Tuesday, January 16, 2024

ஏகத்துவம் - ஒரு ஸூஃபியின் உரை


 அண்மையில் எனது மொழிபெயர்ப்பில் வெளியான நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” ஸூஃபி நாவல்களில் மிகவும் முக்கியமானது. அது புனைவு கலந்த ஓர் உண்மைக் கதை. அதனை எழுதிய ஸ்காட்லாந்து நாட்டவரான அயான் தல்லாஸ் பின்னாளில் ஒரு ஸூஃபி குருவாக உயர்வடைந்தார். அவரின் இஸ்லாமியப் பெயர் அப்துல் காதிர் அஸ்-ஸஃபி என்பதாகும். அவர் தென்னாப்ரிக்காவின் கிளேர்மாண்ட் நகரிலுள்ள ஜாமிஆ பள்ளிவாசலில் ஆற்றிய ஒன்பது உரைகள் “ஏகத்துவம்” (தவ்ஹீது) என்னும் பொருண்மை பற்றி ஆழமான விளக்கங்களைத் தருகிறது. அவற்றை ஒவ்வொன்றாகத் தமிழாக்கித் தருகிறேன், இன் ஷா அல்லாஹ்.


உரை - 1

(27 மார்ச் 2004, அல்-ஜாமிஆ மஸ்ஜித், கிளேர்மாண்ட், கேப் டவுன், தென் ஆப்ரிகா)

 ’அல்-அஹ்ஸாப்’ (என்னும் 33-ஆம்) அத்தியாயத்தின் 34-35 ஆகிய வசனங்களைப் பார்ப்போம்:

மேலும், அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்தும்

ஞானங்களில் இருந்தும்

உங்கள் அறைகளில் ஓதப்படுகின்றவற்றை நினையுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் நுட்பமாக நிறைந்தவன், நன்கறிந்தவன்.

திண்ணமாக, முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும்,

முஃ’மினூன் (இறை நம்பிக்கையாளர்) ஆன ஆண்களும் பெண்களும்,

அடிபணியும் ஆண்களும் பெண்களும்

மெய்யாளராகிய ஆண்களும் பெண்களும்

பொறுமையாளராகிய ஆண்களும் பெண்களும்

இறையச்சமுள்ள ஆண்களும் பெண்களும்

(ஸதக்கா என்னும்) ஈகை புரியும் ஆண்களும் பெண்களும்

நோன்பிகளான ஆண்களும் பெண்களும்

தம் அபங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும்

அல்லாஹ்வை அதிகமாக தியானிக்கும் ஆண்களும் பெண்களும்

ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும்

ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான்.

 

            ”அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்கின்ற, தியானிக்கின்ற ஆண்கள் மற்றும் பெண்கள்” குறித்து இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் அறபிச் சொல் “திக்ரு” என்பதாகும். அது, “அல்லாஹ்வின் திக்ரைச் செய்கின்ற ஆண்களும் பெண்களும்”, நினைவு கூர்தல் என்னும் காரியத்தைச் செய்கின்ற ஆண்களும் பெண்களும். 

அல்லாஹ்வை அதிகமாக தியானிக்கும் ஆண்களும் பெண்களும்

ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும்

ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான்.

 

            இங்கே, ஃபுகரா மற்றும் ஃபக்கீராத் ஆகியோரை (அதாவது, ஆன்மிகத்தில் உள்ள ஆண்களையும் பெண்களையும்) வரையறுக்கின்ற ஆயத் என்னும் திருவசனம் நமக்குக்கிடைக்கிறது. இந்தத் திருவசனம் அவர்களை வரையறுக்கிறது.

மேலும், அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்தும்

ஞானங்களில் இருந்தும்

உங்கள் அறைகளில் ஓதப்படுகின்றவற்றை நினையுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் நுட்பமாக நிறைந்தவன், நன்கறிந்தவன்.

            எனவே, அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) நீங்கள் செய்யும் வழிபாட்டைக் குறிப்பிடுகிறான் – நீங்கள் பள்ளிவாசலில் செய்யும் வழிபாட்டை அல்ல – நீங்கள் தனிப்பட்ட முறையில் வீடுகளில் செய்யும் வழிபாட்டினை ஆகும். அதிலிருந்துதான் அந்த திருவசனத்தை (ஆயத்) அவன் தொடங்குகிறான். இதுவே, அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் இந்த முஃமினூன் மற்றும் முஃமினாத் (அதாவது, இறைநம்பிக்கையாளர் ஆகிய ஆண்களும் பெண்களும்) பெற்றிருக்கும் சிறப்பான இடத்தை தனித்து அடையாளப்படுத்திவிடுகிறது.

மேலும், அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்தும்

ஞானங்களில் இருந்தும்

உங்கள் அறைகளில் ஓதப்படுகின்றவற்றை நினையுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் நுட்பமாக நிறைந்தவன், நன்கறிந்தவன்.

புயூத்” என்னும் சொல் இங்கே “அறைகள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது சுவாரஸ்யமானது. ஏனென்றால், நீங்கள் ஸூரத்துன் நூர் (24:36) திருவசனத்தைப் பாருங்கள்.

 அதன் மொழிபெயர்ப்பு: ”எழுப்பப்படுவதற்கு அல்லாஹ் அனுமதி அளித்திருக்கும் வீடுகளில்…” – ஆனால் இந்த வீடுகள் என்பது புழக்க மொழியில் புரிந்து கொள்ளப்படும் வீடுகள் அல்ல – நீங்கள் இதை ’ஜாவியா’க்கள் என்று சொல்லலாம். அது அல்லாஹ் (சுப்ஹானஹு த’ஆலா)வை திக்ரு செய்வதற்காக மக்கள் தனித்துக் கூடுமிடம் ஆகும்.

