரண்மனை விதானத்தில் இல்லை

                                     நீ ஒரு ராஜாளி!

                                     மலை முகடுகளில் வாழப் பழகு!”

            ஆன்மிக உலகில் ஒரு ராஜாளியாக வாழ்வதற்கு அவர் காட்டும் முன் மாதிரி – உஸ்வத்துன் ஹசனா (’அழகிய முன்மாதிரி’) என்று இறைவனே சுட்டிக் காட்டிய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களேதான். அவர்களின் வாழ்க்கையில் குறிப்பாக மிஃராஜ் என்னும் விண்ணேற்ற அற்புத நிகழ்வை அல்லாமா இக்பால் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு முஸ்லிமின் ஆன்மிக முன்னேற்றத்துக்கான அளவு கோல் என்று அவர் அதனைக் குறிப்பிடுகிறார்.

”பாங்கே தாரா” என்னும் நூலில் உள்ள ”ஷபே மிஃராஜ்” (நபிகள் நாயகத்தின் விண்ணேற்ற இரவு) என்னும் கவிதையில் சொல்கிறார்:

                        


”’ஆன்மிக விறலுக்கு ஒரு காலடி தூரம்தான்

 அர்ஷ் எனும் இறை விதானம்!’

 விண்ணேற்ற இரவு முஸ்லிம்களுக்கு

 விண்டுரைக்கும் சேதி இதுவே!”

            (குறிப்பு: ஹிம்மத் என்பதை இங்கே விறல் என்று தமிழாக்கியுள்ளேன். இது ஒரு பழந்தமிழ்ச் சொல். ஞானத்துடன் கூடிய துணிச்சல் என்று அர்த்தமாகும்.)

            குர்ஆனிய பிரபஞ்சவியலின்படி (Quranic Cosmology) அர்ஷு என்பது ஏழு வானங்களுக்கு அப்பால், ”சித்ரத்துல் முன்தஹா” என்னும் பிரபஞ்ச எல்லை மரத்துக்கு அப்பால் இருக்கின்றது. இது படைப்புக்களைக் கடந்த நிலை என்று ஞானிகள் விளக்கம் தருகின்றனர். அவ்வகையில் இது அனைத்து வகையான உலகங்களுக்கும் – ’ஆலமீன்’ அனைத்துக்கும் - அப்பால் இருக்கிறது. அங்கு சென்று இறைவனைச் சந்திப்பதே விண்ணேற்றம் ஆகிறது. இதை அல்லாமா இக்பால் நமக்கு நினைவூட்டுகிறார். ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலில் 60-வது கவிதையில் சொல்கிறார்:



நீ ஒரு ராஜாளி!

 பறப்பதே உன் பணி!

 உன் முன்னே வானங்கள்

 இன்னும் இருக்கின்றன!”

            அந்த வானங்கள் எவை? ”ளர்பே கலீம்” என்னும் நூலின் 09-ஆம் கவிதையான “ஜமீனோ ஆஸ்மான்” (பூமியும் வானமும்) என்பதில் சொல்கிறார்:



உன் உலகின் வானம் என்று

 நீ கருதிக்கொண்டிருக்கும் இந்த ஒன்று

 உண்மையில், வேறோர் உலகத்தின்

 நிலமாக இருத்தல் கூடும்!”

இதற்கு முந்தைய கண்ணியில் (பைத்) அல்லாமா கூறுகிறார்: “ஏ சாலிகே ரஹ்! ஃபிக்ரு ந கர் ஸூதோ ஸியான் கா” -  ”ஆன்மிகப் பாதையின் சாதகனே! லாப நட்டம் பற்றிக் கவலைப் படாதே!” – இவ்வரிக்கான விளக்கக் குறிப்பு: ‘நான்கு நிலைகள் இருக்கின்றன: நாசூத், மலக்கூத், ஜபரூத் மற்றும் லாஹூத் (அதாவது, மண்ணுலகம் என்னும் மனிதவுலகம், விண்ணுலகம் என்னும் வானவருலகம், சக்தியுலகம் மற்றும் தெய்வீக உலகம்.) முழுமை நிலையை (காமில்) அடைந்து இறைவனுடன் பொருந்த வேண்டும் எனில் இந்த நான்கு உலகங்களையும் சாதகன் கடந்து போக வேண்டும்.  

