Monday, November 17, 2025

கள்வனின் காதலி

 


            உலகப் புகழ் பெற்ற எகிப்திய எழுத்தாளரும் நோபல் விருதாளருமான நஜீப் மஹ்ஃபூழ் எழுதிய “அல்-லிஸ்ஸு வல் கிலாப்” என்னும் நாவலின் தமிழாக்கம் “களவாணியும் நாய்களும்” என்று டிசம்பர் 2024-இல் சீர்மை பதிப்பக வெளியீடாக வந்தது. அதற்கான விமர்சனக் கூட்டம் இணைய வழியில் 15-11-2025 அன்று மாலை நடந்தது. எழுத்தாளர் தோழர் கார்த்திகைப் பாண்டியன் நூல் விமர்சன உரை ஆற்றிய கூட்டத்தில் பார்வையாளர் நேரத்தில் நானும் கொஞ்சம் பேசினேன். அதற்கான காரணமும் தேவையும் இருந்தது.

            நஜீப் மஹ்ஃபூழின் இரண்டு நாவல்கள் இதுவரை தமிழில் வந்துள்ளன (இரண்டுமே சீர்மை பதிப்பக வெளியீடுகள்). முதல் நாவல் 1959-இல் வெளியான “அவ்லாதே ஹாரிதுனா” என்பதாகும். தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலையில் அறபிப் பேராசிரியராகப் பணியாற்றிய பஷீர் அஹ்மது ஜமாலி  இந்நாவலை ”நம் சேரிப் பிள்ளைகள்” என்னும் தலைப்பில் தமிழாக்கித் தந்துள்ளார். அறுநூறு பக்கங்களில் விரியும் இந்தப் பெருநாவல் எகிப்தில் மிகப் பெரிய கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உண்டாக்கிய ஒன்று. நிகோஸ் கஸான்சாக்கிஸின் “தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்றைஸ்ட்”டுடன் இந்த நாவலை ஒப்பிடுகிறார்கள்.


            
நஜீபின் இன்னொரு நாவலைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவரும் ஒரு ஜமாலிதான் [அதாவது, சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலிய்யா மதரஸாவில் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) பட்டம் பெற்றவர் என்று பொருள்.] இவர், ஜமால் முகமது கல்லூரியில் அறபிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர். அலி இப்ராஹிம் ஜமாலி. என் நண்பர்.

            இந்த நாவலை அவர் முதலில் ஆங்கிலத்தில்தான் மொழி பெயர்த்தார், அறபி மூலத்தில் வாசிக்கச் சிரமப்படும் தன் மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக. இதுவே கல்விப் புலத்தில் ஓர் ஆச்சரியம்தான். ‘அந்த அளவு ஆங்கிலப் புலமை இல்லை ஐயா, தமிழில் தாருங்கள்’ என்று கேட்ட மாணவர்களுக்காகத் தமிழிலும் பெயர்த்தார் என்பது மேலும் ஆச்சரியம். அப்போது இது பற்றி அவர் என்னிடம் கலந்துரையாடியபோது செய்யுங்கள் சீர்மையில் கொண்டு வரலாம் என்று சொல்லி சகோ. உவைஸிடம் பேசி அப்படியே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து நூல் வெளியீடும் நிகழ்ந்தது.

            இந்த நாவலுக்கான தலைப்பை ஆங்கிலத்தில் “The Thief and Dogs” என்று அலீ இப்ராஹிம் ஜமாலி இட்டிருந்தார். தமிழில் “திருடனும் நாய்களும்” என்னும் தலைப்பு ஈர்ப்பாக இல்லை என்பதால் “கள்வனும் நாய்களும்” என்று இட்டுப் பார்த்திருக்கிறார். அது குறித்து ஒருமுறை என்னுடன் ஆலோசித்தார். “கள்வனின் காதலி” என்று கல்கி எழுதிய குறுநாவல் ஒன்று உண்டு. [இந்தத் தலைப்பை எஸ்.ஜே.சூர்யா தன் திரைப்படம் ஒன்றுக்குச் சூட்டினார். அதுதான் மாணவர்களுக்குத் தெரிகிறது என்பது வேறு விடயம்.] அதே போல் “கள்வனும் நாய்களும்” தலைப்பும் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் அலி இப்ராஹிம் அதனை விடவும் ‘சிக்கெனப் பிடிக்கும்’ தலைப்பு, அதாவது ’catchy’-யான தலைப்பு வேண்டும் என்று கேட்டார். “களவாணியும் நாய்களும்” என்னும் தலைப்பை நான் பரிந்துரைத்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதையே சூட்டிவிட்டார். இந்த நிகழ்வுகளை முந்தாநாள் நடந்த நிகழ்விலும் நினைவு கூர்ந்து குறிப்பிட்டார். [தலைப்பு நன்றாக இருக்கிறது என்று கார்த்திகைப் பாண்டியனும் பாராட்டினார்.]

