Sunday, October 22, 2017

ஞானி என்னும் தேனீ



Image result for rose in a sufi turban

     ஞானி ஒரு தேனீ. இந்த உருவகம் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இது தரும் அர்த்த அலைகளை அவர் பல இடங்களில் விரித்து எழுதியிருக்கிறார்.

      ”பூக்களில் எத்தனையோ வகை. ஆனால் தேன் ஒன்றுதான். இது தேனீக்குத்தான் தெரியும். தேனீயாகிறவன் ஞானியாகிறான்” என்கிறார் அவர் (”பூவாலயம்” நூல்: பூப்படைந்த சப்தம்)

      ‘பித்தன்’ என்னும் தனது அற்புதமான சிறு மா நூலில் அவர் சொல்கிறார்,

      அவன் தேனீ
      அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன்

இதே நூலின் உள்ளே “அறிக்கை” என்னும் கவிதையில் இந்த உருவகத்தை மேலும் விரிவாகச் சொல்கிறார்.

மதவாதி
’என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது’
என்கிறான்

என்று அப்துல் ரகுமான் சொல்கிறார். வரட்டு மதவாதத்தின் மடமையைத் தெளிவாகக் காட்டும் வரிகள் இவை. ஏனெனில், பூ என்றாலே அதில் தேன் இருக்கத்தான் செய்யும்.

“என் தோட்டத்தில் மட்டும்தான் பூக்கள் இருக்கின்றன” என்று ஒருவன் வாதாடினால்கூட அதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கலாம். பிற தோட்டங்களில் ஏன் பூக்கள் விளையவில்லை என்று சிந்திக்கலாம். அப்படி வாதாடுவதைக் காட்டிலும், “என் தோட்டத்துப் பூவில் மட்டும்தான் தேன் இருக்கிறது. பிறர் தோட்டத்துப் பூக்களில் தேன் இல்லை” என்று சொல்வது கடைந்தெடுத்த மடமைதான் அல்லவா?

நானோ தேனீயாக இருக்கிறேன்

பூக்களின் வேறுபாடுகளைத்
தேனீ
லட்சியம் செய்வதில்லை

தோட்டத்து வேலிகள்
அதைத் தடுப்பதில்லை

எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு
என்பதும்
தேன் என்பது ஒன்றுதான்
என்பதும்
தேனீக்கு மட்டுமே
தெரிகிறது

என்கிறார் அப்துல் ரகுமான். பூக்களின் வேறுபாடுகள் தேனீக்கு முக்கியமில்லை. பூக்கள் நிறத்தாலும் அளவாலும் வடிவத்தாலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் சுரக்கும் தேன் ஒன்றுதான் என்றும் அதன் சுவை ஒன்றுதான் என்றும் தேனீக்குத் தெரியும். 

Related image
       
     தோட்டத்து வேலிகள் தேனீயைத் தடுப்பதில்லை. ஏனெனில் தோட்டத்து வேலிகள் அதனைத் தடுப்பதற்காகப் போடப்பட்டவை அல்ல. அவை கால்நடைகளையும் நாய் பூனை இத்தியாதி (சித்த) சேட்டை புரியும் துட்ட விலங்குகளையும் கவனத்தில் வைத்து வேயப்பட்டவை. எனவே, தேனீ வேலி தாண்டிவிட்டது என்று குற்றஞ் சுமத்த முடியாது. அனைத்துப் பூவிலும் ஞானத் தேனைச் சுவைக்கும் தேனீயாக இருக்கும் ஞானிக்குச் சமய எல்லைகள் தடையாக இரா.

      ஒரு பூவின் தேன்
      தேனீக்குப் போதாது

என்கிறார் கவிக்கோ. அவர் எழுதிய நூற்கள் அவர் கட்டிய தேனடை. அதில் நாம் பல்வேறு பூக்களில் இருந்து திரட்டப்பட்ட தேன் துளிகளைக் காண்கிறோம். எல்லாம் ஒரே சுவையில் பிறங்குகின்றன. அவற்றின் அடையாளங்களைக் குறிப்பிடாமல் அழித்துவிட்டால் ஒரே பூவின் தேன் என்பதாகத்தான் நினைப்போம்.

Image result for kurinji flower in munnar
      
      குறிஞ்சிப் பூ அளவால் மிகவும் சிறியது. ஊதா நிறம் உள்ளது. அது பூக்கும் செடியும் குட்டையானது. பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை அபூர்வமாகப் பூப்பது. யாரும் எளிதில் அணுக இயலாத ஆழ் மலைச் சரிவுகளில் பூத்துக் கிடப்பது. அங்கே தேனீ மட்டுமே மீண்டும் மீண்டும் செல்கிறது. சிறு சிறு துளியாகத் தேனெடுத்து வந்து ஒரு பெரிய தேனடைக்குள் நிரப்பி வைக்கிறது. இந்த உவமையைச் சங்க காலத்துத் தமிழ்ப் பெண் ஒருத்தி தானும் தனது தலைவனும் கொண்ட காதலுக்கு உவமையாகச் சொல்கிறாள்.

      சாரல்
      கருங்கோல் குறிஞ்சிப்
      பூக்கொண்டு
      பெருந்தேன் இழைக்கும்

என்று அவள் சொல்வதாக தேவகுலத்தார் பாடுகிறார் (குறுந்தொகை:3). கவிக்கோவின் நூல் ஒவ்வொன்றும் அத்தகைய தேனடைதான். உலகின் சிறந்த நூற்களுள் அரிதின் தேடித் திரட்டி வைத்த ஞானத் தேனடை.

