’காலம்’ என்னும் பொருண்மை அறிவியல்
மற்றும் ஆன்மிகம் ஆகிய இரு துறைகளிலும் பெரிதும் பேசப்படும் ஒன்று. ஹாரூன் யஹ்யா எழுதிய
“The Eternity Has Already Begun” என்னும் நூல் திருக்குர்ஆன் வசனங்களை வைத்துக் கொண்டு
அறிவியல் நோக்கில் காலம் பற்றி ஆயும் அருமையான நூல். காலம் தொடங்கிய காலம் தொட்டே காலம்
பற்றியும் காலாதீதம் பற்றியும் இரண்டிற்கும் உள்ள உறவு குறித்தும் மனித மனம் சிந்தித்து
வருகிறது. முப்பரிமான உலகிற்கு அடுத்தமையும் நான்காம் பரிமாணம்தான் காலம் என்றார் ஐன்ஸ்டீன்.
காலம் என்பது இடத்தின் நீட்சியே என்பது அவரின் தத்துவச் சாரம். இக்கருத்தினைத் தொட்டுக்
காலம் பற்றிப் பாவாணர் எழுதியுள்ள ஒரு சிறு பத்தி அவரின் சிந்தனைச் செழுமைக்குக் கட்டியம்
உரைக்கிறது:
“இடம் உண்மையின் (இருத்தலின்)
தொடர்ச்சியே காலம். அது ஒரே தன்மையது. அழியும் பொருள்களை நோக்கியே இறப்பு நிகழ் வெதிர்வு
என்றும், கதிரவன் திங்கள் தோற்ற மறைவும் தட்ப வெப்ப நிலை வேறுபாடும் பற்றியே சிறு பொழுதும்
பெரும் பொழுதுமாகவும், அது பகுக்கப்படும். எதிர்வெல்லாம் நிகழ்வாகிப் பின்பு இறப்பாகி
விடும்.” (பக்கம்:103)
இடத்தின் வேறுபாடுகளைக் கொண்டே
காலத்தையும் பகுத்து வேறுபடுத்தி உணர்ந்து கொள்கிறோம் என்னும் உண்மை இவ்வரிகளில் எவ்வளவு
அழகாக வெளிப்பட்டுள்ளது!
ஊழி முடிவை, உலக முடிவை ‘கியாமத்’
என்னும் சொல்லால் குறிக்கிறது இஸ்லாம். அச்சொல்லுக்கு ‘நிற்றல்’ என்பது பொருள். எது
நிற்றல்? எனின் காலம் நின்று போவது என்பது விளக்கம். மறுமையில் காலப் பரிமாணம் இல்லை.
ஆஃது காலாதீதமாய் இருக்கும். எனில், தோன்றிய ஒன்றும் மறைந்திராது. எனவே, இடப் பரிமாணத்திற்கு
மாறுதல்கள் இல்லை. ஆகையால் கால வேறுபாடுகளும் இல்லை. ‘சொர்க்கத்தின் பொழுது மாறாத வைகறை’
என்னும் நபிமொழிக் கருத்தினை ஓர்க.
தேவநேயப் பாவாணரின் மையப் பணி
தமிழ் மொழியின் தூய்மையை நிலை நிறுத்துவதுதான். மொழியியலின் அந்த அளவுக்கு ஆழமும் விரிவும்
கொண்ட ஆய்வுகள் செய்தோர் உலகத்திலேயே சிலர்தான் என்று சொல்லலாம். தமிழில் வேரூன்றியிருக்கும்
ஆரிய மொழித் தாக்கத்தைக் கெல்லி எறிய வேண்டும் என்பது அவரின் ஆறா விழைவாக இருந்தது.
அந்தத் தேடலில் அவரின் உள்ளம் கண்டடைந்த உண்மைகள் பல. மொழித் தேடலாகத் தொடங்கிய அப்பயணம்
தமிழரின் சமயக் கொள்கை என்ன என்பதையும் கண்டறிந்தது. அதனை உலகிற்கு எடுத்துரைக்கும்
நூல்தான் அவரெழுதிய “தமிழர் மதம்” என்னும் இந்நூல். ஆன்மிக ஆர்வம் கொண்ட எவரும் வாசிக்க
வேண்டிய ஒரு நூல் இது.
தமிழரின் மதக் கொள்கை ஆரியக் கலப்பால்
அழுக்கானது என்பது தேவநேயரின் ஆய்வு முடிவு. அந்த அழுக்கினைச் சலவை செய்து தமிழர்க்கு
அவர்தம் தொன்மை மதக் கொள்கையை எடுத்துச்சொல்ல பாவாணர் இந்நூலில் முனைகிறார்.
பொதுவாக, உலகச் சமயங்களை அலசுவோர்
செமிட்டிக் மதங்கள் என்று யூத மதத்தையும், கிறித்துவத்தையும் இஸ்லாமையும் குறிப்பிடுவது
வழக்கம். ஒரே வேறிலிருந்து தோன்றிய மூன்று கிளைகள் என்று இந்த மூன்று சமயங்க்ளையும்
பற்றி ஓஷோ ஓரிடத்தில் பேசியிருக்கிறார். இவை மூன்றினையும் “MONOTHEISTIC
RELIGIONS” ஏகதெய்வக் கொள்கையுள்ள மதங்கள் என்று சொல்வதுண்டு.