            அடுத்த திருவசனத்தில் அல்லாஹ் இந்தச் சிறப்பான மக்களின் ஆன்மிக (ரூஹானி) பண்புகளைச் சுட்டிக் காட்டுகிறான்:

திண்ணமாக, முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும்,

முஃ’மினூன் (இறை நம்பிக்கையாளர்) ஆன ஆண்களும் பெண்களும்,

அடிபணியும் ஆண்களும் பெண்களும்

மெய்யாளராகிய ஆண்களும் பெண்களும்

பொறுமையாளராகிய ஆண்களும் பெண்களும்

இறையச்சமுள்ள ஆண்களும் பெண்களும்

(ஸதக்கா என்னும்) ஈகை புரியும் ஆண்களும் பெண்களும்

நோன்பிகளான ஆண்களும் பெண்களும்

தம் அபங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும்

அல்லாஹ்வை அதிகமாக தியானிக்கும் ஆண்களும் பெண்களும்

ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும்

ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான்.

எனவே, இந்த மக்களுக்காக ஆயத்தம் ஆக்கிவைத்திருக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) இதில் சுட்டிக் காட்டுகிறான். அவர்களுக்கு ஒரு சன்மானம், நற்கூலி இருக்கிறது. இந்தக் குழுவிற்கு அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான சன்மானமும் உள்ளன. மன்னிப்புக்குப் பிறகான மகத்தான நற்கூலி என்பது என்னவாக இருக்கும்? பொது மக்களுக்கு அது கட்டணத்தைச் செலுத்தி உதவுவது போன்றதாக இருக்கும். ஆனால் அதற்கு மேலும் இருக்கிறது – அதுவே மகத்தான சன்மானம். அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம், அவன் இந்தத் திருவசனத்தில் வரையறுத்திருக்கும் மக்களுக்குத் தகுந்த படிக்கான விசாலமான சன்மானம் ஒரேயொரு விசயமாகத்தான் இருக்க முடியும் – அது மஃ’ரிஃபா (இறைஞானம்)தான். ஆம், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் சன்மானம் மஃ’ரிஃபா (இறைஞானம்)தான்.

சன்மானத்தை /  நற்கூலியைக் குறிக்கும் அறபிச் சொல் “அஜ்ர்’ என்பதாகும். குர் ஆனில் இந்தச் சொல் மீண்டும் மீண்டும் வருகிறது. அது, இந்தச் சிறப்பான முஃமினூன்களுடன் அல்லாஹ் செய்திருக்கும் இந்த ஒப்பந்தம் தொடர்பானது. அந்த மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோரும் உயர்த்தப்பட்டோரும் ஆவர். இதுவே மகத்தான சன்மானம்.

இப்போது நாம் ஸூரத்துல் அன்கபூத் (29:45)-ஆம் திருவசனத்தைக் கவனிப்போம்:

வேதத்திலிருந்து உமக்கு வெளிப்படுத்தப்பட்டதை ஓதுவீராக;

மேலும், தொழுகையை நிலைநிறுத்துவீராக.

நிச்சயமாக, தொழுகை மானக்கேடானவற்றையும்

தீமையையும் விட்டு விலக்குகிறது.

மேலும், நிச்சயமாக அல்லாஹின் தியானமே பெரிது;

மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வபவற்றை நன்கறிகிறான்.


 வேதத்திலிருந்து உமக்கு வெளிப்படுத்தப்பட்டதை ஓதுவீராக;

மேலும், தொழுகையை நிலைநிறுத்துவீராக.

            எனவே, முதற்கட்டளை குர்’ஆன் ஓதுதல்தான். அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) இரண்டியும் ஒன்று சேர்த்துச் சொல்கிறான். ஏனென்றால், ஸலாத் (தொழுகை) என்பது குர்’ஆன் ஓதுதலைக் குறிக்கிறது. அவ்வகையில் இரண்டும் ஒன்றுதான். அதாவது, தொழுகைக்கான ஆணைக்குள்ளே வேதத்தை ஓதும்படியான ஆணையும் பொதிந்துள்ளது. மூன்று படிநிலைகள் உள்ளன. இது முதலாம் படிநிலை. அடுத்த படிநிலையாவது:

நிச்சயமாக, தொழுகை மானக்கேடானவற்றையும்

தீமையையும் விட்டு விலக்குகிறது.

            முந்தையதை நிறுவிய பின்னர், முழுமையான மனிதனை உருவாக்குவதற்கான அடுத்த படிநிலையை அல்லாஹ் சுட்டுகிறான். அடுத்த படிநிலையாவது: ”நிச்சயமாக, தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்குகிறது.” குர்’ஆன் ஓதுதல் மற்றும் தொழுகையைப் பேணுதல் ஆகியவற்றை ஏற்கனவே உறுதிப்படுத்தியிராத ஒருவர் மீது நன்னடத்தையைக் கோர முடியாது. ஏற்கனவே அவை உறுதியாகியிருந்தால், அப்புறம் அந்த மனிதர் மீது சரியான நன்னடத்தையை நீங்கள் கோரலாம். இது, நாம் மக்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறோம் என்று இக்காலத்தில் இஸ்லாமைத் தாக்கும் குஃப்பார் (நிராகரிப்பாளர்கள்) கூறுவதைப் போன்றது. நீங்கள் சொல்லலாம், எதார்த்தத்தில் அறபியர்கள் தம் சொந்த மக்கள் மீதே கடுமையாக நடக்கின்றனர். ஏனெனில், அதன் அர்த்தங்களின் புரிதல்களுக்கு இட்டுச் செல்லும் குர்’ஆனின் ஓதுதல், மற்றும் ஸலாத் (தொழுகை) ஆகியவற்றை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. அதனை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தால் மக்களிடம் அவர்கள் நன்னடத்தையைக் கோரலாம். அல்ல எனில், அத்தகைய சூழலில், மனித நடத்தை மீது வரம்புகளை விதிப்பதற்கு ஷரீஅத் இருக்கிறது. மனித நடத்தைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் மனிதன் அழிவின் எல்லைக்குப் போய்விடுவான். 

