Tuesday, November 4, 2025

ரகசியங்களின் ரகசியம் - 3

 


இனி, பொருள்முதல்வாதம் அல்லது நாத்திகம் முன் வைக்கும் பார்வைகளும் இந்த நாவலில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைத் தருகிறேன்:

1.“மறுமை என்பதொரு பகிர்மாயை… நம் எதார்த்த வாழ்க்கை சகிக்கக்கூடியதாக இருக்க வேண்டி உருவாக்கப்பட்ட ஒன்று” (‘The afterlife is a shared delusion… created to make our actual life bearable.’ P.5.)

2. “மனித மனம் மாற்றத்தை வெறுக்கிறது. நிலவும் நம்பிக்கைகளைக் கைவிடுவதை மனம் புறக்கணிக்கிறது. அதனால்தான், மதங்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக மலையளவு ஆதாரங்கள் இருந்தாலும் அவை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கின்றன.” (ப.174)

3. ஆன்மிகவாதிகளுக்கு உண்டாகும் அகக் காட்சிகள் எல்லாம் ஆழமான ஆன்மிக ஏக்கத்தினால் உருவாகும் வலிந்த துல்லியமான காட்சிகள்தாம் (vividly persuasive visions brought on by a profound spiritual longing.) லாங்டன் அடிக்கடி தன் மாணவர்களிடம் சொல்வார்: “இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கானல் நீர் என்பது பாலைவனத்தில் செல்லும் தாகித்த பயணிகளால்தான் காணப்படுகிறது – சதுக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களால் அல்ல. நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதையே பார்க்கிறோம்.” (ப.193) [இந்தக் கடைசி வரிக்கு ஓர் உதாரணமாக இந்த நாவலின் நான்காம் அத்தியாயத்தில் காட்டப்பட்டிருக்கும் Hermann Grid என்னும் வரைபடத்தைச் சொல்லலாம்.]

4. அப்டன் சின்க்ளேர் சொன்னார்: டிமோர் மார்ட்டிஸ் எஸ்ட் பேட்டர் ரிலிஜனிஸ் – மரண பயமே மதத்தின் தந்தை. (ப.193)

இந்த நாவல் செக் குடியரசின் தலைநகரான ப்ரேக் (Prague) நகரில் நடக்கிறது. கதைப்படி இந்த நகரில் உள்ள ஃபிளமான்கோ பூங்காவின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் ஓரிடத்தில் சிஐஏ-வின் அதிகாரியான ஃபின்ச் என்பவன் ரகசிய ஆராய்ச்சிக்காக நவீன விஞ்ஞானக் கூடம் ஒன்றை நிறுவியிருக்கிறான். அதன் பெயர் Threshold என்பதாகும். Threshold என்பது வாசல் / முற்றம் / முன்றில் என்பதைக் குறிக்கும். “ப்ரேக் என்னும் சொல்லுக்கு முற்றம் என்றே பொருள்” (‘The word ‘Prague’ literary means ‘threshold’’. p.31) அந்த ரகசிய இடத்திற்குள் நுழைய கெஸ்னர் ஒரு காந்த அட்டை வைத்திருக்கிறாள். அது ஒரு கறுப்பு நிற அட்டை. அதன் ஒரு ஓரத்தில் PRAGUE என்று மட்டும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூன்றாம் எழுத்தான A வித்தியாசமாக எழுதப்பட்டிருப்பதை லாங்டன் கவனித்துவிடுகிறார். அது ஒரு குறியீடு என்று புரிந்துகொள்கிறார்.

அந்தக் குறியீடு தமிழுடன் தொடர்புடையது என்று அறிந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பகுதியைச் சற்றே தமிழாக்கித் தருகிறேன்:

”கெஸ்னர் குனிந்து அந்த அட்டையைப் பார்த்தாள். ஒரு கணம் தடுமாறினாள். ’ஓ, இது ஒன்றுமில்லை,’ என்று தன் கைப்பையை மூடினாள், ’இது என் ஹெல்த் கிளப் அட்டை.’

”ஓ? ஆர்வமாகத்தான் கேட்டேன்,” என்றார் லாங்டன், “அதுல மூனாவது எழுத்து, அது என்ன?’