            குர்ஆனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றதை விவரிக்கும் அற்புதமான அத்தியாயம் ”அந்நஜ்மு” (”விண்மீன்”; எண்:53). அதன் திருவசனங்களின் வெளிப்படையான அர்த்தங்களை தர்ஜுமா என்னும் மொழிபெயர்ப்பு நூற்களும் தஃப்சீர் என்னும் விரிவுரை நூற்களும் உரைக்கலாம். அவற்றைப் பயில்வோர் அறிஞர் ஆகலாம். ஆனால், ஒருவரின் ஆன்மாவிற்கு விண்ணேற்றம் நிகழ வேண்டும் எனில் அதன் அந்தரங்க ஞானங்கள் திறக்கப்பட வேண்டும். அவை ஏன் நமக்குத் திறப்பதில்லை? அல்லாமா இக்பால் அதற்கான காரணத்தை             ”ளர்பே கலீம்” என்னும் நூலில் உள்ள “மிஃராஜ்” (விண்ணேற்றம்) என்னும் கவிதையில் சொல்கிறார்:



”’வந்நஜ்மு’ என்பதன் உட்பொருள்

 உனக்கு வெளிப்படாததில் வியப்பென்ன?

 உன் கடலோதையின் தத்தளிப்புகள்

 இன்னமும் நிலவிடம் தேவையாகின்றன.”

            ”உன் கடலோதையின் தத்தளிப்புகள் – அலைகளின் கொந்தளிப்புகள் – இன்னமும் நிலவிடம் தேவையாகின்றன” என்பதற்கு ஓர் அறிஞர் விளக்கம் சொல்கிறார்: ”யஃனீ தூ அபீ தக் அனாசிரே அர்பஃ கீ கைது மேன் ஹே – அதாவது நீ இன்னமும் நிலம் நீர் தீ காற்று ஆகிய பொருட்களால் ஆன உலகத்தில் தளைப்பட்டிருக்கிறாய் – அவ்ர் ஜிந்தகீ கே ஹர் ஷஃபா மேன் மாதீ அஸ்பாப் கா முஹ்தாஜ் ஹே – வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீ காரண காரியமான பருப் பொருட்களின் யாசகனாக இருக்கிறாய்.”

            படைப்புக்களின் பக்கம் யாசகனாய் இருப்பவனுக்கு ஆன்மிக முன்னேற்றம் என்னும் விண்ணேற்றம் நிகழாது. ஏனெனில் அது படைப்பவனிடம் பறந்து செல்லும் பயணம். உலகப் பற்றில் உழல்வோருக்கு அது எப்படி வாய்க்கும்? “சாண் ஏறினால் முழம் சருக்கும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல், தூய உள்ளத்தினுள் தீய எண்ணங்கள் நுழையும்போது அதன் ஆன்மிக ஏற்றம் தடைப்படுகிறது, உயரத்தில் இருந்து அது கீழே விழுகிறது. உள்ளத்திற்கு உணவாக எதை ஊட்டுகிறோம் என்பதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி அல்லாமா இக்பால் நமக்கு அறிவுறுத்துகிறார். ”பாலே ஜிப்ரீல்” என்னும் நூலின் 54-ஆம் கவிதையில் கூறுகிறார்:



”தெய்வீக உலகின் பறவையே!

எவ்வுணவால் நின் பறத்தலில்

சோர்வும் தடையும் உண்டாகுமோ

அவ்வுணவை விட மரணமே சிறந்தது!”

            ஆன்மிகம் என்னும் வானில் பறக்க இரண்டு சிறகுகள் வேண்டும். ஒன்று, ஐனிய்யத் என்னும் இறையிணக்கம் பற்றிய ஞானம்; மற்றொன்று, கைரிய்யத் என்னும் அன்மைநிலை குறித்த ஞானம். அல்லாஹ் நமக்கு வலிமையான சிறகுகளை அருள்வானாக. நம்மை அவனின் கையமரும் ராஜாளி ஆக்குவானாக!

