Saturday, March 9, 2024

ஏகத்துவம் : ஒரு ஸூஃபியின் உரை - 3

 

(10 ஏப்ரில் 2004, அல்-ஜாமிஆ மஸ்ஜித், கிளேர்மாண்ட், கேப் டவுன், தென் ஆப்ரிகா)

 

அப்துல் காதிர் அஸ்-ஸூஃபி (அயான் தல்லாஸ்)

            தனது இபாதத்தில் முஃமின் ஒருவர் பேண வேண்டிய அதபு பற்றிய பொருண்மையில் நாம் ஆரம்பித்தோம். அதையே இப்போது தொடரப் போகிறேன். அதற்கு என்றும் நீண்டு கொண்டிருக்கும் பாதை ஒன்று உண்டு. இது அதில் ஒரு துண்டு. மேலும், இன் ஷா அல்லாஹ், நாம் ஒரு பகுதியில் நிறுத்தப் போகிறோம். அது முரணான ஒரு பகுதி, ஆனால் குழப்பமானது அல்ல. அதே சமயம் அடுத்த வாரத்துக்கான பொருண்மையையும் நான் சற்று அறிமுகம் பண்ணி வைக்க வேண்டும். இல்லை என்றால் இதுதான் முழுக்கதை என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள். இப்போது நாம் மிகத் தீவிரமான, ஆழமான விடயத்துக்குள் போகிறோம். எனவே, தயவு செய்து அசையாமல் அமர்ந்து உன்னிப்பாக கவனிக்க முயற்சி பண்ணுங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கைகளை மடக்கி வையுங்கள். அல்லது குர்’ஆனைப் பாருங்கள்.

            இப்போது நாம் அல்லாஹ்வை படைப்பாளன் என்னும் கோணத்திலும், அடுத்து அவனது படைப்பான சிருஷ்டிகளையும் பார்க்கப் போகிறோம். படைப்பாளன் என்னும் நிலையில் அவனது ஆற்றலில் அல்லாஹ்வை நாம் பார்க்கிறோம். எனவே நாம் சூரத்துல் ஹதீத் (57:1-3, மற்றும் 6) திருவசனங்களைப் பார்க்கிறோம்.

அருளாளனும் அன்பாளனும் ஆன அல்லாஹ்வின் பெயரால்…

வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும்

அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் எல்லாம் வல்லோன், பேரறிவன்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது.

அவனே உயிரளிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான்;

அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையோன்;

அவனே ஆதியும் அந்தமும் புறமும் அகமும்.

மேலும், அவன் அனைத்தைக் கொண்டும் அறிவுடையோன்.

அப்புறம் கடைசி ஆயத் (திருவசனம்) ஆவது:

அவனே இரவை பகலினுள் நுழைக்கிறான்;

மேலும், பகலை இரவினுள் நுழைக்கிறான்.

மேலும், அவன் நெஞ்சங்களில் உள்ளதை அறிந்தவன்.

            இந்தத் திருவசனங்களில் நாம் அல்லாஹ்வைப் படைப்பாளனாக அறியத் தொடங்குகிறோம். “வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் எல்லாம் வல்லோன், பேரறிவன்.”  முதல் விடயம், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. இது ஸூஃபிகளும் சாலிஹூன்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக புரிந்து வைத்திருக்கும் ஒரு விடயமாகும், விஞ்ஞானிகள் கடந்த ஒரு நூற்றாண்டில் தாமதமாகக் கண்டறிந்துள்ள ஒன்றாகும் – அதாவது வானங்கள் மற்றும் பூமியில் உள்ள பொருட்கள் எல்லாம் அசைவற்றும் உயிரற்றும் இல்லை. அனைத்தும் உயிர்ப்புடன் உள்ளன. அனைத்தும் அசைகின்றன. இந்த அசைவே அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வைத் துதிப்பதாகும்.

வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும்.

            வானங்கள் என்பது “சமாவாத்தி”. இது மறைவில் உள்ளவற்றையும் குறிக்கும், அதாவது, அல்லாஹ்வைத் துதிப்பதற்காக உள்ளமையின் தளத்திற்கு இனி வரப் போகின்றவற்றை. வேறு விதத்தில் சொல்வதெனில், படைக்கப்பட்ட உலகிற்குள் தோன்றி வந்திராத வடிவங்கள் கூட அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வைத் துதித்துக் கொண்டுள்ளன.

வானங்கள் மற்றும் பூமியின் அரசாட்சி

அதாவது, மறைவுலகம் மற்றும் கட்புல உலகம் ஆகியவற்றின் அரசாட்சி அவனுக்கே உரியது.

அவனே வாழ்வளிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான்.

            உயிர் அளிப்பதும் மரணிக்கச் செய்வதும் இந்தப் படைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாகும். பிறப்புக்கும் இறப்புக்கும், உள்ளமைக்கு வருவதும் வெளியேறிப் போவதும் என்பவற்றின் இடைப்பட்ட காலக் கட்டத்தில் என்ன நடக்கிறது என்பது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் சக்திக்கு உட்பட்டதாகும். அவனின் செயற்பாடே உயிரூட்டுகிறது, அதுவே அதனை நிறுத்தவும் செய்கிறது. இது, உயிரின வடிவங்கள் முழுமையும் அல்லாஹ்வின் சக்திக்குக் கட்டுப்பட்டுள்ளன என்பதையும் உணர்த்துகிறது.

            படைப்பு என்பது நிலையான ஒன்று என்பதும் அதனுள் மனிதன் நுண்ணறிவுடன் வருகிறான், எனவே அவன் குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்வதற்குச் சுதந்திரம் பெற்றவன் என்னும் கருதுகோளானது குஃப்ர் என்னும் நிராகரிப்பின் ஒரு பகுதி என்பதை நீங்கள் நினைவு வைக்க வேண்டும். முஸ்லிம்களின் புரிதல் என்னவென்றால், அல்லாஹ் படைப்புக்களைப் படைப்போன், இதன் பொருள் என்னவெனில் மனிதனின் செயல்களும் மனிதனது இருப்பின் அம்சங்களே ஆகும். மனிதனை அவனின் செயல்களை விட்டு நீங்கள் பிரிக்க முடியாது. அந்தக் காலக்கட்டத்தில் மனிதன் செய்யும் காரியங்கள் எல்லாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் கட்டளைக்குக் கீழே உள்ளவையாகும்.



                                     அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

            இதன் அர்த்தம், அவனே அவற்றைச் செயற்படுத்துவோன் என்பதாகும். சக்தி என்பது தன்னிச்சையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ‘கட்டற்ற மூலப் பொருட்களின்” வழியில் ஏதொரு மந்திர சக்தி குறுக்கிடுவதும் திடீரென்று அவற்றின் மீது ஒரு தெய்வீக ஆற்றல் குதிக்கும் என்பதும் அல்ல. அவற்றின் மீதான ஆற்றல் என்பது அவனின் ஆற்றலைக் கொண்டு அவை செய்பவற்றை அவை செய்ய அனுமதிப்பதாகும். இதனைப் புரிந்து கொள்வது முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமாகும்.


