Tuesday, November 4, 2025

ரகசியங்களின் ரகசியம் - 1

 


டான் ப்ரவ்ன் எழுதிய நாவலான “தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ்” (ரகசியங்களின் ரகசியம்)-ஐ  மூன்று நாட்களாக வாசித்து இன்று (30-10-2025) காலை பதினோரு மணிக்கு முடித்தேன். இது அவரின் ஒன்பதாம் நாவல் என்பதால் 9-9-2025 அன்று வெளியீடு என்று திட்டமிட்டு அப்படியே வெளியானது.  என் பிறந்த நாளுக்கான ’அட்வான்ஸ்’ பரிசாக 14-தேதி சுடச் சுட பானுவிடமிருந்து கிடைத்தது.

            டான் ப்ரவ்ன் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் நாவல் எழுத்தாளர்தான். அவரின் நாவல்கள் 57 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன என்கிறார்கள். தமிழிலிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் எழுத்துக்களை நான் விரும்புவதால் ஆங்கிலத்தில்தான் படிக்கிறேன். 



            டான் ப்ரவ்ன் இதுகாறும் ஒன்பது நாவல்களும் ஒரு சிறார் நூலும் எழுதியுள்ளார். நான் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். வெளியான கால வரிசைப்படி அவர் எழுதிய நூல்களின் பட்டியல் இது:

1.      டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் (1998)

2.      ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் (2000)

3.      டிசெப்ஷன் பாய்ண்ட் (2001)

4.      தி டா வின்சி கோட் (2003)

5.      தி லாஸ்ட் சிம்பல் (2009)

6.      இன்ஃபர்னோ (2013)

7.      ஆரிஜின் (2017)

8.      வைல்டு சிம்ஃபனி (2020)

9.      தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ் (2025)


 

இந்த ஒன்பது நூற்களில் ’வைல்டு சிம்ஃபனி’ என்பது சிறுவர்களுக்கான நூல். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட் ஆகியவை ‘தனித்த’ நாவல்கள் (Stand alone novels). ஏனைய ஆறு நாவல்களும் “ராபர்ட் லாங்டன்” (Robert Langdon Series) என்று அடையாளம் பெறுகின்றன. “குறியியலாளர்” (symbologist) ஆன, ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் இந்த நாவல்களின் கதாநாயகன்.

இதில் சில நாவல்கள் பற்றியும், வைல்டு சிம்ஃபனி நூல் பற்றியும் ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். “டான் ப்ரவ்ன் பற்றி தமிழில் பரவலாக அறியக் கிடைக்கவில்லை. ஒரு சில கட்டுரைகள் மட்டுமே கண்ணில் பட்டன. நீங்கள் அவரின் எல்லா நூல்களையும் வாசித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி நீங்கள் ஒரு நூல் எழுத வேண்டும்” என்று எழுத்தாளரும் பேராசிரியருமான நண்பர் அதங்கோடு அனிஷ்குமார் சென்ற மாதம் என்னிடம் வலியுறுத்தினார். இன்று மாலை வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது கைப்பேசியில் அழைத்து ‘இப்போ என்ன படிச்சுக்கிட்டிருக்கீங்க?’ என்று கேட்டார். இன்றுதான் TSOS முடித்தேன் என்று சொன்னதும் மீண்டும் வலியுறுத்தினார்: “டான் ப்ரவ்னை நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பது பற்றி எழுதுங்கள்.”

