(3 ஏப்ரில் 2004, அல்-ஜாமிஆ மஸ்ஜித், கிளேர்மாண்ட், கேப் டவுன், தென் ஆப்ரிகா)
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின்
மீதான் நேசம் பற்றிய “ஹுப்” என்னும் ஒரு சொல்லினை அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) எவ்வாறு
குர் ஆனில் கையாள்கிறான் என்பது பற்றியும் முஃ’மினூன் என்னும் இறைநம்பிக்கையாளருக்கு
அந்த நேசம் தரும் அர்த்தங்கள் பற்றியும் சென்ற வாரம் கவனித்தோம்.
இன்று, இன்னொரு வார்த்தையான “இபாதத்” என்பதன் அர்த்தங்கள் பற்றி அலசுவோம். இபாதத் என்பதை எது வரையறுக்கிறது
என்று பார்ப்போம். அதாவது, அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வை வணங்குவதில் ஒரு முஃ’மின்
தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வழி என்ன என்பதைப் பார்ப்போம். இந்த இபாதத் என்பது ’அப்து’விடமிருந்து
வருகிறது. எனவே அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வை வணங்குதல் என்பதே அடிமைத்தனம்தான். அது,
ஒருவர் தன்னை அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் ஆற்றலின் கீழ் ஒப்படைத்துவிடுவதாகும்.
இபாதத் என்பது எந்த அறிவைக் கொண்டு செய்யப்படுகிறதோ அதற்கு ஏற்றபடியான அர்த்தத்தையே
தரும்.
சஹீஹ்
தொகுப்புகளில் இருந்து பிரபலமான ஹதீஸ் ஒன்று இருக்கிறது. அது பல்வேறு அறிவிப்புகளில்
கிடைக்கிறது. அதில், ஸலாத்தின் (தொழுகையின்) முக்கியத்தை வரையறுக்கும் ரசூல் (ஸல்லல்லாஹு
அலைஹி வ சல்லம்) அவர்கள் புரிந்து தொழும் ஸ்லாத்தைக் குறிப்பிடுகிறார்கள். இது, தொழுகையின்
அசைவுகளை ஒருவர் மேலோட்டமாகச் செய்து முடிக்கிறார் என்பதைப் போன்றது அல்ல. நிற்றல்,
குனிதல் மற்றும் சிரம்பணிதல் ஆகியவற்றின் அர்த்தங்களை அறிந்த ஒருவர் செய்யும் தொழுகையாகும்.
வணங்கப்படுவோன் யார் என்பதுதான் அதற்கு அர்த்தம் தருகிறது. இதைத்தான் நாம் பின்வரும்
திருவசனங்களில் பார்க்கிறோம்.
ஸூரத்து ஆலி இம்ரான் (3:175) திருவசனத்தின் இரண்டாம் பகுதியைப்
பாருங்கள்:
அவர்களைஅஞ்சற்க; நீவிர் இறைநம்பிக்கையாளரெனில் என்னையே அஞ்சுக
’ஃகவ்ஃப்’ என்னும் சொல் மெய்யான
அச்சத்தைக் குறிக்கும். அது ஓர் உளவியல் நிலைப்பாடு அல்ல. அது உடலியல் ரீதியானது.
ஃகவ்ஃப் என்பது உடலில் பரவுவது, ஒரு மனிதன் காட்டுப் புலியைக் கண்டது போல்.
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) இங்கே “நீவிர் முஃமினூனாக இருந்தால் என்னையே
அஞ்சுங்கள்” என்று சொல்கிறான். எனவே அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) முஃமினை எடுத்து
அவரின் முழு அடையாளத்தையும் மாற்றுகிறான். இங்கே “அவர்கள்” என்று பொதுவில் சுட்டப்படுவது
பகைவரை ஆகும். மேலும், ஒரு முஃமின் அஞ்சுகின்ற அனைத்துப் படைப்புக்களையும்
சுட்டுவதாகும். உன்னைப் பகைக்கின்ற, எதிர்ப்படுகின்ற எதனையும் அஞ்சாதே. ஆனால்
“என்னை அஞ்சு”, அதாவது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வை அஞ்சு.
இங்கே இறைவன் இதைச் சொல்லும்
கட்டமைப்பை,“என்னை அஞ்சுக” என்பதில் உள்ள என்னை என்னை என்பதைக் கவனிக்கவும்.
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) அவ்வாறு பேசுவது, அவன் தனது சுயத்தில் இருந்து பேசுது
போன்றதாகும். ஏனெனில் அவன் தன்னைப் பற்றி தன்மை ஒருமையில் பேசுகிறான். குர்ஆனில்
சில நேரங்களில் அவன் மக்களிடம் தன்னைப் பற்றி “அவன்” என்று படர்க்கையில்
(அள்-ளமாஇரு லில் காஇப்) குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. ஆனால் இங்கே அவன் “என்னை”
என்று சொல்கிறான். எனவே இது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் பரிபூரணமான
சுயத்திலிருந்து வெளியாகும் கட்டளை என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.
”நீவிர் முஃமினூனாக இருந்தால் என்னை
அஞ்சுங்கள்.” வேறு விதத்தில் சொல்வதெனில், அல்லாஹ்வின் மீது முற்றிலும் நம்பிக்கை
வைக்கும் முஃமின் என்னும் நிலை யாதெனில் அவனிடம் அல்லாஹ்வின் அச்சம் இருக்கும்.
முஃமின் என்று ஆகிவிட்ட ஒரு மனிதப் படைப்பின் நிலையில் ஏற்படும் மாற்றம் இது. இந்த
நிலையில் பிறரைப் பற்றி, பகைவனைப் பற்றி, அவனை எதிர்க்கும் ஒன்றைப் பற்றி அவன்
கொண்டிருக்கும் அச்சம் விலகி, அதனினும் ஆழமான ஒரு ஃகவ்ஃப் (அச்சம்) அவனில்
உண்டாகிறது. அதுதான் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் மீதான அச்சம். ஒரு
முஃமினுக்கு அது ஒன்று மட்டுமே வாழ்வதற்கான நிலை என்று அது மிகைத்துவிடும்போது
அதிலேயே அவர் முடங்கி இயங்காமல் ஆகிவிடக் கூடும். மாபெரும் இறைநேசர்களுக்கு
(அவ்லியா) அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் மீது அத்தகைய மிகைப்பான அச்சம்
ஏற்பட்டது உண்டு. அல்லாஹ்விடம் செல்லும் ஆன்மிகப் பயணத்தில் ஒரு கட்டத்தில்
அவர்கள் அதிலேயே நிலைத்து உறைந்துவிடும்போது அல்லாஹ் தனது சக்தியால் அவர்களை
அந்நிலையை விட்டும் வெளியேற்றியிருக்கிறான். இது ஏன் எனில், தஸவ்வுஃபின்
பரிபாஷையில் சொல்வது எனில், ஃகவ்ஃப் (அச்சம்) என்பது ரஜா (ஆதரவு) என்பதைக் கொண்டு
சமனப்படுகிறது.