      ‘ஞானி ஒரு தேனீ’ என்னும் உருவகத்தில் இன்னொரு ஆழமான கருத்தும் தொனிக்கிறது, எண்ண எண்ண இனிக்கிறது.

      பூக்களில் தேன் எடுக்கும் சிற்றுயிர்கள் பல உள்ளன. வண்ணத்துப்பூச்சி, வண்டு, தட்டான், குளவி, ஈ ஆகியன அதில் அடங்கும். தேன்சிட்டு போன்ற சிறு பறவைகளும் பூக்களில் தேன் குடிக்கின்றன. எனினும் தேனீ இவை எல்லாவற்றையும் விட வேறானது. அது மட்டுமே பூவின் அமிழ்தத்தை (nectar) மருத்துவ குணமும் இனிமையும் கொண்ட தேனாக (honey) மாற்றுகிறது.

      இதையே நாம் ஞானிக்கும் பொருத்திப் பார்க்கலாம். சமய நூற்கள் என்னும் பூக்களை பல வகைப்பட்ட நபர்கள் வாசிக்கின்றனர். ஆனால் அந்நூற்கள் நுவலும் தத்துவங்கள் யாரிடம் ஞானமாக மாறுகிறதோ அவர்களே ஞானிகள்.

      மலரின் மார்பில் சுரந்த அமிழ்தம் தேனீயிடம் மட்டும் தேனாக மாறுவது எப்படி? இதைப் புரிந்து கொண்டால் அந்த உருவகமே ஞானியைப் பற்றியும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

Image result for honey bee 
 
      தேனீயின் வயிற்றுக்குள் இரண்டு பைகள் இருக்கின்றன. ஒன்று எல்லா உயிரினங்களுக்கும் இருப்பது போன்ற இரைப்பை. மற்றது, தேன் பை. அந்தத் தேன் பையில்தான் மலரில் அது மாந்தும் அமிழ்தம் வைக்கப்படுகிறது.

      பிற உயிரிகள் தன் உணவுக்காக மட்டுமே மலரில் தேன் உண்ணுகின்றன. ஆனால் தேனீ அதனைத் தன்னுள்ளே தனியிடத்தில் தேக்கி வைக்கிறது. அதுபோல், ’வயிறு வளர்ப்பதற்காக’ மத நூற்களின் தத்துவங்களை வாசிப்பவர்களிடம் அந்தத் தத்துவங்களே ‘மலம்’ ஆகிவிடுகின்றன. 

      ஆனால், ஞானியோ சமய நூற்கள் தரும் செய்திகளைத் தனது உள்ளத்தில் வைத்து உணர்கிறார். அவரது இதயம்தான் அவரின் தேன் பை.

      தேனீயின் வயிற்றுக்குள் உள்ள தேன் பை ஒரு வேலையைச் செய்கிறது. அதாவது, மலரில் எடுத்த அமிழ்தம் (nectar) கடினமான சிக்கலான அமைப்புக் கொண்ட சர்க்கரையாக (complex sugar) உள்ளது. தேனீயின் தேன்-பையில் சுரக்கும் நொதியம் (enzyme) அதனை எளிய சர்க்கரைகளாக உடைக்கிறது. அதுவே தேன். இந்த செயற்பாட்டை அறிவியல் ”உள்மாற்றம்” (inversion) என்று அழைக்கிறது.

      அதுபோல், ஞானி சமய நூற்களில் இருந்து உள்வாங்கும் சிக்கலான தத்துவங்கள் அவரின் அகத்தில் பொங்கும் உள்ளுணர்வால் ஞானமாக மாறுகின்றன. உள்ளுணர்வு அல்லது உள்ளுதிப்பு என்பதே ஞானியில் நிகழும் ’உள்மாற்றம்’ (inner transformation) ஆகும்.

      அந்த உள்ளுணர்வின் உதிப்பினை சூஃபி ஞானிகள் ”இல்ஹாம்” என்னும் கலைச்சொல்லால் அழைக்கின்றனர்.

      ஞானிகள் தரும் ஞானத் தேன் நம் அகத்திற்கு இன்சுவை நல்கிச் சுகம் தருவது மட்டுமல்லாது அறியாமை என்னும் அகப்பிணியை நீக்கும் அருமருந்தாகி நலமும் நல்குகின்றது.

      இங்கேதான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அதாவது, சில ஈக்கள் தாமும் தேனீதான் என்று வாதாடுகின்றன. அதில் இன்னும் சில ஈக்கள் தேனீயாக வேடமிட்டு உலவுகின்றன. அவை சமயக் கிரந்தங்கள் என்னும் பூக்களில் உள்ள அமிழ்தத்தைத் தாமும் உட்கொள்கின்றன. ஆனால் தேனீயின் ”அக அமைப்பு” அவற்றுக்கு இருப்பதில்லை. எனினும் அவை தாமும் தேன் தருவதாகப் பீற்றிக்கொண்டு வாந்தி எடுக்கின்றன. அதுவே தேன் என்றும் விளம்பரப் படுத்துகின்றன. அவற்றை உண்போர்க்கு அகப்பிணி இன்னும் பெருகி முற்றுகிறது.

      இத்தகைய ஈக்களை மனிதர்களிலும் காண்கிறோம். அவற்றிடம் ’நான்’ என்னும் ஆணவ மலத்தின் துர்நாற்றம் ஓங்கியிருக்கும். அவை ’ஞானி’ அல்ல, ’நான்-ஈ’. அந்த ஈக்கள் ஞானப் பிரசங்கம் புரிகின்றபோது அந்த வாந்தியின் நாற்றத்தால் நமக்குக் குமட்டுகின்றது. 