மேலும், நிச்சயமாக அல்லாஹின் தியானமே பெரிது.

            எனவே, இப்போது நீங்கள் இன்னொரு வகையான மனிதர் ஆகிவிட்டீர்கள் என்பதே இதன் உச்ச அம்சம். நீங்கள் தொழுகையைப் பேணும் மனிதர், குர்’ஆனின் சொற்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வை வணங்கும் மனிதர். எனவேதான் நீங்கள் இந்தச் சரியான நடத்தையில் இருக்கின்றீர். ஆனால், அல்லாஹ்வின் தியானமே பெரிது. எனவே, மஃரிஃபத்துல்லாஹ் (இறைஞானம்) என்பதற்கு உங்களை இட்டுச் செல்வது மனிதப்பிறவியின் உச்ச அம்சமே ஆகும். அந்நிலையில் ஒரு முஸ்லிம் தப்பவே முடியாத ஒரு சூழ்நிலையை உணர்கிறார்:

 மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வபவற்றை நன்கறிகிறான்.


            முஸ்லிம் என்னும் சிறப்பான (அதாவது இறை நிராகரிப்பாளரை விடவும் உயர்வான) இந்த உயிரினத்தின் இயங்கியல் யாதெனில், தான் செய்பவற்றை அல்லாஹ் அறிகிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். இது இன்னொரு வகையான இருப்பு. கிழக்கின் மாபெரும் ஸூஃபியான சஹ்லுத் துஸ்தரி அவர்களின் வழமையான ஓதுதல் ஆன விர்துஸ் சஹ்லு என்பது குர்’ஆனிலிருந்து உள்ளதாகும்:

அல்லாஹ் என்னுடன் இருக்கிறான்

அல்லாஹ் என்னைப் பார்க்கிறான்

அல்லாஹ் என் மீது சாட்சியாக இருகிறான்

இதுதான அவருக்கு அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் நேரடியான அனுபவத்தை – இல்முல் லதுன்னீ – பெற்றுத் தந்தது.

இப்போது நாம் ஸூரத்துல் பகரா (2:152) வசனத்தைப் பார்ப்போம்:

என்னை நினையுங்கள்; நான் உங்களை நினைப்பேன்

எனக்கு நன்றி செலுத்துங்கள்; நிராகரித்துவிடாதீர்கள்.

இது ஒரு மகத்தான திருவசனம் (ஆயத் அழீம்) ஆகும். ஏனெனில், முஃமின்களுக்கு அல்லாஹ் இதில் மிக உயர்வான ஒரு விடயத்தைச் சொல்கிறான். இதன் கட்டமைப்பைக் கவனியுங்கள்:

ஃபத்குரூனீ - என்னை நினையுங்கள்

அத்குர்கும் - நான் உங்களை நினைப்பேன்

இரண்டும் ஒரே கட்டமைப்புதான். ஆனால் இது அதன் கண்ணாடி பிம்பம் மாதிரி இருக்கிறது. அதாவது, “நாம் அவனை நினைவு கூர்ந்தால் அவன் நம்மை நினைவு கூர்வான்” என்று சொல்வது மாதிரி. ஸூஃபிகள் சொல்கிறார்கள், “நினைவு கூர்வோன் யார்?”. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) சொல்கிறான், “என்னை நினைவு கூருங்கள், நான் உங்களை நினைவு கூர்கிறேன்.” எனவே, நேசிப்பவன் நேசிக்கப்படுவோன் ஆகிவிடுகிறான். காதலன் யார்? காதலி யார்? இது ஒரு ரகசியம். பேசப்பட முடிந்ததன் இதயம் இதுவே. ஏனெனில் இதற்கு அப்பால் பேச்சு இல்லை. ஆனால், நேசிப்பவன் நேசிக்கப்படுவோன், நேசிக்கப்படுவோன் நேசிப்பவன் என்று குர்’ஆனில் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) வெளிப்படையாகச் சொல்லிவிட்டான். “என்னை நினைவு கூருங்கள்; நான் உங்களை நினைவு கூர்வேன்.” என்னை நேசியுங்கள், நான் உங்களை நேசிப்பேன்.

இப்போது ஸூரத்துல் முஸம்மில் (73:8-9) திருவசனங்களைப் பார்ப்போம்:

நும் ரட்சகனின் பெயரை நினைவு கூர்வீராக.

மேலும், அவனிடமே முற்றிலும் அர்ப்பணம் ஆகிவிடுவீராக.

கிழக்கு மற்றும் மேற்கு ஆகியவற்றின் ரட்சகன் –

அவனை அன்றி தெய்வமில்லை;

அவனையே பாதுகாவலாகப் பற்றுவீராக.

இதுவே கட்டளை. இதுதான் குர்’ஆன் நெடுகிலும் ஓடுகிறது. குர்’ஆன் முழுவதும் மிகவும் காத்திரமான, பயங்கரமான விடயங்களைப் பற்றிய செய்திகள் நிரம்பியுள்ளன – நிராகரிப்பாளருக்கான நரக நெருப்புப் பற்றிய எச்சரிக்கைகள், பட்டினங்கள் பாழ் படுவது பற்றிய செய்திகள், அலலாஹ்வின் தண்டனை குறித்த அறிவிப்புகள் – மனிதர்களிடம் இந்தப் பிசகுகளை அவன் எப்படி அனுமதிப்பதில்லை என்பது பற்றியும் அதன் நிமித்தம் ஒவ்வொரு காலத்திலும் அவன் எப்படி சமுதாயங்களை அழித்து ஒழித்தான் என்பது பற்றியும். இவற்றின் அடியாக நெடுகிலும் எப்போதும் முஃமினுக்கான இந்தச் செய்தியும் ஓடிக்கொண்டே இருக்கிறது: “அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான்.” இதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. இதுதான் உமது தொழில். “நும் ரட்சகனின் பெயரை நினைவு கூர்வீராக.” திக்ரு என்பது இந்தச் சிறந்த மக்களின் மீதான கட்டளையாகும். சிறந்தோரு சிறந்தோர் திக்ரிலேயே வாழ்கிறார்கள். அவர்கள் திக்ருக்காகவே படைக்கப்பட்டவர்கள். எனெனில், அல்லாஹு (சுப்ஹானஹு வ த’ஆலா) ஸூரத்துல் தாரியாத்தில் (51:56) சொல்கிறான்:

ஜின்களையும் மனிதர்களையும் என்னை

வணங்குவதற்காகவே அன்றி யான் படைக்கவில்லை.