பிரபலமான ஒரு கதை உண்டு.
சஹாராவிலிருந்து ஒருவர் வந்து ஷைகு முஹம்மத் இப்னுல் ஹபீப் (ரஹிமஹுல்லாஹ்)
அவர்களைச் சந்தித்தார். தர்காவி தரீக்காவில் உறுப்பினர் ஆவதற்கான அனுமதியை (இத்னு)
தன் குருவின் சார்பில் இப்னுல் ஹபீப்
அவர்களுக்குத் தருவதற்காக அவர் வந்திருந்தார். அப்போது ஷைகு முஹம்மத் இப்னுல்
ஹபீப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஃபாஸ் நகரின் கரவிய்யீன் பள்ளிவாசலில் அறபி
கற்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மனிதர் அவரின் ஷைகிடம் இருந்து ஒரு
வழிகாட்டுதலுடன் அனுப்பப் பட்டிருந்தார்: “கரவிய்யீனுக்குப் போ. அங்கு சென்று
சேர்ந்ததும், அங்கே மார்க்க அறிஞர்களின் ஒரு வட்டம் அமர்ந்திருக்கும். அவர்களிடம்
சென்று, ‘நான் அல்லாஹ்வின் விருந்தாளி’ என்று சொல்”, அது உபசாரம் கோரும்
வழிமுறையாகும், “உன்னை யார் ஏற்றுக் கொள்கிறாரோ அவருடன் போ.”
எனவே,
சாலிஹூன் (நல்லடியார்)களில் ஒருவரான இந்த மனிதர் அங்கே சென்று, “நான் அல்லாஹ்வின்
விருந்தாளி” என்று சொன்னார். அவர்கள் அனைவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டனர்.
சஹாராவிலிருந்து வரும் இந்த விருந்தாளியை ஏற்க அவர்கள் ஒருவரும் விரும்பவில்லை.
அவர் மீண்டும் “நான் அல்லாஹ்வின் விருந்தாளி” என்றார். ஒருவரும் பதில் பேசவில்லை. மூன்றாம்
முறை அவர் அப்படிச் சொன்னதும் ஷைகு முஹம்மத் இப்னுல் ஹபீப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்
“மர்ஹபன்” என்று அவரை வரவேற்ற்று அழைத்துச் சென்றார்கள்.
ஃபாஸ்
நகரின் சுற்றுச் சுவரில் அவருக்கு இருந்த சின்னஞ் சிறு அறை ஒன்றுக்கு அவரை
அழைத்துப் போனார்கள். அந்த அறை மதிலுக்குள் கட்டப்பட்டிருந்ததால் அதன்
படிக்கட்டுகள் செங்குத்தாக இருந்தன. ஷைகு முஹம்மத் இப்னுல் ஹபீப் அவர்களிடம்
அனுப்பப்பட்ட அந்த ஆள் படிகளில் ஏறும்போது ஒரு காலை எடுத்து வைத்ததும் “ஃகவ்ஃப்”
என்றும் மறு காலை எடுத்து வைத்ததும் “ரஜா” என்றும் சொன்னார். “ஃகவ்ஃப்! ரஜா!” ஷைகு
முஹம்மத் இப்னுல் ஹபீப் அப்போது ஃபாஸ் நகரின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுள்
(உலமா’) ஒருவராக இருந்தார்கள். ஆனால் அப்போது அவர்களுக்கு தஸவ்வுஃபின்
(ஸூஃபித்துவத்தின்) நேரடி அனுபவம் கிடைத்திருக்கவில்லை. திடீரென்று இன்னொரு வகையான
மனிதரை எதிர்கொண்டது அவர்களுக்குள் பெருந் தாக்கத்தை ஏற்படுத்திற்று. அந்த மனிதர்
அவர்களுடன் தங்கியிருந்தார். ஆனால் ஷைகு முஹம்மத் இப்னுல் ஹபீப் அவர்கள் அந்த நபர்
எங்கிருந்து வருகிறார் என்றோ எதற்கு வந்திருக்கிறார் என்றோ கேட்கவே இல்லை. அவரைத்
தன் விருந்தினராக ஏற்றுக் கொண்டார்கள். அவரிடம் வினாக்கள் எதுவும் எழுப்பவில்லை.
அந்த நபர் அவர்களிடம் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் ஷைகு முஹம்மத்
இப்னுல் ஹபீப் அவர்கள் அந்த நபரை அவதானித்தார்கள். அவர் எவரைப் பற்றியும் எதிராகப்
பேசுவதில்லை. மக்கள் மோசமாகப் பேச ஆரம்பித்தால், புறம் பேசவோ அவதூறு பேசவோ
ஆரம்பித்தால், உடனே அவர் அங்கிருந்து விலகிப் போய்விடுவார். மேலும், அவர்
எப்போதும் விர்து (வழமையான ஓதல்கள்) மற்றும் இஸ்முல்
அஃழம் (இறைவனின் மகா நாமம்) ஆகியவற்றை ஓதிக் கொண்டிருப்பார். பிறகு ஒருநாள்
அவர் சொன்னார், “உங்களுக்கு என்னிடம் ஒரு கடிதம் இருக்கிறது.”
ஷைகு முஹம்மத் இப்னுல் ஹபீப்
சொன்னார்கள், “நான் எந்த ஒரு கடிதமும் எதிர்பார்க்கவில்லையே!” அவர் சொன்னார், “இது
உங்களுக்குத்தான்!” அவர்கள் சொன்னார்கள், “அப்படியானால் அது உன்னிடம் இருந்துதான்
வந்திருக்கும். நீயே அதைப் படி.” எனவே அவர் அதனைப் படித்துக் காட்டினார். அது
திஞ்தாதில் இருந்து அந்த நபரின் ஷைகு (குரு) எழுதிய கடிதம். ஷைகு முஹம்மத் இப்னுல்
ஹபீப் அவர்கள் தரீக்காவில் சேர்வதற்கான அனுமதியை (இத்னு) அவர் வழங்கியிருந்தார்.
இந்தக் கதையில், ஸூஃபிப் பாதையில்
அவரை நுழைய வைத்த அதிர்வு எது என்பதை அறிகிறோம். ஒவ்வொரு காலடி வைப்பிலும் தன்னை
அச்சத்திற்கும் ஆதரவுக்கும் இடையில் சமனப்படுத்தியபடி அந்த மனிதர் ஏறியதன்
தாக்கம்தான் அது. எனவே, இந்த ஃகவ்ஃப் என்பது முஃமினுக்கு ஓர் எதார்த்தம் ஆகும் –
அதாவது, அவரிடம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் உண்டு. “அவர்களை அஞ்சாதீர் – நீவிர்
முஃமினூனாக இருந்தால் என்னை அஞ்சுங்கள்.” இதுவே இபாதத்துக்கான சரியான நிலையின்
ஆரம்பம் ஆகும்.
