Friday, November 21, 2025

ஜாவிதின் குறுங்கதைகள்


{ நவம்பர் 2025 “இனிய திசைகள்” மாதிகையில் வெளியாகியுள்ள என் கட்டுரை. இதழாசிரியர் பேராசிரியர் சேமுமு அவர்களுக்கு நன்றிகள்.} 


            
எம் கல்லூரியின் மேனாள் துணை முதல்வரும் விலங்கியல் துறைத் தலைவருமான எம்.எம்.எஸ் என்று அழைக்கப்படும் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்கள் என் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றின் மீது மதிப்பும் அக்கறையும் கொண்டவர். தேர்ந்த நல்ல வாசகர். அண்மையில் என் நூல்களில் சிலவற்றைப் பெற்றுக்கொண்டு நான் மறுக்கவே கூடாது என்று ஆயிரம் ரூபாயும் தந்தார். அகத்தில் ஆயிரம் நூலை வாசித்து அவ்வப்போது அழைத்துத் தன் கருத்துக்களைச் சொல்வார். சில நாட்களுக்கு முன் தன் மகன் ஜாவித் அஹ்மத் எழுதிய “The Hard Comfort” என்னும் குறுங்கதை ஒன்றை நான் வாசித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் என்னும் கோரிக்கையுடன் அனுப்பியிருந்தார்.


            
ஜாவித் தற்போது ஜித்தாவில் அல்-அபீர் குழுமத்தில் ‘Branding and Communication Manager’-ஆகப் பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் flash fiction என்று சொல்லப்படுகின்ற, ஒரு பத்தியில் இருந்து ஒரு பக்க அளவில் அமைகின்ற குறுங்கதை வடிவத்தில் ஜாவித் பல கதைகள் எழுதியுள்ளார். அவை ஆட்டோ ஃபிக்‌ஷன் என்று சொல்லப்படும் தற்புனைவு பாணியிலானவை. அத்தகைய கதைகளைத் தொகுத்து ஏற்கனவே “Life’s Little Things” (வாழ்வின் சிறு சிறு பொருண்மைகள்) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் (நோஷன் பிரஸ் வெளியீடு; அமஸானில் கிடைக்கிறது.) யுவன் சந்திரசேகர் எழுதிய ’மணற்கேணி’ நூல் போல் ஆங்கிலத்தில் ஒரு நூல். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்துக்கு ஜாவித் தயாராகிறார் என்று காட்டுவது போல் இப்போது இந்த குறுங்கதை வந்திருக்கிறது. அதைத் தமிழாக்கித் தருகிறேன்:


            
”அது செப்டம்பர் 5, 1998. இரவு. பெய்யெனப் பெய்த மழை ஒருவழியாக ஓய்ந்திருந்தது. அத்துடன் என் பாசமிகு தாத்தாவின் ஓராண்டுப் போராட்டமும் முடிவுக்கு வந்திருந்தது. அவரின் உடலை நகர மருத்துவமனையில் இருந்து எங்கள் கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடானது. அது நவீன ஆம்புலன்ஸாக இல்லை. இரக்கமற்ற சவ ஊர்தியாகவும் இல்லை. அது ஒரு சாதாரணமான, பாந்தமான வாகனம். வெண்ணிறக் கோடி சுற்றப்பட்ட தாத்தாவின் உடல் ஒரு பக்கம் சத்தமின்றிக் கிடந்தது. நான் எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்தேன், என் மாமாவுக்கும் குடும்ப நண்பர் ஒருவருக்கும் இடையில். குடும்பத்தில் மற்ற அனைவரும் முன்பே கிளம்பிவிட்டனர், என்னை இந்தச் சூழலின் வெறுமையான அணுக்கத்தில் விட்டுவிட்டு – ஆம்புலன்ஸில் என் முதல் பயணம், உயிரற்ற உடல் ஒன்றுடன்.

            அன்று காலையில்தான் பொறியியல் கல்லூரில் ஒன்றில் சேர்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தேன். தாத்தாவிடம் சேதியைச் சொல்ல மருத்துவமனைக்கு விரைந்திருந்தேன். அவரால் பேச முடியவில்லை என்றாலும் கண்களில் நீர் முட்டி நின்றது – ஒரு மௌன சந்தோஷம். பல ஆண்டுகளாக அவர் தன் பேரப்பிள்ளைகளிடம் இரண்டே அறிவுரைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்: ‘நல்லா சாப்பிடுங்க, நல்லா படிங்க.’ அவரின் இறுதி நிமிடங்களில் என்றாலும், அவர் கேட்க விரும்பிய சேதியை அவருக்குச் சொல்லிவிட்டேன் என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது. இந்த ஞாபகங்களில் தொலைந்து போயிருந்தேன் என்றாலும் மழையில் நனைந்த புழக்கமற்ற சாலைகளில் வேன் தூக்கிப் போட்டுக்கொண்டு குலுங்கிச் சென்றதில் அசௌகரியமாக நான் நெளிந்து கொண்டிருந்தேன். வேனுக்குள் நிரம்பியிருந்த சங்கடமான நிசப்தத்தை எந்திரத்தின் உறுமல் மட்டுமே நடுநிசிக் காற்றுடன் சேர்த்துத் துளைத்துக் கொண்டிருந்தது.