      எனவே, தோற்றத்தை வைத்துத் தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்ய வேண்டாம். ஒருவேளை அது தேனீ வேடமிட்ட ஈயாக இருக்கக் கூடும். அது தருவது தேனா அல்லது வாந்தியா என்பதை வைத்து அது தேனீயா அல்லது ஈயா என்று முடிவு செய்க. ஏனெனில் தேனீயாக வேடமிட்டிருந்தாலும் ஈயால் தேன் தர இயலாது.

      ”ஞானி என்று சொல்லிக்கொள்ளும் எல்லாரிடமும் கையைக் கொடுத்துவிடாதே. ஞானியராக வேடமிட்ட பல சாத்தான்கள் உலவுகின்றன” என்று எச்சரிக்கின்றார் சூஃபி மகான் மவ்லானா ரூமி. 

Friday, October 20, 2017

அங்கைத் துளி




இறைவன் மிகப் பெரியவன்”. இந்தப் பொருள் அமைந்த அரபி மொழி வாசகம் “அல்லாஹு அக்பர்“ என்பது.

ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை என்னும் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்துள்ள முறை. வைகறை நண்பகல், பிற்பகல், அந்தி மற்றும் இரவு என்னும் ஐவேளைக்கும் தொழுகைக்கு வருமாறு பள்ளிவாசலிலிருந்து பக்தர்களுக்கு அழைப்பு ஒலிக்கப்படுகிறது. அதன் ஆரம்ப வாசகமாக ”அல்லாஹு அக்பர்” என்பதே அமைந்திருக்கிறது. தொழுகையின் ஆரம்ப வாசகமும் அதுவே.



Related image

வைகறைத் தொழுகைக்கான அழைப்பில் மட்டும் இடையே ஒரு வாசகம் அதிகமாகச் சேர்த்துச் சொல்லப்படுகிறது. “தூக்கத்தை விடத் தொழுகை மேலானது” (அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்) என்பது அந்த வாசகம். வைகறையில் மக்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதால் அவர்களை எழுப்புவதற்காக இந்த வாசகம் ஒலிக்கப்படுகிறது. பள்ளியறையை விட்டுப் பள்ளிவாசலுக்கு வருமாறு பக்தர்களுக்குப் பரமனே பாடுகின்ற பள்ளியெழுச்சி இது!

இறைவன் மிகப் பெரியவன் என்று சொல்வது மற்றதெல்லாம் சிறியவை என்னும் கருத்தையும் உணர்த்தி நிற்கின்றது. இறைவன் எவ்வளவுப் பெரியவன்? என்னும் வினாவையும் அது எழுப்புகின்றது.

கடுகை விடவும் பாறை ஒன்று பெரியதாக இருக்கிறது. ஆனால் இரண்டுக்குமே அளவு இருக்கிறது. கடுகை விடவும் பாறை பத்தாயிரம் மடங்கு பெரியதாக இருக்கலாம். அப்படி வைத்துக்கொண்டால், அந்தப் பாறையை விட ஒரு மலைக்குன்று லட்சம் மடங்கு பெரியதாக இருக்கும். எனவே, கடுகை விட அந்த மலைக்குன்று பத்தாயிரலட்சம் மடங்கு பெரியது என்றாகிறது. அந்த மலைக்குன்றை விட இப்பூமி பத்து கோடி மடங்கு பெரிதென்று சொன்னால் அந்தக் கடுகை விட இப்பூமி நூறாயிரலட்சங்கோடி மடங்கு பெரிதென்று ஆகிறது. எப்படியோ, பூமி மிகப் பெரிது என்றபோதும் கடுகுக்கும் ஓர் அளவு இருக்கிறது. பூமிக்கும் ஓர் அளவு இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு உரைக்க முடிகிறது.

அதுபோல் இறைவனைப் படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது அவனது தகுதிக்கும் இறைப்பண்புக்கும் அழகல்ல. இறைவன் மனிதனை விட இத்தனை மடங்கு பெரியவன் என்று ஒப்பிட்டுரைக்க ஒல்லுமா? மனிதனுக்கு அளவு உண்டு. இறைவனுக்கும் ஓர் அளவு இருக்கும் எனில் ஒப்பிட்டுப் பார்த்து இவ்வளவு மடங்கு பெரியவன் என்று சொல்லலாம்.

இறைவன் மிகப் பெரியவன் என்று ஒப்பீட்டு ரீதியாக ஏற்றுயர்படியில் (superlative) சொல்லப்பட்டுள்ளது. எனினும், இறைவனுக்கு ஓர் அளவு மட்டுக் கிடையாது. அவன் எல்லையற்றவன், அளவற்றவன். எனினும், பாமரர்க்கும் இறைச் செய்தி சேர வேண்டும் என்னும் கருணையால்தான் இப்படி ஒப்பீட்டுயர்வாகச் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி அவனது அலகிலா அருளும் அளவிலா அன்பும்தான்.

இறைவனைப் பெரியன் என்றும் பெரியோன் என்றும் வருணிப்பதைத் தமிழில் சைவ மற்றும் வைணவச் சமய நூற்களில் காண்கிறோம்.

இறைவன் எவ்வளவு பெரியவன் என்னும் கேள்வி கடைந்நிலை பக்தர்களின் மனங்களில் எழுகையில் அதற்கு அவர்களின் அறிவு எவ்வளவுக்குக் கற்பனை செய்து வியக்க ஏலுமோ அவ்வளவு என்று ஞானிகள் உரைக்கின்றனர். எப்படியோ இறைவனின் மேன்மையை, மகத்துவத்தை மக்கள் உணர்வதுதான் நோக்கம் என்பதால் குழந்தைக்குத் தாய் சொல்வது போல் அப்படிச் சொல்கின்றனர்.
 