இப்போது நாம் சூரத்துல் ஜுமர் (39:36-37)-ஆம் திருவசனங்களை அவதானிப்போம்:
எனினும், அவன் அல்லாதவற்றைக் கொண்டு
அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர்;
எவரை அல்லாஹ் வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ
அவருக்கு நேர்வழிகாட்டி யாருமிலர்;
எவரை அல்லாஹ் நேர்வழியில்
செலுத்துவானோ
அவரை வழிகெடுப்போர் யாருமிலர்;
அல்லாஹ்
எல்லாம் வல்லவனும் பழிவாங்குவோனும் அல்லனா?
அல்லாஹ் யார், அவனைப் பற்றி நாம்
எப்படிப் பேச இயலும், யார் நம்மைக் கையாள்கிறான் – ஏனெனில் அவனை நாம் கையாள
முடியாது - என்பவற்றை இப்போது நாம் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.
”அல்லாஹ்
போதுமானவன் அல்லனா?” என்று அல்லாஹ் கேட்கிறான். நாம் எல்லோரும் பொருள்முதல்வாதக்
கல்வி புகப்பட்டு வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும்.
நாம்தான் பொருட்களைக் கையாள வேண்டும் என்று நம்புகின்ற ஒரு கல்வியையே நாம்
அனைவரும் அடைந்திருக்கிறோம். இதன் நீட்சியாக, மனிதர்களையும் நாம் கையாளலாம் என்று
ஆகிவிடுகிறது. ஆனால், தீனுல் இஸ்லாமுக்கு இதில் உடன்பாடு கிடையாது. இக்காலத்தில்
ஏகப்பட்ட குழப்பங்கள் நேர்வதற்குக் காரணம், முஸ்லிம்களாக இருக்கும் நிலையில்
மக்கள் அத்தகைய கல்வியையும் கண்ணோட்டத்தையும் கைக்கொள்ள முனைவதுதான். இதனால்தான்
நீங்கள் பாலஸ்தீனில் மிகக் கொடுமையான சூழ்நிலையைப் பார்க்கிறீர்கள், அறபு மக்கள்
அனைவருக்கும் மோசமான சூழ்நிலை வந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் அறபி மொழியை
வெறுமனே லௌகீக பாஷையாகப் புழங்குகிறார்கள் என்பதுதான்.
அவர்கள்
அறிய மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் குஃப்பார்களின் இந்த உலகக் கண்ணோட்டத்தை
வரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வேதச் செய்தி இங்கே சொல்கிறது: “தன்
அடிமைக்கு அல்லாஹ்வே போதுமானவன் அல்லனா?” இது ஒரு வலிமையான வாசகம். உன் வாழ்வின்
ஊடாக உன்னை நடத்திச் செல்வதற்கு வேறு ஏதேனும் சக்தியை நீ தேடுகிறாயா என்ன?
அல்லாஹ்வுக்கு அடிபணிவதைத் தவிர வேறு எதையும் நீ செய்யாதே என்று உன்னிடம் கோர்வதே
இஸ்லாமின் நிலைப்பாடாக இருக்கும்போது உனக்கு ஆதரவு அளிக்கும் வேறு செயல்கள்
இருக்கிறது என்று நீ உண்மையில் நினைக்கிறாயா? அல்லாஹ்வுக்கு நீ அடிபணிந்தால் அவனே
உனக்குப் போதுமானவன். உனக்கு வேறெதுவும் தேவையில்லை. பதிலுக்கு, அனைத்துப்
பொருட்களும் உனக்கு அடிபணியும்.
”தன்
அடியாருக்கு அல்லாஹ்வே போதுமானவன் அல்லனா? எனினும், அவன் அல்லாதவற்றைக் கொண்டு
அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர்” – இதை நாம் ஒவ்வொரு நாளும்
தொலைக்காட்சியில் பார்க்கிறோம். அது வாசிக்கும் செய்திகளே இதுதான் – அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)வைத் தவிர வேறிடத்தில் சக்தி இருக்கிறது என்று உங்களை உணர
வைப்பது.
எவரை அல்லாஹ் வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ
அவருக்கு நேர்வழிகாட்டி யாருமிலர்
”வழிகாட்டி” என்பதற்கான சொல் ‘ஹாதி’. அல்லாஹ்வின்
திருநாமங்களுள் ஒன்று அல்-ஹாதி. எனவே, நேர்வழியில் நடத்துவோனைக் கொண்டு நீங்கள்
வழிகாட்டப் பெறவில்லை என்றால் உங்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கப்போவதே இல்லை.
உங்களி வாழ்வின் பயணத்தில் வெற்றியை நோக்கி உங்களை இட்டுச் செல்லக்கூடிய வேறு ஒரு
வழிகாட்டுதல் கிடையாது. ”எவரை அல்லாஹ்
வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு நேர்வழிகாட்டி யாருமிலர்; எவரை அல்லாஹ்
நேர்வழியில் செலுத்துவானோ அவரை வழிகெடுப்போர் யாருமிலர்.” வேறு வார்த்தைகளில்
சொல்வதெனில், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் இந்தப் பாதையைப் பின்பற்றுவோர்
எவரோ, அவரே பாதுகாப்பு அடைந்தார், அடைக்கலம் பெற்றார்.
பின்னர் அல்லாஹ் சொல்கிறான், “அல்லாஹ் எல்லாம் வல்லவனும் பழிவாங்குவோனும்
அல்லனா?” அவன் எல்லாம் வல்ல ஏக
இறைவன்தான், ஆனால் பழிவாங்குவோனும்கூட. எனவே, நீங்கள் யாரால் நேர்வழியில்
நடத்தப்படுகிறீர்களோ அவன் உங்கள் எதிரிகளை சும்மா விட்டுவிடப் போவதில்லை
என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுகிறான். அவர்கள் தப்பிக்கப் போவதில்லை.
முஃமின்களை நேர்வழியில் நடத்தும் எல்லாம் வல்லவனான இறைவனேதான் தனக்கு
அடிபணியாதோரைப் மிகக் கடுமையாகப் பழிவாங்கவும் செய்வான். முஸ்லிம்களின்
“வெளியுறவுக் கொள்கை” என்று நீங்கள் சொல்வது இதன் அடிப்படையில் அமைய வேண்டும்
என்பதையும் இது காட்டுகிறது. முஸ்லிம்களின் கொடுக்கல் வாங்கல் இதனை அடிப்படையாகக்
கொண்டு அமைய வேண்டும். இது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் ஆற்றலின் அம்சங்களில்
ஒன்று – அதாவது, அல்லாஹ் தனது பகைவர்களை தப்பிக்கவிட மாட்டான்.
நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டிய மிக முக்கியமான கருத்துக்கு இப்போது வருகிறோம். தமக்கு வலிமையும் அகப்பார்வையும் தருவதற்காக ஸூஃபிகள் மிக அழுத்தமாகச் சார்ந்திருக்கும் இறைஞானம் பற்றிய ஒரு விஷயம் அது. ஷைகு இப்னுல் அறபி அவர்கள் தனது ’ஃபுத்தூஹாத்துல் மக்கிய்யா’வில் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வைப் பற்றி, அவன் படைப்பாளனாக இருக்கும் நிலை பற்றிப் பேசுகின்ற இடங்களில் எல்லாம் இந்தக் கருத்து இழையோடுகிறது. ஸூரத்துல் ஜுமர் (39:38) திருவசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
’வானங்களையும் பூமியையும் படைத்தவன்
யார்?” என்று அவர்களை நீங்கள் வினவினால், நிச்சயமாக “அல்லாஹ்” என்று சொல்வார்கள்.
இதைக்கொண்டு
அல்லாஹ் நமக்கு என்ன சொல்கிறான் எனில், குஃப்பார்கள் (நிராகரிப்பாளர்கள்)
நாத்திகர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால் அவர்கள் அல்லாஹ்வை
மட்டுப்படுத்திவிட்டனர். ஏற்கனவே படைத்து முடிக்கப்பட்டுவிட்ட எதார்த்தம் ஒன்றில்
தாம் வாழ்வதாகவும், அதன் பின்னர் அந்த எதார்த்தத்தில் தாம் மனம் போன போக்கில்
வாழலாம் என்றும் குஃப்பார்கள் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையன்று.
எதார்த்தம்
அவர்கள் நினைப்பது போன்று இல்லை என்று இந்தத் திருவசனத்தின் அடுத்த பகுதியில்
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) காட்டுகிறான். செயற்பாட்டில் இல்லாத எது ஒன்றும்
படைப்பில் இல்லை. அல்லாஹ் தனது திருநாமங்கள், தனது திருப்பண்புகள் மற்றும் தனது
சுயம் ஆகியவற்றில் ’ஒருவன்’ என்று இருக்கிறான். பொருட்களை அவன் நிலையிலாது
இயங்கும் நிலையில் படைத்திருக்கிறான். எனவே, மனிதர்கள் மட்டுமல்லர், விலங்குகள்
மற்றும் ஏனைய உயிரிகள் மட்டுமல்ல, ”படைப்பின் உப்பு அடித்தளம்” என்று இப்னுல் அறபி
அழைக்கும் இவ்வுலகின் ரசாயன அடித்தளமே கூட, மலைகள் போன்றவை கூட – இந்த அனைத்துப்
பொருட்களும் இயக்கத்தில் உள்ளன. இதில் யாருக்காவது ஏதாவது ஐயம் இருந்தால்
துருக்க்யில் என்ன நடந்து வந்தது என்பதைப் பாருங்கள், ஈரானில் என்ன நடந்து வந்தது
என்று யோசியுங்கள். மலைகளும் சமவெளிகளும் பொங்கி வெடித்துப் பிளந்தன, ஒவ்வொன்றும்
அசைவில் இருந்தன – ஒவ்வொரு நிமிடமும் பூமிக்குள் இருந்து வாயுக்கள் வெளி
வருகின்றன, இயற்கை முழுதும் உயிர்ப்புடன் உள்ளது.
பரிணாமவாதப்
பொய் என்னவென்றால், இவை எல்லாம் எளிய உயிரிகளாக இருந்து பின்னர் மேலும் மேலும்
சிக்கலுற்று அப்புறம் – ஜீபூம்பா! இதோ மனிதன்! என்று வந்துவிட்டது – அதுதான்
படைபின் நிகழ்வு என்று சொல்வதாகும். அப்புறம் இந்த மனிதன் தான் விரும்பியதை
எல்லாம் செய்கிறான், அவன் தன் விதிமுறைகளை வகுத்துக் கொள்கிறான், தன் சிந்தனைகளை
வெளிப்படுத்துகிறான் – பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதுமே தாம் எப்படி வாழவேண்டும்,
இருத்தல் என்பது என்ன என்பது பற்றி சில நபர்கள் கருத்துக்களை உருவாக்கியதிலேயே
கழிந்துபோனது – அவர்கள் முழு விஷயத்தையும் வரைந்து விட்டார்கள்!
வானங்களையும் பூமியையும் படைத்தோன்
அல்லாஹ்வே என்று குஃப்பார்கள் சொல்வார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அது
புரிதல் அல்ல, ஏனெனில் மனிதனை அவனின் செயல்களை விட்டும் நீங்கள் பிரிக்க முடியாது.
எனவே, மனிதப் படைப்பு என்பது மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கத்தை மூடியதாக
இருக்கிறது. அது இறைவனின் படைப்புச் செயற்பாட்டில் ஒரு பகுதி, பறவைகளையும்
விலங்குகளையும் படைக்கப்படுவதன் சுழற்சியில் இணை சேர்வதும் பிள்ளைகள் பெறுவதும்
இருப்பதைப் போல். உதாரணமாக, கரடிகளின் செறிதுயில் (hibernation) என்பதன் முழு
சுழற்சியை எடுத்துக் கொள்ளுங்கள், செறிதுயில் கொள்ளாத கரடி என்பது சாத்தியமில்லை.
எனவே, படைப்பு என்பது பருவகாலங்களின் ஊடாக, வாழ்வின் ஊடாக நிகழ்கிறது.
குஃப்பார்கள் இந்தப் போதாத விடையைச் சொன்னபோது, அவர்களுக்கு இப்படிச் சொல்லுமாறு நம்மை அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) ஏவுகிறான்:
பிரார்த்திக்கின்றவற்றைப்
பார்த்தீர்களா?
அல்லாஹ் எனக்கொரு
இடரை நாடினால்
அவை அந்த இடரை நீக்க
முடியுமா?
அல்லது அவன் எனக்கு
அருளை நாடினால்
அவை அந்த அருளைத் தடுத்துவிட முடியுமா? (39:38)
வேறு
சொற்களில் கூறுவதெனில், வரலாறு என்று குஃப்பார்களாலும், சமூக உறவுகள் என்று சமூக
அறிஞர்களாலும், வேறுள குழுக்களால் பல்வேறு விதங்களிலும் அழைக்கப்படும் இந்த
வாழ்வின் நிலையற்று மாறுகின்ற இயக்கம் எல்லாம் உண்மையில் அல்லாஹ் (சுப்ஹானஹு வ
த’ஆலா)வின் கட்டளைக்குக் கீழே வருகின்றன. நன்மை வருகிறது எனில் அது அல்லாஹ்விடம்
இருந்து வருகிறது; சிரமம் வருகிறது எனில் அது அல்லாஹ்விடம் இருந்து வருகிறது –
அல்லாஹ் தனது படைப்பை வைத்து செய்பவற்றை, அவற்றை உருவாக்கும் விதத்தை மனிதர்களால்
கட்டுப்படுத்த முடியாது.