            என் அசௌகரியத்தை உணர்ந்து என் மாமா குறுக்கிட்டார், “என்னப்பா கஷ்டமா இருக்கா?” நான் ஆமோதித்தேன், “முதுகு வலிக்குது மாமா, சீட்டெல்லாம் லொட லொடன்னு ஆடுது”. கண்ணாடிச் சில்லின் விளிம்பு நிசப்தத்தைக் கீறுவது போல் சில நொடிகள் சலனமற்று அவர் என்னை நோக்கினார். ‘ஒரு ஆம்புலன்ஸ்ல ஒனக்கு சௌகரியமா பயணிக்கணும்னா நீ பொணமாத்தாம்ப்பா இருக்கணும்” என்றார். அவர் சொன்னதன் நிதர்சனமான உண்மை என் அசௌகரியத்தை நீக்கிவிடவில்லை. ஆனால், அது என் மனப் பதற்றத்தைச் சிதறடித்து அப்பட்டமான ஒரு தரிசனத்தில் நிறுத்தியது: அக்கணத்தில் அந்த ஆம்புலன்ஸில் மிக சௌகரியமான ஒருவர் இறந்து கிடப்பவர்தான்.

            மீதிப் பயணம் எனக்கு ஆழமான தணியாத சிந்தனைக்குரிய வசதியான சூழலாக மாறியிருந்தது: நாம் வாழ்க்கை முழுவதும் சௌகரியங்களைத் துரத்திக் கொண்டு ஓடுகிறோம். மெத்தென்ற இருக்கையும், சுலபமான வழிகளும், பூரண அமைதியும் கிடைக்கச் சண்டை போடுகிறோம். ஆனால் வாழ்க்கை என்பது கொஞ்சம் அசௌகரியமாக இருக்க வேண்டிய ஒன்றுதான். நிலையான, ஓய்வற்ற இயக்கமே, உங்கள் முதுகு நோவதே, இலக்கை நோக்கிய பாடுகளே, நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்கான நிரூபணம். உச்ச ஓய்வை இவ்வளவு ஆரம்பத்திலேயே அடைய நினைக்காதீர்கள். பயணத்தின் அசௌகரியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னமும் உங்களுக்கு ஓர் இலக்கு இருக்கிறது என்பதற்குச் சான்று அது மட்டுமே.”

            கதையை தமிழாக்கி முடித்துவிட்டேன். எவ்வளவு யோசித்தும் “The Hard Comfort” என்னும் தலைப்பைத் தமிழாக்குவதில் எனக்குத் திருப்தி வரவில்லை. சிரம சௌகரியம், கடின சௌகரியம், சிரம சுகம், கடின சுகம் என்றெல்லாம் பண்ணிப் பார்த்தால் ஏதோ ஃபஹத் ஃபாஸில், ஜோஜு ஜார்ஜ், துல்கர் சல்மான் போன்றோர் நடிக்கும் மலையாளத் திரைப்படத் தலைப்புகள் போல் தொனிக்கின்றன. அதனால், தலைப்பை அப்படியே விட்டு விடுகிறேன். தேவை எனில் நீங்களே தமிழாக்கிக் கொள்ளுங்கள்.

            இந்தக் கதை குறித்து என் கருத்து என்ன என்று நேற்று எம்.எம்.எஸ் சார் அழைத்துக் கேட்டார். இதில் சுட்டப்பட்டுள்ள வாழ்க்கை தரிசனம் குறித்துப் பேச ஆரம்பித்து பல்வேறு புள்ளிகளைத் தொடர்பு படுத்தி உரையாடல் சென்றது. நேற்று காலைதான் “திப்பு சுல்தானின் கனவுகள்” என்னும் நூலினைத் தமிழாக்கம் செய்து பதிப்பாளருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதில் பின்னிணைப்பாக அல்லாமா இக்பால் எழுதிய ”சுல்தான் திப்பு கீ வஸிய்யத்” (திப்பு சுல்தானின் இறுதி அறிவுரை) என்னும் கவிதையையும் சேர்த்திருந்தேன்.

            இந்த உலகத்தில் சௌகரியமாக வாழ வேண்டும் என்றால் நீ இறந்தவனைப் போல் வாழ்ந்துவிடு என்னும் தத்துவத்தைச் சொல்வதாக ஜாவித் இந்தக் கதையை அமைத்திருக்க முடியும். “நீ மரணிக்கும் முன் மரணித்துவிடு” என்று ஸூஃபிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகத்தைப் பிரதிபலிப்பதாக இந்தக் கதையை ஆக்கிவிட முடியும். ஆனால் ஜாவித் இந்தக் கதையை அதற்கு நேர் எதிரான நிலைக்கு நகர்த்திச் செல்கிறார்.

