Sunday, June 7, 2015

...என்றார் சூஃபி - part 12

42
பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட தன் பிள்ளையின் எதிர்காலத்திற்கு அறிவுரை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார் ஒரு நண்பர். அந்தப் பிள்ளையின் திறமைகள் பற்றியும் ஆர்வங்கள் பற்றியும் விசாரித்த பின் சூஃபி நிதானமாகப் பேசினார்.

”ஓரு தென்னங் கன்றின் எதிர்காலம் என்ன? தென்னை மரம்தான்.

ஒரு ரோஜாக் கன்றின் எதிர்காலம் என்ன? ரோஜாச் செடிதான்.

ஓர் ஆலவிதையின் எதிர்காலம் என்ன? ஆலமரம்தான்.

ஒரு பூனைக்குட்டியின் எதிர்காலம் என்ன? பூனைதான்.

ஒரு கிளிக் குஞ்சின் எதிர்காலம் என்ன? கிளிதான்.

செடி கொடிகளில் விலங்குகளில் பறவைகளில் எதிர்காலம் என்பது இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுவிட்ட ஒன்று. எனவே எந்தச் சிக்கலும் கிடையாது.

ஆனால் மனிதனில் அது வெறுமனே அவனது உடல் சார்ந்த விஷயம் அல்ல. ஆளுமையின் உருவாக்கம் சார்ந்தது. எனவே சிக்கல் எழுகிறது.

மனித குலத்தின் சாபக் கேடுகளில் ஒன்று ஆளுமையின் மதிப்பைப் பொருளாதாரத்தைக் கொண்டு கணக்கிடுவதாகும். இந்த மனநிலை மனித குலம் முழுக்கவும் புரையோடிக் கிடக்கிறது.

வருமானம் குவிக்கும் ஆளுமைகளாக நம் பிள்ளைகள் உருவாக வேண்டும் என்பதிலே நமக்குத் தீராத வேட்கை உண்டாகியுள்ளது. இதனால் மனித குலம் அடைந்த அக இழப்புப் பற்றிய சுரணையே இங்கு இல்லை.


மருத்துவனாக அல்லது பொறிஞனாக ஆக்கப்பட வேண்டும் என்னும் கல்வி ‘அறுவை’ சிகிச்சையில் அபார்ஷன் ஆகிவிட்ட கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் எத்தனை பேர்?”

சிறிது நேர மௌனத்திற்குப் பின் சூஃபி திருமறை வசனமொன்றை ஓதிக் காட்டிச் சொன்னார்:

”வ லா தக்துலூ அவ்லாதகும் ஃகஷ்யத இம்லாக்;
நஹ்னு நர்ஸுகுஹும் வ இய்யாகும்;
இன்ன கத்லஹும் கான ஃகித்அன் கபீரா” (17:31)
(”வறுமைக்கு அஞ்சி உம் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்;
அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;
அவர்களைக் கொல்வது திண்ணமாக மாபெரும் பாவமாகும்”)

இந்தத் திருவசனம் சிசுக்கொலை பற்றிக் கூறுவதாகப் பொருள் வைக்கப்படுகிறது. அது சரிதான். ஆனால் உடலைக் கொலை செய்வது மட்டும்தான் கொலையா? அத்தகைய கொலைகள் இன்று குறைந்து வந்துள்ளன. ஆனால் அகக் கொலை இன்று பெருகி வந்துள்ள நிலையில் அந்தப் பின்னணிக்கும் இவ்வசனம் பொருத்தமாக உள்ளதை நாம் உணர வேண்டும்.

ஒரு மனிதரின் நற்பெயரை வேண்டுமென்றே நாசப்படுத்தும் காரியத்தை ஆங்கிலத்தில் “Character assassination” என்று சொல்வார்கள்.

ஒரு மனிதனில் இறையருளால் இயற்கையாக உருவாகி வரும் ஆளுமை நசிக்கப் படுவதை நான் “Personality assassination” – ஆளுமைப் படுகொலை என்று குறிப்பிடுகிறேன். 
இந்தப் படுகொலையைப் பரவலாகவே நம் சமூகத்தில் பெற்றோர்கள் செய்து வருகிறார்கள்.

பெற்றோர்களில் பலரும் தாம் படாத பாடு பட்டுத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியிருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் எப்பொழுதோ இறந்து போய்விட்டதை அவர்கள் அறிவதில்லை!” என்றார் சூஃபி.

43

திருமணத்தினால் உண்டாகும் பயன்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். கலகலப்பாக நடந்து கொண்டிருந்த சபைக்குச் சற்று நேரத்தில் சூஃபி வருகை தந்தார். என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை விசாரித்தார். “திருமணத்தால் உண்டாகும் மேலான பயன் என்ன?” என்று அவரிடம் கேட்டோம்.

“பொதுவாக மனிதனுக்குத் தனது மலஜலம் - கழிவு பற்றிய அருவருப்புணர்வு இருக்காது. திருமண வாழ்வு இந்த மனநிலையை சற்றே விசாலமாக்குகிறது! அதாவது தன் மனைவி மக்கள் என்று சிலரின் மலஜலத்தைப் பற்றிய அருவருப்புணர்வு அற்றவனாக ஒருவனை அது மாற்றுகிறது!” என்றார் சூஃபி.

