Tuesday, November 4, 2025

ரகசியங்களின் ரகசியம் - 2

 


நோயடிக்ஸ் துறையின் பல்வேறு கோட்பாடுகளை கேத்தரின் விளக்குவதாக இந்த நாவல் நெடுகிலும் பல்வேறு இடங்கள் வருகின்றன. அவை அறிதலுக்கு விருந்தாக அமைபவை. Prague Castle என்னுமிடத்தில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத் தொடர்ச் சொற்பொழிவு நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூடிய சபையில் கேத்தரின் உரையாற்றும்போது தான் ஏன் பொருள்முதல்வாதியாக இல்லை என்பதை விளக்குமிடத்தில் மனித மூளை பற்றிச் சொல்லும் பகுதியை அப்படியே இங்கே தமிழாக்கித் தருகிறேன்:

“’இந்த மொத்தைக் குமிழ் உங்கள் மூளை’ என்று அவள் சபையினரிடம் சொன்னாள். ‘ இது ஒரு அழைய ஹாம்பர்கர் மாவுருண்டை மாதிரி தெரிகிறது என்று எனக்குப் புரிகிறது. என்றாலும், இந்த உறுப்பைப் போல் வியப்பானது வேறில்லை என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். இதில் தோராயமாக எண்பத்தாறு பில்லியன் (அதாவது எட்டாயிரத்து அறுநூறு கோடி) நியூரான்கள் உள்ளன. அவை எல்லாம் சேர்ந்து நூறு டிரில்லியனுக்கும் (அதாவது நூறு லட்சம் கோடிக்கும்) அதிகமான சினாப்டிக் இணைப்புகளை உருவாக்குகின்றன. அவை எவ்வளவு சிக்கலான தகவல் செயல்பாட்டையும் உடனடியாகச் செய்ய வல்லவை. மேலும், கால ஓட்டத்திற்கு ஏற்ப இந்த சினாப்டிக் இணைப்புகள் தம்மை மாற்றித் தகவமைத்துக் கொள்ளக் கூடியவை. இந்தச் செயற்பாடு நியூரோப்ளாஸ்டிசிட்டி எனப்படுகிறது. இதுதான் மூளை தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும், கற்கவும், அடிபட்டால் குணம் பெறவும் ஏதுவாக்குகிறது.


“கேத்தரின் இன்னொரு புகைப்படத்தைத் திரையிட்டாள் – மேஜை ஒன்றில் ஒரு டிவிடி இருந்தது. ‘இது ஒரு சராசரியான டிவிடி  குறுந்தகடு. இதில் 4.7 கிகாபைட்ஸ் தகவல்களைப் பதிந்து வைக்க முடியும் என்பதே ஓர் ஆச்சரியம்தான். அதாவது இரண்டாயிரம் அதி துல்லியமான HD புகைப்படங்களை இதில் பதியலாம். ஆனால், சராசரியான மனித மூளையின் நினைவகத்தின் கொள்ளளவுக்கு நிகராகப் பதிவு செய்ய எத்தனை டிவிடிக்கள் வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு குறிப்புத் தருகிறேன்… அதற்குத் தேவையான அளவு டிவிடிக்களை நீங்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கினால்’ – அவள் தன் கையை உயர்த்தி வ்ளாடிஸ்லாவ் அரங்கத்தின் மேல் கூரையைச் சுட்டிக் காட்டினாள் – ‘இந்தக் கட்டடத்தின் உச்சிக்கு அப்பால் அவை போய்விடும். உண்மையில், அந்த அடுக்கு [பூமியின் சுற்றுவட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும்] இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை எட்டிவிடும்.’

“கேத்தரின் தன் மண்டையைத் தட்டிக் காட்டினாள். ‘நாம் ஒவ்வொருவரும் இங்கே மில்லியன் கணக்கான கிகாபைட்கள் தகவல்களைப் போட்டு வைத்துள்ளோம் – படங்கள், நினைவுகள், பல ஆண்டுகள் கற்ற கல்வி, திறன்கள், மொழிகள்… இவை எல்லாம் இந்தச் சிறிய இடத்தில் நேர்த்தியாக வகைப்படுத்தி ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பம் இதற்கு நிகராக வரவேண்டும் என்றால் இன்னமும் அதற்கான தகவல் கிடங்கு உருவாக்கப்படவில்லை.’