            ’உலகப் பற்றற்று இரு. உலக விடயங்களில் மரணித்தவனைப் போல் ஆகிவிடு” என்னும் உபதேசங்கள் பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு முஸ்லிம் சமூகத்தை ஒரு மந்த நிலையில் ஆழ்த்திவிட்டது என்று மகாகவி இக்பால் கண்டார். எனவே, அசௌகரியங்களைத் தேடு, அதுவே வாழ்வின் உயிர்த்துடிப்புக்கு அடையாளம் என்று அவர் இந்தச் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். நபித்தோழர்களின் பாடுகளை அதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டினார். அவரின் கவிமுழக்கத்தில் இருந்து நான்கு உதாரணங்கள்:

            1. ”இருத்தலின் பூங்காவை ஏதோ அந்நியனைப் போல் பார்க்காதே / இது பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான், இதை மீண்டும் மீண்டும் பார்” (’குல்ஸாரே ஹஸ்த்-ஒ-பூத் ந பேகானாவார் தேக் / ஹே தேக்னே கீ ச்சீஸ் இஸே பார் பார் தேக்’ – நூல்: பாங்கே தாரா #50)

            2. “எம் பணி காலையும் மாலையும் பயணிப்பதே / செல்லுதல் செல்லுதல் நில்லாமல் செல்லுவதே” (’காம் அப்னா ஹே ஸுப்ஹ்-ஒ-ஷாம் ச்சல்னா / ச்சல்னா ச்சல்னா மதாம் ச்சல்னா’ – நூல்: பாங்கே தாரா #72)

            3. ”நீ ஒரு ராஜாளி, பறப்பதே உன் பணியாகும் / உன் முன்னே இன்னும் வேறு வானங்கள் இருக்கின்றன!” (’தூ ஷாஹீன் ஹே, பர்வாஸ் ஹே காம் தேரா / தேரே சாம்னே ஆஸ்மான் ஆர் பீ ஹேன்’ – நூல்: பாலே ஜிப்ரீல் #60)

4. “நீ காதலின் பாதையில் ஒரு பயணியாய் இருந்தால் தங்குமிடம் தேடாதே

லைலா உன்னுடன் வருகிறாள் எனில் அவள் பல்லக்கை ஏற்காதே!” (’தூ ரஹ்நவர்தே ஷவ்க் ஹே மன்ஸில் ந கர் கபூல் / லைலா பி ஹம்நஷீன் ஹோ தோ மஹ்மில் ந கர் கபூல்’ – நூல்: ஜர்பே கலீம் #78)

             மேலே நான்காவதாகச் சொல்லியிருக்கும் மேற்கோள் ‘திப்பு சுல்தானின் இறுதி அறிவுரை’ என்னும் கவிதையின் முதல் கண்ணி. இந்த விடயங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு பொருத்தத்தையும் பேராசிரியரிடம் சொன்னேன். அல்லாமா இக்பாலின் மகன் பெயர் ஜாவித். தன் மகனுக்குச் சொல்லும் அறிவுரையாக அல்லாமா இக்பால் அவர்கள் ‘ஜாவித் நாமா’ என்று ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார்.

            பேராசிரியர், ”இதுதான் வாசிப்புச் செய்யும் வேலை ரமீஸ். என் மகனுக்கு ஸூஃபித்துவமோ அல்லாமா இக்பாலோ அவர் சொல்லும் தத்துவங்களோ தெரியாது. அவர் தன் அனுபவத்தில் இருந்து கதையை இயல்பாக எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் அதைத் தொட்டுத் தொட்டு திப்பு சுல்தான் அல்லாமா இக்பால் என்றெல்லாம் எங்கெங்கோ போய் மீண்டும் ஜாவிதிடம் வந்துவிட்டீர்கள். அந்த இக்பாலின் மகன் பெயரும் ஜாவித் என்று இருக்கலாம். ஆனால் இந்த ஜாவிதின் தந்தையான நான் இக்பால் இல்லையே?” என்று சொல்லிச் சிரித்தார்.

            ’வாழ்வில் இருந்துதானே அல்லாமா இக்பாலும் தத்துவ தரிசனங்களை எடுத்தார்?’ என்று நான் திருப்பிக் கேட்டேன்.

            ஜாவிதின் சொந்த அனுபவ தரிசனத்தை குர்’ஆனின் வெளிச்சத்திலும் என்னால் மதிப்புடன் ஏற்க முடிகிறது:

            ”நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது; மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது” (ஃப-இன்ன ம’அல்-உஸ்ரி யுஸ்ரா; இன்ன ம’அல்-உஸ்ரி யுஸ்ரா – 94:5-6).

            ஜாவித் அஹ்மத் இன்னும் இதுபோல் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment