Thursday, January 16, 2014

... என்றார் சூஃபி - part 4

16
‘மதுவே பாவங்களின் அன்னை’ (அல்-ஃகம்ரு உம்முல் ஃபவாஹிஷ்) என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி.

போதை ஏறியவன் மெய் எது பொய் எது என்று காணும் தெளிவை இழந்து விடுகிறான்.
அப்படி முதலில் தடுமாறியவன் இப்லீஸ் (ஷைத்தான்). அவன் அருந்திய மது ’நான்’ என்னும் ஆணவமே ஆகும். எனவே ஆணவத்தில் செய்யும் காரியங்கள் எல்லாம் பாவங்களே.

ஆணவம் மாயையில் சிக்குகிறது. பின், பாவச் செயல்களான கன்மங்கள் பல்கிப் பெருகி அடர்கின்றன.

இவற்றுக்குச் சுருதிப் பிரமாணங்கள் வேண்டுமா?

ஆணவம் கொண்ட மனம் ’நஃப்ஸுன் அம்மாரா’ எனப்படும். “திண்ணமாக மனம் தீமையைத் தூண்டுகிறது, என் ரட்சகன் அருள் புரிந்த மனங்களைத் தவிர” (இன்னன் நஃப்ச ல-அம்மார(த்)து(ம்) பிஸ்ஸூஇ இல்லா மா ரஹிம ரப்பீ -12:53)

மாயை என்பது ’குரூர்’ எனப்படும். ”இவ்வுலக வாழ்க்கை மாய இன்பமே அன்றி வேறில்லை” (வ மல் ஹயாத்துத் துன்யா இல்லா மதாஉல் குரூர் -3:185 மேலும் 57:20)

”உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது” (வ கர்ரத்ஹுமுல் ஹயாத்துத் துன்யா -6:130)

”தமது மார்க்கத்தைக் கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் கொண்டார்களே, அத்தகையோரை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டது” (அல்லதீனத்தஃகதூ தீனஹும் லஹ்வன் வ லஇபன் கர்ரத்ஹுமுல் ஹயாத்துத் துன்யா -7:51)

”இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம்; அல்லாஹ்வைப் பற்றி (ஷைத்தானாகிய) மாயன் உம்மை ஏமாற்றாதிருக்கட்டும்” (ஃபலா தகுர்ரன்னக்குமுல் ஹயாத்துத் துன்யா வ லா யகுர்ரன்னகும் பில்லாஹில் கரூர் -31:33 மேலும் 35:5)

”அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நீங்கள் அலட்சியமாக்கியதாலும் உலக வாழ்க்கை உங்களை மயக்கியதாலுமே இந்நிலை” (தாலிகும் பிஅன்னகுமுத்தஃகத்தும் ஆயாத்தில்லாஹி ஹுஸுவன் வ கர்ரத்குமுல் ஹயாத்துத் துன்யா -45:35)

”திண்ணமாக இவ்வுலக வாழ்க்கை வெற்று கேளிக்கையும் வீண் விளையாட்டுமே” (இன்னமல் ஹயாத்துத் துன்யா லஇபுன்வ்வ லஹ்வுன் -47:36)

ஆணவம் மாயையின் வசப்படும்போது அகக் கண்களின் மீது திரை விழுந்து உண்மையைக் காண இயலாமல் ஆகிறது.

“இன்னும் நாம் அவர்களுக்கு முன்னில் ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னில் ஒரு தடுப்பையும் அமைத்துவிட்டோம். அவர்களை மூடிவிட்டோம். அவர்கள் காண்பவர்களாக இல்லை” (வ ஜ-அல்னா மிம் பைனி ஐதீஹிம் ஷத்தன்வ்வ மின் ஃகல்ஃபிஹிம் ஷத்தன் ஃப-அக்‌ஷைனாஹும் ஃபஹும் லா யுப்ஸிரூன் -36:9)

மாயை வயப்பட்ட மனம் செய்யும் கன்மங்கள் (காரியங்கள்) அதன் நாசத்திற்கே வழிசெய்யும் என்பதறிக.

