Sunday, November 30, 2025

காந்தி கலந்த ’காஃபி’


            தமிழில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் நான் ரசித்தும் வியந்தும் வாசித்த கட்டுரைகளின் பட்டியல் ஒன்றுண்டு. அதில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “’அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ தமிழக்கத்தில் காப்பி : ஒரு பண்பாட்டு வரலாறு” என்னும் கட்டுரையும் ஒன்று. எத்தனை தடவை வாசித்தாலும் சுவாரஸ்யம் குறையாத ஓர் ஆய்வுக் கட்டுரை!

            பிரிட்டிஷார் தமிழகத்தில் காஃபி பானத்தை அறிமுகப் படுத்தியபோது அதனைத் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது என்ற செய்திகள் சுவையானவை. ஆரம்பத்தில் அதை ஒரு லாகிரி பானமாகவும், கள்ளை விட மோசமான ஒன்று எனவும் தள்ளிய சமூகமே பின்பு அதை அருந்துவது ஒரு பண்பாட்டு அடையாளம் என்று ஆக்கிக் கொண்டனர் என்பது வரலாறு.

            காப்பி, தேயிலை, கொக்கோ, மற்றும் சாராயம் ஆகியவை நச்சுப்பண்டங்கள் என்று மறைமலையடிகள் கண்டித்திருக்கிறார் என்பது காஃபி நம் முன்னோர்களால் எப்படி அணுகப்பட்டது என்பதற்கு ஒரு சான்று.

            மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரிமத்திலும் தேநீருக்கும் காஃபிக்கும் தடை இருந்தது என்று செய்தி. ஆனால், தமிழில் அழகாக எழுதிய சமய அறிஞர்களில் ஒருவரான பி.ஸ்ரீ. அவர்களின் கருத்து ஒன்றை ஆ.இரா.வே தன் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்: ”என்னுடைய மூன்று காதலையோ நான் ’காந்தி, காஃபி, கம்பன்’ என்று சுருங்கக் கூறிவிடுகிறேன்.” (நான் அறிந்த தமிழ்மணிகள், சென்னை, 1971, ப.69).



            ஜெயகாந்தன் எழுதிய ”ஜெய ஜெய சங்கர” நாவலில் ஆதி என்று ஒரு கதாபாத்திரம். அவர் காந்தியவாதி. அவருக்கு காஃபி என்றாலே ஒரு வெறுப்பு. “ஆதி காபியை விஷம் என்று கருதினார். பல நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வறுமைக்குக் காரணம் இந்தக் காபி என்கிற பேய்தான். ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கணிசமான பகுதியை அந்தப் பேய் வடிகட்டி இறுத்துக் கொள்கிறது என்றெல்லாம் ஆதி சொல்லுவார்” (ப.204).

            காந்திக்கு காஃபி அருந்துவது குறித்து எதிர்க்கருத்து இருந்திருக்கலாம். ஆனால், தென்னிந்தியாவில் இருந்து வருவோருக்காக கஸ்தூர்பாவின் சமையலறையில் தேநீரும் காஃபியும் தயாரிக்க அவர் அனுமதித்திருந்தார். தன் ஆசிரம விதியை ஒரு சிறுவனுக்காக அவர் தளர்த்திய நிகழ்வும் உண்டு.