அவள் அவரை வித்தியாசமாகப் பார்த்தாள். “எது, A-ங்ற எழுத்தா?”

“அது A இல்ல” என்றார் லாங்டன். அதை அவர் தெளிவாகப் பார்த்திருந்தார். “அது ஒரு வேல் ஈட்டி (Vel Spear).”

இரண்டு பெண்களும் குழப்பத்துடன் பார்த்தனர்.

“மன்னிக்கணும், அது என்ன?” என்றார் கெஸ்னர்.

“அதோட குறுக்குக் கோடுதான் வித்தியாசம்,” என்றார் லாங்டன். “A-ல ஒத்தக் கோடுதான் இருக்கும். அந்த லோகோவ்ல அதுக்கு மூனு கோடுகளும் ஒரு பொட்டும் இருக்கு. மேல் நோக்கிய ஒரு ஈட்டிய நீங்க பாக்குறப்பவ்லாம் –அதான், கேப்பிட்டல் A-யோட வடிவத்த, மூனு குறுக்குக் கோடுகளும் ஒரு பொட்டும் வச்சாப்ல பாக்குறப்பவ்லாம் – அது குறிப்பான அர்த்தமுள்ள ஒரு விசேஷமான அடையாளம்தான்.”

“ஓ, அதுக்கு ஆரோக்கியம்னு அர்த்தமா?” என்று கேத்தரின் வெள்ளந்தியாகக் கேட்டாள்.

கொஞ்சம்கூட பக்கத்துல வரல என்று லாங்டன் நினைத்தார். ”வேல் ஈட்டீங்றது சக்தியைக் குறிக்கிற ஹிந்து குறியீடு. வேலோட முனை ஞானத்தைக் குறிக்கிறது, கூர் தீட்டப்பட்ட மனம், அறியாமையைத் துளைத்துச் சென்று உங்கள் பகைவர்களை வீழ்த்தும் மேலான அகப்பார்வை. ஹிந்துப் போக்கடவுளான முருகன் எங்கெ போனாலும் வேலையும் கொண்டு போவான்.” (ப.195)

முருகன் ஹிந்து மதத்தின் போர்க்கடவுள் என்று டான் ப்ரவ்ன் எழுதியிருக்கிறார். தமிழ் மொழியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தால் மேலும் சரியாக இருந்திருக்கும், எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், தமிழ் எங்கெங்கெல்லாமோ சென்று பல மொழிகளில் உருமாறி இடம் பெற்றுள்ளது. உதாரணமாக, இந்த நாவலில் வரும் அமெரிக்கத் தூதரின் பெயர் Heide Nagel. இதில் இரண்டாம் பெயர் நேகல் அல்லது நாகல் என்று உச்சரிக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியில் இதன் அர்த்தம் ஆணி (nail) என்பது. ”ஆணி அடிச்சாப்ல அங்கயே நிக்கிறான்” என்று சொல்வார்கள் அல்லவா? பிடிவாதத்தை அது குறிக்கும். அதே அர்த்தத்தில்தான் ஆகுபெயராக இதை ஆட்களுக்கு வைத்துக் கொள்கிறார்கள், உறுதியானவள் என்று காட்டுவதற்கு. ஆனால் நகத்தையும் ஆங்கிலத்தில் nail என்றுதான் சொல்கிறார்கள். நகம் என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் நகுன் என்றாகிறது. அதுவே ஜெர்மனியில் நாகல் அல்லது நேகல் என்று ஆகியிருக்கலாம்.

இதே போல் சம்ஸ்கிருத மொழியும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் தாக்கம் செலுத்தியிருக்கிறது. இந்தக் கதை நடை பெறும் ஊரான Prague என்பதை செக் மொழியில் Praha என்றுதான் சொல்கிறார்கள், எழுதுகிறார்கள். அதற்கு முற்றம் அல்லது வாசல் என்று அர்த்தம் என்பதை மேலே பார்த்தோம் அல்லவா? எனில், சம்ஸ்கிருத வார்த்தையான ப்ரகாரம் என்பதே அதன் மூலச் சொல்லாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது [ப்ரகாரம் என்பது கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி. இதனை திருமுற்றம் என்றும் கூறுப.]