Related image 
 
இறைவன் எவ்வளவு பெரியவன் என்பதற்கு மாணிக்கவாசகர் ஒரு மனச்சித்திரம் தருகிறார். இந்தப் பிரபஞ்சத்தின் விரிவை முதலில் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். உருண்டை வடிவுள்ளதாகக் கோளங்களும் கிரகங்களும் விண்மீன்களும் அன்ன பிறவும் விரவிக் கிடக்கின்றன. அவை நூற்றொரு கோடிக்கும் மேலே இருக்கும் என்று சொல்கிறார். அந்த அண்டசராசரங்கள் எல்லாம் இறைவன் முன் தூசு துகள்கள் போல் சிறியவையாம். எதைப்போல என்பதற்கும் உவமை ஒன்று உரைக்கிறார்:

”நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறியவாகப் பெரியோன்”.

வீட்டின் ஜன்னலில் உள்ள விரிசலின் வழியே சூரியச் சுடர் உள்ளே வந்து விழுகிறது. அந்த வெய்யிற் கதிரில் பார்த்தால் சிறு சிறு தூசித் துகள்கள் அலைவது தெரியும். இறைவனுக்கு முன் முழுப்பிரபஞ்சமும் அப்படிப்பட்ட ஒரு துகள் போல் சிறியதாகிவிடும். அவ்வளவு பெரியவன் இறைவன் என்று அவர் சொல்கிறார்.
  Related image



இத்தாலி நாட்டில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்துவப் பெண் ஞானியான சியனாவின் புனித கேத்தரீன் சொல்வதையும் பார்ப்போம்:

”இறைவனின் பாதம்
மிகவும் பரந்து விரிந்தது

இப்படிச் சொல்லலாம்,
இப்பூமி முழுதுமே
அவனது விரலொன்றின் பகுதி

இப்பூமியின் காடுகள் எல்லாம்
அவனது ஒற்றை முடியின்
வேரிலிருந்து வருவன

அப்படியிருக்க
எதுதான் சன்னிதி இல்லை?

நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?”

Related image 

இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கும் எவரும் இறைவனின் மகத்துவத்தை உணராமல் இருக்க முடியாது போலும். மாணிக்கவாசகர் சொன்னது போலவும், கேத்தரீன் சொன்னது போலவும் டார்ஜீலிங் மலைகளின் அழகை ஆழ்ந்து அவதானித்த ரஸ்கின் பாண்ட் “மழைத்துளி” என்னும் அழகான அற்புதமான கவிதையில் இறைவன் பெரியோன் என்னும் தனது வியப்பை நமக்குப் பறிமாறுகிறார்:

தன்னில் முழுமையான இந்த இலை
மரமொன்றின் ஒரு பகுதி மட்டுமே

தன்னில் முழுமையான இம்மரம்
கானகத்தின் ஒரு பகுதி மட்டுமே

அந்தக் காடோ
இந்த மலையில் தொடங்கிக்
கடல் வரை ஓடிக்கிடக்கிறது

தன்னில் முழுமையான அக்கடல்
ஒரு மழைத்துளியைப் போல்
ஓய்ந்துகிடக்கிறது
இறைவனின் உள்ளங்கையில்.
     
  இந்த மேற்கோள்களில் எல்லாம் இறைவனின் கை என்றும் பாதம் என்றும் பேசப்படுபவை குறியீடுகளாக அமைவன. அவை இறைவனின் அலகிலா அருளையும் அளவிலா அன்பையும் சுட்டுகின்றன. இறைவனின் உள்ளங்கை அளவற்று விரிவது. அதில் இப்பூமியில் உள்ள கடல்களைப் போல் கோடானு கோடி கடல்கள் சேர்ந்தாலும் ஒரு மழைத்துளி போன்றே தெரியும். ஏனெனில் அவனது அருளுக்கு எல்லை இல்லை.



Tuesday, October 10, 2017

கவிக்கோ கவிதைகளில் விரியும் ஞான மரபுகள் - part2.



ஞான மரபுகள் சங்கமித்து எழுந்த நூற்கள்

கவிக்கோ அவர்கள் அனைத்துச் சமயங்களின் ஞான மரபுகளையும், இன்னும் சொல்லப் போனால் நாத்திகம் பேசுகின்ற தத்துவ மரபுகளையும்கூட உள்வாங்கிச் சிந்தித்தவர் என்பதில் அவருக்கு முன்னோடியாக நாம் ஓஷோவை மட்டுமே சொல்ல முடியும். உலகின் ஞான மரபுகள் அனைத்தையும் சார்ந்து அவர் தனது சொந்த நூலகத்திலே ஒரு லட்சம் நூற்களை வைத்திருந்தார். அவை அனைத்தையும் படித்து முடித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் தனது சீடர்களிடம் ஆற்றிய உரைகள் எழுத்துப்பெயர்ப்புச் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் ஏறத்தாழ அறுநூற்றைம்பது நூற்களாக வெளிவந்திருக்கின்றன.

ஓஷோவின் நூற்களைப் படிப்பவர்கள்கூட சொல்கின்ற ஒரு முதன்மையான குற்றச்சாட்டு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், அவர் ஆத்திகரா அல்லது நாத்திகரா என்றுகூட தெளிந்து முடிவுகட்ட முடியாதபடிக்கு முரணாகப் பேசுகிறார் என்பது. ஓஷோவைப் பற்றி டாட்கர் ருத்ரன் அவர்கள்கூட சொன்னார், “ஓஷோ முரண்படப் பேசிப் பேசியே முரண்பட்டவர் போல் தோன்றுகிறார்” என்று. ஆனால் அதெற்கெல்லாம் அடிப்படையாக அவரது ஞானத் தெளிவு இருந்தது என்பதை அவ்வளவு எளிதாக ஒருவர் அறிந்துவிட முடியாது. அதற்கு மிகக் கடினமான மனவுழைப்புத் தேவைப்படுகிறது.