அவனே ஆதியும் அந்தமும் புறமும் அகமும்.

மேலும், அவன் அனைத்தைக் கொண்டும் அறிவுடையோன்.

            இது ஸூஃபிகளுக்கு மிகவும் முக்கியமான ஆயத் ஆகும். இது தன்னுள் திறப்புக்களை (ஃபாத்திஹா) கொண்டுள்ள ஒன்றாகும். ஆரிஃப் ஒருவருக்கு இந்தத் திருவசனத்தில் திறப்புகள் – ஃபாத்திஹா – உள்ளன. மவ்லாயீ அல்-அறபி அத்-தர்க்கவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் அல்லாஹ்வுடன் தனது தவ்ஹீதை அடைந்ததை விளக்குகிறார்கள்: அவர்கள் ஒருமுறை ஃகல்வத் (தனிமை) நிலையில் இருந்தபோது குரல் ஒன்று இந்தத் திருவசனத்தை ஓதுவதைக் கேட்டார்கள். அப்போது அவர்கள் சொன்னார்கள்: ‘அவனேதான் ஆதியும் அந்தமும் என்பது எனக்குப் புரிகிறது, அவனேதான் அந்தரங்கமானவன் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அவனேதான் வெளிப்படையானவன் என்பதை எப்படி விளங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.’ அதாவது, அல்லாஹ் அவனுடன் இணை வைக்கப்படக்கடிய அனைத்தை விட்டும் அப்பாலானவன், மேலானவன் என்பதையே முறைப்படி அலிம் ஆன அவர் சுட்டிக் காட்டினார். ’அவன் அதற்கு வேறு ஏதேனும் அர்த்தம் கொண்டிருந்தால் அதைச் சொல்லியிருப்பான்’ என்று அந்தக் குரல் சொல்லிற்று. அவன் அகமானவன் மட்டும் அல்லன், புறமானவனும் அவனே என்னும் இந்த ஊர்ஜிதம்தான் அவருக்கு தவ்ஹீதின் உணர்வை உண்டாக்கி அவரை இவ்வுலகப் பிரக்ஞையை விட்டும் விடுதலை செய்தது.

            அவனுடன் தொடர்புறுத்திப் பார்க்கக் கூடிய அனைத்தையும் விட்டு அவனை மேலுயர்த்துகின்ற இந்த அம்சத்தை நாம் நோக்கும் அதே வேளை, அல்லாஹ் நமக்குச் சொல்கின்ற இந்தத் திருவசனத்தைக் கொண்டு – அதாவது, ஆதியும் அந்தமும் புறமும் அகமும் அவனே என்பதைக் கொண்டு - அல்லாஹ்வின் தன்மை பற்றி நாம் சொல்லக்கூடிய இந்த ஒரு விஷயத்திற்கு நாம் திரும்பி வந்திருக்கிறோம்.

அவனே பகலினுள் இரவை நுழைக்கிறான்,

மேலும் இரவினுள் பகலை நுழைக்கிறான்

நெஞ்சகங்களில் இருப்பதை நன்கறிந்தோன் அவனே

(குர் ஆன் 57:6)

            அல்லாஹ் அனைத்துப் படைப்புக்களையும் விட்டு மேலானவன் என்பதையும் அனைத்துப் படைப்புக்களின் மீதும் ஆற்றல் உள்ளவன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் அதே வேளை, இரவும் பகலும் ஆன பிரபஞ்ச நிகழ்வுகளுக்கான எஜமானாக இருக்கும் ஒருவன் அவன் என்பதையும் நாம் கண்டறிய ஆரம்பிக்கிறோம். அதாவது, விண்மீன்கள், சூரியன், சந்திரன் ஆகிய அனைத்துப் படைப்புக்களின் இயற்கையை அவனே ஆள்கிறான்.

நெஞ்சகங்களில் இருப்பதை நன்கறிந்தோன் அவனே.

            ஸுதூர் என்னும் அறபிச் சொல்லுக்கு “நெஞ்சங்கள்” என்று பொருள். ஆனால் இங்கே அதனை “உள்ளங்கள்” என்று அர்த்தப்படுவதே சரியாக இருக்கும். ஏனெனில் மனிதப் படைப்பின் உள்ளே இருப்பது என்ன என்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான் என்று அது சொல்கிறது. மனிதப் படைப்பின் உள்ளே செயலுக்கான துடிப்பு உள்ளது, காரியங்களை நிகழச் செய்யும் பொருட்டு, காரியங்களைச் செய்யும் பொருட்டு அசைவுக்கான விசை உள்ளது. இது, கோபமாக இருப்பது அல்லது கோபமற்று இருப்பது போன்ற உணர்ச்சி நிலையன்று. ”நெஞ்சகங்களில் உள்ளதை அவன் நன்கு அறிகிறான்”, உள்ளம் துடிப்பால் அசைகிறது. உள்ளத்தைக் குறிக்கும் “கல்பு” என்னும் சொல் “க-ல-ப” என்னும் வேரிலிருந்து உண்டாகிறது. அதற்கு, புரளுதல், வடிவம் மாறுதல், மாற்றம் அடைதல் ஆகிய அர்த்தங்கள் உண்டு. எனவே, மனிதனின் மைய உறுப்பே அதில் பொருத்தப்பட்டுள்ள தெய்வீகக் கிளர்ச்சியின்படி அசைவில்தான் இருக்கிறது.

            எனவே, அல்லாஹ் அனைத்தை விட்டும் அப்பாலானவன், அவனே அனைத்தையும் படைத்தவன் என்பதுடன், மனிதனின் நெஞ்சகங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவன் என்பதும் சேர்ந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

            இப்போது நாம் சூற யாசீன் மீது கவனம் செலுத்துவோம். படைப்பினங்களை அவதானிக்க வேண்டிய ஒரு புள்ளிக்கு இப்போது நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். ஏனென்றால், அல்லாஹ் தனது படைப்புக்களுடன் எவ்வாறு இருக்கிறான் என்ற இயல்பை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது எளிய விஷயமல்ல. அதே சமயம் இது சிக்கலானதும் அல்ல. நீங்கள் இதை புரிந்துகொள்ளும் பார்வை கொண்டு பார்க்க வேண்டும், அவ்வளவுதான். ”இந்த விஷயம் ஒருபோதும் தர்க்கத்தால் தீர்க்கப்பட முடியாது” என்றூ இந்தியாவின் மாபெரும் ஸூஃபிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இது எப்படி என்றால், ஒருவரிடம் நீங்கள் ஒரு விஷயத்தைச் சொல்லி, “அடடே! இப்போ புரியுது,” என்று அவர் சொல்வதைப் போன்றதாகும். அது ஓர் உளவியல் நிகழ்வு அல்ல. ஆனால், ’ஏதோ ஒன்றின் சாராம்சத்தை’ நீங்கள் பார்க்க முடிவதாகும். தவ்ஹீதின் இயற்கையை நீங்கள் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும்.

