Tuesday, December 31, 2019

கடலும் நுரையும்



’மெய்ப்பொருள்’ பதிப்பக நண்பர் உவைஸ் தந்திருக்கும் திட்டப்படி மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் “ஃபீஹி மா ஃபீஹி” என்னும் நூலினை “ரூமியின் ஞான உரைகள்” என்னும் தலைப்பில் தமிழாக்கி வருகின்றேன். 
 
ஃபாரசீக மொழியில் அமைந்த மூலப் பிரதியுடன் மௌலானா அப்துர் ரஷீத் தபஸ்ஸும் செய்த உருது மொழியாக்கம் மற்றும் ஆர்தர் ஜான் ஆர்பெர்ரி செய்த ஆங்கிலப் பெயர்ப்பு ஆகியவற்றையும் வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு தமிழாக்கம் செய்து வருகிறேன். விளக்கம் தேவை என்று எளியேற்குப் படும் இடங்களில் அடிக்குறிப்புக்களும் எழுதி வருகிறேன்.


அன்னனம், இரண்டாம் உரைக்கு எழுதப்பட்ட அடிக்குறிப்புக்களில் ஒன்று குறுங்கட்டுரை எனத் தக நீண்டது. அஃது பின்வருமாறு:

உரை-2 கடலும் நுரையும்: தெய்வீக மெய்ம்மையைக் கடல் என்றும் இப்பருவுலகை நுரை என்றும் மவ்லானா ரூமி இவ்வுரையில் உவமித்துக் கூறியுள்ளார். இக்கருத்து மஸ்னவி ஷரீஃபில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

      ”கடலின் உள்ளமை வேறு, நுரை வேறு;
நுரையை விட்டுவிடு,
கண் கொண்டு கடலினைக் காண்.

இரவும் பகலும் நுரையின் அலைவுகள்
இடையறாது கடல் இயங்குவதால்.
நுரையைக் காண்கிறாய் நீ
கடலைக் காண்பதில்லை
வியப்புதான் போ!

படகுகள் போல் ஒருவரோடொருவர்
மோதிக் கொண்டிருக்கிறோம்.
கண்கள் இருக்கின்றன எனினும்
கடலைக் காணாமல் இருக்கிறோம்.

உடல் எனும் படகில்
உறங்கிக் கொண்டிருப்பவனே!
நீரைக் கண்டுவிட்டாய் எனில்
நீரின் நீரைக் காண்.

நீருக்கும் உளது நீர் ஒன்று
அதுவே நீரை அசைக்கிறது.
உயிருக்கும் உளது உயிர் ஒன்று
அதுவே உயிரை அழைக்கிறது.”

” (”ஜிஸ்மெ தர்யா தீகரஸ்த் ஒ கஃப் திகர் / கஃப் பஹல் வஸ் தீதா தர் தர்யா நிகர். // ஜும்பிஷெ கஃப்ஹா ஸ தர்யா ரோஸோ ஷப் / கஃப் ஹமீ பீனீ வ தர்யா நே அஜப் // மா-ச்சூ கிஷ்தீஹா பஹம் பர் மீ ஸனேம் / தீரா சஷ்மேம் வ தர் ஆபே ரோஷ்னேம் // ஏ தூ தர் கிஷ்தீயெ தன் ரஃப்தா பஃகாப் / ஆப் ரா தீதீ நிகர் தர் ஆபெ ஆப் // ஆப் ரா ஆபீஸ்த் கூ மீராந்தஷ் / ரூஹ் ரா ரூஹேஸ்த் கூ மீஃகாந்தஷ்” – பாகம்:3 – 10115-10119

           

          


























 ஒப்புமை: கலீல் ஜிப்ரான் எழுதிய நூலொன்றின் தலைப்பு “Sand and Foam” (’மணலும் நுரையும்’). மவ்லானா ரூமி உணர்த்த விழையும் அதே ஞானத்தை ஜிப்ரானும் இவ்வுவமை கொண்டு பேசுகிறார். ”ஏக உள்ளமை” (வஹ்தத்துல் உஜூத்) என்னும் கோட்பாட்டின் கோணத்தில் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜிப்ரான் சொல்கிறார்:

      ”இக்கரைகளில் என்றென்றும் நடக்கின்றேன் நான்
      மணலுக்கும் நுரைக்கும் இடையில்.
      பேரலை அழித்துவிடும் என் பாதச் சுவடுகளை;
      வீசும் காற்றில் விலகிவிடும் நுரை.
      கடலும் கரையும்
நிலைத்திருக்கும் நித்தியமாய்.”
(I AM FOREVER walking upon these shores,
Betwixt the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain
Forever.)