 Prague என்னும் ஊர் பழங்காலத்தில் இருந்தே மீவுளவியல் நிகழ்வுகளை வரவேற்கும் இடமாக இருந்துள்ளது. அதாவது அது மனிதப் பிரக்ஞை பிரபஞ்ச பிரக்ஞையை அணுகும் நிலை என்ற வாசல் / முற்றம் மனித மூளையில் திறக்கும் செயற்பாடுகளின் களமாக இருந்துள்ளது. அங்கேதான் இரண்டாம் ருடால்ஃப் என்னும் அரசன் பாதாள அறையான “ஸ்பெகுலம் ஆல்கமியே” என்னுமிடத்தில் ரசவாதக் கலையில் சோதனைகள் செய்தான். இங்கேதான் மீப்புலக்காட்சியர் (Clairvoyants) ஆன ஜான் டீ மற்றும் எட்வர்டு கெல்லி ஆகியோர் ஆவிகளுடனும் வானவர்களுடனும் பேசும் பயிற்சிகளை நிகழ்த்தினார்கள். இங்கேதான் மர்மமான யூத எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்கா பிறந்து வளர்ந்து எழுத்துப்பணி ஆற்றி, மெடமார்ஃபசிஸ் (உருமாற்றம்) என்னும் மீ-எதார்த்த நாவலை எழுதினார் (ப.31).

Avante Garde என்னும் கலகத்தன்மையும் புதுமுயற்சிகளும் கொண்ட கலைச் செயற்பாடுகளுக்கு வரவேற்பளித்த ஊரான ப்ரேகில் வாழ்ந்த காஃப்காவுக்கு வித்தியாசமான சிலை ஒன்று இருக்கிறது. ஜரோஸ்லாவ் ரோனா என்பவர் வடிவமைத்த அந்தச் சிலைக்கு ’சோச்சா ஃப்ரான்ஸே காஃப்கி’ என்று பெயர். தலையும் முன கைகளும் இல்லாத ஒருவன் தன் தோளில் காஃப்காவைச் சுமந்து செல்கிறான் என்பதாக அச்சிலை அமைந்துள்ளது. இது ஃப்ரான்ஸ் காஃப்கா எழுதிய Description of a Struggle என்னும் கதையை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் வரும் கோலம் என்னும் கதைமாந்தன் தன்னை அதனுடன் அடையாளம் காண்கிறான்.

 இந்த நாவலில் விஞ்ஞானம் குறித்த செய்திகள் அதிகம் இடம் பெற்றாலும் குறிப்பாக ஒரு செய்தியை நான் மிகவும் ரசித்தேன். அது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையே வம்புக்கு இழுக்கும் அறிவியல் பகடி! கேத்தரீன் சொல்கிறாள்: “இரட்டையான இரண்டு அணுத்துகள்களுக்கு இடையிலான தொடர்பாடல் உடனடியானது என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் இயற்பியலாளர்கள் நிரூபித்துவிட்டனர்… ஆனால் நாம் இன்னமும் ‘ஒளியின் வேகத்தை விட விரைவாகப் பயணிப்பது எதுவுமில்லை’ என்னும் ஐன்ஸ்டீனின் மந்திரத்தை ஓதிக்கொண்டிருக்கிறோம்!” (ப.174)

கேத்தரின் அப்படிச் சொன்னதன் அடிப்படையில் அறிவியல் பரிசோதனை ஒன்று இருக்கிறது. இரட்டையான இரண்டு அணுத்துகள்களில் ஒன்றின் துருவ நிலையை காந்தம் கொண்டு திருப்பினால், அந்த இரட்டையில் மற்றொரு துகள் அதே அறையில் இருந்தாலும் அல்லது பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், உடனடியாக – அதாவது அதே சமயத்தில் – தானும் தலைகீழாகத் திரும்பிவிடுகிறது! பின்னாளில் செயற்கைக் கோளின் உதவியுடன் சீனர்கள் இந்தப் பரிசோதனையை நிகழ்த்தி உறுதிப்படுத்தினார்கள். அந்தப் பரிசோதனையில் இரட்டைத் துகள்கள் 1200 மைல்கள் இடைவெளியில் வைக்கப்பட்டிருந்தன!