அவன் எப்பொருளையேனும் நாடினால் அவனின் ஆணை

அதற்கு அவன் “ஆகுக” என்று கூறுவதுதான், அது ஆகின்றது

(36:82)


            இங்கே அல்லாஹ் நம்மை அவனின் ரகசியங்களின் ரகசியத்துக்குள் நேரடியாக மூழ்கடிக்கின்றான். அதை அவன் முஃமினுக்கு மிக வெளிப்படையாகத் திறந்து கொடுக்கிறான். இஸ்லாமில் மர்மங்கள் இல்லை. திறக்கப்பட்டது திறக்கப்பட்டதுதான். அதை உள்ளம் கிரகிக்க முடிகிறதா என்பது வேறு விஷயம்.

            எப்பொருளையேனும் அவன் நாடினால் அதற்கு அல்லாஹ்வின் கட்டளை “ஆகுக” என்று சொல்ல வேண்டியது மட்டுமே. குன் ஃப-யகூன் – அது ஆகிவிடுகின்றது. இந்த சொற்றொடரின் அமைப்பு இலக்கண நுட்பம் மிகுந்ததாக உள்ளது. ஏனெனில் “ஃப” என்று இதில் இருப்பது மிகவும் நுட்பமான பயன்பாடு கொண்டதாகும். அது “பிறகு” என்றோ, “அதைத் தொடர்ந்து” என்றோ அர்த்தம் தருவதல்ல. மாறாக நீங்கள் “ஆகு” என்று எழுதி அதன் அருகில் சாய்வுக்கோடு போட்டு அப்புறம் ’ஆகின்றது’ என்று எழுதுவது போன்றது அது. ஆகு/ஆகின்றது. இதில் நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது விசித்திரமானதாகும். குன் ஃப-யகூன் – அல்லாஹ் ஒரு பொருளை நாடினால் அவன் வெறுமனே “ஆகு” என்றூ சொல்கிறான் அது ஆகின்றது. ஒரு கோணத்தில் பார்த்தால் அதில் அர்த்தம் ஏதுமில்லை. நான் அல்லாஹ்விடம் கண்ணியக்குறைவாக இருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் அதைத் திறக்கின்றேன். அஸ்தக்ஃபிருல்லாஹ். இதை அல்லாஹ் அதனிடம் சொல்லி, இது அங்கே இருக்கிறது என்றால், அதில் அர்த்தம் என்ன? அது ஏற்கனவே அங்கிருக்கிறது என்றால் அது ஆக வேண்டும் என்னும் கட்டளை எதற்கு? அது அங்கே இல்லை என்றால், “ஆகு” என்று அதனிடம் எப்படிச் சொல்வான்? இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சாதாரணமான இரண்டு புறநிலைகளுமே பொதுப் புத்தியில் இதனுடன் ஒத்துப் போகவில்லை.

            அல்லாஹ்வின் ஆணை, அம்ர், அவனின் ’இராதா’ என்னும் நாட்டத்தின் மீது வரும்போது, அதாவது அதை அவன் நாடும்போது, அப்பொருள் அவனின் அறிவில் ஏற்கனவே இருக்கிறது என்று அர்த்தம். எனவே அவன் அதற்கு ஆணை இடுகிறான், அது இருப்பில் வருகின்றது. இதனை நாம் ஓர் உருவக உத்தியால் இப்படி விளங்கிக் கொள்ளலாம்: வடிவங்களைப் படைப்பவனிடம் முதலில் வடிவம் பற்றிய ஒரு கருத்து இருக்கிறது. அப்புறம் அவன் அதனை நிகழ வைக்கிறான். இப்போதைக்கும் நாம் இந்தத் தோராயமான உருவகத்தை கவனத்தில் வைப்போம். ஏனெனில், அல்லாஹ் எப்படித் தனது படைப்பைக் கையாள்கிறான் என்பது பற்றி விரைவிலேயே இன்னும் அதிக அதிர்ச்சி தரக்கூடிய உண்மையைக் கண்டறியப் போகிறோம். அது அவனை, ‘மேலே அப்பாலானவன்’ என்பதாக அன்றி ’மிகவும் நெருக்கமானவன்’ என்று காட்டும்.

ஒரு பொருள் படைப்புக்கு வரும் முன் – ’அது அல்லாஹ்வின் சிந்தையில் இருக்கிறது’ என்று நாம் சொல்ல இயலாது, ஏனெனில் அப்படிச் சொல்வதற்கான நேரடி அனுபவ அறிவு நமக்கில்லை – ஆனால் அது அல்லாஹ் (சுப்ஹான்ஹு வ த’ஆலா)வின் அறிவில் இருக்கிறது. அப்பொருள் அவனின் அறிவில் இருக்கிறது. அவன் ஆயத்தமானதும், அதை அவன் நாடியதும், அது இருப்பிற்கு வருகிறது. இப்போது நாம் தவ்ஹீது பற்றிய புரிதலுக்குள் ஒரு காலடி எடுத்து வைத்துள்ளோம்.

            இப்போது நாம் சூரத்துல் மர்யம்-இன் (19:9)-ஆம் திருவசனத்தைப் பார்ப்போம். இப்போது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) கதவுகளைத் திறக்கிறான், ரகசியங்களைக் காட்டுகிறான். உள்ளமையை அவன் எப்படிக் கையாள்கிறான் என்பதை வெளிப்படையாக விளக்குகிறான். நாம் இங்கே ஹுக்மு (கட்டளை) வகையான திருவசனங்களைப் பற்றிப் பேசவில்லை என்பதைக் கவனத்தில் வையுங்கள். தடுக்கப்பட்டவை எவை அனுமதிக்கப்பட்டவை எவை என்று பேசும் திருவசனங்களிடம் நாம் வேறு விதமான ஒழுக்கத்தைப் (அதப்) பேணுவோம். இப்போது, படைப்பாளன் என்னும் அம்சத்தில் மட்டும் அல்லாஹ்வை நோக்குகிறோம்.

அவ்வாறே என்றான்; நும் ரட்சகன் சொன்னான்:

இது எனக்கு மிகவும் எளிதே!

