Tuesday, July 19, 2022

கோள்களின் அசைவு

 ரூமியின் ஞான உரைகள் - 3

(மவ்லானா ரூமி அவர்களின் ஞான உரைகளின் தொகுப்பான ஃபீஹி மா ஃபீஹி என்னும் பெருநூலின் தமிழாக்கப் பணி அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அதன் 59-ஆம் உரையில் சோதிடம் பற்றிய ஒரு பேச்சு இருக்கிறது. அதற்கு யான் எழுதிய அடிக்குறிப்பையும் சேர்த்து இங்கே தருகிறேன்.)



”என் கண்களுக்குப் புலப்படும் இந்த பூமியின் மண்டலத்துக்கும் இந்தக் கோளங்களுக்கும் கிரகங்களுக்கும் அப்பால் ஏதோ இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இவற்றைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதே என் கருத்து. இருந்தால் நீங்கள் எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம்,” என்று  அந்தக் கணியன் (முனஜ்ஜிம்) சொல்கிறான் என்கிறார்கள்.

            ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கேள்வி செல்லாத ஒன்றாகும். ஏனெனில் இடமற்ற ஒன்றைக் காட்டும்படி கோரப்படுகிறது. இங்கே, உன் மறுப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குக் காட்டு பார்க்கலாம். அது எங்குமே இல்லை. அது உன் நாவில் இல்லை, உன் வாயில் இல்லை, உன் நெஞ்சில் இல்லை. இங்கெல்லாம் தேடிப் பார். அவற்றை கண்டந்துண்டமாகக் கிழித்துப் பார். உன் மறுப்புக் கோட்பாடு அதிலெல்லாம் எங்குமே இருக்காது. எனவே, உன் கோட்பாட்டுக்கு ஓர் இடம் இல்லை என்பதை நாம் உணர்கிறோம். உன் கோட்பாடுகளின் மையப் புள்ளியை உன்னாலேயே சுட்ட முடியாத நீ எப்படி அனைத்துக் கோட்பாடுகளையும் படைப்பவனின் மையப் புள்ளியை நிர்ணயிக்கப் போகிறாய்? உன் மீதே ஆயிரம் ஆயிரம் கருத்துக்களும் பார்வைகளும் ஏற்படுகின்றன. ஆனால் அவை உன் கைவசத்தில் இல்லை, உன் கட்டுப்பாட்டில் இல்லை. இவை எங்கிருந்து வருகின்றன என்பதே உனக்குத் தெரியாது. தெரிந்தால் அவற்றை நீ அதிகப்படுத்தலாம். இவை எல்லாம் வந்து சேர்கின்ற தாழ்வாரம் மட்டும் உன்னிடம் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே போகின்றன, என்ன செய்கின்றன என்பதை நீ அறிய மாட்டாய். உன் சொந்த நிலைகளையே உன்னால் உறுதியாகச் சொல்ல முடியாதபோது நீ எப்படி உன்னைப் படைத்தவனின் நாட்டம் என்ன என்று கணித்துச் சொல்லப் போகிறாய்?

            ஒருவனின் மைத்துனி வேசையாக இருக்கிறாளாம். அவன் சொல்கிறானாம், “வானத்தில் கடவுள் இல்லை” என்று. குறுமதி கொண்ட குக்கலே! அவன் இல்லை என்று உனக்குத் தெரியுமா? நீ என்ன வானத்தை முழம் முழமாக அளந்து பார்த்துவிட்டாயா? அதன் எல்லைகளைக் கடந்து பார்த்துவிட்டாயா, அவன் அங்கே இல்லை என்று அறிக்கை விடுவதற்கு? உன் வீட்டிலேயே ஒரு பரத்தை இருப்பது உனக்குத் தெரியவில்லை! நீ எப்படி வானாதி அண்டங்களை அறிவாய்? ஆம், நீ வானத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாய். நட்சத்திரங்களின் நாமங்களை அறிவாய். கோள்கள் எல்லாம் ஏதோ ஒன்று என்று பிதற்றுகிறாய். வானாதிகள் பற்றி உனக்கு ஏதேனும் உருப்படியான அறிவு இருந்தால் அல்லது வானத்தை நோக்கி ஒரு காலடி எடுத்து வைத்திருந்தால் இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசமாட்டாய்.



