Wednesday, June 28, 2023

விசேஷ மிஸ்கீன்கள்

(இந்தச் சிறுகதை பேராசிரியர் சேமுமு அவர்கள் ஆசிரியராக உள்ள “இனிய திசைகள்” மாதிகையின்  ஜூன் 2023--ஆம் தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது (பக்.30-33) ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த நன்றி.)


 

வெள்ளிக்கிழமை என்றால் தொழுகைக்கு முன்போ பின்போ யாராவது ஒரு மிஸ்கீனுக்கு (இரவலருக்கு) சாப்பாடு அல்லது சாப்பாட்டுக்கான பணம் ‘சதக்கா’ (தர்மம்) செய்ய வேண்டும். இது என்னவள் பேணி வரும் அறங்களுள் ஒன்று. வேறு ஏதேனும் ஞாபகார்த்த நாட்களை முன்னிட்டு இதர கிழமைகளிலும் இந்த அறத்தை நிறைவேற்றுவாள். மீஸ்கீனைத் தேடிக்கண்டு கொடுப்பது என் வேலை.

            மிஸ்கீன்களிலும் பல வகையானவர்கள் இருக்கிறார்கள். குஞ்சு குளுவான்களோடு வந்து “ஸ்லாமலேக்கும்… மூனு பேரு வந்திருக்கோம்…” என்று நீட்டியிழுத்து ஏக்கத்துடன் கேட்கும் தாய்க்குலத்தின் குரல். பத்து ரூவாத் தாளை மடித்துக் கதவிடுக்கில் நீட்டும்போது அழுக்காடை அணிந்த பெண்ணின் இடுப்பில் தலையைச் சாய்த்தபடி நிற்கும் சிறுமி அல்லது சிறுவன் பார்க்கும் பார்வை ஈரக்குலையைப் பதற வைக்கும். வறுமை சாவினும் கொடிது! ஒருமுறை அப்படி ஒரு பயலை அழைத்து வீட்டு மரத்தில் பழுத்த கொய்யாக்கனி ஒன்றைக் கொடுத்தேன். தயங்கி நின்றவன் அம்மா சொன்னதும் வாங்கிக் கொண்டான். விலக்கப்பட்ட கனிக்கு அனுமதி கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி அவன் முகத்தில்! கடித்து ருசித்துக்கொண்டே அம்மாவின் பின்னே போனான்.



இந்த வகை மிஸ்கீன்கள்தாம் பெரும்பான்மை. புனித ரமலான் மாதத்தில் இவர்களின் ஜனத்தொகை அதிகமாகிவிடும். பெண் என்றால் கந்தலான ஒரு புர்கா. ஆண் என்றால் தலைக்கு ஒரு நைந்த தொப்பி. ஒரு பெருநாளன்று இவர்கள் அரிதாரம் தரிப்பதை நேரிலேயே பார்த்துவிட்டேன். நெற்றியிலிருந்த திலகத்தை அழித்து அவசர அவசரமாகப் பைக்குள்ளிருந்து புர்காவை உருவியெடுத்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. வயிற்றுப்பாடு ஐயா! கருப்பாயி நூர்ஜஹானாக மாறப் போகிறாள், தற்காலிகமாக! அவளருகில் ஒரு சின்னசாமி என்கிற சிக்கந்தர், மாமாங்கமாக எண்ணெய் காணாத தலைக்குத் தொப்பி அணிந்து கொண்டிருந்தான். இப்படியெல்லாம் அரிதாரம் போட்டுக்கொள்ளாமல் இதுதான் நான் என்பது போல் வந்து நிற்கும் மிஸ்கீன்களும் உண்டு. காவி வேட்டி கட்டி மேலுக்குக் காவி துண்டு போர்த்தி, திருநீற்றுப் பட்டையுடன் ஒருவர் திருவோடு ஏந்தி நிற்பதையும் பார்த்தேன். வயிறும் பசியும் எல்லாருக்கும் பொது. இதை விளங்கியவர்கள்தாம் இங்கே தொழ வருகிறார்கள் என்று அவன் நம்புகிறானே! அந்த நம்பிக்கை பொய்க்கலாகாது.

