Monday, December 30, 2013

தேவநேயத் தேடல் - part1


     கல்லூரிக் கருத்தரங்கம் ஒன்றிற்காக கடந்த இரண்டு வாரங்கள் கடுமையான உழைப்பு. பழைய நூற்கள் பலவற்றைப் படிக்க வேண்டியிருந்தது. செந்தமிழ் நடையில் அமைந்த நூல்கள். தேவநேயப் பாவாணர், மறைமல அடிகள், கா.அப்பாதுரையார், க.அன்பழகன் போன்றோர் எழுதியவை. இவர்களின் செந்தமிழ் நடையைச் சிலர் கடுந்தமிழ் என்று கருதலாம். ஏன், கொடுந்தமிழ் என்றும்கூட சிலர் சொல்லக்கூடும். எப்படியோ, இளம்பூரணர் நச்சினார்க்கினியர் என்று தொடங்கி சுஜாதா வரைக்கும் வந்த பல்வகைத் தமிழ் நடைகளையும் அடியேன் ரசிப்பதுண்டு. மான் நடப்பது ஒரு போக்கு, யானை நடை ஒரு தினுசு. குறை சொல்ல என்ன இருக்கிறது?


      கடவுள் உண்டா? என்று ஒரு கேள்வி. பலரிடம் பலரும் கேட்ட கேள்வி. பெரியாரிடம் சிறியார் பலர் கேட்ட கேள்வி. இதே கேள்வி ஒருமுறை அ.ப.ஜ.அப்துல் கலாம் அவர்களிடம் பள்ளி மாணவி ஒருத்தி கேட்டிருக்கிறாள். உண்டு என்று தான் நம்புவதற்கான ஒரு காரணத்தை அவர் செப்பினார். “பிரபஞ்ச வெளியில் கோடிக் கணக்கான கிரகங்களும் விண்மீன்களும் விண்கற்களும் குடும்பங்களாக அமைந்து தத்தமது இடத்தில் ஒழுங்கான பாதையில் சீராக இயங்கி வருகின்றன. அனைத்திற்கும் ஆதாரமாகவும் அனைத்தையும் கடந்ததாகவும் உள்ள ஓர் இறையாற்றல்தான் இவற்றை இப்படி இயக்கி வருகிறது என்று நம்புகிறேன்.” இக்கருத்துப்பட அவர் பதில் சொல்லியிருந்தார்.


      ”தமிழர் மதம்” என்னும் தலைப்பில் ஒரு நூல். 15 செப்டம்பர் 1972-ல் வெளியிடப்பட்டது. எழுதியவர் தேவநேயர். ’மொழி ஞாயிறு’ என்றழைக்கப்படும் ஞானதேசிகன் தேவநேயன் என்னும் தேவநேயப் பாவாணர் அவர்களேதான். கடவுள் உண்டு என்பதற்கு தான் கருதும் ஏதுக்களாக அவர் ஒன்பது குறிப்புக்கள் தருகிறார். முதற்குறிப்பு மேலே அ.ப.ஜ.அ.க அவர்கள் சொன்ன அதே கருத்து! தேவநேயர் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவர் சொல்லும் ஒன்பது கருத்துக்களை அப்படியே தருகிறேன். (1 முதல் 9 வரையிலான எண்களைத் தமிழில் கொடுத்துள்ளார். அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.):

கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்

 (க) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம் இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன.

      ஓர் ஊரில் ஊர்காவலனோ அரசிய லாட்சியோ சிறிது நேரம் இல்லா விடினும், கலகமுங் கொள்ளையும் கொலையும் நேர்கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவை யாட்டுப் போல் ஒழுங்காக ஆடி வரின், அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ் வாற்றல் அறிவற்றதாயிருக்க முடியாது. அவ்வறிவே இறைவன்.
(உ) இவ்வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன.

      ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே. மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல உலகங்கட்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும். வேலை செய்யாத தூக்க வேலையாகிய இராக் காலத்திற்கு, வெப்பமான நெருப்பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது.