நடத்தையொத்திசைவு (behavioral synchronization) என்று விஞ்ஞானத்தில் கூறப்படும் நிகழ்வும் உடனடியாக (instantly), அதாவது ஏக காலத்தில் நிகழ்வதேயாகும். இது பற்றிக் கேத்தரின் சொல்லும் கருத்தும் சுவையானது: “மரபார்ந்த விஞ்ஞானியர் சிலர் நடத்தை ஒத்திசைவு என்பது உண்மையில் ஒரு மாயை (illusion)… இந்த உயிரினங்கள் வெறுமனே ஒன்றுக்கொன்று எதிர்வினை ஆற்றுகின்றன. அது மிகத் துரிதமாக நிகழ்வதால் தாமதத்தை நம்மால் உணரமுடிவதில்லை என்று சொல்கின்றனர். பரிதாபம். மீன்களின் கூட்டம் ஒன்றிற்கு முன்னும் பின்னுமாக மிகுவிசை கேமராக்கள் வைத்துப் படம் பிடித்துள்ளனர். அந்தக் கேமாராக்கள் அணுக் கடிகாரங்களுடன் இணைக்கப்பட்டவை. அந்த மீன்களின் ஒத்திசைவு – ஒன்றுக்கொன்றான எதிர்வினை – ஒளியின் வேகத்தை விட துரிதமாக நிகழ்கிறது என்று அவை காட்டியுள்ளன!” (ப.236)

மனம்தான் ஒளியை விட வேகமானது என்பார்கள். ”விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பிய படி செல்லும் உடல் கேட்டேன்” என்றார் பாரதியார். காக்கை குருவி மீன் எல்லாம் இந்த விசயத்தில் நம் போன்ற ஜாதி அல்ல போலும். அவற்றுக்கு மனத்தில் நிகழும் கணத்திலேயே உடலும் அதன்படி இயங்குகிறது. உண்மையில், அவற்றுக்கு உடல் வேறு மனம் வேறாக இல்லை போலும்!

இந்த நாவலில் நான் ரசித்த உத்திகளில் ஒன்று இதில் வரும் ஜோனாஸ் ஃபவ்க்மேன் என்னும் கதாபாத்திரத்தின் உருவாக்கம் சார்ந்தது. இவர் ஒரு நூல் பதிப்பாளர். இவரின் நிறுவனம் ‘பெங்குவின் ராண்டம் பதிப்பகம்.’ இது உலகின் மிகப் பெரிய பதிப்பகம். இதன் தலைமையகம் அமெரிக்காவின் மிட்-டவுன் மன்ஹட்டனில் இருக்கும் ராண்டம் ஹவுஸ் டவர் என்னும் இருபத்துநான்கு அடுக்கு மாடிக் கட்டடம். ஆண்டு ஒன்றுக்கு இருபதாயிரம் நூல்களை வெளியிட்டு ஐஞ்ஞூறு கோடி டாலர்கள் வருமானம் பார்க்கிறது. டான் ப்ரவ்ன் எழுதியிருக்கும் ”தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ்” என்னும் இந்த நாவலையும் அந்தப் பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது! 1900-ங்களின் ஆரம்பத்தில் பென்னட் செர்ஃப் மற்றும் டொனால்ட் எஸ். க்ளாப்ஃபர் ஆகியோர் இந்தப் பதிப்பகத்தை ஒரு சிறிய மறுபதிப்பு நிறுவனமாகத் தொடங்கியபோது அவர்களின் இலக்கிய ரசனை ஒரு முகப்பட்டதாக இல்லாமல் பல்துறைகளில் விரவிக் கிடந்ததால், அதாவது  random-ஆக இருந்தால் ‘பெங்குவின் ராண்டம் பதிப்பகம்’ என்று பெயர் வைத்தார்களாம். இன்று அந்தப் பதிப்பகம் உலகெங்கும் புத்தகங்களை வெளியிடுகிறது. ஓர் உதாரணம் தருகிறேன்: நம் தமிழ் கூறு நல்லுலகின் சிறந்த ஆய்வறிஞரான ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ஆங்கில நூல்களான “லவ் ஸ்டாண்ட்ஸ் எலோன்’, மற்றும் ‘ஸ்வதேஷி ஸ்டீம்’ ஆகிய நூல்களை இந்தப் பதிப்பகமே வெளியிட்டுள்ளது!