இஸ்லாமின் நம்பிக்கைப்படி ஏகதெய்வ
வணக்கம் என்பது அறபகத்தில் நபிகள் நாயகத்தால் புதிதாக போதிக்கப்பட்ட கொள்கை அல்ல. அல்லது
நபிகள் நாயகத்துக்கும் ஏசுநாதருக்கும் பொதுவான வமிச முன்னோடியான இப்றாஹீம் (லத்தீனாக்கம்:
ஆபிரஹாம்) என்னும் இறைத்தூதரால் முதன் முதலில் போதிக்கப்பட்டது என்பதும் அல்ல. முதல்
மனிதரான ஆதம் தொட்டு உலகிற் போந்த அனைத்து இறைத்தூதர்களும் போதித்த தூய இறைக் கொள்கை
ஏகதெய்வ வணக்கமே என்று இஸ்லாம் நம்புகிறது. ஆதம் என்னும் அந்த முதல் மனிதர் இந்தியாவில்
இருந்த ’பூத்’ அல்லது ’நூத்’ என்னும் மலைமீது இறக்கப்பட்டார் என்றும் இன்றைய இலங்கையில்
உள்ள ஒரு மலை மீது இறக்கப்பட்டார் என்றும் நபிமொழிகளில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
(அறபு மொழியில்: சிரந்தீப். தலைத்தீவு என்னும் பொருள்பட சிரந்தீவு என்பது அறபியில்
சிரந்தீப் என்று மருவியதாக இருக்கலாம். இது இலங்கைக்கு நபிகள் நாயகம் காலத்துப் பெயர்.
ஆதம் இறக்கப்பட்ட போது அவ்விடம் தீவாக அன்றிக் குமரிக் கண்டமாக இருந்திருக்க வேண்டும்.
எனவே இலங்கை எனினும் இந்தியா எனினும் முற்காலத்தில் அவை பிரியாது ஒரே நிலப்பரப்பாக
இருந்ததைக் கருத்தில் கொள்ள நபிமொழிகளில் உள்ள அறிவிப்புக்கள் முரணானவை அல்ல என்பது
விளங்கும். இலங்கையும் இந்தியாவும் முற்காலத்தில் பிரியாது இருந்ததை நபிமொழிகள் உணர்த்துகின்றன).
இதனை ஓர்ந்துகொண்டு தேவநேயப் பாவாணர் தனது நூலில் எழுதியிருப்பதைப் படியுங்கள்:
“இசுமவேல இசுரவேலரின் முன்னோனான
ஆபிரகாமிற்கு முன்பே, நோவா காலத்துப் பெரு வெள்ளத்திற்கும் முன்னரே, கடவுளை உலகில்
முதன் முதலாகக் கண்டவர் குமரி நாட்டுத் தமிழரே. கடவுள் என்னுஞ் சொல் தொல்காப்பியத்தில்
ஆளப்பட்டிருப்பதே, அதற்குச் சான்றாகும்.
“காமப் பகுதி கடவுளும் வரையார்”
(தொல்.புறத்.உஅ)
“கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(மேற்படி.மேற்படி.ங.ங).
கடவுள் என்னுஞ் சொல், எல்லா வற்றையுங்
கடந்து எண்ணிற்கும் எட்டாத பரம் பொருளையே குறிக்கும். சிறு தெய்வ வணக்க ஆரியர் (பிராமணர்),
பிற்காலத்தில் அதைப் பிழைபட ஆண்டு விட்டனர்
.
கடவுட்கு உருவமின்மையால், உருவ
வணக்கமுமில்லை. எவரும் எங்கும் என்றும் தமித்தும் பிறரொடு கூடியும், கடவுளைத் தொழலாம்.”
(பக்கம்:54)
கடவுள் மற்றும் இறைவன் என்னும்
சொற்களை எப்பொருளில் பாவாணர் வழங்குகிறார் என்பதை அறிந்து கொள்வது இங்கே அவசியம். தமிழ்
மொழியின்படி இச்சொற்களுக்கான சரியான அர்த்தத்தை அவர் தருகிறார் என்பதால் இந்த அர்த்தங்களிலேயே
நாமும் பயன்படுத்துவதுதான் அறிவுடைமையும் நேர்மையும் ஆகும்.
கடவுள் என்பது கடந்து உள்ளது என்று
அர்த்தப்படும் சொல். காலம் இடம் பொருட்கள் ஆகிய படைப்புக்கள் அனைத்துக்கும் அப்பால்
இருக்கும் நிலையைக் குறிப்பது. சூஃபிகள் இந்நிலையை ’தன்ஸீஹ்’ என்று கூறுவர்.