(ங) பிற கோள்களைப் போற் சுற்றாது ஒரே இடத்திலிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையா யிருப்பதும், அளவிடப் படாத நீள் பெருங்காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யணையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம் பொருள் இருத்தல் வேண்டும்.

(ச) கோள்கள் ஒன்றோடொன்று முட்டாது தன் தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந் திருப்பதும், இயற்கைக்கு அப்பாற் பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பே.

(ரு) காலமும் இடமும் தொடக்கமும் ஈறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்று முன், எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றி யழிந் திருத்தல் வேண்டும். இதைத் தான்,
      ”படைத்து விளையாடும் பண்பி னோனும்
      துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
      தன்னில் வேறு தானொன் றிலோனும்
      அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன்”
மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி).

(சா) மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற்றென வைத்துக் கொள்ளினும், நூற்றுக் கணக்கான தலைமுறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட் தொகை இன்று நூறு கோடிக் கணக்காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனைய ராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவி லுள்ளனர். கை வரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும்.

[குறிப்பு: உள்ளங்கையில் உள்ள ரேகைகளைத்தான் ”கைவரை” என்று குறிப்பிடுகிறார்.]

(எ) “கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப் படுகின்றது.

(அ) உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப் பட்டிருத்தல்.

(கூ) பஞ்சம், கொள்ளைநோய், பெருவெள்ளம், நில நடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.”

இப்பகுதியைத் தொடர்ந்து கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன் வைக்கும் ஐந்து கருத்துக்களைக் கூறுகிறார். பாவாணர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவற்றை இங்கே சொல்ல வேண்டியதில்லை. அதைத் தொடர்ந்து, ’பகுத்தறிவு’க்கு ஒன்று சொல்கிறார்:

“மாந்தன் மதியாற்றல் மட்டிட்ட தாகலின், இறைவன் ஆட்சியிலுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது.
      ’ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடல்
      நாழி முகவாது நானாழி” (மூதுரை. ககூ)’”


ஔவை பாட்டியின் இந்த வரிகள் புரியாதோர்க்கு:
“நம்பகிட்ட ஒரு சொம்பு இருக்கு. கடலுக்குப் போய் அந்தச் சொம்பை முக்குனாக்க அதுல ஒரு சொம்பளவு தண்ணிதான்யா வரும். நாலு சொம்பளவுத் தண்ணி வராது.”
(கு.குசலாவின் குறுக்குச் சால்: ’நாலு சொம்பளவுத் தண்ணி வேணும்னா அந்தச் சொம்ப நாலு தபா முக்க வேண்டியதுதானே?’ ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட்.)

”மதத்தை அழிக்க முடியுமா?” என்றொரு கேள்வி எழுப்பி அதன்கீழ் பாவாணர் சொல்லிச் செல்வதில் முடிவாக வரும் உளவியல் கருத்து என்னைக் கவர்ந்தது:

“கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்திலும் – இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும், உரையாடினும் உண்ணினும் – இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலுமாதலின், மனம் உள்ளவரை  மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாதென அறிக.”

ஹாரூன் யஹ்யா என்ற பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இன்று முன்னணியில் இருக்கும் இஸ்லாமியப் பரப்புநருள் ஒருவர். பேச்சாளர் அல்ல. அவரின் களம் எழுத்து. நூற்றுக் கணக்கான நூற்களை நெய்திருக்கிறார், அதாவது எழுதியிருக்கிறார். நான் வியக்கும், விரும்பும் நபர்களுள் ஒருவர். அவர் ஒருவர்தானா அல்லது ஒரு குழு அமர்ந்து அப்பெயரில் எழுதித் தள்ளுகிறதா என்று ஐயம் உண்டு. அவ்வளவு நூற்கள் வெளிவந்துள்ளன. அறிவியல், வரலாறு என்னும் இரு துறை சார்ந்து திருக்குர்ஆன் பற்றி அவர் எழுதுகிறார். டார்வின் முன்வைத்த கூர்தலறக் கோட்பாடு (பரிணாமக் கொள்கை, Theory of Evolution) பொய் என்று நவீன அறிவியல் ரீதியாக அவர் மறுத்து எழுதியுள்ள நூற்கள், குறிப்பாக “DARWINISM REFUTED” என்னும் நூல், உலகப் புகழ் பெற்றது. டார்வினியலாளர்களின் மூக்குக்குள் புலிகேசியின் மீசையை விட்டு மூளையைக் குதறுவது!