மேலும் சொல்கிறார்:

      ”நேற்றுதான் நினைத்திருந்தேன், வாழ்வின் உலகில் தாள லயமின்றித் துடிக்குமொரு துகள் யான் என்று. யானே அவ்வுலகென்றும் ஒத்திசைந்த துகள்கள் யாவும் வாழ்வு கொண்டு என்னுள்தான் சுழல்கின்றன என்றும் அறிந்தேன் இன்று.”
(It was but yesterday I thought myself a fragment quivering without rhythm in the sphere of life.
Now I know that I am the sphere, and all life in rhythmic fragments moves within me.)

கலீல் ஜிப்ரான் எழுதிய இன்னொரு நூல் ”The Madman” (“பித்தன்”). அதில், “The Greater Sea” என்றோரு குறியீட்டுக் கதை உள்ளது. அதிலும், இவ்வுலகம் பிரபஞ்சம் என்னும் பெருங்கடலின் ஒரு கரையாகப் புனையப்படுகிறது. ஆன்மிக வாழ்விற்கு இவ்வுலகு ஏற்றதன்று என்பது ஜிப்ரானின் முடிவு. எனவே, ”Then we left that sea to seek the Greater sea” (’பிறகு யாம் அதனினும் பெரிதான கடலினைத் தேட அக்கடல் விட்டு அகன்றோம்’) என்று முடிக்கிறார்.

Thursday, December 26, 2019

இல்லம் பேருள்ளம்



      தமிழ் இலக்கியம் பேசும் உறுதிப்பொருள் நான்கு. அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு.

      இவற்றுள் வீடு என்பது சுவர்க்கத்தைக் குறிக்கும். ஆங்கிலத்தில் Paradise என்று கூறப்படும் பரதேசம். (பர என்பது பரம்பொருள், இறைவன். பரதேசம் என்பது இறைவனின் இடம். இறைக்காட்சி எங்கே கிட்டுமோ அவ்விடம் பரதேசம். அடியார்க்கு இறைவனின் சந்திப்பு (லிகா) மற்றும் திருக்காட்சி (தீதார்) ஆகியன மறுமையில் சுவர்க்கத்தில்தான் கிடைக்கும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. அந்த அர்த்தத்தைப் ’பரதேசம்’ என்னும் சொல் தருவதை ஓர்க.)

      பேச்சு வழக்கில், இம்மண்ணில் நாம் கட்டியெழுப்பி உறையும் கட்டடத்தை “வீடு” என்னும் சொல்லால் குறிப்பிட்டு வருகிறோம். அதனை இல்லம் என்றும் மனை என்றும் அழைத்தலே பொருத்தம். (”என் வீட்டுக்கு வருக” என்பதன் பொருள் “என் சுவர்க்கத்துக்கு வா” என்பதுதான்.)

      காரைக்கால் அம்மையார் குறித்து ”St.Peyar, the Saivite Mystic” என்னும் ஆங்கிலக் குறுங்கட்டுரையில் முதுமுனைவர் தி.ந.ராமச்சந்திரன் கூறும் சில கருத்துக்கள் இதன் தொடர்பில் என் சிந்தையைக் கவர்ந்தன:

      ”The Place of Woman” என்னும் ஆங்கிலக் கட்டுரையில் மகாகவி பாரதியார் ஒரு சம்ஸ்க்ருத சொலவடையை மேற்கோள் காட்டியுள்ளார்: க்ரிஹினி க்ரிஹம் உச்யதே (இல்லம் என்பது இல்லாள் / மனை என்பது மனைவி. “Home is but a synonym for wife”).

      சம்ஸ்க்ருதத்தில் இச்சொல் ஒரு பெண்பாற் சொல். இதற்கு நேரான ஆண்பாற் சொல் அம்மொழியில் இல்லை. க்ரிஹினி என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் ”இல்லாள்” என்பதாம். அதற்கு நேரான ஆண்பாற் சொல் தமிழிலும் இருக்கவில்லை.

