Wednesday, June 28, 2023

கசாப்புக் கத்தி

 


(”...என்றார் தர்வேஷ்” தொடரில் ஒரு பதிவு.)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தோழர் தக்கலை ஹா மீம் முஸ்தஃபா ஒரு கவிதை எழுதியிருந்தார். அதனை சீடன் ஒருவன் தர்வேஷிடம் காட்டினான்.

                        ”பக்ரீத் நெருங்குகிறது

                         குர்பானிக்குத் தயாராகிறது சமூகம்

                         ஆட்டு வியாபாரிகளும்

                         கசாப்புக்கடைக்காரர்களும்

                         பரபரப்பாகிவிட்டனர்

                         ஒன்றுக்கு இரண்டு கத்திகளை

                         மோதினார் கூர்தீட்டி வைத்திருக்கிறார்

                         ஆடோ மாடோ

                         ஒட்டகமோ குர்பானி செய்வதில்

                         எந்தச் சிரமமும் நமக்கில்லை

                         இஸ்மாயிலை பத்திரப்படுத்திவிட்டோமே

                         ஆசை அறுக்காமல் இஸ்மாயிலை

                         குர்பானி கொடுப்பது எளிதல்ல

                         இஸ்மாயிலை குர்பானி கொடுக்காமல்

                         இபுராஹீமை ஒருபோதும்

                         நம்மால் கண்டடைய முடியாது.”

            கவிதையை வாசித்து ரசித்த தர்வேஷின் உதடுகள் புன்முறுவல் பூத்தன.

            ”அருமையாக எழுதியிருக்கிறார். ஆனால், இதில் ஓர் இடத்தில் சிறு பிழை உள்ளது. அதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் விளக்கிக் கூற ஆசைப்படுகிறேன்.”

            ”சொல்லுங்கள் குருவே” என்றது சீடர் குழாம்.

            ”இஸ்மாயிலை நீங்களே குர்பானி கொடுக்க முடியாது,” என்றார் தர்வேஷ்.

            ”இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள் குருவே” என்றனர் சீடர்கள்.



            ”அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே அறுத்துக் கொண்டாலும் அது தற்கொலைதான். தற்கொலை பெரும்பாவம் அல்லவா?

            ”ராபர்ட் ஃப்ரேஜர் அல்-ஜர்ராஹி என்பவர் இதற்கு ஓர் உவமை சொல்லியிருக்கிறார். ‘சிறு சிறு காயங்களுக்கு நீங்களே மருத்துவம் செய்து கொள்ள முடியும். ஆனால், மயக்க நிலை தேவைப்படும் அறுவை சிகிச்சையை உங்களுக்கு நீங்களே செய்துகொள்ள முடியாது’ என்கிறார். ஆம், நீங்களே ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரியே! அதனால்தான் பிறப்பிலேயே விலாயத் என்னும் இறைஞானம் பெற்றிருந்த முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் தனக்கு ஒரு குருவைத் தேடி அவரிடம் தன்னை ஒப்படைத்தார்கள். உள்ளத்தை சிறு சிறு பாவ அழுக்குகளை விட்டும் நீ தூய்மை ஆக்கலாம். அப்படிச் செய்தால் நீ சரணடைய வேண்டிய குருவை அல்லாஹ் உனக்குக் காட்டுவான். ‘ஆசை அறுக்காமல் இஸ்மாயிலை / குர்பானி கொடுப்பது எளிதல்ல’ என்னும் வரிகள் இதற்குப் பொருத்தமாக உள்ளன. ஆனால் அடுத்து வரும் வரிகள் சரியாக இல்லை.

            ”கவிஞர் சொல்கிறார்: இஸ்மாயிலை குர்பானி கொடுக்காமல் / இபுராஹீமை ஒருபோதும் / நம்மால் கண்டடைய முடியாது. இஸ்மாயிலை யார் குர்பானி கொடுப்பது? இப்றாஹீம் நபிதான்! இப்றாஹீமைக் கண்டடையாமல் இஸ்மாயிலைக் குர்பானி கொடுக்க முடியாது என்பதே சரி. இப்றாஹீமைக் கண்டடையுங்கள். அவர் உங்கள் இஸ்மாயிலைக் குர்பானி கொடுப்பார்!

            ”இஸ்மாயில் என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது ஒருவரின் தன்முனைப்பைத்தான் (நஃப்ஸ்). ஆசாபாசங்கள் நிரம்பிய மனம் அபூஜஹலாகவும் அபூலஹபாகவும் ஃபிர்அவ்னாகவும் நம்ரூதாகவும் இருக்கிறது. ஆசாபாசங்களை அகற்றித் தூய்மை ஆகிவிட்ட மனம் இஸ்மாயில் ஆகிவிட்டது. அது தியாகத்துக்குத் தயாராகிவிடுகிறது. ஆனால் அதுவே தன்னை அறுத்துக்கொள்ள முடியாது.

             ”இப்றாஹீம் நபியின் செயலைச் செய்பவர் குரு; இஸ்மாயில் நபியின் செயலைச் செய்பவர் சீடர்” என்றார் தர்வேஷ்.

 

 


1 comment:

  1. "‘சிறு சிறு காயங்களுக்கு நீங்களே மருத்துவம் செய்து கொள்ள முடியும். ஆனால், மயக்க நிலை தேவைப்படும் அறுவை சிகிச்சையை உங்களுக்கு நீங்களே செய்துகொள்ள முடியாது’ என்கிறார். ஆம், நீங்களே ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரியே! அதனால்தான் பிறப்பிலேயே விலாயத் என்னும் இறைஞானம் பெற்றிருந்த முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் தனக்கு ஒரு குருவைத் தேடி அவரிடம் தன்னை ஒப்படைத்தார்கள்." அருமை... குருவின் தேவைக்கு நல்ல உதாரணம்

    ReplyDelete