Sunday, August 1, 2021

... என்றார் தர்வேஷ் - 2

 

”சொர்க்கத்தில் நாம் இறைவனுடன் உரையாடுவோம் அல்லவா?” என்று கேட்டார்கள்.

            ”ஆம். இறைவனுடன் அவனின் மொழியில் பேசுவோம்” என்றார் தர்வேஷ்.

            ”அறபி மொழிதானே?” என்றார் ஹஜ்ரத்.

            ”மௌனமே இறைவனின் அறபி” என்றார் தர்வேஷ்.

d


            
இறைவனின் பேச்சு நமது மொழிகளைப் போன்றது அல்ல. நாம் பேசும் மொழிகள் படைக்கப்பட்டவை. செவியால் கேட்கப்படும் ஒலி வடிவமும், கண்களால் பார்க்கப்படும் வரி வடிவமும் கொண்டவை.

            இந்த மொழிகளை மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன, பார்க்கின்றன.

            உலகில் உள்ள பெரும்பான்மை மனிதர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும். அஃது, அவரவர் தாய்மொழி. சிலருக்கு இரண்டு மொழிகள் தெரியலாம். மூன்று மொழி அறிந்தோர் இன்னும் குறைவு. பன்மொழி அறிந்தோர் மிகவும் சொற்பமே. உலகில் மொத்தம் 6500 – ஆறாயிரத்து ஐநூறு – மொழிகள் பேசப்படுகின்றன என்றும், ஏறத்தாழ 4000 – நாலாயிரம் – மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கின்றது என்றும் சொல்கிறார்கள். ஆனால், உலகின் பெரும்பான்மை மக்கள் ஒரு மொழி அறிந்தவர்கள் மட்டுமே.

            இதன் பொருள் என்ன? பெரிய பலகை ஒன்றில் நாலாயிரம் மொழிகளிலும் ஒரு வாசகம் எழுதி வைக்கப்பட்டால் உலகில் பெரும்பான்மை மனிதர்களால் அவற்றில் ஒரு மொழியில் எழுதப்பட்டதைத்தான் புரிந்துகொள்ள முடியும். மீதமுள்ள 3999 – மூவாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொன்னூற்று ஒன்பது – எழுத்து வடிவங்களும் அவர்களுக்கு அர்த்தம் விளங்காத கிறுக்கல்கள் மட்டுமே. அங்கே ஒரு மாடு அல்லது கழுதை வந்து நின்றால் அந்த வாசகங்கள் அனைத்தையும் அதுவும் பார்க்கும்! நாலாயிரம் மொழிகளுமே அதற்கு கிறுக்கல்கள்தாம்! இவ்வளவுதான் வேறுபாடு!

            எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் சுருக்கெழுத்து (short-hand) பயின்ற ஒருவர் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் தான் எழுதிய ஏட்டைக் காட்டினார். அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, வாசிக்க இயலவில்லை. அதாவது, எனக்குத் தெரிந்த ஒரு மொழியின் ஒரு எழுத்து வடிவத்தையே வேரு எழுத்து வடிவ முறையில் எழுதிக் காட்டியபோது, எனக்குத் தெரிந்த மொழியே எனக்குப் புரியவில்லை!

            நாம் பேசும் வார்த்தைகளை விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன. நமக்கு நாலாயிரம் மொழிகளில் ஒன்றோ இரண்டோ விளங்கும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நாலாயிரம் மொழிகளுமே புரியாது, அவ்வளவுதான்.

            மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அவற்றுக்கே உரிய மொழிகள் இருக்கின்றன; அவற்றின் பேச்சை நாம் விளங்குவதில்லை என்று குர்ஆன் சொல்கிறது. நம் மொழி அதற்குப் புரியவில்லை. அதன் மொழி நமக்குப் புரியவில்லை. சரி சமம் ஆகிவிட்டது!

            இறைவனின் பேச்சு எப்படிப்பட்டது? இது பற்றி சூஃபி குருமார்கள் ஆழமான விளக்கம் தருகிறார்கள்.

            இறைவனின் பேச்சு ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ என்று வருணிக்கப் படுகிறது. அதாவது, ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை.’

            அறபி என்னும் சொல்லை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. நாம் அதை உச்சரிப்பதைப் கருவியில் பதிவு செய்து பின்னர் வேகம் இன்றி மெது அசைவில் (ஸ்லோ மோஷன்) ஓடவிட்டால் ஒன்றை அவதானிக்கலாம்.

            ”அ” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது ‘றபி’ என்பது இல்லை. ”ற” என்னும் ஓசை உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அ-பி” என்பது இல்லை. “பி” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அற” என்பது இல்லை. இப்படியான முன் பின் நிலையில் ஓசைகள் தோன்றி மறைவது நம் மொழியின் தன்மை. இறைவனின் பேச்சு இப்படி முன் பின்னாகத் தோன்றுவதும் மறைவதும் அன்று. அஃது எப்போதும் இருப்பது. அவன் ஏகன். அவன் பேச்சும் ஏகமே.

            ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை’ என்றால் என்ன பொருள்? அது மௌனம் என்பதுதான். எல்லா மொழிகளும் தோன்றும் மூல நிலை அதுவே. அதற்கு நீங்கள் எந்த மொழியின் பெயரை இட்டு அழைத்தாலும் பொருந்தும். எந்த உயிரினத்தின் மொழியாக அதைக் குறிப்பிட்டாலும் பொருந்தும்.

            “அறபி” என்னும் சொல்லுக்கு ‘பேச்சு மொழி’ என்று பொருள். ஏனைய மொழிகளை அறபிகள் ‘அஜமி’ என்று அழைத்தனர். ‘அஜமி’ என்னும் சொல்லுக்கு ‘ஊமை மொழி’ என்று பொருள். இது பண்டைய அறபிகளின் மொழிச் செருக்கைக் காட்டுவதாகக் கருதலாம்.

            ஆனால், ஆன்மிகத்தில் அறபி என்பதன் அடையாளம் வேறு. ஞானிகளின் பேச்சு அறபி எனப்படும். அஞ்ஞானிகளின் பேச்சு ’அஜமி’ எனப்படும்.

அதாவது, நாக்கு உள்ளவர்கள் ஒலிப்பதை எல்லாம் பேச்சு என்று மதிக்க முடியாது, மொழி என்று ஏற்க முடியாது. வெளிப்படையில் அதுவும் மொழியாகத் தோன்றலாம், மனித உருவம் போல. ஆனால், எப்படி மனித உருவம் பெற்றிருப்பதலாயே ஒருவரை “மனிதன்” என்று நாம் மதிப்பிட்டுவிட முடியாதோ அதே போல், எழுத்துக்களின் ஓசை இருப்பதாலேயே ஒருவரின் பேச்சை மொழி என்று மதிப்பிட்டுவிட முடியாது.

இறைவனின் ’பேச்சு’ என்பது ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ – ஓசை இலது, எழுத்து இலது. அதாவது, மௌனம். அது வெறுமனே சப்தமின்மை அன்று. அப்படிப் புரிந்து கொண்டால் நீங்கள் மௌனத்தை அறியவில்லை, அதனைத் தவற விடுகிறீர்கள் என்று பொருள்.

மௌனம் நேர்மறையானது; சப்தமின்மை எதிர்மறையானது.

ஒன்றின் இன்மை அன்று மௌனம். அது இருப்பின் பண்புகளில் ஒன்று.

சப்தமின்மை என்பது ஓசை இழப்பு. எனவே, மொழி இழப்பு. மௌனமோ அனைத்து மொழிகளின் ஊற்றுக்கண்.



இறைவனின் பேச்சாகிய மௌனத்தை அடைந்தவர்கள், அறிந்தவர்கள் அதன் தொடர்பில் இருந்து பேசும்போது மொழி அர்த்தமுடையதாகிறது. அதற்கே ’அறபி’ என்று பெயர்.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, நபிகள் நாயகம் பேசியதும் அறபி, அவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்கர் பேசியதும் அறபி, அவர்களின் கடும் பகைவன் அபூஜஹல் பேசியதும் அறபி.