இறைவன் என்பது எங்கும் நிறைந்திருப்பது
என்று அர்த்தப்படும் சொல். படைப்புக்கள் அனைத்திலும் அவன் ஏகனாய் இருக்கும் நிலையைக்
குறிப்பது. சூஃபிகள் இந்நிலையை ’தஷ்பீஹ்’ என்று கூறுவர்.
இவ்விரு நிலைகளும் ஏகத்துவத்தின்
பாற்பட்டதாகும்.
ஆக, ”ஏக இறைவனின் திருப்பெயரால்” என்று சொல்லும் போது படைப்புக்கள் அனைத்திலும்
நீக்கமற நிறைந்து எங்கும் இருக்கின்ற ஏகனின் பெயரால் என்று அர்த்தப்படுகிறது. இது சரியான
கொள்கைதான். இறைவனின் உள்ளமையை ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ள ’அர்ஷ்’ என்னுமொரு படைப்பில்
மட்டுப்படுத்தி அவன் வேறு எங்கும் இருப்பவன் அல்லன் என்று பகரும் இணைவைப்புக் கொள்கைக்கு
மாற்றமாக இந்த வாசகம் அமைந்திருக்கிறது.
மதங்கள் மூவகைப்படும் என்று பாவாணர்
சொல்கிறார். மூன்று வகைக்கும் வெவ்வேறு சொற்களை அவர் கையாள்வதைக் கவனிக்கவும்:
“மக்களின் அறிவு நிலைக்கேற்ப,
மதம், (க) சிறுதெய்வ வணக்கம், (உ) பெருந்தேவ மதம், (ங) கடவுள் சமயம் என மூவகைப்படும்.”
(பக்கம்:10)
இம்மூன்றையும் பாவாணர் வேறுபடுத்திக்
காட்டுகிறார். ஐம்பூதங்களையும் அதன் கலவைகளாக உள்ளவைகளையும், அதாவது படைப்புக்களை,
அவற்றுக்கு வேள்வி காவு முதலியன கொண்டு வழிபடுவது சிறுதெய்வ வணக்கம்.
இறைவனை (எங்கும் நீக்கமற நிறைந்த
பரம்பொருளை) உருவகப்படுத்திக் கொண்டு, அடையாளங்கள் இட்டு வழிபடுவது பெருந்தேவ மதம்.
இதில் சைவத்தையும் வைணவத்தையும் சேர்க்கிறார். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
என்னும் ஐந்து திணைகளுக்கும் ஐந்து சிறுதெய்வ வணக்க முறை இருந்தது. அவற்றில் இவ்விரண்டு
மட்டும் பெருந்தேவ வணக்கமாக வளர்ந்தது என்பது அவரின் கருத்து:
“ஐந்திணை தெய்வ வணக்கங்களுள்,
இரண்டே மதமாக வளர்ச்சி யடைந்தன. சேயோன் வணக்கத்தினின்று சிவ மதமும், மாயோன் வணக்கத்தினின்று
திருமால் மதமும், தோன்றின. விண்ணுலக வேந்தன் கொள்கையின் பின் எங்கும் நிறைந்த இறைவன்
கொள்கை ஏற்பட்டபோது, தீயின் கூறாகச் சிவன் என்றும் நீரின் கூறாக மால் (மாயோன்) என்றும்,
பெயரிட்டு இறைவனை வழிபட்டனர்” (’பெருந்தேவ மதம்’
என்னும் தலைப்பின்கீழ் இவ்வாறு எழுதியுள்ளார். பக்கம்:37)
கடவுட் சமயம் என்பது என்ன என்பதற்குப்
பாவாணர் தரும் விளக்கம்:
“எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை
உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமும் தூய்மையாக்கி,
இல்லறத்திலேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர்கட்கும் நன்மையே செய்து,
இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடு பெற ஒழுகுவது, கடவுள் சமயமாம்” (’மூவகை மதம்’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது.பக்கம்:10,11).
“ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம்
பால் பருவம் முதலிய வரையறை யின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லா வற்றிற்கும்
பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறா திருக்கும் பரம் பொருளை உள்ளத்தில் அகக்
கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம்.” (’கடவுட் சமயம்’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது
பக்கம்:53).
’சிதம்பர ரகசியம்’ என்று ஒன்றுண்டு.
சிதம்பரம் நடராசர் கோவிலில் சிலை இன்றி பீடம் மட்டும் உள்ள இடம் ஒன்று இருக்கிறதாம்.
இறைவனுக்கு உருவம் இல்லை என்னும் பேருண்மையை அது உணர்த்தி நிற்கிறது என்றும் அதுவே
சிதம்பர ரகசியம் என்றும் சொல்கிறார்கள். சிற்பக் கலை பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான்
எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இதனைக் கூறியுள்ளார். “கலைகள் எல்லாம் இல்லாமையில் தோன்றும்.
ஆனால் இருப்பதிலேயே தோன்றுவது சிற்பக் கலை. ஏனைய கலைகள் வேண்டுவன வற்றைச் சேர்த்துக்
கொண்டே போய் முழுமை பெறூம். வேண்டாதவற்றை நீக்கிக் கொண்டே போய் முடிவது சிற்பக் கலை.