கூறுக: “அல்லாஹ்வே எனக்குப்
போதுமனவன்;
மெய்யாகவே பொறுப்பை ஒப்படைப்போர்
அவனிடமே
ஒப்படைக்கின்றனர். (39:38)
தன்
சுபாவத்தால் வெற்றிக்கு உரியதான, வேறு வித இயங்கியல் கொண்ட ஒரு குழுவை மனித
இனத்தில் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) படைத்திருக்க்கிறான். ஏனெனில் அவர்களிடம்
இருத்தலின் இயக்கம் பற்றிய ஞானம் இருக்கிறது. ஆனால், இபாதத் என்பதைக் கொண்டு
வரையறுக்கப்பட்ட முஃமினூன் என்னும் வட்டத்தினுள் இருந்தால் மட்டுமே அவர்கள்
வெற்றியடைய முடியும். அவர்களின் கடவுச் சீட்டு, அவர்களின் விசா, இபாதத் என்பதே.
ஸூரா
ஹதீது (57:22) திருவசனத்தைக் காணுங்கள்:
பூமியிலோ உங்களிலோ எந்நிகழ்வும்
நிகழ்வதில்லை
அதனை நாம் ஏற்படுத்துவதற்கு முன்பாகவே
பேரேட்டில் இருந்தே தவிர.
திண்ணமாக இஃது அல்லாஹ்வுக்கு எளிதே.
இது
குர்’ஆனில் மட்டுமே காணப்படக்கூடிய குர் ஆனிய ஞானத்தின் ஆழங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) தனது ரகசியங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும்
முஃமின்களுக்கு திறந்து தருகிறான். “இது புத்தகத்தில் இருக்கிறது”, அதாவது இது
ஏற்கனவே குறிப்பிடப்பட்டுவிட்டது, இந்தச் செய்தி ஏற்கனவே அருளப்பட்டுவிட்டது.
வரலாறு சொல்லப்பட்டுவிட்டது.
ரசூல்
(ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களுடன் சய்யிதுனா உமர் இப்னுல் ஃகத்தாப்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருந்தபோது கேட்டார்கள், “அல்லாஹ்வின் திருத்தூதரே!
நாம் இப்போதுதான் ஆரம்பிக்கும் விசயத்தில் இருக்கின்றோமா? அல்லது, இப்போது
முடிந்துவிட்ட விசயத்தில் இருக்கின்றோமா?” ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்)
சொன்னார்கள், “ஏடு எழுதப்பட்டுவிட்டது, மை உலர்ந்துவிட்டது.” உமர் இப்னுல்
ஃகத்தாப் சொன்னார்கள், “விசயம் அப்படி என்றால், நடக்கப்போவதெல்லாம் ஏற்கனவே முடிவு
செய்யப்பட்டு விட்டது என்னும்போது நான் காரியங்கள் செய்ய முயற்சி எடுப்பதில் என்ன
பயன்?” ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) சொன்னார்கள், “ஒவ்வொரு படைப்பும்
அல்லாஹ்விடம் இருந்து ஒரு வடிவமைப்பில் உள்ளது, அதற்கென்று விதிக்கப்பட்ட
காரியங்களை அது செய்யும். அதிலிருந்து அது தப்பவியலாது.” உமர் இப்னுல் ஃகத்தாப்
சொன்னார்கள், “நான் இப்போது என் காரியத்துக்கு மீள்வேன்.” அந்த மனிதர்களின்
பண்புகளைப் பாருங்கள். அது அவர்களை நிறுத்தவில்லை. “நான் என் பணிக்கு மீள்கிறேன்”
என்று சொன்னார்கள். அல்லாஹ்வுக்குப் பணியாற்றுவதில் தம்மால் இயன்ற அனைத்தையும்
செய்யக்கூடிய மனிதர்களில் ஒருவராக அவர் இருந்தார்.
அது சிறைப்படுத்தும் விஷயமோ நசிக்கும் விஷயமோ அல்ல. அது விடுதலை நல்குவதாகும். அதனால்தான், “அல்லாஹ்வே! நிரந்தரமாக நிலைத்து நிற்கும் ஈமானை எங்களுக்கு அருள்வாயாக” என்று முஃமின்கள் பிரார்த்திக்கின்றனர். நீ இஸ்லாமில் மரணிக்க வேண்டும் என்பதற்காகவும், நெடுகிலும் உன் பாதை தடையின்றி இயங்குவதற்காகவும் விதியின் முத்திரையை நீ வேண்டுகிறாய். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதான ஒன்று. ஸூரத்துல் ஹதீதின் அடுத்த திருவசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், முஃமினுக்காக அவன்
விடப்பட்டிருக்கும் நிலையை அல்லாஹ் வரையறுக்கிறான், உமர் இப்னுல் ஃகத்தாபின்
கேள்வியைப் போன்று. இவ்விரு எதிர் நிலைகளும் உங்கள் உள்ளத்தின் மீது தாக்கம்
செலுத்தாது. பொருட்களின் எதார்த்தம் உங்களுக்குப் புரிந்து விடும்போது கை விட்டுப்
போன பொருட்களைப் பற்றி நீங்கள் கவலையுற மாட்டீர்கள். அடையப்படாமல் விட்டுப் போனது
என்று எப்பொருளும் இல்லை. இது உண்மை! இதுவே உன் முழுமை! உன்னிடம் வரும்
பொருட்களைப் பற்றி நீ குதூகலிக்க மாட்டாய், ஏனெனில் அவை விதியால் வருகின்றன, உன்னை
விட்டும் பிற பொருட்களைத் தடுத்து வைத்திருக்கும் அதே ஒருவனின் ஆற்றலால்
வருகின்றன. எனவே தவ்ஹீத் பற்றிய உன்
புரிந்தலில் நீ ஒருமையாகிவிடுகிறாய்.
ஸூரத்துல்
ஜுமர் (39:62-64):
அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களையும்
படைத்தோன்;
அனைத்துப் பொருட்களின் மீதும் அவனே
பொறுப்பாளன்.