அதாவது, ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்க மட்டுமே படைத்திருக்கிறேன். இது அல்லாஹ்விடமிருந்தான ஆணை ஆகும். இதற்காகத்தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்தச் சிறப்பான மக்கள் விளங்கிக் கொண்டது இதைத்தான்.

 நும் ரட்சகனின் பெயரை நினைவு கூர்வீராக.

மேலும், அவனிடமே முற்றிலும் அர்ப்பணம் ஆகிவிடுவீராக.

அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) சொல்கிறான்: “அவனிடமே முற்றிலும் அர்ப்பணம் ஆகிவிடுவீராக.” அதாவது, நீங்கள் வேறு எதுவுமே செய்ய வேண்டாம்! ஸிராத்துல் முஸ்தகீம் (நேர்வழி) இல்லாத மக்கள் நினைப்பார்கள், அவர்கள் மலை உச்சிக்குப் போய் அங்கே ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ய வேண்டும் என்றும், இதைச் செய்வதற்காக அவர்கள் உலகத்தை விட்டே தம்மைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும். ஆனால், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) ஸூரத்துல் இம்ரான் (3:191) திருவசனத்தில் விளக்குகிறான்:

 நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அல்லாஹ்வை நினைவுகூர்கின்ற அத்தகையோர்…

இதன் அர்த்தம், நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பீர்கள். மேலும், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) ஸூரத்துந் நூர் (24:37) திருவசனத்தில் சொல்கிறான்:

 அவர்களின் வணிகமோ விற்பனையோ

அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்பிவிடாத ஆண்கள்.

            எனவே, வணிகமும் வியாபாரம் செய்வதும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களைத் திசைதிருப்பி விடாது. எனவே, “அவனிடமே முற்றிலும் அர்ப்பணம் ஆகிவிடுவீராக” என்னும் இந்தக் கட்டளையின் அர்த்தம், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் ’ஹள்ரத்துர் ரப்பானி’யில், அதாவது அல்லாஹ்வின் பிரசன்னத்தில் வாழ வேண்டும் என்பதாகும்.

            ஷைகு முஹம்மத் இப்னுல் ஹபீப் (ரலி) அவர்களின் தீவானை நீங்கள் பார்த்தால், அதில் அவர் சொல்கிறார், நேர்வழியில் உங்களுக்குத் தடையான குறுக்கே நிற்பது உங்களின் ’நஃப்ஸ்’தான். நீங்கள் உங்களை நினைவுகூர்ந்தால் அல்லாஹ்வை மறக்கிறீர்கள். ஸூரத்துல் அஸ்ரு (103):

அருளாளனும் அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…

காலத்தின் / பிற்பகலின் மீது சத்தியமாக!

நிச்சயமாக மனிதன் நட்டத்திலிருக்கிறான் –

ஈமான் கொண்டு, நற்காரியங்களாற்றி,

மெய்யிடம் ஒருவருக்கொருவர் உபதேசித்து,

மேலும், பொறுமைக்கும் ஒருவருக்கொருவர்

உபதேசிக்கின்றார்களே, அவர்களைத் தவிர.

            எனவே, மனிதன் மறதியாளன். அவன் எதை மறந்திருக்கிறான் என்றால் தனது சுய இருப்பைத்தான். அவன் அல்லாஹ்விடம் இருந்து தனது இருப்பினை அடைந்திருக்கிறான். அவனின் இருப்பே அல்லாஹ்வுக்கான சான்று, ஆனால் அவன் மறந்து போகிறான்! அல்லாஹ் சொல்கிறான்: “நீவிர் மறக்கும்போது, நினைவு கூருங்கள்.”

இப்போது நாம் ஸூரத்த்லுல் பகரா (2:165) திருவசனத்தைக் காண்போம்:

இறைநம்பிக்கை கொண்டோர்

அல்லாஹ்வின் மீது வலிய நேசம் கொண்டிருப்பர்.

            எனவே, அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை மேனிலையில் வைக்கிறான், ஏனென்றால் அவர்களிடம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் மீதான அதீத நேசம் இருக்கிறது. இது ஒரு பண்பியல் வேறுபாடு. அனைத்து மனிதர்களும் சமமன்று. அல்லாஹிடம் அவர்கள் அனைவரும் சமமானோர் அல்லர். சமத்துவம் என்பது கிடையாது, ஏனென்றால் மனிதகுலத்தில் முஃ’மின் என்று ஒரு குழுவினர் இருக்கிறார்கள், அவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவர்கள், அல்லாஹ்வின் மீது மேலான காதல் கொண்டவர்கள். இது அவர்களை மேனிலையில் வைக்கிறது.

 இப்போது ஸூரத்துல் இம்ரான் (3:31) திருவசனத்தைப் பாருங்கள்:

(நபியே!) கூறுங்கள்: “நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின் தொடருங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்; அல்லாஹ் எஞ்ஞான்றும் மன்னிப்போன், வரையற்ற கருணையாளன்.

            இப்போது, இது நடைபெறுகின்ற செயலுருவம் முழுமையாக வெளிப்படுகிறது. ஏனெனில் இது குர் ஆனில் உள்ள மிக முக்கியமான சொல்லான குல் என்பதைக் கொண்டு ஆரம்பிக்கிறது. அதாவது, இந்தக் கட்டளையானது அல்லாஹ்விடம் இருந்து வானவரின் வழியாக ரசூலுக்கு வந்திருக்கிறது.