இந்த நாவலின் ஆரம்பத்தில் டாக்டர் கெஸ்னர் நினைக்கிறார்: “நீ இறக்கும்போது, நீ இறக்கிறாய். முற்றுப் புள்ளி” (’When you die, you die. Full stop.” P.6). இந்தப் பொருள்முதல்வாதப் பார்வைக்கு எதிரான கருத்துமுதல்வாதம் இந்த நாவலில் வெற்றி பெறுவதாகக் கதை அமைகிறது. பருவுடலின் மரணத்திற்குப் பிறகும் பிரக்ஞை அல்லது வாழ்க்கை தொடரும் என்னும் சிந்தனை முன் வைக்கப்படுகிறது. இதைத்தான் நாவலின் இறுதிப் பகுதியில், ராபர்ட் லாங்டன் “ரகசியங்களின் ரகசியம்” (The Secret of Secrets) என்று சொல்கிறார். ஆன்மிகப் புலத்தில் இது வியக்கத்தக்க ஒரு ரகசியம் இல்லைதான். ஆனால், விஞ்ஞானப் புலத்தில் இது மாபெரும் ரகசியத்தின் திறப்புதான்.

இந்த நாவலை நான் வாசிக்க ஆரம்பித்த நாளில் ’ஆவி பறக்க’ [குறியீடெல்லாம் இல்லை -  நீராவிதான்] சுடச்சுட காஃபி ஒரு கப் அருந்திவிட்டுதான் ஆரம்பித்தேன். அமெரிக்காவின் முதன்மை காஃபி நிறுவனமான ’ஸ்டார் பக்ஸ்’ பிராண்டின் இலச்சினை பற்றி நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு சேதி இருக்கிறது. ராபர்ட் லாங்டன் அந்த காஃபியைப் புறக்கணிக்கிறாராம். காரணம், “egregious misuse of a classical symbol” (செவ்வியல் குறியீடு ஒன்றை அருவருப்பூட்டும் வகையில் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.)

’ஸ்டார் பக்ஸ்’ காஃபி இலச்சினையில் அப்படி என்னதான் இருக்கிறது? லாங்டனே சொல்கிறார்: “ஸ்டார் பக்ஸ் கடல்கன்னிக்கு இரண்டு வால்கள் உள்ளன! அதாவது அவள் ஒரு கடல்கன்னியே அல்ல. அவள் ஒரு சைரன் – அதாவது, கடலோடிகளை வழி தவறச் செய்து கப்பலைக் கவிழ்த்து அவர்களை அழித்துவிடும் ஒரு தீய வசியக்காரி!” (பக்.622-623).

இந்த நாவலில் அமெரிக்க மேலாதிக்க மனநிலையைச் சற்றே டான் ப்ரவ்ன் வெளிப்படுத்தியுள்ளார் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு அதற்குச் சான்றாக ஹெய்டே நேகல் பேசும் பகுதியைக் காட்டியிருந்தேன். இந்த நாவலின் மையப் பொருண்மை பிரக்ஞை என்பது மூளையில் கட்டுப்பட்ட ஒன்றன்று, அது பிரபஞ்சம் அளாவியது, அது தனி மனிதர்களின் மூளைக்குள் சிறிய அளவில் உள்வாங்கப்படுகிறது என்பதுதான். ஞானியர் மற்றும் அறிவர்களின் படங்களில் சித்திரிக்கப்படும் ஒளிவட்டம் (Halo)வின் சுடர்கள் அதையே குறிப்பதாக டான் ப்ரவ்ன் காட்டியுள்ளதையும் ஏற்கனே பார்த்தோம். அமெரிக்காவின் அடையாளமாக இருக்கும் சுதந்திர தேவி சூடியிருக்கும் மகுடத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் சுடர்கள் அதையேதான் குறிக்கின்றன என்று அவர் அர்த்தப்படுத்துகிறார். அமெரிக்காவே அத்தகைய மனவளத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு தேசம்தான் என்கிறார்.