சிதம்பரத்தில் சிற்பமே இல்லாத பீடமொன்றுண்டு. வேண்டாதவற்றைச் செதுக்கிக் கொண்டே போய்
எல்லாவற்றையும் செதுக்கி எறிந்த ஒருவன் கண்டடைந்த ரகசியம் அது. அதுவே சிதம்பர ரகசியம்.”
இக்கருத்துக்கள் தொனிக்க அப்துல் ரகுமான் அந்தக் கட்டுரையை அவரின் பாணியில் வெகு செப்பமாக
எழுதியிருப்பார். தேவநேயப் பாவாணர் அந்தச் சிதம்பர ரகசியம் பற்றிப் பேசுகிறார்:
“கட்புலனாகக் காணும் நடவரசன் படிமை,
அகக் கண் வளர்ச்சி யடையாத பொது மக்கட்குரியதே. சிறந்த அறிவரான அடியார், திறந்த வெளியையே
அம்பலமாகக் கருதுவர். அப் பரவெளி யம்பலமே திரை நீக்கிக் காட்டப்படும். அதுவே சிற்றம்பல
மருமம் (சிதம்பர ரகஸியம்) என வழங்குவது” (பக்கம்:42)
இறைவனின் சுயத்தைக் குறிக்கும்
சூஃபிக் கலைச்சொல் “ஜாத்” என்பதாகும். இறைவனின் பண்புகளைக் குறிக்கும் சூஃபிக் கலைச்சொல்
“சிஃபாத்” என்பது. இறைவனின் சுயத்தில் சார்ந்து நிற்பதே அவனின் பண்புகள். பண்புகள்
சுயத்தை விட்டும் தனித்து நில்லா. சுயம் பண்பு ஆகிய இரண்டுமே அநாதிகள்தாம். எனினும்,
மனிதனின் அனுபவத்திற்கு அவை தம்மைக் காட்டிக்கொள்ளும் வகக்யில் சுயம் மீளப்படும் இடமாகும்;
பண்புகள் சுயத்தின் பக்கம் மீள்வன. சுயம் தொடரப்படுவது; பண்புகள் சுயத்தைத் தொடர்வன.
ஒருவகையில் சுயம் மூலம் போன்றும் பண்புகள் அதன் வருவிப்புக்கள் (derivatives) போன்றும்
செயல்படுகின்றன.
ஆணிலிருந்து பெண் (ஆதாமிலிருந்து
ஹவ்வா) வெளிப்பட்டதைக் கவனித்து, பெண் என்பவள் ஆணைச் சார்ந்தவள். பெண் மீள்பவளாகவும்
ஆண் மீளும் தளமாகவும் இருக்கிறான். இத்தத்துவத்தின் அடியாக இறைவனின் சுயத்தையும் பண்புகளையும்
உருவகித்த சைவ அறிவர்கள்தாம் அம்மை அப்பன் என்று அதனை வரைந்து வைத்தார்கள். இதனைப்
பின்வருமாறு பாவாணர் சொல்கிறார்:
“அம்மையப்பன் வடிவு, இறைவனின்
உண்மை வடிவைக் காண முடியாத இல்லற வாணரான பொது மக்கட்கே. உயர்ந்த அறிவு படைத்த சித்தரும்
முனிவரும், இறைவனின் ஆற்றலையே பெண் கூறாக உருவகிப்பர்.” (பக்கம்:41)
இத்தகைய உருவகிப்புக்களாலேயே சிவனியமும்
மாலியமும் (சைவம், வைணவம் ஆகியவற்றைப் பாவாணர் இன்னனம் குறிப்பிடுகிறார்) சிறுதெய்வ
மதத்திற்கும் கடவுட் சமயத்திற்கும் இடைப்பட்ட பெருந்தேவ மதங்களாக இருக்கின்றன என்பது
பாவாணரின் கருத்து.
சிறுதெய்வ வழிபாட்டு நிலை நோக்கித்
தமிழரின் தொல் மதத்தை இழித்தது ஆரியக் கலப்பே என்பதை தனது நூல் நெடுகிலும் பாவாணர்
பரக்கக் கூறிச் செல்கிறார். அப்பகுதிகள் தோறும் அவரது அறச் சீற்றத்தின் அனல் அடிக்கிறது.
”ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த
காலம் தோரா. கி.மு.கரு00. அவர் மதம் கொலை வேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்பு
கொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் தழுவினர். ஆதலால், அவரின் வேதாகம
இதிகாச புராணக் கதைகளையும் புரட்டுக்களையும் நம்பி, அவையே சிவ நெறிக்கும் திருமால்நெறிக்கும்
அவற்றின் கொண்முடிபுகட்கும் (சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ்விருபதாம் நூற்றாண்டிற்கு
எட்டுணையும் ஏற்காது. இதன் விளக்கத்தை இந்நூல் நெடுகலும் கண்டு தெளிக.” (பக்கம்:11)
“இயற்கைத் தோற்றங்க ளெல்லாம் தெய்வங்க
ளாக்கப் பட்டுள்ளன” (’வேத கால ஆரியத் தெய்வ
நிலைகள்’ என்னும் தலைப்பின் கீழ். பக்கம்:67)
“முருகன் சிவன் காளி திருமால்
என்னும் தமிழ்ச் சிறு தெய்வங்களையும் பெருந் தேவரையும் பற்றி, ஆரிய வேதத்தில் ஒரு குறிப்பும்
இல்லை” (பக்கம்:67)
“வேத ஆரியர் தெய்வ வழிபா டெல்லாம்,
கொலை வேள்விப் பல் சிறு தெய்வ வணக்கமே” (’ஆரியர்
தெய்வ வணக்க நிலை’ என்னும் தலைப்பின் கீழ். பக்கம்:68).
”கோவில் வழிபாடு, பெருந் தேவ மதம்,
கடவுட் சமயம், நாற் பொருள், வீடுபேறு என்பன பற்றி, இருக்கு வேதியர்க்கு ஒரு கருத்தும்
இருந்ததில்லை” (பக்கம்: 68).
”ஆரியர் ஆடு மாடு மேய்க்கும் இனமாகக்
கூட்டங் கூட்டமாய்க் காந்தார நாட்டு (ஆபுகானித்தானம்) வழி இந்தியாவிற்குட் புகுந்தாராயினும்,
அவருட் பூசாரியர் தவிரப் பிற ரெல்லாம் இந்தியப் பழங்குடி மக்களோடு கலந்து போனமையால்,
வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஆரியத்தைப் பரப்பியவரும், ஆரியரென்று பொதுவாகச் சொல்லப்படுபவரும்,
பிராமணரையே என்றறிதல் வேண்டும்.” (பக்கம்:69)
“ஆரியர், முன்பு பிராகிருதரையும்
பின்பு திராவிடரையும் அதன் பின் தமிழரையும் வெல்லக் கையாண்ட வழிகளுள் ஒன்று, அவர் தெய்வத்தைத்
தாமும் வணங்கல். இது அடுத்துக் கெடுத்தல் என்னும் வலக்காரத்தின் பாற்பட்டது” (பக்கம்:69)
தமிழரின் தொல் மதத்தில் மேற்கண்ட
படி கலந்த ஆரியம் பின் எவ்வாறு ஏக இறை வணக்கத்தில் திரிபு செய்தது என்பதை “முத் திருமேனிப்
புணர்ப்பு” (Trinity Concept) என்னும் தலைப்பின் கீழ்ப் பின்வருமாறு பாவாணர் எழுதுகிறார்:
“தமிழ்ப் பொது மக்கள் அரசரைப்
பின் பற்றிப் பிராமணர்க்கு எத்துணை அடிமைப்பட்டுப் போயினும், ஆரிய வேள்வி மதத்தை மட்டும்
ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணரும், வடநாட்டிற் சிவக்குறி (இலங்க) வணக்கஞ் செய்து வந்த
சிவனியரை ஆண்குறித் தெய்வ வணக்கத்தார் (சிச்ன தேவ) என்று பழித்து வந்தாரேனும், தென்னாடு
வந்தபின் சிவனிய மாலியங்களின் உயர்வையுணர்ந்து, அவற்றை ஆரியப் படுத்தற்கு, இறைவன் முத்தொழிலையும்
வெவ்வேறு பிரித்து, தாம் புதிதாகப் படைத்த பிரமனைப் படைப்புத் தேவனென்றும், முத்தொழில்
திருமாலைக் காப்புத் தேவனென்றும், முத்தொழிற் சிவனை அழிப்புத் தேவனென்றும், முத்திருமேனிக்
கொள்கையைப் புகுத்தி விட்டனர்.” (பக்கம்:73)
பாவாணர் இவ்வாறு எழுதினும், சைவரும்
வைணவரும் தத்தமது இறை உருவகிப்பை இவ்வாறு ஒற்றைத் தொழிற்கு இறக்கப்படுவதை ஒருபோதும்
ஏற்கவில்லை. முத்தொழிலையுமே தத்தமது இறையுருவகிப்பிற்கு உரியதாகவே இன்று வரை கொண்டுள்ளனர்.