      பேயாரின் புராணத்தைப் பாடும்போது, பரமதத்தன் என்னும் வணிகனை மணந்து புனிதவதியார் ’இல்லாள்’ ஆனதைப் பாடுமிடத்தில், கணவனைக் குறிக்க இல்லாளன், மனைப்பதி மற்றும் இல்லிறைவன் ஆகிய மூன்று சொற்களை உருவாக்கித் தமிழ்ச் சொற் களஞ்சியத்திற்குச் சேக்கிழார் வளம் சேர்த்துள்ளார் என்று தி.ந.ராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிடுகிறார் (நூல்: “The Hymns of Karaikkal Ammaiyaar”, IISSR, Dharmapuram, Mayiladuthurai – 609001, 1993; ப.100).


     



















 ”நும் இல்லம் நுமது பேருடல்” – “Your house is your larger body” என்கிறார் கலீல் ஜிப்ரான். இது, ஆணினும் பெண்ணுக்கே சாலப் பொருத்தம்.

      இதில், house என்பது இல்லம் என்னும் கட்டடத்தையே குறிக்கும். எனவே அதனை உடல் என்று கலீல் ஜிப்ரான் சுட்டியுள்ளார். எனில், குடும்பம் என்பதே home – என்பதைக் குறிக்கும். ஆக, ‘நும் குடும்பம் நுமது பேருள்ளம்’ – “Your home is your larger mind” என்று சொல்லலாம். அக விரிவு என்பது இல்லறத்தின் பயன்களுள் ஒன்று.

      இல்லம் மற்றும் மனை ஆகிய இரு சொற்களின் அடியாகவே அம்மூன்று சொற்களையும் சேக்கிழார் உருவாக்கியுள்ளமை காண்க.

      ”தம்-இல் இருந்து தமது பாத்து உண்டற்றால் / அம்-மா அரிவை முயக்கு” (1107) என்கிறது திருக்குறள். (Hyphenation is mine. தம்மில் என்பதைத் தன்னில் என்பதன் பன்மையாகவும், அம்மா என்பதைத் தாய் என்றும் மயங்குவாருண்டு. எனவே இடைக்கோடு இட்டேன்.)

      இந்தத் திருக்குறளுக்கு உரை எழுதியோருள் தேவநேயப் பாவாணர் கூறும் உரை சற்று நயமானது. “தம் இல்” என்பது தனிக்குடித்தனம் என்று அவர் குறிப்பிடுகிறார். “தமக்குரிய தனிமனையிற் குடியிருந்து” என்று உரை சொல்கிறார். “எலிவளையுந் தனிவளை, தனிவளையுந் தன்வளை என்னும் உரிமையுணர்ச்சி பற்றித் ’தம் இல்’” என்று தலைவன் கூறுவதாக விளக்கமும் தருகிறார். எனவே, திருமணம் ஆனதும் இளம் இணையர் தனிக்குடித்தனம் பேணுதல் சங்க காலத்துப் பழந்தமிழரின் பண்பாடு என்னும் வரலாற்றுக் குறிப்பினை இக்குறள் தருகிறது எனலாம்.


      “இதம் தரு மனை” என்பது மகாகவி பாரதியார் வரைந்த தொடர். அதனெதிர் உள்ளது “இடர் மிகு சிறை”. இல்லம் என்பது இதம் தரல் வேண்டும். இடர் மிகும் இடம் இல்லமே ஆயினும் அஃது இல்லமன்று, சிறையே!

      மனையின் இதம் என்பது கட்டடத்தின் வசதிகளால் ஏற்படுவது உண்டு என்பது உண்மை ஆயினும் அஃது முதன்மை நிலை அன்று. முதன்மை நிலை மனைவிதான். (ஏனெனில், க்ரிஹினி க்ரிஹம் உச்யதே) ”கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள” (1101) என்பது வள்ளுவனார் வாக்கு. இரண்டாம் நிலை பிள்ளைகள். ”மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (திருக்குறள்:65). அதிலும், தம் மக்கள் மழலைச் சொல் குழலினும் யாழினும் இனிது.

      அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களைச் செவ்வணே ஆற்றி வாழ்வாங்கு வாழ்ந்து முடித்து, உயிரானது உடலையும் இவ் உலகையும் துறந்து செல்லும் இடம் சுவர்க்கம் ஆதலால் அதனைத் துறக்கம் என்னும் சொல்லும் குறிக்கும். அதுவே வீடு என்னும் நான்காம் உறுதிப் பொருள் என்கிறது தமிழ்.