நாவலின் கடைசிப் பக்கத்தில், லாங்டனும் கேத்தரீனும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்து சுதந்திர தேவியின் சிலையைப் பார்க்கிறார்கள். குறிப்பாக அதன் ஏழு கொம்புகள் உள்ள மகுடத்தை அவதானிக்கிறார்கள். அந்தப் பகுதியைத் தமிழாக்கித் தருகிறேன்: “ஏழு கொம்புகள், ஒவ்வொன்றும் தோராயமாக ஒன்பது அடி நீளம். அவை, இந்த இளம் தேசத்தில் இருந்து வெளியே பாய்ந்து உலகின் ஏழு கண்டங்களையும் வெளிச்சமாக்கப் போகும் அறிவுச் சுடர்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது இதற்கு நேரெதிரானது என்பதே உண்மை. அறிவுச் சுடர்கள் உள்நோக்கிப் பாய்கிறது என்பதையே அது காட்டுவதாக கேத்தரீன் நம்புகிறாள். ஏழு கண்டங்களில் இருந்தும் பண்பாடுகள், மொழிகள், மற்றும் கருத்துக்களின் சுடர்கள் அதனுள் பாய்வதை அது குறிக்கிறது. அவை அனைத்தும் உள்பாய்ந்து கரைந்து ஒன்றாகும் கலமாக அமெரிக்க மனம் இருக்கிறது.” (ப.671).

உண்மையில் அமெரிக்கா அப்படித்தான் இருக்கிறதா? உலகின் அனைத்து ஞான மரபுகளுக்குமான வாசிப்புக்குக் கிடைக்கும் நூல்கள் அமெரிக்காவில் எழுதப்பட்டு வருகின்றன. அத்தகைய நூல்களின் ஒரு சிறு சேகரம் என்னிடம் உண்டு. அமெரிக்காவில் ஜென் மடாலயங்கள் உள்ளன, யோகா நிலையங்கள் உள்ளன, ஸூஃபி  நெறியின் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. பரதநாட்டியப் பள்ளிகள் உள்ளன, இகெபானாவுக்கும் ஓரிகாமிக்கும் பள்ளிகள் உள்ளன. இவ்வளவு ஏன், இங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ள தமிழர்கள் அங்கே இப்போது பறையிசைக்குப் பள்ளிகள் திறந்துள்ளனர். அனைத்துக்கும் இடமளிக்கும் ஒரு தேசம்தான் அது என்பதில் ஐயமில்லை. இந்தப் பன்மியத்தை அது எந்த அளவு நேர்மையாக நிலைநிறுத்துகிறது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

இனி, கட்டுரையின் ஆரம்பத்தில் நான் ‘கடைசியில் சொல்கிறேன்’ என்று சொன்ன நூற்பட்டியல்:

1.      “தி ஹோலி ப்ளட் அண்ட் தி ஹோலி க்ரெய்ல்” (1982) – மைக்கேல் பைஜண்ட், ரிச்சர்ட்ல் லெய், மற்றும் ஹென்ரி லின்கன்.

2.      ”ஜீசஸ் லிவ்டு இன் இந்தியா” (1983) – ஹோல்கர் கெர்ஸ்டன்.

3.      ”தி வைஃப் ஆஃப் ஜீசஸ்” (2013) – ஆந்தொனி லெ டோன்.

4.      ”தி சீக்ரட் ஹிஸ்டரி ஆஃப் தி வோர்ல்ட்” (2007) – மார்க் பூத் / ஜொனாதன் ப்ளாக்.

5.      ”எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் சீக்ரட் சொசைட்டீஸ்” (2007) – டேவிட் வி பார்ரட்.

6.      ”தி சைன்ஸ் ஆஃப் லியோனார்டோ” (2007) – ஃப்ரிட்ஜாப் காப்ரா.


(இந்த நூலை நான் ஃப்ரிட்ஜாப் காப்ராவுக்காகத்தான் வாங்கினேன். ஏற்கனவே அவரின் ‘தி டாவோ ஆஃப் ஃபிசிக்ஸ்’ நூலை வாசித்து அவர் மீது மதிப்பு உண்டு.)


(முற்றும்)

No comments:

Post a Comment