”அவள் பவர் பாய்ண்ட்டை நூத்துவிட்டு மேடையின் முன் பகுதிக்கு வந்தாள். இத்தனை சிறிய உறுப்பு ஒன்று எப்படி இவ்வளவு பரவலான தகவல்களைத் தேக்கி வைக்க முடியும் என்று பொருள்முதல்வாத விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர். நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இது ஓர் உடலியல் அசாத்தியமாகத்தான் தெரிகிறது… அதனால்தான் நான் ஒரு பொருள்முதல்வாதியாக இல்லை.’” (ப.100)

மூளையின் விந்தைகள் அல்லது பிரக்ஞையின் ஆச்சரியங்கள் என்று சொல்லத்தக்க செயல்பாடுகள் பல உள்ளன. அவை இந்த நாவலில் பேசப்படுகின்றன. சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்:

அ) Sudden Savant Syndrome (திடீர் அறிவாளி நோய்க்குறி) – இந்த நோய்க்குறிக்கான மருத்துவ வரையறை இது: “முன்பு இருந்திராத தனித்தன்மையான திறன் அல்லது அறிவு ஒரு மனித மனத்தில் திடீரென்று வெளிப்படுவதாகும்.” (’The abrupt manifestation in a human mind of a unique skill or knowledge that previously was nonexistent.’ P.122). இதை லாங்டனுக்கு கேத்தரின் எளிதாக இப்படி விளக்கிச் சொல்கிறாள், “அதாவது, உங்கள் மண்டையில் அடிபடுகிறது. நீங்கள் மயக்கம் தெளிந்து எழும்போது ஒரு வைலின் கலைஞராகவோ, சரளமாக போர்த்துகீசிய மொழி பேசுபவராகவோ, கணித மேதையாகவோ எழுகிறீர்கள். ஆனால் அதற்கு முன் இதில் உங்களுக்கு அரிச்சுவடி கூட தெரியாமல் இருந்தது.”

இந்த நோய்க்குறியால் உலகப் புகழ் பெற்ற சில சவாந்த்களை டான் ப்ரவ்ன் குறிப்பிடுகிறார்:

1.      ரியூபன் ந்செமோ – பதினாறு வயது அமெரிக்கன். கால்பந்து விளையாடும்போது மண்டையில் உதைக்கப்பட்டதில் கோமா நிலைக்குப் போய்விட்டான். பிரக்ஞை மீண்டு எழுந்தபோது சரளமாக எஸ்பஞோல் மொழி பேசினான்.

2.      டெரெக் அமாட்டோ – நடுத்தர வயது. குளம் ஒன்றில் குடைந்தாட குதித்தபோது மண்டையில் அடிபட்டு மயங்கிவிட்டார். தெளிந்து எழுந்தபோது இசை மேதையாக எழுந்தார். பியானோ வாசிப்பில் பிச்சு உதறினார்.

3.      ஓர்லாந்தோ எஸ். செர்ரல் – பத்து வயதுச் சிறுவன். பேஸ் பந்து தலையில் தாக்கியதில் திடீரென்று கணித மேதைமை வந்துவிட்டது. காலெண்டர் கணக்குகளில் வியக்கத்தக்க திறமை காட்டுகிறான்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு கேத்தரின் கூறுகிறாள்: “மிக எளிமையான ஒரு வினாவுக்கு நமக்கு விடை தெரியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது: நம் எண்ணங்கள், திறமைகள், கருத்துக்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?” (ப.124)

ஆ) TLE – Temporal Lobe Epilepsy (பொட்டுமடல் கால்கை வலிப்பு) – உடலியல் ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மூளைச் செயல்பாடாக இருந்தாலும் இந்த வலிப்பின் மனோரீதியான மாற்றங்கள் சுவாரஸ்யமானவை. கேத்தரின் சொல்கிறாள்: ”இது மனித பிரக்ஞையில் இயற்கையான ஏற்படும் “மாற்று நிலைகள்” (altered states)-இல் ஒன்றாக இருக்கிறது. இந்த வலிப்பு நிலையை MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் சில போதைப் பொருட்கள், NDE (Near Death Experience – இறப்புக்கு நெருங்கிய நிலை), மற்றும் கலவியுச்சம் (orgasm) ஆகியவற்றை ஒத்த மின்பதிவைக் காட்டுகிறது. மனித குலத்தின் மகத்தான படைப்பாளுமைகளில் சிலர் இந்த பொட்டுமடல் வலிப்புக்காரர்களாக இருந்துள்ளனர் – வின்செண்ட் வான்கா, அகத்தா கிறிஸ்டி, சாக்ரடீஸ், மற்றும் ஃபியதோர் தஸ்தாயெவ்ஸ்கி” (ப.142).