      இறப்பின் பின்னர் அன்றே வீடு வாய்ப்பது? அதனை இங்கேயே எப்படிப் பாட முடியும்? என்னும் வினா எழ, வீட்டிற்கு உய்க்கும் துறவைப் பாடின் அதுவே வீடு பாடியது ஆகும் என்று இலக்கணம் பிறந்தது.

      இன்னனம், வீடு என்பது அறம் பொருள் இன்பம் ஆகியவற்றுக்கு அடுத்ததாய், அப்பாலாய் நிற்க இன்பம் என்னும் மூன்றாம்பொருள் நிகழும் இல்லத்தை வீடு என்று குறிப்பிடுவது பொருந்துமா?

      வீட்டிற்கு உய்க்கும் ஒழுகலாறுகள் யாவும் இல்லத்தில் நிகழ்த்தப் படுவதால் இல்லம் என்பது காரண ஆகுபெயராக ”வீடு” என்று பெயர் பெற்றது.

      துறவு கொள்வோர் பெருமான்மையர் அல்லர். இல்லம் துறந்து காடு சென்று கடுந்தவம் இயற்றல் என்பது தமிழர் நெறியன்று. (’நீட்டலும் மழித்தலும் வேண்டா’ என்பார் வள்ளுவர்.) எனில், பெரும்பான்மை மக்கள் வீடு பேறு எய்தும் நெறி இல்லறம் என்பதேயாகும். அஃதே தமிழரின் அறிவு கண்ட தெளிவான முடிவு. அதனைத்தான், இல்லத்தைக் குறிக்க ’வீடு’ என்னும் சொல் புழங்கப்படுவது காட்டுகிறது. 


’லா ரஹ்பானிய்யத் ஃபில் இஸ்லாம்’ – ’இஸ்லாத்தில் துறவறம் என்பதில்லை’ என்றும், ”மன் ரஸக்கஹுல்லாஹு அம்ர-அதன் ஸாலிஹதன் ஃபகத் அ-ஆனஹுல்லாஹு அலா ஷத்ரி தீனிஹி” – ”எவருக்கு இறைவன் நற்பண்புள்ள பெண்ணை மனையாளாய் நல்கினானோ திண்ணமாக இறைவன் அவருக்கு அவரின் சன்மார்க்கத்தில் பாதியை அருளிவிட்டான்” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி); நூல்: அல்-முஃஜமல் அவ்சத்: 992; அல்-ஜாமிஉஸ் சகீர்: 8704) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) நவின்ற வாக்குகள் பழந்தமிழர் கண்ட நெறிக்கு உறுதி உரைக்கின்றன.

இன்னொரு செய்தி.

தமிழர், வாழ்வை அகம் புறம் என்று இருபெருந் திணைகளாய்ப் பகுத்தனர். புறம் என்பது நாட்டுப் பணி வாழ்வியலையும் அகம் என்பது இல்லற வாழ்வியலையும் குறிப்பன. ஆதலால், இல்லம் என்பதை அகம் என்னும் சொல் கொண்டும் சுட்டலாம்.

இந்தத் தமிழ் மரபினைப் பார்ப்பனரே இப்போதும் தமது பேச்சு வழக்கில் பேணி வருகின்றனர். (பார்ப்பார் என்பதும் பார்ப்பனர் என்பதும் ”ப்ரஹ்மின்” என்பதன் தமிழ மரூஉ. அச்சொல் வசையன்று என்பது தெளிக. ஒருகால் அஃது வசையாக இருப்பின் தொல்காப்பியர் தமது அரில்தப இயற்றிய போக்கறு பனுவலில் அச்சொல்லினைப் பதிந்திரார் அல்லவா? துருக்கி நாட்டினரைக் குறிக்க, துருக்கியர் என்னுஞ் சொல் தோன்றி அஃது துருக்கர் என்றும் துலுக்கர் என்றும் தமிழில் மருவியதும் இதனைப் போன்றதே என்பதும் அறிக.)

’வீட்டிற்கு’ என்பதைப் பார்ப்பனர் ’ஆத்துக்கு’ என்று கூறுகின்றனர். அகம்+கு என்பது இடையே ’அத்து’ச் சாரியை பெற்று அகம்+அத்து+கு = அகத்துக்கு என்றாகிறது. அதனைப் பார்ப்பார் மருவித்து ஆத்துக்கு என்று பேசுகின்றனர். அதேபோல், அகத்துக்காரர் ஆத்துக்காரர் என்றும் அகத்துக்காரி ஆத்துக்காரி என்றும் ஆயின.