டான் ப்ரவ்ன் பற்றி ஒரு தனி நூலெல்லாம் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் நூல்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் ஏன் வாசிக்கிறேன்? ஒரு நூலை அல்லது எழுத்தாளுமையை நாம் தொடர்ந்து வாசிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ’தி டா வின்சி கோட்’ வெளியான நாளில் இருந்து கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக நான் டான் ப்ரவ்ன் நாவல்களைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். ஆனால் அவரின் எந்த நாவலையும் மீண்டும் மீண்டும் வாசித்தது கிடையாது. இதில்தான், அவரைப் பற்றி ஒரு நூல் எழுதும் எண்ணமெல்லாம் தோன்றவில்லை என்பதற்கான பதில் இருக்கிறது. டான் ப்ரவ்ன் என் மதிப்பீட்டில் ஒரு சுவாரஸ்யமான எழுத்தாளர். ‘பிரதி தரும் இன்பம்’ (Pleasure of the text) என்பது அவரின் நூல்களில் நிச்சயம் (எனக்குக்) கிடைக்கிறது. முதன்மைக் காரணங்களில் அதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால், பரவலாக வாசிக்கப்படும் எல்லோருடைய நூல்களிலும் இந்த அம்சம் இருக்கத்தானே செய்யும்? சேட்டன் பகத்தின் நாவல்களில் இருக்காதா? ஜான் கிரீனின் நாவல்களில் இருக்காதா? என் மகள் சுவாரஸ்யத்துடன் வாசிக்கும் இந்த எழுத்தாளிகளை எனக்குக் கையில் எடுத்துப் பார்க்கவும் தோன்றவில்லை.

டான் ப்ரவ்ன் நாவல்களை வாசிப்பதற்கான வேறு காரணங்களில் ஒன்று அவரின் நாவல்களில் கையாளப்படும் குறியீட்டியல். குறிப்பாக, ஐரோப்பிய கிறித்துவ வரலாற்றின் உள்மடிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டும் குறியீடுகளை அவரின் பிரதிகள் கண்ணழித்துக் காட்டுகின்றன. அடுத்து, அவரின் கதைகளில் ஆன்மிகமும் நவீன அறிவியலும் சந்திக்கும் புள்ளிகள் பேசப்படுகின்றன. அடுத்து, அவரின் கதாநாயகன் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் என்னும் பாத்திரம்.

டான் பரவ்னின் நாவல்களில் சமயக் குறியீடுகள் பற்றி அதிகம் பேசப்படுவதால் அவை தொடர்பான ஆளுமைகளையும் நூல்களையும் அவர் குறிப்பிடுகிறார். எனவே, அவற்றை வாசிக்கவும் தூண்டப்பட்டு நான் வாங்கி வாசித்த நூற்கள் என்று ஒரு பட்டியல் உள்ளது. அவற்றில் சில நூற்களைக் கடைசியில் சொல்கிறேன்.

            டான் ப்ரவ்னின் நாவல்களில் இருந்து ’கருத்து மேற்கோள்கள்’ சமூக ஊடகங்களில் அவரின் வாசகர்களால் தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றன. அவரே அப்படிப்பட்ட கருத்துக்களை எழுதியிருக்கிறார் என்பதுடன் கலை, சமயம், அறிவியல், அரசியல் முதலிய துறைகளின் ஆளுமைகள் சொன்ன கருத்துக்களையும் தன் நாவல்களில் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அவர் ஒரு நாவலை எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட்டுப் பரவலாகவும் ஆழமாகவும் வாசிக்கிறார் என்பதை இது காட்டுகிறது.


            
TSOS நாவலும் அப்படியான ஒரு மேற்கோளுடன்தான் ஆரம்பமாகிறது. அது நவீன விஞ்ஞான உலகின் ’ராட்சஸ’ மேதையான நிக்கோலா டெஸ்லாவின் கருத்து: ”விஞ்ஞானம் மீப்பொருளியல் நிகழ்வுகளை ஆராய ஆரம்பிக்கும் நாளில் அது முந்தைய நூற்றாண்டுகள் அனைத்திலும் அடைந்ததை விட அதிக முன்னேற்றத்தை அடையும்.”

            அப்படியான ஒரு மீப்பொருளியல் ஆய்வைப் பற்றித்தான் இந்த நாவல் பேசுகிறது. ஆனால், இது கொலைகளும் சண்டைகளும் தப்பித்து ஓடுதலும் என்று விறுவிறுப்பாகச் செல்லும் ஒரு த்ரில்லர் நாவல்! டான் ப்ரவ்னின் தனித்தன்மையான பாணியே இதுதான். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷென் பாய்ண்ட் ஆகியவற்றில் நவீன விஞ்ஞானத் துறைகளில் நிகழும் conspiracies கதைச் சிக்கலாக அமையும். இதற்கு முன் அவர் எழுதியுள்ள ராபர்ட் லாங்டன் வரிசையின் முதல் மூன்று நாவல்களில் கிறித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இல்லுமினாட்டி, ஓபஸ் டெய், ஃப்ரீமேசன்ஸ் ஆகிய ரகசிய அமைப்புகளும் அவை சார்ந்த குறியீட்டுச் சிக்கல்களும் கதையை முன்னகர்த்திச் சென்றன. இன்ஃபெர்னோ மற்றும் ஆரிஜின் ஆகிய நாவல்களில் நவீன விஞ்ஞானத்திற்கும் சமயத் தொன்மத்திற்குமான மோதலே கதையின் முரணியக்கமாக அமைந்தது. அந்த வரிசையில் தி சீக்ரெட் ஆஃப் சீக்ரட்ஸ் நாவலை மூன்றாவதாக வைத்துப் பார்க்க முடிகிறது.