இந்த டெம்பரல் லோப் எபிலெப்சி என்பது ஆன்மிகத்தின் பரவச நிலையுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், சிற்றின்பப் பரவசமும் பேரின்பப் பரவசமும் இந்தக் கால்கை வலிப்புக்குப் பின்னான (postictal) மனநிலையும் ஒன்றை ஒன்று ஒத்தவையாகத் தோன்றுகின்றன. மறுமலர்ச்சிக் காலத்து இத்தாலிய ஓவியர் ரஃபேல் சான்ஸியோ ‘தி டிரான்ஸ்ஃபிகரேஷன்’ (உருமாற்றம்) என்னும் ஓவியம் ஒன்றைத் தீட்டினார். அதில் ஏசுநாதர் சொர்க்கத்துக்கு உயர்ந்து செல்வதை வரைய வேண்டி இருந்தது. அவர் எபிலெப்டிக் சிறுவன் ஒருவன் வலிப்பு வந்த நிலையில் இருப்பதைப் போல் ஏசுநாதரை வரைந்து வைத்தார்! ஆன்மிக நிலைக்கு இந்த வலிப்பு நிலையைக் குறியீடாக அவர் கண்டாராம்! (ப.142)

இ) Asperger’s Syndrome / Autism (மதியிறுக்கம் / தன்னுழப்பல்) – இந்த மனநிலைக் குறைபாடு உள்ளவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் உச்சபட்ச திறமை கொண்டிருப்பர். ஆனால் இவர்களால் அன்றாட காரியங்களை இயல்பாகச் செய்ய முடியாது. இதை மிக இலகுவான ஓர் உவமை சொல்லி கேத்தரின் விளக்குகிறாள்: “அது கண்ணாடிக்கு பதிலாக பைனாகுலர் அணிந்துகொள்வது போன்றது. பிறரால் பார்க்க முடியாத தொலைவை நீங்கள் துல்லியமாகப் பார்ப்பீர்கள்… ஆனால் உங்களுக்குப் பக்கதில் உள்ளவை எல்லாம் மங்கலாகத் தெரியும்” (ப.267).

இந்த நாவலில் நாம் அறிந்து கொள்ளும் முக்கியமான இன்னொரு விஞ்ஞான செய்தி GABA (Gamma Aminobutyric Acid) பற்றியதாகும். அதுதான் மூளையின் செயல்பாட்டுக்கான பிரதான நியூரோ டிரான்ஸ்மிட்டர் ஆகும். அதுதான் தண்டு வடத்திலும் முதன்மையாகச் செயல்படுகிறது. [அதைத்தான் குண்டலினி சக்தி என்று சொல்லியிருப்பார்களோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.] இதன் அளவு உயரும்போது மனித மூளை பேரமைதி காண்கிறது. இதன் அளவு குறையும்போது மனித மூளை பதற்றம், கவனச் சிதறல், தூக்கமின்மை முதலிய நிலைகளை அடைகிறது. தியானம் செய்வோரின் மூளையில் இதன் அளவு அதிகரிப்பதால் அவர்களால் எந்தச் சூழலிலும் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடிகிறது. இந்த அமிலம் மனிதப் பிரக்ஞை பிரபஞ்சப் பிரக்ஞையை அணுகும் நிலையிலும் மரணம் நிகழும்போதும் எப்படிச் செயல்படுகிறது என்று இந்த நாவலை வாசித்தால் அறிந்து கொள்ளலாம். நாவலின் இறுதிக் கால்பகுதியில் இது குறித்த விளக்கங்கள் கதையை முன்னகர்த்திச் செல்கின்றன. அந்தப் பகுதியில் சிந்தனையைத் தூண்டுகின்ற ஒரு விடயம் உயர் பிரக்ஞை நிலைகளை அடைவதற்காக போதைப் பொருட்கள் (hallucinogens) பயன்படுத்தப்படுவது பற்றிய விவாதங்களாகும். அவற்றைக் கொஞ்சம் கவனிப்பது பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

