Monday, January 13, 2014

...என்றார் சூஃபி - part3

8

நூலகத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது: “நூலொன்று எடுத்து அதில் உன்னைக் கண்டுபிடி” (Take a book and discover your-self in it).
“சொல்லப்பட வேண்டிய அறிவுரை இதற்கு நேர் மாற்றமானது.‘உன்னில் நூலைக் கண்டுபிடி’” என்றார் சூஃபி

9

“பாதையில் கிடக்கும் முள்ளை அகற்றுவதும் இறைநம்பிக்கையின் அடையாளம்” என்பது நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி.

”முள் என்பது எது? மலரின் எதிர்நிலை. மலர்ச்சியின் எதிர்நிலை.
இதயத்தில் முள் என்பது அதில் மலர்ச்சி இல்லாத நிலைதான். அத்தகைய முள்ளை, அதாவது இதயம் இறுகிப் போகும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஆன்மிகப் பாதையில் முள் எது?

‘நான்’ என்னும் தன்முனைப்பு உணர்வே அந்த முள். அதனை அகற்றிக் கொள்வது நீ ஆன்மிகப் பாதையில் நொண்டியடிப்பதைத் தவிர்க்கும்” என்றார் சூஃபி

10
’இன்னார் மிகவும் திறமையான பேச்சாளர்’ என்று ஒருவரைப் புகழ்ந்து நண்பர்கள் பேசினார்கள். பல அறிஞர்களையும் மேற்கோள் காட்டிப் பேசுவதில் அவருக்குத் தனித் திறமை இருப்பதாக வியந்தார்கள்.

“எல்லாம் சரிதான். ஆனால், பல அறிஞர்களை மேற்கோள் காட்டுவதில் என்ன பயன், ஒருவருக்குத் தன்னை வெளிப்படுத்தத் தெரியவில்லை எனில்?” (What use it is of quoting this and that, when one doesn't know how to quote himself?) என்றார் சூஃபி.

11

“பூமி முழுவதும் தொழுகைக்கான இடமாக எனக்கு ஆக்கப்பட்டுள்ளது” என்றார்கள் நபி (ஸல்).

“நபி தந்த ஞானம் உள்ளத்தில் இருக்கும் எனில் இறைவனின் தரிசனம் இல்லாத இடம் இப்பூமியில் எதுவுமே இல்லை” என்றார் சூஃபி.

12
தடைக்கற்கள் செதுக்கப்படும்போது படிக்கற்கள் ஆகின்றன” என்று ஒரு கருத்தை முன்வைத்துக் கலந்துரையாடலைத் தொடங்கினார் சூஃபி.

ஆன்மிகத்திற்குத் தடைக்கற்களாக இருப்பவை எவை எவை என்று அலசிக்கொண்டு போன உரையாடல் காமம் பற்றியும் ஆராய்ந்தது.

“வழிகாட்டும் வாசகங்களைக் கூட கீழ்மனம் வழிகேடாக ஆக்கிக்கொள்கிறது என்பதற்கு ஓஷோவின் புகழ் பெற்ற நூலின் தலைப்பு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ”காமத்திலிருந்து மெய்ஞ்ஞானத்திற்கு” (Sex to Super-consciousness) என்று அவர் சொன்னார். ஆனால் அவருக்கே அறிவுரை சொல்வதாக நினைத்துக்கொண்டு ஓர் அரைவேக்காடு ‘காமமே மெய்ஞ்ஞானம்’ (Sex is Super-consciousness) என்று எழுதியிருந்தது. இத்தகைய விபரீதப் போக்குகள் ஆன்மிகத்திற்குள் நிகழ்ந்து விடுகின்றன.

இது எப்படி இருக்கிறது என்றால், சேற்றிலிருந்து தாமரை தோன்றுகிறது என்னும் கருத்தை மாற்றி ‘சேறுதான் தாமரை’ என்று கூறுவதைப் போல் உள்ளது. சேறு வேறு தாமரை வேறு என்பதுபோல் காமம் வேறு அதிபிரக்ஞை நிலை வேறுதான்.

காமம் என்பது சேறு எனில், காதல் என்பது நீர். பிறகு அதிபிரக்ஞை என்பது தாமரை. அதில் அடையப்படும் இறையனுபவம் அல்லது யோகம் என்பது தேன். அந்தத் தேனின் சுவையை அனுபவிக்கும் வண்டுதான் ஆன்மா.

சேற்றிலிருதுதான் தாமரைக் கொடி வளர்கிறது. ஆனால், தாமரையின் தேனை உண்ணும் வண்டுக்குச் சேற்றில் என்ன வேலை?

மேலும், சேற்றில் புரளும் பன்றிக்குத் தாமரை தேவைப் படுவதில்லை!” என்றார் சூஃபி.

13
’இவ்வுலகில் வந்திருக்கும் நாம் அவ்வப்போது பேசிக்கொள்ளும் இந்த ஞான உரைகள் என்பதெல்லாம் என்ன? கூண்டுக்குள் அடைபட்ட பறவை ஒன்றின் சிறகடிப்புக்கள்தானோ?’ என்று கேட்டேன்.

”இல்லை. வானில் சிறகடிக்கும் பறவை ஒன்று கூண்டுக்குள் விழுந்துள்ள தனது நிழலைப் பார்த்துக்கொண்டிருக்கிறது” என்றார் சூஃபி.

14

மௌலானா ரூமியின் கவிதை ஒன்றினை முன்வைத்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

“காதலரின் சபையைக்
காணும்போது
கடந்துபோய் விடாதே
அவர்களுடன் அமர்ந்துகொள்
காதலின் அக்னியில்
கதகதப்பாய் உள்ளது உலகம்
எனினும்
தீயும் இறந்துபோகிறது
சாம்பல்களின் சகவாசத்தில்”

என்பது அந்தக் கவிதை.

“சாம்பல் எங்கிருந்து வந்தது? அது தீயிலிருந்தேதான் உருவாகிறது. சமயம் என்பது ஆன்மிக ஒளியை நல்கும் தீ. அதனடியிலேயே சாம்பல் உருவாகிவிடுகிறது.

உஷ்ணத்தை இழக்கும் தீ சாம்பலாகிறது
உண்மையை இழக்கும் சமயம் சடங்காகிறது”
என்றார் சூஃபி.

15

நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளினை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். மவ்லிதுப் பாக்களை மனமுருகிப் பாடிக் கொண்டாடுதல், நபியின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைந்து கொண்டாடுதல், நபியின் போதனைகள் விளக்கப்படும் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டாடுதல் மற்றும் இன்ன பிற. நபியின் பிறந்த நாளினை எப்படிக் கொண்டாடுவது சிறப்பு? என்று கேட்டோம்.


“முஹம்மதின் பிறப்பு உன்னில் நிகழட்டும்” என்றார் சூஃபி.

2 comments:

  1. தங்கள் பணி தொடர வல்ல இறைவன் அருள் புரிவனாக....

    ReplyDelete