மொழிபெயர்ப்பாளன் குறிப்புகள்:

உரை – 59: கணியன் (முனஜ்ஜிம் / நஜ்ஜாம்) – வான சாஸ்திரம் (astrology) என்பது விண்மீன்களின் அமைப்பை வைத்தும் அதனுடன் கிரகங்களின் இடங்களை ஒப்பிட்டும் கணிக்கப்படும் முறைமை ஆகும். எனவே அறபி மொழியில் “நஜ்மு” (விண்மீன்) என்னும் சொல்லை வைத்தே இத்துறை தன்ஜீம் என்று அழைக்கப்படுகிறது. வானியலை வைத்துக் கணிப்பவனுக்குப் பழந்தமிழில் கணியன் என்று பெயர். ஆங்கிலத்தில் astrologer, ஃபார்சி மற்றும் உருது மொழிகளில் நுஜூமி, அறபி மொழியில் முனஜ்ஜிம் அல்லது நஜ்ஜாம். முடிவு (result / end) என்பதைக் குறிக்க ஃபார்சி உருது மொழிகளில் அன்ஜாம் என்னும் சொல் இதனடியாகவே வந்திருக்கிறது. விண்மீன்களின் அமைப்பால்தான் காரியங்கள் நிகழ்கின்றன என்னும் சோதிடப் பார்வை அச்சொலுக்குள் பொதிந்துள்ளது. தமிழிலும் கோளாறு என்னும் சொல் அதைப் போன்றதே. கோள் + ஆறு = கோளாறு. ஆறு என்றால் வழி. கோள்கள் செல்லும் பாதையின் அமைப்புக்கு ஏற்பவே விளைவுகள் ஏற்படுகின்றன என்னும் சோதிடப் பார்வை அச்சொல்லில் உட்பொதிந்துள்ளது. கணியன்கள் ஊகங்களையே உரைக்கின்றனர். எனவேதான் புறம் பேசுவதையும் ’கோள் சொல்லுதல்’ என்றும் ’கோள் மூட்டுதல்’ என்றும் தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.

விண்மீன்கள் அவற்றின் ஒளியைக் கொண்டே பார்க்கப்படுகின்றன. எனவே சம்ஸ்க்ருதத்தில் ஒளியைக் குறிக்கும் ஜோதி என்னும் சொல்லைக் கொண்டு இத்துறைக்கு ஜ்யோதிஷா என்று பெயர் வந்தது. கணியனுக்கு ஜ்யோதிஷிகா என்று பெயர் (ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அமரகோஷம் என்னும் சம்ஸ்க்ருத நிகண்டு கணியனுக்குக் குறிப்பிடும் எட்டுப் பெயர்களுள் இதுவும் ஒன்று. கணிகா என்னும் பெயரும் இருக்கிறது.) தமிழில் இவ்விரண்டு பெயர்களையும் மரூஉவாக சோதிடம் / ஜோஸ்யம் என்றும் சோதிடர் / ஜோஸ்யர் என்றும் புழங்குகின்றனர். பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் “சோதிடம் தன்னை இகழ்” என்று கூறியிருப்பதும் சிந்தனைக்கு உரியது.                                      

உரை – 59: சோதிடம் பற்றி: உன் சொந்த நிலைகளையே உன்னால் உறுதியாகச் சொல்ல முடியாதபோது நீ எப்படி உன்னைப் படைத்தவனின் நாட்டம் என்ன என்று கணித்துச் சொல்லப் போகிறாய்? – 

    ஒப்பீடு: அ) உருதுக் கவிஞர் அஹ்மத் ஹுசைன் மாஇல் பாடுகிறார்: “கணியன் ஆகி, பிறருக்கு அவர் நிலை பகர்கின்றேன் / என்னையே தெரியாது எனக்கு, அத்தகைய அசடனாய் இருக்கின்றேன்” (கைர் கோ ஹால் தொ கெஹ்தா ஹூன் நுஜூமி பன் கர் / ஆப்-பீத்தி நஹீன் மஃ’லூம் ஒ நாதான் ஹூன் மெய்ன்.); 



    ஆ) வைரமுத்து எழுதிய “எல்லா நதியிலும் என் ஓடம்” என்னும் நூலில் “பாரசீகம்” என்னும் அத்தியாயத்தில் (எண்:10) ’சோதிடம் தன்னை இகழும்’ கவிதை ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது. அந்தப் பகுதியை அப்படியே தருகிறேன்: “தொழில் நிமித்தமாய் வெளியூர் போயிருந்த ஒரு சோதிடம் வீட்டுக்கு வருகிறான். // தன் மனைவி இன்னொருவனோடு சோரம் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு துடிக்கிறான். அவளைத் தசை கிழியத் தண்டிக்கிறான். // இதை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த சாஅதி கேட்கிறார் - // “அட போடா! / பொண்டாட்டியின் / அசைவுகளை / அறிய முடியாத நீயா / கோள்களின் / அசைவுகளை அறிந்து / குறி சொல்லப் போகிறாய்?” // என்ன கேள்வி?... என்ன கேலி?... // எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தீர்க்கமான விசாரணையின் தெறிப்பல்லவா இது? (பக்.86-87).


2 comments:

  1. ஆம், தன்னையே அறியாத அவன் பிறரை எப்படி அறியமுடியும்?

    ReplyDelete