ஹாரூன் யஹ்யா குறிப்பிடும் சில வாதங்களை தேவநேயப் பாவாணர் தனது நூலில் சொல்லியிருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. அப்பகுதியைப் படியுங்கள்:

“இறைவனின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென்பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக்காலத்துப் புதுப் புனை வாராய்ச்சியாளர் பலர் கொண்டுள்ளனர். தார்வின் (Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினெ தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தின தாகத் தெரிகின்றது.

தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக் கொள்ளினும், அடிப்படை யுயிரியான ஒற்றைப் புரையன் (unicellular being) எங்ஙனம் தானே தோன்றும்?

சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன்றாதே!

ஆதலால் திரிபாக்கக் கொள்கை (Evolution Theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது.

இனி, கதிரவனின்று ஞாலம் வீழ்ந்ததெனின், கதிரவன் எதனின்று வீழ்ந்தது?

இக்கொள்பாளர் கணக்கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறிவிடுவது போல், தனக்கு நுண்மதி யளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போன்றதன்றோ!”


(to be continued)

Thursday, December 12, 2013

கூஜா நாமா


(உமர் ஃகய்யாமின் ’ருபாயாத்’ பாடல்களில் ஒரு பகுதியாக அமைந்திருப்பது ’கூஜா நாமா’ என்பது. களிமண் கூஜாக்கள் தமக்குள் குயவனைப் பற்றியும் தம் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்ளும் பாணியில் மனிதர்கள் இறைவனைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்வதாக உட்பொருள் தொனிக்க அவர் எழுதியுள்ளார். அந்தப் பெயரையே இந்தக் கவிதைக்குச் சூட்டுகிறேன்)

ஈரம் காயாத களிமண்
இன்னமும் நான்
குயவனின் கைகளில் இருக்கின்றேன்
இன்னமும் நான்

ஒவ்வொரு கணமும் வனைகிறது
அவனின் இயக்கம் என்னை
ஒவ்வொரு கணமும் புனைகிறது
அவனின் நாட்டம் என்னை

என் கட்டமைப்பில் தெரிவதெல்லாம்
அவனின் கைவண்ணமே
பொய்வண்ணம் அல்ல இது
சத்திய மெய்வண்ணமே!

வெறுமை என்னும் வடிவில்
வரைந்த பாத்திரம் நான்
ஏழு கடல்களின் தண்ணீர்
நிறைந்த பாத்திரம் நான்!

அவனின் மூச்சு கடலானது
என்னுள் எழும் அலைகளுக்கெல்லாம்
அவனின் காதலே வேர் ஆனது
என் கிளைகள் இலைகளுக்கெல்லாம்

விண்ணுக்கும் மண்ணுக்கும் இறைவனே
ஒளியாக இருக்கின்றான்
இறைவன் பார்வை எனில் மனிதனே
விழியாக இருக்கின்றான்

உடைவோம் என்ற அச்சத்தில்
சாகிறது கூஜா ஒன்று
உடைந்தோம் என்ற கவலையில்
வேகிறது கூஜா ஒன்று

’தோழர்களே! உடையுங்கள் என்னை’
என்கிறது ஒன்றின் முழக்கம்
’நேசர்களுக்கில்லை அச்சமும் கவலையும்’
என்பதே இறை வழக்கம்


(குறிப்பு: ”‘தோழர்களே! உடையுங்கள் என்னை’ என்கிறது ஒன்றின் முழக்கம்” என்பது மன்ஸூர் அல்-ஹல்லாஜின் கவிதை ஒன்றிற்கான சுட்டுதல் ஆகும். “உக்தூலூனீ யா ஸிகாத்தீ / இன்ன ஃபீ கத்லீ ஹயாத்தீ” (என் நண்பர்களே! என்னைக் கொல்லுங்கள்! நிச்சயமாக, நான் கொலை செய்யப்படுவதில் என் வாழ்க்கை உள்ளது!) என்பதே அந்தக் கவிதை வரிகள்)