சைவத் திருமுறைகளையும் வைணவப் பிரபந்தங்களையும் வாசித்தால் இதனை அறியலாம். இக்கருத்தையும்
தேவநேயர் தனது நூலின்கண் விளக்கியிருக்கிறார். உதாரணத்திற்கு ஒரு மேற்கோள்:
“கிறித்தவமும் இஸ்லாமும் போலச்
சிவனியமும் மாலியமும் வேறுபட்ட மதங்களாம். ஆயினும், இரண்டும் இறைவனையே வெவ்வேறு பெயரால்
வணங்குவனவாம். ஆதலால், சிவனைப் போன்றே திருமாலும் முத் தொழில் செய்பவன் என்று கூறப்படும்”
(’தமிழ் மத உட்போர்’ என்னும் தலைப்பின் கீழ்
எழுதப்பட்டது. பக்கம்:117)
உருவகத்தை உருவகம் என்று உணராது
உண்மை என்று கொள்வதால் உறும் ஊறு பற்றிப் பாவாணர் பின்வருமாறு உரைக்கிறார்:
“ஆண் பெண் பான்மை யின்றி ஒரே தன்மையாய்
ஆற்றல் வடிவாயுள்ள இறைவனை, பொதுமக்கட்கு அம்மை யப்பனாகக் கூறிய அணி வகையை அறியாது,
மாந்தரைப் போன்ற கணவனும் மனைவியுமாகக் காட்டி, தலையுங் காலுமில்லாத பல்வேறு கதைகளைக்
கட்டி, சொல்லளவாக வுள்ள சிவன் சிவைக்கு ஆண்டு தொறும் திருமணம் நடத்தி வைப்பது, எத்துணைத்
துணிச்சலான தெய்வப் பழிப்புச் செயல்!” (பக்கம்:102)
“(கஅ) கடவுட் சமய மறைப்பு
உருவ வழிபாட்டினாலேயே ஆரியர்க்குப்
பிழைப்பும், தமிழரை முன்னேற வொட்டாது என்றும் அடிமைத் தனத்துள் அமிழ்த்தும் வாய்ப்பும்,
உண்மையால், கடவுட் சமயம் மறைக்கப்பட்டது” (’ஆரியர்
தமிழரை அடிப்படுத்திய வகைகள்’ என்னும் தலைப்பின் கீழ். பக்கம்:108).
”தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே
என்னை மிக மிகப் புண் படுத்தியது. நாடு தமிழ்நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்;
பணம் தமிழன் பணம். அங்ஙனமிருந்தும், தமிழன் நாய் போல் நடத்தப்படுவது இவ்விருபதாம் நூற்றாண்டிலும்
தொடர்கின்றதெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவன் அல்லன் என்பது தெள்ளத் தெளிவாம்.”
(பக்கம்:133&134)
”பிராமணியத்திடமிருந்து தப்ப முடியாதவர்
பிறவியினின்று ஒருகாலும் தப்ப முடியாது. கூரை யேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவனா கோபுர
மேறிக் குடக் கூத்தாடுவான்?” (பக்கம்:136)
இந்நூலை தேவநேயப் பாவாணர் எழுதிய
காலம் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்திருந்த
காலம். பெரியார் அற்றை நாள் தமிழரின் தனிப்பெருந் தலைவராய் இருந்த காலம். அன்னாரின்
கொள்கைகளுக்குத் தி.மு.கழக அரசு சட்ட வடிவம் கொடுத்து வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த
காலம். அதன் பின்னணியிலும்கூட தமிழரின் தொல் கடவுட் கொள்கையே மீண்டும் வேண்டுவதே அன்றி
நாத்திகம் அல்ல என்னும் தெளிவு துலங்கப் பாவாணர் பின்வருமாறு எழுதினார்:
“மதத்தை ஒழித்து விட்டாற் பிராமணியம்
அடியோடொழியு மென்று கருதி, கடவுளில்லை யென்று சிலர் சொல்லி வருகின்றனர். உருவ வணக்கத்தை
ஒழித்து விட்டாலே பிராமணியம் ஒழிந்து போமென்று உறுதியாய்ச் சொல்லலாம்.” (பக்கம்:
142).
பிராமணியம் என்று இங்கே அவர் குறிப்பிடுவது
உருவ வழிபாட்டையும் குலதர்ம வருணாசிரமக் கொள்கையையும் ஆகும். பின்னைக் காரணம் பற்றி
அவர் பின்வருமாறு கூறுகிறார்:
“தமிழ் நாட்டைப் பொருத்த வரையில்,
மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையா யிருப்பது, ஆரியத்தா லேற்பட்ட பிறவிக் குலப்
பிரிவினையே யன்றி வேறன்று. இது இந்தியாவிற்கே சிறப்பான குமுகாயக் கொடு நோய்.” (பக்கம்:184)
தமிழர்க்கு நிகழ்ந்த தடையாக அவர்
கருதுவது இஃதொன்றுதான் என்னும்படிக்கு அவர் தனது ஆய்வு முடிபாகச் சொல்வதைக் காண்க:
“மெய்ப் பொருள் இருபத் தெட்டே.
மன மொழி மெய்க் கெட்டாது எங்கும் நிறைந்து நுண்ம வடிவி லிருக்கும் ஒரே கடவுளை, ஐங்
கூறாகவும் தொண் கூறாகவும் பகுப்பதும், பாலற்று நினைத்த மட்டில் எல்லாம் நிகழ்த்த வல்ல
மாபெரும் பரம் பொருளை மாந்தனைப் போற் கருதி, அவனுக்கு வாழ்க்கைத் துணையும் ஐம் புதல்வர்
குடும்பமும் தொழிற் றுணைவரும் சேர்ப்பதும், கடவுட் கொள்கைக்கு மாறான தெய்வப் பழிப்பே
யாம்.