            இப்போது நமக்கு முழுக் கதையும் புலப்படுகிறது: “கூறுக, ‘நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள்.’” ஆக, மனிதர்களுக்கு ரசூல் கட்டளையிடுகிறார்கள், “நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள்.” நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கவும் ரசூலைப் பின் தொடராமல் இருக்கவும் முடியாது. இதன் பொருள், நமக்குப் பிற சமயங்களுடன் உரையாடல் இல்லை. பிற சமயங்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லை. நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கிறீர்கள் என்றால் ரசூலைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும் – முடிந்தது, அவ்வளவுதான்! அதுதான் நமது உரையாடலின் முடிவு – திரும்பிப் போ, போய்விடு! நீ உண்மையாகவே அல்லாஹ்வை நேசிக்கிறாய் என்றால் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களைப் பின் தொடர்வாய்.

            இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள கட்டளையாகும். அவன் சொல்கிறான், “கூறுக!” என்று. ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் தன்னிலிருந்து சொல்லவில்லை, தெய்வ ஆக்ஞையிலிருந்து இதனைச் சொல்கிறார்கள்.

 (நபியே!) கூறுங்கள்: “நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின் தொடருங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்; அல்லாஹ் எஞ்ஞான்றும் மன்னிப்போன், நிகரற்ற அன்பாளன்.

மனிதர்கள் அல்லாஹ்வை நேசித்தால் அவர்கள் ரசூலைப் பின்பற்ற வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்வதே இறைத்தூதரின் கட்டளை. அப்புறம் அல்லாஹ் அவர்களை நேசிப்பான். அதாவது, நாம் எடுத்திருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, அல்லாஹ் ஒரு முஃமினை நேசிக்கும்போது நேசிப்போன் நேசிக்கப்படுவோன் ஆகிவிடுகிறான். அப்புறம் மஃ’ரிஃபத்துல்லாஹ் (இறைஞானம்) என்பதன் கதவு திறக்கப்படுகிறது. வாசகம் ஒருமுறை படிக்கப்பட்டவுடன், அதுதான் மஃ’ரிஃபா. நீங்கள் போவதற்கு வேறு வழி எதுவும் கிடையாது. மஃ’ரிஃபத்துல்லாஹ் (என்னும் இறைஞானத்துக்கு) நீங்கள் கிடைக்கின்ற ஒரு புள்ளியை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.

            ”அல்லாஹ் உங்களை நேசிப்பான்” என்பதன் பொருள், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதால் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதுதான். அதனால் உங்களுக்கு அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் மஃ’ரிஃபா கிடைக்கிறது. உங்கள் பாவ காரியங்களின் விடயத்தில் நீங்கள் மன்னிக்கப் படுகிறீர்கள். வேறு விதத்தில் சொல்வதென்றால், ஆயுள் கணக்கு அழிக்கப்பட்டுவிட்டது. முழுக் கணக்கும் போய்விட்டது. அப்போது உங்களிடம் சொல்ல படுகிறது:

அல்லாஹ் எஞ்ஞான்றும் மன்னிப்போன், நிகரற்ற அன்பாளன்.

நாம் பார்த்துவரும் இந்தப் பொருண்மை குறித்து: முதலில், குர் ஆன் என்பது ஒவ்வொரு வருக்குமான ஓர் அம்சத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் திருமறை முழு உலகத்துக்குமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, “யா அய்யுஹன்னாஸ்” (மனிதர்களே!) என்று அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) அழைத்துச் சொல்லுகின்ற சில இடங்களும் திருமறையில் உள்ளன. அவன் மனிதகுலத்திடம் பேசுகிறான். ஏனெனில், இந்தக் கோடானு கோடி மக்களில் இறைச் செய்திக்குக் காதுகொடுக்கும் எவனாவது ஒருத்தன் இருக்கக்கூடும்.

            அப்புறம், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) திகிலூட்டுகின்ற வலுப்பமான எச்சரிக்கைகளைக் கொண்டு எச்சரிக்கிறான். அவன் சொல்கிறான், “யா அய்யுஹல் காஃபிரூன்” – காஃபிரூன்களுக்கு (அதாவது, இறை மறுப்பாளர்களுக்கு) இன்னின்னவை எல்லாம் நடக்கப்போகின்றன. இதில் ஐயம் கொள்ளற்க. இவ்வுலகில் இருந்த அந்த அந்தரங்க இருளுக்கு மறுமையில் கடுமையான தண்டனை வழங்கப்படும், அவர்கள் இந்த உலகத்தில் அடைந்த வேதனையை விட அது அதிகமானதாக இருக்கும்.

            அப்புறம் அவன் சொல்கிறான், “யா அய்யுஹல்லதீன ஆமனூ”.  அப்படி அழைத்து அவன் முஃமினூன் (இறைநம்பிக்கையாளர்)களிடம் பேசுகிறான், அவர்களுக்கு வழிகாட்டுதல் தருகிறான். அப்புறம் அவன் அவர்களிடம் சொல்கிறான்: அவன் மக்களைப் பல்வேறு படித்தரங்களில் வைத்திருக்கிறான். அவற்றை அவன் சொல்லியிருக்கிறான். ஸூரத்துல் வாக்கியாவில் நாம் கண்டோம்: அல்-முகர்ரபூன் – நெருங்கி வரும் மக்கள். இவ்வாறாக அவன் மஃரிஃபாவை அடைவதற்கான முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்திவிட்டான்.

