தி ஜானகிராமன் தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எழுதிய குறுநாவலான “அடி”யை நேற்று வாசித்து முடித்தேன். அதில் சில வரிகளை அசை போட்டபோது தோன்றிய கருத்துக்களை இங்கே இரண்டு சின்னஞ் சிறு கட்டுரைகளாக வரைந்துள்ளேன்.
நாயின் குரைப்பில்…
சூஃபி ஞானிகளின் பரவச மொழிகள் பற்றி ஆராய்ச்சிப்
பண்ணி ஒரு புத்தகம்: Words of Ecstasy in Sufism (சூஃபிசத்தில் பரவச மொழிபுகள்). வடக்குக்
கரோலினா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆராய்ச்சித் துறைப் பேராசிரியர் கார்ல் டபிள்யூ
ஏன்ஸ்ட் எழுதியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வாசித்த அந்த நூலைப் பின்னர்
சூஃபி ஞானி ஒருவருக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டேன்.
அதில் சூஃபி ஞானிகளின் வித்தியாசமான பரவச அனுபவங்களைப் பற்றிய
செய்திகள் இருந்தன. அதில் சில என் மனத்தில் அடிக்கடி நினைவுக்கு வரும். சில நடுநிசிகளில்
தெரு நாய்கள் குரைத்து இரவின் நிசப்தத்தைக் குலைக்கும்போது, ’செ, இப்படிக் கிடந்து
கத்தி தூக்கத்தைக் கெடுக்குதே’ என்று எரிச்சல் கிளம்பும் கணத்தில் அந்த நூலில் படித்த
ஒரு சேதி ஞாபகம் வரும்.
”இயற்கையில் இறைவனின் இருப்பை உணர்வதன் அதீதமான உணர்வெழுச்சி”
என்னும் வகையான பரவச அனுபவத்திற்கு உதாரணமாக அதை ஏன்ஸ்ட் குறிப்பிடுகிறார். அபுல் ஹசன்
நூரி என்னும் சூஃபி ஞானி ஒருமுறை நாய் ஒன்று குரைப்பதைக் கேட்டார். அந்தக் கணமே பரவசம்
மேலிட்டு “லப்பைக்” (இதோ இருக்கிறேன் / செவி சாய்த்தேன் / அடிபணிந்தேன்) என்று உரைத்தார்.
அதே போல் இன்னொரு நிகழ்வு. இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்காக (பலியிடுவதற்காக)
அல்-முஹாசிபி ஆடு ஒன்றை ஆயத்தப்படுத்தினார். அது கனைத்தது. அதைக் கேட்ட சூஃபி ஞானி
அபூ ஹம்ஸா அல்-இஸ்ஃபஹானி உடனே ”லப்பைக்” என்று உரக்கச் சொன்னார்.
விலங்குகளின் சப்தங்களைக் கேட்டதற்கே அவர்கள் எவ்வளவு ஆழமாகப்
போய்விடுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. இதை வாசித்த அனுபவமே அந்தப் பரவசத்தின்
ருசியைச் சற்று நல்கத்தான் செய்தது.
தி.ஜானகிராமன் எழுதிய “அடி” என்னும் குறுநாவலைப் படித்தபோது,
அதன் முடிவில் அவர் எழுதியிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் பரவசத்தை மீண்டும் உணர்ந்தேன்.
’மேலே முழுமதி, கீழே வயல்கள்’ என்னும் சூழலில் செல்லப்பாவை வெளியே அழைத்துக் கொண்டு
போய் அதுதான் பரதேவதையின் அழகின் பிரதிபலிப்பு என்று காட்டுகிறார் அம்பாகடாட்சம் என்னும்
ஞானி. அது நாவலின் இறுதிக் காட்சி. அதை இப்படி முடிக்கிறார் தி.ஜா:
எங்கோ நாய் இரண்டு குரைப்பது
கேட்டது.
”பேஷ் பேஷ்” என்றார் அம்பாகடாட்சம். “இதைவிட
எப்படி அழகா அம்பாளைப் பார்த்துப் பாட முடியும்?” என்று புன்னகையுடன் குரைப்பில் லயித்துவிட்டது
போல் நின்றார் அம்பாகடாட்சம்.
சூஃபியின் நிகழ்வு நாயின் குரைப்பில் அவர் இறைவனை உணர்ந்ததைக்
காட்டிற்று என்றால், தி.ஜா., நாய்கள் இறைமையை உணரும் விதத்தைக் காட்டிவிட்டார்.
பல்லாயிரம்
பல்லாயிரம் சொலவடைகள் செழித்த தமிழ் மொழியில் ”இசைக்கேடு” என்றும் ஒரு சொலவம். மிகச்
சாதாரணமாக பேச்சு வழக்கில் பாமரரும் புழங்கும் ஒன்றுதான்.
உதாரணமாக,
தி.ஜானகிராமனின் “அடி” என்னும் குறுநாவலில் இரண்டு இடங்களில் இச்சொல் வருகிறது. இரண்டு
இடத்திலுமே இதைப் பேசுபவள் மங்களத்தம்மாள். கணவனிடம் ஓரிடத்தில் பிரிட்டிஷ்காரர்களைப்
பற்றிச் சொல்கிறாள்: “அவா ஊர்ல யாரும் தினமும் குளிக்கிறதில்லையாம். இங்கியும் அப்படியேதான்
இருக்கா. நெறைய பவுடர், செண்ட் எல்லாம் போட்டுண்டு வந்துடறா. அதுக்குப் பதிலாக தப்பித்தவறி
கிட்டப்போய் எங்கியாவது இசைக்கேடா நின்னா மூத்ர நெடி அடிக்கிறது!”
