Sunday, September 10, 2017

ஒரு சூஃபியின் டைரி - 10



Image result for fana sufism
#66 இருத்தலின் உலகிற்கு அப்பால்
       ஏகத்துவத்தின் அற்புதங்கள் தாமே என் முன் தோன்றின. ஆனால் செயலுலகின் விளைவுகள் என்னிடம் எஞ்சியிருந்தன. “என் இறைவா! உனது ஒருமையை அனைத்தை விட்டும் பிரித்தெடுத்தவனாக நான் உன்னிடம் வர விடு” என்று நான் சொன்னேன். பிறகவன் இருத்தலின் உலகினை என்னிடம் வெளிப்படுத்தினான். அது, மலைச்சிகரத்திற்கு அப்பாலிருந்து எழுகின்ற முழுநிலாப் போன்று, அல்லது புகையற்ற தீயின் பொறிகள் போன்று எழுந்தது. மேலான இறைவன் என்னை அதனுள் நுழைவித்தான். நான் புறக்காரியங்களின் தோலுதிர்த்தேன். ஆனால் அவற்றை விட்டு என்னால் நிற்க இயலவில்லை. ஏனெனில் அது புனிதம், அப்பாற்றன்மை மற்றும் அழிவு ஆகியவற்றின் படித்தரமாகும். ஆங்கு அவன் எனக்கு மெய்ம்மைகளின் மெய்ம்மையைக் கற்பித்தான். எனது பிரக்ஞை எரிந்துபோனது. என்னிடம் சொல்லப்பட்டது, “இதுவே ஏகத்துவ உலகம். இதனைப் பற்றி வேதத்தில் சொல்லியுள்ளது, ‘அவனைப் போல் எதுவுமில்லை’ (குர்ஆன்:42:11)”.

#67 இறைத்தூதர்களில் தெய்வீக அழகு
      பிறகு, மேலான இறைவன் என்னிடம் தோன்றினான். அவன் அழகாய் இருந்தான். மலைகளில் நான் இப்றாஹீம் நபியைக் கண்டேன். இறை வினைகள் என்னும் விண்மீன்கள் அங்கே எழுந்தன; அவையே அவனது சுயம் மற்றும் திருப்பண்புகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. இப்றாஹீம் நபி இறைவனைத் தேடியிருந்தார். “இதுதான் என் ரட்சகன்!” (குர்ஆன் 6:76) என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார். பிறகு, பார்க்க வியப்பூட்டும் சூஃபி குரு ஒருவர் மலையிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அவர் செக்கச் சிவந்த கண்களும், வலிய தேகக்கட்டும், பனி போல் வெண்மையான மீசையும் கொண்டிருந்தார். அவர்தான் மூசா நபி என்று நான் அறிந்தேன். அவர் சினாய் மலையிலிருந்து இறங்கியிருந்தார்.

