Tuesday, June 9, 2015

...என்றார் சூஃபி - part 13

44

’இறையச்சம்’ பற்றிப் பேசியிருந்தோம். நிறைய கேள்விகளும் அவரவருக்குத் தோன்றும் விளக்கங்களுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது.

’இறைநேசர்கள் இறைவனை அஞ்சுவது எவ்வாறு? அதாவது, நேசம் இருக்கும் இடத்தில் அச்சம் எத்தகையதாக இருக்கும்?’

‘இறையச்சம், இறைநேசம், இறைஞானம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பு என்ன?’

’இறைநேசர்களுக்கு அச்சமும் கவலையும் இல்லை எனும்போது இறையச்சம் என்பதன் இடம் என்ன?’

இவை போன்ற கேள்விகள் சபையை நகர்த்திச் சென்று கொண்டிருந்தன. அப்போதுதான் சூஃபி ஒரு சிறிய கதையைச் சொல்லி விளக்கம் தந்தார். அது ஒரு ஜென் கதை!

’ஜென் மற்றும் தாவோ ஆன்மிகவாதிகள் தற்காப்புக் கலைகளையும் தியானமாக உருவாக்கினார்கள். அதில் வில் வித்தையும் ஒன்று.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் இருந்தான். சிறந்த விற்கலைஞனாக – வில் வித்தை வீரனாக உருவாக வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அந்த ஆசை அவனின் இதயத்தில் அணையாத தீயாக எரிந்து கொண்டிருந்தது. உள்ளூர் குரு ஒருவரிடம் சில வருடங்கள் மிகவும் சிரத்தையாக அவன் வில் வித்தையைக் கற்றுக் கொண்டான். அம்பு எய்வதில் மிகவும் தேர்ந்து விட்டான். இனி தன்னை வெல்ல எவரும் இருக்க முடியாது என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உண்டானது. இது பற்றி ஒருநாள் தன் குருவிடம் பேசினான்.

‘குருவே! வானில் எவ்வளவு உயரத்தில் பறவை சென்றாலும் அதனைச் சரியாகக் குறி வைத்து வீழ்த்தும் ஆற்றலை நான் பெற்றுவிட்டேன். இனி வில் வித்தையில் நான் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை அல்லவா? நான் ஒரு முழுமையான விற்கலைஞன் ஆகிவிட்டேன் அல்லவா?’ என்று அவன் கேட்டான்.

லேசாகப் புன்னகை செய்தபடி அவனிடம் குரு சொன்னார், ‘பையா! நீ கற்றுக் கொள்ள வேண்டிய வித்தை இன்னும் ஒன்று இருக்கிறது. அதை அடையாத வரை நீ ஒரு முழுமையான விற்கலைஞன் ஆக மாட்டாய். ஏன், அந்த வித்தை எனக்கே தெரியாது. நானும் ஒரு முழுமையான விற்கலைஞன் அல்லன்.’

இதைக் கேட்டு அவன் திகைத்தான். அந்த வித்தையைத் தான் எங்கு போய்க் கற்றுக்கொள்ள இயலும் என்று வினவினான். மிகத் தொலைவில் உள்ள மாகாணம் ஒன்றில் மலைச் சாரலில் வசிக்கும் ஒரு குருவிடம் செல்லுமாறு அவனிடம் உள்ளூர் குரு கூறினார். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அவன் கிளம்பினான்.

மலைச் சாரலில் ஒரு குடிலில் வசிக்கும் குருவிடம் அவன் சீடன் ஆனான். அப்படி என்ன புதிய வித்தை அவரிடம் உள்ளது என்று அறிய மிகவும் ஆர்வமாக இருந்தான். சில வருட பயிற்சிகளுக்குப் பிறகு அதற்கான தருணம் வந்தது. குரு அவனை அழைத்துக் கொண்டு அந்த மலை மீது ஏறினார். சில ஆயிரம் அடிகள் உயரத்தில் அந்தரத்தில் நீட்டிக் கொண்டிருப்பது போன்று ஒரு செங்குத்தான பாறை. சீடனின் கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்று அதன் விளிம்பில் அவர் நின்றார். சீடன் அரண்டு போனான்! பயத்தில் அவனின் கால்கள் உதறிக் கொண்டிருந்தன. குரு தனது வில்லை எடுத்து அதில் ஒரு கணையை வைத்து நேராக மேலே பார்த்தார். வட்டமடித்துக் கொண்டிருந்த பருந்து ஒன்றினை வீழ்த்தினார். ‘நீ செய் பார்ப்போம்’ என்பது போல் சீடனைப் பார்த்தார். அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. வில்லில் அம்பினை வைத்துப் பிடிக்கவே அவனால் முடியவில்லை. குருவின் பாதத்தில் விழுந்து அழுதான் அவன். அதன் பின் அந்த வித்தைக்கான பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டான். ‘சிறந்த விற்கலைஞனுக்கு உயரத்தைப் பற்றிய அச்சம் துளிகூட இருக்கக் கூடாது’ என்று குரு அவனிடம் கூறினார். சில வருடங்களில் அவன் தேர்ச்சி பெற்றான். பல்லாயிரம் அடி உயரச் செங்குத்துப் பாறை விளிம்புகளில் அவன் நிற்கும் போது கால்கள் வேர் பிடித்தது போல் உறுதியாக நின்றன. அவன் கைகளில் நிதானம் இருந்தது.