            
ஒருமுறை அவரின் ஆசிரமத்தில் இருந்த தமிழ்ச் சிறுவன் ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு வந்துவிட்டது. அவன் காந்தியின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றான். உடல்நலம் சற்றுத் தேறி வந்தது. அந்தப் பையன் காஃபியின் ருசியில் மனதைப் பறிகொடுத்திருந்தான். உணவு இல்லாமல்கூட இருந்துவிடுவான். ஆனால் காஃபி குடிக்காமல் அவனால் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தன் வீட்டில் பருகிய காஃபியின் மணமும் ருசியும் அவன் நினைவில் எழுந்து வாட்டிக் கொண்டிருந்தன. காந்தி அவனிடம் ஒருநாள் இப்படிக் கேட்டார்: “இப்ப ஒடம்பு தேறி நல்லாத் தெரியிறியே! ஒனக்குப் பசி கெளம்பீருக்குமே? சாப்பிட என்ன வேணும் சொல்லு, உப்புமாவா? தோசையா?” அவனுக்கு அந்த இரண்டு உணவுமே ஒவ்வாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே காந்தி கிண்டலாக அப்படிக் கேட்டார். எனவே அவன் யோசிப்பதைப் பார்த்து அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவனுக்குச் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. சற்றும் தாமதிக்காமல், “எனக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா?” என்று அவன் காந்தியிடம் கேட்டான். காந்தி மேலும் சிரித்துக் கொண்டே சொன்னார்: “ஓ! திருந்தாத பாவிப்பயலே! அதுதான் வேணுமா ஒனக்கு?” இதைக் கேட்டதும் அந்தச் சிறுவனின் முகம் வாடிப் போவதைக் கவனித்துவிட்டு அவர் அவனிடம் சொன்னார்: “கட்டாயம் ஒனக்கு ஒரு கப் காஃபி கிடைக்கும், கவலைய விடு. மிதமான காஃபிதான் ஒன் வவுத்துக்கு நல்லது. சரி, காஃபியோட சேத்து சாப்பிட என்னா வேணும். உப்புமாவோ தோசையோ செய்யலாம்தான். ஆனா, காஃபிக்கு அது பொருந்தாது. சூடாக டோஸ்ட் போட்டுத் தரச் சொல்றேன். ஒரு தாம்பாளம் ஒனக்கு அனுப்பி வைக்கிறேன்.” இப்படிச் சொல்லிவிட்டு காந்தி போய்விட்டார்.

            அந்தப் பையன் காத்திருந்தான். ‘சபர்மதி ஆசிரமத்தில் காஃபி! நிச்சயமாக இது ஓர் அற்புதம்தான்! காந்தி கண்டிபானவரே தவிர கொடுமை செய்பவர் அல்லர். அவர் அன்பானவர்’ என்று எண்ணி அவன் சந்தோஷப்பட்டான்.  இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. கஸ்தூர்பா ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார் என்பதைக் கூட யோசிக்காமல் கேட்டுவிட்டோமே, காந்தி போய் அவரைச் சங்கடப்படுத்த வேண்டியிருக்குமே என்றெல்லாம் அவனுக்கு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

            சிறிது நேரத்தில் மரப் பாதுகையின் டக் டக் சத்தம் கேட்டது. காந்தி தன் கையில் தாம்பாளம் ஒன்றை ஏந்திக்கொண்டு அங்கே வந்தார். அது கதர் துணி போட்டு மூடப்பட்டிருந்தது. அதை அவன் முன் வைத்துத் திறந்தார். பிரட் டோஸ்ட்டும் ஆவி பறக்க ஒரு கப் காஃபியும் இருந்தன.   

            ”இந்தா, நீ கேட்ட டோஸ்ட்டும் காஃபியும். இதை நானே கலந்து கொண்டு வந்தேன் என்பதை மறந்துவிடாதே. நீ மதராஸிதானே, நான் நல்லா காஃபி போட்டிருக்கேனான்னு சொல்லு,” என்று காந்தி அவனிடம் சொன்னார்.

            ”ஆனா, இத நீங்களே ஏன் தூக்கிக்கிட்டு வந்தீங்க? வேற யாரையாச்சும் அனுப்பியிருக்கலாமே? ஒங்களுக்கு நான் சிரமம் கொடுத்துட்டேன். மன்னிக்கணும்” என்று அவன் சொன்னான்.

            ”சரி, சரி. ஒங் காஃபிய வீணாக்கிடாதே.  ஆறிப் போன காஃபி கெட்ட காஃபி. பாரு,   பா இப்போ ஓய்வு எடுத்துக்கிட்டிருக்கா. அவளைத் தொந்திரவு செய்ய வேணாம்னு நானே கலந்து கொண்டாந்தேன். சரி நான் இப்ப போறேன். தாம்பாளத்த வாங்கிக்க வேற ஆளு வருவாங்க” என்று சொல்லிவிட்டு காந்தி அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த காஃபி மிதமாகவும் இதமாகவும் இருந்தது.