பல வருசங்களுக்கு முன், “இந்தப் பிச்சைக்காரர்கள்லாம் ஏன் சாமியார் மாதிரி காவி வேட்டியும் துண்டும் போட்டிருக்காங்க?” என்று நண்பன் ஒருவன் கேட்டான். “அதுதான் அவுங்களுக்கு இலவசமாக் கெடச்சது. கோட் சூட் குடுத்தீன்னா அதெப் போட்டுக்குவாங்க. கையேந்துறவனுக்கு எம்புட்டுப் போடலாம்னு மட்டும் யோசி” என்றேன்.

இந்த மிஸ்கீன்களின் கூட்டத்தில் நான் தேடுவது வேறு வகையான நபர்களை. சில இறைநேசர்கள் (அவ்லியா) இப்படி மிஸ்கீன்களாக உலவக்கூடும். தர்வேஷ், கலந்தர், ஃபக்கீர் என்னும் பெயரெல்லாம் அவர்களைத்தான் குறிக்கும். மலாமத்தி என்றொரு வகையினரும் உண்டு. எல்லாரும் திட்டித் தீர்க்கும்படி காரியம் செய்து வைப்பார்கள். ஆணவ மலத்தை அழிப்பதற்கான ஆசிட் டெஸ்ட்! சிலர் பைத்தியம் போல் திரிவார்கள். மஜ்தூப் என்று அவர்களுக்குப் பெயர். இவர்களை எல்லாம் முஸ்லிம் சித்தர்கள் என்று இங்கே சில பேர் எழுதியிருக்கிறார்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு. தர்வேஷ் போக்கு தம்பிரான் போக்கு!

அத்தர் கடை இஸ்மாயில் ஒருமுறை சொன்னார்: “அப்பப்போ ஒரு மிஸ்கீன் வருவார். அவராகவே இவ்வளவு வேணும்னு ரொம்ப அதிகாரத்தோட கேப்பார். பத்து ரூவா குடு, இருவது ரூவா குடுன்னு. அவ்வளவுதான் கேப்பார். கேட்டதக் குடுத்துருவேன். வாங்கிக்கிட்டுப் போயிருவார். எதுக்கு நமக்கு வம்பு. எந்தக் கோலத்துல யாரு உலவுறாங்கன்னு நாம என்னத்தக் கண்டோம்?”

 அதுபோல் நானும் சில பேரை அடையாளம் கண்டு வைத்திருக்கிறேன். வாரா வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் போகும்போது சகதர்மினி கட்டித் தரும் சாப்பாட்டுப் பொட்டலம் ஒருவருக்குப் போய்க் கொண்டிருந்தது. பத்துப் பதினைந்து மிஸ்கீன்கள் நிற்கும்போது ஒருவரை மட்டும் விசேசமாகத் தேர்ந்தெடுத்து நான் எப்படிக் கொடுப்பது? அதற்கு நான் ஒரு யுக்தி வைத்திருந்தேன். நான் மஸ்ஜிதுக்குப் போகும் பாதையில் முதலாவதாகக் கண்ணில் படும் மிஸ்கீனுக்கே என் சாப்பாட்டுப் பொட்டலம்! (மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி. அல்லது, நெய்ச்சோறும் கறிக் குழம்பும் ஒரு அவிச்ச முட்டையும்.)