அகம் என்பது உள்ளம். அகம் என்பது இல்லம். இல்லம் என்பது குடும்பம், கட்டடமன்று. எனவே, நுமது இல்லமே நுமது பேருள்ளம் (Your home is your larger mind).

Tuesday, December 24, 2019

”கடற்காகம்”



    











 ”மணல் பூத்த காடு” என்னும் அருமையான நாவலை முன்பு தந்த நண்பர் முஹம்மது யூசுஃப் தனது இரண்டாம் நாவலான “கடற்காகம்” நூலைச் சென்ற மாதம் அனுப்பியிருந்தார். இரு நாட்களுக்கு முன் வாசித்து முடித்தேன்.
      
 ”நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்” (21:30 அல் குர்ஆன்) என்னும் திருவசனத்தை தியான ஸ்லோகமாக மொழிந்து துவங்கி முன்னுரை வரைகிறார் முஹம்மது யூசுஃப். அதிலேயே ஒரு சொல்லாராய்ச்சி.

      மூத்தோனைக் குறிக்க ’அண்ணன்’ என்னும் சொல்லே தமிழரிடம் பெருவழக்கு. காயற்பட்டிணம் வாழ் முஸ்லிம்கள் அண்ணனைக் குறிக்க ‘காக்கா’ என்னுஞ் சொல்லினைப் புழங்குகின்றனர். இவ்வழக்கின் தொடக்கப் புள்ளியை வரலாற்றில் தேடும் முஹம்மது யூசுஃப் ஆதம் நபியின் புதல்வர்களான ஆபில் காபில் ஆகியோர் பற்றிய கதையுடன் தொடர்பு காட்டி வியப்பூட்டுகிறார்.

            நூல் வெளியானபோது முகநூலில் அதன் முன் அட்டையைக் கண்டு மிகவும் கவரப்பட்டேன். எளிமையும் தெளிவும் கொண்ட மிக அழகான வடிவமைப்பு. நீல வானப் பின்னணியில் வெண்ணிறக் கடற்காகம் ஒன்று சிறகு விரித்திருக்கும் காட்சி. கண்ட முதற்கணமே ரிச்சர்ட் பாக் எழுதிய “ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்” என்னும் உலகப் புகழ் பெற்ற நூலின் அட்டையை நினைவு கூர்ந்தேன்.
 


     





















 ”கடற்காகம்” என்னுந் தலைப்பும் நாவலுள் இடம்பெறும் முதன்மை மாந்தருக்கான குறியீடாகத்தான் இருக்க வேண்டும் என்று உள்மனம் சொல்லிற்று. உடனே,

      ”ஏகப் பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற
      காகம் அதுவானேன் கண்ணே றகுமானே!”
என்று குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் பாடிய வரிகள் நினைவில் எழுந்தன. ஆம், அவர் பாடியிருப்பது நெய்தல் நிலத்துக் கடற்காகத்தையே, மருத நிலத்துக் கருங் காக்கையை அன்று என்று விளங்கிற்று.

      ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” நாவலில் ஆங்காங்கே ஒரு கருநாய் வந்துபோகும். அது எதன் குறியீடு என்று அவர் குறிப்பிட மாட்டார். மரணத்தின் குறியீடாக இருக்கக்கூடும். வாசகர்கள் தாம் விளங்கியபடி அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். அதுபோல், இந்நாவலில் ஆங்காங்கே கடற்காகமும் கருங் காகமும் இடம் பெறுகின்றன.

      ”கடற்காகம் ஒன்று சாவகாசமாய்ச் சிறகை விரித்து அனாதையாய் உவர்த்த கார் நிற வானில் விருப்பமின்றி மெதுவாகப் பறக்கத் துவங்கியது” (ப.27) மற்றும், ”இலவம் பஞ்சு போல் வானில் மிதந்து சென்று கொண்டிருந்தது ஒரு காகம்” (ப.260) ஆகிய வரிகள் நூலின் அட்டை காட்டும் படிமத்திற்கானவை எனலாம். இவை முறையே, தாரிக் மற்றும் அய்டா ஆகியோரைக் குறிப்பன என்பது கதையோட்டத்தில் விளங்கும். இக்கதையில் இடம்பெறும் ஒவ்வொரு மாந்தரும் ஒரு காகம்தான் என்று குறியீடாகச் சொல்லலாம்.