முஸ்லிமுக்கு அளிக்கப்படும் இந்த வளைந்து கொடுக்காத
கண்ணோட்டத்தைப் பாருங்கள். இது பாறை மீது நிற்பதைப் போன்றதாகும். இது உங்களை
உறுதியான அடித்தளங்களின் மீது வைக்கிறது. நீங்கள் உலுக்கப்பட முடியாது. ஏனெனில்,
அல்லாஹ்வின் தவ்ஹீதைப் புரிந்து கொண்ட மாத்திரத்தில் நீங்கள் அறிவுடையோர்
ஆகிறீர்கள், இருத்தல் எப்படி இயங்குகிறது என்று உங்களுக்குத் தெரிகிறது. என்ன
நடக்கிறது என்பதை காஃபிரூன் (நிராகரிப்பாளர்கள்) அறியவில்லை என்பதை நீங்கள் உணர
வேண்டும். அவர்கள் நிகழ்முறையைப் புரிந்து கொள்வதில்லை. அல்லாஹ்வின்
திருமறையிலிருந்தும் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களின் சுன்னாஹ்வில்
இருந்தும் அறிவை அடைந்திருக்கும் முஸ்லிம்கள், அல்லாஹ்தான் அனைத்தின் படைப்பாளன்
என்பதையும், அனைத்தின் மீதும் அவனே பொறுப்பாளனாக இருக்கிறான் என்பதையும்
அறிந்துள்ளனர். அனைத்தின் மீதும் அவனே பொறுப்பாளன் என்னும்போது அவனே உன் மீதும்
பொறுப்பாளன். இதை உணர்ந்ததும், உனக்கு மிகச் சிறந்த பாதுகாப்பையும்
அடைக்கலத்தையும் தருகின்ற வழியில் நீ தன்னம்பிக்கையுடன் செயல்படுவாய். இது
அனைத்தையும் உள்ளடக்கியது, போர் உட்பட. இது கட்டுக்காவல் மற்றும் பாதுகாப்புக்
குறித்து ஒரு நபருக்குள் இருக்க்கும் புரிதலாகும்.
அடுத்த விஷயம் மிகவும் முக்கியமானது.
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) சொல்கிறான்:
வானங்களின் மற்றும் பூமியின் சாவிகள்
அவனுக்குரியதே;
அல்லாஹ்வின் அத்தாட்சிகளை எவர்
நிராகரிக்கின்றார்களோ
அவர்களே முற்றிலும் நட்டமடைந்தோர். (39:63)
அவன் வானங்களும் பூமிகளும் தனக்கு
உரியவை என்று மட்டும் சொல்லவில்லை. அதனை ஏற்கனவே நாம் விளங்கியிருக்கிறோம். ஆனால்,
வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் திறவுகோல்களைப் பற்றி அவன் சொல்கிறான். அவைதாம்
வடிவமைப்புகள் (patterns). வானங்களின் திறவுகோல்கள் என்பவை என்ன? உயிருள்ள
வடிவங்கள் அனைத்தையும் மறைவிலிருந்து தோற்றத்திற்கு, அவற்றின் வாழ்வுக்குக் கொண்டு
வரும் அனைத்துமாகும். எனவே உயிரினத்தின் மறைதல் என்பது அல்லாஹ்வின்
சட்டதிட்டப்படியே இருக்கிறது. முஸ்லிம்களுக்குத் தேவை ஏற்படும்போது வலிமையான
முஃமின் தோன்றுவதும் அதன்படியே ஆகும். இவை அனைத்தும் அல்லாஹ்விடம் திறவிகள்
இருப்பதாலும், அவன், சுப்ஹானஹு வ த’ஆலா, நிகழ்வுகளைத் திறப்பதாலும் ஆகும்.
திறக்கப்படும்
நிகழ்வுகள் நமக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ஆனால் இந்த வலிமையான தவ்ஹீதை
வைத்திருப்பவர்களால் நிகழ்வுகளை வாசிக்கவும், என்ன செய்வது என்று அறியவும் இயலும்.
உதாரணமாக, ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) சொன்னார்கள், ஒரு காலம் வரும்,
அப்போது ஒருவரின் சிறந்த உடைமை செம்மறி ஆடுகளாக இருக்கும், அப்போது அவர்
மலைகளுக்குச் சென்று மறைந்துறைவதே அவருக்கு நல்லதாக இருக்கும். அல்ஹம்துலில்லாஹ்.
நாம் இன்னும் அந்தப் புள்ளியை எட்டவில்லை. ஆனால், தான் அதைத்தான் செய்ய வேண்டும்
என்று ஒரு முஃமின் உணர்ந்து கொள்கின்ற புள்ளி ஒன்று உண்டு. வானங்களின் திறவிகள்
அல்லாஹ்விடம் இருக்கின்றன. பூமியின் திறவிகளும் அவனுக்கே உரியன. இதன் பொருள்
யாதெனில், உயிரினங்களைத் திறப்பது போன்றே அவன் நிகழ்வுகளையும் திறக்கின்றான். அவன்
பூமியைத் திறந்து இந்தப் பூமியை தரிசாகவும் வளமாகவும் ஆக்குகிறான். அவன் பூமியை
நடுங்கச் செய்து ஒரு நகரத்தையே நாசமாக்குகிறான். இவை அனைத்தும் அவனின் ஆற்றலில்
இருக்கின்றன. இருத்தலின் வடிவங்கள் யாவும் அவனின் கைகளில் உள்ளன.
அல்லாஹ்
சொல்கிறான்: “அல்லாஹ்வின் அத்தாட்சிகளை / அடையாளங்களை நிராகரிப்போரே
நட்டமடைந்தோர்.” அல்லாஹ்வின் அத்தாட்சிகள், அடையாளங்கள் என்பவை இருத்தலில் அவனின்
ஆற்றலின் வெளிப்பாடுகள் ஆகும். இவ்வுலகில் நடக்கின்ற ஒவ்வொன்றும் முஃமினுக்குக்
கற்பிக்கின்றது – நமக்கு உவப்பில்லாத காரியங்களும் கூட, நமது உம்மத்தின் இன்றைய
நிலையும்கூட – அவற்றில் அத்தாட்சிகள் இருக்கின்றன, அல்லாஹ் நமக்கு சமிக்ஞை
காட்டுகின்றான். அவன் எவற்றை ஏற்பதில்லை அவன் எவற்றை ஏற்கிறான் என்பது மாறவே
இல்லை. எனவே, நாம்தான் அவனின் சமிக்ஞைகளைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
முஃமின்களில் இந்த ஃகவ்ஃப் என்னும் அதிர்வை விழிப்படைய வைக்கின்ற விஷயங்கள்
இருக்கின்றன. எனவே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுகிறீர்கள். அதே சமயம், விஷயங்க தாங்க
முடியாமல் ஆகும்போது, அல்லாஹ்விடம் இருந்து ஒரு வழிகாட்டுதல் வருகிறது. அதாவது,
அல்லாஹ் ஒருபோதும் ஒரு முஃமின் தாங்க முடியாத அளவுக்கு அவன் மீது சுமத்துவதில்லை.
இறுதியாக அல்லாஹ் சொல்கிறான்:
(நபியே!) கூறுக: ”மடையர்களே!