இப்போது மீண்டும் அவன் உள்ளத்தில் தன் திறமையைப் பற்றிய மமதை உண்டானது. ‘இப்போது என்னை வெல்ல இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது அல்லவா குருவே?’ என்று அவன் கேட்டான். குரு நிதானமாகச் சொன்னார், ‘அடப் போப்பா நீ வேற. 
இதுவெல்லாம் ஒரு வித்தையே அல்ல! உண்மையான வில் கலைஞன் என்றால் அதற்கு வேறொரு திறமை வேண்டும். அது இல்லாமல் வில் வித்தை ஒருபோதும் முழுமை பெறாது. அந்த வித்தையை நான் என் வாழ்வில் கற்றுத் தேரவே முடியவில்லை. அந்த வித்தையை அறிந்தவர் ஒரே ஒரு குருதான் இப்போது இருக்கிறார்.’

அந்த குருவிடம் சீடனாகச் சேர்ந்து எப்படியாவது அவரிடம் உள்ள தனித்தன்மையான வித்தையைக் கற்றுவிட வேண்டும் என்று அவன் பிரதிக்ஞை செய்து கொண்டான். இதற்கு மேல் ஒரு வில் வித்தை இருக்கும் என்பதை அவனால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.

தனக்குத் தரப்பட்ட ’முகவரி’யை அவன் மிகவும் கஷ்டப்பட்டுச் சென்றடைந்தான். அந்த தேசத்திலேயே அதுதான் மிகவும் உயரமான மலைமுகடு. அதன் சாரலில் ஒரு குகையில் இருந்தார் அந்த குரு. படு கிழம்! ’இந்த வயதில் இவர் எப்படி வில் வித்தை சொல்லித் தருவார்?’ என்று எண்ணிச் சோர்வடைந்தான் அவன். எனினும் சில காலம் அவருக்குக் கர்ம சிரத்தையாகப் பணிவிடை செய்தான். அவர் இவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். எல்லா வித்தைகளிலும் ஏற்கனவே அவன் தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்தார். தன்னிடம் உள்ள ரகசியமான வித்தையை அவனுக்குக் கற்றுத் தர நாள் குறித்தார். அன்று முதல் அவன் தூக்கம் இல்லாமல் தவித்தான்! அந்த நாள் நெருங்க நெருங்க அவனின் நெஞ்சுக்குள் இதயம் எகிறி குதித்துக் கொண்டிருந்தது. அந்த நாளும் வந்தது.

அதிகாலை நேரம். குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. குகையை விட்டு வெளியேறிய குரு தள்ளாடியபடி நடந்து சென்றார். இவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்து சென்றான். தூக்கத்தில் நடப்பது போல் அவர் மிகவும் நிதானமாக நடந்து சென்று ஒரு முகட்டில் நின்றார். அங்கிருந்து முழு உலகமும் தெரியும் என்பது போன்ற உயரம்! அவன் அவரின் கால்களை உற்று நோக்கினான். அவை இரும்புத் தூண்களைப் போல் உறுதியாக நின்றன. அவர் தன் கையை உயர்த்தி உச்சி வானத்தில் அவனிடம் சுட்டிக் காட்டினார். முதலில் அவனுக்கு ஒன்றுமே பிடி படவில்லை. கூர்ந்து கவனித்த போது புள்ளி போல் ஒரு பறவை தென்பட்டது. எவ்வளவு வளைத்து எய்தாலும் அத்தனை உயரத்திற்கு அம்பு செல்லவே முடியாது. இவர் என்ன அந்தப் பறவையைக் காட்டுகிறார் என்று எண்ணியபடி அவரிடம் வில்லை நீட்டினான். வேண்டாம் என்பது போல் சைகை செய்தார். பிறகு திரும்பி ஒரு கணம் கண்களை மூடி நின்றார். முகத்தை மேலே உயர்த்தியபடிக் கண்களைத் திறந்து அந்தப் பறவையை நோக்கினார். சட்டென்று அது கீழ் நோக்கி விழுந்தது! மண்ணில் அது விழுந்ததும் நம்ப முடியாமல் சீடன் அதனைப் பார்த்தான். செத்துக் கிடந்தது. வியப்பில் உறைந்து போய் அந்தக் கிழ குருவைப் பார்த்தான். அந்த மலை முகட்டில் அவர் நின்றிருந்தான். வயதால் அவரின் முதுகு வளைந்திருந்தது. அவரே ஒரு வில்லாக இருந்தார்!

அந்தக் காட்சியில் அவன் உணர்ந்ததைத்தான் அவர் அவனுக்கு இறுதி உபதேசமாகத் தந்தார்: “தானே ஒரு வில்லாக மாறி விடுபவன்தான் சிறந்த வில் வித்தைக்காரன்.”

