Saturday, September 9, 2017

ஒரு சூஃபியின் டைரி - 9



பகுதி இரண்டு
நாட்குறிப்பு



நிகழும் தரிசனங்கள் (#57-210)
Image result for sufi lion 
bismillahirrahmanirraheem
 
#57. ஏகத்துவச் சிங்கம்
      குறிப்பிட்ட காட்சியொன்றில் பேருருக் கொண்ட பழுப்புச் சிங்கம் ஒன்றினைக் கண்டேன். வல்ல சக்தி அணியப்பெற்றதாக அது காஃப் மலையுச்சியில் நடந்திருந்தது. அவ்வரிமா அனைத்து இறைத்தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் இறைநேசர்களையும் தின்றுவிட்டது. அவர்களின் சதை அதன் வாயில் இருந்தது. அதில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. “நான் அங்கே இருந்தால் அவர்களைத் தின்றதைப் போலவே என்னையும் தின்றுவிடுமோ?” என்று நினைத்தேன். அதன் வாயில் என்னைக் கண்டுகொண்டேன். அது என்னைத் தின்றது. தெய்வீக ஏகத்துவத்தின் மற்றும் அதன் ஆட்சியதிகாரத்தின் பொறாமை மிக்க கோபத்திற்கு இஃதொரு உவமானம். தெய்வீகத்தின் ஏகத்துவத்திற்கு சாட்சி பகர்வோர் மீதும் அது நிகழ்கிறது. நித்திய மகத்துவத்தின் திருப்பண்புகளை அரிமாவின் வடிவில் மெய்ப்பொருள் வெளிப்படுத்துகிறது. அதனுடைய தாத்பரியம் யாதெனில், அழிவின் படித்தரத்தில் அறியாமையின் கோபத்திற்கு இறைஞானியும்கூட ஒரு கவளம் என்பதே.

 Related image
#58. “காதலின் படித்தரத்தில் என்னைத் தேடு”
      எனதொரு திரைநீக்கத்தில் நான் தியானத்தில் அமர்ந்திருப்பதாகவும் வானவருலகின் பறவைகளை வேட்டையாடுவதாகவும் என்னைக் கண்டேன். அப்பறவைகள் இறை வல்லமையின் உலகிற்குப் பறந்து செல்வன; திக்ரு என்னும் இறைநாம தியானத்தின் கூடுகளில் வசிப்பன. வழிபாடுகளின் வடிவங்களில் நான் உயர்த்தப்பட்டேன். நித்தியத்தில் பயணிப்பதே எனது சங்கற்பமாக இருந்தது. ஆனால் வழிபாடுகளின் வெளிக்கோலங்களை விட்டுக் கிளம்பிட எனக்கு ஏலவில்லை. மேலான இறைவனை நான் ”மிக அழகிய வடிவில்” கண்டேன். மறைவுலகிலிருந்து சட்டென்று அவன் என்மீது கவிந்தான். நான் சுயக்கட்டுப்பாட்டை இழந்து தேம்பியழுதேன். அவ்வடிவம் என்னை நெருங்கிற்று. அடைக்கலம் நல்கிற்று. எழுகின்ற ஏக்கத்தில் என்னை எரிய வைத்தது. அவனது முகத்திலிருந்து அவன் வெண் ரோஜா இதழ்களைத் தூவுவதாகவும் நித்தில மாலைகள் அணிவதாகவும் தோன்றிற்று. அவன் என்னை விட்டும் ஒளிந்துகொண்டான். பிறகு முன்னை விடவும் அதி அழகிய ரூபத்தில் வெளிப்பட்டான். அவனுடன் இணைந்து போகும்வரை அவனை நெருங்கினேன். அவன் எனது பிரக்ஞையில் சொன்னான், “நீ எங்கே செல்கிறாய்?”. நான் சொன்னேன், “முடிவும் முதலும் அற்ற நித்தியத்திற்கு”. அவன் சொன்னான், “உனக்கு என்ன வேண்டும்?”. நான் கூறினேன், “நித்தியத்தின் சினத்தில் நான் அழிய வேண்டுகிறேன். ஏனெனில் தெய்வீகத்தின் ஆடையை தரிசிப்பதில் நான் திருப்தி அடையவில்லை.” அதற்கவன் சொன்னான், “இஃதொரு நெடும்பயணம். ஆனால் நான் உன்னுடன் வருவேன். பாதையில் உன் கூட்டாளியாயிருப்பேன்.” எனவே நாங்கள் அர்ஷெனும் விதானத்தைக் கடந்து சென்றோம். மறைவின் மறைவிற்குப் பயணமானோம். முதலில் அவன் என்னை விட்டு மறைந்தான். ஒரு மணிக்கூறு கழித்து வல்லமை என்னும் தன்மையில் என் முன் தோன்றினான். அங்கே நான் அழிந்தேன். அப்போது அவன், “காதலின் படித்தரத்தில் என்னைத் தேடு. உலகும் அதிலிருக்கும் அனைத்தும் எனது மகத்துவத்தின் தாக்குதலுக்கு ஒரு பொருட்டே அல்ல” என்று என்னை நோக்கிச் சொன்னான். பிறகு அவன் எதனினும் பேரழகு மிக்கவனாக என்னிடம் தோன்றினான். அத்திருக்காட்சியின் இனிமை என்னில் தங்கிற்று. ஆனால என் ஆசையை அவன் எனக்கு அளிக்கவில்லை. எனவே நான் வைகறை வரை அவனிடம் குறையியம்பிப் புலம்புகின்ற நிலையிலேயே இருந்தேன்.