Wednesday, November 27, 2013

கஸல் துளிகள்


விரல்கள் ரணமாக அவிழ்த்தேன்
காதல் மர்மங்களின் முடிச்சு ஒன்றை
நொடியில் தோன்றி நின்றன
நூறு முடிச்சுக்கள் இன்னும்
*

கண்ணாடி ஓவியம் நான்
’நான்’ இல்லாதுபோகும் இடமெல்லாம்
ஊடுருவிப் பாய்கிறது
உன் ஒளி
*
தேனீயைப் போல் சுறுசுறுப்பானவள்
தேனைப் போல் இனிமையானவள்
நெஞ்சே! மறந்துவிடாதே
விஷமுள்ள கொடுக்கும் இருக்கிறது!
*

உடல் வேறொரு காலத்தில்
உள்ளம் வேறொரு காலத்தில்
உயிர் முறுவல் பூக்கிறது
காலாதீதத்தில்

மூச்சு வேறொரு தாளத்தில்
பேச்சு வேறொரு தாளத்தில்
தியானம் மெல்ல சிரிக்கிறது
மௌன ராகத்தில்
*

மணமே அறிவித்துவிடுகின்றது
மலர்ந்த ரோஜாவை

புல்புலின்
புகழ்ப் பாடல்களால்
புல்புலையே அறிவிக்கிறது ரோஜா!

லைலாவின் அழகைச் சொல்கிறதாம்
மஜ்னூனின் அலங்கோலம்

லைலாவின் அழகு இல்லை எனில்
கயஸ்
மஜ்னூன் ஆவதெங்கே?
*

ஆதலினால் செய்யப்படுவதல்ல
காதல்

காதலினால் ஆகின்றன
எல்லாம்

*

Wednesday, October 23, 2013

அழகின் முகவரி


ஒப்பனை ஏதும் இன்றியே குழந்தைகள் அழகாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
வளர்ந்த பின் அந்த இயல்பான அழகிற்கு என்ன ஆகிறது?

விலங்குகள் ஒப்பனை செய்து கொள்வதில்லை. மனிதனிடம்தான் இது ஒரு கலையாக வாய்த்தது. ஒப்பனை வேடமாகவும் பரிணமித்தது.

வேடத்திற்கும் ஒப்பனைக்கும் இடையிலான கோடு தேய்ந்து வருகிறது; மனிதனுக்கும் மிருகத்திற்குமான கோடும்தான்.

அழகு பற்றிய தவறான தத்துவங்களால் அகில உலகும் அலங்கோலமாகிக் கிடக்கிறது.

காஸ்மெடிக்ஸை காயகல்பம் என்று மூளைச் சலவை செய்து வருகின்றன விளம்பரங்கள். மக்கள் மனங்களோ விளம்பரங்கள் சுழற்றும் பம்பரங்கள்.

புற அழகிற்கு ஆராதனை காட்டும் அரிதார நெருப்பு அக அழகிற்குக் கொல்லி வைக்கிறது. அது புற-அழகு மட்டுமே வாழ்க்கைக்குத் துருப்புச் சீட்டு என்று சொல்லி வைக்கிறது.


’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’

இதயத்தில் தீபம் ஏற்றும் இந்த வாசகம் கிழக்கின் ஞானத்திற்குச் சொந்த வாசகம். கிழக்கு கண்ட அழகின் முகவரி இதுதான்.

மேற்கு என்பது அறிவியல், கிழக்கு என்பது ஆன்மிகம் என்று பார்க்கப்படுவதில் நியாயம் உண்டு என்று ஓர்ந்திருக்கிறேன். ஓஷோ, இக்பால் ஆகியோரிடம் இருந்து இக்கருத்தைத் தேர்ந்திருக்கிறேன். கிழக்கு தன்னை மெல்ல மெல்ல மேற்கில் தொலைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்பட நேர்ந்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் ஒரு கருத்தை அடியேன் நவில்கிறேன்:
மனிதனை ஒளியால் அலங்கரிப்பது கிழக்கின் வழிமுறை; மனிதனை மண்ணால் அலங்கரிப்பது மேற்கின் வழிமுறை.