முன்னர் யான் உமைப் படைத்தேன்,

நீ எப்பொருளாயும் இல்லை. (19:9)

            இஃது, ஒரு குழந்தையை அருள்வதைப் பற்றியதாகும். இந்தத் திருவசனத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றிய விரிவான தகவல்களுக்குள் நாம் போகப் போவதில்லை. முதலில், பெற்றோருக்கு அல்லாஹ் வழங்கக்கூடிய பிள்ளைப்பேறு என்னும் அருட்கொடையைப் பற்றி அவன் தன் அடியாரிடம் சொல்கிறான். முதல் பகுதி என்னவென்றால், அந்த அடிமைக்குப் பிள்ளை பாக்கியம் என்பது இனி நடவாத காரியம் என்பது போல் வெளிப்படையில் தோன்றியபோதும், அந்த அடியார் ஸாலிஹூனில் (நல்லடியார்களில்) ஒருவராகவும் மேலான மகான்களில் ஒருவராகவும் இருந்தபடியால், அது அப்படித்தான் ஆகும் என்று அவரிடம் சொல்லப்பட்டபோது அதனை அவர் ஏற்றுக் கொண்டார். அல்லாஹ் தன் அடியாரைக் கையாளும் விதத்தை அவர் ஏற்றுக்கொண்டதுதான், அதுகாறும் அவர் அறியாதிருந்த ஓர் அறிவை அவருக்கு அவன் அருளும் நிலையை உண்டாக்கித் தருகிறது.

நும் ரட்சகன் சொன்னான்:

இது எனக்கு மிகவும் எளிதே!

            ’ரட்சகன்’ (றப்பு) என்பது, அல்லாஹ்வை அவன் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் வடிவங்களுக்கு இடையிலான அனைத்துத் தொடர்புகளையும் படைக்கும் வல்லமை கொண்ட நிலையில் குறிப்பதாகும். இது ருபூபிய்யத் ஆகும் (இச்சொல் றப்பு என்பதில் இருந்து வருகிறது.) ருபூபிய்யத் என்பது வெறுமனே படைப்பினங்களின் வடிவங்களைப் படைப்பதைக் குறிப்பது மட்டுமன்று, அவற்றின் இணைப்பு நிலைகளையும் குறிப்பதாகும், கானகம் ஒன்றில் மரங்களின் உச்சிக் கொப்பு முதல் பூச்சிகள் வதியும் வேர்கள் வரை உள்ள அனைத்து அடுக்குகளையும் போல. இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை, மனித தேசங்களும் மனித இயக்கங்களும் விரிவான புலம் பெயர்வுகளும் ருபூபிய்யத்தின் கீழ் வருவது போல. எனவே,அடியாருக்கு குழந்தையைத் தருவதாக இந்த ரட்சகன் சொல்கிறான். அடுத்து அவன் சொல்கிறான்:

முன்னர் யான் உமைப் படைத்தேன்,

நீ எப்பொருளாயும் இல்லை.

            எனவே, அந்தத் தந்தைக்கு அவன் ‘குன் ஃப-யகூன்’ என்பதன் விளக்கத்தை விரித்துரைக்கிறான்: “நீ எப்பொருளாகவும் இல்லாத போதே, முன்பு நான் உன்னைப் படைத்தேன்.” முதலில் நீ எதுவாகவும் இல்லை. “குன்” (ஆகு) என்னும் கட்டளை வந்தது, நீ ஆகிவிட்டாய். படைக்கப்படுவதற்கு ஒரு ‘நீ’ இருக்கும்படியாக அல்லாஹ் உன்னைப் படைத்தான். குர்’ஆனில் நாம் இன்னொரு விஷயத்தையும் பார்க்கிறோம். அதாவது, உலகைப் படைப்பதற்கு அல்லாஹ் சுப்ஹானஹு வ த’ஆலா அனைத்து மனித உயிர்களையும் தன் முன்னிலைக்கு அழைத்து அவற்றிடம் சொன்னான் (7:172):


நான் உங்கள் ரட்சகனில்லையா?

            இதுதான், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) படைப்புக்களைக் கையாளும் விதம். அது நிகழ்காலத்தில் எப்போதும் இடையறாது, உறையாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வு. காலம் முழுவதும் அவனது ஆற்றலுக்குக் கட்டுப்பட்டது. அது நேரம் என்பதற்கு அப்பாலானது. அது எப்பொருளுடனும் தொடர்புடையது அல்ல.

நாம் சூரத்துல் முல்க் (67:13-14)-ஆம் திருவசனத்தைக் கவனிப்போம்:

நும் பேச்சுக்களை நீவிர் மறைப்பினும் வெளிப்படுத்தினும்,

நெஞ்சகங்களில் இருப்பதை நன்கறிந்தோன் அவனே.

            இங்கே மீண்டும் நாம் இந்த நினைவூட்டலைப் பெறுகிறோம், அதாவது நம் நெஞ்சங்களில் இருப்பது என்ன என்பதை அவன் நன்கு அறிகிறான். இவ்வழிச் செல்ல அல்லது அவ்வழி ஏக, கரந்து கிடக்க அல்லது வெளியாக, இந்த மனித மனம் கொள்ளும் துடிப்பு – இது எல்லாம், அதில் இருப்பது என்ன என்பதை அவன் அறிகிறான். இது அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) அதன் அடியானின் மீது வைத்திருக்கும் முழுமையான அதிகாரம் ஆகும்.

படைத்தவன் அறியமாட்டானா? நிச்சயமாக அவனே

அதிநுட்பமாய் எங்கும் நிறைந்தோன், அனைத்தும் அறிந்தோன்.

            அவனே படைப்பவன். எனவே, அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) சொல்கிறான், “நீ எனது படைப்புதான் என்னும்போது எப்படி எனக்குத் தெரியாமல் போக முடியும்?” அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) தொடர்ச்சியாகத் தனது அடியார்களைப் இந்த ஸ்தம்பிக்காத உறவு நிலையிலேயே இட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் அவன் முஃமின்களை மட்டுமல்லாது, குஃப்பார் (நிராகரிப்போர்)களையும் இடுகிறான். தான் சொன்னபடி நடந்து கொள்வோரையும் அவன் இந்த நிலையில் வைக்கிறான், அதற்கு மாற்றமாக நடந்து கொள்வோரையும் அவன் இந்த நிலையில் வைக்கிறான். அதாவது, ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்த தெய்வீக அறிவுநிலை இருக்கிறது.