இந்தக் கதையைச் சொல்லி முடித்து சில கணங்கள் மௌனமாக இருந்தார் சூஃபி. பிறகு 
எங்களிடம் கேட்டார், “மலை முகட்டில் அச்சமின்றி நிற்கும் ஒருவனின் கால்களை அச்சத்தால் நடுங்க வைக்க என்ன வழி?”

நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்பதை உணர்ந்த சூஃபி அவரே சொன்னார், “அதை விடவும் உயரமான மலை முகட்டில் அவனைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும். புதிய உயரத்தில் அவனின் கால்கள் முதலில் அச்சத்தால் நடுங்கும். சில நாட்களில் அதுவும் பழகிப் போகும். பிறகு அதை விடவும் உயரமான முகட்டிற்கு ஏற வேண்டும். இப்படியே மேலே மேலே செல்லச் செல்ல அச்சமும் புதிதாக அனுபவமாகும். ஆனால் அந்த அச்சம் பரவசத்தின், தியானத்தின் முகத்திரைதான்.

இறையச்சம் என்பதும் இப்படித்தான். இறையனுபவத்தின் உயரங்களை நீங்கள் புதிது புதிதாக அடைய அடைய அதனை முதன்முதலில் எதிர்கொள்வதன் அச்சம் இருக்கத்தான் செய்யும். இறையச்சத்தில் இருங்கள் என்பதன் பொருள் ஆன்மிகத்தில் மேலும் மேலும் உயரங்களை அடைந்து கொண்டே இருங்கள் என்பதாகும்.

எனவே, இறைவனை ஆன்மிக அனுபவத்தால் அறிய அறிய அச்சமும் அதற்கேற்ப புதிதாகிறது. ’இன்னமா யஃக்‌ஷல்லாஹ மின் இபாதிஹில் உலமாஉ’ (35:28) ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே’ என்னும் திருவசனத்தில் இறையச்சம் எனபதன் நியதியாக அறிதல் சுட்டப்பட்டிருப்பதை கவனிக்கவும். அது வெறும் ஏட்டறிவு அல்ல. ஆன்மிகப் பட்டறிவே ஆகும்.

’உங்களில் அல்லாஹ்வை மிகவும் அதிகமாக அறிந்திருப்பவன் நானே, அவனை அதிகமாக அஞ்சுபவனும் நானே’ என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி. (சஹீஹைன்: புஃகாரி, முஸ்லிம்)

அதாவது, எல்லையற்ற இறைவனிடமிருந்து அவர்கள் கணந்தோறும் புதிய புதிய ஆன்மிக உயரங்களை அடைந்து கொண்டே இருக்கிறார்கள். அனுபவத்திற்கேற்ப, அதன் படித்தர உயரத்திற்கேற்ப அச்சத்தின் தன்மையும் அமைகிறது. பரவசத்தின் தன்மையும்தான்.” என்றார் சூஃபி.

பிறகு, இறையச்சம் பற்றி வேறோர் உவமை சொல்லிப் பேசினார்:

“கடற்கரையில் நிற்கும் சிறுவர்களை கவனித்திருகிறீர்களா? அலைகளில் கால் நனைத்துக் குதூகலிக்கும் அவர்கள் தூரத்தில் சற்றே பெரிய அலை எழும்போது பயந்து கத்துவார்கள். ஆனால் அந்த அச்சத்தில் ஆனந்தமும் கலந்திருக்கும். அதே கடலில் ஆழிப்பேரலை வந்தால் – சுநாமி வந்தால் என்னாகும்? பெரியவர்களும்கூட பயப்படுவார்கள்.
சென்னை நெம்மேலி கடற்கரையில் நண்பர் டாக்டர் அஸ்லம் பிலாலி 

உங்கள் உள்ளம் ஒரு கடற்கரை. அதன் அப்பக்கம் ஆன்மிகக் கடல் இருக்கிறது. அதில் இறைவன் அனுப்பும் ஆன்மிக அனுபவ அலைகள் வீசிக் கொண்டிருக்கும். நீங்கள் ஓர்மையோடு அதில் கால்பதித்து நிற்க வேண்டும். அதுவே தியானம்.

உங்கள் உள்ளத்தில் கொஞ்சமாவது இறையனுபவ அலைகள் வீசிக் கொண்டிருக்க வேண்டும். இறைநேசர்களின் இதயங்களில் இறைக்கடலின் ஆழிப் பேரலைகள் வீசிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், கடற்கரையைப் பார்த்தே இல்லாத ஒருவன் ’நான் சுநாமிக்கு அஞ்சுகிறேன்’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? அப்படித்தான், வெற்றுப் பேச்சாகப் பலரின் முகங்களில் போலி இறையச்சம் அசடு வழிகிறது! அவர்களின் உள்ளங்கள் இறந்த கடலாக – dead sea ஆக இருக்கின்றன. அலைகளே அவற்றில் எழுவதில்லை.


இறையனுபவத்தின் ஆழிப் பேரலைகள் நம் உள்ளத்தில் பொங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்” என்றார் சூஃபி.

No comments:

Post a Comment