ஆன்மிகப் பயிற்சிகள் பிரக்ஞையின் மாற்று நிலைகளை (alternate states) உருவாக்குகின்றன. அவை பலவிதமாக அமைகின்றன. அவற்றை உருவாக்குவதிலும் அவற்றினூடாக இயங்குவதிலும் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இல்லை எனில் ஒரு நபர் மனிதரிடையான உறவுகள் (inter personal relationships), சமூக உறவாடல்கள் (social interactions) ஆகியவற்றில் இயல்பாகவும் சரியாகவும் இயங்க முடியாமல் போவதிலிருந்து அவரின் உயிருக்கே ஆபத்தாக முடிகின்ற நிலை வரை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வார். இதற்கு ஆன்மிக உலகில பல சான்றுகள் உண்டு. அப்படிப்பட்டவர்களை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஆன்மிகப் பயிற்சிகளை ஒரு குருவின் வழிகாட்டுதலில் கட்டுப்பாட்டுடனும் பத்தியத்துடனும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இதிலிருந்தே உண்டாகிறது. அப்படிப் பேணுதலாக இருந்தவர்களில் கூட சறுகிப் போய் மனநிலை பேதலித்தவர்கள் உண்டு. எதார்த்தம் இப்படி இருக்கும்போது பிரக்ஞையின் மாற்று நிலைகளை, அதாவது உயர் நிலைகளை உருவாக்குவதற்கு லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துவோரின் நிலை மிக மிக அபாயமானதாகும் என்பதில் ஐயமில்லை. எனினும், உலகில் ஆன்மிகத்தின் பேரால் லாகிரி வஸ்துக்களைச் சோதனை செய்து பார்க்கின்ற குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. டான் ப்ரவ்ன் தன் நாவலில் இத்தகையோர் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மெஸ்கலைன், எல்.எஸ்.டி, சிலோசைபின் போன்ற சைக்கடெலிக்ஸ் (உணர்ச்சி மீக்குறுதல் மற்றும் தெளி கற்பனைகளைத் தூண்டும் லாகிரி வஸ்துகள்) உட்கொண்டோரின் மூளையில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்ப்பது கேத்தரீனின் ஆராய்ச்சியில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அத்தகைய போதை நிலைகள் OBE (Out-of-Body Experience, மீவுடலனுபவங்கள்) நிலையை ஒத்திருக்கின்றன. அவை GABA அளவுகளை மூளையில் மாற்றுவது பற்றி லாங்டனிடம் கேத்தரின் விளக்குகிறாள்: ”நீங்கள் அனுமானிப்பது போல் போதைப் பொருட்கள் உங்கள் நியூரான்களைத் தூண்டுவதில்லை. அதற்கு நேர் எதிரான செயலைச் செய்கின்றன. அந்தப் போதை வஸ்துக்கள் மூளையின் இயல்பான தொடர்பு நிலையில் சிக்கலான தொடர்வினைகளால் உங்களின் GABA அளவை மிகத் தீவிரமாகக் குறைத்துவிடுகின்றன. அதாவது, அவை உங்கள் பிரக்ஞையின் வடிகட்டிகளை (filters) விலக்கிவிட்டு எதார்த்தத்தின் விரிவான காட்சி உள்ளே பாய்வதற்கு வழி செய்கின்றன. அதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் மாயக்காட்சியுறவில்லை (you are not hallucating), உண்மையில் நீங்கள் எதார்த்தத்தை அதிகமாக தரிசிக்கிறீர்கள்.” (ப.350) இன்றைய காலத்தில் ஆரோக்கிய வல்லுநர்கள் கூட சிறிய அளவில் (microdosing) இவற்றைப் பரிந்துரைக்கிறார்கள்; சிலோசைபினை மனப்பதற்றம், கவலை, மனச்சோர்வு, மற்றும் கவனச் சிதறல் ஆகியவற்றுக்கான சர்வநிவாரணியாக (panacea) முன் வைக்கிறார்கள் என்றும் கேத்தரீன் சொல்கிறாள் (ப.350). இந்தப் போக்குகள் இன்று நேற்று உண்டானவை அல்ல. மனித குலம் தொல்காலம் தொட்டு இதில் பரிசோதனைகள் பண்ணிக்கொண்டு வருகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. “ரிக் வேதத்தின் தொல் பிரதிகள் மற்றும் எலூசினியன் மர்மங்கள் ஆகியவற்றில் இருந்து ஹக்ஸ்லி 1954-இல் எழுதிய ’தி டோர்ஸ் ஆஃப் பெர்சப்ஷன்’ என்னும் செவ்வியல் நூல் வரை மாபெரும் எழுத்தாளர்கள் பலரும் மனித பிரக்ஞையை விரிவுபடுத்தி எதார்த்தத்தின் வடிகட்டப்படாத தரிசனத்தை அடைவதற்கு போதைப் பொருட்களை பரிந்துரைத்துள்ளனர்” (பக்.416-417). கிரேக்க நாட்டில் டெல்ஃபியின் ஆரக்கிள் [கணியர்] பர்னாஸ்ஸஸ் மலையின் பிளவு ஒன்றின் வழியாக வெளியாகும் வாயுக்களை ஆழ்ந்து சுவாசித்து ’எதிர்கால’த்தை தரிசித்துள்ளனர்; [மெஸ்கலைன் உள்ளிட்ட பல ரசாயனங்களைக் கொண்ட] பெயோட் என்னும் கள்ளித் தாவரத்தை உட்கொண்ட நிலையில் அஸ்டெக் பழங்குடியினர் எதிர்கால ஆன்மாக்களிடம் உரையாடியுள்ளனர்; பழங்கால எகிப்திய கணியன்மார் தூதாயீம் கனிகள் என்னும் மாண்ட்ரேக் கிழங்குகளையும் நீலத்தாமரையையும் உட்கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கண்டு சொல்லியுள்ளனர் என்கிற செய்திகளையும் டான் ப்ரவ்ன் பதிவு செய்கிறார் (ப.418) (“அந்த பார்ட்டியில் சிஐஏ சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்துள்ளது” (ப.417) என்னும் பகடி வேறு!). ஆனந்த நிலை அடைய மனித குலம் முழுவதற்கும் லாகிரி வஸ்து ஒன்று ஊட்டப்படும் ஓர் எதிர்காலத்தை ஆல்டுவஸ் ஹக்ஸ்லி கற்பனை செய்தார். அந்த போதைப் பொருளை அவர் ’சோமா’ என்றழைத்தார் [அதாவது, சோம பானம்] (ப.350).