இன்னொரு
இடம், மங்களத்தம்மாள் பட்டுவை விசாரணை பண்ணுமிடம். அப்போது அவளிடம் சொல்கிறாள்: “நீயும்
மாமாவாலெதான் இப்படி உசந்துட்டோம்னு நன்னி விசுவாசத்தினாலெ இசைக்கேடா நடந்துக்கலாம்.
நடந்துக்க சம்மதிக்கலாம்னு நினைக்கிலாமோல்லியோ?”
இசைக்கேடு
என்னும் சொல் இசை (music) என்னும் கலைத் துறை சார்ந்த சொல்லன்று. இது மனித வாழ்க்கை
சார்ந்த ஒரு ஞானச் சொல்லாகும்.
வாழ்க்கையே
ஒரு இசைதான் என்று பார்க்கும் ஞான தரிசனம் இச்சொல்லில் இருக்கிறது. எனவே, வாழ்வில்
அசந்தர்ப்பம் என்றோ இங்கிதம் தவறியோ, இடம் பொருள் ஏவல் என்பவற்றுக்குப் பொருந்தாமலோ,
பிசகாகவோ, தவறாகவோ, குற்றமாகவோ ஏதேனும் நடந்தால் அது இசைக்கேடு.
இசை
என்பது என்ன? ஏழு ஸ்வரங்கள் தம்முள் இயல்பாக இணங்கி ஒத்துழைத்து நகர்வது. அதாவது ஓசைகளின்
ஒத்திசைவு (harmony).
மனிதர்களும்
உறவை ஒட்டி வாழும்போது, இணங்கி வாழும்போது அந்த வாழ்க்கை இசை ஆகிறது. இயற்கையுடன் இயைந்து
வாழும்போது அந்த வாழ்க்கை இசை ஆகிறது. பிரபஞ்ச நியதிகளுக்கு முரண்படாமல் வாழும்போது
அந்த வாழ்க்கை இசையாகிறது. அந்த ஒத்திசைவு குலைவதே இசைக்கேடு.
இது
தொடர்பாகத் தமிழில் இன்னொரு சொல்லும் இருக்கிறது: இசைப்பாட்டு. பேச்சு வழக்கில் எசப்பாட்டு
என்று சொல்லப்படும். இது இன்னும் ஆழமான ஞானச் சொல்லாகப் படுகிறது.
எசப்பாட்டு
என்பது எதிர்ப்பாட்டுதான். “யார்றா அது, என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவன்?” என்றால்,
எதிர்ப்பாட்டு பாடுகிறான் என்று பொருள். எதிராகப் பாடுவதை ஏன் இசைப்பாட்டு என்றார்கள்?
அதில்தான் தமிழின் ஞானம் இருக்கிறது.
எசப்பாட்டு
என்பது கருத்து நிலையில் எதிர்ப்பாக இருக்கும். அதாவது, ஒருவர் பாடும் கருத்தை மறுத்துப்
பிறர் பாடுவதாக அமையும். ஆனால் அது முன்னவர் பாடிய அதே பண்ணில் அமைந்திருக்கும்! எனவே,
கருத்துப்படி பார்த்தால் அது எதிர்ப்பாட்டு; பண்ணின்படி பார்த்தால் அது உடன்படுகின்ற,
ஒத்திசைகின்ற பாட்டு. எனவே அது எசப்பாட்டு.
உருதுவில்
கவ்வாலி என்று பாடப்படும் வகையில் இரண்டு அணிகள் அமர்ந்து இசையிலேயே வாதாடுவது உண்டு.
அது இசையால் அமைந்த வழக்காடு மன்றம் என்று சொல்லலாம். ஒருவரின் கருத்தை இன்னொருவர்
மறுத்துப் பாடுவார். ஆனால் மெட்டு அதேதான்.
எனவே,
எசப்பாட்டு என்னும் சொல் இவ்வகையில் வாழ்க்கை பற்றிய ஓர் உண்மையை உணர்த்துகிறது. எதிரெதிரான, முரண்பாடான இரண்டு
கருத்துக்கள் ஒரே மெட்டு என்னும் முழுமைக்குள் இயங்குகின்றன. தாவோயிசம் சொல்லும்
opposites are complementaries, இரண்டும் இணைந்துதான் வட்டம் முழுமை அடைகிறது, இது
அதனைச் சார்ந்துள்ளது, அது இதனைச் சார்ந்துள்ளது என்னும் தத்துவத்தை எசப்பாட்டு என்னும்
ஒற்றைச் சொல் குறிக்கிறது.
வாழ்க்கை
என்பது dialectics என்னும் முரணியக்கம் ஆகும் என்னும் தரிசனத்தை எசப்பாட்டு என்னும்
சொல்லே தந்துவிடுகிறது.
மிக அருமையான கட்டுரை. அதிலும் இசைப்பாட்டின் கீழ் சொன்ன கருத்துகள் மிக நெருக்கமாக இருந்தது.
ReplyDeleteஇசகு பிசகு என்று பயன்படுத்தும் வழக்கும் உண்டு.
அடடா ரொம்ப நாள்கழித்து ஒரு அற்புதமான கட்டுரையைப் படித்தேன். உங்கள் ஆழமான சூஃபி ஞானத்தையும் இலக்கியப் புரிதலையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.
ReplyDeleteவெகுவாக கவர்ந்தது தங்கள் கட்டுரை கருத்து..இசைக்கேடு என்பது எங்கள் பகுதியில் எசங்கேடு என்று பேசப்படுகிறது.....
ReplyDelete