            டான் ப்ரவ்ன் தன் நாவல்களில் சமயம், கலை, மற்றும் விஞ்ஞானம் சார்ந்த பல்வேறு அமைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். அவற்றில் சில ரகசியமாக இயங்குபவை, அல்லது ரகசிய முகமும் உள்ளவை ஆகும். இந்த நாவலில் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஒரு ரகசியத் திட்டத்தைச் செயற்படுத்துவதாகக் காட்டியுள்ளார். அது மனிதனின் மூளை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறை ஆய்வு. அந்த ஆய்வு வெற்றி பெறும் பட்சத்தில் அதை அமெரிக்க ராணுவத்திற்கான ஆயுதமாகக் கையாளலாம் என்பது சிஐஏ-வின் திட்டம்.

            அப்படியெல்லாம் சிஐஏ-வை எதிர்மறையாகக் காட்டி அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நாவல் எழுதிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. எனவே, டான் ப்ரவ்ன் ஒரு திருகு வைக்கிறார். சிஐஏ என்னவோ நல்ல திட்டம்தான் தீட்டிற்று. அதில் நேர்ந்த முறைகேடுகள் அதன் தலைமைக்குத் தெரியாமல் மறைவாக அதன் ஓர் அதிகாரி செய்தவை ஆகும். பாவம், அந்த அமைப்புக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது! டான் ப்ரவ்னுக்கும் இப்படியான ஒரு டிபிக்கல் அமெரிக்கன் டிப்ளமஸி தேவைப்படுகிறது. நாவலிலேயே ஓரிடத்தில் செக் குடியரசுக்கான அமெரிக்கத் தூதரான ஹெய்டெல் நெகல் இப்படிச் சொல்கிறார்: “மனித பிரக்ஞையின் முழுத்திறனைக் கையாள்வதில் நாம் முதல் ஆளாக இருப்பதில்தான் அமெரிக்காவின் எதிர்காலமே இருக்கிறது என்று சிஐஏ-வின் இயக்குநர் தீவிரமாக நம்புகிறார். அணுவுக்குள் பொதிந்திருக்கும் அபரிதமான சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் முதன்முதலில் அனுமானித்தபோது அமெரிக்க அரசு ரகசியமான இயற்பியல் ஆராய்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தது, அதனால்தான் நாம் அணுக்குண்டை வைத்து எல்லோரையும் தோற்கடித்தோம் என்று எனக்கு நினைவூட்ட அவர் வெட்கப்படவில்லை. ஒருவேளை நாம் அதைச் செய்யாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ரஷ்யாவிடம் மட்டுமே குண்டு இருந்திருந்தால்? அல்லது ஜெர்மனியிடம்? அல்லது ஜப்பானிடம்?”

            ஆம், வேறு நாடுகளிடம் நவீன ஆயுதங்கள் இருந்தால் அது உலகத்துக்கே அச்சுறுத்தல் ஆகிவிடும். அமெரிக்காவிடம் இருந்தால்தான் அது உலகத்தையே காப்பாற்றும். ஏனெனில் அமெரிக்காதான் உலக அமைதிக்காகப் பாடுபடும் ஒரே நாடு. உலகத்துக்கான கதாநாயகன் அந்த நாடுதான், அல்லது அந்நாட்டின் அதிபர்தான். இந்த அடிக்கருத்து டான் ப்ரவ்னின் நாவல்களிலும் இருக்கிறது என்பது இந்த நாவலில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுதான் இந்த நாவலில் நான் உணர்ந்த மிகப் பெரிய குறை.