ஆரிய வேதத்திற்கும் இரு தமிழ மதங்கட்கும்
யாதொரு தொடர்பு மில்லை. ஆரியக் கூண்டுள் அடைபட் டிருக்கும் தமிழனுக்கு, இம்மை விடுதலையும்
மறுமை விடுதலையும் இல்லவே யில்லை.” (பக்கம்:193)
தமிழன் விடுதலை அடைவதற்கான ஒரே
வழி இறைவனின் உண்மைத் தன்மையான உருவமற்ற நிலையில் அவனை ஏற்று வணங்குவதே ஆகும் என்பது
பாவாணரின் கொள்கையாக இந்நூலெங்கும் மிளிர்கிறது.
“துறவறத்தார்க்கு மட்டுமன்றி,
அறிவு விளக்கம் பெற்ற இல்லறத்தார்க்கும், உருவிலா வழிபாடே உகந்ததாம். உருவ வழிபாட்டினால்,
இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப்படாது போம். அதோடு, அவனது அளவிடப்படாத பெருமைக்கும்
அது இழுக்காகும்.
உலகிலுள்ள உயிரினங்களுள் உயர்ந்தது
மாந்தனினம். ஆதலால், தலைசிறந்த வகையிலும், மாந்தன் வடிவில்தான் இறைவனைக் காட்ட முடியும்.
அதுவே, அவன் மாட்சிமைக்கு இழுக்கா யிருக்க, பகுத்தறிவில்லா யானை வடிவிற் படிவமமைத்து
வணங்குவது எத்துணைப் பழிப்பாகும்! ஒருவர் படத்தைத் தவறாக வரையின், அவருக்கு எத்துணைச்
சினம் எழுகின்றது! மாந்தனுக்கே அங்ஙனமாயின் இறைவனுக்கு எங்ஙனமிருக்கும்!” (’உருவிலா வழிபாடு’ என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டது.
பக்கம்:141)
“தமிழ் நாட்டில் உருவிலா வழிபாடு
பதினெண் சித்தர் காலத்திற் தோன்றிய தென்றும், கிறித்துவிற்குப் பிற்பட்டதென்றும், தவறாகக்
கருதப் படுகின்றது. உலகில் முதன் முதல் கடவுளை உணர்ந்தவர் தமிழறிவரே. கடவுள் என்னும்
சொல், தமிழ் நாட்டில் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். ‘முந்து நூல் கண்டு முறைப்பட
எண்ணிப்’ புலந்தொகுக்கப் பட்ட தொல்காப்பியத்தில், கடவுள் என்னுஞ் சொல் ஆளப்பட்டிருத்தல்
காண்க.” (’உருவிலா வழிபாடு’ என்னும் தலைப்பின்
கீழ் எழுதப்பட்டது. பக்கம்:143)
உருவிலா வழிபாட்டினை வலியுறுத்தும்
பாவாணர் அதற்கு ஏதுவாய்க் காட்டும் மதங்கள் இரண்டு: “இல்லற மக்கட்கு உருவ வழிபாடு இன்றியமையாத
தென்பர் சிலர். கிறித்தவரும் மகமதியரும் உருவிலா வழிபாட்டிற் சிறந்து விளங்குதல் காண்க”
(பக்கம்:142)
உருவிலா வழிபாட்டில் கிறித்துவத்தைப்
பாவாணர் குறித்திருப்பது எப்படி என்றே புரியவில்லை. கிறித்துவமும் உருவ வழிபாட்டில்
கோலி நிற்கும் மதமே என்பது கண்கூடு. தேவாலயங்கள் தோறும் ஏசுநாதரின் சிலையும், மரியன்னையின்
சிலையும், பல்வேறு கிறித்துவ ஞானியரின் படிமைகளும் கொண்டு உருவ வழிபாடுதான் நிகழ்த்தப்
படுகின்றது. சிவனியமும் மாலியமும் போல் இறைவனை உருவகப் படுத்திக் கொண்ட பெருந்தேவ மதமாகவே
கிறித்துவத்தைப் பாவாணர் கண்டிருத்தல் வேண்டும். பிள்ளைத் தமிழ்ப் பிரபந்த வகை பக்திக்கு
வழியாமாறு பற்றி எழுதிய திரு.வி.க அவர்கள் கிறித்துவரும் அவ்வழி பயனடைவதற்கு குழந்தை
ஏசுவின் படிமை இருப்பதைக் குறிப்பிட்டார் என்பதை இவ்விடத்தில் நினைவு கூர்க.
இஸ்லாமிய வழிபாட்டு முறை உருவிலா
வழிபாடே ஆகும்; அதாவது, அருவ வழிபாடே ஆகும். பாவாணர் சொன்ன மும்மத வகையுள் அது கடவுட்
சமயம் என்பதில் பொருந்தும். ஆதம் என்ற ஆதன் வழி அவணிக்கு இறைவன் அளித்த ஆதி மதமே எம்
மதம். அதுவே தமிழர் மதம். அதற்கு அறபி மொழியில் ’இஸ்லாம்’ என்று பெயர்.