#68 கண்ணியமிகு வானவர்கள்
      நான் எனது பரவசத்தையும் எனது ஆன்மிக நிலையையும் விளக்கிச் சொல்ல முயன்றேன். வானவர்களையும் வானவருலகின் அழகையும் நினைவு கூர்ந்தேன். அவ்வுலகம் எனக்குத் திரைநீக்கப்பட்டது. அதில் நான் ஆன்மிக, ரட்சக, புனித, வலிய மற்றும் அழகிய வானவர்களைக் கண்டேன். அவர்கள் அமர்ந்திருந்தனர். மணப்பெண்களின் ஆடை அணிந்திருந்தனர். அவர்களை நான் எப்போதும் பார்த்ததை விடவும் அழகாய் இருந்தனர். நான் என் முன்னே “கண்ணியமிகு பதிவர்கள்” (குர்ஆன்: 82:11)-ஐக் கண்டேன். அவர்கள் என்னை நேசிப்பவர்கள் போலவும் எனக்காக ஏங்குபவர்கள் போலவும், மதுக்களியர் போல் தோற்றம் கொண்ட அழகிய இளைஞர்களாகவும், எச்சரிக்கையுடனும் அச்சமூட்டும்படியும் இயங்குபவர்களாகவும் இருந்தனர். அருகில், மணமகனைப் போல், விண்மீன்களுக்கிடையே நிலவைப் போல் ஜிப்ரீல் அமர்ந்திருக்கக் கண்டேன். பெண்களின் நீள் கூந்தலைப் போல் அவருக்கு இருபாற் கூந்தல் இருப்பது போல் தோன்றிற்று. பச்சை பட்டு விளிம்பிட்ட செந்நிற ஆடைகளை அவர் அணிந்திருந்தார். அவர் எனக்காக அழுது ஏங்குபவராக இருந்தார். இப்படியாக, அனைத்து வானவர்களும் என்னைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர். அவர்கள் ஏதோ எனது விசிறிகள் போன்று எனது நிலையில் திளைப்போராக இருந்தனர்.
Image result for sufi family
#69 விதான உலகிற்கப்பால் குடும்பத்தின் காட்சி
      அதன் பின், வல்லமை மற்றும் அழகு சார்ந்த காட்சிகளைக் கண்டேன். பாமரர் அவற்றை விளங்கிக்கொள்ள இயலாது. நூறாயிரம் அரச ஆசனங்கள்கூட ஓர் அணுவினும் சிறியதாகிவிடும் உலகம் ஒன்றினை அடைந்தேன். அங்கே நான் சக்தியும் வல்லமையும் அன்றி வேறெதையும் காணவில்லை. அங்கிருந்து நான் புறப்பட்ட போது உயரத்தில் மேலே மாபெரும் வீடொன்றைக் கண்டேன். அதில் எனது குடும்பம் அமர்ந்து என்னைப் பற்றிப் பேசியபடியும் கவிதைகள் படித்தபடியும் இருந்திடக் கண்டேன். முதற் சந்திப்பின் போது ஏற்பட்டது போன்ற இன்பத்தை அடைந்தேன். என் வீட்டுப் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கப் பார்த்தேன். அங்கே எனது பிள்ளைகளையும் வேறு மக்கட் குழுவையும் கண்டேன்.

#70 தாயும் தந்தையும்
      பிறகு என் அன்னையைக் கண்டேன். அவர் இறைவனை அறிந்தவரும் நேசித்தவரும் ஆவார். அவர் தனது தலையை என் வீட்டில் சாய்த்துச் சொன்னார், பாசா மொழியில், “ஹீ லில்லாஹ் வலூ” (அவனை அன்றி வேறு இறைவன் இல்லை). அவர்கள் தமது திருமணங்களை நினைவு கூர்ந்திருந்தனர். பிறகு என் அத்தாவைக் கண்டேன். வெண்ணிறத் தலைப்பாகையும் பொன்னிழை ஆடையும் அணிந்தவராக அவர் செந்நிறப் புரவியில் இவர்ந்து வந்தார். மேலான இறைவனைச் சந்தித்து வரும் வானவர்கள் அவருடன் இருந்தனர். அவர் ஒரு சான்றோர், இறைநேசர் (இறைவன் தனக்கு நண்பர்களை வைத்துள்ளான்). எக்கணமும் அழுதுவிடுபவராய் உணர்ச்சிகள் நிரம்பியவராய் இருந்தவர். 