இந்த உத்தியை நான் செயல்படுத்தியபோது வாரா வாரம் அவரிடமே கொடுக்கும்படி வந்தது. தோதகத்திக் கட்டை மாதிரி கறுப்பு. முரணாக வெள்ளை வேஷ்டி சட்டை. முழுக்கைச் சட்டையை எப்போதும் கஃப் பண்ணியிருப்பார். இப்படி ஒரு ’நீட்நெஸ்’ உள்ள மிஸ்கீனை நான் வேறெங்கும் பார்த்ததே இல்லை. அருகில் ஒரு பையை வைத்துக்கொண்டு ஒரு வீட்டின் முன் குத்த வைத்து அமர்ந்திருப்பார். ஆனால் முகத்தில் ஒரு கடுமை இருக்கும். குறிப்பாக, லேசான சிவப்பு ஏறிய முட்டைக் கண்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை. நான்கைந்து வாரங்களாக, அதே இடத்தில் அவருக்கே வெள்ளிச்சோறு கொடுத்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று கல்லூரிக்குப் போகும் வழியில் அவரைப் பார்த்தேன். யாரோ ஒருவரின் பைக்கில் அமர்ந்து வந்தவர் பள்ளிவாசல் இருக்கும் ஏரியாவின் முக்கில் மெல்ல இறங்கினார். அப்படியே படியில் அமர்ந்தார். வாகனத்தில் போய்க் கொண்டே என்னால் இவ்வளவுதான் பார்க்க முடிந்தது. சரிதான், இவர் விசேஷமான ஒரு மிஸ்கீன்தான் என்பது உறுதியாகிவிட்டது!



இன்னொரு விசேஷ மிஸ்கீனைக் கண்டு பிடித்த கதைச்சுருக்கத்தையும் இங்கே சொல்லிவிட வேண்டும். சாப்பாட்டுப் பொட்டலத்தை ஸ்கூட்டரில் தொங்கவிட்டுக்கொண்டு தேடியபடி காஜாமலை அடிவாரம் நோக்கிப் போனபோது அவர் கப்ருஸ்தானின் (இடுகாட்டின்) வாசலில் தார்ப்பாய் விரித்துப் படுத்துக் கிடந்தார். மேலில் துணியில்லை. கைலியும் முட்டிக்காலுக்குச் சற்று மேல் வரை மடக்கியிருந்தது. நான் ஸ்கூட்டரை நிறுத்திய மாத்திரத்தில் சட்டென்று எழுந்து சமனமிட்டு அமர்ந்தார். அந்த வேகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அஸ்-சலாமு அலைக்கும்” என்றார். முகத்தருகில் சென்ற அவரின் கையில் நாலைந்து கல்-மோதிரங்கள். மணிக்கட்டில் கயிறு சுற்றப்பட்டிருந்தது. கலைந்து கிடந்த தும்பை நரை தலைமுடி ஐன்ஸ்டீனை நினைவூட்டியது. அவரின் கண்கள் காத்திரமாக நோக்கின. கையை நீட்டி வாங்கிக்கொண்டார். அப்போது லுஹர் தொழுகைக்கான நேரம் நெருங்கியிருந்தது. “போங்க, போயி தொழுவுங்க. வீட்லயும் எல்லாரையும் அஞ்சு வேளையும் தொழுவச் சொல்லுங்க,” என்று கண்டிப்பான குரலில் சொன்னார். சரி அவர்? அவர் மஜ்தூபாக இருக்கலாம். அவரை விமர்சித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த மிஸ்கீன் ஈகைப் படலத்தில் வேறொரு சுவையான நிகழ்வும் வந்தது. ஏதோ ஒரு காரியத்தின் நிமித்தம் ஏழு மிஸ்கீன்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று அகத்துக்காரி சொன்னாள்.

”வெள்ளிக் கிழமன்னா மிஸ்கீன்க நெறைய பேரு வருவாங்க. இப்ப எப்படிக் குடுப்பீங்க?”

“காஜாமலை பக்கம் இருப்பாங்க. போயி பாக்குறேன். அங்கேயும் இல்லேன்னா காலேஜ் பள்ளிவாசலுக்குப் போயி பாக்குறேன்.”