ஓஷோவுக்குப் பிடித்த அதே ’முரண்’ என்னும் சிந்தனை உத்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதை அவரின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்த யாவரும் அறிவார்கள். 
Related image

முரண்பாடாகப் பேசுவது என்பது வேறு. முரண் என்பதை ஓர் உத்தியாகக் கொண்டு அதன் வழியாக உண்மை உரைப்பது என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்பவர்கள் ஓஷோ, கவிக்கோ போன்றவர்களின் ஆக்கங்களைச் சுவைத்துப் பயன்பெற முடியாது.

கவிக்கோ ஆரம்பக் காலம் முதற்றே தனது படைப்புக்களில் பயன்படுத்தி வரும் ஓர் அற்புதமான உத்தி முரண் என்பது. அழகியல் நோக்கில் அதை அவர் எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

”அவளைப் பார்க்கிறேன். பகலால் செய்த முகம், இரவால் செய்த கூந்தல். அவளின் கண்ணைப் பார்க்கிறேன். வெள்ளை வானில் கறுப்பு நிலா”.

காதலைச் சொல்ல முரணை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதற்கும் ஓர் உதாரணம் காட்டுகிறேன். அந்தக் கட்டுரையின் தலைப்பே “என் வண்டு முள்ளை மொய்க்கிறது” என்று முரணழகு காட்டுகின்றது. அதனுள் அவர் எழுதுகிறார்:

“அவள் முதல் பார்வை வீசினாள்; முள் தைத்தது. மறு பார்வை வீசினாள்; மலர் விழுந்தது.
அவள் அதிசயமானவள். முள்ளை மலரால் எடுத்துவிட்டாள்.
அந்த முள்ளும் அதிசயமானது. அதில் தேன் இருந்தது.”

இந்த முரண் என்னும் உத்தி முழு வீச்சில் வெளிப்பட்டிருப்பது அவருடைய ’பித்தன்’ என்னும் கவிதை நூலில்தான். அதிலிருந்து ஓர் உதாரணம் காட்டவேண்டும் என்றால் அந்நூலின் கவிதைகளில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட “புத்தகம்” என்னும் கவிதையின் முன்பகுதியைச் சொல்லலாம்:

“பித்தன்
மழைக்காகப்
பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த
புத்தகங்களைப் பார்த்து,
’புத்தகங்களே
சமர்த்தாயிருங்கள்.
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்’ என்றான்.”

ஆலாபனையும் பித்தனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அவை இரட்டைப் பிள்ளைகள். ”எனக்குள் இருவர் இருக்கின்றனர். ஒருவன் பாடகன். மற்றொருவன் பித்தன்” என்று கவிக்கோ ‘ஆலாபனை’ நூலின் முன்னுரையில் சொல்கிறார். இந்த இருவருக்கும் இரு ஆன்மிக ஆளுமைகளை ஒப்புமை கூற வேண்டும் என்றால் அவருடைய ஆலாபனையின் பாடகன் மௌலானா ரூமியை நினைவூட்டுகிறான், அவருடைய பித்தன் ஓஷோவை நினைவூட்டுகிறான் என்று சொல்லலாம்.

பித்தனின் முன்னுரையாக அவர் எழுதும் கவிதையில் பித்தனை அவர் இப்படி அறிமுகப்படுத்துகிறார்,
“என் ‘ஆலாபனை’யின் பாடகன்
’நேர்’களின் ரசிகன்.

பித்தன்
‘எதிர்’களின் உபாஸகன்.

எந்த நதியானாலும்
எதிர் நீச்சலே போடுபவன்.

காரணம், அவன்
உண்மையின்
பின் பக்கத்தைப்
பார்த்துவிட்டவன்.

அதனால்
அறிவுச் சிறையிலிருந்து
விடுதலை அடைந்தவன்.

அவன்
இருளால்
ஒளி பெற்றவன்

மர்மங்களின் ரசிகன்.

அதனால்
‘இருளிலிருந்து ஒளிக்கு’ என்ற
முழக்கத்திற்கு எதிராக
‘ஒளியிலிருந்து இருளுக்கு’
என்று முழங்குபவன்.

உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன்.

அவன்
புறப்படுகிறவன் அல்ல;
திரும்புகிறவன்.

அவன்
’இல்லை’யின் தூதுவன்.

’இல்லை’ அவனது
மகா வாக்கியம்;
ஒற்றைச் சொல் வேதம்.

சீழ் நிரம்பிய
கொப்புளங்களை
முலை என்று சப்பும்
குழந்தைகளைப்
பரிகசிப்பவன்.

தீபங்களை
ஏற்ற அல்ல;
அணைக்க வந்தவன்.

எழுப்ப அல்ல
உறங்க வைக்க
வந்தவன்.

அவன் தேனீ;
அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன்.

எந்தக் கூண்டிலும்
அடைபடாதவன்.

உண்மைக்குப்
பல முகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்

அத்தனை முகங்களுக்கும்
முத்தம் தருபவன்.

முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.”