இஸ்லாத்தில் உருவ வழிபாடோ உருவகமோ
இல்லையோ எனில் இல்லை என்பது திண்ணம். இறைநேசர்களின் அடக்கவிடங்களான தர்ஹாக்கள் உள்ளனவே,
அவை உருவ வழிபாடு ஆகாதோ? எனின், அவர்கள் இறைவன் அல்லர், வணக்கத்திற் குரியவர்கள் அல்லர்
என்பதே கொள்கை. அவ்விடங்களில் நடக்கும் நிகழ்வுகள் அவர்களை வணங்கும் செயல்கள் அல்ல
என்பதே கொள்கை. மக்காவில் இருக்கும் கஃபா என்னும் ஆலயத்தை நோக்கித் தொழுவது உருவ வழிபாடாகாதோ
எனின், மக்காவும் இறைவன் அல்ல, மதினாவும் இறைவன் அல்ல, கஃபாவும் இறைவன் அல்ல என்பதே
கொள்கை, அவற்றை நாங்கள் வணங்குவதில்லை என்பதே கொள்கை. “திக்கைத் தொழும் துருக்கர்”
என்று எழுதி வைத்ததும் புரியாத பிதற்றல். திக்கு என்பது இறைவன் என்று இஸ்லாம் கூறவில்லை.
எந்தத் திசையும் இறைவன் அல்ல என்பதே கொள்கை. முஸ்லிம்கள் பிறையை வணங்குகிறார்கள் என்று
பாவேந்தர் பாடியதும் அறியாது சொன்ன வார்த்தை. பிறையோ முழுநிலவோ சூரியனோ விண்மீனோ கிரகமோ
இவையும் இவை அன்ன பிறவும் இறைவன் அல்ல என்பதே கொள்கை. சுருங்கச் சொன்னால், படைப்பு
எதுவும் இறைவன் அல்ல என்பதே இஸ்லாமின் கொள்கை.
தொழுகையில் வெளி ஓசை வடிவிலும்
உள் ஓசை வடிவிலும் திருக்குர்ஆன் உச்சரிப்புக்கள் உள்ளத்தில் ஒட்டுமே, அவை இறைவனுக்கான
ஓசை உருவகமாகாதோ எனின், அவ்வோசைகள் இறைவன் அல்ல என்பதே கொள்கை. லா இலாஹ இல்லல்லாஹ்
என்னும் இஸ்லாமின் மூல மந்திரமும் இறைவன் அல்ல. அல்லாஹ் என்னும் பெயரும் இறைவன் அல்ல.
யாம் ஏக இறைவனாம் அல்லாஹ்வை வணங்குகிறோம்; அல்லாஹ் என்னும் பெயரை அல்ல.
மனதிற் படும் உருவ உருவகம் அனைத்தையும்
‘இஃது இறைவன் அல்ல, இஃது இறைவன் அல்ல’ என்று தள்ளி நீக்கிச் செல்ல செல்ல கால இடப் பரிமாணம்
கடந்த நிலையை மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டு கடவுட் தன்மையை உணர்வால் அறிந்து நிற்கும்
நிலையே இஸ்லாமின் தொழுகை.
இவ்வாறு உருவங்களை, படைப்புக்களை
மனதை விட்டு நீக்கி நீக்கி மேற்சென்று மெய்ஞ்ஞானம் அடையும் முறையை ‘நேதி நேதி பாவனை’
என்று இந்து மதம் கற்றுத் தருவதை சுவாமி விவேகானந்தர் எழுதிய நூற்களைக் கற்றோர் அறிவர்.
“அகவிழிப்பின்றி
மஸ்ஜிதில் நிற்பவனை விட
அகவிழிப்புடன்
சிலை முன் நிற்போன் சிறந்தவன்”
-அல்லாமா இக்பால் (ரஹ்).
இவ்வரிகளின் உட்பொருள்
யாதெனில், அக விழிப்பு இருக்கும் பட்சத்தில் அந்த அக விழிப்பே உருவ நிலையை விட்டும்
கடக்கச் செய்து ஒரு கட்டத்தில் அவன் இறைவனின் உண்மை நிலையை உணர்ந்துவிடுவான் என்பதாகும்.
அக விழிப்பு அற்றவனின் நிலையோ, அவனுள் மறைவான இணைவைப்பு (”ஷிர்க்கெ கஃபீ” என்று சூஃபிகள் உரைப்பது) பற்பல சூக்கும வடிவங்களில்
மண்டி நிறைந்துவிடும்.
இந்த நேதி நேதி
பாவனையைத் தமிழர் அனைவரும் சாதனை செய்து ஆன்ம நலம் பெற எல்லாம் வல்ல ஏக இறைவனின் பேரருள்
கனிய வேண்டுகிறேன்.
ABSOLUTELY STUNNING Rameez. A must read for every Muslim and every Tamilian. This one is simply THE BEST OF YOUR BESTS. I'm with my arms stretched to hug you. Intha pathvirkku nandrigal pala.
ReplyDelete