அல்லாஹ் அல்லாதவற்றை
நான் வணங்கும்படி
என்னை நீங்கள் ஏவுகின்றீர்களா?” (39:64)
அறிவிலிகள் / மடையர்கள் (ஜாஹிலூன்) யாவர் எனில், இன்றைய
உலகில் நாம் எதிர்ப்படுகின்ற அனைத்து வகையான மனிதர்களும்தான் – நாத்திகர்கள்,
மற்றும் முந்தைய மதங்களைச் சீர்கெடுத்துவிட்டதால் முற்றிலும் வழி தவறிப்
போனவர்கள். அவர்களே மூடர்கள். நமது வலிமை அல்லாஹ் நமக்கு குர்’ஆன் வழியாகவும்
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வுக்கு எவையெல்லாம் உவப்பானவை என்பதை அவனது
திருத்தூதர் (ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) வழியாகவும் அவன் நமக்கு
வழங்கியிருக்கும் அறிவில் இருக்கிறது.
நம்பிக்கையாளர்களே!
அல்லாஹ்வை அதிகமதிகம் தியானியுங்கள்;
மேலும், காலையிலும்
மாலையிலும் அவனைத் துதியுங்கள்;
அவன் எத்தகையோன்
எனில்,
உங்கள் மீது அருள்
புரிந்திருக்கிறான், அவனின் வானவர்களும்,
உங்களை
இருள்களிலிருந்து ஒளிக்கு வெளிக்கொணர்வதற்காக;
அவன் நம்பிக்கையாளர்மீது தனிப்பெருங்கருணை உடையோன். (33:43)
இந்த அந்தரங்க அச்சாணியை, உங்கள் வாழ்வில் வருகின்ற
நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கும் நிலையில் உங்களை வைத்துக் கொள்வதற்கான
இந்த அந்தரங்க திசைகாட்டியை உங்களுக்குள் எப்படிப் பேணுவது என்பதற்கான நேரடி
உத்தரவை அல்லாஹ் தருகிறான். இருத்தலின் வெவ்வேறு விஷயங்களை எப்படிக் கையாள்வது
என்பதை நீங்கள் அறிவீர்கள். எனேனில் இருப்பிலுள்ள அனைத்தும் உயிருள்ளவை. நீங்கள்
ஒரு பாலைவனத்தில் அலைந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் ஒவ்வொன்றும் உயிருடன்
இருக்கின்றதும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ் உங்களுக்கு அளிக்கின்ற சாத்தியங்களால்
நிரம்பியதுமான ஓர் உலகில் வாழ்கின்றீர்கள். எப்படிப் பகுத்துப் பார்ப்பது என்று
உங்களுக்குத் தெரியும் – திருமறையின் பெயர்களுள் ஒன்று ஃபுர்க்கான் – இந்த
ஞானத்தில் இருந்து, ஒவ்வொரு சூழலிலும் எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று
நீங்கள் அறிவீர்கள்.
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)
“நம்பிக்கையாளர்களே!” என்று அழைக்கிறான். பின்னர், அனைத்துப் பொருட்களும் உயிருடன் பேணப்படுகின்ற
வழிமுறையைச் சொல்கிறான், “அல்லாஹ்வை அதிகமதிகம் தியானியுங்கள்.” இது குர்’ஆன்
மீண்டும் மீண்டும் சொல்கின்ற பிரபலமான சொற்றொடர், “திக்ரன் கஸீரன்” – அதிகப்படியான
திக்ரு. அல்லாஹ் சொல்கிறான், நீங்கள் வாழ்கின்ற இந்த எதார்த்தம் என்பது மிக
வளப்பமானது. உமக்குப் போதுமான வடிவமைப்பை அவன் உமக்குக் கொடுத்திருக்கிறான்
என்றபோதும்,மேலும் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு படித்தரமாக நீங்கள் போய்க்கொண்டே
இருக்கலாம், ஏனெனில், அல்லாஹ்விடம் இருந்து தமக்குக் கிடைக்கும் இறைஞானத்தின்
படித்தரங்களில் முஃமின்கள் உயர்த்தப்படுவார்கள் என்று குர்’ஆனில் அல்லாஹ்
விளக்குகிறான்.
பதூயீ
(நாட்டுப்புற அறபி)களில் ஒருவர் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களிடம்
வந்து சொன்னார், “அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்)
அவனின் தூதர் என்றும் நான் உறுதிமொழிய வேண்டும் என்பது உண்மையா?” ரசூல்
(ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) “ஆம்”
என்றார்கள். அப்புறம் அவர் கேட்டார், “நான் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பது
உண்மையா?” ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்)
“ஆம்” என்றார்கள். அப்புறம் அவர் கேட்டார், “நான் ஜக்காத் செலுத்த வேண்டும்
என்பது உண்மையா?” ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) “ஆம்” என்றார்கள். அப்புறம் அவர் கேட்டார்,
“நான் ஹஜ் செல்ல வேண்டும் என்பது உண்மையா?” ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ
சல்லம்) “ஆம்” என்றார்கள். அவர் சொன்னார்,
“நல்லது. இதுதான் எனக்குத் தெரியும். நான் வேறு எதுவும் செய்வதில்லை!” ரசூல்
(ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) சொன்னார்கள்,
“அப்படியெனில் நீ வெற்றி பெறுவாய்.”
இன்னொரு தருணம், ரசூல் (ஸல்லல்லாஹு
அலைஹி வ சல்லம்) அவர்களிடம் பதூயீ ஒருவர் சொன்னார், “நான் ஐவேளை தொழுகிறேன். நான்
வேறெதுவும் செய்வதில்லை. அவ்வளவுதான்,”
ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்)
புன்னகைத்தபடி அவரிட சொன்னார்கள், “அல்லாஹ் உமக்கு சொர்க்கத்தை வழங்குவான்.
அவன் உமக்கு நற்கூலி வழங்குவான்.” வேறு விதத்தில் சொல்வதெனில், அல்லாஹ்வின் கருணை
காரணமாக குறைந்தபட்சமே போதுமானதாகும். எனினும், முஃமின்களில் ஒரு கூட்டத்தார்
உளனர், அவர்கள் இதைக் கொண்டு திருப்தி அடையாமல் மேலும் கேட்பவர்கள். அல்லாஹ்
மனிதர்களைப் படித்தரங்களாக உயர்த்துகிறான் என்றும், உச்சமான் படித்தரம் என்பது அல்லாஹ்வை
நெருங்குபவர்களான முகர்ரபூன் என்னும்
நபர்களாவர் என்றும் அவர்கள் குர்’ஆனில் வாசித்திருக்கின்றனர். அவன் இடத்தில்
மட்டுப்படாதவன் என்கின்ற காரணத்தால் ’அல்லாஹ் உம்மிடம் உமது பிடரி நரம்பை விட
நெருக்கமாக இருக்கிறான்’ என்று அல்லாஹ் விளக்கியுள்ளான். எனவே அந்த நெருக்கம்
என்பது இடப் பரிமாணம் கொண்டதன்று. இந்த நெருக்கமே ஆரிஃபீன் மற்றும் ஸாலிஹூன்
ஆகியோருக்கான நியதியாகும். இது ஸூஃபிக்கான குர்’ஆனிய மொழிபு ஆகும். முகர்ரபூன்
என்போர் ஸூஃபிகள் ஆவர்.