            இந்த வரலாற்று நிகழ்வைப் படித்தபோது அந்தப் பையன் என் கற்பனையில் ஒரு குண்டுப் பையனாகத் தோன்றினான், உசிலை மணி போல. நரசுஸ் காஃபி விளம்பரத்தில் வரும் வாசகத்தை அவன் மாற்றிச் சொன்னான்: “பேஷ்! பேஷ்! காஃபின்னா காந்தி கலந்த காஃபிதான். ரொம்ப நன்னாருக்கு!”

            காஃபி என்பது இன்று மிக வேகமாகப் பரவி வரும் ஒரு கார்ப்பரேட் வணிகச் சந்தையாக மாறியுள்ளது. ஐ.டி துறையில் பணியாற்றும் இந்திய இளைஞரிடம், அமெரிக்கர்களைப் போல் காஃபி அருந்துதல் அதிகமாகியுள்ளது. சென்னையின் மிகப் பெரிய வணிக நிலையமான எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குள் நுழைந்ததுமே அமெரிக்காவின் முன்னணி காஃபி பிராண்டான ஸ்டார் பக்ஸ் வரவேற்கிறது. ஐந்நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை ஒரு கப் காஃபிக்குச் செலவு செய்து அருந்தும் நபர்களைக் காண முடிகிறது.



            வீட்டில் காஃபி கலந்து குடிக்கலாம் என்றால் அதிலும் ரசனை மெல்ல மெல்ல உயர் தரம் நோக்கித் தாவிச் சென்று விட்டது. கடைகளில் காஃபி என்றாலே ப்ரூ காஃபிதான் கொடுக்கிறார்கள். ஒரு நிலையில் எனக்கு அதன் ருசி பிடிக்காமல் போய் சன்ரைஸ் பிடித்திருந்தது. அப்போது யாரோ நெஸ்கஃபே கிளாசிக் ஒரு பாட்டில் வாங்கிக் கொடுத்தார்கள். அதை ருசி பார்த்த பின்னர் சன்ரைஸ் பிடிக்காமல் போய்விடவே சில ஆண்டுகள் தொடர்ந்து கிளாசிக் காஃபி வாங்கி இலவசக் கோப்பைகள் எல்லாம் சேகரித்தேன். இடையிடையே வேறு ப்ராண்டுகளையும் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். கிளாசிக் மாதிரி வரவில்லை. இதிலேயே நின்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அபூதபியில் இருந்து நெஸ்கஃபே கோல்டு வந்து சேர்ந்தது. அதன் ருசியில் கிளாசிக்கே சப்பென்று ஆகிவிட்டது. போத்தல் காலியானதும் திருச்சியிலேயே கிடைக்கிறதா என்று தேடியபோது ஒரு கடையில் அது ருஷ்ய எழுத்துக்களிட்ட வில்லையுடன் கிடைத்தது. இறக்குமதி செய்யப்பட்டது என்றார்கள். விலையும் சகாயமாக இருந்தது. அது தீர்ந்த பின்னர் மீண்டும் அந்தக் கடையில் கேட்டபோது வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். நல்லூழாக, பல்பொருள் அங்காடிகளில் கிடைத்தது. அப்படிப் போய்க் கொண்டிருந்தபோது டேவிடாஃப் என்று ஒரு பிராண்ட் வந்து மூளையைப் பிறாண்டவே அதில் ரிச் அரொமா, ஃபைன் அரோமா, க்ரீமெ அண்டு இண்டென்ஸ் என்று வரிசையாக வாங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் கடுங்காப்பி – எக்ஸ்ப்ரஸ்ஸோ – குடிப்பதற்கு மனம் வரவில்லை! ‘பால் இல்லாமல் காஃபியா? நெவர்’ என்ற அக்மார்க் இந்திய மனநிலையில்தான் இருக்கிறேன். ’கறந்த பசும்பாலை உடனே காய்ச்சி அதில் ஃபில்டர் காஃபி போட்டுக் குடித்திருக்கிறீர்களா? எங்க வீட்ல அப்படித்தான் குடிப்போம். அந்த ருசியெல்லாம் இதுல எங்கே வரப்போவுது?” என்று பானு அடிக்கடி சொல்வாள்.