            மற்றபடி, நாவலில் டான் ப்ரவ்ன் பல்வேறு உளவியல் மருத்துவக் கோட்பாடுகளை அறிமுகம் செய்து விளக்கும்போது வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். இந்த நாவலின் 110-ஆம் அத்தியாயத்தில் கதாநாயகி கேத்தரின் அடைந்த மனநிலை பற்றி ஒரு வரி எழுதுகிறார்: “A collage of concepts now flooded her mind.” நாவலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிப் போடுவோம் என்று யோசித்த வேளையில் என் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. பட்டியல் கொடுத்தாலே மூச்சு முட்டும் போலுள்ளது.

            நாவலின் கதைப்பின்னலில் டான் ப்ரவ்ன் ஆழமான பல உளவியல் கோட்பாடுகள் பற்றிப் பேசுகிறார். மரணத்திற்கு நெருக்கமான அனுபவம் (NDE – Near Death Experience),  தேகாதீத / உடற்கடந்த / மீவுடல் அனுபவம் (OBE – Out of Body Experience), திடீர் வலிப்புத்தாக்கம் (epileptic seizure), பின்-வலிப்பு நிலை (Postictal State), ஒத்திசைவு (synchronization), இடைநிலை நினைவாற்றல் குறைபாடு (Interictal Memory Impairment)  ஆகியவை அவற்றில் சில. இது பற்றி அவர் தரும் சுவாரஸ்யமான விளக்கங்களைக் கட்டாயம் சொல்கிறேன்.

            இன்னொரு பட்டியல் தரலாம். இந்த நாவலில் டான் ப்ரவ்ன் ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருக்கும் நூல்கள். அவற்றில் சில நூல்களை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று வாசகர்கள் தூண்டப்படுவார்கள் என்பது திண்ணம். பட்டியல் இதோ:

1.      ”ஃப்யூட்டிலிட்டி” (நாவல், 1898) – மார்கன் ராபர்ட்ஸன்.

2.      “கோடக்ஸ் கிகாஸ்” – ஒரு கிறித்துவத் துறவி.

3.      “தி ஸ்ட்ரக்ச்சர் ஆஃப் சைன்டிஃபிக் ரெவல்யூஷன்ஸ்” (1962) – தாமஸ் குஹ்ன்.

4.      ”லைஃப் ஆஃப்டர் லைஃப்” (1975) – ரேமண்ட் மூடி.

5.      “ஃபீலிங் தி ஃப்யூச்சர்” (கட்டுரை, 2011) – டேரில் பெம்.

6.      ”தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மாரீ” (1896) – ஹெச்.ஜி. வெல்ஸ்.

7.      “தி த்ரீ ஃபேசஸ் ஆஃப் ஈவ்” (1967) – கார்பெட் ஹெச். திக்பென், மற்றும் ஹெர்வே எம். க்ளெக்லி.

8.      “ஸ்டேஞ்சர்ஸ் இன் மை பாடி” (1958) – ஈவ்லின் லான்சஸ்டர் மற்றும் ஜேம்ஸ் பாலிங்.

9.      “சிபில்” (1973) – ஃப்ளோரா ரெட்டா ஷ்ரைபர்.

10.   “தி ஸ்ட்ரேஞ் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட்” (1886) – ராபர்ட் லூயில் ஸ்டீவன்ஸன்.

மேற்சொன்ன பட்டியலே தவிர 85-ஆம் அத்தியாயத்தில் உள்ள இந்தப் பத்தியிலும் மீவுளவியல் தொடர்பான அறிஞர்களையும் நூல்களையும் சுட்டிக் காட்டுகிறார்: “ஹரால்ட் புத்தாஃப், ரஸ்ஸல் டார்க், எட்வின் மே, டீன் ராடின், ப்ரெண்டா டன், ராபர்ட் மாரிஸ், ஜூலியா மாஸ்ப்ரிஜ், ராபர்ட் ஜாஹ்ன் மற்றும் பல மதிப்புமிக்க அறிவாளுமைகள் ப்ளாஸ்மா இயற்பியல், நான்லீனியர் கணிதவியல், பிரக்ஞை மானுடவியல் போன்ற பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க கண்டறிதல்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் எழுதிய பிரபலமான நூல்களுக்கு லிமிட்லெஸ் மைண்ட், ரிமோட் பெர்சப்ஷன்ஸ், தி செவென்த் சென்ஸ், அனோமலஸ் காக்னிஷன், மற்றும் ரியல் மேஜிக் போன்ற தலைப்புகள் இடப்பட்டுள்ளன.”

இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்களில் டீன் ராடின் என்னும் பெயரை நான் கரிக்கோலால் அடிக்கோடு இட்டு வைத்தேன். அவரின் “தி நோயட்டிக் யூனிவர்ஸ்” (2009) மற்றும் “சூப்பர்நார்மல்” (2013) ஆகிய இரண்டு நூல்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர். அவர் கலிஃபோர்னியாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் நோயட்டிக் சைன்சஸ் என்னும் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் மீவுளவியலாளர் ஆவார். ரியல் மேஜிக் என்பது அவர் எழுதிய இன்னொரு நூல்.

தி நோயட்டிக் யூனிவர்ஸ் என்னும் அவரின் நூலினை நான் வாங்கி வாசிக்கத் தூண்டுதலாக இருந்தது டாக்டர் ருத்ரன் எழுதிய “தேடாதே” என்னும் சிறிய நூல். அந்த நூல் உருவாக மூல காரணம் ஓஷோவின் “தி செர்ச்” என்னும் நூல்! அது ஜென் ஆன்மிக மரபில் உள்ள “ஜென்னின் பத்து எருதுகள்” என்னும் குறியீட்டுப் படத்தின் விளக்கவுரை ஆகும். ஒவ்வொரு எருதும் மனிதப் பிரக்ஞையின் ஒரு நிலையைச் சுட்டுகின்றது. அதில் நோயசிஸ் மற்றும் யூனியோ மிஸ்டிக்கா ஆகிய இரண்டும் சூப்பர் கான்சியஸ்னெஸ் என்னும் உயர் பிரக்ஞை நிலைகளாகும் [ஓஷோவின் மேலும் இரண்டு நூல்கள் நினைவுக்கு வருகின்றன. ஸூஃபி ஞானி ஹகீம் சனாயி எழுதிய ஹதீக்காவின் சில கவிதைகளை விளக்கி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ’யூனியோ மிஸ்டிக்கா’, மற்றும் இந்தியச் சமூக்த்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை அக்காலத்தில் உண்டாக்கி அவரை எல்லோரும் காமச் சாமியார் என்று அழைக்கக் காரணமாய் இருந்த ‘செக்ஸ் டூ சூப்பர் கான்ஷியஸ்னெஸ்’ (தமிழில் ஸ்வாமி மோகன் பாரதி இதற்கு ‘காமத்தில் இருந்து கடவுளுக்கு’ என்று தலைப்புக் கொடுத்தார்.) டான் ப்ரவ்னின் நாவலில் ஓரிடத்தில் ராபர்ட் லாங்டனிடம் கேத்தரின் சொல்கிறாள்: “மீவுடல் அனுபவங்கள் பற்றிய நோயட்டிக் பார்வையுடன் பாலுறவு மிக நெருக்கமாக ஒத்துப் போகிறது” (‘sex is closely related to the noetic view of out-of-body experiences.’ P.419.)].

மேலே உள்ள பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ”ஃப்யூட்டிலிட்டி” என்னும் நாவல் பற்றிய செய்தி சுவாரஸ்யமானது. அதனை மார்கன் ராபர்ட்ஸன் 1898-ஆம் ஆண்டில் எழுதினார். அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காகப் பயணிக்கும் பெரிய கப்பல் ஒன்று பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாவதுதான் நாவலின் கதை. இந்த நாவல் வெளியாகிப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டைட்டானிக் கப்பல் அதே பெருங்கடலில் அதே விதத்தில் விபத்துக்கு உள்ளானது. நாவலில் மார்கன் கப்பலுக்கு டைட்டன் என்று பெயர் சூட்டியிருந்தார்! நவீன மீவுளவியல் இதனை Precognition (முன்னறிதல்) என்றும் Titanic Premonition என்றும் கூறுகிறது.

தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ் என்னும் இந்த நாவலின் அடிப்படையாக அமைவது பொருள் முதல் வாதத்துக்கும் கருத்து முதல் வாதத்துக்குமான முரணியக்கம் அல்லது மோதல் என்று சொல்லலாம். இதன் அடிப்படையிலான விவாதமும் இந்த நாவலில் பரவலாக உண்டு. இந்த இரண்டு தரப்புக்கான பிரதிநிதிகளாக இரண்டு கதைமாந்தரை டான் ப்ரவ்ன் உருவாக்கிக் கொள்கிறார்: டாக்டர் ப்ரிகிட்டா கெஸ்னர் (பொருள்முதல்வாதி), மற்றும் டாக்டர் கேத்தரின் சாலமன் (கருத்துமுதல்வாதி; நோயட்டிக் விஞ்ஞானி.) இந்த இரண்டு பெண்களுக்கு இடைநிலையில் இருப்பவர் ப்ரொஃபஸ்ஸர் ராபர்ட் லாங்டன் என்னும் குறியியலாளர்.

மனிதப் பிரக்ஞையை இந்த இரண்டு தரப்புகளும் விளக்கும் போக்குகளின் முரண்பாடு இந்த நாவலில் “Materialism versus Noetics” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மனிதப் பிரக்ஞையும்  அதில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும், அது மீவியற்கையான மீவியற்பியலான நிகழ்வுகளாக இருந்தாலும் சரியே, முழுக்க முழுக்கப் பருப்பொருளியல் நோக்கிலேயே விளக்கப்பட்டுவிட முடியும் என்றும் அவை அனைத்தும் மூளையில் இருக்கும் நியூரல் வலைப்பின்னல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் உண்டாகுபவை மட்டுமே என்றும் பொருள்முதல்வாதம் கருதுகிறது. இதற்கு எதிராக நோயட்டிக்ஸ் துறையினர் தம் கருத்தை முன்வைக்கின்றனர்.  பிரக்ஞை என்பது மூளைச் செயற்பாடுகளால் உண்டாகும் ஒன்றல்ல. அது இடவெளி, காலம், மற்றும் சக்தி என்பது போல் பிரபஞ்சத்தின் அடிப்படையான ஓர் அம்சமாகும். மேலும், அது உடலுக்குள் கட்டுப்பட்டதுமன்று என்பது அவர்களின் பார்வை.

சிந்தனை அல்லது பிரக்ஞையே பருப்பொருளை உருவாக்குகிறது என்பது கருத்துமுதல்வாதம் அல்லது ஆன்மிகத்தின் பார்வை. இது மிகவும் பழமையான ஒன்றுதான். டான் ப்ரவ்ன் அதற்கான உதாரணங்களை ஓரிடத்தில் தருகிறார்:

“இந்தக் கருத்து – எண்ணங்களே எதார்த்தத்தை உருவாக்குகின்றன என்னும் கோட்பாடு – பெரும்பான்மையான ஆன்மிக போதனைகளின் மையக் கருவாக அமைந்திருக்கிறது.

புத்தர்: நம் எண்ணங்களால் உலகை உருவாக்குகிறோம்.

ஏசுநாதர்: பிரார்த்தனையில் நீ கேட்பது எதுவாயினும் அது உனதாகும்.

ஹிந்துயிசம்: இறையாற்றல் உள்ளவன் நீ.

இந்தக் கோட்பாடு நவீன முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் கலையுலக மேதைகளாலும் எதிரொலிக்கப்படும் ஒன்றுதான் என்பது லாங்டனுக்குத் தெரியும். வணிக குரு ராபின் ஷர்மா பறைசாற்றினார்: ஒவ்வொன்றும் இரண்டு முறை படைக்கப்படுகிறது; முதலில் மனத்தில், அடுத்து எதார்த்தத்தில். பாப்லோ பிக்காசோவின் மிகப் பிரபலமான மேற்கோள்: நீ கற்பனை செய்ய முடிந்த அனைத்தும் நிஜம்.” (ப.49)


இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் என்னும் வினாவுக்கு சமயங்கள் சொல்லி வந்த விடையையே நோயடிக் அறிவியல் தன் கோட்பாடாக முன் வைக்கிறது. அது பற்றி இந்நாவலில் கேத்தரின் சொல்கிறாள்: “இந்தக் கோட்பாடு Non-local Consciousness எனப்படுகிறது. ’பிரக்ஞை என்பது உங்கள் மூளையில் குறிப்பாக அமைந்திருக்கவில்லை (not localized in your brain)… ஆனால் அது எங்குமிருக்கிறது’ என்பதே அதன் கருதுகோள். அதாவது, பிரக்ஞை என்பது பிரபஞ்சம் முழுவதிலும் பரவியுள்ளது.” (ப.262).

அப்படியானால் மனித மூளையில் பிரக்ஞையே இல்லையா? என்று கேட்க வேண்டாம். டான் ப்ரவ்ன் அப்படிச் சொல்லவில்லை. மனித மூளை என்பது Clouds computing முறையில் இயங்கும் ஒரு செல்ஃபோன் மாதிரி என்று அவர் உவமை கூறி விளக்குகிறார். பிரபஞ்சமளாவிய பிரக்ஞை என்னும் மேகத்தில் (cloud) இருந்து அது தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறது. (ப.265)

இந்த பிரபஞ்சமளாவிய பிரக்ஞையை தொல் ஆன்மிக மரபுகள் பல்வேறு பெயரிட்டு அழைத்து வந்துள்ளன என்பதை லாங்டன் நினைவு கூர்கிறார்: ஆகாசவெளி [இதனைக் கடுவெளி என்று ஒரு சித்தர் பாடியுள்ளார். அவருக்குப் பெயரே கடுவெளிச் சித்தர்.], பிரபஞ்ச மனம், பிரபஞ்ச பிரக்ஞை, விண்ணுணர்வு [உணர்வு என்பது conscience, உணர்ச்சி என்பது emotion என்பார் தி.ந.ராமச்சந்திரன்.], மற்றும் கடவுளின் ராஜியம். (ப.265)

பிரபஞ்ச பிரக்ஞையில் இருந்து மனித மூளை தனக்கான பகுதியை உள்வாங்கிக் கொள்கிறது என்பதற்கு டான் ப்ரவ்ன் தரும் இன்னொரு உதாரணம் வானொலிப் பெட்டி. பல்வேறு ஒலிபரப்பு நிலையங்களின் ரேடியோ அலைகள் இடவெளியெங்கும் விரவியுள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் அலைவரிசைக்கு வானொலிப்பெட்டி சுருதி (டியூன்) சேர்கிறது. அந்த ஒத்திசைந்த அதிர்வலை மட்டும் வானொலிப்பெட்டிக்குள் நுழைகிறது. அதைத்தான் வானொலிப் பெட்டி ஒலியாக மாற்றி வெளியிடுகிறது. மனித மூளை இந்த வானொலிப் பெட்டியைப் போல் இருக்கிறது. “மூளை ஒரு ரிசீவர் (அலைவாங்கி)… பிரக்ஞை உள்நோக்கிப் பாய்கிறது, வெளிநோக்கி அல்ல (The brain is a receiver... and consciousness flows in, not out.)” (ப.281)

                "Man with a Halo" - painting by Jean Michael Basquiat

  அறிவர், ஞானியர், இறைத்தூதர் போன்றோரைச் சித்திரிக்கும் ஓவியங்களில் அவர்களின் தலைக்கு மேல் வரையப்படும் ஒளிவட்டம் (halo) வரையப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சில ஒளிவட்டங்கள் அதிலிருந்து எட்டுத் திசையிலும் பரவும் ஒளிச்சுடர்களையும் கொண்டிருக்கும். ஒளிவட்டம் குறித்து லாங்டனுக்கு கேத்தரீன் விளக்குகிறாள்: ”பொதுவாக ஒளிவட்டங்கள் என்பது ஞானியின் தலையிலிருந்து பிரக்ஞை வெளியே பாய்வதாக விளங்கப்படுகிறது. நாம் ஒளிவட்டத்தை நேர்மாறாக அர்த்தப்படுத்தி வருகிறோம். அந்த ஒளிச்சுடர்கள் பிரக்ஞையின் சுடர்களைக் குறிக்கின்றன… உள்நோக்கிப் பாய்பவை… வெளிநோக்கி அல்ல. ஒருவருக்கு ஞானமடைந்த மனம் இருக்கிறது என்று சொல்வதன் பொருள் அவருக்கு ‘சிறப்பான ரிசீவர்’ இருக்கிறது என்பதுதான்.” (ப.280)

இதை லாங்டன் சமயங்கள் கூறும் இறைத்தூதர்கள் பற்றிய செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவர்கள் இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுகிறார்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் ரிசீவர்கள்தாம் (ப.280). இந்த விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்று அவர் ஒப்புக் கொள்கிறார்.