இந்த பதில் சபையோருக்கு அதிர்ச்சியாகவும் வினோதமாகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து மூன்று சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார்:

நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க ஒரு தோழர் தனது சிறு வயதுப் பெண் குழந்தையுடன் வந்திருந்தார். நபியைக் கண்டு குதூகலித்த அந்தக் குழந்தை அவர்களை நோக்கித் தாவியது. நபிக்கும் குழந்தைகள் என்றால் பிரியம். அந்தக் குழந்தையை எடுத்து அவர்கள் தம் மடியில் அமர வைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் அக்குழந்தை சிறுநீர் பெய்யத் தொடங்கியது. அதன் தந்தை பதறுகிறார். தன் குழந்தையை அச்சுறுத்தித் தடுக்க முனைந்தார். உடனே நபி அவரைத் தடுத்தார்கள். சும்மா இருக்கும்படி ஜாடை செய்தார்கள். குழந்தை சிறுநீர் கழிக்கட்டும், அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று உணர்த்தினார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சி:

மதினா நகரில் நபி(ஸல்) தனது மஸ்ஜிதை நிர்மாணித்து அதில் தினமும் தனது தோழர்களுடன் தொழுகை நடத்தி வந்தார்கள். அவர்களைச் சந்திக்க பல திசைகளிலும் இருந்து மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். உபதேசங்களும் அதே மஸ்ஜிதில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு நாள், வட அரேபியப் பகுதியிலிருந்து பதூயீன் இனத்தைச் சேர்ந்த காட்டரபி ஒருவர் நபியைக் காண வந்திருந்தார். தொழுகையில் அவரும் கலந்து கொண்டார். அப்போது அவருக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டிய நெருக்கடி உண்டானது. சட்டென்று தனது அங்கியைத் தூக்கியபடி அப்படியே மஸ்ஜிதில் சிறுநீர் கழித்து விட்டார்! தோழர்கள் அவரைத் தாக்கப் பாய்ந்த போது நபி(ஸல்) தன் தோழர்களை விலக்கிவிட்டு அந்தக் காட்டரபியைச் சிறிது தள்ளி அழைத்துச் சென்று பொறுமையாக அவருக்கு எடுத்துச் சொன்னார்கள், ‘இஃது இறைவனை வணங்கும் இடம். இதனைத் தூய்மையாக வைக்க வேண்டும். இது போல் அசுத்தம் செய்ய்க் கூடாது’.

மூன்றாவது நிகழ்ச்சி:

மதினாவிற்கு ஒரு காட்டரபிக் குழு வருகை தந்தது. ஆளுக்கொருவரை தம் இல்லத்திற்கு விருந்தினராக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். தாமும் ஒருவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஆள் இருப்பவர்களிலேயே மிகவும் வாட்ட சாட்டமாக இருந்தார். பெருந்தீனிக்காரர். வயிறு உப்ப உண்ட பின் அவருக்கு ஒரு அறை தரப்படுகிறது, இரவு தங்குவதற்காக. அவர் உள்ளே படுத்துக் கொண்ட பிறகு யாரோ ஒருவர் வெளியே கொண்டியை மாட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார். நள்ளிரவில் அந்தக் காட்டரபிக்கு வயிற்றைக் கலக்குகிறது. வெளியே போக நினைத்த அவருக்குப் பெரிய அதிர்ச்சி, கதவு வெளிப்பக்கம் கொண்டி மாட்டியுள்ளது. என்ன செய்வதென்று குழம்பிப் போய் அவர் மீண்டும் படுத்து உறங்குகிறார். நாணல்கள் காற்றில் அசையும் ஓர் அருமையான ஊர் ஒதுக்குப்புறத்தைக் கனவில் காண்கிறார். ஒருவர் தன்னை லேசாக்கிக் கொள்ள தோதுவான இடம்! அவர் சட்டென்று அமர்ந்து பணியைத் தொடங்குகிறார். முழுவதுமாக ஆசுவாசப் படுத்திக்கொண்ட பின் கனவு கலைகிறது. துர்வாடை மூக்கைத் துளைக்கவும் விழித்து எழுந்து பார்க்கிறார். நபியின் வீட்டு அறையைத் தான் அசிங்கப்படுத்தி வைத்திருப்பதைக் கண்டு சாம்புகிறார். தனக்கும் இது பெருத்த அவமானம் ஆகிவிடும் என்று நினைத்த அவர் படாத பாடு பட்டுப் போராடி கதவின் வெளிக் கொண்டியைத் திறந்து அதே வேகத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுகிறார். விடியல் தொழுகையை முடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தம் விருந்தினரைக் காண வருகிறார்கள். ஆளைக் காணவில்லை. அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்த போர்வை மலம் அப்பி நாறிக் கிடக்கிறது. புன்னகை மலர்ந்திருக்கும் பூமுகம் மாறாமல் நபி(ஸல்) அவர்கள் ஒரு வாலியில் நீர் கொண்டு வந்து அந்தப் போர்வையை அலசத் தொடங்குகிறார்கள். அப்போது அங்கே அந்தக் காட்டரபி வருகிறார், தான் மறந்து வைத்து விட்ட தனது போர்வாளை எடுப்பதற்காக. தன் கைப்பிள்ளையின் துணியை ஒரு தாய் அலசுவது போல் நபி (ஸல்) தான் மலம் கழித்த போர்வையைத் துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். நபியின் கைகளைப் பிடித்து நெகிழ்ந்தவராக அக்கணமே அவர்களின் தோழராக, சீடராக மாறுகிறார்.


“அல்-ஃகல்க்கு இயாளுல்லாஹ்” – “படைப்புக்கள் (அனைத்தும்) இறைவனின் குடும்பம்” என்பது நபிமொழி.

அந்தக் குடும்பத்திற்கு அவர்கள் தாயாக இருக்கிறார்கள்.

இறைவன் அவர்களை “ரஹ்மத்துல்லில் ஆலமீன்” – “அகிலங்களுக்கெல்லாம் கருணை” என்று புகழ்கிறான்.


’தாயின் முன் குழந்தை போல் நபியின் முன் பிரபஞ்சம்’ என்றார் சூஃபி.

No comments:

Post a Comment