Image result for sufi rose
#71 ”சிவப்பு ரோஜா என்பது மேலான இறைவனின் மகத்துவமாகும்”
      சென்ற இரவின் நடுவில், மறைவுலக மணப்பெண்களின் வெளிப்பாட்டினைத் தேடி தியானத்தின் விரிப்பில் அமர்ந்த பின், எனது பிரக்ஞை வானவருலகப் பிரதேசங்களில் பறந்துயர்ந்த போது, தெய்வீகத்தின் ஆடை போர்த்திய படித்தரத்தில் நான் சத்திய இறைவனின் வல்லமையை நேசத்தின் கோலத்தில் மீண்டும் மீண்டும் கண்டேன். பிரக்ஞைகளையும் எண்ணங்களையும் விழுங்கிவிடுமொரு நிரந்தர வல்லமையின் வெளிப்பாடு வரும் வரை அஃதென் இதயத்திற்குத் திருப்தி தரவில்லை. வானங்கள் மற்றும் பூமி, இறை ஆசன விதானம் மற்றும் பாதபீடம் ஆகிய அனைத்தை விடவும் விசாலமானதொரு முகத்தைக் கண்டேன். அது அவனின் மகத்துவத்தின் ஒளிச்சுடர்களை வீசிக்கொண்டிருந்தது. அது உவமைகளையும் ஒப்புமைகளையும் கடந்ததாய் இருந்தது. ஆனால் அந்த அப்பாலான மகத்துவத்திற்கு சிவப்பு ரோஜாவின் நிறம் இருக்கக் கண்டேன். அது உலகின் மீது உலகாக, அவன் ரோஜாக்களைப் பொழிவது போன்று இருந்தது. அதற்கொரு எல்லையை நான் காணவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொன்னதை எனது உள்ளம் நினைவு கூர்ந்தது, “சிவப்பு ரோஜா என்பது மேலான இறைவனின் மகத்துவத்திலிருந்தாகும்”. அதுவே எனது மனப்புரிதலின் எல்லை. அந்நேரத்தில் எனக்கு மட்டும் புனிதத்தின் கண்கள் இருந்திருக்குமெனில், இறைவன் நாடினால், நாம் அவனை உயிர்த்தெழும் மறுமை நாளில் எப்படிக் காண்போமோ அந்த வடிவில், காலப் பரிமாணங்களைக் கடந்ததான அவனின் முழு நித்தியத்திலும் மகத்துவத்திலும் ஆதித்தன்மையிலும் அவனை அப்போது நான் பார்த்திருப்பேன்.

#72 இறங்குதலின் நேரம்
      நடுநிசி ஒன்றில் அமர்ந்திருந்தேன். தியானத்தின் நேரம் நீண்டது. நான் ஒன்றையும் காணவில்லை. மறைவுலகின் எந்தக் கதவும் எனக்காகத் திறக்கப்படவில்லை. எனவே நான் ஆச்சரியப்பட்டுப் பின்னர் இந்த இழப்புக் கருதி உளம் சோர்ந்தேன். நான் சஞ்சலப்பட்டிருந்தேன். என் உள்ளத்தில் தோன்றிற்று, “சத்திய இறைவனின் இறக்கத்தில் நீ செய்ய என்ன இருக்கிறது?” ஆனால் இதுதான் இறக்கத்தின் நேரம். மேலான மகத்தான சத்தியப் பரம்பொருளை நான் நித்தியமாகக் கண்டேன். நான் பேசுபவனாய், பிதற்றுபவனாய் ஆகிக் களிப்பினுள் நுழைந்தேன். என் இதயத்தின் ரத்தம் தலைக்கு ஏறிற்று. வியப்பும் மகத்துவமும் பெருமையும் வல்லமையும் அழகும் கொண்டவனாக அவனைக் கண்டேன், ஆசனமும் பாதபீடமும் உள்ள உலகை விட்டும் அவன் என்னருகில் வரும் வரை. அவன் தனது வல்லமையின் பிரகாசத்தை ஆசனத்திலும் பாதபீடத்திலும் அனைத்து வானங்களிலும் வெளியாக்கினான்.

#73 ஐயங்கள் அகற்றல்
      பிறகவன் ஏழாம் வானிலிருந்து இறங்கினான். வானவர்கள் அவன் முன் வீழ்ந்தனர். அவன் சற்றே நின்றான். அவனருள் இவ்வுலகை எட்டும் வரை அவ்வாறே ஒவ்வொரு வானிலும் செய்தான். அவனது சக்தியின் ஒளி ஒவ்வொன்றையும் வளைத்தது. ஒரு மணிக்கூர் சென்றது. அவன் என்னிடம் சொன்னான், “ரூஸ்பிஹான், தலைவர் (மக்தூம்)!” அவனது வல்லமையால் நான் பரவசம் நிரம்பினேன். அவன் சொன்னான், “நான்தான் இறைவன் என்பதை ஐயுறுவோன் யாருளன்?” பிறகவன் சொன்னான், “இதனை நானுனக்குத் திரைநீக்கினேன் என்பதில், இப்படித்தரத்திற்கு உன்னை நான் தேர்ந்திருக்கிறேன் என்பதில் உனக்கு ஐயம் ஏதும் எஞ்சியுள்ளதா?”. மாலை உரையாடல்களின் புலனங்களில் இது போல் எதுவுமே இல்லை. 