இந்தச் செய்திகளைத் தாண்டியும் டான் ப்ரவ்ன் சில தகவல்களைச் சொல்கிறார். ஒருவரின் பிரக்ஞை அவரின் உடலுக்கு வெளியே வந்துவிடுவது போன்ற நிலையை உண்டாக்கும் போதைப் பொருட்களை “dissociatives” என்று வகைப்படுத்துகின்றனர். இவற்றை வைத்து ரகசியமான ஆராய்ச்சிகள் செய்ததில் சிஐஏவுக்கு நீண்ட வரலாறு உண்டு. [1953-இல் தொடங்கி 1973-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட MKUltra என்னும் மனிதப் பரிசோதனை உலகெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கிய ஒன்றாகும்.] இத்தகைய சோதனைகள் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலும் தேர்ந்த மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளன. அதன் உளவியலாளரான டிமோத்தி ஃப்ரான்சிஸ் லியரி என்பவர் “ஹார்வார்ட் சிலோசைபின் செயற்திட்டம்” என்ற ஒன்றை நிகழ்த்தியதற்காகத் தண்டிக்கப்பட்டவர் [அமெரிக்க கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்கால் “அமெரிக்க பிரக்ஞையின் கதாநாயகன்” என்று பாராட்டப்பட்ட இவர் நியூயார்க் நகரில் “லீக் ஃபார் ஸ்பிரிச்சுவல் டிஸ்கவரி” என்னும் சமய நிறுவனத்தைத் தொடங்கியவர் ஆவார்.]