ப்ளாஸ்மா இயற்பியல், நான்லீனியர் கணிதவியல், மற்றும் பிரக்ஞை மானுடவியல் முதலிய நவீன அறிவியல் துறைகள் இந்தக் கருத்துக்களை மெல்ல மெல்ல நிரூபித்து வருகின்றன. சூப்பர் பொசிஷன் என்னும் கோட்பாடு சொல்கிறது: “எல்லாப் பொருட்களும் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருந்து வருகின்றன” (ப.266).

இந்நாவலில் கருத்துமுதல் வாதம் பேசப்படும் மேலும் சில இடங்கள்:

1.”உன் பிரக்ஞை உன் மூளையால் உருவாக்கப்படும் ஒன்றல்ல. வாஸ்தவத்தில், உன் பிரக்ஞை உன் தலைக்குள் அமைந்த ஒன்றுமல்ல.” (ப.16)

2. லாங்டன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி மரச்செறிவை நோக்கி நின்றார். அப்போது பறவைகளின் பெருங்கூட்டம் ஒன்று ஏக காலத்தில் அப்படியே கொத்தாக எழுந்து ஒன்றாகப் பறந்து வட்டமடித்தன. பறவைகளால் ஆன இன்ன வடிவமென்றில்லாத முகில் ஒன்று வானத்தின் குறுக்காக நகர்வதைக் கண்ட லாங்டன் ‘பிரபஞ்சம் என்னைப் பரிகாசம் பண்ணுகிறது’ என்று எண்ணினார். சென்ற ஆண்டு ஜோன்ஸுடன் பேசிக் கொண்டிருக்கையில், சிட்டுக் குருவிகளின் கூட்டம் ஒன்றைத் திரையில் காட்டி கேத்தரின் சொன்னது நினைவு வந்தது: “பிரிவு என்பது ஒரு மாயை. இந்தச் செயற்பாடு நடத்தை ஒத்திசைவு (behavioral synchronization) எனப்படுகிறது. இது இயற்கை முழுவதிலும் இருக்கிறது.” (ப.235). மேலும், கேத்தரின் சொன்னாள்: “குருவிகள் ஒன்றாக அசைகின்றன, ஏனெனில் அவை ஒன்றுதான்… உள்ளிணைந்த ஓர் அமைப்பு. பிரிவே இல்லை.” (ப.236)

3. பிரிவு என்பது நம் பகிர்மாயை (Seperation is our shared delusion.) (ப.236)

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார்: “நாம் பிரபஞ்சம் என்று அழைக்கின்ற ஒன்றின் ஒரு பகுதியே மனிதன்… அவன் தன்னையும் தன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றையும் ஏனையவற்றிடம் இருந்து பிரிந்தவையாக அனுபவம் கொள்கிறான். இது அவனின் பிரக்ஞையில் உண்டாகியுள்ள ஒருவிதத் தோற்ற மயக்கம் (optical delusion). இந்த மயக்கம் நமக்கு ஒருவிதமான சிறை.”

[ஒப்பீடு: அ) “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? வெறும் தோற்ற மயக்கங்களோ?” – மகாகவி பாரதியார். ஆ) “சொந்தச் சிறைகள்” – கவிக்கோ அப்துல் ரகுமான்.] (பக்.236-237).

            5.”உலகில் நாம் தனித்திருக்கிறோம் என்று நினைத்தது மனிதகுலத்தின் மிகப்பெரிய பகிர்மாயை என்பதை நாம் ஒருநாள் காணத்தான் போகிறோம்.” (ப.237)

(to be continued...)


No comments:

Post a Comment