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனின்
வானவர்களும்
நபியின் மீது அருள்கின்றனர்.
நம்பிக்கையாளர்களே! நீவிரும் அவரின்
மீது ஸலவாத்து உரைத்து
சலாமும் சொல்லிக் கொண்டிருங்கள்
ஆனால் இங்கே மேலும் அதிகம் உள்ளது.
இது பற்றி ஒருவர் பிழை செய்துவிடக் கூடாது. எனவே யாம் ஷைகு இப்னு அஜிபா எழுதிய
பேருரை (தஃப்சீர்)-ஐ எடுத்துப் பார்த்தோம். அவர்கள் எழுதுகிறார்கள்: அல்லாஹ்
சொல்கிறான், “என் ஸலாத் உம் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) மீதும் உமது உம்மத்தின்
மீதும் அருளாகும்.” இப்போது, பொங்கி வழியும் அன்புடன் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)
ரசூலின் மீது ஸலாத் செய்கிறான், வானவர்கள் இந்த உம்மத் ஆன முஸ்லிம்கள் அனைவரின்
மீதும் ஸலாத் செய்கின்றனர். எனவே நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் பாதுகாப்பு
அன்பு மற்றும் அருளினால் மிகைக்கப்பட்ட சமுதாயம் ஆவோம். அந்த நபியின்
பொருட்டால்தான் நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் இந்த நேரடியான தெய்வீக
அரவணைப்பையும் பாதுகாவலையும் அருளையும் பெறுகின்றோம்.
அடுத்து, அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)
சொல்கிறான்: “அவன் நம்பிக்கையாளர்மீது தனிப்பெருங்கருணை உடையோன்.” நாம் முழுமையான பாதுகாவல், முழுமைனா அரண் ஆகிய நிலையில்
இருக்கிறோம். அவனே அகிலங்கள் அனைத்தின் ரட்சகன், நமது விதிகளின் ரட்சகன் என்பதை
நாம் நினைவு கூர்கின்ற காலமெல்லாம் நாம் வழிதவறிவிட மாட்டோம். இத்துடன் நாம்
நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னமும் இருக்கிறது!
ஹத்ரா
தனது ரஹ்மத்தில் நம்மை மூட வேண்டும்
என்று நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம். நாம் ஈட்டுவதற்கு
அப்பால் ஆன பெரிய மன்னிப்பை நாம் அல்லாஹ்விடம் கேட்கிறோம். நமது பாவ காரியங்களை
மூடி மறைக்க வேண்டும் என்று நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம்.
நமது நற்காரியங்களில் நம்மை வலுவாக்கி வைக்க வேண்டும் என்று நாம் அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் பிரார்த்திக்கிறோம். அறிவில் படித்தரத்துக்கு மேல்
படித்தரமாக நம்மை உயர்த்த வேண்டும் என்று நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம்
வேண்டுகிறோம். மண்ணறை வரை நீடித்திருக்கின்ற ஈமான் (இறை நம்பிக்கை)யை எமக்குத் தர
வேண்டும் என்று நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் கேட்கிறோம். ஸாலிஹூன்
கூட்டத்தில், சிறந்த சகவாசத்தில் நாம் மரணிக்கும்படி அருள வேண்டுமென்று நாம்
அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் யாசிக்கிறோம்.
முஸ்லிம்களுக்கு வெற்றி அளிக்க
வேண்டும் என்று நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம். தீனுல்
இஸ்லாமைக் கைவிட்டு விட்டதற்காக அறபிகளை மன்னிக்க வேண்டும் என்று நாம் அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் பிரார்த்திக்கிறோம். தனது குர்’ஆனின் ரகசியங்களைக்
கொண்டு அவனின் அருளில் அவர்களை அவன் மீண்டும் தீனுக்குக் கொண்டு வர வேண்டும் என்று
நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம். ஒவ்வொரு நிலத்திலும்
முஸ்லிம்களுக்குப் புத்துயிர் ஊட்டும்படி
நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் கேட்கிறோம். பொய் உலமா (அறிஞர்)களை
அவர்தம் இடங்களில் இருந்து அகற்றும்படி
நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம். அவர்களின் இடங்களில்
இருந்து அரியணைகளை அகற்றும்படி நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் கேட்கிறோம்.
முஸ்லிம்களை ஆள்வதற்கு கண்ணியத்தின் அரியணைகளையும் இபாதத்தின் அரியணைகளையும்
வைக்கும்படிநாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் பிரார்த்திக்கிறோம். எம்மை எமது
முழுமையான மாட்சிமைக்கு மீட்டுத்தரும் தலைவர்களை எமக்கு அளிக்கும்படி நாம் அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம்.
இங்கே குழுமியிருப்போரின் வாழ்நாளிலேயே அதனை நடத்தும்படி நாம் அல்லாஹ்
(சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் கேட்கிறோம். இங்கே குழுமியிருப்போரின் பிள்ளைகளைப்
பாதுகாக்கும்படியும் அவர்களுக்கு இதுகாறும் இல்லாத அளவுக்கு தீன் வலிமையாக
இருக்கும் ஓர் உலகத்தைத் தரும்படியும் நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம்
வேண்டுகிறோம்.
இந்த தரீக்காவின் மக்கள் தாம் விரும்பிய இடங்களுக்கெல்லாம் உலகில் செல்லவும், போகுமிடமெல்லாம் தீனை நிறுவவும் அருளும்படி நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம். எங்கள் தகுதிக்கு அப்பாலும் பயன்களைத் தரும்படி நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் யாசிக்கிறோம். தனது தாராளம் பற்றிய வாக்குறிதியால் எமக்கு வாரி வழங்கும்படியும், அல்லாஹ்விடமிருந்து அத்தகைய வண்மையைப் பெறும் பொருட்டு எம் சக முஸ்லிம்களிடம் நாங்கள் தாராளமாக வழங்கும்படி எம்மை ஆக்க வேண்டும் என்றும் நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம். எமது தாராளம் ஒன்றுமில்லை என்னும்படிக்கு ஒப்புயர்வு அற்ற நிலையில் இருக்கும் தாராளத்தைக் கொண்டுள்ள அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் எம் மீது அருள் புரியும்படியும், எம்மை வலிமையாக்கும்படியும், எமது அச்சத்த ஆதரவு மிகைக்கும் வண்ணம் எதிர்காலத்திற்குள் எமக்கு ஸிராத்துல் முஸ்தகீமை வழங்கும்படியும் நாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் வேண்டுகிறோம்.
(இரண்டாம் உரை முற்றும்.)
No comments:
Post a Comment