#59 இறைவனின் கை
      ஒரு மாலை நேரத்தில் ஒளிரும் ஜோதியொன்றைக் கண்டேன். அவ்வொளி யாதென்று அறியேன். அப்போது மேலான இறைவன் எனக்குத் தனது புனிதக் கரத்தைக் காட்டினான். அவ்வொளி தனது கையின் மகத்துவத்திலிருந்து வெளிப்பட்டது என்றெனக்கு உணர்த்தினான். நான் அவனது கை அன்றி வேறெதனையும் காணவில்லை. அதை நான் நேசித்தேன். ஏனெனில் அது ஆன்மாக்களையும் இதயங்களையும் அறிவுகளையும் மாற்றி அமைக்கிறது. இந்த வெளிப்பாட்டினை விடவும் இனிமையான வேறெதனையும் யான் காணேன். இருப்பன யாவும் அவனது விரல்களினிடுக்கில் ஓர் அணு போல் ஆயின. ”அல்லாஹ்வின் மதிப்பிற்குத் தக்கவாறு அவர்கள் அவனை மதிக்கவில்லை. மேலும், மறுமை நாளில்  இப்பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிதான். வானங்கள் எல்லாம் சுருட்டப்பட்டு அவனின் வலக்கரத்தில் இருக்கும். இவர்கள் இணையாக்குவதை விட்டும அவன் மகா தூயோனும் மேலானவமாக இருக்கிறான்.” (குர்ஆன்:39:67) என்று மேலான இறைவன் சொல்ல்லும் ஆயத்தை ஓத நான் ஆயத்தமானேன். இறைவன் மறதியாளரின், அறிவிலிகளின் மனங்களில் விழும் எண்ணங்களையும் தற்காலிக வடிவங்களின் கற்பனைத் தோற்றங்களையும் கடந்தவனாக இருக்கிறான். அவனது திருப்பண்புகள் அனைத்திலுமே அவனுக்குச் சொல்லப்படும் கருத்தியல்களுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பால் இருக்கிறான். அவனது சுயத்திற்கு உவமானமில்லை. அவனது திருப்பண்புகளுக்கும் ஒப்புமை ஏதுமில்லை. “அவனின் உவமை போன்று எதுவும் இல்லை” (குர்ஆன்:42:11) என்று மேலான இறைவனே தன்னைப் பற்றி வருணித்த நிலையில் தான் இருக்கிறான்.