Image result for sufi rose 
celestial rose - gustave dore.
 
#74 இறக்கமும் மறைவும்
      பின்னர் இறைவனின் ஒளி பூமிப் பகுதிகள் அனைத்தின் மீதும் பிரகாசித்தது. பூமி முழுவதையும் தெய்விகத்தின் ஆடை போல் கண்டேன். காஃப் மலை தொட்டு காஃப் மலை வரை சத்தியப் பரம்பொருள் வெளிப்படக் கண்டேன். அவன் காஃப் மலையிலிருந்தும் அனைத்துப் பிற மலைகளிலிருந்தும் வெளிப்பட்டான். அதன் பின் அவன், தெய்விகத்தின் ஆடையில் தன்னைச் சில காலம் காட்டுப்வனாக சினாய் மலையிலிருந்து வெளிப்பட்டான். அவன் எனக்கு இந்தப் படித்தரங்களை அருளினான்: முதலில் ஏகத்துவத்தின் மீதான காதலும் அறிதலில் அறியாமையும், இரண்டாவதாக அறிவில் காதல் என்பதும். அவன் என்மீது அன்புடன் இருந்தான். அவனது செழுங்குணங்கள் எனக்குத் தோன்றின. பின்னர் அவன் சொன்னான், “இதுவே எனது இறக்கம்.” நித்திய ருத்ரத்தின் சேவடிக்குக் கீழே நிலைப்பன எதுவுமில்லை. அவன் எங்கிருந்து இறங்கினான்? எங்கே இறங்கினான்? அவனொளியில் படைப்புக்கள் அனைத்தும் மறைந்து அவனது மகத்துவத்தின் செங்கோலில் ஒரு கடுகு விதையினும் சின்னதாகிப் போகின்றன. பிறகு இறைவன் தான் புனிதத்தின் உலகிற்குத் திரும்புவதாகவும் மறைவதற்கான நேரம் ஆனது என்றும் சொன்னான். பிறகு அவன் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக்கொள்வதைக் கண்டேன். பிறகவனை அனைதுக்கும் அப்பால் விதையினும் நுண்ணியனாய்க் கண்டேன். நான் எனை இழந்தேன். தரிசித்தலை எனது பார்வை முழுமைப்படுத்த இயலாது போயிற்று.

#75 பரவசத்தில் இறைத்தூதர்கள்
      நிர்வாணத்தின் மீதொரு கம்பளி போர்த்தியது போல் அவன் என் முன் தோன்றினான். ஆனால் முஹம்மத் (ஸல்), மூசா, ஆதம், நூஹ் மற்றும் இப்றாஹீம் (அலை...) ஆகியோர் அவனருகில் இல்லை. அனைத்து இறைத்தூதர்களும் பரவசத்தில் நின்றிருக்கக் கண்டேன். அவர்களுடன் நானும் நின்றேன். அவர்கள் உணர்ச்சியில் அசைந்தனர், ஏக்கத்தில் ததும்பினர், பரவசத்தில் பேசினர். அவர்களுக்கும் சத்தியப் பரம்பொருளுக்கும் இடையே நானோர் அழகிய இளைஞனைப் போலிருந்தேன். முஹம்மத் (ஸல்) அவர்களும் மூசா (அலை) அவர்களும் உணர்வு மிகைத்திருந்தனர். ஆதம் ஏக்கத்தால் ஆடையற்றிருந்தார். அந்நிலையை வேறு எந்த இறைத்தூதரிலும் நான் காணவில்லை.

No comments:

Post a Comment