Related image

இந்த முன்னுரை முழுக்கவும் அப்படியே ஓஷோவுக்குப் பொருந்திப் போகிறது என்றே நான் கருதுகிறேன். இந்தக் கவிதையின் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அவருடைய கட்டுரைகளில் பல இடங்களிலிருந்து விளக்கங்களை நாம் எடுத்துரைக்க முடியும். அதனால் இவ்வரிகள் கவிக்கோவின் ஆளுமையைக் காட்டுவதாகவே நாம் காண வேண்டும் என்று சொன்னாலும், கவிக்கோவை விட இவ்வரிகள் ஓஷோவைத்தான் முழுமையாகக் குறிக்கின்றன என்பதே என் துணிபு. அதற்கு இந்தப் ‘பித்தன்’ நூலிலேயே ஒரு சான்று காட்டலாம். ’அறிக்கை’ என்னும் கவிதையில் அவர் இப்படி எழுதுகிறார்:

“’உன் கொள்கை என்ன?’
என்று பித்தனைக் கேட்டேன்.

‘கொள்கையின்மை’
என்றான் பித்தன்.”

இதனைத் தொடர்ந்து, சத்தியத்தைப் பற்றிய கொள்கையை ஏற்றுக்கொள்வதன் அபாயம் பற்றிப் பித்தன் பேசுகிறான். இது அப்படியே ஓஷோவின் மிகப் பிரபலமான கருத்து ஒன்றினைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஜென் பற்றிய உரையொன்றில் அவர் சொல்கிறார் “உனக்கு ஒரு நம்பிக்கை அமைப்பைத் தரும் எவரும் உன்னுடைய எதிரிதான். ஏனெனில் அந்த நம்பிக்கை அமைப்பே உன் கண்களுக்குத் தடையாகிவிடும். உன்னால் உண்மையைப் பார்க்க முடியாது. உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வமே மறைந்துவிடுகிறது.”

கோ சுவான் என்னும் தாவோயிச ஞானியைப் பற்றிப் பேசும்போது ஓஷோ சொல்வார், “நான் எல்லா லட்சியங்களுக்கும் எதிரானவன், நான் எல்லாக் கொள்கைகளுக்கும் எதிரானவன். ஏனென்றால் அவை எல்லாம் உங்களுடைய மனம் வலிமை பெற உதவுகின்றன. ஆனால் நீங்கள் உங்கள் மனத்திற்கு அப்பால் செல்ல உங்களுக்கு உதவுவதே இங்கே என் பணி” (நூல்: “Tao: The Golden Gate”, Vol.2).

’பித்தன்’ நூலின் தலைப்பு கலீல் ஜிப்ரானுடைய நூற்தலைப்பு என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1918-இல் அவர் எழுதிய “The Madman” என்னும் நூல் வெளிவந்தது. தன்னுடைய முகமூடிகளைத் தான் இழந்துவிட்டதால் உலகின் பார்வையில் தான் ஒரு பித்தன் ஆகிவிட்டதாக அந்த நூலை அவர் தொடங்குகிறார்.

”பிரளயம்” என்னும் கவிதையில் கவிக்கோவின் பித்தன் இப்படிப் பேசுகிறான்:

“’இல்லை’யின்
தூதுவன் நான்.

‘இல்லை’ என்
மகாவக்கியம்.

’இல்லை’ என்
ஒற்றைச் சொல் வேதம்.”

இந்த வரிகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கவிக்கோ எழுதிய “இல்லையிலும் இருக்கிறான்” என்னும் கட்டுரையை நாம் படிக்க வேண்டும். அதில் அவர் சொல்லும் கருத்துக்கள் மதவாதிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கலாம். அதில் அவர் சொல்கிறார்:

“உண்மையில் ஆத்திகம், நாத்திகம் என்று பேதம் பாராட்டுவது பாமர நிலையாகும். ஞானியர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் சமமாகவே மதிக்கின்றனர். அவர்கள் இறைவன் இல்லை என்போரை ஏசுவதில்லை. அப்படியும் சொல்ல இடமிருக்கிறது என்றே கூறுகின்றனர்.”

தொடர்ந்து அவர் ‘இல்லை’ என்னும் கருத்து தருகின்ற ஞானங்கள் என்னென்ன என்பதையெல்லாம் ஆன்மிக நோக்கில் விளக்கிச் செல்கிறார். அதில் அவர் இஸ்லாத்தின் மூல மந்திரமான கலிமாவிற்கும் வந்து சேர்கிறார். அங்கே சொல்கிறார்:

“இஸ்லாத்தின் மகாவாக்கியம் ‘இல்லை இறைவன்’ என்றே தொடங்குகிறது. அதாவது உலகம் எதை எதை இறைவன் என்று நினைத்து வணங்குகிறதோ அவையெல்லாம் இறைவன் இல்லை என்று பொருள். இவ்வாறு விலக்கிய பிறகு எது எஞ்சுகிறதோ அதுவே இறைவன். ‘இல்லை இறைவன்; இறைவனைத் தவிர’ என்பது முழுமையான மகா வாக்கியம். ‘இல்லை இறைவன்’ என்பதில் இல்லையே இறைவன் என்ற பொருளும் இருக்கிறது.”
    
  கவிக்கோவை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு ஒன்று தெரியவரலாம். அதாவது இல்லை என்னும் மறுப்பினுள்ளும் அவர் இறைவனையே காண்கிறார். இந்த ஞானம் கவிச்சக்கரவர்த்தி கம்பனிடமும் இருந்தது. ’இரணியன் வதைப்படல’த்தில் அதை அவன் வெளிப்படுத்துகிறான். ’இறைவன் இல்லை’ என்று சொல்லும் இரணியனிடம் அவனது மகன் பிரகலாதன் சொல்வதாக அந்த வரி வருகிறது: “நீ சொன்ன சொல்லினும் உளன்”.