தியானமே நமது அலங்காரமாக இருந்தது; இன்றோ ஒப்பனையே பலரின் தியானம் ஆகிவிட்டது.

காயாக இருக்கையில் ’பச்சை’யாய்  இருக்கும் ஆப்பிள் கனிந்து கனிந்துதான் சிவப்பாக வேண்டும். ஆப்பிள்-காய் மீது சிவப்புச் சாயம் பூசி விட்டால் அது ஆப்பிள்-பழம் ஆகிவிடாது.

அழகு எப்படி இருக்க வேண்டும்? இயல்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்குச் சரியான பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்.

இயல்பு என்பது தோற்றத்திலும் பண்பிலும்.

அழகு என்பது சீதை போல் இயற்கையாக இயல்பாக இருப்பது. ஒப்பனையோ ராமனை மயக்க வந்த சூர்ப்பனகை.

பெண்ணின் அழகைப் பேரழகு ஆக்குவது தன் அழகைப் பற்றிய அவளின் பிரக்ஞையின்மையே என்னும் கருத்துப்பட அல்லாமா இக்பால் பின்வருமாறு சொல்கிறார்:
“சுயப்பிரக்ஞை இல்லாத, பேரழகு நிறைந்த பெண்ணே இறைவனின் இவ்வுலகில் எனக்கு மிகவும் வசீகரமான பொருள்”

“அழகானதொரு பொருள் நிரந்தர ஆனந்தம்” என்று கீட்ஸ் பாடியதும் இத்தகைய அழகைப் பற்றித்தான் என்று சொல்லலாம்.

புன்னகையைத் தவிர வேறு நகையேதும் அணியாத அன்னை ஆயிஷா (ரலி) – நபிகள் நாயகத்தின் இளைய மனைவி – ஒருநாள் தன் கைகளில் இரண்டு வெள்ளி வளையல்களை அணிந்து கொண்டார்கள். வீடு வந்த நபிகள் நாயகம் “என்ன இது?” என்று கேட்டார். “தங்களுக்காக என்னை அலங்கரித்துக் கொண்டேன்” என்று நவின்றார் ஆயிஷா. “இந்த அலங்காரம் வேண்டாம். அவற்றைக் கழற்றிவிடு” என்று நபிகள் நாயகம் சொல்லிவிட்டார்கள்.

ஆன்மிகத்தின் கண்கள் இயல்பானவற்றில்தான் இறைவனின் அழகை தரிசிக்கின்றன. ஆன்மிக ஒளி கொண்ட கண்கள் உள்ள ஆண் தனது பெண் இயற்கையான அழகுடன் இருப்பதையே விரும்புவான்.

காமோஷ் கஸியாபூரி என்று ஒரு கஸல் கவிஞர். தன் காதலியிடம் வினயமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறார் இப்படி:

கன்னங்களும் உதடுகளும்
இயல்பாகவே இருக்க விடு...
வண்ணங்கள் பூசாதே
தாஜ்மகாலின் மீது

(ஆரிஸ்-ஒ-லப் சாதா ரெஹனே தோ
தாஜ்மஹல் பெ ரங் ந டாலோ)



Tuesday, October 15, 2013

பக்ரீத் (2013)


தேகமெங்கும் பனித்துளிகள் மின்னும்
இந்த நனைந்த ரோஜா
என்ன சொல்கிறது?

செம்மறியின் தியாக ரத்தத்தில்
இஸ்மாயீல் நபியின் கண்ணீர்த் துளிகள்!

இந்த தியாகத் திருநாளில்
அந்தச் செம்மறியின் தியாகத்தை
நினைவு கூர்கிறேன் 

இஸ்மாயில் நபியின்
இதயம் பேசுவதைக் கேட்கிறேன்:

“முஹம்மதின் வருகைக்காகவே
உயிருடன் இருக்க வேண்டும் நான்!
முஹம்மதின் வருகைக்காகவே
உயிரை அர்ப்பணித்திருக்கிறாய் நீ!”