            இடையில் ஒரு மாறுதலுக்காக ”ஸ்லீப்பி ஔள்” (தூங்கும் ஆந்தை) என்னும் பிராண்டில் அராபிக்கா காஃபி வாங்கினேன். இருமருங்கும் செவிமடல் துருத்திய ஆந்தை ஒன்றின் தலையை பாவித்து அதன் போத்தலும் மூடியும் வடிவமைக்கப் படிருந்தன. அதை அழகு பார்த்துக் கொண்டே காஃபி பருக நன்றாக இருந்தது. ஆனால் மனம் மீண்டும் நெஸ்கஃபேயின் பக்கம் திரும்பி சில நாட்களுக்கு முன் ஆல்டா ரிக்கா வாங்கி வந்தேன்.

            வீட்டுப் புழக்கத்துக்கே இப்படியெல்லாம் வகை வகையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, ஷாப்பிங் என்று கிளம்பிப் போய் வெளியே சிற்றுண்டி சாப்பிட நேர்ந்தால் காஃபி பருக என்று அதற்கும் பலவிதக் கடைகள் முளைத்துள்ளன. பொதுவாக, காப்புச்சீனோ என்னும் வகை எல்லோரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்பே தமிழ்த் திரைப்பாடலில் அந்தச் சொல் ஒலித்துவிட்டது. ’காஃபி டே’வில் அமர்ந்தால் காப்புச்சீனோ, லாத்தே, மற்றும் மோக்கா ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று பருகுவேன். மோக்கா என்பது காஃபியில் சாக்லேட்டும் கலக்கப்படுவது. ஐரிஷ் காஃபி என்று ஒன்றை மெனுவில் பல கடைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருமுறை, மதுரை விஷால் டி மாலில் ஒரு கடையின் மெனுவில் அதைப் பார்த்துவிட்டு புதிதாகப் பருகிப் பார்ப்போமே என்று கேட்டேன். கடைக்காரர் பதறிப் போய், “பாய். இது என்னன்னு தெரியுமா?” என்றார். “புதுசா இருக்கேன்னு கேட்டேங்க” என்றேன். “இது லிக்கர் கலக்குற காஃபி பாய்” என்றார். அதிர்ந்து போய், “என்னங்க, காஃபி கடைல இதெல்லாம் விக்கிறீங்க? ஒங்க கடை பேரு கெட்டுப் போகாதா?” என்று கேட்டேன். ”அப்படியெல்லாம் ஆவாது பாய். இங்க வர்ற ஸ்கூல் பசங்களே இதுதான் வேணும்னு வாங்கிக் குடிச்சிட்டுப் போறாங்க” என்று அவர் சொன்னார். அதிலிருந்து புதிய பெயர்களை மெனுவில் பார்த்தாலே சற்றுத் தயக்கமாக இருக்கும். என்ன ஏது என்று விசாரிக்காமல் வாங்குவது இல்லை.

            தமிழில் ஆங்கிலம் அதிகமாகக் கலக்கிறதே என்று கவலைப் படுகிறோம். ஆங்கிலம் என்பதே பல்வேறு மொழிகளின் கலவைதான். எனவே ஆங்கிலம் கலக்கிறது என்றால் உலகில் உள்ள எல்லா மொழிகளும் கலக்கிறது என்றுதான் அர்த்தம். விஞ்ஞானத்தின் வழியாக ஆங்கிலம் வந்து கலப்பது தொடர்கிறது. ஐபேட், ஐஃபோன், டேப்லட் என்றெல்லாம் அது ஒரு பக்கம் கலந்து கொண்டு போகிறது. இராம கி ஐயா போன்றோர் தூய தமிழில் அவற்றுக்கான சொற்களைக் கண்டறிந்து அறிவித்தாலும் புழக்கத்தில் கொண்டு வர என்ன வழி என்று அறியாமல் தவிக்கிறோம். இன்னொரு பக்கம் உணவின் வழியாகப் பிற மொழிச் சொற்கள் வந்து கலப்பதும் நடக்கிறது. முன்பு அப்படித்தான் பிரியாணி, குலாப் ஜாமூன், ஜாங்கிரி, கபாப் எல்லாம் வந்தது. கிரில் சிக்கன், ஷவர்மா சில ஆண்டுகளுக்கு முன் வந்தன. பீட்சா பர்கர் ஆகியவையும் மிகப் பிரபலமாகிவிட்டன. ‘பீ…ட்சாவாம். பேரைச் சொன்னாலே சும்மா குமட்டுதுல்ல… ஹெஹ்ஹெஹ்ஹே’ என்று ஏதோ அறிவார்த்தமாக ஹாஸ்யம் பண்ணிவிட்டது போல் பேசும் பட்டிமன்ற அசடுகளையும் அதைக் கேட்டுச் சிரிக்கும் ரசிக மந்தைகளையும் தாண்டி அச்சொல் பொதுப் புழக்கத்தில் ஏற்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இப்படி அருவருப்பு ஊட்டினால் அச்சொல் ஒழிந்துவிடுமா என்ன?