            ”இருத்தலியப் பதற்றம் மீதான ஒரு நாவல்” (A novel of existential angst) என்று நான் இதைக் குறிப்பிட விரும்புகிறேன். விமர்சனக் கூட்டத்திற்குப் பின், இந்த நாவலின் உள்ளடக்கம் பற்றி மணிக்கணக்கில் பேசலாம் என்றும், ஒவ்வொருவரின் புரிதலுக்கு ஏற்ப பல்வேறு கோணங்களில் இந்த நாவலை விளக்க முடியும் என்றும் தெரிந்தது. இந்த நாவலின் protagonist ஆன ‘களவாணி’ ச’ஈத் மஹ்ரான் தவிர ஏனைய முக்கியப் பாத்திரங்கள்: 1. அவன் துரோகிகளாக (நாய்களாக) நினைக்கும் மூவர் – க) நபவிய்யா (ச’ஈத் மஹ்ரானின் முன்னாள் காதலியும் முன்னாள் மனைவியும் ஆன இவள் அவனை போலீசில் காட்டிக் கொடுத்துவிட்டு அவனின் நண்பனைத் திருமணம் செய்து கொண்டவள்.), உ) இலைஷ் ஸித்ரா (ச’ஈதின் முன்னாள் நண்பன்; நபவிய்யாவின் இந்நாள் கணவன்.), ங) றவூஃப் இல்வான் – பத்திரிகையாளர் (ச’ஈதின் ஆதர்ஷமான போராட்டத் தலைவர். அவனுக்கு கம்யூனிசக் கொள்கையைக் கற்பித்த ஆசான், அவன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர், தற்போது அரசு அதிகாரத்தின் ஓர் அங்கமாக இயங்கி வளமான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு பூர்ஷ்வா.); 2. முஅல்லிம் தறாஜான் – கஃபே வைத்திருப்பவர் (ச’ஈதின் நண்பரான இவர்தான் அவனுக்குக் கைத்துப்பாக்கி தருகிறார்.); 3. ஷைஃகு அலீ அல்-ஜுனைதி – ஸூஃபி குருநாதர் (ச’ஈதின் தந்தை இவரிடம் தீட்சை பெற்றிருந்தார். ச’ஈது ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவனுக்குப் போதிப்பவர்.); 4. நூர் (எ) ஷலபிய்யா – வேசி (ச’ஈதை ஒருதலையாகக் காதலித்து வந்திருப்பவள். சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலாளியாக மாறியவள், அவனுக்கு அடைக்கலம் தருபவள்).

            நாவலின் முழுக் கதையை அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை சிலருக்கு வாய்ப்பே தராமல், அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற விடாமல் தொடர்ந்து அடித்துத் துவைத்துப் போடுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் ச’ஈத் மஹ்ரான். இதில் அவன் எங்கிருந்து ஸூஃபி மகானின் போதனைகளுக்குச் செவி கொடுப்பான். அவை அவன் காதில் ஏறுவதே இல்லை. முடியாது என்பதுதான் இங்கே செய்தி. ஆன்மிக வழியில் அவன் செல்ல முடியவில்லை என்றாலும், இன்னொரு வாசல் திறக்கத்தான் செய்கிறது. அது நூர் என்னும் விலைமகளின் வழியில் வருகிறது. அவளின் காதலையும் அவனால் உடனடியாக ஏற்க முடியவில்லை. அந்த அளவுக்கு துரோகிகளைப் பழிவாங்கும் உணர்வே அவனிடம் மிகைத்திருக்கிறது. அவர்களின் கதையை முடித்துவிட்டு நூருடன் எங்காவது போய் நல்ல வண்ணம் வாழலாம் என்று அவன் திட்டமிடுகிறான். அது தோல்வி அடைகிறது. திடீரென்று அவள் எங்கோ காணாமல் போய்விடுகிறாள். அவன் போலீசில் சரணடைய வேண்டியதாகிறது. அத்துடன் நாவல் முடிந்துவிடுகிறது.


            
’அவன் காதலித்துத் திருமணம் செய்த நபவிய்யா அவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள். எவளின் காதலை ஏற்காமல் புறக்கணித்தானோ, அந்த நூர் (எ) ஷலபிய்யா ஒரு வேசியாக மாறியிருந்தாலும் அவன் மீதான உண்மைக் காதலை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறாள். அவன் அவளை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை அவனுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கிறாள். இது எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது?” என்று கார்த்திகைப் பாண்டியன் சொன்னார்.