            ’படைத்தவன் அறியமாட்டானா?’ அல்லாஹ் முதலில் பிரபஞ்சத்தை, விண்மீன்களையும் உடுக்களையும் கதிர் மண்டிலங்களையும் படைத்தான், அதன் பின்னர் உயிர்கள் வந்தன என்று நீங்கள் எண்ணீவிடக்கூடாது. இது நிராகரிப்பாளரின் புரிதலாகும். முஸ்லிமின் நிலைப்பாடு என்னவென்றால், அல்லாஹ்வுடைய படைப்பின் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச விஸ்வரூபத்துடன், தன் அடியானுடன் அவனுக்கிருக்கும் அந்தரங்கமான தொடர்பும் உள்ளது. அவன் இங்கே வழங்கும் திருநாமங்கள் அல்-லத்தீஃப் மற்றும் அல்-ஃகபீர் ஆகும். இவ்விரண்டு திருநாமங்களையும் ஹஜ்ஜு அப்துல் ஹக்கு பெவ்லி அவர்கள், முறையே “நிராமயம்” (எங்கும் பரவியோன்) மற்றும் “அனைத்தும் அறிந்தோன்” என்றும் பீடுற அர்த்தப் படுத்தியிருக்கிறார். மேலும். லத்தீஃப் என்பதற்கு நளினம் மற்றும் வாஞ்சை ஆகிய அர்த்தங்களும் உள்ளன என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே, அனைத்திலும் தங்கு தடையின்றிப் பரவிச் செல்லுதல் என்பது எல்லையற்ற அன்புடனும் நெருக்கத்துடனும் ஆகும்.  ஃகபீர் என்பது முழுமையான விழிப்புணர்வுடன் கூடிய அறிதல் ஆகும். இது அனைத்திலும் எப்போதும் நிகழ்கிறது. இப்படித்தான் நாம் எல்லா நேரங்களிலும் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)-வை விளங்கிக் கொள்ள வேண்டும்.

            ஓர் உயிரோட்டமான சொற்றொடருக்காக மீண்டும் சூரத்துல் யாசீன் (36:79_-ஐப் பார்ப்போம்:

அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தோன்.

            ”அல்லாஹு அக்பர்” என்று நீ சொல்லும்போது நீ வணங்கும் ஒருவன் – உன் தக்பீர் முழக்கத்தின் அந்த ‘அக்பர்’ எப்படிப்பட்டவன் என்றால் ஒவ்வொரு படைப்பினத்தைப் பற்றியும் முழுமையான அறிவு கொண்டவன். முழுமையான அறிவு என்பது வெறுமனே உயிரியல் படைப்பை மட்டும் குறிப்பதன்று. அனால் அதிலிருக்கும் அனைத்தையும் குறிக்கும், அதன் முழு வரலாற்றைக் குறிக்கும், இவ்வுலகில் அது வந்த கணத்தில் இருந்து அதன் மரணத் தருணம் வரை அனைத்தையும். அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) உன்னை உன் பிறப்பிலும் இறப்பிலும் அறிந்திருக்கிறான். ஒவ்வொரு படைப்பின் முழுமையான அறிவும் தன்னிடம் இருப்பதாக அல்லாஹ் சொல்லும்போது அவன் இதையே குறிக்கிறான்.

            அல்லாஹ்வின் வல்லமையை, தெய்வீக இருப்பின் இந்த எதார்த்தத்தை உணர்வது என்பது காலம் என்பதன் தொடக்கத்தில் இருந்து அதன் முடிவு வரை அனைத்துப் படைப்புக்களையும் பற்றிய முழுமையான அறிவை உணர்வதாகும். அது ஒற்றை நிகழ்வு. இந்நிகழ்வே அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் அறிவு.

            முதகல்லிமூன் என்னும் குழுவினர் இதனை எப்படிப் பார்க்கின்றனர் என்று இப்போது காண்போம்.

            நம் முன் இருக்கும் விஷயம் என்னவெனில், படைப்பு என்பது மறைவிலேயே அல்லாஹ்வால் அறியப்பட்டது, ’குன்’ என்னும் ஆக்ஞை அதனை இப்புலனுலகுக்குக் கொண்டு வருகிறது என்பதே. படைப்புக்கள் அவை படைக்கப்படும் முன் அல்லாஹ்வின் அறிவில் இருக்கும் அந்த வடிவத்தை ”அறியப்பட்டது” (மஃ’லூம்) என்று முதகல்லிமூன் குழுவினர் அழைக்கின்றனர். அவை அல்லாஹவால் அறியப்பட்டவை. ஸூஃபிகள் அவற்றுக்கு ஒரு விசேஷமான கலைச்சொல் வைத்திருக்கின்றனர். ஏனெனில் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். எனவே, குர்ஆனின் திருவசனங்களின் அடிப்படையில் ஸூஃபிகள் கலைச்சொற்களை உருவாக்கியுள்ளனர். இதனை அவர்கள் “அல்-அஃ’யான் அஸ்-ஸாபி(த்)தா” என்று அழைக்கின்றனர். இதனை மொழிபெயர்ப்பது கடினம். எனினும், “மூல வடிவங்கள்” / “மூலப்படிவங்கள்” என்பது இதன் தோராயமான அர்த்தம். கருத்து என்னும் சொல்லினைக் கையாள எனக்கு விருப்பமில்லை, அது அவ்வளவு சரியில்லை, என்றாலும் சொல்கிறேன், அல்-அஃயான் அஸ்-ஸாபி(த்)தா என்பது ஒரு பொருளை ‘குன்’ என்னும் கட்டளை இருப்புக்குக் கொண்டு வரும் முன்னர் அவனின் அறிவில் அதன் ’வடிவம்’ இருப்பதாகும். ஸூஃபிகள் அதனை மூல வடிவம் (source-form) என்கின்றனர். அது, மூலத்தில் இருந்து வந்துள்ள ஒரு வடிவம் ஆகும் (a form from the Source).

            தவ்ஹீது பற்றிய நமது புரிதலின் இந்தக் கட்டத்தில் நாம் ஒரு தெளிவான பிரிவைச் செய்ய வேண்டும். இல்லை எனில் நாம் தவ்ஹீதுக்கு வெளியே சென்று விடுவோம். இங்கே நாம் ‘அறியப்பட்டது’ (மஃ’லூம்) – அதாவது, படைப்புக்கு முன், ‘குன்’ என்னும் கட்டளைக்கு முன், இருக்கின்ற ஐனுஸ் ஸாபி(த்)தா [அல்-அஃயான் அஸ்-ஸாபி(த்)தா என்பது இதன் பன்மை] என்பதற்கும், அறிந்தவன் / அறிஞன் (அலீம்) ஆன அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அறியப்பட்டது (மஃ’லூம்) என்பதற்கு ஒரு வடிவம், எல்லை, நிர்ணயம், தனிநிலை, குறிப்பு நிலை ஆகியவை உள்ளன. அறிபவனோ எல்லை மற்றும் நிர்ணயம் ஆகிய கட்டுகளற்றவன், அவன் ஒரு வடிவம் அல்லன். அறியப்பட்டது என்பது அறிவனின் அறீவில் மட்டுமே தரிப்பட்டிருக்கும். ’குன்’ என்பது வரும்வரை அதற்கு சுயமான உள்ளமை, இருத்தல் கிடையாது. அறிபவனோ முழுமையான் சுயநிலையில் தன்னில் இருக்கிறான். அவன் எதனையும் சார்ந்திருப்பவன் அல்லன். சூரத்துல் இஃக்லாஸ் [குர்’ஆனின் 112-ஆம் அத்தியாயம்]:


அருளாளனும் அன்பாளனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…


கூறுக: அவன் அல்லாஹ் ஏகன்;

அல்லாஹ் அனைத்தையும் பேணும் நித்தியன்;

பெற்றவனல்லன், பெறப்பட்டவனல்லன்;

எதுவொன்றும் அவனைப் போல் ஆகவில்லை.