#60 அழகிய முகம்
      நள் யாமத்தும் அதன் பிறகும் நான் தியானத்தில் அமர்ந்தேன், ஒளிகளின் உலகில் பிரக்ஞைகளின் யாத்திரையில் ஆற்றலோங்கும் பேரரசனான (அவனது பெருமையின் ஆற்றலுக்கே மகத்துவம்) இறைவனின் அழகைத் தேடியபடி. சாலையின் நடுவில் திடீரென்று, என்னால் வருணிக்க முடியாததொரு பேரழகைக் கண்டேன். அவன் “மிக அழகிய வடிவில்” இருந்தான். அவனது அழகு மற்றும் பண்புகளி மீது நான் காதலில் வீழ்ந்தேன். அவனை நெருங்கவும் இணையவும் அவனை விட்டு அகலாதிருக்கவும் நான் ஏக்கம் கொண்டேன். பிறகு என்னை நான் தாழ்த்தினேன். அவன் என்னிடம் வந்தான். பிறகு ஒளிந்துகொண்டான். பிறகு நித்தியத்திலும் திரைநீக்கப்பட்டவனாக என்னிடம் தோன்றினான்.  பேரழகு சொட்டும் முகங்கள் கொண்ட அந்த வானவருலகத்து மணப்பெண்களின் முகங்கள் எங்கே? சொர்க்கங்களின் கண்ணழகியர் எங்கே?  ஆதம் மற்று யூசுஃபின் முகங்கள் எங்கே? திருப்பண்புகளின் அழகின் பிரசன்னத்தில், அவனது திருமுகத்தின் மகத்துவத்தின் முன் அவை எல்லாம் எங்கே? இறைவன் அனைத்து உவமானங்களையும் ஒப்புமைகளையும் கடந்தவன்.
Image result for sufi heart
#61 இதயத்தின் விரிவு
      கையில் ஏதோ வைத்திருப்பவனாக அவனை நான் மறைவுலகின் தெருக்களில் கண்டேன். “என் இறைவா! இது என்ன?” என்று கேட்டேன். “உன் இதயம்” என்றான். “உன் கையில் இருக்கும்படிக்கு என் இதயத்திற்குத் தகுதி இருக்கிறதா?” என்று கேட்டேன். அவன் என் இதயத்தை நோக்கினான். சுருட்டி வைக்கப்பட்ட ஏதோ ஒன்றினைப் போல் அது இருந்தது. எனவே அதை அவன் விரித்தான். எனது இதயம் அப்போது அவனது விதான ஆசனம் முதல் பூமி வரை போர்த்தி மூடிற்று. “என் இதயம் இதுவோ?” என்று நான் வியப்புடன் வினவினேன். “இதுதான் உன் இதயம். உள்ளமையில் ஆக விசாலமானது இதுவே” என்று அவன் சொன்னான். அப்போதும் அஃதவன் கையில்தான் இருந்தது. அவன் அதனை வானவருலகின் பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்றான். நானும் அவனுடன் சென்றேன், மறைவின் மறைவான கருவூலத்தை அடையும் வரை. “அதனை எங்கே கொண்டு போகிறாய்?” என்று நான் கேட்டேன். “நித்தியத்தின் உலகிற்கு. அதில் நான் ஆழ்ந்து உள்ளே நோக்கி எதார்த்தங்களின் அற்புதங்களை அதில் படைப்பதற்காகவும் எனது தெய்வீகத்தின் திருப்பண்புகளைக் கொண்டு அதில் நான் என்றைக்குமாக வெளிப்படுவதற்காகவும்” என்று அவன் சொன்னான்.