”தமது மார்க்கத்தைக் கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் கொண்டார்களே, மேலும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதே, அத்தகையோரை விட்டு நீங்குக; ஒவ்வொரு மனமும் தான் ஈட்டியது கொண்டு நாசமடையும் என்பதை இவ்வேதம் கொண்டு உணர்த்தி நிற்க” (வ தரில்லதீனத்தஃகதூ தீனஹும் லஇபன்வ்வ லஹ்வன் வ கர்ரத்ஹுமுல் ஹயாத்துத் துன்யா வ தக்கிர் பிஹி அன் துப்சல நஃப்சுன்(ம்) பிமா கசபத் -6:70)

பாவங்கள் பல்வகையாய்ப் பெருகிக் கிடக்கின்றன. அவற்றை விட்டும் தப்புவதற்கு எளிய வழி என்ன என்று கேட்கிறீர்கள். ஊற்றுக்கண் எது என கண்டு தூற்றிக் கொள். ஆணவத்தை விட்டும் மனதைத் தூய்மை ஆக்கு.

ஆணவம் வேர் எனில் மாயை தண்டாகவும் கன்ம காரியங்கள் கவடு விட்டு மலியும் கிளைகளாகவும் உள்ளன.

இத்தனை விளக்கங்களுக்குப் பின், “வேரினை வெட்ட கிளை வெட்ட வேண்டா” என்றார் சூஃபி.

17
ஏகத்துவ மூல மந்திரம் பற்றி உள்ளமையின் நோக்கில் பேசிக் கொண்டிருந்தோம்.
லா இலாஹ இல்லல்லாஹ் என்பதில் நஃபியும் (நீக்குதலும்) இஸ்பாத்தும் (ஊன்றுதலும்) இருக்கின்றன.

லா இலாஹ (உள்ளமைப் பொருள் (வேறு) இல்லை) என்று சொல்வதில் நீ இல்லாமல் ஆவதும், இல்லல்லாஹ் (அல்லாஹ்வை அன்றி) என்பதில் அவனை அடைந்து கொள்வதும் வேண்டும்.

அடுப்பின் மீது சட்டியை வைத்தாகி விட்டது. சட்டியில் அரிசியும் மசாலாவும் கறியும் எல்லாம் சரியான விகிதத்தில் போட்டாகி விட்டது. மணிக்கணக்காக மூடி ’தம்’ வைத்துப் பார்த்தும் பச்சையாகவே இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? அடுப்பைப் பற்ற வைக்கவே இல்லை! எவ்வளவு நேரம் ஆனாலும் வேகாது அல்லவா?

’இறைக்காதல் என்னும் நெருப்பை இதயத்தில் பற்ற வை’ என்று மௌலானா ரூமி (ரஹ்) மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

இவ்வளவும் சொல்லிச் சிறிது நேரம் மௌனமாக இருந்த பின்,
“லா இலாஹ எனும் வாயிலாக எனை நீக்கும் போதிலே
இல்லல்லாஹு என உள்ளதாகி ஒளி கூட்டும் காதலே”
என்றார் சூஃபி.

18

“நீவிர் மாறி, பிள்ளைகள் போல் ஆனால் அன்றி சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டீர்” என்று ஏசுநாதர் சொல்வதாக பைபிளில் ஒரு வாசகம் உள்ளதே? என்றார் கஸன்.

“நமது கண்கள் பிறரின் முகங்களை எல்லாம் பார்க்கும், தன் முகத்தைப் பார்க்க இயலாது. கண்ணாடியே பார்த்தறியாத குழந்தையைக் கவனியுங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அனைத்தையும் அது பார்க்கிறது. ஆனால் தன்னைப் பார்க்க வேண்டும் என்னும் சிந்தனையே அதனிடம் இருக்காது. கண்ணாடியை அதன் முன் காட்டினாலும் அதில் விழும் பிம்பத்தை அக்குழந்தை தான் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாது. தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதே ஆணவம் திரள்வதற்கான முதற்புள்ளி. அப்புள்ளி இன்னும் குழந்தையிடம் உருவாகவில்லை. ஆணவம் இல்லாத அந்த நிலையே சொர்க்கத்திற்குள் சேர்க்கும் என்பதையே ’பிள்ளைகள் போல் ஆகுவீர்’ ஈசா நபி குறிப்பிடுகிறார்கள்.

’ஞானிகள் குழந்தைகளைப் போல் இருப்பர்’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுவே.
’தன் உள்ளத்தில் கடுகளவு ஆணவம் (கிப்ரு – தற்பெருமை) கொண்டவனும் சொர்க்கத்தினுள் நுழைய மாட்டான்’ என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்கு. அதன் பொருளும் பிள்ளை போல் ஆவீர் என்பதே.

குளவி போல் உலவி இருப்போர் எத்தனையோ? - அன்பில்
குழவி போல் குலவி இருப்போர் எத்தனையோ?”
என்றார் சூஃபி.

No comments:

Post a Comment