           இதைக் கேட்டபோது நான் ஜெயகாந்தன் ஒரு மேடையில் பேசியதை நினைவு கூர்ந்தேன்: “ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. நம்மைத் தெரிந்தவர்களை எல்லாம் நாம் இழந்துவிடுகிறோம்; நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மைத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.”

            நஜீப் மஹ்ஃபூழ் நாவலை நிறுத்திய இடத்தில் அதன் கதை முடிந்து விடுகிறதா? ஒரு நாவலின் கதை முடிந்துவிட முடியுமா? ஒவ்வொரு நாவலாசிரியனும் கதையை ஒரு கட்டத்தில் வாசகனிடம் கையளித்துவிட்டு விலகிப் போகிறார் என்றே தோன்றுகிறது. ‘இதுவரை நீ ஈடுபாட்டுடன் இதை வாசித்து வந்துவிட்டாய். எனவே உன் மீது நான் நம்பிக்கை வைக்கிறேன். இதை நீ தொடர்ந்து எழுதிக்கொள்’ என்று நாவலாசிரியன் தன் வாசகனிடம் சொல்வதாகவே படுகிறது.

            இந்தக் கதையைத் தொடர்ந்து நீட்டிப்பதற்கான வாயில்களை நஜீப் மஹ்ஃபூழ் வைத்திருக்கிறார். என் கற்பனையில் அப்படி இதன் கதை நீண்டு சென்றது. தனித்துவமான கற்பனையெல்லாம் ஒன்றுமில்லை. பெரும்பான்மை வாசகருக்குத் தோன்றுவதுதான் எனக்கும் தோன்றுகிறது. ச’ஈத் எப்படியாவது நூருடன் சேர்ந்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதுதான் அது. அப்படித்தான் நானும் கற்பனித்தேன். அப்போதுதான் ச’ஈத் மர்வான் மற்றும் நூர் ஆகிய இரண்டு பாத்திரங்களுக்கான ‘முகங்கள்’ எனக்குக் கிடைத்தன: ஃபகத் ஃபாசிலும் நஸ்ரிய்யாவும்.

            போலீசாரால் கைது செய்யப்பட்ட ச’ஈத் மர்வான் பின்னர் மனநிலை சரியில்லாதவன் என்று காரணம் காட்டி விடுதலை செய்யப்படுகிறான். மனநல விடுதியில் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டியதாகிறது. பின்னர் அங்கிருந்து வெளியேறி நூரைத் தேடிக் கொண்டு அலைகிறான். அவள் வெகு தொலைவில் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருக்கிறாள் என்றறிந்து அங்கே போகிறான். ஆங்கு அவள் செவ்விளக்குப் பகுதி ஒன்றில் கண்ணாடி அறைக்குள் (பளிக்கறை புக்க காதை!) இருக்கிறாள். அந்தக் கண்ணாடிச் சிறை உடைகிறது. அவள் அவனை நோக்கிப் பாய்ந்து வருகிறாள். என் கற்பனை அங்கே ’சுபம்’ போட்டுவிட்டது. உண்மையில், ஒவ்வொரு கதையிலும் வாசகனுக்குதான் நிம்மதி தேவைப்படுகிறது போலும்.

            இந்தக் கற்பனை 2020-இல் வெளியான ”ட்ரான்ஸ்” என்னும் மலையாளத் திரைப்படத்தின் கதையாகும் (இயக்கம்: அன்வர் ரஷீத்; திரைக்கதை: வின்செண்ட் வடக்கன்.) அதில் மதம் எப்படிக் கார்ப்பரேட் மயமாகிப் போகிறது, பெரு வணிகமாகிறது, எப்படி அது புரட்டு அற்புதங்களை (hoax miracles) உருவாக்கி மக்களை மூளைச் சலவை செய்து கொழிக்கிறது என்று காட்டியிருப்பார்கள். அதன் கருவியாக இருந்த விஜு பிரசாத் என்பவன் (அற்புதச் சுகமளிக்கும் பாஸ்டர் என்னும் தோரணையில் இவனின் புனைபெயர் ஜோஷுவா கார்ல்டன்), எஸ்தர் லோபெஸ் என்னும் விலைமாதுக்கும் மெய்க்காதல் உண்டாகிறது. மோசடி நிறைந்த போலி மத சாம்ராஜ்யத்தை விட்டு விலகி அவன் ஆம்ஸ்டர்டாமிற்குப் போய் அவளைச் சந்திப்பதாகக் கதை முடியும். என் சிந்தையில் அந்த மாந்தர்கள் ச’ஈத் மர்வான் மற்றும் நூரின் தொடர்ச்சியாகிப் போனார்கள். ஒரே கதையைத்தான் எல்லா எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு கோட்பாடு உண்டு. அதற்கு இது ஒரு சான்று போலும்.

No comments:

Post a Comment