கவிக்கோவின் நாற்பொருள்

       கவிக்கோ அவர்களின் எழுத்துக்களில் நாம் மீண்டும் மீண்டும் சந்திக்கின்ற பொருண்மைகள் எவையெவை என்று அலசிப் பார்த்ததில் அவரது நாற்பொருள் என்று சொல்லத்தக்க அளவில் பூ, பெண், இசை, இறைவன் ஆகிய நான்கும் அமைந்திருப்பதாகக் காண்கிறேன். இந்நான்கினையும் இணைக்குமொரு சரடாகக் காதல் இருப்பதைப் பார்க்கிறேன்.

Related image

      பூ, பெண், இசை, இறைவன் ஆகிய இந்த நான்கு புலனங்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகக் காணுகின்ற பார்வை, காட்டுகின்ற புலப்பாடு அவரது எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன. அவரது நூற்களை கவனமாக வாசித்தால் நான் சொல்வதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இங்கே விரிவாகப் பேசுவதற்கு நேரமின்மையால் ஒரு சில மேற்கோள்களை மட்டும் உங்களுக்கு எடுத்துக்காட்ட விழைகிறேன்.

      ”பூப்படைந்த சப்தம்” என்னும் நூலிலே உள்ள முதலிரு கட்டுரைகளை அவதானித்தால் இந்த நான்கு பொருண்மைகளுமே இருக்கின்றன. “பூப்படைந்த சப்தம்” என்னும் முதற்கட்டுரை இசையைப் பற்றிப் பேசுகிறது. அதில் அவர் சொல்கிறார்:

      ”இசையில் ஓர் அமானுஷ்யம் இருக்கிறது. அதில் படைப்பின் ரகசியமும் இறைவனின் மர்மமும் மறைந்திருக்கின்றன. / இசையை அறிகிறவன் படைப்பின் ரகசியத்தை அறிகிறான். இறைவனின் மர்மத்தை அறிகிறான்”

      இதே கட்டுரையில் இன்னோர் இடத்தில் சொல்கிறார்: “இசை இறைவனுடைய வேதம். அதில் எல்லா ஞானங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன”

      இப்படியாக இசையை இறைவனுடன் தொடர்புடைய ஒன்றாகக் காட்டுகின்ற கவிக்கோ அவர்கள் அதனை “பூப்படைந்த சப்தம்” என்று வருணிக்கின்றார். பூப்படைதல் என்னும் சொல்லே பூவையும் பெண்ணையும் தொடர்புறுத்திப் பார்க்கின்றதொரு தமிழ்ச்சொல்லாடல். அச்சொல்லினை இங்கே இசைக்குச் சொல்லியிருப்பதன் மூலம் பூ பெண் இசை என்னும் முப்பொருளையும் தொடர்புறுத்திப் பார்க்கின்றதாகவும் ஆகிறது.
      
 ”பூவாலயம்” என்பது அந்நூலிலுள்ள இரண்டாம் கட்டுரை. அதிலே அவர் பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கும் ஒரு வரி மிக வியப்பானது. “பெண் அழகாகத் தெரிவதன் காரணம் அவள் பூவை ஞாபகப்படுத்துவதால்தான். / மேலும் அவளும் ஒரு பூவாகவே இருக்கிறாள் – சதைப்பூ!” என்று எழுதுகிறார். இந்த வரியைக் கவிக்கோவைத் தவிர வேறு யாராவது எழுதியிருந்தால் பெரும் பிரச்சனை ஆகியிருக்கலாம். மாதர் சங்கங்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்திருக்கலாம். ஆனால் கவிக்கோ எழுதுகிறார் என்றால் அவர் எந்தத் தளத்திலிருந்து எழுதுகிறார், அவருடைய சிந்தனை இயங்குகின்ற தளம் மிக மேலானது, ஞானமில்லாமல் எழுதமாட்டார், அவர் இப்படிச் சொல்கிறார் என்றால் அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கும் என்றெல்லாம் தமிழுலகம் புரிந்து வைத்திருப்பதால்தான் அப்படி அவர் எழுதியதை யாரும் எதிர்க்கவில்லை. கவிக்கோ இப்படிச் சொல்லுகின்ற இந்தப் பார்வையும்கூட தமிழ் கண்ட அறிவர்களிடம் முன்பே இருந்திருக்க வேண்டும். அதனாற்றான், பெண்களைப் ”பூவையர்” என்று குறிப்பிடுகின்ற சொல்லாடல் தமிழில் உள்ளது.

      பெண்ணைச் சதைப்பூ என்று பூவுடன் தொடர்புறுத்தி இங்கே சொன்னதைப் போலவே, ‘ரகசியப்பூ’ என்னும் நூலில் ஓரிடத்தில் அவர் பெண்ணை இசையுடன் தொடர்புறுத்திச் சொல்லும் வரியும் நினையத்தகும்:

      ”நீ
      இசையின்
      சதை வடிவம்”

      பெண்ணையும் இறைவனையும் அவர் தொடர்புறுத்திப் பேசுகின்ற அற்புதமான ஒரு ”கஸல்” வரி “மின்மினிகளால் ஒரு கடிதம்” என்னும் நூலில் தொடக்கமாக அமைந்திருக்கிறது. அவர் சொல்கிறார்:

      ”இறைவா!
      நம் சங்கமத்திற்காகத்தான்
      பெண்ணிடம்
      ஒத்திகைப் பார்த்துக்
      கொண்டிருக்கிறேன்”