            இது குர் ஆனில் இல்லையே என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆனால், குர் ஆனின் ஏனைய அலங்காரங்கள் மற்றும் அழகுகளின் இடையே இந்த அத்தாட்சிகள் (ஆயாத்) பொதிந்து கிடக்கின்றன. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) மஃரிஃபா குறித்துப் பேசுகிறான் என்பதே அது. நேரடியான அறிவுடன் இணைக்கப்பட்டிருக்கும் உயர்வான மேலான முறையில் அவன் நேசத்தைப் பற்றிப் பேசுகிறான். தகவல் என்பதாக இல்லாத அறிவு ஒன்று இருக்கிறது. வெளிச்சமிடுவதாக அமைந்த அறிவு ஒன்று இருக்கிறது. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடமிருந்து நேரடியாக வருவது – இல்மு லதுன்னீ.

            கிழக்கின் குருநாதர்களுள் (ஷுயூஃக்) ஒருவர் இமாம் கஜ்ஜாலி (ரலி) அவர்களிடம் இதே விதமாக விவரித்திருக்கிறார். இந்தக் காதலுக்குப் பத்துப் படிநிலைகள் இருக்கின்றன என்று அவர் சொல்லியிருக்கிறார். முதல் நிலை முவாஃபகா -  பொருத்தப்பாடு. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வுடன் இந்தப் பொருத்தப்பாட்டினைப் பெறுகின்ற வழி யாதெனில் நேசனாகிய அவனின் எதிரிகளை நம் எதிரிகளாகவும் அவனின் நண்பர்களை நம் நண்பர்களாகவும் பார்ப்பதாகும். குர் ஆனில் ஆரம்பத்திலேயே அவன் இந்தப் பிரிவை உண்டாக்கிவிடுகிறான்: காஃபிரூன் (நிராகரிப்பளர்)களை உங்களின் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களை விட்டும் உங்களை நீங்கள் பிரித்துக்கொண்டு, நேசனின் எதிரிகளை உங்கள் எதிரிகளாகவும் நேசனான அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் நண்பர்களை நம் நண்பர்களாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்.

            அடுத்தது, மைல் – சாய்வு (Inclination). இதயம் ஒரு கருவியாகும். அது அசையத் தொடங்குகிறது. அறபி மொழியில் இதயத்தைக் குறிக்கும் சொல்லான ”கல்ப்” என்பது க-ல-ப என்னும் வேரிலிருந்து வருகிறது. அதற்கு ‘புரளுவது’ என்று அர்த்தம். எனவே இதயம் (உள்ளம்) எப்போதும் புரண்டு கொண்டே இருக்கும். அது எப்போதும் அசைவிலேயே இருக்கும். அது ஒரு கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலத்தின் திசைமாற்றியின் ஒரு பகுதியைப் போன்றதாகும். அது ஒரு சுழல் மையம் போல் எப்போதும் திரும்பிக்கொண்டே இருக்கும். எனவே, இதயம் எப்போதும் எதனிடமாவது சென்று கொண்டே இருக்கிறது. அது ஆகுமானதிடம் (ஹலால்) செல்லவில்லை என்றால் ஆகாததிடம் (ஹராம்) செல்லும். அது ஹராமை விரும்பும்போது அது ஹராமை அடையும். ஏனெனில் அது ஒரு காந்தம் மாதிரி. தீமையை விரும்பும்போது தீமையை அடையும். நன்மையை விரும்பும்போது நன்மையை அடையும். அது உணவை விரும்பினால் அதனிடம் உணவு வந்து சேரும். விதியின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதாவது, உங்களுக்குப் பசி உண்டாகும் முன்பே உங்களை நோக்கி உணவு வந்து கொண்டிருக்கிறது என்பதுதான். ஆம், அது நிஜமாகவே வந்து கொண்டிருக்கிறது! அது மந்தைவெளியிலிருந்த ஒரு செம்மறியாக இருந்து அறுக்கப்பட்டது, அப்புறம் தொங்கவிடப்பட்டது, அப்புறம் கசாப்புக்காரரால் வெட்டப்பட்டது, விலை கொடுத்து வாங்கப்பட்டது, அடுக்களைக்கு எடுத்துவரப் பட்டது – “எனக்குப் பசிக்கிறது” என்று நீ நினைத்ததுதான் தாமதம், அது உன் முன்னே தட்டில் இருக்கிறது. அவ்லியாக்கள் சொல்கிறார்கள்: உலகம் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்த உணவு உன்னிடம் வந்துகொண்டிருக்கிறது, ஏனெனில் அல்லாஹ் உணவளிப்போனாக (ரஜ்ஜாக்) இருக்கிறான். ரிஜ்கு (இரணம்) ரஜ்ஜாக்கிடம் இருந்து வருகிறது.

            இதுவே இதயத்தின் முதல் அசைவு. முதலில் நீங்கள் பொருத்தப்பாடாக இருக்கிறீர்கள். நேசனுடன் நீங்கள் ஒத்திசைவில் இருக்கிறீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் பகைவர்களைப் போல் இருக்கக் கூடாது என்று நீங்கள் கற்றிருக்கிறீர்கள். அது உங்களைப் பொருத்தமுள்ளவர்கள் ஆக்குகிறது, ஏற்கத்தக்கவர்கள் ஆக்குகிறது. அடுத்ததாக சாய்வு வருகிறது. நேசனுக்கான உங்களின் தேடலில் உங்களை நீங்கள் மும்முரம் ஆக்கிக் கொள்கிறீர்கள். வேறு விதத்தில் சொல்வதெனில், “இது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? நான் என்ன செய்கிறேன்? நான் என்ன செய்ய வேண்டும்? நான் எப்படி இயங்க வேண்டும்? நான் எப்படி அறிவு பெற வேண்டும்? நான் திக்ரில் அமர்ந்தாலும் எனக்குள் எதுவுமே நடக்காமல் இருப்பது எப்படி?” என்றெல்லாம் உங்கள் இதயம் கேட்கத்  தொடங்குகிறது. அதனால் அது சாய ஆரம்பிக்கிறது.