 

            அறியப்பட்டதற்கு (மஃலூம்) பண்புகள் (ஸிஃபாத்) இல்லை; ஆனால், பண்புகளை ஏற்கும் தன்மை அதன் வடிவமைப்பிற்கு உள்ளது. அறிபவன் (அல்-அலீம்)தான் இந்த மூலப் பண்புகளைக் கொண்டிருப்பவன். அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா) இந்த தெய்வீகப் பண்புகளை உடையவன்: வாழ்வு (ஹயாத்), அறிவு (இல்ம்), நாட்டம் (இராதா), ஆற்றல் (குத்ரத்), கேள்வி (சமாஅத்), பார்வை (பஸாரத்), மற்றும் பேச்சு (கலாம்). எனவே அவன் “குன் ஃப-யகூன்” என்னும் ஆணையை இடுகின்றபோது, தன் வாழ்வின், தன் அறிவின், தன் நாட்டத்தின், தன் ஆற்றலின், தன் கேள்வியின், தன் பார்வையின், தன் பேச்சின் ஒரு துளியை அருள்கிறான். அவற்றை நாம் இரவல் பெறப்பட்ட பண்புகள் என்று சொல்கிறோம். ஏனெனில அவை நிகழ்-நேரத்தில் உள்ளவை, ஆனால் அல்லஹ்வோ கால நேரப் பரிமாணங்களுக்கு அப்பாலானவன். ஆனால், வடிவமானது இருப்புக்கு வருகின்றபோது அது தன்னிடம் எல்லைக்குட்பட்ட ‘இரவல்’ பெற அதற்கு அவன் அருளுகிறான். இந்த ஆற்றல்களில் அல்லது பண்புகளில் மனிதப் படைப்பு ஒருவித இரவல் நிலையில் இருக்கிறது, அல்லது வாடகைக்கு இருக்கிறது. ஏனெனில் அவற்றை ஏற்கும் தன்மையுடன் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

            அறியப்பட்ட படிவங்கள் (மஃ’லூமாத்) இருத்தலுக்கு வரும் முன்பு வெற்றுப் பாத்திரங்கள் போன்றுள்ளன – இடப்படுவதை ஏற்கத் தயாராக. அப்போது அவற்றுக்கு உள்ளமை (வஜூத்) இல்லை, பண்புகள் (ஸிஃபாத்) இல்லை, செயற்பாடு (ஃபி’அல்) இல்லை. “குன்” என்பது வரும்போது அவற்றுக்கு இவை எல்லாம் அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)விடம் இருந்து கிடைக்கின்றன. ஏனெனில் அறிபவனுக்கு செயற்பாடு இருக்கிறது. அவன் செயற்படுவோனாக இருக்கிறான். அவன் வினைஞன். படைப்புக்களின் செயல்கள் யாவும் செயற்படுவோனிடமிருந்தே வருகின்றன. அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் அருட்கொடையாகவே அன்றி படைப்புக்களில் எச்செயலும் இல்லை. அவை ‘குன் ஃப-யகூன்’ என்னும் ஆணையிலிருந்து வருகின்றன. ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியது. நீர் தெளிப்பது போல், வடிவங்களை உயிரூட்டிக் கொண்டு வருவதற்காக அதனை அவன் அவற்றுக்கு அருள்கிறான்.

            இவ்வாறாக, அறியப்பட்டதற்கு அறிஞனுடன், வடிவங்களுக்கு அவற்றைப் படைப்பவனுடன் இருக்கின்ற தொடர்பு என்பது அவை அவனுக்கு வேறுபட்டவை என்று நாம் சொல்ல இயல்கிறது. வடிவங்கள் அனைத்தும் அல்லாஹ் அல்லாதன ஆகும். அவை வேறு (கைரு) ஆகும். அவை மா-சிவல்லாஹ் ஆகும். இவ்வுலகில், பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்துமே அல்லாஹ் அல்லாதவையே: இப்போது நம்மிடம் இரண்டு இருக்கின்றன. இது விசித்தரமாகத் தெரியலாம். ஆனால் தவ்ஹீதை வந்தடைவதற்கு நாம் மிக அழுத்தமான இரண்டை வலியுறுத்தியாக வேண்டும். இல்லை எனில் அதை நாம் சரியானபடி புரிந்து கொள்ள முடியாது. நாம் இணைவைப்பவர்கள் (முஷ்ரிக்) போன்றோ நிராகரிப்பாளர்கள் (குஃப்பார்) போன்றோ ஆகிவிடுவோம்.

            இப்போது சூரா ஆல இம்ரான் (3:28 & 30) திருவசனங்களைப் பார்ப்போம். இது இருமுறை வரும் ஒரு வாசகம் ஆகும்:

அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு அச்சமூட்டுகிறான்.

            ஹஜ்ஜு அப்துல் ஹக்கு அவர்கள் இவ்விரு திருவசனங்களில் காணப்படும் “யுஹத்திருக்கும்” என்னும் சொல்லுக்கு மிக ஞனாத்துடன் வேறொரு கோணத்தில் விளக்கமளித்திருக்கிறார். ஒரு திருவசனத்தில், தன்னை அஞ்சுமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகிறான். மற்றொரு திருவசனத்தில் தன்னைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகிறான். அல்லாஹ் இதன் மூலம் என்ன சொல்கிறான்? அவனின் சுயத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் முயல வேண்டாம் என்று சொல்கிறான். அல்லாஹ்வின் செயல்களை (அஃப்’ஆல்) நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அல்லாஹ்வின் பண்புகளை (ஸிஃபாத்) நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இந்த நுட்பமான விஷயங்கள் எதிலிருந்து வெளியாகின்றனவோ அந்த சுயத்திற்கு (ஜாத்) நாம் வரும்போது – முயற்சி பண்ண வேண்டாம். அஞ்சுங்கள். எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் உங்கள் அறிவு அதனுள் செல்லாது.