      பெண் என்னும் பொருண்மையே இறைவனுக்கான ஒரு குறியீடு என்பதாக அவர் கண்டிருக்கிறார், சூஃபிகள் ’நாயகி-நாயக’ பாவனையில் இறைவனைக் காதலி என்றழைக்கும் மரபினை அவரின் இதயம் சரியான நோக்கில் உள்வாங்கியிருக்கிறது என்பதை இந்நூலின் முன்னுரையில் அவர் எழுதுகின்ற வரிகள் நமக்குக் காட்டும்:

      ”இந்த வயதில் காதல் கவிதைகளா என்று கேட்டார்கள். இந்த வயதில்தான் காதல் கவிதைகள் மாமிச அழுக்கில்லாமல் தூய்மையாக உதிக்கின்றன. / மேலும் இந்தக் காதல் வெறும் பெண் காதல் அல்ல; அனைத்தையும் பெண்ணாகக் கண்டு கட்டித் தழுவிக் கொள்ளும் காதல். / இந்தக் காதலில் இறைவனும் காதலியாகிவிடுகிறான். / தன்னை மறப்பதே ஞானம். காதல் இதைச் சாத்தியமாக்குகிறது. / உண்மையில் காதல் என்பது இறைவனைச் சுவைப்பதுதான்.”

      இந்த வரி இன்னொரு வரியை நினைவூட்டுகிறது. ”ரகசியப்பூ” என்னும் நூலில் அவர் இப்படி எழுதுகிறார்:

      ”கவிதையில்
      பெண் ருசி
      இருக்கிறது”

      ”பூவாலயம்” என்னும் கட்டுரையில் பூவுடன் பெண்ணைத் தொடர்புறுத்திப் பேசுகின்ற அதே நேரம் பூவையும் இறைவனையும் தொடர்புறுத்திக் காட்டுகின்ற வரிகளையும் காண்கிறோம். “ஒவ்வொரு பூவும் ஓர் ஆலயம். / செயற்கை ஆலயம் அல்ல; இயற்கை ஆலயம். / மனிதர்கள் கட்டிய ஆலயமல்ல, இறைவன் தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட ஆலயம். / அழகானவனுக்கான அழகான ஆலயம். / பூ என்றால் அழகு; அழகு என்றால் உண்மை; உண்மை என்றால் இறைவன்.” என்று அவர் சொல்கிறார்.

பூ ஓர் ஆலயமாக இருப்பதை மேலும் மேலும் விரித்துரைத்துச் சென்று அக்கட்டுரையின் இறுதியில் அவர் சொல்கிறார்: “பூவின் பக்தன் பூவாகிவிடுகிறான். அவன் முள்ளாக இருப்பதில்லை. / ஓ! இந்த மனிதர்கள் ஏன் இந்த அழகான பூ மதத்தை விட்டு விட்டு முள் மதங்களை எடுத்துக் கொண்டார்கள்? / பூக்களில் எத்தனையோ வகை. ஆனால் தேன் ஒன்றுதான். / இது தேனீக்குத்தான் தெரியும். / தேனீயாகிறவன் ஞானியாகிறான்.”

இறுதியாகச் சொன்ன இந்த பூ – தேன் என்னும் குறியீடு, மதம் – ஞானம் என்னும் பொருளைச் சுட்டுவதற்காகக் கவிக்கோ அடிக்கடி உரைக்கின்ற ஒன்று. ”பித்தன்” நூலிலும் ”அறிக்கை” என்னும் கவிதையில் இதைப்போன்றே அவர் சொல்லியிருக்கிறார்:

“மதவாதி
‘என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது’
என்கிறான்

நானோ தேனீயாக இருக்கிறேன்.

பூக்களின் வேறுபாடுகளைத்
தேனீ
இலட்சியம் செய்வதில்லை.

தோட்டத்து வேலிகள்
அதைத் தடுப்பதில்லை.

எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு
என்பதும்
தேன் என்பது ஒன்றுதான்
என்பதும்
தேனீக்கு மட்டும்
தெரிகிறது.

ஒரு பூவின் தேன்
தேனீக்குப் போதாது.”

அன்பர்களே! தேனடையை அறுத்தெடுத்துப் பிழியும்போது நாம் தேனைத்தான் அடைகின்றோம். அந்தத் தேனில் பூக்களின் முகவரிகள் இருப்பதில்லை. எந்தச் செடியில் கொடியில் மரத்தில் பூத்த மலர்களின் தேன் என்று வேறுபடுத்திப் பார்ப்பதற்கு வழியில்லை. கவிக்கோ அவர்களின் கவிதைகளின் தொகுதியை நாம் தேனடை என்று சொல்லலாம். பல்வேறு ஞானமரபுகளில் அவர் திரட்டி வந்த தேன் அதில் இருக்கிறது. அந்த ஞானமரபுகள் என்னும் பூந்தோட்டங்கள் எவை எவை என்பதைக்கூட அவர் மறைத்தவர் அல்லர். அவரின் கட்டுரை நூற்களில் அவற்றின் முகவரியை அவர் நமக்குச் சொல்கிறார். நாமும் தேனீக்களாக வேண்டும், பேதங்கள் பாராது தேன் திரட்டவேண்டும் என்பது அவரின் அவா. அதற்காகத்தான் அந்த ஞானமரபுகளின் முகவரிகளை அவர் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதி சொல்வான், “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் / பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்று. கம்பன் வள்ளுவன் இளங்கோ என்னும் அந்தப் பட்டியலில் நான்காவதாக பாரதியையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுவதுண்டு. அந்தத் தகுதி பாரதிக்கு இருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அவ்வகையில், பாரதிக்குப் பின் ஐந்தாவதாகக் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை நாம் சேர்த்துக்கொள்ளலாம். அந்தத் தகுதி அவருக்கு உண்டு என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.


   (end.)