            அடுத்த நிலை முஆனசா – நெருக்கம் / அன்யோன்யம். அல்லாஹ்வை நேசிப்போருடன் இருப்பதற்கு இதயம் விரும்ப ஆரம்பிக்கிறது. ஏனெனில், காதலியின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்க விரும்புவது காதலரின் அடையாளங்களில் ஒன்று. இது லைலா மஜ்னூனின் கதையைப் போன்றது. லைலாவின் பெயரைக் கேட்பதே மஜ்னூன் மகிழ்ச்சி அடைவதற்குப் போதுமானது. எனவே அவளின் பெயர் சொல்லப்படும் இடங்களுக்குச் செல்ல அவன் விரும்புகிறான். அல்லாஹ்வுடன் உன்னை நீ நேர்மையாக இணைத்துக் கொள்வதும் அவன் அல்லாத அனைத்தையும் விட்டு உன்னை நீ விலக்கிக் கொள்வதும்தான் முஆனசாவின் ஆரம்பம். அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வை நேசிப்பொருடன் அமர்ந்திருக்கும் பழக்கத்தை நீ உண்டாக்கிக் கொள்வதுதான் அவன் அல்லாத அனைத்தையும் விட்டு நீ உன்னை விலக்கிக் கொள்வதற்கான வழியாகும்.

            பின்னர் இந்த நெருக்கம் செயற்பட ஆரம்பிக்கிறது. அடுத்த நிலை ஹவா – ஆழ்ந்த ஆசை (இச்சை). ஆனால் இந்த ஆசை என்பது உலக ஆசைக்கு எதிரானது ஆகும். இது உள்ளத்தை ஜுஹ்து (பற்றின்மை)யில் வைப்பதாகும். வேறு வார்த்தையில் சொல்வதெனில், திக்ரு, அல்லாஹ்வின் உடனிருப்பு, மற்றும் அல்லாஹ்வை அறிதல் ஆகியவற்றைத் தவிர வேறு எதன் மீதான ஆசையும் உண்டாகாமல் பேணுவதாகும். எனவே, இந்த நிலையில் இதயமானது தெளிவடைய ஆரம்பிக்கிறது. இதற்கு முன்பு அது அறிந்திராத விடயங்களுக்கு அது உடன்படவும் ஆட்படவும் ஆரம்பிக்கிறது. “இறை வழியில் ஒரு காலடி எடுத்து வைத்தவர் விண்மீனைப் போன்றவர். அதில் முன்னேறுபவர் நிலவைப் போன்றவர். அல்லாஹ்வின் அறிவை அடைந்துவிட்டவர் சூரியனைப் போன்றவர். ஆனால் இந்தப் பாதையில் காலடி எடுத்து வைக்காத ஒருவர் கல்லைப் போன்றவர்,” என்று இமாம் கஜ்ஜாலி (ரலி) அவர்கள் சொல்லியிருக்கும் பிரபலமான வாக்கியத்தின் விளக்கம் இதுவே.

            ஐந்தாம் படிநிலை முவத்தா – நட்பு / தோழமை.  அல்லாஹ்வின் நட்பை உருவாக்குவது எது என்றால், எதற்கும் முன்பு உள்ளத்தை ஒரு ஏக்கம் மிகைத்திருப்பதாகும். எனவே நீ அன்றாட வாழ்வின் அலுவல்களுக்கு அப்பால் செல்கிறாய். ‘பொருள்’ என்று சொல்லப்படும் அனைத்தையும் தாண்டி உன் ஏக்கம் செல்கிறது. ஷைஃகு முஹம்மத் இப்னுல் ஹபீப் (ரஹிமஹுல்லாஹ்) தனது தீவானில் சொல்கிறார்கள்:

 அவன் அல்லாதவை அனைத்தையும் விட்டு

அவனில் ஒதுங்கிவிடு.

            ஆறாம் படிநிலை ஃகுல்லா – தனிப்பட்ட நட்பு. வெறுமனே உனது நுண்ணறிவையும் உள்ளத்தையும் மட்டும் நீ அவனுக்குக் கொடுப்பதன்று, இந்த நிலையில் அத்துடன் நீ உன் ஒவ்வொரு அங்கத்தையும் அவனுக்கே என்று சங்கற்பித்து வைப்பாய். தொழுகை என்பது இதற்குத்தான். நோன்பு என்பது இதற்குத்தான். இமாரா என்பது இதற்குத்தான் – அதாவது, உடலின் ஒவ்வோர் அங்கமும் வழிபாட்டில் ஆகிவிட வேண்டும்.

            ஏழாம் நிலை முஹப்பத் – நேசம். இந்நிலையில், ஃபக்கீரின் உள்ளத்தில் ஏக்கமும் காதலும் ஆசையும் தீவிரம் கொண்டு பற்றி எரியத் தொடங்கி நல்லன அல்லாதவை அனைத்தையும், சரியல்லாதவை அனைத்தையும் பொசுக்கிவிடும். அவை மின் தாக்கியது போல் ஆகி அவ்விடத்தில் நல்ல காரியங்கள் ஆற்றும் வாய்ப்பு உண்டாகிவிடுகிறது. தீய செயல்களைக் கொண்டுவரும் சுயநலத்தை விட்டகன்று, தன்னலம் கருதாது பிறர் நலமே நினைக்கும் நிலை உண்டாகிவிடுகிறது. ஏனெனில், இந்த நேசம் ஃபுகரா (அடியார்)களை ஆதரிக்கும் நேசமாகப் பரிணமிக்கிறது. அது நிரம்பி வழிகிறது. அனைத்து மக்களையும் அணைத்துக்கொள்ள உன் உடல் நிரம்பி வழிகிறது. யார் நீ யார் அவர்கள் என்று உனக்கு வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் போகிறது. இஃது ஏனெனில், அப்போது நீ நற்காரியங்கள் ஆற்ற ஆர்மபித்துவிட்டாய் என்பதால்தான். பிர்ரு என்பது நற்காரியங்களில் வாழ்வதாகும். பிர்ரு என்பது செயற்படுவது, வெறுமனே நல்லவனாக இருப்பதன்று, நன்மையைச் செயற்படுத்துகிறாய் என்பதாகும்.