ஆனால், ஆன்மிக விளக்கத்தின்படி நோக்கும்போது, நபியும் அபூபக்கரும் பேசியது அறபி; அபூஜஹல் பேசியது அறபி அல்ல.

அபூஜஹல் பேசிய பேச்சு ஓசையின் கோலத்தில் அறபியாக இருந்தாலும் உண்மையில் அது ‘அஜமி’யே ஆகும். ஆனால், அபூபக்கரின் பேச்சு மட்டுமன்று,  மௌனமும்கூட ’அறபி’தான்.

நபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பான பாங்கு ஒலித்தபோது அவரின் உச்சரிப்பு தவறாக இருந்தது பற்றி மதீனாவைச் சேர்ந்த நபித்தோழர்கள் சிலர் குறை பேசினர். ஆனால், அபிசீனியா (எத்தியோப்பியா) நாட்டினர் ஆன - ‘ஹபஷி’ ஆன - பிலாலின் பாங்கொலியை அல்லாஹ் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஹஜ்ரத் பிலால் அவர்களின் ஆன்மிக உணர்வு அவ்வளவு உன்னதமாக, ஆழமாக இருந்தது. வெளிப்படையில் மொழி இலக்கணப்படி அவர்களின் உச்சரிப்பு பிழையாகத் தெரியலாம். ஆனால், அந்தப் பிழையான உச்சரிப்பையே இறைவன் சரியான அறபி என்று ஏற்றுக்கொண்டான். ஏனெனில் அது அழியும் உலகின் அறபி அன்று, நித்திய ஜீவனான இறைவனின் அறபியில் இருந்து எழுந்த ஒன்று.

உருது மகாகவி இக்பால் சொல்கிறார்: ”ரெஹ் கயீ ரஸ்மெ அதான், ரூஹே பிலாலி ந ரஹீ” (ஜவாபே ஷிகவா:16). அதாவது,

“பாங்கின் சடங்கு

பேணப்படுகிறது;

பிலாலின் உயிர்மை

அதனுள் இல்லை!”

’பிலாலின் உயிர்மை’ என்பது எது? ஏக இறைவனின் பேச்சில் அவரின் பேச்சு அர்ப்பணம் ஆகிவிட்டது.  ’உமரின் நாவிலும் இதயத்திலும் நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை அருளியுள்ளான்’ (’இன்னல்லாஹ ஜஅலல்-ஹக்க அலா லிசானில் உமர வ கல்பிஹி’ – நூல்: திர்மிதி; ஹதீஸ் எண்: 3682 / (49:78))  என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஆன்மிக நிலை அது.



”தொழுகையில் இருக்கும்போது ஒரு விசுவாசி நிச்சயமாகத் தனது ரட்சகனிடம் (அதாவது, இறைவனிடம் அந்தரங்கமாக) உரையாடுகிறான்” (இன்னல் முஃமின இதா கான ஃபிஸ் ஸலாத்தி ஃப-இன்னமா யுனாஜீ றப்பஹு – நூல்: சஹீஹ் புகாரீ:405; சஹீஹ் முஸ்லிம்: 547) என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்.

உரையாடல் என்றால் இரண்டு தரப்பிலும் பேச்சுக்கள் நிகழ வேண்டும். தொழுகையில் அடியான் இறைவனின் திருமறை வசனங்களைத்தான் ஓதுகிறான். அது இறைவன் அவனிடம் பேசுவதாகும். ஓசை கொண்ட மொழியால் பேசுவது “அக்வால்” எனப்படும். ஓசையும் எழுத்தும் இல்லாத பேச்சுடைய இறைவன் தனது பேச்சினை மனிதர்களின் மொழி வடிவத்தில் வெளிப்படுத்தினான். அதை ஓதும் அடியானின் உள்ளத்திலும் உயிரிலும் ஏற்படும் உணர்வு நிலைகளே அடியான் அவனிடம் உரையாடுவதாகும. அதற்கு “அஹ்வால்” என்று பெயர்.