கஸல் துளிகள்




உன் பார்வையின்
பரவசத்தில்
நான் பேசியது
ஒருவருக்கும் புரியவில்லை
உன்னைப் பார்க்கும்
பரவசத்தில்
நான் பேசுவது
எனக்கே புரியவில்லை
*

ஒன்றை
வேறொன்றாய்க் காட்டும்
மதுவின் போதை
என்கிறார்…
உன் போதையில்
கேட்டுக் கொண்டேன்
‘ஒன்று’தானே இருக்கிறது
’வேறொன்று’ எங்கே?
*

நிலா உனக்கு
நிகரில்லை நெஞ்சே!
தழும்பு தென்படுவதில்லை
தீ இன்னும் அணையாதபோது
*

இறைவா!
உன்னிடம் நான் கொண்டுவந்ததெல்லாம்
கிழிந்து போன செல்லாத பணம் மட்டுமே
எனினும், 
கொண்டுவந்ததில்லை நான்
கள்ளப்பணத்தை ஒருபோதும்
*

பாலைகள் கடந்து
சோலைகள் கடந்து
வந்தேன் உன் முன்னால்

நிறைய இருந்தன சொற்கள்
நின்றது ஒன்று மட்டும்

கண்ணீரில் நனைந்த
உன் பெயர்
*

வயிறெனும் மண்ணறை மீது
வாழ்வைத் தொடங்குகிறான் மனிதன்

உயிருடன் புதைபட்டுப் போன
உள்ளங்கள் எத்தனையோ!

வயிறெனும் ஒருசாண் கயிறு
கட்டியுள்ளது கால்களை...

இல்லையெனில்
இதயப் பறவை
ஏழு வானங்களுக்கு அப்பால்
எப்போதும் பறந்திருக்கும்
*

பறவைக்குக் கூடு
மனிதனுக்கு வீடு

சிறகுகள் விரிக்கப்
பறவைக்கு வானம்
உன் சிறகுகள் விரியும்
வானம் எது?

வீடு என்பது
கனவு காணும் இடம்

வீடே கனவல்ல எனக்கு
*


கல்லைத் துளைக்கும் கூர்மை
கண்களில் ஏன் வைத்திருக்கிறாய்?
மெழுகை விடவும்
மென்மையாகத்தானே
என் உள்ளம் இருக்கிறது?

a


Sunday, October 13, 2013

ஹுசைன் (ரலி)


அடியேனின் மனதில்
அலைகள் அடித்தது
இக்பாலின் இதயவரி:
ஹுசைனின் படுகொலை உண்மையில்
யஸீதின் மரணமே!
ஒவ்வொரு கர்பலாவிற்குப் பின்னும்
உயிர்த்தெழுகின்றது இஸ்லாம்

இஸ்மாயீலின் கழுத்தில் நிறுத்தப்பட்டது
ஹுசைனின் கழுத்தில் நிறைவேறிவிட்டது!

”திண்ணமாய் எனது
தொழுகையும் தியாகமும்
வாழ்வும் மரணமும்
அகிலங்கள் அனைத்தின் ரட்சகனுக்கே”
என்னும்
ஆயத்தின் விரிவுரை
ஆனார் ஹுசைன்

அது ரணம் அல்ல, இரணம்!
அது மரணம் அல்ல, மணம்!

உம்மத்தின்
உயர்வுக்காகத்
தலை கொடுக்கத்
தயாராய் இருப்பவனே
தலைவன் என்னும்
தத்துவத்திற்கு
உமர் முதற்பிறை
உஸ்மான் வளர்பிறை
அலீ முழுநிலா
அதன் பிரகாசம் ஹுசைன்!

முஹம்மதின் வாளின் நிழல் அலீ!
அந்த நிழலின் நிம்மதி ஹுசைன்!

முஹம்மதின் நினைவில்
மூழ்கியிருந்தேன்
உள்ளத்தில் குரலொன்று
உரக்க உரைத்தது:
‘என் உம்மத்தின் ரத்தவகை
ஹுசைன் பாசிடிவ்!’


a