Wednesday, January 10, 2024

புத்தகத் திருவிழா 2024

சென்னையில் நடைபெற்று வரும் 2024-ற்கான புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சீர்மை பதிப்பகம் நான் மொழிபெயர்த்த மற்றும் எழுதிய நூற்களைக் கொண்டு வருகிறது. இதுவரை ஐந்து நூற்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. மேலும் ஏழு நூற்கள் அச்சில் இருக்கின்றன. பொங்கலுக்குள் வந்துவிடும் என்று நண்பர் உவைஸ் அஹ்மத் சொன்னார். 

கடந்த ஆறாம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒருநாள் பயணமாக மனைவி மற்றும் மகனுடன் சென்னைக்குக் கிளம்பினேன். முந்தைய நாள்தான் நண்பர் கொள்ளு நதீமிடமும் உவைஸ் அஹ்மதிடமும் தகவல் சொன்னேன். உடனடியாக என் வருகையை அறிவித்து ஒரு போஸ்டரை முகநூலில் ஏற்றிவிட்டார்கள். 




உவைஸ் அஹ்மத், சாளை பஷீர், இஸ்மாயில் சேட் அன்ஸாரி, அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் உள்ளிட்ட சீர்மைக்குழுவினரைச் சந்தித்தேன் (சீர்மை அரங்க எண்- 318). பின்னர், மதிய உணவுக்கு முன் ஆறாம் “bay" வரை உள்ள கடைகளை அலசிச் சில நூற்களை வாங்கினேன். 

             திரு.பாலா பாரதி


இடையில் ஓரிடத்தில், யாரோ என்னைப் பேர் சொல்லி அழைக்க, திரும்பினால் பாலா பாரதி நின்றுகொண்டிருந்தார். “காக்கைக் கூடு” அரங்கிற்கு அழைத்தார். அவர் எழுதி வெளியாகியிருக்கும் “பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் - தொகுதி 1” நூலை வாங்கினேன். மானுடவியல் மற்றும் தொல்லியல் நோக்கில் தமிழுக்கு அது மிக முக்கியமான ஒரு நூல். 


      நண்பன் சதீஷ் குமாருடன்.


மதிய உணவுக்கு நந்தனம் புகாரியில் அமர்ந்திருந்தபோது அலைபேசியில் என் கல்லூரிப் பருவத்து நண்பன் சதீஷ் குமார் அழைத்தான். சொன்னபடி முக்கால் மணி நேரத்தில் தாம்பரத்தில் இருந்து வந்துவிட்டான். எனது நூல்களை எல்லாம் பார்த்துவிட்டு “மலை முகட்டில் ஒரு குடில்” வாங்கியவன் ’ஆட்டோகிராஃப் போடு’ என்று சட்டென்று நீட்டியபோது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினேன். ஆட்டோகிராஃப் போடும் அளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல. அதுவும், நண்பனுக்கா போடுவது? என்று தயங்கினேன். ஊரிலிருந்து புறப்படும்போதே (என்+)அவள் பார்க்கர் பேனாவை எடுத்து வைத்திருந்தாள். இதை அவள் எதிர்பார்த்திருக்கிறாள்! அது நிறைவேற என் நண்பனே வந்திருக்கிறான். ஆட்டோகிராஃப் இட்ட காட்சியை மகன் நதீம் கைப்பேசியில் சுட்டுவிட்டான். ஆக, வரலாற்றைப் பதிவு செய்துவிட்டார்கள். ”என்னய்யா நடக்குது இங்யெ?” என்னும் மூமண்ட்டாக இருந்த கணங்கள் எனக்கு. பொதுவாக நான் கணக்கில் ரொம்ப வீக். இதுவோ ஆண்டவன் கணக்கின் படிகளில் ஒன்று!


அரங்கிற்கு வரும் வாசகர்கள் என் புத்தகங்களை எடுக்கிறார்களா என்று பார்ப்பதே சுவாரஸ்யமாக இருந்தது. வாங்கியும் செல்கிறார்கள் என்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. அரங்குக்குள் நுழைந்த தம்பதியர் இருவர் எனது எல்லா நூற்களையும் எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தனர். கடைசியில் நான் மொழிபெயர்த்த நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” (அயான் தல்லாஸ்) நூலையும் “ஹிஜாப்” என்னும் நூலையும் வாங்கினார்கள். அந்த இணையர் சீர்மை பதிப்பகத்தின் வெளியீடுகளைத் தொடர்ந்து வாங்கி வருபவர்கள் என்றும் அந்தக் கணவரின் பெயர் ஆத்தூர் கலைச்செல்வன் என்றும் பின்னர் சீர்மை பதிப்பகம் இட்ட முகநூல் இடுகை வழி அறிந்தேன்.


மதியம் சீர்மை அரங்குக்கு மூத்த எழுத்தாளர் பாவண்ணன் வந்தார். நண்பர் சாளை பஷீர் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் என்று. நான் மொழிபெயர்த்த சில நூற்களை அவரிடம் காட்டினேன். “காதலின் நாற்பது விதிகள்” நாவலைப் பற்றி ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருந்தது.

“பேராசிரியராக இருந்து கொண்டு இதெல்லாம் எழுதுறதுக்கு நேரம் இருக்கா?” என்று கேட்டார்.

“இதுக்கெல்லாம் நேரம் தருகிற வேலையாக இருக்க வேண்டும் என்றுதான் நான் பேராசிரியராகவே ஆனேன்” என்று பதில் சொன்னபோது சிரித்துவிட்டார்.

என் பெருமிதமிகு மாணவரும் கவிஞரும் புனைகதையாளருமான ஜார்ஜ் ஜோசஃப் எழுதிய “எமரால்ட்” சிறுகதைத் தொகுப்பை அவர் ஸ்டாலிலேயே வெளியிட்டார்.


மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது இலங்கையில் இருந்து எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சிராஜ் மஷ்ஹூர் வந்தார். அவருடனான சுவாரஸ்யமான உரையாடலில் என் உறவினரும் இலங்கையில் “இளம்பிறை” என்னும் இலக்கிய இதழின் வழி ஆளுமைகள் பலரையும் அறிமுகப் படுத்தியவருமான எம்.ஏ.றஹ்மான் அவர்களைப் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அறிவுப் புலத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வரும் உள்ளங்களின் சகவாசம் தந்த புத்துணர்ச்சியுடன் திருச்சிக்கு வீடு திரும்பியபோது நள்ளிரவு மணி ஒன்றரை ஆகியிருந்தது. சென்னையிலிருந்து திருச்சி வரை நெடுகிலும் ஓயாத மழை.





No comments:

Post a Comment