#62 “அனைத்து இதயங்களும் அருளாளளின் இரு விரல்களுக்கு இடையில் உள்ளன”
      ”முன்னூழியில் நீ இருந்த வண்ணம் உன்னை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று நான் சொன்னேன். “அதைச் செய்ய உனக்கு வழியே இல்லை” என்றான். நான் என்னை மிகவும் தாழ்த்தி “அது எனக்கு வேண்டுமே!” என்றேன். மகத்துவத்தின் பேரொளிகள் தோன்றின. நான் அழிந்து மறைபவன் ஆனேன். வல்லமையின் சுழற்காற்று வந்த பின்னர் காலம் நிலைப்பதில்லை. பிறகு என் பிரக்ஞை விளிக்கப்பட்டது. “’இதயங்கள் எல்லாம் அருளாளனின் இரு விரல்களுக்கு இடையில் இருக்கின்றன. தான் நாடியவாறு அவன் அவற்றைப் புரட்டுகிறான்’ என்று நபி (ஸல்...) அவர்கள் சொன்னதன் அர்த்தம் அறிவாயோ நீ?” என்று கேட்கப்பட்டது. மேலான ஏகனின் விரல்களுக்கு இடையில் நான் அதனையே கண்டேன். அது அவன் தனது காதலரின் இதயங்களைக் கொள்ளை கொண்ட நிலை. அவற்றை அவன் தனது வல்லமையின் களங்களில் வைத்து மாற்றியமைக்கிறான். அவன் என்னை விட்டு ஒளிந்துகொண்டபோது, நித்தியத்தைப் பற்றிய இரு வாக்கியங்களை நான் நினைவு கூர்ந்தேன். தெளிவின் நேரத்திலேயே இந்தத் திரைநீக்கத்தை எனது பிரக்ஞையில் பேருவகையுடன் அருளப்பெற்றேன்.

 Image result for sufi heart
#63 அரச ராஜாளிக்காரனிடம் பறத்தல்
      பிறகு நான் உவகையும் பரவசப் பெருக்குகளும் கணத்தின் நறுமணங்களும் அருளப்பெற்றேன். ஆன்மிக நிலையும் ஆனந்தமும் அவனது அழகிலும் அண்மையிலும் உருகின. மாலைத் தொழுகைகளுக்கிடையே எனது பிரக்ஞை மறைவுலகை நோக்கித் திரும்பிற்று. வானவருலகையும் வல்லமையின் ரகசியத் திறப்புக்களையும் அது நாடிற்று. வானவருலகின் கதவுகளைக் காண்பது போல் என் கண்கள் அசைந்தன. அதனொரு அறைச் சாளரம் திறந்திருந்தது. மேலான மெய்ப்பொருள் என்னை அழகின் பண்பு கொண்டு பார்த்தான். அவனது திருப்தியின் சௌந்தர்யம் அவனிடமிருந்து வெளிப்பட்டது. என் உயிர் அவனிடம் பறந்து போயிற்று. சத்தியப் பரம்பொருள் அதனிடம் கனிவாகவும் விரியும் கருணைகள் நிரம்பியும் இருந்தான். “எதைப் பற்றி நீ கவல்கிறாய்? நான் உன்னுடன் இருக்கிறேன். இருப்பவை அனைத்தையும் படைத்தவன் நானே!” என்றான். பிறகவன் என்னிடமிருந்து மறைந்துகொண்டான். அவனிடம் நான் அடைந்ததன் இன்பத்தில் நான் திளைத்திருந்தேன். நடுநிசியில் நான் விழித்தெழுந்தபோது, மாலைத் தொழுகைகளுக்கிடையில் அவன் வெளிப்பட்ட அதே தன்மையில் தோன்றினான். பிறகவன் என்னை நெருங்கினான். அவனது வல்லமை மற்றும் அழகின் மறைவான அம்சங்கள் வெளிப்பட்டன. படைப்பினத்தின் கதவருகில் அவன் என்னைக் கைப்பற்றினான். அவனது அடையாளத்தில் என்னைப் பறக்கச் செய்தான். இதற்கப்பால் என் நிலையை நான் விவரிக்க இயலாது. ஏனெனில், அந்தப் படித்தரத்திற்குப் பின் பரவசங்களும் சந்திப்புக்களும் தூண்டப்பட்ட பேச்சுக்களும் இருக்கின்றன. அவை எதுவும் சொல்லில் அடங்கா.
Image result for sufi wine
#64 ஒரு மதுப் பாடல்
       ஒரு முறை இப்படி நிகழ்ந்தது, முந்திய நாளின் இரவில் யாரோ எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள், மறுநாள் அந்தித் தொழுகைக்குப் பின் இசை கேட்க வருமாறு. பாடகன் பாடினான்:
      செக்கச் சிவந்த கண்களுடனும் இருந்தும்
      திராட்சைத் தொலிகளின் மூக்கில் ரத்தம் வழியாதபடி
      வைகறையில் தோன்றுவது யார்?
      மது வார்ப்பவரே!                               
      கழுத்து வரை கவலைகளுடன் வந்திருப்போரின்
      ஆன்மாக்களை விடுதலை செய்யுங்கள்
      களிப்பும் சுயமறைவும் ஒளிச்சுடர்களும் வெளிச்சங்களும் தவிர வேறு எதுவும் இல்லை எனும்போதும் விரிவு நிலையின் பரவசங்களும் அரவணைப்புக்களும் தொடர்புகளும் உரையாடல்களும் என்னை ஆட்கொண்டன. இந்தக் கணங்களும் நிகழ்வும் பிரக்ஞையுணர்வு மிக்க அந்த உரையாடலால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