ஓசை இல்லா பேச்சுள்ள இறைவன் திருமறையின் மூலம் “அக்வால்” கொண்டு தன் அடியானிடம் பேசுகிறான். ஓசையுள்ள பேச்சுள்ள அடியான் “அஹ்வால்” கொண்டு தன் இறைவனிடம் பேசுகிறான். இவை ’அறபி’யின் இரண்டு நிலைகள்.

Thursday, July 15, 2021

தங்காத தங்கம்

 

வாழ்க்கை நிரந்தரம் இல்லை, வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை என்னும் சிந்தனை எழாத மனிதன் இருக்க முடியாது. அதைப் பாடாத கவிஞனும் இருக்க முடியாது.

நிலையாமை பற்றி எத்தனையோ கவிதைகள் உள்ளன. அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை மிக எளிதில் எதிர்மறைத் தொனியைப் பெற்றுவிடலாம். அதில் ஒரு சோர்வும் சோகமும் சுலபமாகச் சேர்ந்துவிடும்.

நிலையாமை பற்றிப் பேசும் கவிதை ஒன்று தன் அழகால் நம்மை வசீகரிக்கிறது என்பது மிகவும் அரிதானது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் அத்தகைய கவிதை ஒன்றை எழுதியுள்ளார். “Nothing gold can stay” என்னும் கடைசி வரியே அதன் தலைப்பாக இடப்படுகிறது.

அது மிகவும் சிறிய கவிதை. எட்டு வரிகள் மட்டுமே. ஒவ்வொரு வரியும் மிக நிதானமாக நகரும் கவிதை அது. ஆம், அந்தக் கவிதையை நாம் அவசரமாக வாசிக்க முடியாது. அதன் அகத்திலேயே ஓர் உள்ளார்ந்த நிதானம் இருக்கின்றது.

நிலையாமை என்பது காலத்தால் உணரப்படும் ஒன்று. ’நேற்று இருந்தவன் இன்று இல்லை’ என்பதே இந்த உலகத்தின் பெருமை என்கிறார் திருவள்ளுவர்.

நிலையாமையைப் பேச வரும் ராபர்ட் ஃபிராஸ்ட் காலத்தையே கையில் எடுக்கிறார்:

            இயற்கையின் முதற்பசுமை

            தூய தங்கம்;

            தக்க வைக்கக் கடினமானது

            அவளின் இந்நிறம்.

விடியலில் எல்லாம் பொன்னிறமாகப் பொலிகின்றன. இயற்கையின் முதற் பசுமை மீது மஞ்சள் வெயில் விழுந்து அதைத் தங்கமாகப் பிரகாசிக்கச் செய்கிறது.

இயற்கை என்பது இங்கே வாழ்க்கை என்பதன் குறியீடு என்று விமர்சகர்கள் விளக்கம் தருகின்றனர். முதற்பசுமை என்பது இளமைப் பருவம். தங்கம் என்பது வாழ்வின் மதிப்பு. தங்கமே உலோகங்களில் மதிப்பு மிக்கது. அதுபோல் இளமைப் பருவமே வாழ்வில் மிகவும் மதிப்புடைய காலம்.

வைகறைப் பொழுதில் சேவல் கூவும் காட்சியை வருணிக்கும் வள்ளலார் “பொற்கோழி கூவிற்று” என்கிறார். கோழி என்பது சேவலைக் குறிக்கும் பொதுப் பெயர். அது என்ன பொற்கோழி? அதிகாலையில் பொன்னிற வெயில் தன் மேல் விழுவதால் சேவல் தங்கத்தால் ஆனது போல் தோன்றுகிறதாம். அதனால் அது பொற்கோழி!

இந்த வரியைத் தலைப்பாக வைத்து ஒரு தனிக் கட்டுரை எழுதியுள்ள திருலோக சீதாராம் இதற்கு ஒரு நயமான விளக்கம் நவில்கிறார். பொன் என்பது பணத்தை, செல்வத்தைக் குறிக்கும். காலை விடிந்ததும் மனிதர்களில் பலரையும் எழுப்பிவிடுவது அவர்கள் மனத்தில் உள்ள பணம் சேர்க்கும் ஆசைதான். பொன் என்னும் கோழியே அவர்களின் உள்ளத்தில் கூவி எழுப்புகிறது என்கிறார் அவர்.