            மேலும், இத்தகைய இறை வெளிப்பாடுகளின் காரணமாக ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்களும் பிரபலமான ஹதீஸ் ஒன்றில், முதகல்லிமூனின் சொல்லாடலில் சொல்வதெனில், அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் “ஜாத்” (சுயம்) பற்றி ஆராய வேண்டாம் என்று எச்சரித்தார்கள். இமாம் கஜ்ஜாலி அவர்கள் செயல்களின் (அஃப்’ஆல்) நிகழ்முறைகளை எல்லாம் ஆழ்ந்து நோக்கி அதன்வழி சுயத்தைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் முயல்கிறார்கள். செயல்களோ பண்புகளைச் சார்ந்துள்ளன. அசைவதற்கான ஆற்றல் இல்லை எனில் நீங்கள் ஒரு பொருளை உணர்ந்து கொள்ள முடியாது. அது போல் பிற பண்புகளும் அவசியமானவை.  ஆனால், நீங்கள் செயலிலிருந்து அது நிகழக் காரணமாயுள்ள பண்புகளின் (ஸிஃபாத்) பக்கம் செல்லும்போது, “இந்தப் பண்புகள் எங்கிருந்து வருகின்றன?” என்னும் வினா எழுகிறது. அப்போது நீங்கள் சுயத்தை எட்டுகிறீர்கள். இந்த எல்லையைத் தாண்டி மேலும் செல்ல முடியுமா என்று இமாம் கஜ்ஜாலி அவர்கள் மிக அழகாக முயன்று பார்க்கிறார்கள். ஆனால் அங்கேயே நின்று விடுகிறார்கள். இதற்கு மேல் செல்ல முடியாது என்று சொல்லி விடுகிறார்கள். அதுவரை மட்டுமே நீங்கள் செல்ல முடியும்.

            எனவே, முதகல்லிமூன் மற்றும் உலமா’ ஆகியோரின் சொல்லாடலில் நாம் சொல்வோம், அல்லாஹ் ஃகாலிக் (படைப்போன்) ஆக இருக்கிறான்; படைப்புகள் மஃக்லூக் (படைக்கப்பட்டவை) ஆக உள்ளன. அல்லாஹ் றப்பு (புரப்போன்) ஆக இருக்கிறான்; படைப்புகள் எல்லாம் மர்பூப் (புரக்கப்பட்டவை) ஆக உள்ளன. அல்லாஹ் இலாஹ் (தெய்வமாக) இருக்கிறான், அவனே வணங்கப்படுகிறான். படைப்புக்கள் எல்லாம் மலூஹ் – வணங்குவோர் – ஆக உள்ளன. அல்லாஹ் மாலிக் (ஆள்வோன்) ஆக இருக்கிறான். அவனே எஜமான், அனைத்து விதிகளின் அதிபதி. அடியார்கள் அனைவரும் மம்லூக் (ஆளப்படுவோர்) ஆக உள்ளனர். ஸூஃபிகள் மிக அழகாகச் சொல்கிறார்கள்:

            ”ஹக்கு (சத்தியனான இறைவன்) உள்ளமையாக இருக்கிறான்; அப்து (அடியான்) இன்மை ஆக இருக்கிறான். எதார்த்தம் (ஹகீக்கத்) மாற்றம் அடைவது (தபத்துல்) சாத்தியமில்லை. எனவே ஹக்கு ஹக்குதான், அப்து அப்துதான். இறைவன் இறைவன்தான், அடியான் அடியான்தான்.

            இது மிகத் தெளிவாகக் காட்டுகிறது, ஸூஃபிகள் எல்லாம் இறைவன்தான் படைப்பு என்று சொல்கின்ற ’அனைத்திறை வாதத்தினர்’ (pantheists) என்று கூறும் இந்தக் கீழைத்தேயவாத ஷைத்தான்கள் எவரும் ஸூஃபிகள் என்ன போதிக்கிறார்கள் என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் “வஹ்தத்துல் உஜூது” என்று பேசுகிறார்கள். ஆனால் இப்னுல் அறபியின் நானூறு நூல்களில் ஓரிடத்தில் கூட அந்தச் சொல் வரவே இல்லை. அவர்கள் அதனைப் பேசும்போது அல்லாஹ்தான் பிரபஞ்சமாக இருக்கிறான் என்று சொல்கின்றனர். ஆனால் அடியான் அடியான்தான், ரட்சகன் ரட்சகன்தான். ஷைகு இப்னுல் அறபி சொல்கிறார்கள்: “அடிமைத்தனத்திற்கு ஓர் எல்லை கிடையாது. படைப்பு என்பதை விட்டுப் படைத்தவன் என்னும் நிலைக்குச் செல்வதற்கான இடைக்கோடு எதுவுமில்லை. படைப்பவனான இறைவன் தனது விசால நிலையில் தான் ஓர் அடியானாக இருப்பதை அனுமதிப்பான் என்பதற்கு இடமே இல்லை. அவன் தன் ஞானத்தால் இதனை நிர்ணயித்திருக்கிறான், இப்படித்தான் அவன் படைப்பை அமைத்திருக்கிறான்.”

            நாம் இப்போது நன்கு அறியப்பட்ட, சூரத்துல் ஃபாத்திர் (35:15)-ஆம் திருவசனத்தை நோக்குவோம்:

மனிதர்களே! அல்லாஹ்விடம் நீவிர் யாவரும் வறியவர்களே!

ஆனால் அல்லாஹ் - நிறை செல்வனும் புகழுக்குரியோனும் அவனே!

            நான் சற்று நேரத்துக்கு முன் சொன்ன கருத்துக்கான வாசகம் இது. படைப்பு என்பது முற்றிலும் சார்ந்தது, தேவை உள்ளது. அல்லாஹ்வோ முற்றிலும் தனித்தவன், தேவைகள் அற்றவன். அல்லாஹ்வின் பக்கம் அடியான் தேவைப்பட்டவனாக இருக்கும் நிலை என்பதாவது, அவனுடைய வாழ்வு, அறிதல், பார்த்தல், கேட்டல், நாடுதல் அனைத்துக்கும் அல்லாஹ்விடம் தேவையாக இருக்கிறான். ஏனெனில் அவனுக்குத் தேவைப்படும் இந்தப் பண்புகள் அனைத்தும் அல்லாஹ் அவனுக்கு அளிக்கும் அருட்கொடை ஆகும். அடியானுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஆயுட்காலத்தில் இந்தப் பண்புகளை எல்லாம் ஏற்கும் தன்மை உள்ள வடிவமாக அல்லாஹ் அடியானைப் படைத்திருக்கிறான். ஆனால் அடியான் முற்றிலும் சார்ந்தவன் ஆவான், அல்லாஹ் முற்றிலும் தேவையற்றவன் ஆவான். அல்லாஹ்வுக்கு ஒரு படைப்பு இருக்க வேண்டிய தேவை கிடையாது. அதன் ஆயுட்காலத்தில் அதற்கு அவன் தனது பண்புகளை அனுமதிப்பதால் உண்டாகும் அந்தப் படைப்பின் செயற்பாடுகளை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

            இந்தப் புள்ளியில், தஹ்வீத் என்பது இந்த அடிப்படையான இருமை நிலையை வைத்தே இருக்கிறது என்று நாம் சொல்ல வேண்டும். அல்லாஹ் அவனுடன் இணை வைக்கப்படக்குடிய எதனை விட்டும் அப்பாலானவன் மேலானவன். இது ஒருபோதும் மாறாத நிலையாகும். ஆனால், அடுத்து நாம் அறிவின் இன்னொரு புலத்துக்குள் நுழையப் போகிறோம். அது, அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா)வின் நெருக்கம் பற்றி குர்ஆனில் அல்லாஹ் நமக்குத் திறந்து தந்திருக்கும் அறிவாகும். அடியான் தொலைவிலிருக்கும் படைப்பாளனின் வல்லமையை பேரச்சமும் பெருவியப்பும் கொண்டு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதல்ல. ஆனால், பிரபஞ்சம், விண்மீன்கள், உடுக்கள், கோள்கள், ஞாயிறு, திங்கள் மற்றும் ஏனைய படைப்புகள், மற்றும் அவை இருகும் பூமி ஆகிய அனைத்தையும் படைத்தவனான அந்த ஒருவன், அந்த ஏகன் தனக்கு மிக நெருக்கமாக இருக்கிறான் என்பதையும் அவன் உணர்கிறான்.