#65 தெய்வீகச் சிரிப்பின் படித்தரம்
      நான் அடங்கி அங்கிருந்து கிளம்பினேன். மறுநாள் வரை தியானத்திலிருந்தேன். இரவு வரும் வரை இந்த அகநிலைகளை நினைவு கூர்ந்தேன். இரு மாலைத் தொழுகைகளுக்கு இடைப்பட்ட நேரத்திலும் தொழுதேன். நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், “என்ன நடக்கிறது? நேற்றிரவு இசை கேட்கையில் மறைவின் அற்புதங்கள் எதுவும் வெளிப்படவில்லையே?” அப்போது திடீரென்று வானவருலக ஜன்னல்களில் மேலான இறைவன் வெளிப்படக் கண்டேன். அழகும் வல்லமையுமாய் அவன் என்மீது கவிந்தான். விரிவின் பேருணர்வில் நான் அவனிடம் சொன்னேன், “இசை நிகழ்வின்போது நீ எங்கே ஒளிந்துகொண்டிருந்தாய்?”. மேலான இறைவன் சொன்னான், “நான் உன்னுடன் இருந்தேன், இப்போது இங்கே நீ பார்ப்பது போலவே!”. நான் சிரித்து அழுதேன். எனது பிரக்ஞையும் மனமும் இதயமும் உவகை கொண்டன. நான் சொன்னேன், “என் இறைவா! நான் ஏன் உன்னை அங்கே காணவில்லை?”. அவன் சொன்னான், “நான் உன் பின்னும் உனக்கு மேலேயும் இருந்தேன், உன்னைக் கண்காணித்தபடி. உனக்கு இடமும் வலமும் இருந்தேன், இப்போது நீ என்னைப் பார்ப்பதைப் போல்”. அவன் சொன்னது போன்றேயும் அவன் வெளிப்பட்டது போன்றேயும் நான் அந்த நிகழ்வுகளை அனுபவிப்பது போல் அப்போதிருந்தது. பாதி இரவு கழிந்த பின் நான் எழுந்து நின்று, அவனது செயல்களின் பண்பில் அல்லாது நித்திய தெய்வீகமாகத் தோன்றும்படி வேண்டினேன். அப்படிச் செய்யுமாறு அவனைக் கெஞ்சினேன். சுயத்தின் மற்றும் திருப்பண்புகளின் ஒளிகள் நித்தியத்தின் உலகில் என் முன் தோன்றின. அவை ஒன்றினை ஒன்று நிரப்பும் பெருங்கடல்கள் போலிருந்தன. பிரகாசத்தின் மேல் பிரகாசத்தை, அழகின் மேல் அழகை, மகத்துவத்தின் மேல் மகத்துவத்தை நான் கண்டேன். புனிதத்தின் பேராழியைக் கண்டேன். திருப்தியின் அறிகுறியுடன் அவன் அது முழுவதிலும் தானே வெளிப்பட்டான். இவ்வொளிகள் கொண்டு அவன் என் முகத்தில் சிரிப்பது போலிருந்தது. இதுவே சிரிப்பின் படித்தரம் என்றறிந்தேன். அக்கணத்தில் எனது பிரக்ஞையும் அகநிலையும் இன்பமாயிருந்தன.
 

No comments:

Post a Comment