இத்தகைய தகவல்கள் இந்த நாவலில் சொல்லப்படுவதை வைத்து டான் ப்ரவ்ன் போதை வஸ்துக்களின் பயன்பாட்டை ஆதரிக்கிறார் என்று அவசர முடிவுக்கு வரவேண்டாம். அவற்றின் பாதகங்களைப் பற்றி அவர் அடுத்துப் பேசுகிறார். கேத்தரீன் தானே இந்த போதை வஸ்துக்களைப் பயன்படுத்தியிருக்கிறாளா என்று லேங்டன் கேட்கிறார். இல்லை என்று சொல்லும் அவள் காரணத்தை விளக்குகிறாள்:

 ”ராபர்ட், நிஜம்மா?! மூளை என்பது கற்பனைக்கு எட்டாத நளினத்துடன் இயங்குவது. போதை வஸ்துக்களை வைத்து அதை மாற்றி அமைக்க முயற்சிப்பது, விலைமதிக்க முடியாத ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை சம்மட்டியால் பழுது பார்ப்பது போன்றது! போதைப் பொருட்கள் சீரற்ற தொடர் எதிர்வினைகளால் மாற்ற நிலைகளைத் தூண்டுகின்றன. இந்த மூளையியல் எசகுபிசகுகள் நிரந்தரமான பாதிப்புகளை உண்டாக்கிவிடும். அந்த சுருக்க நேர அனுபவம் உங்களுக்கு ஞானமடைந்தது போல் தோன்றலாம். உங்கள் நரம்பிணைப்பு ஒருமைப்பாட்டுக்கும் நரம்பியக்கடத்தியின் சமநிலைக்கும் உரிய நீண்ட ஆயுளை நீங்கள் பணயம் வைக்கிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள். பெரும்பான்மையான போதைப் பொருட்கள் தமது தாக்கத்தை உண்டாக்கும் முதன்மையான செயல்பாடு என்ன என்றால் [மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் இயற்கையாக் காணப்படும் ஒரு வேதிப்பொருளும் நரம்பு சமிக்ஞை கடத்தியுமான] செரோடோனின் என்பதன் ஒழுங்கமைவைக் குலைத்துவிடுவதுதான். இது சரி என்று எண்ணுவது எவ்வளவு தீய எண்ணம்! இது மிக எளிதாக புலனறிவுக் குறைபாடுகள், உணர்ச்சித் தடுமாற்றம், மற்றும் நீடித்த மனநோய் நிலைகள் ஆகியவற்றுக்குத் தள்ளிவிடும்… போதைப் பொருட்களை உட்கொள்வது பாதுகாப்பானது என்று இளைஞர்கள் ஊகிப்பதைப் பார்க்கும்போது நான் மிகவும் பதற்றமுறுகிறேன். அது அப்படி அல்ல” (ப.417).

 நவீன யுகத்தில் இளைஞர்களின் கையில் மிக எளிதாகக் கிடைத்துவிடும் தீய பொருட்கள் இரண்டு: போதை வஸ்துக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் மாய மெய்ம்மை (Virtual Reality). இவ்விரண்டையும் ஒன்றிணைத்து இளைஞர்கள் அனுபவிக்கும்போது மூளையில் ஏற்படும் சிதைவுகள் நியூரோ விஞ்ஞானிகளையே திடுக்கிட வைக்கின்றன என்ற செய்தியையும் டான் ப்ரவ்ன் பதிவு செய்கிறார் (ப.474).

அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் தலை விரித்தாடிய காலத்தில் இந்த போதைப் பொருள் பரிசோதனைகளும் உச்சத்தில் இருந்துள்ளன. ஹிப்பிகள் பலரும் போதைப் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர் என்பது உலகறிந்த செய்தி. உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியரான பாவ்லோ கொய்லோ அப்படி ஒரு ஹிப்பியாக அலைந்திருக்கிறார். அந்த அனுபவங்களை “ஹிப்பி” (2018) என்னும் நாவலாக எழுதினார். போதை அனுபவத்தை எப்படி இந்த இளைஞர்கள் ஆன்மிகத்துடன் குழப்பிக் கொண்டனர் என்பதை இதில் ஓரிரு இடங்களில் (குறிப்பாக அத்தியாயம்#18) சொல்லியுள்ளார். ஊசி மூலம் தன் ரத்த நாளத்தில் போதைப் பொருளைச் செலுத்திக் கொள்ளும் ஒருவனைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “அவன் அந்த திரவத்தை உள்ளே செலுத்தினான். அவன் கண்களில் இருந்த கவலையான பார்வை மாறிவிட்டது. அவை தேவதையின் கண்கள் போல் ஆகிவிட்டன. அப்புறம் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்து அவற்றின் பிரகாசம் மங்கிவிட்டது. அது எங்கோ வேறு ஒரு இடவெளிக்குப் போய்விட்டது – அவன் சொல்வதை நம்பினால் – புத்தர், கிருஷ்ணர், மற்றும் ஏசுநாதர் ஆகியோர் மிதந்து கொண்டிருக்கும் இடவெளி அது” (ப.102)