ஆனால், அதிகாலையின் அந்தப் பொன்னிறம் வெகு நேரம் நீடிப்பதில்லை. அதுபோல் இளமைப் பருவம் என்பதும் சீக்கிரமே போய்விடுகிறது.

இயற்கையின் வண்ணங்களிலேயே இந்த விடியற் பொழுதின் தங்க நிறம்தான் தக்க வைக்க மிகவும் கடினமானது என்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட். ஏன் இதைச் சொல்ல வேண்டும்? காரணம் உண்டு. தம் வாழ்வின் பருவங்களில் மனிதர்கள் தக்க வைக்க நினைப்பது இளமைப் பருவத்தையே. பிள்ளைப் பருவத்தில் இருக்கும்போது எப்போது வளர்ந்து வாலிபர் ஆவோம் என்று ஆசைப்படுகிறார்கள். முதுமை எட்டிப் பார்க்கும் வயதில் இளமையை இழுத்துப் பிடித்து வைக்க என்னென்ன வழிகள் என்று எண்ணுகிறார்கள்.

அடுத்து ஃபிராஸ்ட் சொல்கிறார்:

                    அவளின்


    கொழுந்து இலை


    ஒரு மலர்;


    ஆனால் அது

    சொற்ப நேரமே.

விடியலின் பொற்கதிர்கள் செய்யும் ஜாலத்தால் கொழுந்து இலையே ஒரு மலரைப் போல் காட்சி தருகிறது. எத்தனை அழகான காட்சிப் பிழை! புலன்களை ஏய்க்கும் மாய மயக்கு.

இளமைப் பருவம் என்பது எல்லாருக்குமே உண்மையான மலராக இருப்பதில்லை. இளமையில் எல்லாருக்குமே தம் வாழ்க்கை மலர்ந்து மணம் வீசப் போகிறது என்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது. ஆனால், அரிதாக ஒரு சிலரின் வாழ்க்கை மட்டுமே மலர்கிறது. பலரின் வாழ்க்கை வெறும் இலையாகவே இருந்துவிடுகிறது.

            பிறகு

            இலையாகத் தணிகிறது

            இலை.

நான் பூ இல்லை, வெறும் இலைதான் என்று வாழ்க்கை ஒத்துக்கொள்ள வைத்துவிடுகிறது. ஆ! எத்தனை வேதனையான ஒப்புதல்!

            அப்படித்தான்

            ஏதேன் தோட்டம்

            சோகத்தில் மூழ்கியது.

ஒவ்வொரு இளைஞனும் ஆதம், ஒவ்வொரு இளைஞியும் ஏவாள். இளமைப் பருவம் அவர்களுக்கு சொர்க்கத்தின் ருசியைக் காட்டுகிறது. அப்போது அவர்களின் வாழ்க்கை ஏதேன் தோட்டமாகவே இருக்கிறது. ஆனால் அது நிலைப்பதில்லை. வாழ்வின் கனியை சுவைத்துக் கொண்டிருக்கும்போதே அது மறைந்து விடுகிறது. சொர்க்க இழப்பின் சோகம் கவிந்து விடுகிறது.

            அப்படித்தான்

            பகலாகி விடுகிறது

            விடியல் விரைவில்;

            நிலைப்பதில்லை

            பொன்னான எதுவும்.

என்று தன் கவிதையை முடிக்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட்.

நாள் என்பது வாழ்வின் குறியீடு என்றால், விடியல் என்பது இளமைப் பருவம், அந்தி என்பது மரணம். வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசியிருந்தால் அவர் அந்தி நேரத்தைச் சுட்டிக் காட்டியிருப்பார். இளமை நிலையாமை பற்றிப் பேசுவதால் விடியற் பொழுதைப் பாடுகிறார்.

ஒரு நாள் முடிவதில் இல்லாத சோகத்தை அதிகாலையின் பொன்னிற அழகு மாறிப்போவதில் உணர்கிறது கவியின் உள்ளம்.