      நாவலின் கதை தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோட்டு வட்டத்தில் கிளியூர் ஊராட்சி ஒன்றியத்தினுள் குளச்சலுக்கு அருகில் உள்ள ’இனையம் புத்தன்துறை’ என்னும் சிற்றூரில் தொடங்கி சிரியா நாட்டில் உள்ள அலிப்போ என்னும் நகரில் முடிகிறது. ஆனால், கதையின் செம்பாகக் களம் அபுதாபியிலிருந்து ஐம்பது கி.மீ தொலைவில் அரபிக் கடலில் இருக்கும் டெல்மா என்னும் தீவுதான். ஒரு மாத காலம் அந்தத் தீவில் வசித்த அனுபவத்தை நாவல் நமக்குத் தருகிறது. இதற்காகவே வாசிக்கலாம். 

 
      தமிழகத்திலிருந்து தாரிக், டேனியல் மற்றும் அன்வர் ராஜா, கேரளாவிலிருந்து அலவிக் குட்டி, லெபனானில் இருந்து முவாசீன், ஈரானிலிருந்து சமீரா, மற்றும் இன்னோரன்ன பிற கதாபாத்திரங்கள் டெல்மா தீவில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைச் சித்தரிப்பதே இந்நாவலின் மைய இழை. தமிழரும் மலையாளியரும் பொருள்வயின் பிரிவாக அமீரகம் (Emirates) சென்றிருள்ளனர். ஆனால், ஈரான் லெபனான் சிரியா ஆகிய இடங்களிலிருந்து அங்கே வந்திருப்போர் அனுபவிப்பது புலம்பெயர் வாழ்க்கை.

      சமயம் மற்றும் அரசியல் ஆகிய கோணங்களில் இந்நாவல் மூன்று முக்கியமான புள்ளிகளைப் பேசுகிறது:

      அ) சுற்றுச் சூழல் போர் (Environmental War). இதன் ஒரு பகுதியாக, சுனாமி, நிலநடுக்கம், பெருமழை, கடும்புயல் போன்ற ’இயற்கைப் பேரிடர்கள்’ செயற்கையாக உருவாக்கப்படுவது குறித்தும் அதற்கான ஹார்ப் தொழில்நுட்பம் குறித்தும் தாரிக் என்னும் மாந்தன் வழியாகப் பரக்கப் பேசுகிறார்.

      ஆ) இந்து மற்றும் முஸ்லிம் சமய நல்லிணக்கம்: சாவக்காடு ஹமீது பாய் என்னும் மாந்தன் வழியாக இப்பொருண்மை பேசப்படுகிறது. இந்து மரபை இஸ்லாம் குறிப்பிடும் பழங்கால இறைத்தூதர்களின் சமூகமாகப் பார்க்கும் புரிதல் இதில் வெளிப்படுகிறது. “இந்துக்கள விட்டு விலக விலக உங்களுக்கு ஒன்னுமே கிடைக்காது. அவன் நமக்கு ஆதி பந்தம். இதை முஸ்லீம்கள் புரிஞ்சிக்கனும்.” (ப.224) என்று சொல்கிறார் சிஹ்ரு (மாந்திரீகம்) செய்பவரான சாவக்காடு ஹமீது பாய். இப்பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருமே அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.

      குர்ஆன் 2:62-ஆம் திருவசனத்தில் குறிப்பிடப்படும் ”ஸாபியீன்” என்னும் சமுதாயத்தவரை ஆங்கிலத்தில் Sabeans என்று எழுதுவர். இந்நாவலில் அத்திருவசனத்தைச் சுட்டுமிடத்தில் Sapiens என்று அச்சாகியுள்ளது (ப.239). டார்வினிசம் முன்வைக்கும் பரிணாம / கூர்தலறக் கோட்பாடானது பகுத்தறிவு வளர்ச்சி கொண்ட மனிதர்களை ஹோமோ சேப்பியன்ஸ் (homo sapiens) என்று குறிக்கிறது. முஹம்மது யூசுஃப் இச்சொல்லினை Sabaens என்பதுடன் குழப்பிக் கொண்டார் என்று எண்ணுகிறேன். “பட்டதொம்ப குகைல சேப்பீயன்கள் (Sapeins) வாழ்ந்ததுக்கான அடையாளம் இன்னும் இருக்கிறதா சொல்லுறாங்க.” (ப.239) என்று சாவக்காடு ஹமீது பாய் பேசுவதில் இக்குழப்பம் எழுகிறது. ஹோமோ சேப்பியன்ஸ் என்பது உயிரியல் கலைச்சொல். லத்தீன் மொழியில் அறிவுள்ள மனிதன் (wise man) என்று பொருள். ஆதம் நபியே ஹோமோ சேப்பியன்தான். நாவலில் சுட்டப்பட்டிருக்கும் குர்ஆனின் 2:62-ஆம் திருவசனத்தில் குறிப்பிடப்படும் யூதர்கள் கிறித்துவர்கள் சாபியீன்கள் ஆகிய அனைவருமே ஹோமோ சேப்பியன்ஸ்தாம்.