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான் நூலை நினைவு கூர்கிறேன். அதே காலகட்டத்தில், 25-10-1970 அன்று பம்பாயில் ஓஷோவை ஒருவர் நேர்காணல் நிகழ்த்தியதன் பதிவு, 1971-இல் ஒரு சிறு புத்தகமாக வெளியானது. புத்தகத்தின் தலைப்பு “LSD: A Short Cut to False Samadhi” (எல்.எஸ்.டி : போலி சமாதிக்கான குறுக்குவழி). ஓஷோவை நேர்காணல் செய்தவர் அமெரிக்கா நியூயார்கின் சிவானந்தா ஆஸ்ரமத்தின் நடத்துநரான மா ஆனந்த பிரேம் என்பவர். அவர் சில காலம் கட்டுப்படுத்தப்பட்ட எல்.எஸ்.டி சோதனைகளில் ஈடுபட்டவர். தான் அதில் சமாதி நிலையை அடைந்ததாக அவர் விளக்கிச் சொல்லி அது உண்மையில் சமாதிதானா என்று ஓஷோவிடம் கேட்கிறார். அதற்கு ஓஷோவின் நீண்ட பதில் இப்படி ஆரம்பிக்கிறது:

“அது உண்மையானது அல்ல. அது சமாதி அல்ல. ஆனால் அது ஒரு வேதியியல் மாற்றம். தான் எதை முன்னிறுத்த விரும்புகிறதோ அதை முன்னிறுத்த மனதால் முடியும் – சமாதிக்கான சுயாதீனமற்ற ஆசையைக் கூட! எனவே சமாதி பற்றி உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, நீ என்னவெல்லாம் படித்திருக்கிறாயோ, அதெல்லாம் எல்.எஸ்.டியின் ரசாயன உதவியால் முன்னிறுத்தப் பட்டுவிடும்… … … குண்டலினி பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது என்றால் எல்.எஸ்.டி வழியாக அதை நீ உணர்வது சாத்தியமில்லை. அச்சத்தால் (ஃபோபியா) பீடிக்கப்பட்ட ஒருவன் தன் அச்சத்தைதான் அதைக் கொண்டு முன்னிறுத்துவான். அச்சத்தை அடக்கி வைத்திருக்கும் ஒருவன் அது நிஜத்தில் நிகழ்வது போல் காண்பான். எனவே எல்.எஸ்.டி என்பது பல்வேறு மனிதர்களுக்கு பல்வேறு அனுபவங்களைக் கொண்டு வரும்.” (ப.9) இது ஒரு போலி ஆன்மிக அனுபவம் என்பதை ஓஷோ மேலும் விரிவாகச் சொல்லிப் போகிறார்.

போதைப் பொருட்கள் என்பது எல்லை மீறிய ஒரு பயன்பாடு. ஆனால் ஆன்மிகத்திற்குத் துணையாக, தூண்டுதலாக புறப்பொருட்களைப் பயனபடுத்துவதில் எல்லாச் சமயங்களும் குறிப்பிட்ட சில பொருட்களுக்குப் பொதுவாக அனுமதி வழங்கியுள்ளன. சாம்பிராணி, ஊதுவத்தி, தசாங்கம், அத்தர் போன்ற நறுமணப் பொருட்கள் அதில் முக்கியமானவை. இவை மனித மனத்தில் மாற்றம் ஏற்படுத்த வல்லவை. ஒரு குறிப்பிட்ட அத்தரைப் பயன்படுத்தினால் தனக்கு அதிகமாக மன ஓர்மை கிடைக்கிறது என்று சொல்வோரை நான் பார்த்திருக்கிறேன். எல்லா அத்தர்களும் மனத்தில் ஒரே விதமான தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்பதையும் நான் அறிவேன். இங்கே அது பற்றி விரிவாகப் பேச இடமில்லை என்பதால் இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன்.

(to be continued... and ends in the next part.)

No comments:

Post a Comment