            அடுத்து நீ எட்டாம் நிலையை அடைகிறாய்: ஷகஃப் – வலிய நேசம். எனவே, அழுத்தமும் தீவிரமும் அதிகமாகிறது. இந்நிலையில் நீ போதை அடைகிறாய். இங்கே நீ பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியவன் ஆகிறாய். ஏனெனில், “உன் ரகசியத்தின் திரையைக் கிழிக்கின்ற அபாயம்” என்று சொல்வது போல் ஆகிறாய். ரகசியத்தை வெளிப்படுத்துவது குஃப்ரு (இறை நிராகரிப்பு) போன்றதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், திக்ரில் நீ மிகவும் பரவசம் அடைந்துவிடும்போது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) பற்றி உன் உள்ளத்திற்கு வரும் இந்த அறிவை நீ வெளிப்படுத்திவிடக் கூடும். ஆனால் இதனை ஒருவரும் அறியக்கூடாது. ஷைஃகு முஹம்மத் இப்னுல் ஹபீப் (ரஹிமஹுல்லாஹ்) தனது தீவானில் சொல்கிறார்கள்:

அல்லாஹ்வின் அடியார்கள் முன்னிலையில்

பேரார்வத்துடனும் நேர்மையாகவும் தியானம் செய்

            ஒன்பதாம் படிநிலை தைம் – அடிமைத்தளை. நீ காதலின் அடிமை ஆகிறாய். இந்நிலையில் நீ தஜ்ரீத் (ஆடை களைதல்) செய்கிறாய். இரண்டு தஜ்ரீதுகள் இருக்கின்றன: வெளிப்படையான தஜ்ரீத் என்பது பற்றுக்களை விட்டுவிடுதல், ஜுஹ்து மாதிரி. ஜுஹ்து என்பது “என்னிடம் இது இல்லை அது இல்லை” என்று சொல்வதன்று, “எனக்கு அதன் தேவை இல்லை” என்று சொல்வதாகும். சய்யிதுனா ஈசா (அலைஹிஸ் சலாம்) அவர்களைப் பற்றி இமாம் அல்-கஜ்ஜாலி சொல்கிறார்: ஈசா நபியிடம் சீப்பு ஒன்றும் கண்ணாடி ஒன்றும் இருக்கின்றன. சிறு பிள்ளை ஒன்று தன் விரல்களால் தலை கோதுவதை அவர்கள் பார்த்ததும் சீப்பை வீசி எறிந்துவிட்டார்கள். பின்னர் ஒருநாள் விலங்கு ஒன்று குளத்தில் முகம் பார்ப்பதைக் கண்டார்கள். நீரில் நாம் முகம் பார்க்க முடியும்போது கண்ணாடி எதற்கு என்று அதையும் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

            இது வெளிப்படையான தஜ்ரீத் ஆகும். ஆனால் அகநிலையான (பாத்தினி) தஜ்ரீத் என்பது உடலையே துறந்து விடுவதாகும். ஃகல்வத் (தனித்திருத்தல்) என்பதில் இந்த பாத்தின் நிலையான தஜ்ரீத் இருக்கிறது. அதில் நீங்கள் பார்வை கேள்வி தொடுவுணர்ச்சி ஆகியவற்றை – அனைத்துப் புலனுணர்வுகளையும் ஒவ்வொன்றாக இழப்பீர்கள். அப்போது தன்னுணர்வு (பிரக்ஞை அல்லது ஸ்புரணம்) மட்டுமே எஞ்சியிருக்கும். ஒரு கட்டத்தில் அதுவும் மறைந்துவிடும். இந்த நிலையே தஸவ்வுஃப் (என்னும் ஸூஃபித்துவத்தின்) சொல்லாடலில் ஃபனா ஃபில்லாஹ் (அல்லாஹ்வின் அழிதல்) என்று சொல்லப்படுகிறது. இந்த தைம் என்னும் அடிமைத்தளை குறித்து ஸூஃபி ஒருவர் சொன்னார்: “நீ அவனை வாங்க நினைக்கிறாய் – முதலில் உன்னை விற்றுவிடு.” இந்த அறிவை நாடும் ஒருவனுக்கு ஆரிஃப் (மெய்ஞ்ஞானி) கூறும் அறிவுரை இது.

            பத்தாம் படிநிலை வலா – திகைப்பு / மருட்சி. வலா பற்றி முஹய்யுத்தீன் இப்னு அறபி அவர்கள் விரிவாக எழுதியிருக்கிறார். அதைப் பற்றி இந்த ஷைகு சொல்கிறார்: “காதலியின் முன்னே கண்ணாடியை வைத்தல்; அழகின் மதுவால் போதை அடைதல்” இந்த ஷைஃகுகளில் இன்னொருவரான யஹ்யா அல்-முனீரி சொல்கிறார்: “அன்பு (ஹுப்பு) காதலியிடமிருந்து ஒரு செய்தியை அனுப்புகிறது. இதயத்திடம் அது சொல்லும் செய்தி: ‘எப்போதும் அசைவில் இரு, ஓய்வில்லாமல்’. வாழ்க்கையிடம் சொல்கிறது: ‘சுகங்களை விட்டுவிடு’; தலையிடம் சொல்கிறது: ‘சாயாதே’; முகத்திடம் சொல்கிறது: ‘மஞ்சணித்துவிடு’; உடலிடம் சொல்கிறது: ‘மறைந்து போகும் வலிமைக்கு விடை கொடு’; கண்களிடம் சொல்கிறது: ‘அழு’; காதலனிடம் சொல்கிறது: ‘உன் நிலையை மறைத்துக்கொள்; வாயை மூடு; நண்பர்களை விட்டு விலகு; ஈருலகையும் துற.’”



 

 

 

1 comment:

  1. Masha Allah உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்.

    ReplyDelete