ஏழு பொட்டலங்களை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் நான் போகும்போது வி.மிஸ்கீன்#1 என் கண்ணில் பட்டார். பூட்டியிருந்த கடை ஒன்றின் முன் குத்த வைத்து அமர்ந்திருந்தார். “நான் இங்கெ இருக்கேன். நீ எங்கெடா ஓடிக்கிட்டிருக்க?” என்பது போலிருந்தது அவரின் பார்வை. மானசீகமாக அவரிடம் சொன்னேன், “மன்னிக்கணும் மவ்லானா! இன்னிக்கு ஏழு பேருக்குக் குடுத்தாவணும். இப்ப ஒங்களுக்குக் குடுத்துப் பத்தாமப் போச்சுன்னா என்ன பண்ணுவேன்? வெள்ளிக்கிழமெ அன்னிக்கு ஒங்களுக்குத்தான்.”

இடுகாட்டு வாசலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் வி.மி.#2 அமர்ந்திருந்தார். ஒரு பொட்டலத்தை அவரிடம் நீட்டினேன். இரண்டு வைகளை ஏந்தி வாங்கிக் கொண்டவர் சொன்னார்: “அங்கே ஒருத்தர் போய்க்கிட்டிருக்காரு. போங்க, அவருக்குக் குடுங்க.” சரி என்று ஸ்கூட்டரைக் கிளப்பினேன். காஜாமலை அடிவாரத்தில் அன்றைக்கென்று ஒரு ஆளும் இல்லை. மலை மேலே யாரும் நிற்கிறார்களா என்று பார்த்தேன். யாருமில்லை. ரேஸ் கோர்ஸ் சாலைக்குப் போகும் தெருவில் அவர் சொன்னது போல் ஒரு மிஸ்கீன் போய்க் கொண்டிருந்தார். அவரைப் பிடித்து அவருக்கும் ஒரு பொட்டலம் கொடுத்தேன். இன்னும் ஐந்து இருந்தது. கல்லூரி மஸ்ஜிதுக்குப் போனேன். நான்கு பேர் அரக்கப் பரக்க ஓடி வந்தார்கள். ஆளுக்கொரு பொட்டலம் கொடுத்தேன். ஒரே ஒரு பொட்டலம் மட்டும் மிச்சம். அதை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்தபோது வி.மி#1 நினைவுக்கு வந்தார். திரும்பி வந்தபோது முன்பு அமர்ந்திருந்த அதே இடத்தில், பூட்டிய கடைக்கு முன்னால் அமர்ந்திருந்தார். கடைசிப் பொட்டலத்தை அவரிடமே கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இன்னொரு வெள்ளிக்கிழமை. கல்லூரி விடுமுறை என்பதால் அன்று ஜும்’ஆ தொழுகைக்கு மகனும் என்னுடன் வந்தான். கையில் ஒரு உணவுப் பொட்டலம். ”இதெ யாருக்கத்தா தரபோறீங்க?” என்று கேட்ட மகனுக்கு என் மிஸ்கீன் தேடல் அனுபவங்களை எல்லாம் விவரித்துக்கொண்டே ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டினேன். “நீ வேணும்னா பாரு. அவுரு அங்கே மொத ஆளா நம்ம கண்ணுல படுவாரு. அவருக்கிட்ட குடுத்துருவோம்.”

பள்ளிவாசலுக்குச் செல்லும் தெருவில் திரும்பியபோது வெள்ளை தொப்பி சட்டை லுங்கி அணிந்த கருப்புக் கம்பீரம் ஐம்பதடிக்கு அப்பால் நடந்து போய்க் கொண்டிருந்தது. சரியாக அதே வீட்டின் வாசலில் பையை வைத்துவிட்டு அமர்ந்தது. நான் அவரை நெருங்கி நிறுத்தி உணவுப் பொட்டலத்தைக் கொடுத்ததும் வாங்கிக் கொண்டார். “பாத்தியா? பிச்சக்காரன்னு கேவலமா யோசிச்சிரக்கூடாது. இவுரு ஒரு அவ்லியாவா இருக்கலாம். மரியாதையோட பாக்கணும். தெரியுதா?” என்றேன்.