            இப்போது அறபியோ ஃபார்சியோ அல்ல, இத்தாலிய, எஸ்பஞோல், மற்றும் ஃப்ரெஞ்சுப் பதங்கள் உணவுப் பெயர்கள் வழி நுழைந்து கொண்டிருக்கின்றன. நூடுல்ஸ் என்பது ஜெர்மன் மொழிச் சொல்லாம். ஸ்பேகட்டி, பாஸ்ட்டா என்னும் இத்தாலியச் சொற்கள் இன்று வீட்டில் இலகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டன. 


            
சென்ற மாதம் பானுவுடன் சிற்றுண்டி கொள்ள (திருச்சி, தில்லை நகர் இரண்டாம் குறுக்குச் சாலை மேற்கில் “கிரில் சிக்கன்” உணவகத்துக்கு அருகில்) ‘பராஷீ’ சென்றபோது நான் மோக்கா கேட்டேன். அவள் கொர்ட்டாடோ கேட்டாள். முன்னதாக, ஃபஹிட்டா சிக்கன் கேசடிய்யா மற்றும் சிக்கன் கொர்தோன் ப்ளியூ ஆகியவை உண்டோம். இதெல்லாம் எஸ்பஞோல் மொழிச் சொற்கள் என்று தெரிகிறது.  



            பத்து நாட்களுக்கு முன் நியூ ஜெர்சியிலிருந்து தம்பி யூனுஸ் வந்திருந்தான். அமெரிக்கர்கள் லிட்டர் கணக்கில்தான் காஃபி குடிப்பார்கள் என்பதைப் பற்றியும் பேச்சு ஓடிற்று. அவன் எக்ஸ்ப்ரஸ்ஸோ பருகுவானாம். அதைத் தயாரிக்க என்று வீட்டில் ஒரு இயந்திரம் வைத்திருப்பதாகச் சொன்னான். ஸ்டார் பக்ஸ் பற்றி நான் கேட்டேன். “இங்கே டீக்கடைல இழுத்து இழுத்து ஆத்தி கால் டம்ளருக்கு நுரை தள்ளி குடுக்குறாங்கல்ல, அதத்தான் அவனும் செய்றான். காத்த அடிச்சு ஏத்தி ஏத்தி பாதிக்குப் பாதி நுரை போட்டுத் தர்றான். பக்கிங்க, அத ஒரு ஃபேமஸ் பிராண்டுன்னு குடிக்கிதுங்க” என்றான்.

            ஒருநாள், பராஷீக்குப் போனோம். நாங்கள் மூவர் காப்புச்சீனோ கேட்க, பானு தனக்கு கொர்ட்டாடோ கேட்டாள். அது, காஃபி-நீரும் பாலும் சம விகிதத்தில் கலந்து போடப்படுவது. மிக மிதமாகவும் இதமாகவும் இருப்பதால் அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ’வயிற்றுக்கு இதமாக’ என்று சொல்லி, தமிழ்ச் சிறுவனுக்கு காந்தி கலந்த காஃபி என் நினைவுக்கு வந்தது. கோப்பைகளை அலங்கரிக்க காஃபியின் மீது நுரையால் இதயங்கள் வரைந்து கொண்டு வந்து பரிமாறுகிறார்கள். திறன் மிக்க ஒரு பாரிஸ்டா மிக லாவகமாகவும் நேர்த்தியாகவும் இதயங்களையும் பூக்களையும் காஃபியில் வரைந்துவிடுகிறார். காந்தி ஒரு பாரிஸ்டாவாக மாறி, தன் இதயத்தையே கலந்து பரிமாறிய கொர்ட்டாடோ ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு எப்போதோ கிடைத்துவிட்டது!

No comments:

Post a Comment