      இ) இஸ்லாத்தில் ஏற்பட்ட சுன்னத்தி – ஷியா என்னும் பெரும்பிளவின் வரலாறு, மற்றும் புதிய தீவிரவாத இயக்கங்கள் ஆகியன பற்றி மர்வான் என்னும் மாந்தனின் வழியாகப் பேசப்படுகிறது. (டாக்டர் அம்ரு என்னும் மாந்தனின் வழியாக பாலஸ்தீன் போராட்ட வரலாறு குறித்துப் பேசப்படுவதையும் இங்கே சேர்த்துக் கருதலாம்.) ”எனது சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரிந்துவிடும்” என்று நபிகள் நாயகம் நவின்றது இவண் நினையத்தகும். “ஷியா” என்னும் கருத்தியல் முஸ்லிம்களிடையே பிளவும் பகைமையும் உண்டாக்கும் நோக்கில்  பதினைந்தாம் நூற்றாண்டில் ரோமானியர்களால் உருவாக்கப்பட்டது என்பதை விவரிக்கும் பக்கங்கள் மேலும் விரிவான தேடலுக்குத் தூண்டுகின்றன.

      முஹம்மது யூசுஃப் தம்மையொரு ”தகவல் கொண்டாடி” என்று இந்நாவலிலும் குறிப்பிட்டு அதனை நாவல் நெடுகிலும் எண்பிக்கவும் செய்கிறார். எளியேனும் ஒரு தகவல் கொண்டாடி என்பதால் நாவலில் ஈடுபாடு அதிகரித்தது. பள்ளி ஆசிரியை சமீரா தனது மாணவிகளுக்குச் சொல்லும் கதைகளில் டெல்மா தீவின் வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவையாகவும் வரைந்து காட்டுகிறார். ஆயிரத்தோரிரவு அறபிக் கதைகளில் உள்ள சிந்துபாத் கதைக்கும் டெல்மா தீவின் வரலாற்றுக்கும் உள்ள உறவை அறிந்தபோது வியப்பில் புருவங்கள் உயர்ந்தன.

      சிந்துபாதிடம் ஒரு மாலுமி சொல்வதாக அக்கதையில் வரும் கவிதை ஒன்றனை சமீரா சொல்வதாக யூசுஃப் எழுதியுள்ளார். ரிச்சர்ட் பர்ட்டன் ஆங்கில ஆக்கம் செய்த அக்கவிதையைத் தமிழாக்கம் செய்து பார்த்தேன்:

“உழைப்பில் மனிதன் உயரங்கள் அடைகுவன்
பெரும்புகழ் நயப்போன் இரவினில் உறங்கற்க;
வெண்முத்து வேண்டுவோன் ஆழ்கடல் மூழ்குக;
தன்வலி கொண்டு பொன்பொருள் ஈட்டுக;
பாடுபடல் இன்றிப் பெரும்புகழ் தேடுவோன்
சாத்தியம் அற்றதில் வாழ்வைச் சாய்க்கிறான்”
(”By means of toil man shall scale the height;
Who to fame aspires musn’t sleep at night;
Who seeketh pearl in the deep must dive,
Winning weal and wealth by his main and might;
And who seeketh Fame without toil and strife,
Th’ impossible seeketh and wasteth life.”)