            நாம் இன்னொரு திருவசனத்தைச் சிந்திப்பது நல்லது என்று நினைக்கிறேன். இல்லை எனில், முஸ்லிம்களுக்குச் சரிப்பட்டு வராத ஒரு அரைகுறையான நிலையில் நான் உங்களை விட்டவன் ஆவேன். சர்வ வல்லமை பெற்ற இறைவனைப் பற்றிப் பேசும் முன் நாம் அடியானில் (அப்து) இருக்கும் ‘அனானிய்யத்’ – நான் என்னும் தன்னுணர்வு – என்பதைப் பார்க்க வேண்டும் – அல்லது நாம் அனைவரும் மனம் தளர்ந்த நிலையில்தான் வீடுகளுக்குத் திரும்புவோம்! இந்தப் பொருண்மையின் வாசலில் நாம் இன்னும் ஒரு காலடி எடுத்து வைப்போம்.

            சூரத்துல் ஹதீத் (57:4) திருவசனத்தை நோக்குங்கள். இது ஆறு நாட்களில் படைப்புகள் உண்டானதைக் குறிக்கிறது. ஆறு நாட்கள் என்பது வெளிரங்கமான பேச்சு வழக்கிலான ஆறு நாட்கள் அல்ல என்பதை நாம் குர்ஆனின் பிற வசனங்களின் வழியாக அறிந்திருக்கிறோம். நிறைய மக்கள் மறந்துவிடுகின்ற ஒன்றை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும் – சூரியனைச் சுற்றும் பாதையில் பூமியை அல்லாஹ் வைக்கும் வரை நாட்கள் என்பது இருக்கவில்லை. முழு அமைப்பும் செய்து முடிக்கப்பட்ட பின்னர்தான் நாட்கள் என்பவை நிகழும். அல்லாஹ்விடம் ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணும் முறையில் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்று இன்னோர் இடத்தில் அல்லாஹ் சொல்லும்போது – அது நமது அறிவுக்கு எட்டாத ஒரு காலக் கதியிலான படைப்புச் செயலைக் குறிக்கிறது. தமது அறியாமையால் குர்ஆனைத் தாக்க விழைவோர் “ஆறு நாட்களா? எங்களுக்கு அதை விட நன்றாகத் தெரியும். நாங்கள் விஞ்ஞானிகள்” என்று கெக்கலிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தவன் அவனே,

பின்னர் அவன் அர்ஷ் (பேராசனம்) மீது அமைந்தான்.

            இங்கே “பேராசனம்” என்பது படைப்பின் வலுப்பத்தைக் காட்டும் பிரபஞ்ச ஆசனம் ஆகும்.

பூமிக்குள் செல்வது என்ன, அதிலிருந்து வெளியாவது என்ன,

வானிலிருந்து இறங்குவது என்ன, அதனிடம் மேலேறுவது என்ன

என்பதை அவன் அறிகிறான்.

            படைப்பு நிகழ்முறையை அவன் முழுமையாக அறிகிறான். அப்புறம், தன் இந்த வல்லமையைப் பறைசாற்றிவிட்டு அல்லாஹ் சொல்கிறான்:

நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்,

நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறான்.

            ”அண்யோன்யத் தொடர்பு” என்று நீங்கள் சொல்லலாம். அது அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் அது ஒரு தொடர்புகூட அல்ல. தொடர்பு என்னும் சொல்லை ஒருவர் அதற்குப் பயன்படுத்த முடியாது. அடியானுடன் அவன் ஓர் அண்யோன்யமான இருப்பில் இருக்கிறான். நீங்கள் எங்கிருந்தபோதும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்க்கிறான்.

            இதனைப் புரிந்துகொண்ட ஒருவர் வேறு விதமான இருத்தலனுபவத்தை அடைகிறார். அல்லாஹ் (சுப்ஹானஹு வ த’ஆலா), சூரத்துல் கஹ்ஃபு (18:24)-ஆம் திருவசனத்தில் சொல்கிறான்:

நீ மறந்துவிடும்போது உன் ரட்சகனை நினைப்பாயாக.

            இது ஏதோ நீ அஸ்ரு தொழுகையை மறந்துவிடுவதோ, இவ்வுல வாழ்வில் துன்யாவின் பொருட்களால் கவனம் திரும்பிவிடுவதோ அல்ல. இது என்ன என்றால், நீ எங்கிருந்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான், உன்னைப் பார்க்கிறான் என்பதை நீ மறந்துவிடும்போது – ஆம், இதை நீ மறந்துவிடும்போது, இதைத்தான் நீ ஞாபகம் கொள்ள வேண்டும். அவன் எவ்வாறு தனது படைப்புடன் இருக்கிறான் – இதைத்தான் நினைவு கூர வேண்டும்.

            சூரத்துல் அஸ்ரு (103:2):

நிச்சயமாக மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.

            மனிதனின் இழப்பு என்ன? இதுதான். அவன் எதை மறக்கிறான்? தான் எங்கிருந்தாலும் அல்லாஹ் தன்னுடன் இருக்கிறான், தன்னைப் பார்க்கிறான் என்பதை. கிழக்கின் மாபெரும் ஸூஃபியான சஹ்லுத் துஸ்தரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பற்றிச் சொல்லி இதை நான் முடிக்கிறேன். அவர்கள் வழமையாக ஓதும் வாசகமாக – விர்து ஆக – ‘விர்துஸ் சஹ்லு’ என்று சொல்லப்படும் இதனை எடுத்துக் கொண்டார்கள்:

அல்லாஹ் என்னுடன் இருக்கிறான்,

அல்லாஹ் என்னைப் பார்க்கிறான்,

அல்லாஹ் என் மீது சாட்சியாக இருக்கிறான்.

            உயர்வான தவ்ஹீதுக்கு வழி அதுவே. ஃபனா ஃபில்லாஹ் என்பதை விரைவில் அடைவதற்கான, அல்லாஹ்வின் இருப்பில் தன்னை அழிப்பதற்கான பாதை அதுவே.


No comments:

Post a Comment