ஜும்’ஆ தொழுதுவிட்டு வெளியே வந்தபோது ஓர் அதிர்ச்சியான காட்சி. எல்லா மிஸ்கீன்களும் – வயோதிகர்கள் பெண்கள் சிறார்கள் அனைவரும் – வெளியே நின்று கொண்டோ அமர்ந்தபடியோ யாசித்துக் கொண்டிருந்தனர். வி.மி#1 பள்ளி வளாகத்தினுள் படிக்கட்டுக்கு அருகில் படுத்துக் கிடந்தார். லேசாக ஒருக்களித்தபடி குப்புறக் கிடந்த அவரின் ஒரு கால் மட்டும் இழுத்துக்கொண்டது போல் மடங்கியிருந்தது. முடக்கு வாதம் வந்து நடக்கவே முடியாமல் தத்தளிப்பவர் போல் பாவித்துக்கொண்டு புலம்பியபடி யாசித்துக் கொண்டிருந்தார்.

மகன் என்னைப் பார்த்துப் பரிகசிப்பதுபோல் சிரித்தான், “அத்தா, இவுரு அவ்லியாவா?”

நானும் சிரித்தபடி ”இருக்கலாம்” என்றேன்.

கதையை இங்கேயே முடித்துவிடலாம். இன்னொரு வி.மிஸ்கீன் இருக்கிறாரே? அவர் என்னவானார்? எங்கேயும் போய்விடவில்லை. அங்கேயேதான் இருக்கிறார், கப்ருஸ்தான் வாசலில் தார்ப்பாய் மீது படுத்துக்கொண்டு, நாலைந்து கல் மோதிரங்கள் அணிந்த விரல்களின் இடையே பீடியைப் புகைய விட்டுக்கொண்டு. ஒருமுறை அவருக்கு உணவு கொடுக்கப் போனபோது ’வெல்டுடூ’வாகத் தெரிந்த ஒருவரிடம் ஏதோ ஆலோசனை சொல்வது போல் உருதுவில் பேசிக் கொண்டிருந்தார். நான் சற்று ஒதுங்கி நின்றேன். அவரை அனுப்பிவிட்டு வந்தவர் உணவை வாங்கிக்கொண்டதும், “நாகூர் எஜமானப் போய்ப் பாத்துட்டு வந்திருங்க” என்றார். என்ன திடுதிப்புன்னு இப்படிச் சொல்றாரே என்று மனதிற்குள் திகைத்தேன். உடனே மாற்றிச் சொன்னார்: “சரி, போயி நத்தர்வலி பாவாவப் பாத்துடுங்க.” தலையாட்டிவிட்டுக் கிளம்பிவிட்டேன். மூன்று நாளில் தப்லே ஆலம் பாதுஷா என்றழைக்கப்படும் நத்ஹர் வலியுல்லாஹ்வின் உரூஸ் நாள். நானும் மகனும் இமானுவேலையும் அழைத்துக் கொண்டுபோய் ஜியாரத் செய்தோம்.

ஒருநாள் வெயில் மெல்ல எழுந்து வரும் காலை ஏழே முக்காலுக்கு ஒரு காட்சி கண்ணில் பட்டது. பெரியார் கல்லூரி நிறுத்தத்தில் நின்ற பேருந்திலிருந்து வி.மி#2 இறங்கிக் கொண்டிருந்தார். அவர் கையிலும் ஒரு பை. வெளுத்து இஸ்திரி போட்ட மைநீலச் சட்டை போட்டிருந்தார். தூய்மையான வெள்ளைக் கைலி உடுத்தியிருந்தார். சரிதான், டியூட்டிக்கு இப்படித்தான் தினமும் வருகிறார் போலும் என்று மனம் எண்ணிற்று. மகனின் கேள்வி மீண்டும் மனதிற்குள் பகடியாக ஒலித்தது: “அத்தா, இவரு அவ்லியாவா?”

இப்போதும், சிரித்தபடி, “இருக்கலாம்” என்றேன்.

 


No comments:

Post a Comment