”ஆயிரத்தோர் இரவு அறபிக் கதைகள்” ஐரோப்பிய இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திற்று. லத்தீன் அமெரிக்க இலக்கிய முன்னோடியாகக் கருதப்படும் செர்வாண்டிஸ் எழுதிய “தொன் குய்ஷே” என்னும் எஸ்பஞோல் காவியக் கதைக்கு முன்னோடி அஃதே. மேற்சொன்ன கவிதையால் தாக்கம் பெற்றது என்று கருதத்தகும் ஒரு ஆங்கிலக் கவிதையைக் காட்டுகிறேன். கவி ஹெச். டபிள்யூ. லாங்ஃபெல்லோ பாடுகிறார்:

“பெரியோர் வசமாக்கிப் பேணிய உயரங்கள்
கண்ணிமை நேரத்தில் கைக்கூடின அல்ல
நண்பர் தூங்கிய நள்ளிராப் போதுகளில்
தளராது முயன்று தவம்செய்த பயனே!”
(The heights by great men reached and kept / were not attained by sudden flight,/ but they, while their companions slept, / were toiling upward in the night.)

      இந்நாவலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இன்னொரு ஆங்கிலக் கவிதையும் சமீரா நினைத்துப் பார்ப்பதாகவே வருகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் உமர் இப்னு முஹம்மத் அல்-நஃப்ளவி என்பவரால் எழுதப்பட்டதொரு பாலியற் பனுவலான “அல்-ரவ்ளுல் ஆத்திர் ஃபீ நுஸ்ஹத்தில் ஃகாத்திர்” என்னும் நூலில் உள்ள கவிதை அது. (ரிச்சர்ட் பர்ட்டன் இந்நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முஹம்மது யூசுஃப், ”The Perfume Garden’ என்னும் நாவலை மூவசீனைத் தவிர்த்து விட்டு இப்போது தனியாக வாசிக்கத் துவங்கினாள்” (ப.80) என்று எழுதுகிறார் முஹம்மது யூசுஃப். “The Perfumed Garden” என்பதே சரியான தலைப்பு. மேலும், அஃதொரு நாவல் அன்று. சிறு சிறு கதைகள் சில அதனுள் உள்ளன. ஜியொவன்னி பொக்காஷியோ எழுதிய ”டெகாமரான்” மற்றும் ஆங்கில இலக்கியப் பிதாமகர் ஜெஃப்ரி சாசர் எழுதிய ”கேன்ட்டர்பரி டேல்ஸ்” ஆகியவற்றில் உள்ளன போன்ற கதைகள். மற்றபடி, பாலின்பத் துய்ப்பிற்கான உடலியல் கூறுகள் பற்றிப் பேசும் உரைநடைப் பகுதிகளே அந்நூலில் மிகுதி. எனவே, வாத்ஸ்யாயன் எழுதிய ”காமசூத்திரம்”, கல்யாண மல்லா எழுதிய “அனங்கரங்கா”, கொக்கோகர் இயற்றிய “ரதி ரகஸ்யம்” (அதிவீரராம பாணிடியரால் தமிழாக்கப்பட்டது) முதலிய நூற்களுடன் அது ஒப்பிடப்படுகிறது. இவை யாவும் காமத்திற்கான உடலியல் பற்றியே பேசுவன. மிகைப்பாடு உள்ளன. திருவள்ளுவரின் காமத்துப்பால் இவற்றினும் வேறானது. காமத்தின் உடலியலைப் பேசாது உளவியலையே பேசுவது. “ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” (1330) என்று அது முடி(க்)கிறது. அவ்விடத்தில் நிறைவு காணாதோர் மேற்சொன்ன நூற்களில் வழி தேடத் தொடங்குவர். சமீரா அப்படித்தான் “நறுமணத் தோட்டம்” நூலினைப் படிக்கிறாள்.)

      நாவலில் முஹம்மது யூசுஃப் கையாண்டிருக்கும் மொழிநடை, உவமை, பகடி குறித்துப் பேசினால் இக்கட்டுரை ஒரு சிறு நூலாக விரியும். மணல் பூத்த காடு பற்றி அப்படித்தான் ஐம்பது பக்கங்களுக்கு எழுதினேன். இந்நாவலுக்கு அப்படி நான் எழுதப் போவதில்லை. நாவலையே வாங்கிப் படியுங்கள். அமீரகம் குறித்த ஆவணங்களாகத் திகழும் இந்நாவல்களின் வரிசையில் மேலும் பற்பல கதைகளை முஹம்மது யூசுஃபின் எழுதுகோல் வெளிப்படுத்த எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக!